Wednesday, January 20, 2016

தேவதாசி வரலாறு -15

சதிராட்டத்தை பரதமாக மாற்றிய ருக்மணி அருண்டேல்


அருள் சத்தியநாதன்

ன்று வீணை என்ற இசைக்கருவி, தெய்வீகத்தன்மை கொண்ட வாத்தியமாகவும் அதை இசைப்போர் கௌரவத்துக்குரியவராகவும் மதிக்கப்படுவதற்கு வீணை தனம்மாளே காரணம் என்பது பலரும் அறியாதது.
வீணை தமிழரின் பாரம்பரிய இசை வடிவம். பழைமையான தமிழ் இசைக்கருவியான யாழின் இன்னொரு பரிமாணமே வீணை. சாதாரணமாக, 10ம் நூற்றாண்டின் பின்னரேயே வீணை இன்றைய வடிவத்தைப் பெற்றது. அதன் பின்னரே கலைகளின் வடிவமாகக் கருதப்பட்ட வீணை, சரஸ்வதியின் கைகளில் தவழ்வதாக ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பிடித்தது. வீணைக்கு இப்படி ஒரு மரியாதை இருந்தாலும் அக்காலத்தில் வீணையை இசைப்பவர்கள் தேவதாசிகளாகவே இருந்தனர். அவர்களிடமே கலைகள் வசப்பட்டிருந்தன. பின்னர் பரதமாக மாற்றம் பெற்ற சதிராட்டம் தேவதாசிகளின் நடனம். வாய்ப்பாட்டும் அவர்களினாலேயே பேணப்பட்டு வந்தது. கோவில்களில் ஆடும்போது அது சின்ன மேளம் எனவும் திருமண வைபவங்களில் ஆடும்போது சதிராட்டம் எனவும் இந்நடனம் அழைக்கப்பட்டது. தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் வலுவடையத் தொடங்கிய போது தேவதாசிகளின் சதிராட்டம் பரதநாட்டியமாக உருப்பெறத் தொடங்கியது.

Saturday, January 9, 2016

இருள் உலகக் கதைகள்

வெறி நாயாக பாய்ந்து வந்த பயங்கர ஆவி!

ஆதிகேசன் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

குலை நடுங்கச் செய்யும் கொலைகள் நடந்தேறிய கஹவத்தை பிரதேசத்தில், இயல்பு வாழ்க்கை மீண்டும் வழமைக்குத் திரும்பியிருந்தது. ஓரளவுக்கு பயம் நீங்கிய பிரதேசவாசிகள் அன்றும் தமது கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். மாலை மங்கி வரும் அந்த ஆறு மணி வேளையிலும், பரபரப்பாக இருந்த சாராயக் கடைக்குள் புகுந்து ஒரு கால் போத்தலை வாங்கி நின்றபடியே தொண்டையை நனைத்துக்கொண்ட அத்துலவிற்கு, வயிற்றுக்குள் சாராயம் இறங்கியவுடன்தான் புதுத்தெம்பு வந்தது. பைக்கின் ஸ்டிக்கை வேகமாக உதைத்து ஸ்டாட் செய்தவன், ஆக்ஸிலேட்டரை கொஞ்சம் அதிகமாகவே திருகினான். புகை கக்கியபடி உறுமிய அந்த பைக், சில நிமிடங்களில் வேகமெடுத்தது. கஹவத்தை நகரை அண்டியிருந்த அந்த சிங்கள கிராமத்து வளைவுகளில் பைக் தாறுமாறாக ஓடியது. மரங்கள் சூழ்ந்த அந்த முச்சந்தி வழமைக்கு மாறாக, கும்மிருட்டு சூழ்ந்து ஒரு பயங்கரமான சூழலை உருவாக்கியிருந்தது.

படுவேகமாக ஓடிய மோட்டார் பைக் ஓரிடத்தில் சடாரென்று நிற்க, அத்துல எதிரே நின்ற உருவத்தைப் பார்த்து வெடவெடத்துப் போனான். நாக்கை தொங்கப் போட்டபடி, இருளிலும் ஒளி வீசும் கண்களோடு, வெறித்துப் பார்த்தபடி ஒரு அல்சேஷன் நாய் நின்று கொண்டிருந்தது. அதன் கோரப் பார்வையில் தன்னைக் கடித்துக் குதறப் போகும் வெறித்தனம் தெரிய, உடல் நடுங்கிப் போன அத்துல, பைக்கை யூடேன் போட்டு திருப்பினான். அடுத்த நிமிசம் அந்த நாயும் அத்துல மீது பாய, பைக்கை கண் இமைக்கும் நேரத்தில் மின்னெலென ஓடவிட்டான். தொடர்ந்தும் நாய் ஒடிவரும் சத்தம் கேட்க பைக்கின் வேகத்தை அதிகரித்தான். சில நிமிடங்களில் நாய் ஓடிவரும் சத்தம் கேட்காததால், நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, ஓடிக்கொண்டிருந்த பைக்கிலிருந்தவன் படாரென்று பின்னால் திரும்பிப்பார்த்தான். அப்போது அந்த கொலை வெறி நாய், அவனை எட்டிப்பிடிக்க சில அடி தூரத்தில் ஓடி வருவதைக் கண்டவன் வீல் என்று காடே அதிரும்படி கட்டுப்பாட்டை இழந்து பைக்கிலிருந்து கீழே விழுந்து புரண்டான். பிறகு மூர்ச்சையாகிப் போனவனை அந்த வழியாக வந்தவர்கள் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள்.
ஆதிகேஷன் பூசாரி
வீட்டில் அத்துல வெறி பிடித்த நாய் செய்யும் சேட்டைகளைச் செய்ய அவனை சமாளிக்க முடியாத குடும்பத்தவர்கள் அவனைக் கட்டிலோடு கட்டி வைத்தார்கள். பிறகு கஹவத்தை பகுதியில் பிரபல பூசாரியாக விளங்கும் ஆதிகேசனை அணுகி அத்துலவின் நிலைமையைச் சொல்லி பரிகாரம் கேட்டனர். அத்துலவின் உடம்பில் பொல்லாத ஒரு தீயசக்தி குடியிருப்பதை பூசாரி ஆதி தனது திருஷ்டியில் புரிந்து கொண்டார். பிறகு அத்துலவின் கையில் கட்டுவதற்காக ஒரு மாந்திரீக நூலையும் கொடுத்து, அவனுக்கு கட்டும்படியும் 'தற்காலிகமாக இந்த கயிறு பாதுகாப்புக் கொடுக்கும்' என்றும் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். கூடவே, தீய சக்தியை விரட்டி அடிக்க ஒரு நாள் பார்த்துக் கொடுத்தார்.

பூசாரி குறிப்பிட்ட நாளில் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற, குறித்த நேரத்தில் பூசாரி தனது சகாக்களுடன் அத்துலவின் வீட்டு வாசலில் வந்து இறங்கினார். அப்போது தெருமுனையில் படுத்துக்கிடந்த ஒரு நாய், உடம்பை சடசடவென்று சிலிர்த்து உதறிவிட்டுச் செல்ல, 'சகுணம் சரியில்ல' என்று மனதுக்குள் எழுந்த சஞ்சலத்தோடு வீட்டுக்குள் ஆதி காலடி எடுத்து வைத்தார். அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெரிய நாய் கொலை வெறியோடு ஓடி வருவதைக் கண்ட பூசாரி திடுக்குற்றார். பூசாரியைக் குதறித்தள்ள பாய்ந்த நாய், அடுத்த நொடியே பூசாரியைக் கடந்து ஓடியது. பூசாரியின் வலது கையில் நாய் உரசி விட்டுச் சென்றதால், பூசாரி கொஞ்சம் நிலை தடுமாறி நின்றார்.'முன் எச்சரிக்கையாக மந்திரக் கட்டுப் போட்டிருந்ததால் தப்பித்தேன்' என்று பெருமூச்சுவிட்ட ஆதிகேசன், அந்த துஷ்ட ஆவியை விரட்டும் வேலையில் இறங்கினார். ஆனால் நாய் பாய்ந்து வந்த விடயம் பூசாரியைத் தவிர அங்கே கூடியிருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

கட்டிலில் கட்டப்பட்டிருந்த அத்துலவின் கட்டுகள் அவிழ்க்கப்பட, அவன் பேயாட்டம் போட ஆரம்பித்தான். ஆவேசம் கொண்ட நாயைப்போல உறுமுவதும், பற்களை நெறிப்பதும், கைகளால் பிராண்டுவதுமாக அத்துல நடந்து கொண்டபோது, அதைப் பார்த்தவர்கள் அரண்டு போனார்கள். மிருகமாகிப்போன அத்துல மீண்டும் மனிதனாகக் கிடைப்பது சாத்தியமா? என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னது பூசாரிக்கும் கேட்டது.

'இது இறந்துபோன ஒரு பேராசைக்கார நாயின் தீய செயல்தான்' என்பதை பூசாரி உறுதி செய்தார். பிறகு பரிகாரங்களை செய்துவிட்டு, அடங்காமல் ஆடும் அத்துலவைப் பிடித்துக் கட்டி வைக்குமாறு பணித்தார். வேலையை முடிக்க, உதவியாளர்கள் மூவரோடு ஆதிகேசன் சுடுகாட்டை நோக்கி விரைவாக நடந்தார். பூசாரி ஆதி செல்லும் வழியை அந்த வெறி பிடித்த நாய் மறிக்க, தீப்பந்தத்தைக் காட்டிய பூசாரி முன்னேறி நடந்தார். பூசாரி தன்னை ஒழித்துக்கட்டப் போகிறார் என்பதை புரிந்துகொண்ட நாய், சுடுகாட்டில் உள்ள ஒரு புதைகுழியின் மீதேறி நின்று பூசாரியை வெறித்துப்பார்த்தது. "ஏய் எச்சில் நாயே! உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன்!" என்று அந்த அர்த்த ராத்திரியில் பூசாரி போட்ட பேய்க்கூச்சல், அந்த மயானத்தின் நிசப்த சூழலை சிதறடித்தது.