Wednesday, February 3, 2016

அன்வர் நேர்காணல்-2

தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையிலான சந்தேகங்களைத் தாண்டி

ஏன் இவர்கள் போகக் கூடாது?

 

அருள் சத்தியநாதன்

டந்த இதழில் கோம்பை அன்வர் தெரிவித்த ஒரு நிகழ்வை வாசகர்களுக்கு எடுத்துச் சொன்ன போது ஒரு மயக்கம் நிழ்ந்து விட்டது. கட்டுரையின் இறுதியில் திப்புசுல்தான் மதுரைக்கு வந்த போது ஏனைய சிற்றரசர்கள் அவரைத் தமது எதிரியாக கருதி ஓடி ஒழிய, ஒரு பாளையக்காரர் மட்டும் அவரை பரிசு பொருட்களுடன் பார்க்கச் சென்றார் என்று துவங்கும் விவரிப்பில், அவர் தெலுங்கு பேசும் பாளையக்காரர் எனத் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட மன்னர். கன்னடம் பேசுபவர். அந்தப் பாளையக்காரரும் ஒரு கன்னடியர், எனவே மொழி, மொழியோடு ஒத்துப்போனது. தயவு செய்து தெலுங்கர் என்பதை கன்னடியர் எனத் திருத்திக் கொள்ளுங்கள்.

கொழும்பு வந்திருந்த கோம்பை அன்வர் தனது 'யாதும்' ஆவணப்படத்தை கொழும்பில் இரண்டு இடங்களிலும் மட்டக்களப்பில் மூன்று இடங்களிலும் போட்டுக் காட்டினார். பார்த்த முஸ்லிம்களும் தமிழர்களும் இவரைப் பாராட்டியதோடு நெகிழ்ந்து பேசியும் இருக்கிறார்கள். அதாவது இந்த ஆவணப்படத்தில் தமிழகத்து தமிழர்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் இடையிலான பாரம்பரிய பந்தம் விரிவாக ஆராயப்படுகிறது. இலங்கையிலும் இதே நிலைதான். வடக்கிலும் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவுமாகத்தான் இருந்தார்கள். சிங்கள – தமிழ் அரசியல் மோதலில் அல்லது போட்டா போட்டியில் எங்கே தாம் காணாமல் போய் விடுவோமா என்ற சந்தேகத்தில் தமக்கென ஒரு அடையாளத்தை அல்லது இருப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமக்கென தனி அரசியல் அடையாளத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்படுத்திக் கொண்டது. அதன்பின்னர் யுத்தம் வந்தது. வடக்கு முஸ்லிம்கள் ஒரே நாளில் விரட்டியடிக்கப்பட்டனர். இரு இனங்களிடையேயும் இது பெரும் இடைவெளியையும், அவநம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியதோடு கிழக்கில் வன்மத்தையும் மோதல் நிலையையும் தோற்றுவித்தது. சமீப காலமாக சிங்கள இனவாதிகளின் இலக்காக முஸ்லிம் சமூகம் மாறிப்போனது. இவற்றில் இருந்து, அதாவது இம்மோதல் நிலை முடிவுக்கு வந்து, முன்னர் நிலவி வந்த சினேகபூர்வமான நிலைக்கு மூவினங்களும் திரும்ப வேண்டும் என்ற சிந்தனையை எனது ஆவணப் படத்தைப் பார்த்தவரக்ள் வெளிப்படுத்தியதை என்னால் பார்க்க முடிந்தது என்ற கருத்தை எம்மிடம் கோம்பை பகிர்ந்து கொண்டார்.

இந்தியத் தமிழர்களுக்கு பொதுவாகவே இலங்கை விவகாரங்கள் புரியாது. முன்னர், சிலோன்காரன் என்றதும் 'பிரபாகரன் நாட்டில் இருந்தா வருகிறீர்கள்?' என்று கேட்பார்கள். இப்போது 'உண்மையைச் சொல்லுங்கள் சார், பிரபாகரன் உயிரோடுதானே இருக்கிறார்?' என்று கேட்கிறார்கள். அங்குள்ள ஊடகவியலாளர்களுக்கும் பெரும்பாலும் இலங்கை விவகாரங்கள் பற்றிய புரிதல் மிகவும் குறைவு. செய்திகளை சென்சேஷனலாக கொடுத்தே பழகி விட்டார்கள்.

ஒரு சின்ன உதாரணம்.

முதல் நாள் இரவுதான் லக்ஷ்மன் கதிர்காமர் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். மறு காலை தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி ஊடகத்தின் செய்திப் பிரிவில் இருந்து அழைப்பு வந்தது. கதிர்காமர் கொலை பற்றிய விவரங்களைக் கேட்டுவிட்டு கொழும்பில் நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். 'எந்தப் பதற்றமும் இல்லை, மிகவும் அமைதியாக இருக்கிறது' என்று பதில் சொன்னேன். வாகன போக்குவரத்துக் குறைவாக இருக்கிறதா? என்று கேட்டார்கள். 'வழமை போலத்தான்' என்றேன். வெறுத்துப்போன அந்த தமிழக ஊடகவியலாளர்,

"அப்படிச் சொல்லாதீர்கள் சார்… பரபரப்பாக இருக்கிறது… மக்கள் நடமாட்டம் குறைவு, வாகனங்கள் வீதிகளில் குறைவாகவே காணப்படுகின்றன… அச்ச உணர்வு தெரிகிறது என்று சொல்லுங்கள்" என்று எப்படிப் பேச வேண்டும் என்பதை சொல்லித் தந்தார்!

சரி, கோம்பை என்ன சொல்கிறார் என்பதற்கு வருவோம்

ஊடகவியலாளர் நிலாம்,மருத்துவர் தாஸிமுடன் அன்வர்

"நான் கிழக்கு மாகாணம் போகிறேன் என்றதும் காத்தான்குடி பற்றி என்னிடம் சொன்னார்கள். போய்ப் பாருங்கள், ஒரு முஸ்லிம் நாட்டைப் போல இருக்கும் என்றார்கள். அங்கே அடிப்படை வாதத்தைப் பார்க்கலாம். ஈச்ச மரங்களைப் பார்க்கலாம். அரபு நாட்டின் தோற்றங்களை அங்கே காணலாம்" என்று கூறினார்கள். நான் அங்கே போனேன். புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான அந்தப் பள்ளிவாசலைப் பார்த்தேன்.

காத்தான்குடி மக்கள் ஏன் அப்படி மாறிப்போனார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழர் தரப்பில் தரப்பட்ட நெருக்குதல்களின் எதிர்வினையாகவே இதைப் பார்க்கிறேன். பள்ளிவாசல் தாக்குதல், வடபகுதி முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பன இனித் தமிழர்களுடன் உறவே வேண்டாம், பதிலாக அராபிய கலாசாரத்தையே ஏற்போம் என்ற மனநிலையை இவர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். காத்தான்குடியில் இதைத்தான் நான் பார்த்தேன். நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் இஸ்லாமியர் மத்தியிலும் இந்த ஒதுங்கிப்போகும் மனப்பான்மை உருவாகி இருக்க வேண்டும். ஆனால் இது தற்காலிகமானது என்பதே என் கருத்து. தற்போது நிலைமைகள் மாறிவிட்டன. தமிழர்களுடன் இணைவதில் எந்தத் தடையும் கிடையாது. எங்கோ இருக்கும் அரபு கலாசாரத்தை இங்கே ஏற்பதைவிட நமக்கு பழக்கமான தமிழ் கலாசார அடையாளங்களுடன் தனித்துவம் மாறாமல் இருக்கலாம் என்ற சிந்தனை வர ஆரம்பித்திருக்கிறது என்பதற்கான அடையாளங்களை என்னால் காண முடிகிறது" என்று கோம்பை அன்வர் தன் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். 'ஒரு மனிதன் தனித்துவிடப்படும்போது அவன் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவான். அதைத்தான் முஸ்லிம் சமூகம் செய்தது' என்பது அன்வரின் சிந்தனை.

"மட்டக்களப்பில் படம் பார்த்தவர்களில் பலர் தமிழ்ப் பெண்கள். கருத்துத் தெரிவித்தவர்களும் பெண்கள்தான். ஒரு பெண் எழுந்து, எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. உழைப்பே கடவுள் என்று நினைக்கிறேன் என்று ஆரம்பித்தார். பழையதையே நினைத்து வன்மம் காட்டிக் கொண்டிருப்பதில் பயன் கிடையாது. அதைத் தாண்டிப் போகணும். இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் அனைவரும் தமிழர்களும், முஸ்லிம்களும், எங்கோ ஒரு இடத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு புரிந்துணர்வுடன் வாழ்ந்தார்கள். ஒருவர் மத விவகாரங்களில் மற்றவர் தலையீடு செய்யாமல் அதைக் கௌரவித்து வாழ்ந்தார்கள். தமிழகத்தில் இன்றைக்கும் இதைப் பார்க்க முடிகிறது. அவர்களால் முடியுமானால் ஏன் நம்மால் முடியாது? என்ற கருத்தையே பலர் தெரிவித்தார்கள். இந்தப்படம் பலர் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பேச்சு உணர்வுபூர்வமாக இருந்தது."

"எனவே இலங்கையில் தமிழ் - முஸ்லிம் உறவு முற்றிலுமாக அற்றுப் போகவில்லை. இருசாரர் மத்தியிலும் எச்சங்கள் உள்ளன. அவை வளர்ந்து விருட்சங்களாக முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்கிறார் அன்வர். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் பேசுகிறார்கள். தமிழ் பயில்கிறார்கள். தமிழ்ப்படம், தமிழ்ப் பாடல், தமிழ் இலக்கியம் எல்லாம் பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். எனவே நமது கற்பனைகளைத் தூக்கிப் போட்டுவிட்டால் உறவுகள் நேர்ப்படுவதற்கு பாரிய பிரச்சினைகள் எதுவும் கிடையாது" என்பது அன்வரின் கணிப்பு.

"எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் அதை நோக்கி நகர வேண்டும் அவ்வளவுதான்".

எமது உரையாடல் சிங்கள – தமிழ் உறவின்பால் திரும்பியது.

கொழும்பில் அன்வர் ஒரு ஆங்கிலம் பேசும் சிங்களப் பெண்ணைச் சந்தித்தாராம். அவர் இரத்தினக்கல் தொடர்பான கற்கையை மேற்கொண்டிருக்கிறாராம். அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது தான் தமிழ் கற்று வருவதாகவும் தமிழில் பேச முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தாராம். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. ஏன் நாங்கள் தமிழ் படிக்கக்கூடாது? ஏன் இந்த வெறுப்பு சிந்தனையைத் தாண்டி நாம் போகக் கூடாது? என்று அவள் அன்வரிடம் சொன்ன போது சிங்களவர்கள் பற்றிய புதிய தரிசனத்தை அன்வர் கண்டிருக்கிறார்.

ஆமாம் நாம் மாற்றி யோசிக்க வேண்டாமா? என்கிறார் அன்வர்.

"நாம் நம்மை சாதி அடிப்படையிலும், மத மொழி, கலாசார அடிப்படையிலும் அடையாளப்படுத்திக்கொள்ளும் பழக்கம் காலனியத்தின் பின் வந்த பழக்கம். அதற்கு முன் எல்லாம் ஒழுங்காகத்தான் இருந்தது. அரசன் இந்துவாக இருந்தாலும் முஸ்லிம்களை அவன் வேறு சமூகத்தவர்களாக பார்க்கவில்லை. முஸ்லிம் அரசன் இந்துகளை தனது குடிமக்களாகத்தான் கருதினான். யுத்தங்கள், நாடு பிடிக்கும், செல்வங்களைக் கவரும் நோக்கங்களுக்காகவே நடத்தப்பட்டன. மத, மொழி அடிப்படையில் நிகழவில்லை. காலனித்துவம் வந்த பின்னர்தான் மனிதர்கள் மத, மொழி, கலாசார ரீதியாக பிரிக்கப்பட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது கூட காஷ்மீரை இந்து மகா ராஜாதான் ஆண்டு வந்தார். அவரை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

காலனி தத்துவங்கள் ஆசியாவுக்கு ஒத்துவராது. அதனால்தான் காலனி நாடுகள் இன்றைக்கும் பிரச்சினை பூமிகளாக உள்ளன. இந்தியாவை இந்து – முஸ்லிம் என்ற பிரிவினையை நோக்கி நகர்த்தியதும் இந்த காலனித்துவம்தான். இலங்கையை விட்டு வெள்ளைக்காரர்கள் அகன்றதுமே இனவாதம், மதவாதம் எல்லாம் தலைதூக்கத் தொடங்கியது. வெள்ளையர்களும் இந்திய வரலாற்றை இந்து ஆட்சிக்காலம், இஸ்லாமிய ஆட்சிக்காலம் என்றே பிரித்துத் தொகுத்தார்கள். இது தவறான வழிமுறை. காலனியம் தந்த வார்த்தைதான் மத தேசியம். ஆனால் அப்படி ஒன்றில்லை"

இப்படித் தன் பார்வையை எம்முடன் பகிர்ந்து கொண்ட அன்வர், இலங்கை சரித்திரம், தமிழர் பிரச்சினை, யுத்த காலம் பற்றியெல்லாம் நல்ல புரிதல் கொண்டவராகத் திகழ்கிறார். "சிங்கள சமூகத்துக்கும் மதுரைக்கும் மிக நீண்டகாலமாகவே மாமன், மச்சான் உறவு இருந்திருக்கிறது, இவர்கள் எல்லாம் காலனி ஆதிக்கத்துக்கு உட்படும்வரை தாய் - பிள்ளைகளாக இருந்தவர்கள்தான்" என்று சொல்லி புன்னகைத்தார் அன்வர்.

No comments:

Post a Comment