Saturday, February 20, 2016

தமிழனின் கேள்வி

ரஜினி எவ்வளவு கொடுத்தார் என

தமிழன் ஏன் கேட்கிறான்?

சினிமானந்தா பதில்கள் -31

'பீப் சோங்' (BEEP SONG) என்று ஒண்ணு வந்திருக்காமே?
ரவிக்குமார், பாலத்துறை

வந்திருக்கு ஆனா அது ஒரு பிரேவேட் பாட்டு. 'லூசுப் பொண்ணு', 'அடிரா உதைரா' மாதிரி சினிமாவுக்கோ இசை ஆல்பத்துக்கோ இதை எழுதலன்னு சிம்பு சொல்ராரு.
ஏதோ ஜொலிக்காக சிம்பு எழுதிய பாட்டாம் இது. அனிருத்து இசையமைச்சாராம். கம்பியூட்டர்ல பதிவு பண்ணி வச்சிருந்தாங்களாம். அதை யாரோ திருடி யுடியூப்பில் போட்டுட்டார்களாம். அது பரவலா வெளிவந்து பிரச்சினையைக் கிளப்புது.
"ஆமா நான்தான் படிச்சேன், அதுக்கென்ன இப்போ. இஷ்டமிருந்தா கேளு, இல்லண்ணா விட்டிட வேண்டியதுதானே! யுடியூபில் பலான படமெல்லாம் இருக்கு. அதை திரும்பத் திரும்ப பார்க்கிறோமே! நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்? ஆங்கிலத்தில் .... ன்னு எக்கச்சக்கமான பாட்டுல போட்டுத்திணிக்கல... அதைத்தான் நானும் சொல்லியிருக்கேன். அத்தோட இது ஒன்னும் படத்துக்கோ ஆல்பத்துக்கோ போட்ட பாட்டு இல்ல. ஜொலிக்காக படிச்சு பதிவு செய்தது. இது மாதிரி 150 பாட்டு என்னுடைய கம்பியூட்டரில இருக்கு. அதில் இருந்து யாரோ திருடி யுடியூப்ல போட்டிருக்காங்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நான் பாத்ரூம்ல, படுக்கையறையில செய்வதைப் பத்தி எப்படி எவரும் கேள்வியெழுப்பலாம்? அது என்னோட அந்தரங்கம். அதற்குள் நுழைய எவருக்கும் அனுமதியில்ல" என்கிறார் சிம்பு.

"எம் பெயரை இதுக்குள்ள இழுக்காதீங்க. எனக்கு இந்த விஷயத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப் பாட்டுக்கு நான் இசையமைக்கவும் இல்ல. பெண்களைப் பத்தி மோசமா எழுதின எந்தப் பாட்டுக்கும் நான் இசையமைக்க மாட்டேன்" என்று கனடாவில் இருந்து (சென்னை வெள்ள அகதிகளுக்கு நிதி சேர்க்க கனடாவுக்கு இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்) அறிக்கை அனுப்பியிருக்காரு அனிருத்.

அனிருத்தான் இந்தப் பாட்டுக்கு இசையமைச்சாரு. சிம்புதான் பாடினாரு. ஆனால சிம்புவோட கம்பியூட்டர்ல இருந்து யாரோ திருட்டுத்தனமா எடுத்து யுடியூப்ல போட்டிருக்காங்க. அப்படி களவெடுத்தவங்கள தேடிக் கண்டுபிடிங்க என்று பொலிஸ் கமிஷனருக்கே கடிதம் எழுதியிருக்காரு சிம்புவோட அப்பா டி. ஆர்.

இந்த நிலையில் பெண்களை இழிவு செய்து பாடல் பாடினாங்க என்று புகார் கொடுத்து கோயம்புத்தூரில் ஒரு பெண்கள் அமைப்பு பொலிசில் புகார் பண்ணி வழக்கும் பதிவு செஞ்சிருக்காங்க. பிணையில் வெளியே வரமுடியாத குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இப்போ, சிம்பு தலைமறைவு, அனிருத் கனடாவில்.

இந்த லட்சணத்துல சிம்பு இப்படி பாடுனது தப்பில்லை. காதல்ல தோல்வியடைஞ்ச ஒரு இளைஞனோட மனக்குமுறல் இது என்று சிம்புவுக்கு ஆதரவாக ஒரு தரப்பு பேஸ் புக்கிலும், வாட்அப்பிலும் அலைஞ்சி திரியிராங்க.

ஒரு படத்துக்கு 30, 40 கோடி வாங்குற நடிகர் ரஜினிகாந்த் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு 10 லட்சம் ரூபாதான் கொடுத்தாராம். சின்ன நடிக, நடிகைங்க அதை விடக் கொடுத்தாங்களாமே?
ராஜேஸ், ஹட்டன்
சென்னை வெள்ளம் டிசம்பருக்கு முன்னரும் டிசம்பரில் 3 தடவையுமாக மொத்தம் நாலு கட்டங்களில் வந்திருக்கு. முதலாவது கட்ட வெள்ளம் வந்த போதே சென்னை மக்களுக்கு ஏதாவது செய்யனும் என்று மலேசியாவில் 'கபாலி' படப்பிடிப்பில் இருந்த ரஜினி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாராம். அங்கிருந்து சென்னைக்கு சொல்லியனுப்பி ராகவேந்திரா நிதியத்தின் மூலம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபா கொடுக்கப்பட்டது.

இந்த 10 லட்சம் முதல்வரின் நிதிக்காக நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு அனுப்பப்பட்டது.  ஒரு நடிகரின் சார்பில் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு முதலில் கொடுக்கப்பட்ட நிதி இதுதான். அதுவும் அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்டது.

தமிழ் நடிகர்கள் சார்பாக இணையத்தில் தற்போது நடக்கும் ஆதரவு - எதிர்ப்பு  போரில் தத்தமது தலைகளை உயர்த்திப் பேசும் ரசிகர்களுக்கு ரஜினியின் 10 அவலாகி விட்டது. அடுத்து அவர்களிடம் இருந்து அஜித் 60, விஜய் 5 கோடி என்று அறிக்கைகள் கிளம்பின. போதாதற்கு அஜித்தும் விஜயும் தத்தமது கல்யாண மண்டபங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக பதிவுகள் வேறு. ஆனால் விஜயின் கல்யாண மண்டபத்தில் கல்யாணங்கள் நடந்தனவே தவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்படவில்லை என்பதை ஆதாரபூர்வமாக புட்டுப்புட்டு வைத்தது பேஸ்புக் பதிவொன்று. அஜித்தின் கல்யாண மண்டபம் கதையும் அதேதானாம்.

Friday, February 19, 2016

தேவதாசி வரலாறு -16

தேவதாசி வழக்கத்தை ஒழித்துக்கட்டிய
முத்துலட்சுமி ரெட்டி


அருள் சத்தியநாதன்

ரு கால கட்டத்தில், அக்காலத் தேவைகளுக்காக, இந்தியாவின் தென்னகத்தில் கோவில் தேவதாசிகள் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு கலாசாரம் இது. இந்த தேவதாசிகள் இரண்டு விதமாக சமூகத்துக்கு காட்சியளித்தார்கள். முதலாவது, சமூகத்தின் கலை பொக்கிஷங்களாக. அரசவை கலைஞர்களுக்கு அப்பால் நர்த்தகிகளாக, இசைக்கலைஞர்களாக, சாஸ்திரிய இசை தெரிந்தவர்களாக இவர்கள் விளங்கினார்கள். இதில் எவருக்கும் எந்த ஆட்சேபணையும் கிடையாது. தேவதாசிகள், கடவுளுக்கு மட்டும் சேவையாற்றும் தாசிகளாக இருந்திருந்தால் அதில் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால் திருமணம் செய்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த இந்தப் பெண்களை அவர்கள் பணியாற்றும் கோவிலைச் சேர்ந்தவர்களும், ஊர்ப் பெரியவர்களும், தனவந்தர்களும் தமது காமப் பசிக்கு இவர்களை இரையாக்கிக் கொண்டார்கள்.

எனவே, தேவதாசி ஒழுக்கங்களில் இதுவும் ஒன்றாயிற்று. ஆண்டவனுக்கு என ஒப்படைக்கப்படும் பணம், சொத்துக்கள் என்பனவற்றை எவர் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் இங்கிருந்தே ஊற்றெடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் உள்ள பெருங்கோவில்களுக்கான சொத்துகளில் பெரும்பாலானவை வெளியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆண்டு அனுபவிக்கப்பட்டு வருவதே வழமையாக இருக்கிறது. இப்படித்தான் இந்தப் பெண்களையும், கோவில் சொத்து என்பதால், அவரவர் அனுபவிக்கத் தொடங்கி, விலை மகளிர் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

கோவில் பெண்கள் தாசியாகவும் விளங்கியதை அன்றைய தென்னிந்திய சமூகம் ஏற்றுக் கொண்டது. பெண்களும் ஏற்றுக்கொண்டார்கள். கண்ணகி காப்பியத்தை எடுத்துக் கொண்டால் கண்ணகி எரித்திருக்க வேண்டியது தனக்கு போட்டியாக வந்த மாதவியை. ஒரு மனைவியாகவும், இல்லத்தரசியாகவும் விளங்கிய தன்னில் நிறைவுபெறாமல் ஒரு தாசியிடம் புகலிடம் தேடி அங்கேயே விழுந்து கிடந்த கோவலனை எரித்திருக்க வேண்டும். அல்லது தன்னைத்தானே எரித்திருக்க வேண்டும். ஆனால் கண்ணகி அவர்களை குற்றம் சாட்டுகிறாள் இல்லை. அறம் பிழைத்ததற்காக மன்னனைக் குற்றஞ் சாட்டி நீதி கேட்க, மன்னனும் மகாராணியும் அறம் பிழைத்ததற்காக மடிகின்றனர். அதன்பின் மதுரையை எரிக்கிறாள் கண்ணகி. விலை மகளிரிடமும், தேவதாசியினரிடமும் ஆண்கள் சென்று வருவது அன்றைய ஒப்புக்கொள்ளப்பட்ட கலாசாரம் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

எனவே, இன்றைக்கு 'ரெட் லைட் ஏரியா' இருப்பது போல அன்றைக்கும் 'ரெட் லைட் ஏரியா'க்கள் இருந்திருக்கின்றன. அரசர்களும் சமூகமும் அதை ஆட்சேபிக்கவில்லை. கோவில்களுக்கு பக்கத்திலேயே தேவதாசி குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வணிகர்களும், செல்வந்தர்களும் செல்வாக்கு பெற்றவர்களும் அங்கே சென்று வந்தனர். கோவலன் அப்படித்தான் மாதவியிடம் சென்றான். தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் பேசியபோது பிரபல காங்கிரஸ் தலைவரான தீரர் சத்தியமூர்த்தி உட்பட அன்றைய சட்டசபை உறுப்பினர்கள் இதைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர். இந்து சமய கலாசாரத்தின் ஒரு பகுதியான தேவதாசி முறை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்றும், இம்முறை ஒழிக்கப்பட்டால் தேவதாசி குலம் தெருவுக்கு வரும் என்றும், ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இளமையில்

அன்றைய தமிழக சட்ட சபையிலும் சரி, டெல்லி பாராளுமன்றத்திலும் சரி படித்த உயர் வகுப்பு உறுப்பினர்களே அங்கம் வகித்தனர். இன்று தலித்துகள் என அறியப்படும் சாதிரீயாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அரிதாகவே அரசியல் சபைகளில் அங்கம் வகித்தனர். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் எனக் குரல் எழுப்பி, தாழ்த்தப்பட்டவர்களை ஹரியின் (கடவுளின்) சனங்கள் எனப் பொருள்படும்படியான 'ஹரிஜன்' என்ற நாமத்தை வழங்கிய மகாத்மாகாந்தியடிகள் கூட குஜராத் பனியா வகுப்பைச் சேர்ந்தவர். இது வர்த்தக சமூகத்தைக் குறிக்கும் சொல். செல்வந்த குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்ததால்தான் அவரால் லண்டனுக்கு சென்று 'பெரிஸ்டர்' பட்டம் பெற முடிந்தது. ஆக, உயர் குடியினர் மட்டுமே அல்லது அவர்களின் குரல்கள் மட்டுமே ஓங்கி ஒலித்த சட்டசபைகளில், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த தேவதாசி ஒழிப்பு மசோதா எள்ளலுக்கு ஆளானதில் ஆச்சரியமிருக்க முடியாது.

1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழக சட்டமன்ற மேலவை (செனட்) கூட்டத்தில் அதன் நியமன உறுப்பினராகவும் துணைத் தலைவருமான மருத்துவர் முத்துலட்சுமி அம்மாள் தேவதாசி முறை பெண்களுக்கே இழுக்கு என்றும் அது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசினார். ஆனால் அவருக்கு ஆதரவு கிட்டவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அவரைக் கடுமையாக எதிர்த்துப் பேசினர். அச்சமயத்தில் அவருக்கு திரு. வி. க. தந்தை பெரியார் போன்றவர்களே வெளியில் இருந்து தமது ஆதரவை வழங்கி வந்தனர். உயர்குடி தமிழர்கள், தேவதாசி ஒழிப்பு என்பது ஆண்களின் கௌரவத்துக்கும் சுதந்திரத்துக்கும் ஒரு இழுக்கு என்றே கருதினர்.

ஏனெனில், ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி, 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்கான பிரேரனையை தாக்கல் செய்யும் யோசனை இந்த உயர்குடி மக்களவை உறுப்பினர்களால் முடிந்தவரை தாமதப்படுத்தப்பட்டு, 1947ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதியே சென்னை சட்டசபையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. கோவிலுக்கு பெண்களை அர்ப்பணிப்பதும் கோவில்களில் தேவதாசிகளினால் கும்ப ஆராத்தி எடுப்பதும் தடை செய்யப்படுவதாக அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் 1927ம் ஆண்டில் இருந்து தேவதாசி முறையை எதிர்க்கும் இயக்கம் தோன்றி படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது. 1934 இல் பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் முறைக்குத் தடைவிதித்து மும்பை சட்டசபை சட்டம் இயற்றியது. 1937 இல் சென்னை மாகாண சட்ட சபையிலும் தேவதாசி தடை செய்யும் மசோதா அறிமுகமானது. 1939இல் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமானதால் இம்மசோதா கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சட்டசபையில் பிரேரணை கொண்டுவரப்பட்ட போதிலும், மத சம்பந்தப்பட்ட விடயங்களில் தலையிடுவதில்லை என்று அன்றைய ஆங்கில அரசு எடுத்த முடிவின் பிரகாரம் மேல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

ஏற்கனவே 1909 ஆம் ஆண்டு மைசூர் அரசு, தனக்குக் கீழ் இருந்த கோவில்களில் தேவதாசிகளைப் பணியமர்த்தும் வழக்கத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையை எடுத்தது. டில்லி மத்திய சட்டசபையில் தேவதாசி முறை பற்றிய விவாதம் நடந்தபோது சென்னைப் பிரதிநிதியாரை வி. ராமதாஸ் பந்துலு, வயதுக்கு வராத பெண்களை பொட்டுக் கட்டும் வழக்கம்  தடை செய்யப்பட வேண்டும் என்றும் ஆனால், கோவில் நிலங்களை அரசு எடுத்துக் கொண்டு தேவதாசிகளின் சேவைகளுக்காக அவர்களுக்கு கோவில் நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அளித்தால் தேவதாசிகள் கோவில் பணிகளை நிறுத்திவிட்டு நிலங்களில் பாடுபடப் போய்விடுவார்கள் என்றும் பரிந்துரை செய்தார். அதாவது எப்படியாவது தேவதாசிகள் முறை தொடர வேண்டும் என்பதே உயர் சாதியினரின் விருப்பமாக இருந்தது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த எஸ். ஆர். தாஸ், வயதுக்கு வராத சிறுமியரை கோவில்களுக்குக் கொடுப்பதை இந்திய அரசு தடுக்கும் என்றும் ஆனால் தேவதாசி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக இல்லை என்றும் பதிலளித்தார்.

இதுதான் அன்றைய ஆண் அரசியல்வாதிகளின் மனநிலை.

இந்தப் பின்னணியில்தான் 1926 இல் சென்னை சட்ட மன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி நியமன அங்கத்தவரானார். ஒரு பெண் சென்னை சட்டசபையில் அங்கத்தவராவது அதுவே முதல் தடவை. இவர் ஒரு தேவதாசியின் மகள் என்பது பிரபலம் அடையாத ஒரு உண்மை. இந்திய மத்திய அரசு தேவதாசி விடயத்தில் கை கழுவிய பின்னர், பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்துக்கு சென்னை மாநிலத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். முத்துலட்சுமி ரெட்டி இவ்வழக்கத்தை ஒழிக்கத் தீர்மானித்திருக்கிறார் என்பது தெரிந்ததும் தேவதாசிகள் ஒன்றிணைந்தனர். வீணை தனம்மாள் வீட்டிலும் வேறு சில இடங்களிலும் ஆலோசனைகள் நடந்தன. இம்முயற்சிகளுக்கு செல்வாக்கு மிக்க தேவதாசியான நாகரத்தினம் அம்மாளே தலைமை வகித்தார்.
முத்துலட்சுமி ரெட்டி

Monday, February 15, 2016

இருள் உலகக் கதைகள்

பூசாரிக்கு சவால் விடுத்த கிழவியின் ஆவி

ஆதிகேசன் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி  ஸ்ரீகாந்தன்

து ஒரு நள்ளிரவு வேளை. இரத்தினபுரி பிரதேசத்தில் பூரண அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இரத்தினபுரி நகரை அண்மித்திருக்கும் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு ஒற்றை வீட்டில் மட்டும் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் ரொம்பப் பலமாகவே கேட்டது. "குழந்தை ரொம்ப நேரம் அழுகுதே என்னது பாரு" என்ற சஞ்சீவ படுக்கையில் புரண்டு படுத்தான். கலைந்த ஆடைகளை சரி செய்தபடி அவசரமாக எழுந்த பியசீலி, தனது அம்மாவும் குழந்தையும் தூங்கும் அறையை எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவள் ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.

தொட்டிலைப் பிடித்து கைகளால் விரித்து தொட்டிலுக்குள் படுத்திருக்கும் குழந்தையை ஏதோ செய்து கொண்டிருந்தாள் தலைவிரிகோலத்தில் காணப்பட்ட ஒரு கிழவி! "அய்யோ! அய்யோ!" என்று பேய்க் கூச்சல் போட்ட பியசீலி தரையில் சாய்ந்தாள். பியசீலி போட்ட கூச்சலைக் கேட்டு அவளது அம்மாவும், கணவன் சஞ்சீவவும் வாரிச்சுருட்டி எழும்பினர். பதறியடித்தப்படி பியசீலியை தூக்கினார்கள். அப்போது குழந்தையின் அழுகையும் நின்றிருந்தது. மயக்கமுற்ற நிலைமையில் இருந்த அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து, நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர். விசாரித்த போது, இறந்து போன கிரியம்மா (பாட்டி) அகோரமான முகத்தோடு குழந்தையை பயமுறுத்திக் கொண்டிருந்ததாக அவள் சொல்ல விசயத்தைக் கேட்ட அந்தக் குடும்பமே ஆடிப்போனது. பியசீலி போட்ட கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்களும் குலை நடுங்கிப் போனார்கள்.


"அது ஒரு பேராசைக்கார கிரியம்மா. அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வீட்டை விட்டுப் போகாது" என்று ஊர்ப் பெரிசுகள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு அந்த இடத்தைக் காலி செய்தார்கள்.

கிரியம்மாவின் பீதியில் சஞ்சீவ உறைந்து போயிருந்தான். 'சஞ்சீவ அடிப்படையில் ஒரு கஞ்சன். அதனால் அண்மையில் செத்துப்போன தன் பாட்டியான கிரியம்மாவுக்கு ஒழுங்காக தானம் வழங்காததால் அவளது ஆவி வெறிபிடித்து வீட்டுக்குள் வந்திருக்காம்' என்று ஊர் வாசிகள் சொன்ன செய்திகளும் அவனது காதுக்கு வர, குடும்பத்தோடு பன்சலைக்குப் போய் தவறை மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்துவிட்டு வந்தான். அதன்பிறகு நாட்கள் நகர சஞ்சீவவின் வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின.

இரவு நேரத்தில் வீட்டிற்குள் யாரோ நடமாடுவது போன்ற சத்தமும், சமையலறையில் தட்டுமுட்டு சாமான்கள் தரையில் வீசியெறியப்படும் ஓசையும் கேட்க ஆரம்பித்தன. என்ன சத்தம் என்று ஓடிப்போய்ப் பார்த்தால் பொருட்கள் வைத்தது வைத்த இடத்திலேயே அசையாமல் இருக்குமாம். சரி இது மனப் பிரம்மையாக இருக்கும் என்று சஞ்சீவ வீட்டில் தனது மனைவிக்குக் கூட விசயத்தைச் சொல்லாமல் இருந்தான்.

ஆனால் இதே விடயத்தை பியசீலியும் அவனிடம் சொன்ன போது, அவனுக்கு உள்ளுர உதறல் எடுத்தது. அதோடு பியசீலி இன்னொரு புதிய விஷயத்தையும் சொன்னாள். 'இரவில் மீதம் வைக்கும் உணவை யாரோ சாப்பிட்டு விட்டு பானையில் தண்ணீர் ஊத்தி வைப்பதாகவும் கூற, சஞ்சீவவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது. எல்லாமே எல்லை மீறிப் போவதாக உணர்ந்தான். இதற்கு உடனடியாக முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைத்தவன் தமக்குத் தெரிந்த நபர்களிடம் சொல்லி ஒரு சக்திவாய்ந்த மாந்திரிகரைத் தேடித் தரும்படி கேட்டுக் கொண்டான். அவர்கள் கொடுத்த முகவரிதான் ஆதிகேசன் பூசாரி. உடனே ஆதிகேசனை சந்திக்க கஹவத்தைக்குச் சென்று அவரின் வீட்டு வாசலில் சஞ்சீவ இறங்க, பிரிகாரம் கேட்க வந்தவனின் முகத்தை பார்த்தே சஞ்சீவவின் வீட்டில் தீய சக்தி குடிகொண்டிருப்பதை ஆதிகேசன் உறுதி செய்தார்.

அண்டியிருப்பது ஒரு பேராசைக்கார ஆவி. அதை முடிக்க சில வேலைகளைச் செய்தாக வேண்டும் என்றவர், பரிகார பொருட்களுக்கான பட்டியலோடு, திகதியையும் குறித்துக் கொடுத்தார்.

பரிகார பூஜைக்கான ஏற்பாடுகள் சஞ்சீவவின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆதியும் குறித்த நாளில் தமது சகாக்களோடு பரிகாரம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். பூசாரியை சஞ்சீவவின் குடும்பம் கும்பிட்டு வரவேற்று அமர வைத்தார்கள். பரிகார மன்று அமைக்கும் வரை அந்தக் குடும்ப பெரியவர்களோடு பூசாரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர் எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் புகுந்த கிரியம்மா யாரையும் சட்டை செய்யாமல், உள்ளே நுழைந்து சமையல் கட்டுப் பக்கமாக சென்றதைப் பூசாரி பார்த்தார். இக்காட்சியை ஏனையோர் கண்களுக்குப்  புலப்படவில்லை என்பதால் அவர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பூசாரிக்கு நொடியில் அங்கு நடப்பதென்ன என்பது புரிந்தது.
ஆதிகேசன்

Wednesday, February 3, 2016

அன்வர் நேர்காணல்-2

தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையிலான சந்தேகங்களைத் தாண்டி

ஏன் இவர்கள் போகக் கூடாது?

 

அருள் சத்தியநாதன்

டந்த இதழில் கோம்பை அன்வர் தெரிவித்த ஒரு நிகழ்வை வாசகர்களுக்கு எடுத்துச் சொன்ன போது ஒரு மயக்கம் நிழ்ந்து விட்டது. கட்டுரையின் இறுதியில் திப்புசுல்தான் மதுரைக்கு வந்த போது ஏனைய சிற்றரசர்கள் அவரைத் தமது எதிரியாக கருதி ஓடி ஒழிய, ஒரு பாளையக்காரர் மட்டும் அவரை பரிசு பொருட்களுடன் பார்க்கச் சென்றார் என்று துவங்கும் விவரிப்பில், அவர் தெலுங்கு பேசும் பாளையக்காரர் எனத் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட மன்னர். கன்னடம் பேசுபவர். அந்தப் பாளையக்காரரும் ஒரு கன்னடியர், எனவே மொழி, மொழியோடு ஒத்துப்போனது. தயவு செய்து தெலுங்கர் என்பதை கன்னடியர் எனத் திருத்திக் கொள்ளுங்கள்.

கொழும்பு வந்திருந்த கோம்பை அன்வர் தனது 'யாதும்' ஆவணப்படத்தை கொழும்பில் இரண்டு இடங்களிலும் மட்டக்களப்பில் மூன்று இடங்களிலும் போட்டுக் காட்டினார். பார்த்த முஸ்லிம்களும் தமிழர்களும் இவரைப் பாராட்டியதோடு நெகிழ்ந்து பேசியும் இருக்கிறார்கள். அதாவது இந்த ஆவணப்படத்தில் தமிழகத்து தமிழர்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் இடையிலான பாரம்பரிய பந்தம் விரிவாக ஆராயப்படுகிறது. இலங்கையிலும் இதே நிலைதான். வடக்கிலும் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவுமாகத்தான் இருந்தார்கள். சிங்கள – தமிழ் அரசியல் மோதலில் அல்லது போட்டா போட்டியில் எங்கே தாம் காணாமல் போய் விடுவோமா என்ற சந்தேகத்தில் தமக்கென ஒரு அடையாளத்தை அல்லது இருப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமக்கென தனி அரசியல் அடையாளத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்படுத்திக் கொண்டது. அதன்பின்னர் யுத்தம் வந்தது. வடக்கு முஸ்லிம்கள் ஒரே நாளில் விரட்டியடிக்கப்பட்டனர். இரு இனங்களிடையேயும் இது பெரும் இடைவெளியையும், அவநம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியதோடு கிழக்கில் வன்மத்தையும் மோதல் நிலையையும் தோற்றுவித்தது. சமீப காலமாக சிங்கள இனவாதிகளின் இலக்காக முஸ்லிம் சமூகம் மாறிப்போனது. இவற்றில் இருந்து, அதாவது இம்மோதல் நிலை முடிவுக்கு வந்து, முன்னர் நிலவி வந்த சினேகபூர்வமான நிலைக்கு மூவினங்களும் திரும்ப வேண்டும் என்ற சிந்தனையை எனது ஆவணப் படத்தைப் பார்த்தவரக்ள் வெளிப்படுத்தியதை என்னால் பார்க்க முடிந்தது என்ற கருத்தை எம்மிடம் கோம்பை பகிர்ந்து கொண்டார்.

இந்தியத் தமிழர்களுக்கு பொதுவாகவே இலங்கை விவகாரங்கள் புரியாது. முன்னர், சிலோன்காரன் என்றதும் 'பிரபாகரன் நாட்டில் இருந்தா வருகிறீர்கள்?' என்று கேட்பார்கள். இப்போது 'உண்மையைச் சொல்லுங்கள் சார், பிரபாகரன் உயிரோடுதானே இருக்கிறார்?' என்று கேட்கிறார்கள். அங்குள்ள ஊடகவியலாளர்களுக்கும் பெரும்பாலும் இலங்கை விவகாரங்கள் பற்றிய புரிதல் மிகவும் குறைவு. செய்திகளை சென்சேஷனலாக கொடுத்தே பழகி விட்டார்கள்.

ஒரு சின்ன உதாரணம்.

முதல் நாள் இரவுதான் லக்ஷ்மன் கதிர்காமர் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். மறு காலை தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி ஊடகத்தின் செய்திப் பிரிவில் இருந்து அழைப்பு வந்தது. கதிர்காமர் கொலை பற்றிய விவரங்களைக் கேட்டுவிட்டு கொழும்பில் நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். 'எந்தப் பதற்றமும் இல்லை, மிகவும் அமைதியாக இருக்கிறது' என்று பதில் சொன்னேன். வாகன போக்குவரத்துக் குறைவாக இருக்கிறதா? என்று கேட்டார்கள். 'வழமை போலத்தான்' என்றேன். வெறுத்துப்போன அந்த தமிழக ஊடகவியலாளர்,

"அப்படிச் சொல்லாதீர்கள் சார்… பரபரப்பாக இருக்கிறது… மக்கள் நடமாட்டம் குறைவு, வாகனங்கள் வீதிகளில் குறைவாகவே காணப்படுகின்றன… அச்ச உணர்வு தெரிகிறது என்று சொல்லுங்கள்" என்று எப்படிப் பேச வேண்டும் என்பதை சொல்லித் தந்தார்!

சரி, கோம்பை என்ன சொல்கிறார் என்பதற்கு வருவோம்

ஊடகவியலாளர் நிலாம்,மருத்துவர் தாஸிமுடன் அன்வர்

யாதும் ஆவணப்படத்தைத் தயாரித்த கோம்பை எஸ். அன்வருடன் ஒரு திறந்த மன உரையாடல்

"தமிழர் - முஸ்லிம் உறவில் ஒரு கதவைத் திறக்க உதவியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்"

 

அருள் சத்தியநாதன்

'சங்க கால தமிழனுக்கு பாலை நிலம், இமயம், பெருமழை பாதிப்பு பற்றியெல்லாம் எப்படித் தெரியும்? விரிந்து ஆராய்ந்தால் சிந்து வெளி திராவிடனுக்கும் முற்பட்ட தமிழனைத் தேட வேண்டியிருக்கும்'

'கோம்பையில் ரங்கநாத சுவாமி கோவிலை திப்பு சுல்தானே அமைத்துத் தந்தார்!'

குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று தமிழகத்து நிலத்தை வகுத்தவர்கள் பாலை என்ற நிலத்தையும் சேர்ந்திருக்கிறார்கள். பாலை என்பது பாலைவனப் பகுதியைக் குறிக்கும். இந்தியாவில் ராஜஸ்தானத்தில் பாலைவனத்தைப் பார்க்கலாம். ஆனால் ராஜஸ்தான் அளவுக்கு அதாவது ஒட்டகங்களில் ஏறி பயணிக்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் பாலை நிலம் இல்லை. இருந்ததாக சொல்லும் எழுத்து அல்லது இலக்கிய ஆதாரமும் இல்லை. திருச்சி, மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுர மாவட்டங்களில் வரட்சி காணப்படுமே தவிர பாலை நிலம் இல்லை.

ஆனால் சங்கப் பாடல்களில் நிறைய பாலை நிலக் காட்சிகள் வருகின்றன. பாலை நிலத்தில் செல்லும் ஒட்டகங்கள் வெண்கற்களை (இறந்த மிருகங்களின் எலும்புகள்?) விழுங்கி மேலே நடப்பதாக வர்ணனைகள் வருகின்றன. பனி படர்ந்த மலைகள் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. பாறைகளை உடைத்தெறிந்து ஆர்ப்பரிக்கும் பெருமழை பற்றியும் குறிப்புகள் வருகின்றன.

மதுரையில் வாழ்ந்திருக்கக் கூடிய தமிழ் சமூகத்துக்கு பாலையின் கோரம், வெண்பனிமலைகள், தண்ணீரின் சக்தி என்பன எப்படி இவ்வளவு ஆழமான அறிவு எங்கிருந்து வந்திருக்க முடியும்? அராபிய பாலைவனத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எப்படி இந்தத் தமிழ் சமூகத்துக்குத் தெரிய வந்திருக்க முடியும்? சில வருடங்களுக்கு முன் இமாலய பகுதியில் பொழிந்த மேக வெடிப்பு மழை பாறைகளையும் உடைத்தெறிந்து ஊழித் தாண்டவமாடி வருண சக்தியை வெளிப்படுத்திய பின்னரேயே மழைக்கு இப்படி ஒரு மகத்தான சக்தி இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆனால் சங்ககாலத் தமிழ் சமூகத்துக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்திருக்க முடியும்?

இந்தத் தகவல்கள் பிரமிப்பூட்டுபவை. நான் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அங்கு சொற்பொழிவு நிகழ்த்திய பாலகிருஷ்ணன் என்பவர் சங்கத் தமிழனுக்குத் தெரிந்திருந்த உலக அறிவை புட்டுக் காட்டிய போது நான் கிறங்கிப் போனேன். இந்தியாவில் என்று சொல்வதைவிட உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம், இன்று வாழும் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருக்க முடியாது என்பதையும் பல இடங்களில் வாழ்ந்து அனுபவங்களையும் பெற்று இறுதியாகவே தமிழக மண்ணில் கால் ஊன்றியிருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். சிந்துவெளி நாகரிகத்துக்கு அப்பால் சென்றும் இந்த இனத்தைப் பற்றிய தகவல்களைத் தேட வேண்டியிருக்கிறது...
யாதும் ஆவணப்படத்தில்
ஒரு காட்சி

தமிழ் இனத்தின் தொன்மை குறித்து எம்மிடம் பேசும்போது இப்படிச் சொல்கிறார் கோம்பை அன்வர்.

கும்பகோணம் இஸ்லாமியத் தமிழ் ஆய்வு மாநாடு தொடர்பான கட்டுரைத் தொடர் வானவில்லில் வெளியான போது அதில், 'யாதும்' என்ற பெயரிலான ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தோம். இந்த ஆவணப் படத்தைத் தயாரித்தவர் கோம்பை எஸ். அன்வர். 2500 வருடங்கள் பழைமையான நறுமணப் பொருள் வணிகத்தின் ஊடாகவே மேற்கு ஆசியா, வட ஆபிரிக்க மற்றும் தென் கிழக்கு தீபகற்ப நாடுகளுடன் தமிழகமும் இணைந்தது ஏழாம் நூற்றாண்டில். இஸ்லாம் மேற்கு ஆசியாவில் பரவிக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே அது தமிழகத்திலும் வேரூன்றத் தொடங்கியது.

இந்தத் தமிழ் முஸ்லிம் சமூகம் வேரூன்றியது எப்படி, திராவிட - முஸ்லிம் கலப்பால் உருவான ஒரு சமூகத்தை எப்படி தமிழகம் அரவணைத்தது, தமிழ் இஸ்லாமிய இலக்கியம் மற்றும் கலாசாரம் என்று பல்வேறு அம்சங்களில் பயணிக்கும் அற்புதமான ஒரு ஆவணப்படம் இது. ஒரு கறுப்பு அமெரிக்கர் தன் வேர்களைத் தேடி பயணித்த அனுபவங்களை 'ரூட்ஸ்' என்ற பெயரில் நூலாக வெளியிட்ட போது அது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'யாது' என்ற அன்வரின் ஆவணப்படத்தைப் பார்த்தபோது, பார்த்தவர்களுக்கு அது நிச்சயம் 'எலக்ட்ரிக் ஷொக்' கொடுத்தே இருக்கும். ஆர்வத்துடன் ஒரு நூலை வாசித்து முடித்ததும் ஒரு நிறைவும் புத்துணர்வும் ஏற்படுமே, அந்த உணர்வே ஏற்பட்டது. யாதும் டி.வி.டி. முகப்பில் 'வேர்களையும் அடையாளத்தையும் தேடி ஒரு தமிழ் முஸ்லிமின் வரலாற்றுப் பயணம்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. அது ஒரு அற்புதமான பயணம்.

அன்வர் கடந்த மாதம் கொழும்பு வந்திருந்தார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் மட்டக்களப்புக்குச் சென்றார். தன் குறுகிய கால பயணத்தில் ஐந்து அல்லது ஆறு முறை தன் யாதும் ஆவணப்படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார். தென் கிழக்கு பல்கலைக்கழகம் உட்பட சில இடங்களில் அவர் இப்படத்தைத் திரையிட்டிருக்கிறார்.

இந்த ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட வேண்டும் என கும்பகோணம் கட்டுரைத் தொடரில் நான் குறிப்பிட்டிருந்தேன். மருத்துவர் தாசிம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த ஆவணப்படம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எடுபடுமா? இங்கே ஒரு இஸ்லாமிய அரசியல் இருப்பதால் அந்தப் பார்வையில் இது எடுபடுமா? விமர்சனங்களுக்கு உள்ளாகுமா? என்ற சந்தேகங்கள் இருந்தன. ஆனால் இச்சந்தேகங்கள் எதுவும் இல்லாத அன்வர் இங்கே வந்து 'யாதும்' ஆவணப்படத்தைத் திரையிட்டார்.

அவரைக் கண்டதும் நான் முதலாவதாகக் கேட்டது, படத்தைத் திரையிட்டீர்களா? என்றுதான். 'ஆமாம், நல்ல வரவேற்புக் கிடைத்தது' என்றார். யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையா?

"இல்லையே! ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள். அவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்திருக்க வேண்டும். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காட்டப்பட்ட போது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தமது ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள்.

ஒருவர் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்களும் நாங்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் எவ்வாறெல்லாம் விளையாடிவிட்டன. நாங்கள் எப்படி இருந்தோம் என்பதை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துவதாய் உணர்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் அந்த ஒற்றுமை பாவம் வெளிப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் வலியுறுத்துவதாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டார்.

நான் இதுவரை திரையிட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே எதிர்மாறான கருத்தைத் தெரிவித்திருந்தார். அது இந்தியாவில், இங்கல்ல. அதைத்தவிர எவருமே எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தவில்லை. பலருக்கும் இந்த அனுபவம் புதிதாக இருந்தது. அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயத்தை இப்படம் பேசுவதால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள், நெகிழ்ந்தார்கள், தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இலங்கைக்கு வந்து என்னால் ஒரு கதவைத் திறக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!" என்று கூறி முடித்தார் கோம்பை அன்வர்.

தமிழ் - முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஆராய வேண்டும் என்ற ஆர்வமும் இப்படி ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்க வேண்டும் எனவும் எவருக்கும் தோன்றாத போது உங்களுக்குத் தோன்றியது எப்படி? என்று கேட்டேன்.

"நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது பிறந்த ஊர் கோம்பை. தேனி மாவட்டம் கேரளா எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. எனவே நாங்கள் கேரளா பக்கம் போவோம். அப்படிப் போகும் போது எங்களை அடையாளம் கண்டுகொள்ளும் மலையாளிகள்.
ஆவணப்பட ஒளிப்பதிவில்