Friday, February 19, 2016

தேவதாசி வரலாறு -16

தேவதாசி வழக்கத்தை ஒழித்துக்கட்டிய
முத்துலட்சுமி ரெட்டி


அருள் சத்தியநாதன்

ரு கால கட்டத்தில், அக்காலத் தேவைகளுக்காக, இந்தியாவின் தென்னகத்தில் கோவில் தேவதாசிகள் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு கலாசாரம் இது. இந்த தேவதாசிகள் இரண்டு விதமாக சமூகத்துக்கு காட்சியளித்தார்கள். முதலாவது, சமூகத்தின் கலை பொக்கிஷங்களாக. அரசவை கலைஞர்களுக்கு அப்பால் நர்த்தகிகளாக, இசைக்கலைஞர்களாக, சாஸ்திரிய இசை தெரிந்தவர்களாக இவர்கள் விளங்கினார்கள். இதில் எவருக்கும் எந்த ஆட்சேபணையும் கிடையாது. தேவதாசிகள், கடவுளுக்கு மட்டும் சேவையாற்றும் தாசிகளாக இருந்திருந்தால் அதில் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால் திருமணம் செய்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த இந்தப் பெண்களை அவர்கள் பணியாற்றும் கோவிலைச் சேர்ந்தவர்களும், ஊர்ப் பெரியவர்களும், தனவந்தர்களும் தமது காமப் பசிக்கு இவர்களை இரையாக்கிக் கொண்டார்கள்.

எனவே, தேவதாசி ஒழுக்கங்களில் இதுவும் ஒன்றாயிற்று. ஆண்டவனுக்கு என ஒப்படைக்கப்படும் பணம், சொத்துக்கள் என்பனவற்றை எவர் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் இங்கிருந்தே ஊற்றெடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் உள்ள பெருங்கோவில்களுக்கான சொத்துகளில் பெரும்பாலானவை வெளியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆண்டு அனுபவிக்கப்பட்டு வருவதே வழமையாக இருக்கிறது. இப்படித்தான் இந்தப் பெண்களையும், கோவில் சொத்து என்பதால், அவரவர் அனுபவிக்கத் தொடங்கி, விலை மகளிர் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

கோவில் பெண்கள் தாசியாகவும் விளங்கியதை அன்றைய தென்னிந்திய சமூகம் ஏற்றுக் கொண்டது. பெண்களும் ஏற்றுக்கொண்டார்கள். கண்ணகி காப்பியத்தை எடுத்துக் கொண்டால் கண்ணகி எரித்திருக்க வேண்டியது தனக்கு போட்டியாக வந்த மாதவியை. ஒரு மனைவியாகவும், இல்லத்தரசியாகவும் விளங்கிய தன்னில் நிறைவுபெறாமல் ஒரு தாசியிடம் புகலிடம் தேடி அங்கேயே விழுந்து கிடந்த கோவலனை எரித்திருக்க வேண்டும். அல்லது தன்னைத்தானே எரித்திருக்க வேண்டும். ஆனால் கண்ணகி அவர்களை குற்றம் சாட்டுகிறாள் இல்லை. அறம் பிழைத்ததற்காக மன்னனைக் குற்றஞ் சாட்டி நீதி கேட்க, மன்னனும் மகாராணியும் அறம் பிழைத்ததற்காக மடிகின்றனர். அதன்பின் மதுரையை எரிக்கிறாள் கண்ணகி. விலை மகளிரிடமும், தேவதாசியினரிடமும் ஆண்கள் சென்று வருவது அன்றைய ஒப்புக்கொள்ளப்பட்ட கலாசாரம் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

எனவே, இன்றைக்கு 'ரெட் லைட் ஏரியா' இருப்பது போல அன்றைக்கும் 'ரெட் லைட் ஏரியா'க்கள் இருந்திருக்கின்றன. அரசர்களும் சமூகமும் அதை ஆட்சேபிக்கவில்லை. கோவில்களுக்கு பக்கத்திலேயே தேவதாசி குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வணிகர்களும், செல்வந்தர்களும் செல்வாக்கு பெற்றவர்களும் அங்கே சென்று வந்தனர். கோவலன் அப்படித்தான் மாதவியிடம் சென்றான். தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் பேசியபோது பிரபல காங்கிரஸ் தலைவரான தீரர் சத்தியமூர்த்தி உட்பட அன்றைய சட்டசபை உறுப்பினர்கள் இதைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர். இந்து சமய கலாசாரத்தின் ஒரு பகுதியான தேவதாசி முறை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்றும், இம்முறை ஒழிக்கப்பட்டால் தேவதாசி குலம் தெருவுக்கு வரும் என்றும், ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இளமையில்

அன்றைய தமிழக சட்ட சபையிலும் சரி, டெல்லி பாராளுமன்றத்திலும் சரி படித்த உயர் வகுப்பு உறுப்பினர்களே அங்கம் வகித்தனர். இன்று தலித்துகள் என அறியப்படும் சாதிரீயாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அரிதாகவே அரசியல் சபைகளில் அங்கம் வகித்தனர். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் எனக் குரல் எழுப்பி, தாழ்த்தப்பட்டவர்களை ஹரியின் (கடவுளின்) சனங்கள் எனப் பொருள்படும்படியான 'ஹரிஜன்' என்ற நாமத்தை வழங்கிய மகாத்மாகாந்தியடிகள் கூட குஜராத் பனியா வகுப்பைச் சேர்ந்தவர். இது வர்த்தக சமூகத்தைக் குறிக்கும் சொல். செல்வந்த குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்ததால்தான் அவரால் லண்டனுக்கு சென்று 'பெரிஸ்டர்' பட்டம் பெற முடிந்தது. ஆக, உயர் குடியினர் மட்டுமே அல்லது அவர்களின் குரல்கள் மட்டுமே ஓங்கி ஒலித்த சட்டசபைகளில், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த தேவதாசி ஒழிப்பு மசோதா எள்ளலுக்கு ஆளானதில் ஆச்சரியமிருக்க முடியாது.

1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழக சட்டமன்ற மேலவை (செனட்) கூட்டத்தில் அதன் நியமன உறுப்பினராகவும் துணைத் தலைவருமான மருத்துவர் முத்துலட்சுமி அம்மாள் தேவதாசி முறை பெண்களுக்கே இழுக்கு என்றும் அது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசினார். ஆனால் அவருக்கு ஆதரவு கிட்டவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அவரைக் கடுமையாக எதிர்த்துப் பேசினர். அச்சமயத்தில் அவருக்கு திரு. வி. க. தந்தை பெரியார் போன்றவர்களே வெளியில் இருந்து தமது ஆதரவை வழங்கி வந்தனர். உயர்குடி தமிழர்கள், தேவதாசி ஒழிப்பு என்பது ஆண்களின் கௌரவத்துக்கும் சுதந்திரத்துக்கும் ஒரு இழுக்கு என்றே கருதினர்.

ஏனெனில், ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி, 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்கான பிரேரனையை தாக்கல் செய்யும் யோசனை இந்த உயர்குடி மக்களவை உறுப்பினர்களால் முடிந்தவரை தாமதப்படுத்தப்பட்டு, 1947ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதியே சென்னை சட்டசபையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. கோவிலுக்கு பெண்களை அர்ப்பணிப்பதும் கோவில்களில் தேவதாசிகளினால் கும்ப ஆராத்தி எடுப்பதும் தடை செய்யப்படுவதாக அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் 1927ம் ஆண்டில் இருந்து தேவதாசி முறையை எதிர்க்கும் இயக்கம் தோன்றி படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது. 1934 இல் பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் முறைக்குத் தடைவிதித்து மும்பை சட்டசபை சட்டம் இயற்றியது. 1937 இல் சென்னை மாகாண சட்ட சபையிலும் தேவதாசி தடை செய்யும் மசோதா அறிமுகமானது. 1939இல் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமானதால் இம்மசோதா கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சட்டசபையில் பிரேரணை கொண்டுவரப்பட்ட போதிலும், மத சம்பந்தப்பட்ட விடயங்களில் தலையிடுவதில்லை என்று அன்றைய ஆங்கில அரசு எடுத்த முடிவின் பிரகாரம் மேல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

ஏற்கனவே 1909 ஆம் ஆண்டு மைசூர் அரசு, தனக்குக் கீழ் இருந்த கோவில்களில் தேவதாசிகளைப் பணியமர்த்தும் வழக்கத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையை எடுத்தது. டில்லி மத்திய சட்டசபையில் தேவதாசி முறை பற்றிய விவாதம் நடந்தபோது சென்னைப் பிரதிநிதியாரை வி. ராமதாஸ் பந்துலு, வயதுக்கு வராத பெண்களை பொட்டுக் கட்டும் வழக்கம்  தடை செய்யப்பட வேண்டும் என்றும் ஆனால், கோவில் நிலங்களை அரசு எடுத்துக் கொண்டு தேவதாசிகளின் சேவைகளுக்காக அவர்களுக்கு கோவில் நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அளித்தால் தேவதாசிகள் கோவில் பணிகளை நிறுத்திவிட்டு நிலங்களில் பாடுபடப் போய்விடுவார்கள் என்றும் பரிந்துரை செய்தார். அதாவது எப்படியாவது தேவதாசிகள் முறை தொடர வேண்டும் என்பதே உயர் சாதியினரின் விருப்பமாக இருந்தது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த எஸ். ஆர். தாஸ், வயதுக்கு வராத சிறுமியரை கோவில்களுக்குக் கொடுப்பதை இந்திய அரசு தடுக்கும் என்றும் ஆனால் தேவதாசி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக இல்லை என்றும் பதிலளித்தார்.

இதுதான் அன்றைய ஆண் அரசியல்வாதிகளின் மனநிலை.

இந்தப் பின்னணியில்தான் 1926 இல் சென்னை சட்ட மன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி நியமன அங்கத்தவரானார். ஒரு பெண் சென்னை சட்டசபையில் அங்கத்தவராவது அதுவே முதல் தடவை. இவர் ஒரு தேவதாசியின் மகள் என்பது பிரபலம் அடையாத ஒரு உண்மை. இந்திய மத்திய அரசு தேவதாசி விடயத்தில் கை கழுவிய பின்னர், பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்துக்கு சென்னை மாநிலத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். முத்துலட்சுமி ரெட்டி இவ்வழக்கத்தை ஒழிக்கத் தீர்மானித்திருக்கிறார் என்பது தெரிந்ததும் தேவதாசிகள் ஒன்றிணைந்தனர். வீணை தனம்மாள் வீட்டிலும் வேறு சில இடங்களிலும் ஆலோசனைகள் நடந்தன. இம்முயற்சிகளுக்கு செல்வாக்கு மிக்க தேவதாசியான நாகரத்தினம் அம்மாளே தலைமை வகித்தார்.
முத்துலட்சுமி ரெட்டி


புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால் தொண்டமானின் ஆலோசகராக இருந்தவர் நாராயணசாமி. அக்காலத்திலேயே பி. ஏ. பட்டம் பெற்றவர். இவரது மனைவி சந்திரம்மாள். இவ்விருவருக்கும் 1886 ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி பிறந்தவரே முத்துலட்சுமி ரெட்டி. அன்றைக்கு பெண் கல்விக்கு சட்டமே தடையாக இருந்தது. சலவை, பால் கணக்குப் பார்க்கவும் கையெழுத்து போடவும் பெண் கற்றிருந்தால் போதும் எனக் கருதப்பட்டதால் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு முத்துலட்சுமியை அனுப்பி வைத்தார்கள். அங்கே ரகசியமாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டதாம். ஆறாம் வகுப்பில் முதல் மாணவியாக அவர் தெரிவான போதுதான் மகள் ஆங்கிலம் கற்றது தந்தைக்கு தெரிய வந்ததாம்.

அக்கால வழக்கப்படி பெண் குழந்தைக்கு 11 இல் இருந்து 13 வயதுக்குள் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். ஆனால் முத்துலட்சுமியின் ஆசிரியர் பாலையா, பெற்றோரைச் சந்தித்தார். முத்துலட்சுமி திறமையான மாணவி என்றும் மேலே படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். முத்துலட்சுமி 8ம் வகுப்பு படிக்கும் வரை பிரச்சினை எழவில்லை. எட்டாம் வகுப்பில் அவர் பூப்பெய்தினார். வந்தது அடுத்த தடை.

பூப்படைந்த பெண்ணை வெளியே அனுப்புவது அன்று சமூகக் குற்றம். அப்படி அனுப்பினால் அக்குடும்பம் நல்ல குடும்பம் அல்ல என்ற ஒரு அடையாளத்தை ஏற்க வேண்டியிருக்கும் முத்துலட்சுமியின் தாயார் பள்ளிக்கு அனுப்ப பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்த இக்கட்டான நிலையில் தந்தை மகளுக்கு உதவ முன்வந்தார். பள்ளிக்கு அனுப்பாமல் 10 மற்றும் 11 ம் வகுப்புக்கான மெட்ரிகுலேஷன் பாடங்களைத் தந்தையே கற்பித்தார். வேறு சில ஆசிரியர்களும் வீடு வந்து பாடங்களை போதித்தனர்.

பரீட்சை வந்தது. புதுக்கோட்டை பகுதியில் இருந்து மொத்தம் நூறு மாணவர்கள் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத வந்தனர். இது இன்றைய ஐ. ஏ. எஸ். தேர்வுக்கு சமமான பரீட்சையாம். தேர்வின் பெறுபேறுகள் வந்தபோது பத்து மாணவர்களே சித்தி பெற்றிருந்தனர். இவர்களில் முத்துலட்சுமியும் ஒருவர். தமிழ் நாட்டிலேயே முதன்மை மாணவியாக அவர் வெற்றி பெற்றிருந்தார்.

அடுத்தது கல்லூரிப் படிப்பு. அன்றைய கல்லூரிகளில் பெண்கள் படிப்பதற்கான வசதிகள் இருக்கவில்லை. தங்கு விடுதி வசதியும் கிடையாது. பெண்கள் கல்லூரிக்கு வரமாட்டார்கள் என்ற நிலையில் பெண்களுக்காக ஏன் வசதிகள் செய்துதரப்பட வேண்டும்?

ஆனாலும் முத்துலட்சுமி கல்லூரி படிப்பையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவமும் பயின்று டாக்டரானார். லண்டனுக்குச் சென்று மேல் படிப்பும் முடித்தார். இவ்வளவும் இவரால் சாதிக்க முடியும் என்றால் தேவதாசி முறையை ஒழிப்பது எப்படி என்பது தெரியாதா இவருக்கு!

No comments:

Post a Comment