Saturday, November 21, 2015

இருள் உலகக் கதைகள்

தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

ரத்தினபுரி, தும்பர தோட்டத்தில் வசிக்கும் கந்தசாமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அடிதடி, வெட்டுக்குத்து என்று ஊரில் எந்தப் பிரச்சினை என்றாலும், அங்கே கந்தசாமியும் ஒரு ஆளாக பெயரை போட்டுக்கொள்ள முன்னால் நிற்பான். திடகாத்திரமான உடல்வாகு கொண்ட அவன், மிகத் தைரியசாலி. தினமும் நாட்டு சாராயம் போட்டால்தான் அவனுக்குத் தூக்கமும் வரும்! கந்தசாமியின் மனைவி வள்ளியின் எந்த அறிவுரையையும் அவன் சட்டை செய்வதேயில்லை.

அவன் ஒரு முடிவை எடுத்துவிட்டால் பிறகு அவன் பேச்சை அவனே கேட்க மாட்டான் என்பது அவனது நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமான 'பஞ்ச் டயலொக்'.

மாலை மங்கினால் கந்தசாமி சாராய நெடி மூக்கில் நுழைந்தாக வேண்டும். அன்று மாலை ஆறு மணியிருக்கும். தும்பரை காட்டு குறுக்குப்பாதை வழியாக நாட்டு சரக்கு விற்கும் இடம் நோக்கி கந்தசாமி நடையைக் கட்டினான்.

தும்பரை பகுதி பெரிய எஸ்டேட் என்றாலும் பெரும்பாலான இடங்களை காடு ஆக்கிரமித்திருந்தது. அதனால், மாலை ஆறரை மணியே நள்ளிரவு 12 மணி தோற்றத்தை ஏற்படுத்தி விடும். கந்தசாமி நாட்டு சரக்கை வாங்கி வாயில் ஊற்றி மரவள்ளி அவியலை வாயில் திணித்துக் கொண்டான். பின்னர் பெட்டிக்கடையில் முறுக்கு ஐந்தை வாங்கி கையில் சுருட்டிக் கொண்டு நடந்தான். 'நள்ளிரவு நேரத்துல ஒத்தையில் வரும்போது, எண்ணெய் திண்பண்டங்கள் சாப்பிடக்கூடாது' என்று அவன் மனைவி பல தடவைகள் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. 'அப்படிச் சாப்பிட்டா என்னதான் நடக்கும் என்பதையும்தான் பார்த்திடுவோமே'ன்னு  நினைத்த கந்தசாமி, முறுக்குப் பார்சலை பிரித்து முறுக்கு ஒன்றை எடுத்து கடித்தான். அந்த இதமான இரவு வேளையில், அந்த காரமுறுக்கு ரொம்பவே சுவையாக இருக்க, அதை ருசித்து வாயில் போட்டு அரைத்தான். அப்போது தலைக்கு மேலே மரக்கிளை முறிந்து விழுவது போல ஒரு சத்தம் கேட்டது. பாதையை விட்டு சற்று விலகி அண்ணாந்து பார்த்த போது அங்கே எந்தவித சலனமும் தென்படவில்லை.
தேவா பூசாரி
மனதைத் திடப்படுத்திக் கொண்ட கந்தசாமி மேலும் உன்னிப்பாக பார்த்த போது, மரத்தில் வெளவால் ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். 'அட இது தானா!'னு பயம் விலகியவன் கீழே குனிந்து முறுக்குப் பொட்டலத்தை பார்த்தபோது அதிர்ந்தான். மீதமிருந்த நாலு முறுக்கில் ஒன்றைக் காணவில்லை!

'என்ன நடந்திருக்கும்? ஒருவேளை என் மனைவி சொன்னது போல...' என்று மனதில் பலவிதமான எண்ணங்கள் காட்சிகளாக வந்து பயமுறுத்த... கந்தசாமி மனதில் மறுபடியும் தைரியம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. அவன் மீண்டும் ஒரு முறுக்கை எடுத்துக் கடித்தான். அப்போது அதே மரக்கிளை மீண்டும் கீழே சரிந்து எழுந்தது. தலைக்கு மேலே என்னதான் அப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க சட்டெனத் தலையை உயர்த்தி மேலே பார்த்தான் கந்தசாமி. ஆனால் அங்கே எதையுமே வித்தியாசமாக அவனால் பார்க்க முடியவில்லை. 'இது மனப்பிரமையாக இருக்கும்' என்று நினைத்தவன், கீழே குனிந்து முறுக்குப் பொட்டலத்தைப் பார்த்தான். அங்கே மீதமிருந்த இரண்டு முறுக்கில் ஒன்றுதான் இருந்தது! உடனே அந்தப் பகுதியே அதிரும்படி அட்டகாசமாக சிரித்த கந்தசாமி, 'என்கிட்டயே உன் வேலையைக் காட்டுறீயா?' என்று கேட்டபடி மீதமிருந்த அந்த ஒரு முறுக்கையும் காலி செய்ய அதைக் கையில் எடுத்த போது கையிலிருந்த முறுக்கு படீரென்று மாயமாய் மறைந்தது. வெலவெலத்துப் போன கந்தசாமி தலைதெறிக்க ஓட்டமெடுத்தான். பேயோட்டம் ஓடியவன் வீட்டு வாசல் படியிலேயே நின்று மூச்சு வாங்கினான்.

கந்தசாமி பேயடித்தவன் மாதிரி ஓடி வந்ததைப் பார்த்த வள்ளி, என்னவென்று விசாரித்தாள். நடந்ததை திரைக்கதை மாதிரி கந்தசாமி விபரிக்க, "நீ போதையில உளறாதே" என்று அவனைத் திட்டிவிட்டு படுக்கைக்குப் போனாள் வள்ளி.

அடுத்த நாள் கந்தசாமியை குளிர்காய்ச்சல் வாட்டி எடுத்தது. மேட்டு லயத்து பரமசிவன் பூசாரியை அழைத்து வந்து முத்துப் போட்டு பார்த்தபோது, 'ஏழு கட்ட தூரத்தில் அவனை ஒரு எச்சில் பேய் தீண்டி விட்டதாக' பூசாரி சொன்னார். நேற்று கந்தசாமி சொன்ன கதையை நினைவுபடுத்திக் கொண்ட வள்ளிக்கு உடல் வெடவெடத்துப் போனது. பிறகு பூசாரி மந்திரித்து தந்த தண்ணீரை கந்தசாமிக்கு குடிக்கக் கொடுத்தாள். ஆனால் இரண்டு நாள் கழிந்த பிறகும், கந்தசாமி படுத்த படுக்கையாகவே கிடந்தான். பிறகு தெரிந்தவர்கள் ஊடாக அந்தப் பகுதியில் பிரபலமாகத் திகழும் தேவா பூசாரியை அணுகி விடயத்தைச் சொல்லி பரிகாரம் கேட்டார்கள்.

அவர் தேதி குறிப்பிட்டு தந்த நாளில் கந்தசாமிக்கு பேயோட்டும் படலம் ஆரம்பமானது. உடுக்கையை கையிலெடுத்துப் பாட ஆரம்பித்த சில நொடிகளிலேயே, கந்தசாமி புத்துயிர் பெற்றவனாக ஆவேசத்துடன் எழுந்து வந்து பேயாட்டம் போடத் தொடங்கினான். பூசாரியின் உடுக்குத் தாளத்திற்கேற்ப அவனும் ஜதி சேர்த்து ஆட ஆரம்பித்தான். ஒரு தேர்ந்த கதக்களி நடனக்காரனின் ஆட்டம் மாதிரியே கந்தசாமியின் ஆட்டம் இருக்க, அங்கே கூடி நின்றவர்கள் வாயடைத்துப் போனார்கள். 'இப்போது ஆடுவது கந்தசாமி அல்ல ஒரு தீய சக்திதான்' என்பதை தேவா பூசாரி சில நொடிகளிலேயே கண்டறிந்து கொண்டார். பிறகு சில மந்திரங்களை உச்சாடனம் செய்து தீய சக்தியை வசியம் செய்து கைப்பிடிக்குள் கொண்டுவந்தபோது, அந்தத் தீய சக்தி பேச ஆரம்பித்தது. அது சொன்ன தகவல்களின்படி, பல வருடங்களுக்கு முன்னால் அந்தப் பகுதியில் இறந்துபோன ஒரு பெர (மத்தளம்) வாசிப்பவனின் பேராசை மனைவியின் ஆவிதான் இது என்பது நிரூபணம் ஆகியது. கந்தசாமியை தீண்டிய அந்த நாளில், அந்த தீய சக்தி அகோர பசியுடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததாம். அப்போது அதன் தலைக்கு கீழே கந்தசாமி முறுக்குப் பொட்டலத்தை அவிழ்த்த போது, அந்த தீய சக்தி தனது ஓணான் நாக்கை நீட்டி முறுக்கை கபளீகரம் செய்ததாம். கந்தசாமிக்குள் குடியிருந்த ஆவி சொன்ன விசயங்களைக் கேட்ட அனைவரும் குலைநடுங்கிப் போனார்கள்.
"டேய் பூசாரி! மரத்திலிருந்தே நாக்கை நீட்டி முறுக்கு கபளீகரம் செய்த எனக்கு, அவனின் தலையை கொய்து போட என்ன நேரம் எடுக்கப் போகுது? அவன் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுட்டேன்" என்று அந்தத் தீய சக்தி பேய்க்கூச்சல் போட்டுக் கத்தியது. 'வந்திருப்பது மனிதாபிமானம் உள்ள ஆவிதான்' என்பதை தேவா உணர்ந்து கொண்டார். பிறகு அந்த தீய சக்தியை தனது மந்திர வலையில் வீழ்த்தினார். கொடுத்த உணவுகளை ஒரே மூச்சில் விழுங்கிய அந்த துஷ்ட ஆவி, கந்தசாமியின் உடலிலிருந்து வெளியேறியது. வந்த வேலை இலகுவில் முடிந்துவிட்ட திருப்தியில் தேவா பூசாரி அனைத்துப் பரிகாரங்களையும் முடித்து விட்டுப் புறப்பட்டார்.

தேவா பூசாரியின் ஆட்டோ அந்த அதிகாலை வேளையில் தும்பரை சந்தியைக் கடந்தபோது, அங்கே நின்றிருந்த ஒரு பெரிய மரக்கிளை ஆட்டோவின் மீது விழுவதுபோல அதன் அருகே வந்து உரசிவிட்டு மேலே சென்றதாம். அது அந்த தீய சக்தியின் வேலைதான் என்பதை தெரிந்து கொண்ட அவர், 'நம்ம கிட்டவே விளையாடிப் பார்க்குது' என்று நினைத்து புன்முறுவல் பூத்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் தேவா பூசாரி!

No comments:

Post a Comment