Wednesday, December 23, 2015

மாற்றுத்திறனாளி சத்திய சீராளனுடன் ஒரு உரையாடல்


உரையாடியவர்: மணி ஸ்ரீகாந்தன்.

'மாற்றுத்திறனாளி என்பது நல்ல பெயர். ஆனால் இங்கே பலர் வழக்கத்தில் 'நொண்டியன், குருடன், செவிடன்' என்று அழைக்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது.'

'மதம் மாறுவதால் மாத்திரம் நமக்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கப்போவதில்லை. மதம் மாறினால்தான் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றால் அவர் கடவுளாக இருக்க முடியாது. கட்சித் தலைவராகத்தான் இருப்பார்'

'நானே நான்கு விதமான வர்ணங்களை படைத்தேன், இனி நானே நினைத்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது' என்று கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியிருக்கிறார். செய்யும் தொழில்களின் அடிப்படையில் சாதிகளை பிரித்து, அதை குலங்களாக்கியதாக மனுதர்மம் பறைசாற்றுகிறது. வர்ண சிரமத்தை அது போற்றுகிறது. அதன் பிறகு வந்த நவீன காலத்திலும் தமிழகத்தை ஆட்சி செய்த ராஜாஜி, குலக்கல்வித் திட்டதை கட்டாயமாக்கிய போது பகுத்தறிவுவாதிகள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். அது ராஜாஜியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதோடு, குலக்கல்வித் திட்டத்தையும் கிடப்பில் போட்டது.

ஆனால் இப்போதும் சில குறிப்பிட்ட தொழில்கள், சாதி வாரியாகத்தான் இயங்கி வருகின்றன. ஆனால் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பதையும் இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். காலமும் பொருளாதாரத் தேவைகளும் இந்த சாதிக்கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, எந்த தொழிலையும் யாரும் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது.

"இந்த கம்பியூட்டர் காலத்தில் யாருங்க சாதி தொழில்களை செய்கிறது? இப்போ நான் முடி திருத்தும் வேலை செய்கிறேன். எனக்கும் இந்தத் தொழிலுக்கும் சம்பந்தமே கிடையாதுங்க. ஆரம்பத்தில் நான் இந்தத் தொழிலை செய்யத் தொடங்கிய போது, என் சொந்தக்காரர்கள் எல்லோரும் நிறைய விமர்சனம் செய்தாங்க.'நமக்கு இது ஒத்துவராது, நம்ம சாதித் தொழில் இது இல்லை'னு சொன்னாங்க. ஆனால் நான் கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்துவிட்டேன். இன்றைக்கு ஒரு பதினைந்து வருசமா இந்தத் தொழிலை செய்து வருகிறேன். எனக்கு சோறு போடுற சாமி இந்த தொழில் தாங்க" என்று கெத்தாக பேசுகிறார். இங்கிரிய றைகமையில் 'சத்யா சலூன்' நடாத்திவரும் சத்தியசீராளன். நாற்பத்தாறு வயதாகும் இவர் ஒரு மாற்றுத்திறனாளி. கால்கள் இரண்டும் செயல் இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தே முடித்திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
"தமிழ்நாட்டில் எங்களை மாதிரியான ஆட்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கிறாங்க. அதை அண்மையில் பேப்பரில் படித்து தெரிஞ்சுக்கிட்டேன். நம்ம நாட்டு ஊடகங்களும், ஊணமுற்றவர் என்ற வார்த்தைக்கு பதிலாக மாற்றுத்திறனாளி என்பதை பயன்படுத்தலாம். என் போன்றவர்கள் எல்லோரும் சந்தோசம் அடைவாங்க. உங்களை விட எங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் திறமை இருக்கிறது என்பதின் வெளிப்பாடுதான் இந்த மாற்றுத்திறனாளி. ஆனால் நம்ம ஊரில் 'நொண்டியன்' என்று சொல்வாங்க, அதுதாங்க மனச ரொம்ப காயப்படுத்துது" என்று சொல்லும்போது, சீராளனின் கண்களின் ஓரத்தில் சில கண்ணீர்த்துளிகள்...

இந்தத் தொழில் செய்வது உங்களை மகிழ்ச்சிப்படுத்துதா? என்று கேட்டோம். "ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க" என்று சீராளன் சொல்லி நிறுத்த அங்கே வந்த அவரின் மனைவி ஜூலி 'ஆனாப்பட்ட ஒபாமா, ஒசாமான்னு யாராக இருந்தாலும் முடிவெட்டனும்னு வந்துட்டா எங்க வீட்டுக்காரருகிட்ட தலை குனிஞ்சு தானே நிற்கனும், அதனால எனக்கும் இந்த தொழிலை இவரு செய்கிறது சந்தோசம்தான்' என்றார் மகிழ்ச்சியோடு.... சத்யா முடி வெட்ட நூறும், சேவிங் பண்ண அறுபதும் வாங்குகிறாராம்.

"டவுனில முடிவெட்டி சேவிங் பண்ண 250 ரூபா வாங்குகிறாங்க. ஆனா நமக்கு எஸ்டேட்டுல அவ்வளவு வாங்க முடியாது. குறைஞ்ச சம்பளம் வாங்குறவங்ககிட்டே அதிகமான விலை வைக்கக் கூடாது. அதோட ரொம்ப வயசானவங்க வந்தா அவங்களுக்கு இலவசமா முடிவெட்டி விடுறேன். அவங்கக்கிட்டே பணம் கேட்க மனசு வரலீங்க!, அதே அவுங்க டவுனுக்கு போனா கட்டாயம் பணம் கொடுக்கணும். நம்மகிட்டே மனசாட்சின்னு ஒண்ணு இருக்குங்களேன்னு" சொல்லும் சீராளன், "சின்னப்புள்ளைங்களுக்கு மொட்டை போடுறதுக்கு மட்டும் ஆயிரம் ரூபா வாங்குறேன். ஏனென்றால் அது ரொம்ப கவனமா வெட்டணும். அதுக்குப் பிறகு சாமிக்கு ஒரு அர்ச்சனை கொடுக்கனும். அதனால்தான் அதிகமாகவே வாங்குகிறேன். செத்த வீட்டுக்கு மொட்டை போடப் போனாலும் அதே ரேட்டுதான். இந்தக் காலத்துல நாம விலையை குறைச்சாலும் மதிக்க மாட்டாங்க, 'அவரா! ஒரு நூறு ரூபா கொடுத்தா போதும்'னு  ஏளனமா சொல்லுவாங்க, அந்தக் காரணத்திற்காகவும் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன், என்னங்க பண்ணுறது!" என்று எம்மைப் பார்த்து கேட்கிறார் சீராளன்.
சத்யாவின் சலூனில் லக்ஷ்மியோடு, யேசுவையும் போட்டோக்களில் வைத்து, வழிபடுகிறார். இதுபற்றி வினவிய போது,

"அட நம்மளுக்கு எல்லாம் ஒரே மதம் தாங்க. என் மனைவி கிறிஸ்தவர் இப்போ இந்துவாக இருக்கிறார். நானும் கொஞ்ச காலமா கிறிஸ்தவமாக இருந்து விட்டு இப்போ மீண்டும் இந்துவாக இருக்கிறேன். மதம் மாறியதால் நான் ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக புரிஞ்சுகிட்டேங்க. மதம் மாறுவதால் நமக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கப்போவதில்லை. மதம் மாறினால்தான் கடவுள் ஆசிர்வதிப்பார் என்றால், அவர் கடவுளாக இருக்க முடியாது. கட்சித் தலைவராகத்தான் இருப்பார். யாரோ சொல்லி கேட்டேனுங்க, அது மறுக்க முடியாத உண்மைங்க" என்ற சீராளனின் முகத்தில் பூரிப்பு பளீச்சிடுகிறது.

சத்யா சலூனில் புதுவகையான முடிவெட்டும் கருவிகள் வைத்திருக்கிறார். "இதெல்லாம் எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்பளிப்பா கொடுக்கிறது. அவைகளையே நான் பயன்படுத்துகிறேன். இப்போ பாருங்க பெரும்பாலான இடங்களில் மூக்குத் துவாரத்தில் வளரும் மயிர்களை கத்திரியால் வெட்டுவார்கள். ஆனால் அது ரொம்ப ஆபத்தான விசயம். ஏன்னா மூக்கில் கத்திரியை நுழைக்கும்போது சிலருக்கு தும்மல் வந்துவிடும் அந்த சந்தர்ப்பத்தில் கத்திரி மூக்கில் குத்தவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே ஸ்பெஷலாக சிறிய வகை வெட்டு மெஷின் ஒன்று வைத்திருக்கிறேன். இது மூக்கு முடியை அழகாக வெட்டி எடுக்கும்" என்றார். சத்யா ஸ்பெஷல் கட்டுக்கு மட்டும் நூற்றி ஐம்பது ரூபா அறவிடுகிறார். "சீசனுக்கு ஒரு கட்டுங்க, சிங்கம் கட்டு, அப்புறம். மாரி, மாஸ், அஞ்சான், புலி கட்டுன்னு நிறைய வந்திடுச்சி. போட்டோக்களை போனில டவுண்டோல் பண்ணி எடுத்து அது மாதிரியே பார்த்து வெட்டிடுவேன். அது நமக்கு கைவந்த கலை கண்ணு பார்த்தா கை செய்யுங்க!" என்ற சீராளன், அழங்காரப் பொருட்கள் செய்வதிலும் பெரிய திறமைசாலிதான்.

வெட்டப்படும் முடிகளை என்ன செய்கிறீர்கள்?

"திருப்பதியில் வெட்டப்படும் முடின்னா வருஷத்துல பத்துக் கோடிக்கு அதிகமாக ஏலத்துல போகுதாம். ஆனா இங்க இதை பத்து ரூபாய்க்கும் வாங்க யாரும் தயாராக இல்லை.
தென்னந்தோப்புக்கு பன்றி வராமல் இருக்கவும் காய்கறி தோட்டத்திற்குள் நத்தை வராமல் இருக்கவும் சிலர் என்னிடம் வந்து வாங்கிப் போகிறார்கள். தலையில் இருக்கும்போது எப்படியெல்லாமோ அழங்காரம் செய்யும் முடி, தலையில் இருந்து கீழே விழுந்துட்டா அதுக்கு மதிப்பே இல்லீங்களே... சீ! முடின்னு சொல்லுறோம்" என்று சீராளன் சொன்னப்போது கவியரசரின் ஒரு பாடல் ஞாபகத்திற்கு வந்தது.

'இருக்கும்போது தைலம் போட்டு அழகு செய்கிறார்.
அது இழந்து விட்டால்
திரும்பி பார்க்க வெறுப்பு கொள்கிறார்.
உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு விழுந்து விட்டால்
ஏறி மிதிக்குமே....
ஒரு சொந்தமும் இல்லே
ஒரு பந்தமும் இல்லே...
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் 

நாங்க மன்னரும் இல்ல மந்திரி இல்ல வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்....'
என்ற பாடலில் மூழ்கிய போது சத்யாவின் மனைவி ஜூலி "ஒரு விசயத்தை உங்க பேப்பரில கட்டாயம் போட்டுடுங்க... இவரு நடக்க முடியாத ஆளுண்ணு தெரிஞ்சும் நிறைய பேரு கடனுக்கு முடி வெட்டுறாங்க. வெட்டுனாலும் பரவாயில்லை அதோடு அந்த விசயத்தை மறந்துடுறாங்க. எங்க கஷ்டத்தையும் அவங்க புரிஞ்சுக்கணும். இவருக்கு வெளியில டவுனுக்கு போறதுக்கு ஒரு முச்சக்கர மோட்டார் வண்டி இருந்துச்சி. அது பழசாகி உடைந்து விட்டது. அதை திருத்தவோ, புதிதாக வாங்கவோ எங்ககிட்ட பணமில்லை அதையாவது அவங்க புரிஞ்சுக்கணும். ஜூலி முடித்த போது "நல்ல மனம் படைச்சவங்க எனக்கு உதவி பண்ணினால் காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேங்க" என்கிறார் சத்தியசீராளன் நெகிழ்ச்சியோடு.

No comments:

Post a Comment