Saturday, February 20, 2016

தமிழனின் கேள்வி

ரஜினி எவ்வளவு கொடுத்தார் என

தமிழன் ஏன் கேட்கிறான்?


அருள்

ரம்பத்தில் சென்னையில் மழை, கன மழை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். அது ஆழிப்பேரலையையே தூக்கிச் சாப்பிட்டு விடும்படியான பேரிடர் என்பது அனைவருக்குமே ரொம்பப் பிந்திதான் தெரிந்தது. தண்ணீர் வடிந்த பின்னரே லட்சக்கணக்கான மக்கள் வீடு, வாசல், உடமைகளை இழந்திருக்கிறார்கள் என்ற சோகம் முகத்தில் அடித்த மாதிரி தெரிய வந்தது. நூறு வருடங்களுக்கு முன் இப்படி ஒரு மழை வெள்ளம் வந்திருக்கிறதாம். ஆனால் நிச்சயம் இவ்வளவு பெரும் சேதத்தை அது ஏற்படுத்தியிருக்காது. அப்போது கட்டடங்களும், வாகனங்களும், சனத்தொகையும் சென்னையில் மிகக்குறைவு. இம்முறைதான் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் வெள்ளம் அனைவரையும் புரட்டிப் போட்டிருக்கிறது.
எனினும் இந்த வெள்ளம் சில நன்மைகளையும் செய்திருக்கிறது.


மனித நேயத்தை இவ்வெள்ளம் வெளிப்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் வரிந்து கட்டிக்கொண்டு சக மனிதர்களுக்கு முடியுமான அத்தனை வழிகளிலும் உதவ முன்வந்ததைப் பார்த்தோம். யார் உண்மையான மனிதர்கள், யார் போலி முகத்திரையுடன் திரிந்தவர்கள் என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய அல்லது திருத்திக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் உள்ளது. அதுதான் அரசியல் மற்றும் சினமா மாயை.

சினமா பேசத் தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழன் அதற்கு அடிமையாகிப் போனான். நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசம் தெரியாமல் சினமா நட்சத்திரங்களை தெய்வமாகக் கருதி வருகிறான் தமிழன். எம். ஜி. ஆர், என். டி. ராமரால் ஆகியோர் இந்த மாயையைப் பயன்படுத்தியே முதல்வரானார்கள். இதைப் பார்த்த ஏனையோர், சிவாஜி, பாக்கியராஜ், டி. ராஜேந்தர், விஜயகாந்த் ஆகியோரும் முதலமைச்சர் கனவோடு அரசியலுக்கு வந்தார்கள். விஜய்க்கு அந்த தலைவராகும் ஆசை இருக்கிறது. குஷ்பு முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். எம்.ஜி.ஆர். செல்வாக்கில் ஜெயலலிதா வந்தார். இன்னும் பல நட்சத்திரங்கள் அரசியலில் நுழைய மெதுவாக பாதை போட்டும் வருகிறார்கள். ஒரு சமயம் ரஜினி வருவேன், வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருந்தார்.

இப்படி இவர்கள் அரசியலுக்கு வந்ததற்கும் வருவதற்கும், நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையில் வித்தியாசம் காண முடியாத தமிழனின் பார்வைக் குறைபாடே காரணம்.

வெள்ளம் கழுத்துவரை வந்ததும், எந்த நடிகர் எவ்வளவு கொடுத்தார் எனப் பார்க்க ஆரம்பித்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இன்று ஏராளமானோரும் ஏகப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தாராளமாக பாதிக்கப்பட்டவர்களும் உதவி வந்தாலும், விஜய் எவ்வளவு கொடுத்தார்? ரஜினி எவ்வளவு தந்தார்? அஜித் கொடுத்த தொகை எவ்வளவு? கமல் கொடுத்தாரா இல்லையா? என்பது ரசிகர்களுக்கு முக்கியமாயிற்று.

நடிகர் தரப்போ, 'ஏன் எங்களிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? நாங்களும் உழைத்துதான் சம்பாதிக்கிறோம். சோப்பு, பௌடர், மளிகைச் சாமான்கள், கார், சைக்கிள் என்று ஏராளமான பொருட்களைத் தயாரித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்கள் எவ்வளவு கொடுத்தன, கொடுக்கவில்லை என்பதைப்பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?' என்ற ஒரு நியாயமான கேள்வியை முன்வைக்கிறது.

எம். ஜி. ஆர். நீதிக்காகப் போராடுவார், ஏழைகளை அரவணைப்பார் என்று மக்கள் நம்பியதாலேயே அவர் முதலமைச்சரானார். எம். ஜி. ஆரின் வாரிசாக, பெண் தெய்வமாக ஜெயலலிதாவைப் பார்ப்பதால்தான் அவருக்கு இத்தனை செல்வாக்கு. வணங்கவும், கூழைக் கும்பிடு போடுவதற்கு இவர்கள்தான் தமிழர்களைப் பழக்கி வைத்தார்கள். காலில் விழும் கலாசாரத்தையும் மந்திரிகளை அடிமைகளாக கருதுவதையும் உச்சத்துக்குக் கொண்டுபோனவர் ஜெயலலிதா. அண்ணாந்து பார்க்கும் இடத்தில் இருந்தால்தான் மக்கள் தன்னை மதிப்பார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா. ஜெயிலுக்குப் போய் வந்த பின்னர் ஆர். கே. தொகுதியில் நின்றவரை சென்னைத் தமிழன் மிகப்பெரும் வெற்றியை அளித்து அவர் மீதிருந்த களங்கத்தைத் துடைத்தெறிந்தான். இது போதாதா ஜெயலலிதாவுக்கு!

எம். ஜி. ஆருக்குப் பின் தழைத்து வளர்ந்த புதிய தமிழ் சமூகமும் அதே மனப்பான்மையில்தான் நடைபோட்டு வருகிறது என்பதற்கு ரஜினி, விஜய்காந்த், சூர்யா, விஜய் ஆகியோர் திரைத்துறையில் பெற்றிருக்கும் வெற்றியே ஒரு நல்ல உதாரணம். இவர்கள் எல்லாம் எம். ஜி. ஆர் பாணியில்தான் ஏழைப் பங்காளனாகவும் ஆபத்பாந்தவனாகவும், கிருஷ்ணபரமாத்மா போலவும் தம்மைத் திரையில் நிலை நிறுத்துகிறார்கள். அதிவீர பராக்கிரமசாலியாக தோன்றுகிறார்கள். ஏழைகளுக்காகவும் அநீதிக்காகவும் குரல் கொடுக்கிறார்கள். இவர்களின் பாத்திரங்களை மகிமைப்படுத்தும் வகையிலேயே பாத்திர குணாம்சங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

சோப்பு அல்லது ஐஸ்கிறீம் கம்பனிகள் இப்படி எல்லாம் உள்நோக்கங்கள் வைத்து செயல்படுவதில்லை. சாமான்களை விற்றோமே, பைக்குள் போட்டோமா என்பதோடு நின்று விடுகின்றன. எனவே இந்நிறுவனங்களை நடிகர்களுடன் ஒப்பிடுவதற்கில்லை. மேலும், நடிகர்கள் மீது குற்றம் சொல்லும் மக்கள், நடிகைகள் எவ்வளவு நிதி அளித்தார்கள் என்பதைப் பார்ப்பதில்லை. ஏனெனில் நடிகைகள் நடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள். சினமா - அரசியல் பேசுவதில்லை.

எனவே 'மாஸ்' என்ற தொகுதிக்குள் வரும் இத்தமிழ்ப்பட நடிகர்கள், தாம் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படும்போது உதவ வேண்டும் என மக்கள் கருதுவதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் இப்படி ஒரு 'ஆபத்பாந்தவன்' இமேஜை மக்கள் மனதில் கட்டமைத்ததே இந்த நடிகர்கள்தான். இதனால்தான் ரஜினி எவ்வளவு கொடுத்தார், கமல் என்ன செய்தார் என தமிழன் கேட்கிறான்.

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பெரிய நடிகர்களைத் தவிர ஏனைய இளைய நடிகர்கள், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போதும் சரி, தற்போது தண்ணீர் வடிந்த பின்னரும் சரி நேரடியாகவே களத்தில் இறங்கி மீட்பு மற்றும் உதவும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பாராட்ட வேண்டும். ஆனால் 'ஆபத்பாந்தவனாக' மக்களால் பார்க்கப்படும் நட்சத்திரங்களோ பாதிக்கப்பட்ட மக்களை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இதில் முக்கியமானவர் ரஜினி. சுப்பர் ஸ்டார் எனப் போற்றப்படுபவர். ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்கக் காசை தமிழக மக்கள் தனக்கு தந்ததாக சொல்லியவர். பெரு முதலாளிகளுடன் சேர்ந்து மெகா படங்களைத் தயாரித்து பலப்பல கோடிகளைத் திரட்டுபவர். இத்தகைய மெகா படங்களின் முதலீடு பல கோடிகளாக இருந்தாலும் உண்மையான முதலீடு ரஜினி ரசிகர்கள் என்ற முதலீடுதான்.

சில வருடங்களின் முன் திருமதி ரஜினிகாந்தின் கோகுலம் என்ற குடும்பப் பள்ளிக்கு நிதி திரட்ட அவர் ஒரு கண்காட்சியை நடத்தினார். இக்கண்காட்சியில் கார்ட்போர்ட் ரஜினி உருவத்துக்கு அருகே நின்று படம் எடுத்துக்கொள்ள ஐந்து ரூபா கட்டணம் அறவிட்டார் லதா ரஜினி. இது கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

சில வருடங்கள் கழிந்து, கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து நிகழ்ந்து 99 குழந்தைகள் கருகி மாண்டார்கள். இச்சோக நிகழ்வுக்கு அனுதாபம் தெரிவித்து பலரும் நிதியுதவி செய்தார்கள். விஜயகாந்த் அப்போது கட்சி ஆரம்பித்திருக்கவில்லை. எனினும் அவர் பத்து லட்சம் ரூபாவை நிதியாக அளித்தார். கட்சி ஆரம்பிக்கலாம் என அச்சமயத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுப்பர் ஸ்டார் மிகத் தாமதமாக ஒரு லட்சம் ரூபாவை உதவி நிதியாக அளித்தார்.

இன்று இப்பேரிடர் நிகழ்ந்தபோது ரஜினி சென்னையில் இல்லை. கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கும் விஜய் பத்து லட்சம் ரூபாவை நிதியாக அளித்ததாகவும் தன் திருமண மண்டபத்தை அகதிகளுக்காக திறந்து விட்டதாகவும் தகவல் கசிந்த சில தினங்களுக்குப் பின்னரேயே 'ரோசம்' அடைந்த சுப்பர் ஸ்டார், பத்து லட்சத்தை நிதியாக அளித்துவிட்டு வேறு வழி இல்லாமல் தன் ராகவேந்திரா மண்டபத்தை திறந்து விட்டதாகவும் செய்தி வந்தது. ஆனால் இவற்றுக்கான புகைப்பட ஆதாரங்கள் இல்லை. மேலும் ரஜினி சார்பாக ஒரு அனுதாப செய்தி கூட வெளியிடப்படவில்லை. தனது விசிலடிச்சான் குஞ்சு சங்கத்துக்குக்கூட 'இறங்கி வேலை செய்யுங்கள்' என்று அவர் கட்டளையிட்டதாக ஒரு செய்திகூட இல்லை. ராகவா லோரன்ஸ் ஒன்றும் சுப்பர் ஸ்டார் இல்லை. ஆனால் அவர் தாராளமாக உதவிகள் செய்து வருகிறார்.

இந்த மெகா நடிகர்கள் மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருப்பதன் மூலம் தாம் நடிக்கும் படங்களை வெற்றிப்படங்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள். சாதாரண மக்களுடன் இவர்கள் சினிமா மூலம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்பதே இதன் பொருள். இதனால்தான் நடிகர்கள் உதவி செய்வார்கள். செய்யவும் வேண்டும் எனத் தமிழன் எதிர்பார்க்கிறான்.

இந்தப் பேரிடர் நிகழ்ந்ததால் இழப்புகள் ஏற்பட்டாலும், பல 'ஆபத்பாந்தவ' நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. துட்டு சேர்ப்பதற்காக எப்படி வேண்டுமானாலும் 'நடிக்கக்' கூடிய நிழல் மனிதர்களே இந்த மெகா ஸ்டார்கள் என்பதை தமிழ் ரசிகன் உணர்ந்து கொள்ள இது நல்ல ஒரு தருணம். பசி வந்தால் சாப்பிடுகிறோம். தாகம் என்றால் அருந்துகிறோம். உடை பிடித்தால் வாங்குகிறோம். அதேபோல ஓய்வாக இருக்கும்போது திரைப்படம் பார்க்கிறோம். படம் முடிந்ததும் நாம் அந்த நடிகனை தலையில் தூக்கி வைக்காமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட வேண்டும்.

நடிகனை நடிகனாக மட்டும் பார்த்திருந்தால் நடிகர்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை! கடையில் சோப் வாங்குவது போலத்தான் தியேட்டரில் டிக்கட் வாங்குவதும்!

No comments:

Post a Comment