Tuesday, March 29, 2016

தேவதாசி வரலாறு -18

 அருணகிரிநாதர் பழித்த பரத்தையர்

   
அருள் சத்தியநாதன்

'அசடர், அவலர், அவகுணர், பேய் நீருணிகள், அற்பர், ஆசைக்காரிகள், இடும்பிகள், ஊத்தை நாறிகள், கசுமாலர், கபடிகள், கீலிகள், குருட்டு மட்டைகள், கொடியவர்கள், சவலைகள், சூதுகாரிகள், குறைகாரிகள், நாணவீணிகள், நீலிகள், பழிகாரிகள், பாவிகள், மாயக்காரிகள், மிண்டிகள், முகடிகள், மோசக்காரிகள், மோக விகாரிகள், வஞ்சியர், வன்கணர், மூதேவிகள்…'

அருணகிரிநாதர் தேவதாசிகள் மீது சீற்றம் கொண்டு அவர்களை எப்படியெல்லாம் வைதார் என்பதற்கு அவர் பயன்படுத்திய இந்த வார்த்தைகளே சான்று. அருணகிரிநாதர் தாசிகளிடம் தஞ்சம் அடைந்து தன் செல்வத்தை அனைத்தும் இழந்து அதன் பின்னரேயே ஞானம் பெற்று முருகன் புகழ்பாடத் தொடங்கினார். அவர் பாடிய திருப்புகழில் தாசிகளை பல இடங்களில் திட்டித்தீர்த்திருக்கிறார்.

அருணகிரி விலைமாதர் வீடுகளே சொர்க்கம் எனக் கிடந்தவர். காமத்தை முழுமையாக அனுபவித்துத் தேர்ந்தவர். அதேசமயம் தனது செல்வத்தை எல்லாம் அப்பெண்களுக்காக செலவு செய்தவர். பின்னர் எப்படி முருகனின் அடிமையாகக் கிடந்தாரோ அதேபோல தாசியரிடமும் அடிமையாகக் கிடந்தவர். இப்பெண்களுக்கு சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பாலாபிஷேகம், தயிர் அபிஷேகம், கனிச்சாறு அபிஷேகம் எல்லாம் செய்து பார்த்தவர். மஞ்சத்தில் பெண்களை அமர்த்தி கனகாபிஷேகமும் செய்திருக்கிறார். இப்படிப் பணத்தைச் செலவு செய்தால் செல்வம் கரையத்தானே செய்யும்?
தன் குடும்பத்துடன் முத்துலட்சுமி.கீழே அமர்ந்திருக்கும் சிறுமியே  முத்துலட்சுமி
                                                                                          

முதலில் அள்ளிக் கொடுத்த அருணகிரியார், பொருள் கரைவதை உணர்ந்து, பின்னர் சிறுக சிறுக கொடுக்க ஆரம்பிக்கிறார். அள்ளிக் கொடுத்தவர் இப்போது கிள்ளிக் கொடுக்க ஆரம்பிக்கிறாரே என்று பரத்தையர்கள் சீற்றம் கொள்கின்றனர். ஆளிடம் இப்போது கொடுக்க பணம் இல்லைப்போலும் என்பதைப் புரிந்து கொண்டதும் அப்பெண்கள் அவரை அற்பமாக நடத்தத் தொடங்குகின்றனர். அவரது பொருள் அனைத்தும் பரத்தையர்வசம் சென்ற பின்னர் அவர் எழையாகிறார். அது மட்டுமல்ல, நோயாளியுமாகிறார். உடலில் புண்கள் தோன்றுகின்றன. ஆனாலும் அவர் தன் பெண் போதையில் இருந்து மீண்டதாகத் தெரியவில்லை.

முப்பது கோடி மனத்தியர்
நூறாயிரம் மனமுடை மாபாவிகள்
வஞ்சமே கோடி கோடிகள்

எனப் புலம்புகிறார், திட்டித்தீர்க்கிறார். ஆனால் கிளம்புகிறார் இல்லை. இனிமேல் இவரால் பலனில்லை என்பதைப் புரிந்து கொண்ட பெண்கள், அவரைக் காலி செய்யச் சொல்கின்றனர். வந்தது வரட்டும் என்று காலால் எட்டி உதைத்து தெருவில் தள்ளி விடுகின்றனர். இதன் பின்னர்தான் அருணகிரியாருக்கு ஞானம் பிறந்து முருகன் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்கிறார்.

திருப்புகழில்,

பொருள் தீரில் முறுக்கியே உதைகொடு
வசையுரை தருமனத் துரோகிகள்
என்றும்,
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடுக்கி போட்டுவ ரழிகுடி யரிவையர்
என்றும் வைகிறார்

திருப்புகழை எடுத்துக் கொண்டால் அதன் முதற்பகுதியில் பொதுமகளிரின் உடல் அழகை வர்ணிக்கிறார். இந்த வர்ணணைகள் காமத்தைக் கொப்பளிக்கச் செய்வன. காம உணர்வைக் கிளறிவிட்டு அதன் பின்னர் உடல், பொருள், ஆவி, நிலையில்லாமை, பிணிக்கொடுமை என்பனவற்றைப்பற்றி உருகிப் பாடுகிறார். முருகப் பக்தியை உயர்த்திப் படிக்கிறார்.

தனக்கு என்ன நடந்தது என்பதை அருணகிரியார் இவ்வாறு பாடுகிறார்.

கொலை விழிச் சுழலச் சுழல சிலைநுதல் குவியக்குவியக்
கொடியிடை துவளத் துவளத் - தனபாரக்
குறியணி சிதற சிதற கரவளை கதறக் கதறக்
குயில் மொழி பதறப் பதறப் - ப்ரிய மோகக்
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகி
கரமோடு தழுவித் தழுவி சிலநாளிற்
கையிலுள் பொருள் கெட்டருள் கெட்டனைவரும்
விடுசிச்சியெனக்
கடியொரு செயறுநீ நுலகிற் திரிவேனோ…?
என்ற இப்பாடலில் தாசி தொடர்பால் இறுதியில் 'சீசீ, விலகு' எனச் சிறுமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளானேன் என்கிறார் அருணகிரியார்.

18ம் நூற்றாண்டில் விஜயநகர அரசாட்சி முடிவுக்கு வருகிறது. ஆங்கிலேயரின் ஆட்சி மேலோங்க ஆரம்பிக்கிறது. ஆங்கிலேயருக்கு தாசிகள் என்ற ஒரு சாதி இருப்பதும் அதற்கு சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதும் ஆச்சரியமான விஷயங்கள். ஏனெனில் கிறிஸ்தவ பண்பாட்டில் ஒருவனுக்கு ஒருத்தியே. தாசியுடன் கூடுவது அல்லது திருமணத்தின் பின்னர் இன்னொரு பெண்ணின் சகவாசம் என்பது விலக்கப்பட்ட விஷயங்கள். அதனால் இதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றே கருதினர். அன்றைக்கு நிலவிய உடன்கட்டை ஏறல், பால்ய விவாகம் என்பன இவ்வாறே இந்தியக் குடிமக்களின் விருப்பத்தோடு ஒழித்துக்கட்டப்பட்டன. இவ்வாறே தேவதாசி முறையும் ஒழித்துக்கட்டப்பட்டது.

எனவே ஆங்கிலேயர் ஆட்சியில் படிப்படியாக தேவதாசியரின் செல்வாக்கு சரிவை சந்திக்க ஆரம்பித்தது. பல கோவில்களில் அவர்களது சேவை நிறுத்தப்பட்டது. வீட்டு வசதி மறுக்கப்பட்டது. போதிய வருமானம் இல்லை என்பதால் பல தேவதாசிகள் தமது மகள்மாரை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். ஊரில் இருந்தால் மானக்கேடு என எண்ணிய தேவதாசியர் தூர இடங்களில் குடியேறி புதுவாழ்வை ஆரம்பித்தனர். அவர்களிடமிருந்த ஆடல், பாடல் திறமையால் அவர்களால் நின்றுபிடிக்க முடிந்தது. எனவே, தமது எதிர்காலம் இருளடைந்து கொண்டிருக்கிறது என்பதை ஓரளவுக்கேனும் புரிந்து வைத்திருந்ததால் வேறு வழிகளை அவர்கள் நாடத் தொடங்கியிருந்தனர்.
பொட்டு கட்டப்பட்ட சிறுமியர்

வெள்ளையருக்கு முன் தென்னாட்டை ஆண்டுவந்த முஸ்லிம் சமஸ்தானங்களும் தேவதாசி முறையை ஊக்குவிக்கவில்லை. எனவே கோவிலில் கடவுள் சேவையில் இருந்த பெண்களின் இன்னொரு பகுதியினர் விலைமாதர்களாயினர். தென்னாட்டில் விலைமாதரின் தோற்றம் இவ்வாறே நிகழ்ந்தது. இவர்களிடமே அருணகிரியார் சல்லாபித்து வீழ்ந்து கிடந்தார். இவரைப் போலவே பெண் போதை தெளிந்து பக்தி மார்க்கத்துக்குத் திரும்பியவரே பட்டினத்தார்.

இந்த இருவரின் பாடல்கள் மூலம் அன்றைய தேவதாசி சமூகம் எவ்வாறு விலை மகளிர் ஆயினர் என்பதையும் ஆண்களை வீழ்த்தி அவர்களின் செல்வத்தைப் பறிக்கக் கைக்கொண்ட மோகன வித்தைகளையும் அறிய முடிகிறது.

எனவே கோவில்களில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேறி பரத்தைகளாக பரத்தை சேரிகளில் வாழ்ந்து வர, இன்னொரு பிரிவினர் கோவில்களில் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அரசர் காலத்தில் கோவில்கள் அரசர்களினால் பரிபாலிக்கப்பட்டு வந்தது. மேற்கத்தியர் வருகையின் பின்னர் கோவில்கள் பணம் படைத்த தனியார் வசம் சென்றன. தேவதாசிமாரும் அத் தனியாரின் உடமையாகினர். கோவில் நிர்வாகிகள், ஊர்ப் பெரியவர்களின் உடமையாகினர் என்றும் சொல்லலாம். அதே சமயம் பாடல், ஆடல் மற்றும் மொழித் தேர்ச்சி போன்ற திறமை படைத்த தேவதாசியர் கோவில்களில் இருந்து வெளியேறி தமது வித்தைகள் மூலம் பெரும்புகழ் பெற்றிருந்தனர்.

இவ்வகையில் தேவதாசியரை பிற்காலத்தில் முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். முதல் பிரிவு, கோவில் தேவதாசியர். இவர்களது கோவில் நடவடிக்கைகளும் பொட்டுக்கட்டுதலும் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சட்டரீதியாக ஒழித்துக்கட்டப்பட்டது. விலை மகளிர் அல்லது இன்றைய வழக்கில் விபசாரிகள் என அழைக்கப்படும் பெண்கள் இன்றைக்கும் பாலியல் தொழில் செய்து வருகின்றனர். இன்றைக்கு, இவர்களுக்கும் தேவதாசியர் குலத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் இந்தியாவில் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடையாவிட்டாலும், மும்பை, கோவா போன்ற இடங்களில் பல்வேறு காரணங்களின் பொட்டு பாலியல் தொழில் பொறுத்துக் கொள்ளப்படுகிறது. பாலியல் தொழில் என்பது விரிவானதும் ஆழமானதுமான ஒரு விடயம். அதைத் தனியாகவே பார்க்க வேண்டும்.

மூன்றாவது பிரிவு, கோவில்களை விட்டு வெளியே வந்தாலும் ஆடல், பாடல், சங்கீத தேர்ச்சி, இசைக் கருவிகளை இசைக்கும் தேர்ச்சி காரணமாக சமூகத்தில் புகழ்பெற்று விளங்கிய தேவதாசியர். இதற்கு ஒரு இறுதி உதாரணமாகத் திகழ்ந்தவரே பெங்களுரு நாகரத்தினம்மா.

முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோது, அம்முயற்சியை முடிந்தவரை தாமதப்படுத்துவதற்கு நாகரத்தினம்மாளினால் முடிந்தது. ஏனெனில் மதராஸ் மாநிலத்தின் முக்கிய அரசியல் புள்ளிகள் அவரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். மதராஸ் சட்டசபையில் இம்மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்த்ததற்கு, ஆணாதிக்க சிந்தனை மட்டும் காரணமல்ல. நாகரத்தினம்மாளின் செல்வாக்கும் காரணமாக இருந்தது.

தொடரும்..

No comments:

Post a Comment