Thursday, February 4, 2016

நடு வீட்டில் ஒரு சண்டியன்

மணி  ஸ்ரீகாந்தன்

லகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமது குடும்பப் பெண்களை கட்டிப்போட்டு, நடு வீட்டில் சண்டியராக வீற்றிருக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பின் பாகங்களை பல ஆய்வாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். அவர்களில், பில்லோ பான்ஸ்வர்த் டியூபைக் கண்டுபிடித்திருக்கிறார். அதற்கான கதிர் டியூபை விளாமிழர் கோஸ்மா கண்டுபிடித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தொலைக்காட்சிக்கான விஞ்ஞான கதைகள் எழுதப்பட்டு வந்திருக்கிறது. அதில், ஜெர்மனிய ஆய்வாளரான போல் நிப்கோ ஒரு விம்பத்தை மறு உருவாக்கம் செய்யும் முறையைக் கண்டறிந்திருக்கிறார். ஆனாலும் ஒரு முழு தொலைக்காட்சியை உருவாக்கியவர் ஜோன் லூகி ஃபெர்ட். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர், 1926 ஆம் ஆண்டு அந்த மகத்தான கண்டுபிடிப்பை மக்களுக்கு அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இன்றுவரை தொலைக்காட்சி நமது மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து பிரிக்க முடியாத உறவாகிவிட்டது. இன்றைய நவீன உலகத்தில் தொலைக்காட்சி எல்சீடி, எப்யீடி என்று புதிய பரிமான வளர்ச்சி மட்டங்களை அது சந்தித்து விட்டது. குச்சி அண்டனா காலம் போய், கேபிள் டீவி, டிஷ் டீவி என்று நம் ஆட்கள் 'டண்டணக்கா' போட ஆரம்பித்து விட்டார்கள். இது மகிழ்ச்சியான விடயம்தான்.

ஆனாலும், நம் சமூகத்தின் கல்வி மற்றும் புதிய சிந்தனைகளை குழிதோண்டி புதைக்கும் படுகுழியாகவும் இது மாறிவிட்டது. டிஷ் அண்டனாவின் வழியாக 24 மணி நேர தொலைக்காட்சிகள் இலங்கைக்கு வந்த பிறகு இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. டிஷ் அண்டனா மோகம் நகர்ப்புறங்களை விட தோட்டப்பகுதிகளையே மிகவும் பாதித்திருக்கிறது.

தோட்டப்புறங்களுக்கு மின்சார வசதி இல்லாத காலத்தில் நிறைய வாசிப்பு பழக்கம் இருந்தது. குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டு, கல்கியின் பொன்னியின் செல்வனின் ஐந்து பாகத்தையும் படித்து முடித்த நிறைய தோட்டப் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அன்றைய நாட்களில் அனேக வீடுகளில் அம்புலிமாமா, கல்கண்டு, விகடன், கல்கி சஞ்சிகைகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதில் படிக்கும் கதைகளை சுவாரஸ்யமாக பேசி மகிழ்வார்கள். ஆனால், இன்று வாசிப்பு அடியோடு நின்றுவிட்டது. டிவியை ஒன் செய்து விட்டு அதில் நேரத்தைப் போக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இளைஞர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். வேலை முடித்து வீடு வரும் போதே ஒரு புதுப்பட டி. வி. டியுடன்தான் வீடு செல்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் சினிமா படங்கள் வி.எச்.எஸ். கேசட்டில்தான் கிடைக்கும். அதையும் கடையில் அடையாள அட்டையைக் கொடுத்து வாடகைக்கு கூடுதலாக பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். அதனால் வயதுக்கு வராத மாணவர்களால் படங்களை வாங்க முடியாது. படம் வாங்க அடையாள அட்டை உள்ளவர் கட்டாயம் தேவை. ஆனால் இன்று வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விடும் காலம் மலையேறி விட, நாற்பது, ஐம்பது ரூபாய்க்கு நான்கு படங்களை ஒரே டிவிடியில் யாரும் வாங்கி விடலாம். அதை வாங்க வயது எல்லையெல்லாம் கிடையாது. அதனால், பாடசாலை முடிந்து வரும்போதே டீவிடிக்களோடு வீடு வரும் சிறுவர்கள் வீசிடி பிளேயரில் படத்தை ஓட விட்டு உட்கார்ந்து விடுகிறார்கள்.
இருபத்து நாலு மணிநேர கார்ட்டூண் சேனல்களும் வந்து விட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சதா காலமும் டீவியே கதியென்று கிடக்கிறார்களாம். டிவிடியை கையில் பிடித்து வருவதை ஒரு ஃபேஷனாகவே கருதுகிறார்கள். பள்ளி மாணவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா, அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இப்போது குழந்தைகள் யாரும் பாட்டியிடம் கதை கேட்டதும் இல்லை, நிலாச்சோறு சாப்பிடுவதும் இல்லை. குழந்தைக்கு டீவியைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். முக்கியமாக புதிதாக பேரன் பேத்தி பார்க்கும் புதிய பாட்டிகளுக்கு கதை தெரியவும் வாய்ப்பில்லை. அவர்களுக்கு அம்புலிமாமா, நல்லதங்காள், சிவகாமியின் சபதம் பற்றி தெரியாது. தோட்டப்பாடசாலை ஆசிரியர்கள் எப்படி? என்று பார்த்தால்,

"தம்பி அதைப்பற்றியெல்லாம் நீங்க பேசக்கூடாது. ஏன்னா மூவாயிரம் டீச்சர்மாருங்க நல்லா படிச்சிட்டு வந்தவங்க. சரஸ்வதி எப்போவும் அவங்க தலையிலதான் உட்கார்த்திருக்கு. அவங்க நீங்க சொல்லும் கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தனை பற்றித் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவங்க ஒவ்வொருத்தரும் பத்து சண்டில்யனுக்கு சமம்! அதனால அவங்க டிஷ் டிவியில படம் மட்டும்தான் பார்ப்பாங்க" என்று வழியில் சந்தித்த நபரொருவர் என் வாயை மூடினார். தோட்டப் பகுதிகளில் பெரும்பாலும் வீடுகள் ரொம்ப சிறிதாக இருப்பதால் அவர்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிக்கும் டீவி பார்ப்பவர்களுக்கும் இடையே உள்ள தூரம் எட்டு அடிக்குள்தான் இருக்கிறது. டிவியை மிக அருகில் இருந்து பார்க்கக் கூடாது. தொடர்ச்சியாக மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கவும் கூடாது. கண்களுக்கு இப்பழக்கம் நன்மை தராது. அதோடு குழந்தைகள் டிவியை தொடர்ச்சியாக பார்ப்பது அவர்களின் கல்வி செயல்திறனைப் பாதிக்கும். சோம்பேறியாக்கும். விளையாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஆர்வமின்மையை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக டி.வி. பார்க்கும் பிள்ளைகள் உடல் பருமன் அடைவதோடு பருமன் தொடர்பான நோய்களுக்கு ஆளாவதோடு சுறுசுறுப்பானவர்களாகவும் இருக்க மாட்டார்கள். சிந்தனைத்திறன், பல்துறை நாட்டம் என்பனவற்றில் பின்னடைவு ஏற்படும். ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அதற்காக, தொலைக்காட்சியை முற்றாக ஒதுக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல.

எத்தனையே ஆக்கபூர்வமான விசயங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அவைகளைப் பார்த்து பயன்பெறத்தான் வேண்டும். ஆனால், அதற்காக முழு நேரமும் மூழ்கிக் கிடப்பதுதான் கேடானது.

"தம்பி ஒரு காலத்துல எங்க ஊருல கரண்ட் கிடையாது. அப்போ நம்ம ஆட்கள் தினமும் ஒருத்தன ஒருத்தன் அடிச்சிக்கிட்டு, வெட்டிக்கிட்டு, பொலிஸ், நீதிமன்றம் என்று அலைவாங்க. எங்க தோட்டத்துக்கென்றே ஒரு பொலிஸ் அதிகாரி தனியாகவே நியமிக்கப்பட்டு இருப்பார். இதற்கெல்லாம் பெண்களே காரணம். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அவங்க பொழுது போகாமல் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி பேசி எப்படியோ ஒரு சண்டையை உருவாக்கிடுவாங்க. பிறகு அது பத்திக்கிட்டு எரியும். ஆனா இப்போ அப்படியா, வீட்டுக்கு வந்து டிவியில மூழ்கிடுறாங்க. அதனால் மத்தவன பத்தி தேடுறது இல்ல. அதனால ஊர் சண்டை இப்போ சுத்தமா இல்லை. பொலிஸ்காரன் தோட்டத்துக்குள்ள வருவதும் இல்லை. நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம். இப்போ சொல்லுங்க டிவி நமக்கு கேடா?" என்று ராமன் கங்காணி எதிர்கேள்வி கேட்டபோது நான் ஆடிப்போயிட்டேன். இப்படி டீவி பக்கமுள்ள விசயங்களை நியாப்படுத்தினாலும் நமது வளரும் புதிய தலைமுறையின் அறிவு வளர்ச்சி தொலைக்காட்சியின் மோகத்தால் மழுங்கடிக்கப்பட்டு வருவதையும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

"வேதாளம் எப்படி? வசூல்ல அள்ளிடிச்சாமே?" என்று மணிக்கணக்கில் விவாதம் செய்யும் இளைஞர்கள் ஒரு புத்தகத்தை வாங்கி படித்து விட்டு அதைப்பற்றி விமர்சனம் செய்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. தொலைக்காட்சியின் வருகைக்கு பின்னர் புத்தகம், பத்திரிகை வாசிக்கும் பழக்கம் தோட்ட இளைஞர், யுவதிகளிடம் குறைந்துவிட்டது. ஏன், ஆசிரியர்களிடமும் இப்பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. பத்திரிகை புத்தகம் விலை கொடுத்து வாங்குவதை காசைக் கரியாக்கும் வேலை என்று நினைப்பவரே அதிகம். அரசியல்வாதிகளிடம் உதவி கேட்கும் நம் ஊர் தலைவர்கள், கோயில் கட்டவும் கோயிலுக்கு ஒலிபெருக்கி, பேண்ட் வாத்தியம் கேட்டதாக மட்டுமே நான் கேள்விப்படுகிறேன். யாராவது எங்க ஊருக்கு அல்லது தோட்டத்துக்கு ஒரு நூலகம் அமைத்துத் தருமாறு கேட்டதாக வரலாறு கிடையாது. சுருக்கமாகச் சொல்வதானால் நாம் எதற்கும் அடிமையாகக் கூடாது. சிகரெட், மதுவுக்கு அடிமையாவதுதான் மோசமான அடிமைத்தனம் என்பது பொதுவான சிந்தனை. அது சரியல்ல. டி.வி. பார்ப்பது, டி.வி.டி பார்ப்பது என்பதில் பைத்தியமாக இருப்பதும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடப்பதும் கூட மதுவுக்கு அடிமையாவது போன்ற ஒரு கேவலமான பழக்கம்தான். எப்போதும் கைபேசியை கையில் வைத்து அதிலேயே ஆழ்ந்து கிடப்பதும் ஒருவகையான போதைதான்.

நான் எமது சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றால் இப்பழக்கங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். நாம். டி.வி, டிவிடி என்பனவற்றில் மூழ்கிக்கிடந்தால் பிள்ளைகளுக்கு எப்படி 'ஹோம் வேர்க்'கிலும் படிப்பிலும் நாட்டம் வரும் என்று யோசிக்க வேண்டும்.

மலையகத்தை எடுத்துக்கொண்டால் இந்த டி.வி, டிவிடி மோகம் பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது என்பது பட்டவர்த்தனமான உண்மை. தயவு செய்து இதை உணர்ந்து கொள்ளுங்கள்.

1 comment:

  1. Good Article which tell us as how television culture is spoiling our society. in my recent visit to my home town(Govinna - Bulathsinghala) i have noticed that there is another one electronic device which ruining our society. specially among younger generation who are now addicted to smart phone where they can browse internet which allow them to watch movies (bad and good) on youtube and social media like facebook, path, badoo, instagram , etc . In my opinion, they are wasting their valuable time on unnecessary things rather spending on studies and sports. Teachers and parents should play a special part on this and make them aware about this.

    ReplyDelete