Sunday, March 6, 2016

தேவதாசி வரலாறு -17

தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்ட இராமாமிர்தம் அம்மையார்


அருள் சத்தியநாதன்

மிழ் நாட்டில் 1920களில் எல்லாம் தேவதாசி முறைக்கு பரந்த அளவில் ஆதரவு இருந்தது. அக்கால கட்டத்தில் கேரளா, கர்னாடகம் என்பனவெல்லாம் 'மதராஸ் பிரசிடென்ஸி' என்ற பெயரிலான அகண்ட மாநிலமாக இருந்தது. இந்த மதராஸ் மாநிலத்துக்கு ஒரு கவர்னரும் இருந்தார். இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு தென்னிந்தியத் தொழிலாளர்கள் தேவையாக இருந்தபோது மதராஸ் பிரசிடென்ஸி கவர்னரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தொழிலாளர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய ஆங்கிலேயே ஆட்சியில், தேவதாசி விவகாரம் இந்து மதத்துடன் தொடர்புபட்டதென்று கருதிய மதராஸ் கவர்னர், அந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டார். எனவே அக்காலம் தேவதாசிகளுக்கு சாதகமான காலம். முன்னர் பார்த்தபடி, நரஹரி என்ற நீதிபதி தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் தன் பரிவாரங்களுடன் பெங்களுர் நாகரத்தினம்மாவின் வீட்டுக்கு போய் வந்தார். இப்படி அவர் போய் வருவதை உயர் அரச அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நீதிபதி நரஹரியிடம் சொன்னார்கள். அரசு இலட்சணை பொறிக்கப்பட்ட வாகனத்தை அங்கே செல்லும்போது பயன்படுத்த வேண்டாம் என்பதே அந்த அறிவுரையாகும். நாகரத்தினம்மாளின் நடனம், இசை அறிவு, உபசரிப்பு என்பனவற்றில் கிறங்கிப் போய்க் கிடந்த நீதிபதி நரஹரி, மலைப்பாங்கான ஓரிடத்தில் தனி பங்களாவை அமைத்து அங்கே நாகரத்தினத்தை குடியமர்த்தவும் செய்தார்.

இவ்வாறு பிரச்சினை இல்லாமல் தேவதாசியர் வாழ்ந்து வருகையில்தான் முத்துலட்சுமி ரெட்டியின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. 1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழக சட்டசபை மேலவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் நியமன உறுப்பினராகவும் துணைத் தலைவருமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறையை எதிர்த்து சபையில் உரை நிகழ்த்தினார். பெண்களை சிறுமைப்படுத்தும் இம்முறை தமிழகத்தில் முற்றாகவே ஒழித்துக்கட்டப்பட வேண்டுமென்று ரெட்டி ஆவேசமாகக் குரல் கொடுத்தார். இதுவொன்றும் அவர் திடீரெனப் பேசிய ஒன்றல்ல. அவர் ஏற்கனவே தேவதாசி முறைக்கு எதிராக எழுதியும் பேசியும் வந்தவர். இதனால் உயர்குலத்து ஆண்களும் தமிழ் அரசியல்வாதிகளும் முத்துலட்சுமி மீது ஆத்திரத்தில் இருந்தனர். தமது உரிமைகளில் கை வைப்பதாகக் கருதினர். அன்றைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி தேவதாசி முறை நீடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் இம்முறை ஒழிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

இந்த மசோதா சட்டசபை அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது சத்தியமூர்த்தி இதை எதிர்த்துப் பேசினார், இந்த ஆண்களின் எதிர்ப்பை ஒடுக்கும்முகமாக முத்துலட்சுமி ரெட்டி காரணங்களை முன்வைத்துப் பேசினார். அவர்கள் மசிவதாக இல்லை. இறுதியாக தன் இறுதி அஸ்திரத்தை பிரயோகித்தார்.

சரி, இம்மசோதாவை எதிர்ப்பவர்களை நோக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். இதை எதிர்ப்பவர்கள் தமது ஒரு மகளுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு தேவதாசியாக நேர்ந்துவிடத் தயாரா? ஏனைய பெண்கள் பொட்டுக்கட்டி விடப்பட வேண்டுமென விரும்புகிறவர்கள் தமது மகளுக்கும் அதைச் செய்யத் தயாரா? என்று சட்டசபையில் அவர் கேட்ட கேள்வியே எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்தது. மசோதா, சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.

முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசிகளின் அவல வாழ்க்கை தொடர்பாக நேரடி சான்றுகளை அளித்து இந்தமுறை ஒழிக்கப்பட்டால்தான் ஏராளமான பெண்களைக் காப்பாற்றி கரைசேர்க்க முடியும் என்பதை எடுத்துக்கூறியவர்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

இராமாமிர்தம் அம்மையார் பெரியாரின் சீடர். சுயமரியாதை மேடைகளில் பெண் விடுதலைக்காகவும் தாழ்த்தப்பட்டோரின் எழுச்சிக்காகவும் இடைவிடாது போராடிய ஒரு பெண்மணி.

இவர் இசைவேளாளர் குலத்தில் பிறந்தவர். இசை வேளாளர்குலம் என்பது தமிழகத்தில் இசை வளர்த்த குலம். பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆலயங்களில் சேவையாற்றுவது, இசை நடனம் என்பனவற்றை தொழிலாகச் செய்வது இவர்களது சாதி சார்ந்த கடமை. அரசர் காலத்தில் மதிப்பு மரியாதையுடனிருந்த இவர்கள், அந்நியராட்சிக் காலத்தில் தமது செல்வாக்கை இழந்து, சின்னாபின்னமாகினர். இக்குலத்துப் பெண்களே கோவில்களுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்டனர். இப்போது உங்களுக்கு இசைவேளாளர் குலம் பற்றி தெரிந்திருக்கும். வெள்ளையரின் காலனி ஆட்சியில் ஜமீன்தார்கள் மற்றும் பண்ணையர்கள் தமது காமக் கிழத்திகளாக கோவில் பெண்களை வைத்திருந்தனர். இதை இசை வேளாளர்களில் சிலர் எதிர்க்கவும் செய்தனர். சில பெண்கள் தாசியாக வாழ்வதற்கு மறுப்பும் தெரிவித்தனர். ஆனால் சாதித் தொழில், மதக் கட்டுப்பாடு என்பனவற்றை சுட்டிக்காட்டி இதில் இருந்து விலகிச் செல்வது குற்றம் என்றும் மரபாகாது என்றும் சொல்லிச் சொல்லியே தொடர்ந்தும் இப்பெண்களை தேவதாசிகளாக வைத்திருக்கும் கொடுமை தொடர்ந்து கொண்டாடியிருந்தது. எனவே இசைவேளாளர் குலத்தை இந்த இழிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதில் இராமிர்தம் அம்மையார் உறுதியாக இருந்ததில் ஆச்சரியமிருக்க முடியாது.

இராமிர்தம், 1883ம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். பிறந்தது திருவாரூர் ஆனாலும் இவர் வளர்ந்தது எல்லாம் மாயவரத்துக்கு அருகே உள்ள மூவலூர் கிராமத்தில். இதனால் மூவலூர் இராமமிர்தம் என அறியப்பட்டார். சிறுவயது முதல் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு பேச்சாற்றல் கொண்டவராகவும் விளங்கினார். சிறுவயதிலேயே சுதந்திரமாக சிந்திக்கப் பழகியிருந்த இவர், தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை வேதனையும் ஆத்திரமுமாக அவதானித்து வந்தார்.

அது தேச விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம். படித்த பெண்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்தனர். இராமாமிர்தத்தையும் விடுதலை வேட்டை விட்டு வைக்கவில்லை. ஆனால் தேச விடுதலையை விட தான் சார்ந்த குலத்தை அடிமைத்தனத்தில் இருந்தும் இழிநிலையில் இருந்தும் மீட்பதே முதல் பணியாக இருக்க வேண்டும் என அவர் எண்ணினார்.

இதைச் செயல்படுத்துவதற்கு அவருக்கு ஒரு அரசியல் பின்புலம் தேவைப்பட்டது. எனவே தன்னைக் காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். அன்றைய காங்கிரஸில் ஈ.வே.ரா. பெரியார், இராஜாஜி ஆகியோர் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களாக இருந்தனர். தாசி குல ஒழிப்புக்கு பெரியார் முழு ஆதரவு தந்ததால் ராமாமிர்தத்துக்கு அது பேருதவியாக இருந்தது. அவர் காங்கிரஸ் மேடைகளில் இசைவேளாளர் குலத்துப் பெண்களின் இழிநிலை பற்றி எடுத்துச் சொன்னார். அப்பெண்கள் பலாத்காரமாக பொட்டுக்கட்டி விடப்படுவதையும், குடும்பமும் குடித்தனமுமாக வாழ வேண்டிய பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்படும் அவலம் சாதி, சமூக நடைமுறை மற்றும் மதத்தின் பெயரால் நடைபெறுவதாக எடுத்துச்சொல்லி மக்கள் மத்தியில் இது தொடர்பாக ஒரு வழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

1925ம் ஆண்டு மயிலாடு துறையில் அம்மையார் இசைவேளாளர் மாநாடொன்றைக் கூட்டினார். இது ஒரு திருப்புமுனை மாநாடாக அமைந்தது. தமிழறிஞர் திரு. வி. க., தந்தை பெரியார் போன்ற முக்கிய பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதே சமயம் மென்மையான போக்குக் கொண்ட இசைவேளாளர்களை இராமாமிர்தத்தின் இலட்சியத்தின்பால் ஒன்று திரட்டுவது எளிதான பணியாகவும் இருக்கவில்லை.

இம்மாநாட்டின் வெற்றியானது, முத்துலட்சுமி ரெட்டியின் கவனத்தை ஈர்த்தது. பின்னர், தேவதாசி முறையை சட்டரீதியாக ஒழித்துக்கட்டுவதற்கான மன உறுதியை இம்மாநாடே அவருக்கு அளித்தது என்று சொன்னால் மிகையாகாது. இதே சமயம் காஞ்சிபுர காங்கிரஸ் மாநாட்டின் பின்னர் தந்தை பெரியாருக்கும் காங்கிரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட, பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். பெண் விடுதலைக்கு பெரியாரின் தலைமையே மிகப் பொருத்தமானது என்பதை உணர்ந்த இராமாமிர்தம், பெரியாருடன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
ராமாமிர்தம்


அதன் பின்னர் பெரியாரின் முழு ஆதரவுடன் தேவதாசி ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அக்காலத்தில் சீர்திருத்த திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன. சீர்திருத்த திருமணங்கள் என்பது, சமய, சாஸ்திர முறைகள் அல்லாத, தாலி அணியாத திருமணமாகும். இத்தகைய திருமணங்களில் கலந்துகொள்ளும் இராமாமிர்தம், தன் சமஸ்கிருத அறிவைப் பயன்படுத்தி, திருமணங்களில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் அர்த்தங்களை எடுத்துச் சொல்வார். இந்த மந்திரங்களில் எந்தப் பொருளும் இல்லை என்பதை சபையோருக்கு விளக்கி, சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைப்பார்.

தேவதாசி முறையை ஒழிப்பது என்பது மிகவும் கடினமான பணி என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். 'பிரிட்டானியத்தையும் (ஆங்கிலேயர்) பார்ப்பனியத்தையும் கூட எளிதில் எதிர்க்கலாம். ஆனால் இந்த தேவதாசி முறையை எதிர்ப்பது சாமானியமானது அல்ல' என்று அவர் எழுதியிருக்கிறார்.

தேவதாசி முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்ட பின்னர் தேவதாசிகளாக விளங்கியவர்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அவர்களை புது வாழ்க்கைக்கு அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது. எனவே முத்துலட்சுமி ரெட்டியும் மூவலூர் இராமாமிர்தமும் சேர்ந்து அப்பெண்களை காப்பகங்களில் சேர்த்தனர். இப்புனர்வாழ்வு முயற்சிகளுக்கு ஆண்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசும் சட்டம் போட்டு தடுத்ததே தவிர மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யவில்லை. இந்நிலையில் இளம் தேவதாசி பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். வயதான தேவதாசிகளுக்கு, 'அவ்வை நிலையம்' என்ற அடைக்கல நிறுவனத்தை ஏற்படுத்தி நல்வாழ்க்கைக்கு வழி செய்தனர்.

தேவதாசிப் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் அவர் பொட்டறுப்பு சங்கங்களைத் தொடக்கி பெண்களுக்கு பொட்டறுத்து திருமணத்துக்கு வழி செய்து கொடுத்தார். இப்பணிகளைத் தடுத்து நிறுத்த பல முயற்சிகள் எதிர்த்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்ட போதும், இராஜாஜி, திரு. வி. க. மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் உதவியால் எதிர்ப்புகளை முறியடித்து தன் இலட்சியத்தில் தீவிரமாக ஈடுபட்டார் இராமாமிர்தம்.

அண்ணாத்துரை தி. மு. க.வைத் தோற்றுவித்த தி. மு. க. வில் தன்னை இணைத்துக் கொண்ட மூவலூர் இராமாமிர்தம், 1962 ஜூன் 27ம் திகதி தன் எழுபதாவது வயதில் இயற்கை எய்தினார். தான் மேற்கொண்ட இலட்சிய பயணம் முழுமையாக நிறைவேறியதைக் கண்ட திருப்தியுடன் கடைசி காலத்தை அவரால் கழிக்க முடிந்தது. இறுதிக்காலம் வரை அவர் சுயமரியாதை கொள்கைளில் நம்பிக்கை இழக்கவில்லை.

No comments:

Post a Comment