Saturday, February 6, 2016

இமான் அண்ணாச்சியுடன் ஒரு குஷி டைம்

நேரில்- மணி  ஸ்ரீகாந்தன்

ப்போது நேரம் காலை எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சென்னை கோயம்பேடு பஸ்தரிப்பு நிலையத்திற்கு எதிரே அமைந்திருக்கும் ஜெய்நகர் பூங்கா வாசலில், இமான் அண்ணாச்சியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஜெய் நகர் சாலை, அதிகாலை நேரம் என்பதால், ஓரிரு வாகனங்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு காலியாகக் கிடந்தது. அப்போது ஒரு வெள்ளைநிற ஸ்கூட்டி என் அருகே வந்து நிற்க, அதிலிருந்து அரைக்கால்சட்டை, கட்டம் போட்ட சட்டையோடு அண்ணாச்சி இறங்கினார். "வணக்கம் சார் எப்படி இருக்கீங்க? வண்டியில ஏறுங்க டீ சாப்பிட்டு விட்டு பேசுவோம்" என்று அழைக்க, மறுப்பேதும் சொல்லாமல் ஸ்கூட்டியில் அமர்ந்தேன். ஒரு தெருவோர டீக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு, அண்ணாச்சி இரண்டு டீக்கு ஓர்டர் கொடுக்க, அண்ணாச்சிக்கு தெரிந்த அந்த டீ மாஸ்டர் நல்ல ஸ்ட்ரோங் டீ சூடாக போட்டுக் கொடுத்தார். கோட் சூட்தான் அண்ணாச்சியின் டிரேட் மார்க் என்பதால் தெருவழியாக சென்றவர்கள் அண்ணாச்சியை கண்டுகொள்ளவில்லை.

"சென்னை வெள்ளம் எங்களுக்கு புது அனுபவமாகத்தான் இருந்தது. ஆனாலும் நான் வசிக்கிற பகுதியில் பாதிப்பு ரொம்பவும் குறைவு. வெளியே இறங்கிப் போற அளவுக்கு, அதாவது முழங்கால் அளவுக்கு, மட்டுமே தண்ணீர் வந்தது. ஆனா பக்கத்து ஏரியாவில் ஒரு பன்னிரெண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தது. உடனடியாக அங்கே சென்று தண்ணீரில் இறங்கி நீச்சல் அடித்து என்னால் முடிந்த அளவுக்கு ஒரு ஐந்து நாள் வரை சுமார் ஆறாயிரம் பேருக்கு உணவு கொடுத்தேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடிந்தது" என்று சொல்லி பெருமூச்சு விடும் அண்ணாச்சியிடம் கிசு கிசு ஒண்ணு சொல்லுவீங்களா? என்று கொக்கி போட்டேன்.

"என்னைப் பொறுத்தவரையில் கிசுகிசு சொல்லுறதும் பிடிக்காது, மத்தவங்கள பத்திப் பத்திரிகையில் எழுதினாலும் பிடிக்காது. அதனால் கிசுகிசுவில் பெரிசா எனக்கு நம்பிக்கை இல்லை" என்று சுளீர்ன்னு பதிலளிக்கும் அண்ணாச்சியிடம், குழந்தை ரசிகர்களை அதிகமாகக் கொண்ட உங்களை அதிரவைத்த ஒரு குழந்தை அனுபவம் ஏதாவது….? என்றோம்.

"கடைசியாக பொங்கல் குட்டிச் சுட்டியில் ஒரு சின்னப் பையன் ரொம்பவே குறும்பா பேசினான். அதோட பாட்டும் பாடினான். 'ஆலுமா டோலுமா..'ன்னு அவன் பாட ஆரம்பிச்சதும் 'அட நல்லா பாடுறானே'னு  சந்தோசப்பட்டேன். ஆனால் அடுத்த வினாடியே 'அண்ணாச்சி வாயைத் தொறந்தா பொய்யுமா' ன்னு சொல்லிட்டான்! அப்புறம் பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லு என்றேன். 'தெறிக்க விடலாமா… முதுகுல கொசு கடிக்கிது சொறிஞ்சு விடலாமா'என்று என்னையே கதிகலங்க வச்சிட்டான். அந்தப் பையன் அந்த ஒரே நிகழ்ச்சி மூலமா உலகம் முழுவதும் பிரபலமாகிட்டான். அவன்தான் என்னை அதிரவைத்துவிட்ட பையன்" என்றார் அண்ணாச்சி.
தேர்தல் வருகிறதே கட்சிகள் அழைக்கவில்லையா, வலை வீசவில்லையா? என்று அண்ணாச்சிக்கு ஒரு கேள்வி வலையை வீசினோம். பலமாக சிரித்தபடியே "வலை வீசக்கூடிய அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளு கிடையாது. இப்போதுதான் கடவுள் புண்ணியத்துல கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வர்றேன். என்னோட முழுக் கவனமும் சினிமாவில்தான் இருக்கு. ஒரு நகைச்சுவை நடிகனாக என்னென்ன சாதிக்கலாம் என்கிற எண்ணத்துடன் போராடி ஜெயிச்சுக்கிட்டிருக்கேன். இப்போதுதான் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பேசப்பட்டு வருகிறேன். இந்தப் பணியே போதும். அரசியல் பணியில் எனக்கு ஆர்வம் இல்லை. எந்த அரசியல் கட்சியும் இதுவரை எனக்கு வலை வீசவில்லை. அப்படியே வீசினாலும் அதில் நான் சிக்கமாட்டேன்" என்று நம்பிக்கையோடு பதிலளிக்கிறார்.

நீங்கள் நல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் சினிமா, நடிப்பு என்று வந்துவிட்டால் பெண் ரசிகைகளின் தொல்லைகள் வரத்தான் செய்யும். அப்படி எக்குத் தப்பாக மாட்டிக் கொண்ட அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன் என்று இன்னொரு வலையை விரித்தோம்.

"நான் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதால் பெண்கள் எல்லோருமே ஓடி வருவார்கள். அதில ஒரு பெரிய சந்தோசம் என்ன தெரியுமா? என்னைக் கண்டவுடனேயே 'ஏய் நம்ம அண்ணாச்சி!'ன்னு சொல்லி ஒரு குடும்ப உறுப்பினர் மாதிரித்தான் என்னையும் பார்க்கிறார்கள். நானும் அவர்களில் ஒருவன் என்ற எண்ணத்துலதான் இருக்கிறேன். அதனால் அவர்களிடம் சிக்கித் தவித்தது இல்லை,. ஆனால் அந்தக் கூட்டத்தில் சிக்கித் தவித்த அனுபவும் உண்டு. (சிரிக்கிறார்) அது அன்பின் வெளிப்பாடுதானே தவிர வேறு தவறான எண்ணங்கள் இல்லை" என்று பதில் சொல்லி விரித்த வலைகளில் இருந்து தப்பிக் கொண்டார் அண்ணாச்சி.


இரண்டாயிரத்து பதினாறு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு, இலங்கைக்கு, உங்களுக்கு?

"கிட்டத்தட்ட இப்போ இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்றுதான் நாம் தமிழகத்தில் கேள்விப்படுகிறோம். இதைவிட பெரிய சந்தோசம் வேறு என்ன இருக்க முடியும்? அவங்க வாழ்க்கையில் ஏகப்பட்ட இழப்புகள். அவர்களுக்கு வார்த்தையால் ஆறுதல் கூற முடியாது. அதைக்கடவுளாக பார்த்து மிகப்பெரிய சந்தோசமான ஆண்டாக இந்த ஆண்டை அவங்களுக்கு அமைத்துத் தரணும் என்று வேண்டுகிறேன். தமிழனுக்கும், தமிழ்நாட்டுக்கும், எனக்கும் இந்த இரண்டாயிரத்து பதினாறு ஒரு வெற்றி ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கண்டிப்பா அது நடக்கும். என் உறவுகள் அனைவரும் இனிய புத்தாண்டு, தைப்பொங்கல், வரப்போகும் சித்திரை புதுவருட வாழ்த்துக்கள்" என்று அண்ணாச்சி மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு பேட்டியை நிறைவு செய்தார்.

அப்போது ஒரு தாயும் அவளது குழந்தைகளும் அந்தத் தெரு வழியாக எங்களைக் கடந்து போனார்கள். அப்போது அந்த இரண்டு குட்டிப் பையன்களில் ஒருவன் அண்ணாச்சியை அடையாளம் கண்டு கொண்டான். 'ஏய் நம்ம அண்ணாச்சிடா!' என்று கத்த, அந்தத் தெருவில் சென்றவர்களும் அண்ணாச்சியை அடையாளம் கண்டுகொண்டார்கள். அந்தச் சின்னப் பையன் அவனின் தாயையும் அழைத்துக்கொண்டு அண்ணாச்சியிடம் வந்து கைகொடுத்து மகிழ்ந்தான். 'தங்கச்சி, நீ டீவியில பார்க்குற அண்ணாச்சி இவருதான்' என்று அந்தக் குட்டிப் பையன் தாயின் கையிலிருந்த தங்கச்சிக்கு அண்ணாச்சியை அடையாளம் காட்டிய போது அந்தக் குழந்தை 'வீல்' என்று கத்தியது.

"ஏய் நான்தாம்மா உன்னோட அண்ணாச்சி, ஏய் மிஸ் பண்ணீடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க" என்று அண்ணாச்சி அந்தக் குழந்தையின் தலையை வருடி ஆறுதல் படுத்தியபோது மேலும் கூட்டம் சேரத் தொடங்கியது.
இதற்கு மேலும் அங்கே நின்றால் சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்துகொண்ட நாங்கள் ஸ்கூட்டியில் எஸ்கேப் ஆனோம்.

No comments:

Post a Comment