Tuesday, December 15, 2015

சிறுகதைகள்தேவி பரமலிங்கம் 

செல்லாச்சிக் கிழவியை அந்த ஊரில் தெரியாதவர்கள் இல்லை. கிழவி இந்த உலகில் தனி  ஒரு சீவன். இன பந்துக்கள் ஊரில் இருந்தும் கணவன் விட்டுப் பிரிந்த காலந்தொட்டு ஆரையும் நாடிப் போகாமல் தன்னிச்சையாக உழைத்து வாழ்க்கை நடத்தி வருபவள்.

கிழவிக்கும் ஏரம்புக் கிழவனுக்கும் இளமையில் இருந்தே பிள்ளை குட்டிகளே இல்லை. இருவரும் இன்பமாக வாழ்ந்த காலத்தில் கிழவியையும் முந்திக் கொண்டு கிழவன் கண்களை மூடிவிட்டான். அதன்பின் செல்லாச்சி தனியாகவே அந்தக் குடிலில் வாழ்ந்து வருகிறாள்.

கிழவியோடு கூடிப் பிறந்த பெண் சகோதரங்கள் அந்த ஊரிலும் அயலூர்களிலும் வாழ்ந்து கொண்டிருக்க, கிழவி மாத்திரம் தனியாக வாழ்க்கை நடத்தி வருகிறதென்றால் அவளின் நெஞ்சழுத்தத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.

காலையில் கடகம் ஒன்றை எடுத்துக்கொண்டு குடிசையை விட்டு வெளிக்கிட்டால் பின்னேரத்துக்கு உள்ளாக இரண்டு, மூன்று கடகங்கள் எருக்கொணர்ந்து வளவில் குவிந்துவிடுவாள். தெரு ஓரங்களில் மாடுகள் போடும் எருவைக் கிள்ளுவதோடு வேப்பஞ்சருகு பூவரசம் குழைக் குப்பைகளை ஒன்றாய்க்கூட்டிக் குவித்து வைத்து எருக்கும்பம், குப்பைக்கும்பம் ஒவ்வொன்றாக விலைக்கு விற்றுவிடுவாள். இப்படி உழைத்துக்கொள்ளும் வருமானத்தாலே வேறொருவருடைய உதவியையும் நாடாமல் வாழ்ந்து வருகிறாள் அவள்.

"இந்த மழை விடமாட்டுதாக்கும்... இண்டைக்கெத்தின நாளாப் பெய்து கொண்டிருக்குது.... குப்பைக்கும்பந்தான் ஒரு போங்கு.... எருக்கும்பம் கரைஞ்செல்லே போவப்போவுது...."

நான்கு ஐந்து நாட்களாக விடாமல் மழை பெய்துகொண்டிருப்பதால் கிழவியால் உழைப்புப் பாட்டைப் பார்க்க இயலவில்லை. குடிசையில் குந்திக்கொண்டிருந்து வானத்தை வெளித்துப் பார்த்தவளாய் அந்த வார்த்தைகளைத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

புதிதாகக் கிளம்பிய காற்று இலேசான நடுக்கத்தைக் கொடுக்க, உடுத்திருந்த சேலையால் இழுத்து மூடிக்கொள்கிறாள். கிழிந்து பொருத்திய சேலைக்குள் எலும்பான கிழவியின் உடலும் மறைந்து கொள்கிறது.

"இவ்வுளோ நாளும்... நிண்ட தண்ணியெல்லாம் வத்தி... மடைபேந்து கிடந்த குளமும் நிறம்பீட்டுது... இந்த மழைச் சவம் நிக்கிதில்லை.... நேற்றொரு மட்டா நிண்ட தண்ணி ராத்திரிப் பெய்த மழையில நிறம்பியிருக்குது..."

அப்படி இருந்தபடி குளத்தைப் பார்த்துக் கொண்ட கிழவி, தனக்குள் சொல்லி இவ்வாறு வியந்து கொள்கிறாள். இரவு கிழவி நித்திரை கொள்ளவே இல்லை. அடிக்கு ஒருக்கால் அரிக்கன்லாம்பரைப் பிடித்துக்கொண்டு மூலைவிழ மடித்துத் தலைக்குப் போட்டுக்கொண்ட சாக்கோடு குப்பைக் கும்பத்தையும், எருக்கும்பத்தையும், குளத்தையும் மாறிமாறிப் பார்த்துத் திரிந்ததில் இரவு மறைந்து பொழுதும் புலர்ந்து விட்டது.

மணி ஒன்பதாகியும் மழை கொஞ்சமும் தணியாதது செல்லாச்சிக் கிழவிக்கு மழைமீது கோபத்தையே ஏற்படுத்திவிட்டிருந்தது. அந்தக் குளத்துக்கு அருகில் கிழவி கொட்டில் அமைத்துக்கொண்டு வாழத் தொடங்கிய இருபது வருட காலத்துள் எத்தனையோ மாரிகாலம் வந்து போய்விட்டன.

இந்தத் தடவை போன்று எந்த முறையும் விடாமல் நாலைந்து நாட்கள் இரவு பகலாக ஒரே மாதிரி மழை பெய்தது கிடையாது.

அந்தக் கிழவியின் குடிசையைப் போன்று வேறு சில குடிசைகளும் இருக்கின்றன. அவற்றுக்கும் கிழவிக்கும் எந்தவிதத் தொடர்புகளும் கிடையாது.

இத்தனை நேரமாக மழைவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த செல்லாச்சிக்கு அந்த நம்பிக்கை அற்றுவிடவே இரவு தலைக்குப் போட்டுத் திரிந்த சாக்கை எடுத்துப் போட்டுக் கொண்டவளாக சாப்பாட்டுக்கு ஏதும் வாங்கும் எண்ணத்துடன் கடைத் தெருவுக்கு வருகிறாள்.

இரவுபூராவும் பெய்த மழையிலும், வீசிய காற்றிலும் வீதி ஓரங்களில் மரங்கள் சரிந்தும், முறிந்தும் கிடந்ததைப் பார்த்துக்கொண்டே வந்த கிழவி, சந்தியில் இருந்த தேனீர்க்கடையுள் நுழைகிறாள்.

"தம்பீ... எனக்கொரு வெறும் தேத்தண்ணியும் ஒரு வணிசும் தாடி குஞ்சு..."

செல்லாச்சிக் கிழவியின் வழமையான குரலைக் காதுகளில் வாங்கிக் கொண்ட கடைக்காரர் கிழவி கேட்ட பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டே சொல்லிப் பார்த்தார்.

"எணேய் ஆச்சி... நீ இருக்கிற குளமெல்லே பெருக்கெடுத்திருக்கு.... உன்ர தங்கச்சி வீட்டேண்டாலும் போயிராமல் உங்க இருந்து சாகவே போற..."

"தம்பி என்னெப் பற்றி உனக்குத் தெரியுந்தானே... உங்க இருந்து செத்துப் போனாலும் போவன்... ஆனாக் கடைசிவரையும் ஒருதருட்டேயும் போக மாட்டேன்... ஓ..." கிழவியின் பிடிவாத குணத்தை அறிந்த கடைக்காரர் எதுவும் பேசவில்லை. வந்த வேலை முடிந்ததும் தனக்கே உரிய நடையில் கொட்டிலை நாடி வருகிறாள்.

தூர வரும்பொழுதே அயலில் இருக்கும் குடும்பங்கள் பொருள் பண்டங்களைத் தூக்கிக் கொண்டு அப்பால் உள்ள பள்ளிக்கூடக் கட்டடத்தில் அடைக்கலம் தேடுவதற்கான சாயல் அவள் கண்களிலும் படுகின்றன.

"ஆச்சி... குளம் பெருகி வீடெல்லாம் வந்துட்டுது... உன்ர வளவுக்கும் நுழைஞ்சிட்டுது. இண்டைக்கெண்டாலும் சொல்லுறதை கேட்டு அந்தப் பள்ளிக்கூடத்தில வந்திருந்திட்டு... வெள்ளம் வத்தினேப் பிறகு இஞ்ச வரலாந்தானே..."

கிழவியைத் தெருவில் கண்டதும் அயலில் இருக்கும் ஒருவர் கூறுகிறார். பேசாமல் வந்து வளவுக்குள் கால்கள் வைத்த கிழவியின் சுருங்கிய பாதங்கள் வெள்ளத்துள் தாழ்கின்றன. ஒரு சாண் உயரத்தில் வளவெங்கும் வெள்ளம் பரந்து நிற்கின்றது.

கொட்டில் திண்ணையில் இன்னமும் வெள்ளம் ஏறவில்லை. கிழவி எருக் கும்பத்தைப் பார்க்கிறாள். எருக்கும்பம் வெள்ளத்தோடு கரைந்து கலந்துவிட்டது. குப்பைக் கும்பத்தில் கிடந்த சருகுகள் வெள்ளத்தில் மிதந்து பக்கத்தில் இருக்கும் குளத்தின் நடுப்பகுதி வரையில் சிந்துண்டு தெரிகின்றன. அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்ட செல்லாச்சிக் கிழவியின் கண்கள் கலங்கியே விடுகின்றன.

"எத்தினை கயிட்டங்கள் பட்டு... எந்தெந்த இடமெல்லாந் திரிஞ்சு சேத்த பொருள். நொடிக்குள்ள எல்லாம் மண்ணாய் விட்டுதே... சனிப் பிடித்த மழைக்கு ஒரு அளவில்லையே... நாய்... மழை... கிறக மழை..." செல்லாச்சிக்கிழவி ஏலாத் தன்மையால் மழையைத் திட்டித் தீர்க்கிறது. கிழவியின் மனமோ காற்றாகப் பறக்கிறது. தாமரை இலை போன்று வளவெங்கும், குளத்திலும் மிதக்கின்ற குப்பைகளை ஒன்று சேர்த்துக் கூட்டிக் குவித்துவிட வேண்டுமென்ற ஆசை உள்ளத்தில் அலையாகப் பாய்கிறது.

ஏலாத் தன்மை கிழவியை உறுத்த மெதுவாக திண்ணையில் ஏறிக் குந்தி இருந்து கடையில் வாங்கிவந்த ஆகாரத்தை அசைபோடத் தொடங்குகிறாள்.

நீர் மட்டம் வரவர உயர்ந்து கொண்டே இருக்கிறது. மழை விடாமல் பொடு பொடுத்துக் கொண்டு இருக்கிறது. அயலில் வாழ்கிறவர்கள் பொருட்களைத் தூக்கிக் கொண்டு ஒதுங்க ஆயத்தப்படுத்தும் ஆரவாரம் கிழவியின் காதுகளிலும் விழுகின்றது. கிழவியின் மனம் அந்தக் குடிலையும் பொருட்களையும் விட்டுப்போக ஏனோ இடம் கொடுக்கவில்லை.

"எணெய் ஆச்சி கெதியா வாண... வெள்ளம் வந்து கொட்டிலெல்லாத்தையும் கொண்டு போகப் போவுது... நீ தப்பேலுமே? கெதியா வாண வெளியில.." தெருவில நின்றுகொண்டு இப்படிக் குரல் வைத்தார்கள். அவளுக்குத் தெருவில் நின்று கதைத்தது எதுவும் கேட்கவில்லை. அவளின் சிந்தனை உயிர் பிழைத்திட வேண்டும் என்பதில் இல்லை இத்தனை காலமாகப் பாதுகாத்து வந்த பீத்தல் சேலை, ஓட்டைச் செம்பு, நெளிந்த கோப்பை, கிழிந்த பாய், தலையணை இத்தியாதிகள் நீரில் நனைந்து மிதந்துபோகப் போகின்றனவே என்ற ஏக்கந்தான் கிழவிக்கு.

"ஆச்சி... எவ்வளவோ கூப்பிட்டாலும் கேக்கிறதாய் இல்ல... இனியுன்ர புத்தியைப் போல செய் நாங்க போறம்..."

தெருவில் நின்று கூவிய குரல்களும் தேய்ந்து மழுங்கின.

திண்ணைக்கு மேலேறிய வெள்ளம் செல்லாச்சிக் கிழவியின் மேனியைக் குளிரவைக்க, சிந்தனையில் இருந்து விடுபட்டுக் குடிலைப் பார்க்கின்றாள். கொட்டில் முழுவதும் வெள்ளம் பாய்ந்து பெருகிக் கொண்டிருந்தது.

கொட்டிலில் கிடந்த பொருட்களெல்லாம் வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டன. ஓட்டைச் செம்பு மிதந்து கொண்டிருந்தது. ஓட்டைச் செம்பாக இருந்தாலும் அவளைப் பொறுத்தமட்டில் தங்கத்தைப் போன்று பாதுகாக்க வேண்டிய ஒரு பொருள்.

ஏரம்புக் கிழவனும், செல்லாச்சிக் கிழவியும் சடங்கு செய்துகொண்டு தனிக் குடித்தனம் மேற்கொண்டபோது முதன்முதலாகக் வாங்கிய பொருள்களில் ஒன்றுதான் அது. அது நீரில் சென்று கொண்டிருப்பதைப் பொறுக்கமாட்டாதவளாக எழுந்துபோய் எடுத்துவந்து அதே இடத்தில் குந்திக்கொள்கிறாள் அவள்.

"என்ன சவமழை... இந்த மழை நிக்க மாட்டுதாக்கும்... மேகங்கீகந்தான் ஒட்டையாய் போட்டுதோ..."

நீர் மட்டம் இன்னமும் கொஞ்சம் உயர்ந்து விட்டது. கிளிந்த பாய், நெளிந்த கோப்பை ஒவ்வொன்றும் ஒவ்வோர் பக்கமாக மிதந்து செல்கின்றன. எழுந்து ஓடிப்போய் ஒவ்வொன்றாக எடுத்து வந்து தானிருக்கும் இடத்தில் சேர்க்கிறாள்.

ஒவ்வொன்றையும் எடுத்து வந்து வைத்துவிட்டுப் பார்க்க இன்னொன்று மிதந்து செல்வதும் அதனைத் திரும்ப எடுத்துவர ஓடுவதுமாக கிழவிக்கு நேரம் கழிகிறது.

மழை சோவென்று கொட்ட ஆரம்பித்துவிட்டது. காற்றும் எழுந்து வீசுகிறது. கிழவியின் அரைமட்டுக்குத் தண்ணீர் பெருகிவந்து இருந்தது. ஒரு மரம் பாறி விழும் ஓசை அவளது காதுகளிலும் விழுகிறது.

அவளது மனமோ அந்தக் குடிலை வெள்ளத்தில் இருந்து காத்துக் கொள்வதிலேயே துடித்துக் கொண்டிருக்கின்றது. நெஞ்சுள் பொத்திப் பிடித்துக் குடிலை அபாயத்தில் இருந்து பாதுகாத்து விடும் பேரவா பொங்க கிழவி கொட்டிலை நிமிர்ந்து பார்க்கிறாள்.

உயர்ந்து விட்ட நீர் மட்டத்தில் கிழவி நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் காட்சி... அவளின் கைகள் இரண்டிற்குள்ளும் ஓட்டைச் செம்பு, நெளிந்த கோப்பை, கிழிந்த பாய்... வெளியில் மழை ஒன்றையும் தெரியாதவாறு அடைத்துப் பெய்து கொண்டிருக்கிறது.

மணித்தியாலங்கள் மாண்டு கழிகின்றன.

உயர்ந்த வீதிக்கு மேலும் குளக்கட்டு உடைத்து வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது. வீதியில் நின்று பார்த்தவர்களின் கண்களில் கிழவியின் குடிசைக் கூரைதான் தெரிந்தது.

"கிழவியைக் கூப்பிடக் கூப்பிட உள்ளுக்கைதான் இருந்தது... சரியான பிடிச்சிராவிக் கிழவி... அந்தக் கிழவிக்கு இது வேணும்..."

"என்டாப்பா இப்பிடிக் கதைக்கிறாய். அப்பிடி உங்கள்ல ரெண்டுபேர் போய்க் கிழவியைத் தூக்கி வரமுடியேல்லையே..."

அங்கு நின்றவர்களின் வார்த்தைகளில் எத்தனையோ சர்ச்சைகள். பொழுதும் சரிந்து சனநாட்டமும் குறைந்து விட்டது. இரவு முழுக்க வெள்ளம் பாய்ந்து கொண்டுதான் இருந்தது.

விடிகையில் வெள்ளம் பாய்ந்து நில மட்டத்தில் வந்திருந்தது. மழையும் ஓய்ந்து வானமும் வெளித்து விட்டது. கிழவி குடிசையின் நடுவே நிலத்தைப் பிறாண்டிக்கொண்டு குப்புறக் கிடந்தாள்.

விசாரணை நடந்தது. அதிகாரிகள் முன்னால் அவளது உடலை நிமிர்த்துகிறார்கள். நெஞ்சோடு நிலத்தில் நசிந்து கிடந்தன... ஓட்டைச் செம்பு... நெளிந்த கோப்பை இத்தியாதிகள்....

No comments:

Post a Comment