Monday, December 28, 2015

தமிழகத்தின் பன்முகப் படைப்பாளரான தமிழ்த்தேனி வானவில்லுக்கு அளித்த பேட்டி

உரையாடியவர்: மணி ஸ்ரீகாந்தன்


'அனைத்து உயிருக்கும் அவனே ஆதி அவனை விடவா உயர்ந்தது ஜாதி? மனிதமும், உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை சொற்கள் உணர்த்தாது' என்பதை தாரக மந்திரமா கொண்டிருப்பவர் எழுத்தாளர் தமிழ்த்தேனீ. சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வரும் இவர் ஒரு பன்முகக் கலைஞர். ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடை நாடகங்கள், சினிமா, சின்னத்திரை என கலை உலகில் வளய வருபவர். குறிப்பாக, பெரிய பட்ஜட் மெகா படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டுபவர். ரஜினியின் சிவாஜி படத்தில் நடிகை ஸ்ரேயா ஒரு இசைக்கருவி கடையில் வயலின் வாங்குவாரே அந்தக் கடையின் மெனேஜராக வரும் பெரியவர்தான் இவர். இப்போது உங்களுக்கு தமிழ்த் தேனீயை ஞாபகம் வருகிறதா? திருமுல்லைவாயலில் உள்ள அவரின் வீடு வரை சென்று போட்டோக்களை மட்டும் க்ளிக் செய்துவிட்டு வந்து, அவரை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு பேசினோம். அதுவே உங்களுக்காக....


நீங்கள் ஒரு இந்துவா?

ஆமாம் பிறப்பால் இந்து, வளர்ப்பால், அனுபவத்தால் மனமுதிர்ச்சியால் ஒரு மனிதன்.

மனிதனை சாதி அடிப்படையில் பிரிக்கும் ஒரே மதம் என்ற வகையில் உங்களுக்கு ஆசூசை இல்லையா?
மனிதர்களை ஜாதி அடிப்படையில்  பிரிக்காத  மதம் ஒன்று உலகில் உண்டா? அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்போது இந்து மதத்தில் இருப்பதற்கு அசூயைப்படலாம். ஆகவே எனக்கு இந்து மதத்தில் இருப்பதற்கு  பெருமையே. எந்த  ஒரு மதம் மனிதத்தை வலியுறுத்துகிறதோ  அதுதான் என் மதம்.

சாதியற்ற மதம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அந்த மதத்தை ஆதரிக்கும் முதல் மனிதனாக நான் இருப்பேன்.

பெரியார் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பெரியாரை நான் மதிக்கிறேன். மனிதர்களுக்கு சுய மரியாதை எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நடக்கும் நடைபாதைகள் சாக்கடையாய் இருக்க, உண்ணும் உணவுப் பொருட்கள் கலப்படமாய் இருக்க, உடுத்தும் உடை கூட உச்சாணிக் கொம்பில் இருக்க சொந்தமாய் ஒரு வீடும் இல்லாமல் நடைபாதையிலே மக்கள் படுத்திருப்பது போன்ற நிலமைகளைக் காணும் போது பெரியார் சொல்லிக் கொடுத்த சுய மரியாதையை மக்களும் உணரவில்லை என்று கருதுகிறேன்.
மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லும் எந்த அரசியல்வாதியும் பெரியார் சொன்ன சுய மரியாதையைக் கற்கவில்லை. மக்களுக்கு அவர்களின் சுய மரியாதை, தன்மானம், நியாயமான உரிமைகள் ஆகியவற்றை உணர்த்த மீண்டும் ஒரு பெரியார் உருவாக வேண்டும்  என்று நினைக்கிறேன்
சிவாஜியில் தேனீபா. ஜ. க. அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்து எழுச்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்து மதம் என்பதைவிட இந்து மனம் என்பதை ஆதரிப்பவன் நான். கட்சிகளும் அரசியல்வாதிகளும்  எப்போது மனித எழுச்சி பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அந்த எழுச்சிக்காக காத்திருக்கிறேன்.

மாட்டிறைச்சி உண்பது அல்லது விற்பனை செய்யப்பட வேண்டுமா? இல்லையேல் எல்லாவகை இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட வேண்டுமா?
2008 ஆண்டு கணக்குப்படி அமெரிக்காவில் சைவ உணவுக்காரர்கள் - 7.3%, இங்கிலாந்தில் 2006 ஆம் ஆண்டு கணக்குப்படி சைவ உணவுக்காரர்கள் 6%, ஆஸ்திரேலியாவில் 3%, பெல்ஜியத்தில் 2%, க்ரோடியாவில் 3.7 %, டென்மார்க்கில்; 1.5%, ப்ரான்சில் 2 %, நெதர்லாந்தில்  4.3 %, நோர்வேயில் 2%, போலண்ட் நாட்டில் 1%, போர்சுகல்லில் 0.3% ஆக  பன்னிரண்டு நாடுகளில் மொத்தம் சைவ உணவு 34.6, அசைவ உணவு 65.4. ஆகவே உலகில்   மீதமுள்ள நாடுகளில் இருப்போரையும் கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட   60 சதிவிகிதத்தினர் அசைவ உணவு உண்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது இறைச்சியை எப்படி தடை செய்வது? மனிதர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை உண்டல்லவா? ஆகவே இறைச்சியை தடை செய்யக் கூடாது என்பதே என் கருத்து.

உங்கள் இயற்பெயர் என்ன?
என் இயற்பெயர்  கிருஷ்ணமாச்சாரி . ஆர்

அடிப்படையில் நீங்கள் யார்?
உலகில் உள்ள கோடானுகோடி ஜீவராசிகளில் நானும் ஒரு ஜீவராசி. ஒரு கவிஞரின் மகன். அடிப்படையில் நான் மனிதன் .

எத்தனை நூல்கள் எழுதியிருக்கிறீர்கள்? 
இது வரையில் ஐந்து புத்தகங்கள்.

1.வெற்றிச் சக்கரம் (52 சிறு கதைகள்)  
2.தங்கத்தாமரை(32 சிறுகதைகள் )
3. மனம் ஒரு மந்திரம்
4. வட திருமுல்லைவாயில் கொடியிடைநாயகி ஆலயம் எனும் நூலையும் 
5. குறும்புக் கவிதை எனும் நூலையும் இணையப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.
 
இன்னும் மூன்று புத்தகங்களை உருவாக்கி வருகிறேன்.

உங்களுக்கு பிடித்த துறை எது?  எழுத்தா, சினிமாவா அல்லது சின்னத்திரையா?
என் மனதுக்குப் பிடித்த துறை என்பதைவிட  எனக்கு பிடித்தது எழுத்து என்று சொல்வேன் ஏனென்றால் துறை என்று எடுத்துக் கொண்டால் எந்தத்  துறையும் நேர்மையாக நாணயமாக திறமைகளை மதிப்பதாக  இல்லை.

திரைப் படங்களிலும், சின்னத் திரையிலும் நன்றாக நடிக்கக் கூடிய கதையம்சம் நிறைந்ததாக இருந்தால் நடிக்க விருப்பம் உண்டு. ஏனென்றால் நடிப்பையும் நான் ஒரு கலையாகவே மதிக்கிறேன்.

பல படங்களில் நடித்தும் ஒரு பெயர் சொல்லும்படியான இடத்தை இன்னும் பிடிக்க முடியாமல் போனதற்கு அதிர்ஷ்டமில்லை  என்பது மட்டும்தான் காரணமா?
எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை. என் உழைப்பும் முயற்சியும் போதாமை காரணமாக இருக்கலாம் அல்லது என்னுடைய பின்புலத்தில் வலுவான, வசதியான  தாங்கிகள் இல்லாமை காரணமாக இருக்கலாம்.

அல்லது முழு ஈடுபாடு இல்லையா?
முழு ஈடுபாடு எனக்கு இருந்தாலும் வாழ்க்கையின் சூழலால் குடும்பக் கடமைகளால்  முழுமையாக ஈடுபட நேரமில்லாமல் போயிருக்கலாம்.

இயல்பான நடிப்பு வரமாட்டேன் என்கிறதா?
நான் எப்போதுமே ஒளிபடக் கருவிக்கு முன்னால் மட்டுமே நடிப்பவன். வாழ்க்கையில் நடிக்காதவன். அதனால் இயல்பாக நடிப்பவன்தான்

இன்று இளங் கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஒரு வழியாக கதை அம்சம் கொண்ட, பரிசோதனை முயற்சிப் படங்களை வெற்றிப்படங்களாகக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது மாஸ் படத் தயாரிப்பு, மோகத்தைக் குறைக்கும் என்று நினைக்கிறீர்களா?
திரைத் துறையில் இது ஒரு ஆரோக்கியமான திருப்பம். ஆனால் நிச்சயமாக மாஸ் படத் தயாரிப்பு, மோகத்தைக் குறைக்காது பெரும்பாலான மக்கள் மாஸ் படத்தையே விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை. கலையம்சம் நிறைந்த பல திரைப்படங்கள் ஓடாமையே இதற்கு சான்று.

ரஜனி அல்லது 'சுப்பர் ஸ்டார்' மோகம்; என்றைக்கு தமிழகத்தில் தணிகிறதோ அன்றைக்குத்தான் 'அம்மா மோகம்' போன்ற அரசியல் மோகமும் தணியும் என்கிறேன். இந்த முடிச்சு சரியான முடிச்சு என்று கருதுகிறீர்களா?
ஆறு படத்தில் 
நிச்சயமாக இல்லை இரண்டும் தனித் தனி மோகம், தனித்தனி முடிச்சுகள். ஆனால் இரண்டு மோகமும்  தணியாது. எப்போது இந்த இரண்டு மோகமும்  தணிந்து மக்கள் சுயமாக சிந்திக்கிறார்களோ, எப்போது நம் வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் கூட இன்னும் செய்து தரப்படவில்லை என்பதை உணர்கிறார்களோ, சுதந்திரம் வாங்கி 68 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நாம் மாக்களாகவே நடத்தப்படுகிறோம், மக்களாக நடத்தப்படுவதில்லை என்பதை உணர்கிறார்களோ அப்போதுதான் நடிகர்கள் மீதும் அரசியல்வாதிகளின் மீதும் ஏற்படும்  தேவையில்லாத  கவர்ச்சியை மறப்பார்கள்.

தமிழனுக்கும் மதுவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒளவையாரும் கள்ளு குடித்ததாக சொல்வார்கள். கள்ளு மதுவா உணவா?
அப்படியானால் ஆங்கிலேயனுக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லையென்கிறீர்களா? அல்லது  வேறு எந்த நாட்டுக்காரர்களுக்கும் மதுவோடு தொடர்பு இல்லையென்கிறீர்களா?

தென்னை மரத்திலிருந்தோ பனை மரத்திலிருந்தோ இறக்கி உடனே குடித்தால் அதற்குப் பெயர் பதநீர். அதையே புளிக்கவைத்து அல்லது வேறு போதை தரும் பொருட்களைக் கலந்து அளிக்கும்போது கள் என்று ஆகிறது. ஆனால்  கள் உணவல்ல, போதை பானம் மட்டுமே. ஒளவையார் பதநீராகக் குடித்திருக்க நியாயம் உண்டு. கள் ஆனபின் குடிக்காமலும் இருந்திருக்கலாம்.

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமா?
பூரண மதுவிலக்கு  என்பது சாத்தியமே இல்லை.  மக்களுக்கு  நல்லவை பழக அதிக காலம் வேண்டும், ஆனால் தீயவை பழக குறுகிய காலமே போதும். அதுமட்டுமல்ல,  தீயவைகளைப் பழகிவிட்டால் அவற்றை விடுவது கடினம். அதனால் கள்ள மதுவை நாடி இன்னமும் கெட்டுத்தான் போவார்கள்.

இயன்ற வரையில் மது போன்ற போதை பானங்கள் மக்களை  அடிமையாக்குகிறது.  அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லதுதான். ஆனால் தவிர்க்க முடியாத அளவுக்கு ஏற்கெனவே மக்களைப் பழக்கிவிட்டார்கள் என்பதே உண்மை.

பாரதியார் பற்றிய ஆவணப்படம் தயாரித்தவர், தான் சேகரித்த சில விஷயங்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன் என்கிறார். உதாரணம் அவரது நாட்டு சாராய, கஞ்சா பழக்கம். கண்ணதாசனின் குடிப்பழக்கம் அனைவரும் அறிந்தது. நாம் ஏன் புகழ் பெற்ற மனிதர்களின் 'கெட்ட' பழக்கங்களை வெள்ளையடித்து மறைக்கிறோம்? பாரதியாரை திறமையான கவிஞன், அறிஞன் என்று பார்ப்பதைப் போல அவரை மனிதனாகக் குறைகள் உள்ள மனிதனாகப் பார்ப்பதில் தமிழனுக்கு என்ன பிரச்சினை?
ஆவணப் படம் எடுப்பவர்கள் 100 சதவிகிதம் உண்மையை எடுப்பதில்லை, மாறாக, எப்படி எடுத்தால் மக்களுக்கு பிடிக்குமோ அப்படி எடுக்கிறார்கள். ஆகவே கதாநாயகன் என்று  மகாகவி பாரதியாரை வைத்துக் கொண்டாலும், கண்ணதாசனை வைத்துக் கொண்டாலும்  கதாநாயகனாக மக்கள் மனதிலே ஒரு மாயப் பிம்பம் ஏற்படுத்த குறைகளைக் களைந்துவிட்டு  நிறைகளை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். இந்தப் பழக்கம் தமிழனுக்கு மட்டுமல்ல, ஜாதி மத இன மொழி நாடு பேதமில்லாமல் எல்லோருமே கடைப்பிடிக்கும் பழக்கம்தான்.


விபசாரம் சட்டபூர்வமாக்கப்பட வேண்டுமா?
விபசாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த நாடுகளில் தேவையில்லாத சட்ட நடவடிக்கைகள் குறைந்து போகும், அது மட்டுமல்ல விபசாரத்தை சட்ட பூர்வமாக ஆக்கும் போதே அந்த விபசாரத்  தொழிலில் ஈடுபட்டிருப்போரின் ஆரோக்கியத்தையும்  அவர்களை உபயோகிக்கும்  நுகர்வோரின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு  மருத்துவ ரீதியான உதவிகளைச் செய்து அதையும் சேர்த்து சட்ட பூர்வமாக அறிவிக்கலாம் தவறில்லை. அதனால் பாலினக் குற்றங்கள் குறைய நிச்சயம் வாய்ப்புண்டு.

உங்கள் எழுத்தில் அதி சிறந்தது என்று நீங்கள் கருதுவது எதை?
பெற்றவருக்கு எல்லாக் குழந்தைகளும் சமமே, அது போல படைப்பாளிக்கு எல்லாப் படைப்புகளுமே சிறந்தவைதான், அதில் பேதமில்லை. என் எழுத்தில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது, படிப்பவர்கள் மனமாரப் பாராட்டுவதை மட்டும் செய்துவிட்டு மறந்து போய்விடாமல்  நான் எழுதுவதில் ஏதேனும் நியாயங்கள் இருந்தால் அதைக் கடைப்பிடிக்கிறேன்  என்று  யாரேனும் ஒருவர் சொல்வாராயின் அதுதான் என்  படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பாக நான் கருதுவேன்.

மனைவி பிள்ளைகள் பற்றி?
மனைவி பிள்ளைகள் பற்றி நான் பொதுவிலே பகிர்வதில்லை, எல்லோருக்கும் தனி உரிமை உண்டு. அதில் நான் தலையிடுவதில்லை, என் குடும்பம் பற்றி எனக்கு நல்ல நிறைவு உண்டு.

உங்கள் குறிக்கோள்களை எட்டி விட்டீர்களா?
என் குறிக்கோள் மக்களின் நியாயமான விழிப்புணர்ச்சியே. அதை எட்ட நான் என்னால் இயன்ற அளவு செயல்படுகிறேன் ஆனால் இன்னும்  எட்டவில்லை.

களைப்பாக இருக்கிறதா?
இப்போதுதான் புத்துணர்வோடு இருப்பதாக நினைக்கிறேன். என் உடலுக்கு  களைப்பு உண்டு  மனதுக்கு எப்போதும் களைப்பு என்பதே கிடையாது.

No comments:

Post a Comment