Sunday, January 31, 2016

சிறுகதைகள்


திருநகர்  நடராசா

ரவு எட்டுமணி. பரீட்சை நெருங்கி வருவதால் சாதனாவும் சோபனாவும் ஓர் அறையில் இருந்து ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை மோகனதாஸ் உள்ளே போய் சாராயத்தில் ஒரு டோஸ் எடுப்பதும் வெளியே வந்து சிகரட்டைப் பத்திக் கொண்டு சோபாவில் இருப்பதுமாக வெளி அறையில் நடமாடித் திரிகிறார். சோகமே உருவாக சமையலைக் கவனித்தபடி அடுப்பறையில் நிற்கிறாள் மாதவி.

மாதவி ஒரு வறுமைப்பட்ட குடும்பத்து யுவதி. உள்நாட்டுப் போரில் இடம்பெயர்ந்து பொக்கணையில் இருக்கும் சமயம் விமானம் போட்ட குண்டு பதுங்கு குழிக்குள்ளே விழுந்ததால் அதற்குள் இருந்த மாதவியின் குடும்பத்தினர் அத்தனை பேரும் மரணத்துடன் சங்கமமாகி விட்டனர். மாதவி எங்கோ வெளியில் போயிருந்ததால் தனிமைப்பட்டுப் போனாள். கடவுளே தஞ்சம் என்று கோயிலடியில் போய் கிடந்தாள். பதினாறு வயதான அவளால் வேறு என்னதான் செய்ய முடியும்! கோயிலுக்குப் போய்வந்த மோகனதாஸின் மனைவி தெய்வானை அவளின் அந்தரிப்பு நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு அவளைக் கூட்டி வந்து தங்களோடு சேர்த்துக் கொண்டாள். ஐந்து வருடங்களாக அவளுடைய வாழ்க்கை அவர்களோடு கழிந்து போகிறது. தெய்வானையின் தமக்கை குடும்பம் லண்டனில் வதிவிடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வரச் சொல்லி ஒரு மாத விசாவில் தெய்வானை போயிருந்தாள். அதனால் வீட்டுப் பணிகள் அனைத்தையும் மாதவியே செய்ய வேண்டியதாயிற்று.

நேரமும் மெல்ல மெல்ல நகர்ந்து எட்டரைக்கு வந்து சேர்கிறது. ஒருவாறு சமையலை முடித்துக் கொண்டு வெளி அறைக்கு வந்தாள் மாதவி.

"மாதவி இஞ்ச வா" என்று கூப்பிட்டார் மோனதாஸ். மெல்ல மெல்ல நடந்து அவர் பக்கத்தில் வந்து நின்றாள் மாதவி.

"சமையல் எல்லாம் முடிஞ்சுதே, சாதனாவும் சோபனாவும் என்ன செய்யினம்?"

"படிச்சுக் கொண்டிருக்கினம்"

"நீ ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? கண்ணெல்லாம் கலங்கியிருக்கு..."

"அப்படி ஒன்றும் இல்லை' அவர் முகத்தை நேரிட்டுச் சொல்லாத மாதவியின் பதில்.

"சென்ற காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. காலத்திற்கேற்ற மாதரி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராய் இருக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். உனக்கு இங்கே எந்தக் குறையும் இல்லை. அப்படி இருந்தால் என்னட்ட சொல்லு... அதற்கு நான் வழி செய்வேன். எனக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் உனக்கு நல்லாய்த் தெரியும். அதற்கு பங்கம் வராமல் ஒழுங்காய் நடந்து கொண்டால் போதும் உனக்கொரு வாழ்வை நான் தேடி வைப்பேன் சரியா?"

"அம்மன் கோயில் குறை வேலையை நாளையோடு எப்படியும் முடிக்க வேணும் நான் நின்றால்தான் முடிக்கலாம். விட்டுப் போட்டு வந்தால் கடத்திப் போடுவான்கள். ஆடுகள் பாவம், குழை ஒடிச்சுப் போடு. கோழிகளைத் திறந்து விடு. கீரி உலாவுது, பிடிச்சுப்போடும். கவனிச்சுப் பார் சரியா?" மோகனதாஸ் ஜீவகாருண்யமாகச் சொன்னதை மாதவியின் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி என்று தலையை மட்டும் அசைத்தாள்.

சாதனாவும் சோபனாவும் வந்து, "மாதவி அக்கா சாப்பிடுவம்" என்றதும் எல்லோரும் சாப்பாட்டறைக்கு நடந்தனர்.

படுக்கையில் கிடந்த மாதவி சற்று நேரம் உறங்கினாள். திடுகுற்று விழித்தாள். அதன் பின் அவளால் உறங்க முடியவில்லை. பல்வேறு பட்ட நினைவுகளால் மனம் குழம்பிக் கிடந்தது. ஒவ்வொரு நினைவையும் எதிர்நீச்சல் போட்டு கடந்த வந்த அவளுடைய மனதால் ஒரு புள்ளியை மட்டும் கடக்க முடியவில்லை. அது கறை படிந்த புள்ளி. அது கட்டுப்படாமல் துள்ளிக் கொண்டு நின்றது. அதற்குத்தான் அவள் விடை தேட வேண்டும். தான் விடியும் வரை உறங்கினேனா விழித்திருந்தேனா என்பது அவளுக்கே விளங்கவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர் கிராமத்தில் அமைந்திருந்த அம்மன் கோயிலின் சுற்று மதில் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்திக் கொண்டிருக்கிறார் கோயில் நிர்வாகியான மோகனதாஸ். உள்நாட்டுப் பேரழிவின் இடப்பெயர்வால் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைந்து போய்க் கிடந்த கோயிலை மீள வந்து குடியேறிய பின்னர் அரச உதவியையும் மக்களின் நன்கொடையையும் பெற்று அந்தக் கோயிலின் நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு நிர்வாகத் தலைவர்தான் மோகனதாஸ். தன் குடும்ப வழி வந்த கோயில் என்பதால் அதிகாரம் வேறு ஒருவரின் கைக்கு விடாமல் தானே நடத்திக் கொண்டிருக்கிறார் அவர். ஏற்கனவே கோயில் கட்டிட வேலைகள் எல்லாம் முடிவுற்றுப் பூசைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுமதில் கட்டும் பணி மட்டும் பாக்கி இருந்தது. அதுவும் இன்று மாலை ஆறு மணியுடன் முடிவடைந்து விடும்.

எந்த விடயமானாலும் நான் பெரியவன் எனக்கு கீழ் மற்றவர் பணிந்து இயங்க வேண்டும் என்ற அதிகாரச் சிந்தனை கொண்டவர்தான் மோகனதாஸ். அது எல்லோருக்கும் தெரியாது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு விளங்கும்.

முகம் கைகால்களைக் கழுவிக் கொண்டு கோயில் வாசலுக்கு வந்தார் மோகனதாஸ். சனங்கள் ஒருவரும் கோயிலில் இல்லை. ஐந்து மணிக்கே பூசையை முடித்துக் கொண்டு ஐயரும் அவசரமாக வேறு கோயில் பூசைக்கு மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டார். கோயில் வெறிச்சோடிக் கிடந்தது.

"அம்மா தாயே உன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டேன்" என்று மனதால் சொல்லிவிட்டு வீட்டுக்குச் செல்ல கிளம்பினார் மோகனதாஸ். எதிரே வினாயகம் நின்றான். வினாயகம் வந்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன். சந்தையில் பலசரக்கு வாணிபத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். அம்மனில் விசுவாசமும் பக்தியும் கொண்டவன்.

"சுற்றுமதில் வேலையையும் முடிச்சுப் போட்டியள் அண்ண.... மெத்தப் பெரிய காரியம்" என்று சந்தோசமாகச் சொன்னான் வினாயகம்.

"இந்த வேலையைச் செய்யாட்டால் கட்டாக்காலி மாடுகள் கோயிலுக்க வந்து அசுத்தப்படுத்திப் போடுதுகள். அது சரி உன்ற யாபாரம் எல்லாம் எப்படிப் போகுது?" என்று கேட்டார் மோகனதாஸ்.

"அப்படியும் இப்படியுமாய் ஓடிக் கொண்டிருக்கண்ணா.... சாமான்களின்ற விலைவாசி எல்லாம் உயர்ந்து கொண்டு போகுது. லாபத்தை எட்டிப் பிடிப்பது கஷ்டமாகத்தான் கிடக்கு. சனங்களிட்ட காசு இல்லை. சனங்களுக்கு வேலை வெட்டி இல்லை. எல்லாம் யந்திரமயம்.

பொன்னாய் இருந்த இந்த மாவட்டம் மண்ணாய்ப் போச்சுது. வருங்காலத்தில் ஏழைகள் சீவிக்க ரொம்பக் கஷ்டப்படுவாங்க. கொழும்பு மாதிரி இங்கேயும் சனங்கள் றோட்டோரம் படுத்து எழும்புகிற நிலை வரப்போகுது. இதைத்தான் நாட்டு வளர்ச்சியும் நாகரீக உயர்ச்சியும் என்று அறிவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் சொல்லுகினம். நாம் என்ன செய்ய... ஊரோடு ஒத்துப்போக வேண்டியதுதான்" என்றான் வினாயகம்.

"திருவிழாவும் நெருங்கி வருது. இந்தமுறை பொங்கல் பூசையெல்லாம் கொஞ்சம் சிறப்பாய் செய்ய வேணும். குருக்களைக் கூப்பிடவேணும். பத்து நாளும் அன்னதானம் போடவேணும். அதுக்கு ஏற்றமாதிரி உன்ற உதவியும் முக்கியம் தேவையாய்க் கிடக்கு. அதுக்கிடையில் மாதவியை விட்டு கோயிலெல்லாம் துப்பரவு செய்ய வேணும்" என்று நீட்டி முழக்கிக் கொண்டு போனார் மோகனதாஸ்.

"மாதவி எப்படி அண்ண உங்களை சந்தித்தவள்?" என்று கேட்டான் வினாயகம்.

"இடம்பெயர்ந்த பொழுது இனசனத்தைப் பறிகொடுத்திட்டு தவிச்சுப் போய் நின்றவளை ஐயோ பாவம் தனிச்சுப் போனாளே என்று மனுஷி இரக்கப்பட்டுக் கூட்டி வந்து எங்களோடு சேர்த்துக் கொண்டாள். ஆறு வருஷமாய் எங்களோடுதான் இருக்கிறாள்" என்றார் மோனதாஸ்.

"நேற்று சந்தையில் நடந்த சம்பவத்தை மாதவி உங்களிட்ட சொல்ல இல்லையோ அண்ண" என்று கேட்டான் வினாயகம்.

"அப்படி ஒன்றும் என்னட்ட சொல்ல இல்லையே... என்ன நீ சொல்லு" என்றபடி கோயில்படியில் உட்கார்ந்தார் மோகனதாஸ்.

நேற்று மாதவி சந்தைக்கு வந்திருந்த போது ரெண்டு கழிசறைகள் அவளோடு நொட்டை விட்டு சேட்டை செய்து கொண்டிருந்தான்கள். என் கண்ணுக்கு எத்துப்பட்டதால் நான் ஓடிப்போய் என்ற தங்கச்சியோட உங்களுக்கு என்ன சேட்டை என்று ஏசிப்போட்டு அவளைக் கடைக்குக் கூட்டி வந்தேன். தான் தனிச்சுப் போனதை என்னட்டச் சொல்லிச் சொல்லி அழுதாள். அவள் கள்ளம் கபடு அறியாத நல்ல பிள்ளை அண்ண. உங்களின்ற வீட்டுப் பணிகளை எல்லாம்தான் பட்ட நன்றிக் கடனுக்காக ஓடி ஓடிச் செய்யுறாள். நீங்கள்தான் அவளைக் கண் கலங்காமல் பார்க்க வேணும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான் வினாயகம்.

அதே சமயத்தில் சாதனாவும் சோபனாவும் கோயிலடிக்கு ஓடி வந்தார்கள். "எங்களின்ற பின் கோடிப்பக்கம் நிற்கும் மாமரத்தில் மாதவி அக்கா தூக்குப் போட்டு செத்துப் போயிட்டா அப்பா" என்று அழுதழுது சொன்னார்கள். பிடரியில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி அதிர்ச்சியில் விறைத்துப் போய் நிற்கிறார் மோகனதாஸ். மாதவி ஏன் தற்கொலை செய்தாள் என்பது வினாயகத்திற்கு விளங்கி விட்டது.

நேற்று மாதவி அழுதழுது வேலியே பயிரை மேயுது என்று சூசகமாகச் சொன்ன வார்த்தைகள் இன்று அவன் நினைவுக்கு வருகிறது.

"அம்மனுக்கு வேலி அமைச்சுப் போட்டியள் ஒரு அபலைப் பெண்ணுக்கு வேலி அமைக்கத் தவறி விட்டியள்" என்று மோகனதாஸைப் பார்த்து மனம் பொறுக்காமல் சொன்னான் வினாயகம்.

No comments:

Post a Comment