Saturday, November 7, 2015

ஆறுமுகனுக்கு ஞானம் வருமா?


அக்டோபர் 30ம் திகதி மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் 16வது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. வழமையான அதிகாலையிலேயே பழைய பாராளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக அமைந்திருக்கும் தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிப்பார்கள். அதன் பின்னர் சௌமியமூர்த்தி பவனில் அதாவது இ. தொ. கா. தலைமையகத்தின் மேல் மாடியில் அமைந்திருக்கும் விநாயகர் சிலைக்கு பூசை நடக்கும். அதன் பின்னர் வந்திருப்போருக்கு காலை உணவு இட்லி, வடை, சாம்பார், சட்னி, மீன்கறி மற்றும் கேசரியோடு வழங்கப்படும்.

கடந்த 16 ஆண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகிறது. அவரது பிறந்த தினத்தன்று இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
இந்த இரு தினங்களிலும் இ. தொ. கா. வைச் சார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள், வர்த்தகர்கள் என சௌமியமூர்த்திபவன் நிறைந்திருக்கும். காலை உணவுக்கு தட்டேந்தி நீண்ட கியூ நின்றிருக்கும். பார்ப்பதற்கு கலகலப்பாக இருக்கும். மினிஸ்ட்ரி பெண்களையும் இங்கே வளயவரப் பார்க்கலாம். ஊடகவியலாளர்களுக்கும் இவை பொன்னானா தருணங்கள். மலையகப் பிரமுகர் பலரையும் ஒரே இடத்தில் பார்த்துவிடலாம் அல்லவா!
இந்த நிகழ்வுகள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் நிறைவு பெற்றுவிடும்.
ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி நடைபெற்ற தொண்டமான் நினைவு நாள் மறக்க முடியாதது மட்டுமல்ல@ படிப்பினையானதும்கூட. அற்றகுளத்து அரு நீர்ப்பறவை என்பார்களே, அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

காலை ஆறு மணிக்கு தொண்டமான் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் பிந்தி வந்ததால் எட்டு மணி தாண்டிய பின்னரே அது நடைபெற்றது. சௌமிய மூர்த்தி பவனில் வேலை செய்வோர் போனவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்று வாசலில் நின்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

மாலை அணிவிப்பு முடிவடைந்து இ. தொ. கா. தலைவர் முத்து சிவலிங்கம் ஏனையோரும் இ. தொ. கா. தலைமையகத்துக்கு திரும்பி வரும்போது ஒன்பதரையாகி விட்டது.

உள்ளே வந்த முத்து சிவலிங்கம் வாசலைப் பார்த்தபடி அமைந்திருக்கும் சௌமிய மூர்த்தியாரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் தனியாளாக நடந்து உள்ளே சென்றார். பெரும்பாலும் மேல்மாடி பூஜை அறைக்கு சென்றிருக்கலாம்.

அனைவரும் எதிர்பார்த்தது, ஆறுமுகனாரை அதாவது பேரனை. பழைய பாராளுமன்ற வளவில் அமைந்திருக்கும் தொண்டமான் சிலைக்கு மாலை அணிவிக்க தாமதமாக வந்த அவர், அப்படியே திரும்பி வீடு சென்று விட்டதால் சௌமியபவன் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

இவர் மட்டுமல்ல, வரவில்லை பட்டியல் மிக நீளமானது. மாகாணசபை உறுப்பினர்களான செந்தில் தொண்டமான் கேகாலை பாஸ்கரன், இரத்தினபுரி லலிதா ராமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், சென்னன், நுவரெலிய சதாசிவம், இவர்கள் யாருமே சௌமிய பவனுக்கு வந்திருக்கவில்லை. வர்த்தக பிரமுகர்கள் வருகை தரவில்லை. ஊடகவியலாளர்களையும் காண முடியவில்லை. சௌமிய மூர்த்திபவன் ஏறக்குறைய வெறிச்சோடிக் கிடந்தது. எனவே காலை சாப்பாட்டுக்கு கியூ வரிசையும் இல்லை.
பழைய காங்கிரஸ்காரர் அந்தோணிமுத்து, கணபதிகனகராஜ், தொழிலதிபரும் பதுளையில் கேட்டுத் தோற்றவருமான கனகரட்ணம், மாத்தளை சிவஞானம், அருள்சாமி, இவர்கள்தான் வந்திருந்த தெரிந்த முகங்கள்.

ரஞ்சனாஸ் அதிபர், தேவி ஜூவலர்ஸ் அதிபர் உள்ளிட்ட பிரமுகர்கள் எவருமே சமூகமளிக்கவில்லை. இப்படி சமூகமளிக்காதவர்கள் அனைவருக்கும் பல்வேறு அவசர வேலைகள் இருந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அன்றைய தினம்தான் அவசர வேலைகள் வந்தனவா? ஆறுமுகனும் முத்து சிவலிங்கமும் கெபினட் அமைச்சர்களாக கடந்த 16 ஆண்டுகளாக இருந்தபோது இந்த அவசர வேலைகள், நேரமின்மை என்பன இவர்களுக்கு வரவில்லையா? அப்படியே வந்திருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு இதற்கு வந்திருப்பார்கள் அல்லவா?

அதாவது, இருவரும் அமைச்சர்களாக செல்வாக்கு உள்ளவர்களாக, செய்து முடிக்கக் கூடியவர்களாக இல்லை என்பதால்தான் கூட்டம் வரவில்லை என்பது எம் அனுமானம்.

பணமும் பதவியும் இருந்தால்தான் சுற்றம் சூழவரும் என்பதற்கு அன்றைய தினம் ஒரு சாட்சியாக இருந்தது. அரசியல்வாதி என்றைக்குமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம். பதவியும் அதிகாரமும் இல்லையென்றால் சீண்டுவதற்கு ஆளிருக்காது. இந்த வணிகர்களும் அரசியல் சுவாசம் பிடிப்பவர்களும் அதிகாரம் இல்லாதவர்களை கைவிட்டு அதிகாரம் உள்ளவர்களை நாடி அடுத்த வேளை பார்க்கப் போய்விடுவார்கள்.

ஆறுமுகன் தொண்டான் தாத்தா காலத்தில் அரசியலுக்கு வந்தார். தாத்தா மறையும் வரை தாத்தா செல்வாக்கில் ஒளிர்ந்தார். பின்னர் சந்திரிக்கா அம்மையார் மற்றும் ராஜபக்ஷ தயவில் ஒளிர்ந்தார். எனவே அனைவரும் சுற்றம் சூழவந்து தொழுதார்கள்.

ஆறுமுகத்துக்கு இது முதல் அனுபவமாக இருக்கலாம். பெரும்பாலும் இ. தொ. கா. ஜனவரியிலும் பின்னர் செப்டம்பரிலும் அடிவாங்கியது. மலையக அரசியலில் இன்றைக்கு எதிர்த்தரப்பினர்தான் கோலோச்சுகிறார்கள். அதிகார பலம், பதவி பலம், பணப்பலம் எல்லாம் அவர்களிடம்தான். ஐந்து வருடங்களுக்கு இதுதான் காட்சியாக இருக்கப் போகிறது. இப்படி ஒரு நிலை இதற்கு முன், 1977 முதல், இ. தொ. கா.வுக்கு ஏற்பட்டதில்லை.

எனவே ஆறுமுகனாரும் முத்துசிவலிங்கத்தாரும் உணர்ந்து கொள்ள வேண்டும் மீன்கள் இருந்தால் மட்டும்தான் இந்தப் பறவைகள் வரும் என்பதை.

இவர்களை என்றைக்கும் நாடுபவர்கள், நேசிப்பவர்கள் மலையகத்தின் சாதாரண மக்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆறுமுகன் யார் யாரை எல்லாம் பக்கத்தில் வைத்திருந்தாரோ அவர்களைக் காணோம். யாரை பக்கத்திலும் எடுப்பதில்லையோ, அதாவது சாதாரண தமிழனும் சாதாரண தொழிலாளியும்தான் இவரை இன்றைக்கும் ஆராதிக்கிறான், நாளைக்கு ஏற்றி வைக்கவும் செய்வான்.
அந்த ஞானம் இப்போதாவது ஆறுமுகன் தொண்டமானுக்கு வந்தால் சரிதான்!


வழிப்போக்கன்.

No comments:

Post a Comment