Monday, February 15, 2016

இருள் உலகக் கதைகள்

பூசாரிக்கு சவால் விடுத்த கிழவியின் ஆவி

ஆதிகேசன் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி  ஸ்ரீகாந்தன்

து ஒரு நள்ளிரவு வேளை. இரத்தினபுரி பிரதேசத்தில் பூரண அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இரத்தினபுரி நகரை அண்மித்திருக்கும் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு ஒற்றை வீட்டில் மட்டும் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் ரொம்பப் பலமாகவே கேட்டது. "குழந்தை ரொம்ப நேரம் அழுகுதே என்னது பாரு" என்ற சஞ்சீவ படுக்கையில் புரண்டு படுத்தான். கலைந்த ஆடைகளை சரி செய்தபடி அவசரமாக எழுந்த பியசீலி, தனது அம்மாவும் குழந்தையும் தூங்கும் அறையை எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவள் ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.

தொட்டிலைப் பிடித்து கைகளால் விரித்து தொட்டிலுக்குள் படுத்திருக்கும் குழந்தையை ஏதோ செய்து கொண்டிருந்தாள் தலைவிரிகோலத்தில் காணப்பட்ட ஒரு கிழவி! "அய்யோ! அய்யோ!" என்று பேய்க் கூச்சல் போட்ட பியசீலி தரையில் சாய்ந்தாள். பியசீலி போட்ட கூச்சலைக் கேட்டு அவளது அம்மாவும், கணவன் சஞ்சீவவும் வாரிச்சுருட்டி எழும்பினர். பதறியடித்தப்படி பியசீலியை தூக்கினார்கள். அப்போது குழந்தையின் அழுகையும் நின்றிருந்தது. மயக்கமுற்ற நிலைமையில் இருந்த அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து, நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர். விசாரித்த போது, இறந்து போன கிரியம்மா (பாட்டி) அகோரமான முகத்தோடு குழந்தையை பயமுறுத்திக் கொண்டிருந்ததாக அவள் சொல்ல விசயத்தைக் கேட்ட அந்தக் குடும்பமே ஆடிப்போனது. பியசீலி போட்ட கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்களும் குலை நடுங்கிப் போனார்கள்.


"அது ஒரு பேராசைக்கார கிரியம்மா. அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வீட்டை விட்டுப் போகாது" என்று ஊர்ப் பெரிசுகள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு அந்த இடத்தைக் காலி செய்தார்கள்.

கிரியம்மாவின் பீதியில் சஞ்சீவ உறைந்து போயிருந்தான். 'சஞ்சீவ அடிப்படையில் ஒரு கஞ்சன். அதனால் அண்மையில் செத்துப்போன தன் பாட்டியான கிரியம்மாவுக்கு ஒழுங்காக தானம் வழங்காததால் அவளது ஆவி வெறிபிடித்து வீட்டுக்குள் வந்திருக்காம்' என்று ஊர் வாசிகள் சொன்ன செய்திகளும் அவனது காதுக்கு வர, குடும்பத்தோடு பன்சலைக்குப் போய் தவறை மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்துவிட்டு வந்தான். அதன்பிறகு நாட்கள் நகர சஞ்சீவவின் வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின.

இரவு நேரத்தில் வீட்டிற்குள் யாரோ நடமாடுவது போன்ற சத்தமும், சமையலறையில் தட்டுமுட்டு சாமான்கள் தரையில் வீசியெறியப்படும் ஓசையும் கேட்க ஆரம்பித்தன. என்ன சத்தம் என்று ஓடிப்போய்ப் பார்த்தால் பொருட்கள் வைத்தது வைத்த இடத்திலேயே அசையாமல் இருக்குமாம். சரி இது மனப் பிரம்மையாக இருக்கும் என்று சஞ்சீவ வீட்டில் தனது மனைவிக்குக் கூட விசயத்தைச் சொல்லாமல் இருந்தான்.

ஆனால் இதே விடயத்தை பியசீலியும் அவனிடம் சொன்ன போது, அவனுக்கு உள்ளுர உதறல் எடுத்தது. அதோடு பியசீலி இன்னொரு புதிய விஷயத்தையும் சொன்னாள். 'இரவில் மீதம் வைக்கும் உணவை யாரோ சாப்பிட்டு விட்டு பானையில் தண்ணீர் ஊத்தி வைப்பதாகவும் கூற, சஞ்சீவவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது. எல்லாமே எல்லை மீறிப் போவதாக உணர்ந்தான். இதற்கு உடனடியாக முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைத்தவன் தமக்குத் தெரிந்த நபர்களிடம் சொல்லி ஒரு சக்திவாய்ந்த மாந்திரிகரைத் தேடித் தரும்படி கேட்டுக் கொண்டான். அவர்கள் கொடுத்த முகவரிதான் ஆதிகேசன் பூசாரி. உடனே ஆதிகேசனை சந்திக்க கஹவத்தைக்குச் சென்று அவரின் வீட்டு வாசலில் சஞ்சீவ இறங்க, பிரிகாரம் கேட்க வந்தவனின் முகத்தை பார்த்தே சஞ்சீவவின் வீட்டில் தீய சக்தி குடிகொண்டிருப்பதை ஆதிகேசன் உறுதி செய்தார்.

அண்டியிருப்பது ஒரு பேராசைக்கார ஆவி. அதை முடிக்க சில வேலைகளைச் செய்தாக வேண்டும் என்றவர், பரிகார பொருட்களுக்கான பட்டியலோடு, திகதியையும் குறித்துக் கொடுத்தார்.

பரிகார பூஜைக்கான ஏற்பாடுகள் சஞ்சீவவின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆதியும் குறித்த நாளில் தமது சகாக்களோடு பரிகாரம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். பூசாரியை சஞ்சீவவின் குடும்பம் கும்பிட்டு வரவேற்று அமர வைத்தார்கள். பரிகார மன்று அமைக்கும் வரை அந்தக் குடும்ப பெரியவர்களோடு பூசாரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர் எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் புகுந்த கிரியம்மா யாரையும் சட்டை செய்யாமல், உள்ளே நுழைந்து சமையல் கட்டுப் பக்கமாக சென்றதைப் பூசாரி பார்த்தார். இக்காட்சியை ஏனையோர் கண்களுக்குப்  புலப்படவில்லை என்பதால் அவர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பூசாரிக்கு நொடியில் அங்கு நடப்பதென்ன என்பது புரிந்தது.
ஆதிகேசன்ஆனால், தீய சக்திகளை மட்டுமே 'ஸ்கேன்' செய்து கண்டுபிடிக்கும் ஆதியின் கண்கள் கிரியம்மா உள்ளே சென்று அமர்ந்த இடத்தையே லேசர் பார்வையால் கண்காணித்துக் கொண்டிருந்தது. பூஜைக்கான அட்சர சதுரங்கத்தில் ஆதி அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது சமையல் கட்டுப் பக்கமாக இருந்து வெற்றிலை இடிக்கும் சத்தம் பலமாகவே ஆதியின் காதுகளுக்கு மட்டும் கேட்டது. கிழவி ஆதியின் மந்திர உச்சாடனங்களை சிதைப்பதற்காகவே வெற்றிலை உரலைப் பலமாக இடிக்கிறாள் என்பதை ஆதி புரிந்து கொண்டார். அதனால் அவர் தனது மந்திர உச்சாடனத்தை உச்சஸ்தாயியில் சொல்லலானார். ஆதியின் மந்திரத்தை தாக்குப் பிடிக்க முடியாத கிழவி அந்த வீட்டை விட்டு வெளியேறி வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொண்டாள். விடுவாரா பூசாரி! பெரிய தீப்பந்தத்தைக் கொளுத்தி கிழவியை அப்படியே சுடுகாட்டுப் பக்கமாக துரத்த ஆரம்பித்தார். தீயோடு ஆவேசமாக ஆதி வருவதைக் கண்ட அந்த கிரியம்மா ஓட்டமெடுத்தாள். ஓடியவள் சுடுகாட்டில் மூச்சு வாங்கினாள். அவளின் கதையை முடித்து விட அவசரமாக அனைத்து வேலைகளையும் முச்சந்தியிலேயே முடித்தார் பூசாரி. பிறகு முட்டைகளை காவு கொடுப்பதற்காக தமது சகாக்களிடம் மூன்று முட்டைகளைக் கொடுத்து சுடுகாட்டில் வைத்து விட்டு வரும்படி கூறிவிட்டு, ஆதி தீப்பந்தத்தோடு சஞ்சீவவின் வீட்டிற்கு சென்று சில பரிகாரங்களை அந்த வீட்டில் செய்து விட்டு துஷ்ட ஆவியை ஒழித்து விட்ட மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். வீடு வந்த ஆதி களைப்பில் படுத்து ஆழ்ந்த நித்திரையானார். அப்போது அவரின் கைத்தொலைபேசி அலறியது. அடுத்த நொடி செல்லை எடுத்து காதில் வைத்த ஆதியும் அலறினார்.

கிரியம்மா மீண்டும் வீட்டுக்குள் வந்து விட்டதாக செல்வழியாக பேசியவர்கள் சொன்னார்கள். பட்ட கஷ்டம் இப்படி வீணாகிவிட்டதே என்று புலம்பிய ஆதி அடுத்த கனமே தமது சகாக்களுடன் புறப்பட்டார்.
கிழவியை சுட்டெரிக்கும் கோபத்தோடு கிளம்பிய ஆதிகேசன் சஞ்சீவவின் வீட்டில் இறங்கினார். இறங்கியவரின் கண்களுக்கு அந்த கிரியம்மா நடு வீட்டில் உட்கார்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருப்பது ரொம்பவும் தெளிவாகவே தெரிந்தது. அப்போதுதான் நடுங்கிய குரலுடன் 'சாமி நீங்க காவு கொடுக்க கொடுத்த முட்டையை நாங்க சுடுகாட்டுல வைக்கல... பயந்திட்டு சந்தியிலேயே போட்டுட்டு வந்துட்டோம்' என்று அவரின் சகா ஒருவன் கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட ஆதி பற்களை நறநறவென கடித்தபடியே தீப்பந்தத்தைக் கொளுத்தினார். அந்தக் கிழவியை நோக்கிப் பாய்ந்தார். அடுத்த நொடியே தப்பினோம், பிழைத்தோம் என்று கிழவி கத்திக்கொண்டே சுடுகாட்டை நோக்கி ஓடினாள். கிரியம்மாவைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்ற ஆதி அவளை மரணப்பிடியாக இறுக்கிப் பிடித்தார். அனைத்துப் பரிகார பூஜைகளையும் முடித்து அவரே முட்டைகளையும் காவு கொடுத்து நிறைவு செய்தார். பேராசைக் கிழவியின் கதையை முடித்த நிம்மதியோடு வீட்டுக்குச் சென்றார்.

இப்போது சஞ்சீவவின் குடும்பம் நிம்மதியாக வாழ்வதாக பூசாரி சொல்கிறார்.

No comments:

Post a Comment