Wednesday, February 3, 2016

யாதும் ஆவணப்படத்தைத் தயாரித்த கோம்பை எஸ். அன்வருடன் ஒரு திறந்த மன உரையாடல்

"தமிழர் - முஸ்லிம் உறவில் ஒரு கதவைத் திறக்க உதவியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்"

 

அருள் சத்தியநாதன்

'சங்க கால தமிழனுக்கு பாலை நிலம், இமயம், பெருமழை பாதிப்பு பற்றியெல்லாம் எப்படித் தெரியும்? விரிந்து ஆராய்ந்தால் சிந்து வெளி திராவிடனுக்கும் முற்பட்ட தமிழனைத் தேட வேண்டியிருக்கும்'

'கோம்பையில் ரங்கநாத சுவாமி கோவிலை திப்பு சுல்தானே அமைத்துத் தந்தார்!'

குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று தமிழகத்து நிலத்தை வகுத்தவர்கள் பாலை என்ற நிலத்தையும் சேர்ந்திருக்கிறார்கள். பாலை என்பது பாலைவனப் பகுதியைக் குறிக்கும். இந்தியாவில் ராஜஸ்தானத்தில் பாலைவனத்தைப் பார்க்கலாம். ஆனால் ராஜஸ்தான் அளவுக்கு அதாவது ஒட்டகங்களில் ஏறி பயணிக்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் பாலை நிலம் இல்லை. இருந்ததாக சொல்லும் எழுத்து அல்லது இலக்கிய ஆதாரமும் இல்லை. திருச்சி, மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுர மாவட்டங்களில் வரட்சி காணப்படுமே தவிர பாலை நிலம் இல்லை.

ஆனால் சங்கப் பாடல்களில் நிறைய பாலை நிலக் காட்சிகள் வருகின்றன. பாலை நிலத்தில் செல்லும் ஒட்டகங்கள் வெண்கற்களை (இறந்த மிருகங்களின் எலும்புகள்?) விழுங்கி மேலே நடப்பதாக வர்ணனைகள் வருகின்றன. பனி படர்ந்த மலைகள் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. பாறைகளை உடைத்தெறிந்து ஆர்ப்பரிக்கும் பெருமழை பற்றியும் குறிப்புகள் வருகின்றன.

மதுரையில் வாழ்ந்திருக்கக் கூடிய தமிழ் சமூகத்துக்கு பாலையின் கோரம், வெண்பனிமலைகள், தண்ணீரின் சக்தி என்பன எப்படி இவ்வளவு ஆழமான அறிவு எங்கிருந்து வந்திருக்க முடியும்? அராபிய பாலைவனத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எப்படி இந்தத் தமிழ் சமூகத்துக்குத் தெரிய வந்திருக்க முடியும்? சில வருடங்களுக்கு முன் இமாலய பகுதியில் பொழிந்த மேக வெடிப்பு மழை பாறைகளையும் உடைத்தெறிந்து ஊழித் தாண்டவமாடி வருண சக்தியை வெளிப்படுத்திய பின்னரேயே மழைக்கு இப்படி ஒரு மகத்தான சக்தி இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆனால் சங்ககாலத் தமிழ் சமூகத்துக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்திருக்க முடியும்?

இந்தத் தகவல்கள் பிரமிப்பூட்டுபவை. நான் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அங்கு சொற்பொழிவு நிகழ்த்திய பாலகிருஷ்ணன் என்பவர் சங்கத் தமிழனுக்குத் தெரிந்திருந்த உலக அறிவை புட்டுக் காட்டிய போது நான் கிறங்கிப் போனேன். இந்தியாவில் என்று சொல்வதைவிட உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம், இன்று வாழும் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருக்க முடியாது என்பதையும் பல இடங்களில் வாழ்ந்து அனுபவங்களையும் பெற்று இறுதியாகவே தமிழக மண்ணில் கால் ஊன்றியிருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். சிந்துவெளி நாகரிகத்துக்கு அப்பால் சென்றும் இந்த இனத்தைப் பற்றிய தகவல்களைத் தேட வேண்டியிருக்கிறது...
யாதும் ஆவணப்படத்தில்
ஒரு காட்சி

தமிழ் இனத்தின் தொன்மை குறித்து எம்மிடம் பேசும்போது இப்படிச் சொல்கிறார் கோம்பை அன்வர்.

கும்பகோணம் இஸ்லாமியத் தமிழ் ஆய்வு மாநாடு தொடர்பான கட்டுரைத் தொடர் வானவில்லில் வெளியான போது அதில், 'யாதும்' என்ற பெயரிலான ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தோம். இந்த ஆவணப் படத்தைத் தயாரித்தவர் கோம்பை எஸ். அன்வர். 2500 வருடங்கள் பழைமையான நறுமணப் பொருள் வணிகத்தின் ஊடாகவே மேற்கு ஆசியா, வட ஆபிரிக்க மற்றும் தென் கிழக்கு தீபகற்ப நாடுகளுடன் தமிழகமும் இணைந்தது ஏழாம் நூற்றாண்டில். இஸ்லாம் மேற்கு ஆசியாவில் பரவிக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே அது தமிழகத்திலும் வேரூன்றத் தொடங்கியது.

இந்தத் தமிழ் முஸ்லிம் சமூகம் வேரூன்றியது எப்படி, திராவிட - முஸ்லிம் கலப்பால் உருவான ஒரு சமூகத்தை எப்படி தமிழகம் அரவணைத்தது, தமிழ் இஸ்லாமிய இலக்கியம் மற்றும் கலாசாரம் என்று பல்வேறு அம்சங்களில் பயணிக்கும் அற்புதமான ஒரு ஆவணப்படம் இது. ஒரு கறுப்பு அமெரிக்கர் தன் வேர்களைத் தேடி பயணித்த அனுபவங்களை 'ரூட்ஸ்' என்ற பெயரில் நூலாக வெளியிட்ட போது அது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'யாது' என்ற அன்வரின் ஆவணப்படத்தைப் பார்த்தபோது, பார்த்தவர்களுக்கு அது நிச்சயம் 'எலக்ட்ரிக் ஷொக்' கொடுத்தே இருக்கும். ஆர்வத்துடன் ஒரு நூலை வாசித்து முடித்ததும் ஒரு நிறைவும் புத்துணர்வும் ஏற்படுமே, அந்த உணர்வே ஏற்பட்டது. யாதும் டி.வி.டி. முகப்பில் 'வேர்களையும் அடையாளத்தையும் தேடி ஒரு தமிழ் முஸ்லிமின் வரலாற்றுப் பயணம்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. அது ஒரு அற்புதமான பயணம்.

அன்வர் கடந்த மாதம் கொழும்பு வந்திருந்தார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் மட்டக்களப்புக்குச் சென்றார். தன் குறுகிய கால பயணத்தில் ஐந்து அல்லது ஆறு முறை தன் யாதும் ஆவணப்படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார். தென் கிழக்கு பல்கலைக்கழகம் உட்பட சில இடங்களில் அவர் இப்படத்தைத் திரையிட்டிருக்கிறார்.

இந்த ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட வேண்டும் என கும்பகோணம் கட்டுரைத் தொடரில் நான் குறிப்பிட்டிருந்தேன். மருத்துவர் தாசிம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த ஆவணப்படம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எடுபடுமா? இங்கே ஒரு இஸ்லாமிய அரசியல் இருப்பதால் அந்தப் பார்வையில் இது எடுபடுமா? விமர்சனங்களுக்கு உள்ளாகுமா? என்ற சந்தேகங்கள் இருந்தன. ஆனால் இச்சந்தேகங்கள் எதுவும் இல்லாத அன்வர் இங்கே வந்து 'யாதும்' ஆவணப்படத்தைத் திரையிட்டார்.

அவரைக் கண்டதும் நான் முதலாவதாகக் கேட்டது, படத்தைத் திரையிட்டீர்களா? என்றுதான். 'ஆமாம், நல்ல வரவேற்புக் கிடைத்தது' என்றார். யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையா?

"இல்லையே! ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள். அவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்திருக்க வேண்டும். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காட்டப்பட்ட போது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தமது ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள்.

ஒருவர் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்களும் நாங்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் எவ்வாறெல்லாம் விளையாடிவிட்டன. நாங்கள் எப்படி இருந்தோம் என்பதை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துவதாய் உணர்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் அந்த ஒற்றுமை பாவம் வெளிப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் வலியுறுத்துவதாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டார்.

நான் இதுவரை திரையிட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே எதிர்மாறான கருத்தைத் தெரிவித்திருந்தார். அது இந்தியாவில், இங்கல்ல. அதைத்தவிர எவருமே எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தவில்லை. பலருக்கும் இந்த அனுபவம் புதிதாக இருந்தது. அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயத்தை இப்படம் பேசுவதால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள், நெகிழ்ந்தார்கள், தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இலங்கைக்கு வந்து என்னால் ஒரு கதவைத் திறக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!" என்று கூறி முடித்தார் கோம்பை அன்வர்.

தமிழ் - முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஆராய வேண்டும் என்ற ஆர்வமும் இப்படி ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்க வேண்டும் எனவும் எவருக்கும் தோன்றாத போது உங்களுக்குத் தோன்றியது எப்படி? என்று கேட்டேன்.

"நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது பிறந்த ஊர் கோம்பை. தேனி மாவட்டம் கேரளா எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. எனவே நாங்கள் கேரளா பக்கம் போவோம். அப்படிப் போகும் போது எங்களை அடையாளம் கண்டுகொள்ளும் மலையாளிகள்.
ஆவணப்பட ஒளிப்பதிவில்


'நீ பாண்டியெல்லே...' என்பார்கள். அதாவது நீ பாண்டி நாட்டுக்காரன் (தமிழன்) அல்லவா என்பது இதன் அர்த்தம். இதில் ஒரு எள்ளல் தொனி இருக்கும். அதாவது அவர்களைப் பொறுத்தவரை, தமிழன், ஆந்திரக்காரன் மற்றும் கன்னடியன் எல்லாமே பாண்டியர்கள். 'பாண்டியர்' என்ற ஒற்றை அடையாளத்தில் எல்லாம் அடங்கும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் எல்லாமே! இதன் பாதிப்பு என்னைப் பிற்காலத்தில் இப்படி ஒரு ஆய்வை நோக்கிச் செல்லத் தூண்டியிருக்கலாம்.

கோம்பையில் ஒரு ரங்கநாதசுவாமி ஆலயம் உள்ளது ஒரு சிற்றூரில் இப்படி ஒரு கோவில் எப்படி வந்திருக்க முடியும் என்ற கேள்வி என்னில் இருந்தது. அவ்வூர் ஜமீன்தாரிடம் இதைக் கேட்டேன். அவர் அதற்கு ஒரு கதை சொன்னார்.

திப்பு சுல்தான் மதுரைக்கு படையெடுத்து வந்த போது அவரை எதிர்க்கப் பயந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் ஓடி ஒளிந்து விட்டனராம். ஆனால் கோம்பையைச் சார்ந்த பாளையக்காரர் மட்டும் அவரைப் பார்க்க பரிசுப் பொருட்களுடன் சென்றாராம். ஏனெனில் அவர் ஒரு தெலுங்கு பேசும் பாளையக்காரர். திப்பு சுல்தான் மைசூர்காரர். தெலுங்கர் மற்றும் தெலுங்கு மொழி அவர்களை இணைத்தது.

திப்புவைப் பார்க்கச் சென்றவர்களை திப்பு வரவேற்று ஆசனமளித்து விருந்தளித்தார். உரையாடி பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். பரிசுப் பொருட்களைப் பெற்றார். அவர்கள் ஊர் திரும்பும் போது ஏதேனும் கொடுக்க விரும்பிய திப்பு சுல்தான், உங்களுக்கு என்ன வேண்டும்? எனக் கேட்டார். அவர்கள் பொன், பொருள் கேட்காமல், எங்களுக்கு ரங்கநாதர் கோவில் ஒன்றை அமைத்துத் தருமபடி கேட்டார்கள் அதை ஏற்றுக் கொண்டார் திப்பு. பின்னர் ரங்கநாதர் கோவில் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, 'மைசூர் ரங்கநாத சுவாமியின் திருவுருவச் சிலையைப் போலவே ஒரு மூலவர் சிலையைச் செய்து தகுந்த மரியாதைகளுடன் ஊர்வலமாக அதை கோம்பைக்கு அனுப்பி வைத்தார். இப்படியாகத்தான் மைசூர் ரங்கநாதர் கோவிலைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கோவில் இங்கே அமைவது சாத்தியமாயிற்று" என்று கூறி முடித்தபோது நான் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் போனேன்.

(அடுத்த இதழில் முடியும்)

No comments:

Post a Comment