Wednesday, January 20, 2016

தேவதாசி வரலாறு -15

சதிராட்டத்தை பரதமாக மாற்றிய ருக்மணி அருண்டேல்


அருள் சத்தியநாதன்

ன்று வீணை என்ற இசைக்கருவி, தெய்வீகத்தன்மை கொண்ட வாத்தியமாகவும் அதை இசைப்போர் கௌரவத்துக்குரியவராகவும் மதிக்கப்படுவதற்கு வீணை தனம்மாளே காரணம் என்பது பலரும் அறியாதது.
வீணை தமிழரின் பாரம்பரிய இசை வடிவம். பழைமையான தமிழ் இசைக்கருவியான யாழின் இன்னொரு பரிமாணமே வீணை. சாதாரணமாக, 10ம் நூற்றாண்டின் பின்னரேயே வீணை இன்றைய வடிவத்தைப் பெற்றது. அதன் பின்னரே கலைகளின் வடிவமாகக் கருதப்பட்ட வீணை, சரஸ்வதியின் கைகளில் தவழ்வதாக ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பிடித்தது. வீணைக்கு இப்படி ஒரு மரியாதை இருந்தாலும் அக்காலத்தில் வீணையை இசைப்பவர்கள் தேவதாசிகளாகவே இருந்தனர். அவர்களிடமே கலைகள் வசப்பட்டிருந்தன. பின்னர் பரதமாக மாற்றம் பெற்ற சதிராட்டம் தேவதாசிகளின் நடனம். வாய்ப்பாட்டும் அவர்களினாலேயே பேணப்பட்டு வந்தது. கோவில்களில் ஆடும்போது அது சின்ன மேளம் எனவும் திருமண வைபவங்களில் ஆடும்போது சதிராட்டம் எனவும் இந்நடனம் அழைக்கப்பட்டது. தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் வலுவடையத் தொடங்கிய போது தேவதாசிகளின் சதிராட்டம் பரதநாட்டியமாக உருப்பெறத் தொடங்கியது.


மறைந்து போயிருக்கக் கூடிய சதிராட்டத்தைக் காப்பாற்றி அதற்கு பரத நாட்டியம் என்ற பெயரையும் கௌரவத்தையும் கொடுத்ததோடு, உயர்குடி மக்களின் நடனமாக அதை மாற்றியமைத்த பெருமை ருக்மணி அருண்டேலைச் சாரும். இவர் உயர் பிராமணக் குலத்தில் பிறந்தவர். இவருக்கு 16 வயதாக இருக்கும்போது ஜோர்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டபோது பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அவர் ஆங்கிலேயர் என்பதால் மட்டுமல்ல, திருமணம் நடைபெற்றபோது கணவர் அருண்டேலுக்கு 40 வயது. எனினும் அன்னிபொசன்ட் அம்மையாரின் ஆசியுடன் இத்திருமணம் நடைபெற்றது.

கணவருடன் உலக நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த அருண்டேல், தன் ஆஸ்திரேலிய பயணத்தின்போது அங்கு 'பாலே' நடனத்தைக் கற்றுக் கொண்டார். தமிழகம் வந்த அவர், பாரம்பரிய தமிழ் நடனமான சதிராட்டத்தைக் கற்க விரும்பினார். தாசிகளின் நடனமான சதிரை ஒரு பிராமணப் பெண் கற்றுக் கொள்வதா என்ற எதிர்ப்பு கிளம்பியது. அதைப் பொருட்படுத்தாத ருக்மணி, கௌரி அம்மாள் என்ற நடன ஆசிரியையிடம் அதைக் கற்றார். அந்நடனத்தின் அடிப்படை அம்சங்களைக் கற்ற பின்னர், புகழ்பெற்ற நடன ஆசிரியரான பந்த நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சதிராட்டத்தைத் தொடர்ந்து பயின்றார்.

கௌரி அம்மாளைப் போலவே மீனாட்சி சுந்தரமும் ருக்மணிக்கு பாடம் சொல்லித்தர முதலில் தயங்கினார். உயர்குலப் பெண்களுக்கு தாசி நடனத்தைச் சொல்லிக் கொடுத்தவன் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால்தான் இந்தத் தயக்கம். ஆனால் ருக்மணி தேவி காட்டிய ஆர்வமும், முயற்சியும் அவர் மனதை மாற்ற, நடனத்தை ருக்மணிக்கு பயிற்றுவித்தார். அவரும் ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு பரதநாட்டியத்தில் பேரொளியாக உருவெடுத்தார்.
ருக்மணி


1935ம் ஆண்டு ருக்மணியின் அரங்கேற்றம் அவர் கணவர் அருண்டேலின் தலைமையில் நடைபெற்றது. அப்போதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாம். பரத நாட்டியம் கற்று அரங்கேற்றம் நடத்திய முதல் உயர்குடிப் பெண் ருக்மணி அருண்டேல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர்தான் உயர் குலத்து, மெத்தப் படித்த பெண்கள் எல்லாம் காலில் சலங்கை கட்டி நடனமாடத் தொடங்கினர். கௌரவம் மிக்க நடனமாக பரதம் மாறியது.

உயர்குடிப் பெண் தம்மைவிட சாதியில் குறைந்த மக்கள் முன் மேடையேறி நடனமாடுவதா? என்ற கேலிப்பேச்சை உதறித்தள்ளிய ருக்மணி, என்னிடம் நடனம் பயில எவர் வேண்டுமானாலும் வரலாம் என பகிரங்கமாக அறிவித்ததுடன் 'கலாஷேத்திரா' என்ற நடனப் பள்ளியையும் ஆரம்பித்தார்.

ஓலைக் குடிசையில் மூன்று மாணவிகளுடன் இவர் ஆரம்பித்த கலாஷேத்திரா இன்று நூறு ஏக்கர் பரப்பில் பரந்து கிடக்கிறது. கலாஷேத்திராவில் பயில்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றால் அதுவே இன்று தனிப்பெருமை. சாந்தி நிகேதனைப்போல கலாஷேத்திராவை உலகப் புகழ்பெற்ற கலை மன்றமாக உருவாக்கிக் காட்டினார் ருக்மணி அருண்டேல்.

கலாஷேத்திராவை ஆரம்பித்த பின்னரேயே, பரத நாட்டியத்தை எளிமைப்படுத்தும் பணியில் இறங்கினார். மறைந்து கொண்டிருந்த நடன வடிவங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு புத்துயிரளித்தார்.'பாகவத மேளம்' என்ற கலை வடிவத்துக்கு உயிரூட்டி, துருவ நட்சத்திரம், ருக்மணி கல்யாணம், உஷா பரினியம் போன்ற கதைப்பாடல் நடனங்களை உருவாக்கினார். இவர் காலத்தில்தான் நடனம் நாடக வடிவம் பெற்றது.

இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் மரியா மொண்டிசோரி என்ற பெண்மணி அக்காலத்தில் குழந்தைக் கல்வியில் பல புதுமைகளையும் புகுத்தி வந்தார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்த அருண்டேல், குழந்தைக் கல்வியல் இந்திய ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார். கலாஷேத்திராவில் குழந்தைக் கல்விக்கான பள்ளியை ஆரம்பித்தார்.

தற்போது முன்பள்ளிக் கல்வி அல்லது மொண்டிசோரி என்று அழைக்கிறோமே, அந்தக் கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்தவரே ருக்மணி அருண்டேல்தான். 1986ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி காலமான ருக்மணிதேவி அருண்டேலை 1977 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாகும்படி அன்றைய பிரதமர் மோரார்ஜி தேசாய் அழைப்பு விடுத்ததும் அதை அவர் நிராகரித்ததும் வரலாறு.

ருக்மணிதேவி அருண்டேல் இல்லையெனில் பரதநாட்டியம் இந்த அளவுக்கு பெயரும் புகழும் பெற்றிருக்காது. அப்பெண்மணியின் அயராத உழைப்பும் துணிச்சலுமே, தேவதாசியர் மறைந்தாலும் அவர்களின் நடனத்தை பரதக் கலையாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இவரைப் போலவே வீணைக்கு மறுவாழ்வு அளித்தவரே வீணை தனம்மாள். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் இசைக்கலைஞராக உருவெடுப்பதென்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

தனம்மாள் தேவதாசி குலத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் இசைக் குடும்பம். தஞ்சை மராட்டிய மன்னர் அரசவையில் ஆஸ்தான நடனமணிகளாகவும் பாடகிகளாகவும், இசைக்கலைஞர்களாகவும் அவர்கள் பணியாற்றி வந்தனர். இக்கலைக் குடும்பத்தில் பிறந்த காமாட்சியம்மாள் பரதநாட்டிய வாய்ப்பாட்டில் கை தேர்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி, பாலுசாமி தீட்சிதர், பரதம் கணபதி ஆகியோரின் சிஷ்யையான காமாட்சியின் மகள் சுந்தரம்மாளும் புகழ்வாய்ந்த ஒரு இசைக்கலைஞர். சுந்தரம்மாவுக்குப் பிறந்த குழந்தைகளில் ஒருவரே தனம்மாள்.

சிறு வயது முதலே இசை கற்கத் தொடங்கிய இவருக்கு வீணை இசைப்பதில் ஆர்வம் பிறந்தது. 12 வயதாகும் போது தனம்மாள் முழுமையான வீணை இசைக்கலைஞரானார். அதன் பின் கச்சேரி செய்யத் தொடங்கினார் தனம்மாள். வாய்ப்பாட்டையும் வீணையையும் சேர்த்தே கச்சேரி செய்ய ஆரம்பித்தார். அன்றைக்கு இது ஒரு மேடைப் புரட்சி. வாயினால் பாடிய பின்னர் அவ்வரிகளை வீணையில் வாசிப்பது இவர் பாணி. வீணை இசையில் தன்னிகரற்ற இடத்தை அவர் எட்டிய பின்னர் அவரை அனைவரும் வீணை தனம்மாள் என அழைக்கத் தொடங்கினார்.

மைசூர், திருவாங்கூர், விஜயநகர அரண்மனைகளில் கச்சேரி நிகழ்த்திய இவர், 1916ம் ஆண்டு பரோடாவில் நடைபெற்ற இந்திய வீணை இசைக்கச்சேரியில் பங்குகொண்டார். அங்கு கச்சேரி நிகழ்த்திய ஒரே பெண்மணி வீணை தனம்மாள் மாத்திரமே.
வீணையை 
பிரபலப்படுத்திய 
வீணை தனம்மாள்

வீணை தனம் மணம் செய்ததாக தகவல் இல்லை. ஆனால் அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். ராஜலட்சுமி, லட்சுமி ரத்தினம், ஜெயம்மாள், காமாட்சியம்மாள் ஆகிய நால்வருமே இசைக்கலைஞர்களாகவே வாழ்ந்தார்கள். 'தனம் பெண்கள்' என்ற மகுடத்தில் தமிழகமெங்கும் இசைக்கச்சேரி நடத்தினார்கள். பல கொலம்பிய இசைத்தட்டுகளையும் வெளியிட்டார்கள்.

வாழ்நாள் முழுவதும் இசை வடிவமாகவே வாழ்ந்த தனம்மாளையே இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி தனது மானசிகக் குருவாகக் குறிப்பிடுகிறார். கே. பி. சுந்தராம்பாள், அரியக்குடி இராமனுஜர், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் மற்றும் பல இசை மேதைகள் வீணை தனம்மாளிடம் கீர்த்தனை, ஜாவளி, பதங்களைக் கற்றுக் கொண்டனர்.

வீணையிலும் வாய்ப்பாட்டிலும் தன்னிகரில்லா இசைப் பேரரசியாக விளங்கிய தனம்மாளை பணக்கஷ்டம் இறுதிவரை துரத்தியே வந்தது. அவர் இசை அரசியின் தோற்றத்தைப் பெற்றிருக்கவில்லை. கருமையான தேகம். பரந்து விரிந்த முகம். புகையிலை பழக்கத்தால் பழுப்பேறிய பற்கள் எனக் காணப்பட்ட அவர், சாதாரண புடவையே அணிந்து வந்தார். வெற்றிலைப் புகையிலைப் பெட்டியும் எச்சில் துப்பும் குவளையும் எப்போதும் அவருடன் இருக்கும். கச்சேரியிலும் வாய் நிறைய புகையிலை இருக்கும்.

1918 இல் அவரது கண் பார்வை குறைந்தது. வறுமையின் உச்சக்கட்டமாக அவரது வீடு ஏலம் போனது. மகள்மார் அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு பிரிந்து சென்றனர். தனம்மாள் தனது இறுதிக் காலத்தை தன் பேத்தி பாலசரஸ்வதியின் வீட்டில் கழித்தார். 1938 அக்டோபர் 15ம் திகதி வீணை தனம்மாள் மரணமானார்.

No comments:

Post a Comment