Sunday, December 20, 2015

சினிமானந்தா பதில்கள் -30
தமிழகத்தில் வெளிவந்த தீபாவளிப் படங்களில் இலங்கை திரைப்படமொன்றும் உள்ளதாமே, உண்மையா?
எம். காசிம், கண்டி

உண்மைதான் 'உயிர் வரை இனித்தாய்' என்ற இந்த திரைப்படம் டென்மார்க்கில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களின் தயாரிப்பாகும்.

2014இல் நடந்த நோர்வே திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை தட்டிச் சென்ற படம்.

கடந்த 6 ஆம் திகதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 10 திரையரங்குகளில், (அத்தனையும் குளிரூட்டப்பட்ட மால் திரையரங்குகள்) சென்னையில் மட்டும் 4 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது.

சென்னையில் படங்கள் (பெரிய நடிகர்களின் படங்களும் உள்ளடக்கம்) மழையினால் கழுவப்பட்ட போதிலும் வெளியூர்களில் 'உயிர் வரை இனித்தாய்' தீபாவளியையும் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் 'மண்' மட்டுமே இதற்கு முன் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப்படத்தை திரையிட குறைந்த பட்சம் 2 கோடி முதல் 15 கோடி வரை விளம்பரத்துக்கு மட்டும் செலவிட வேண்டும். (பெரிய நடிகர் படங்கள் கூட விளம்பரப்படுத்தினால்தான் ஓடும்) என்ற நிலையில் வெறுமனே பேஸ்புக் மற்றும் போஸ்டர் விளம்பரத்தை மட்டுமே நம்பி 'உயிர் வரை இனித்தாய்' வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் இலங்கைத் திரைப்படமொன்றை வெளியிடுவது சாதாரண நாட்களிலேயே சாத்தியப்படாது. அந்த நிலையில் தீபாவளி சமயத்தில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நடிகர்கள் இருவரின் படங்களுக்குப் போட்டியாக இலங்கைப் படம்? நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விடயம், நனவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இலங்கை திரைப்படமொன்றை வெளியிடுவது எளிதானது அல்ல. திரைப்படத்தை பதிவு செய்தல், தணிக்கை செய்தல், திரையரங்குக்கு கொண்டு செல்லல், அதன் சட்டதிட்டங்களை சந்தித்தல், தமிழக ரசிகர்களுக்கான திரைமொழியை வெற்றி பெறுதல், அத்தனையையும் தாண்டியதாக வேண்டும்.

தமிழ்நாட்டில் தணிக்கை செய்யப்பட்டு திரையரங்குகள் இல்லாமல் 260 தமிழ் படங்கள் வரிசை கட்டி நிற்கையில் அங்கு திரையிடும் வாய்ப்பை 'உயிர் வரை இனித்தாய்' பெற்றிருப்பது ஒரு மைல்கல் வெற்றி.

தடம் பதித்து விட்டது. இனி அடுத்த அடி...
அடி மேல் அடி வைத்துத்தானே நடை பழக வேண்டும்.

தீபாவளிக்கு வெளியான 'தூங்காவனம்', 'வேதாளம்' படங்களின் வசூல் எப்படி?
ராஜசேகர், கொழும்பு

உங்கள் கேள்வியில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளிக்கு வெளியான தமிழ்ப்படங்கள் இரண்டு அல்ல ஐந்து. அவை வேதாளம், தூங்காவனம் மற்றும் சல்மான்கானின் தமிழில் டப் செய்யப்பட்ட மெய் மறந்தேன் பாராயோ, மற்றும் புதுமுகங்களின் நடிப்பில் உருவான இஞ்சி மொறப்பா ஆகியவற்றுடன் டென்மார்க்கில் தயாரான இலங்கையர்களின் கைவண்ணமான உயிர்வரை இனித்தாய். இந்தப் படங்களுடன் தீபாவளிக்கு முன்னர் வெளியான நானும் ரவுடிதான் படமும் தீபாவளிப் படங்களுடன் ஓடிக் கொண்டிருந்தது.

வேதாளம், தூங்காவனம் இரண்டும் முதல் நிலை தமிழ் படங்கள். ஆக் ஷன், அதிரடி ரகம். தீபாவளியை அடுத்த மூன்று நாட்களாக இரண்டும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு ஓடின. வேதாளம் ஒரு எட்டு முன்னாள் போனதாகக் கேள்வி. முதல்நாளே 15 கோடி, 8 நாட்களில் 100 கோடி வசூலித்ததாக இணையத்தில் புழுகப்பட்டது. உண்மையான 'கலெக் ஷன்' அந்த அளவுக்கு இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தீபாவளியை அடுத்த மூன்றாவது நாள் ஆரம்பித்த பேய் மழை ஏற்படுத்திய வெள்ளம் தமிழ் நாட்டை வெள்ள நாடாக மாற்றிவிட்டது. சென்னை ஒரு நீச்சல் தடாகமாகியது.

3 வாரமாக பெய்துவரும் மழையின் பின் இயல்பு நிலை எப்போது ஏற்படுமோ? தெரியவில்லை. நீந்திச் சென்றுதான் தியேட்டரை அடைய வேண்டும். வீட்டுக்கே வெளியே வர முடியாதவாறு வெள்ளம் வீட்டைச் சுற்றியுள்ள போது படம் பார்க்கும் நிலையில் எவரும் இருப்பார்களா? எனவே தீபாவளிக்கு வந்த தமிழ்ப் படங்களை ஓடாமல் நிறுத்தி வைத்துவிட்டார் வருணபகவான்.

'வேதாளம்' வெளியிடப்பட்டுள்ள ஒரு திரையரங்கை சுற்றி வெள்ள நீர் நிரம்பியுள்ளது.

ஆச்சி மனோரமா முதன் முதலில் ஒரு சிங்களப் படத்துக்குத்தான் காமிரா முன் தோன்றினார் என்று வண்ண வானவில் கூறியிருந்ததே? அது எந்தப் படம்? கவிதா, ஹேவாகம பாதுக்க

மனோரமா முதன் முதல் காமிரா முன் தோன்றியது 'சுகுமலி' என்ற சிங்களப் படத்துக்குத்தான். எம். மஸ்தான் இந்தப் படத்தின் டைரக்டரும் ஒளிப்பதிவாளருமாவார். இந்தப் படத்தைத் தயாரித்தவர் எஸ். சிவசாமி. ரீட்டா ரட்னாயக்க லெடி ரணசிங்க, ஆனந்த வீரகோன், கிறிஸ்டி லெனாட் பெரேரா ஆகியோர் மனோரமாவுடன் நடித்திருந்தனர்.
சுகுமலி படத்தில்
அயேஷா வீரகோன்
தென் இந்திய சினிமாவை ஸ்ரூடியோவுக்குள் இருந்து வெளிப்புறத்துக்குக் கொண்டு வந்த முதல் ஒளிப்பதிவாளர் என்று மஸ்தான் கருதப்படுகிறார்.
'சுகுமலி' யை அடுத்து 'அசோக மாலா', 'சுஜாதா' ஆகிய சிங்களப் படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்ட போது மஸ்தான் அந்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றினார்.
மஸ்தான் பிற்காலத்தில் இலங்கைக்கு வந்து தீவரயோ, சூர சௌரயா, ஆத்ம பூஜா (காமினி பொன்சேகா நடித்த படங்கள்) அல்லபு கெதர ஆகிய சிங்களப் படங்களை இயக்கினார்.

No comments:

Post a Comment