Wednesday, November 4, 2015

கிரடிட் கார்ட் மோசடி


மணி  ஸ்ரீகாந்தன்

உங்கள் பணத்தை உங்களுக்கே தெரியாமல் உருவும் இணைய மோசடி! "கொழும்புக்கு போனா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க, திருட்டு பயலுங்க, சட்டைப் பொக்கட்டில் பிளேடு போட்டு பணத்தை அடிச்சிருவாங்க" என்று அந்தக் காலத்தில் கொழும்பு செல்வோரை எச்சரித்து அனுப்புவது வழக்கம். ஏனென்றால், பிக்பொக்கட் திருடர்கள் தலைநகர் முழுவதும் அதிகமாக உலாவித் திரிந்தார்கள். கொழும்பு வந்து செல்லும் பயணிகளில் பலர் பணத்தை திருடர்களிடம் பறிகொடுத்தவர்களாகத்தான் இருந்தார்கள். கொழும்பு வரும் ஒரு கிராமத்து மனிதர் எந்தவித சேதாரமும் இல்லாமல் ஊர் திரும்பினால் அது பெரிய விஷயம்தான். எழுபது, எண்பது, தொண்ணூறுகளில் இதுதான் நிலை. கொழும்பு காகங்கள் எப்படி எல்லாம் ஏமாற்றும் என்பதைத் தனிக்கதையாக எழுதலாம். ஆனால் இன்று பிக்பாக்கட் திருடர்கள் நூற்றுக்கு பத்து வீதமாகக் குறைந்து விட்டார்கள்.

"அந்தக் காலத்தில் ஒரு பொக்கட்டில் கையை விட்டாலே ஆயிரம், ஐநூறுனு சிக்கும். ஆனா, இப்போ நிலைமை அப்படி அல்ல... பணம் கத்தையா முட்டிக்கிட்டு தெரியிற பொக்கட்டுல கையை வைக்கவே சந்தேகமா இருக்கு. ஏன்னா, இப்போ எல்லோரும் பணத்துக்கு பதிலா கிரெடிட் காட்டுதான் வச்சிருக்காங்க. அதை எடுத்து நான் என்ன பண்ணுறது ரொம்பவும் கஷ்டமாகத்தான் இருக்கு!" என்று ஒரு திருட்டு ஆசாமி எனது நண்பனிடம் புலம்பிய தகவலை அவர், அண்மையில் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
பிக்பாக்கெட் திருட்டு அடியோடு அழிந்து போனதற்கு கிரெடிட் கார்ட்டுதான் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது மனதுக்கு ஆறுதலான விசயம். ஆனாலும் வாள் போய் கத்தி வந்த கதை மாதிரி, இப்போ கிரெடிட் கார்ட் திருடர்கள் புதிதாக முளைத்திருக்கிறார்கள். பரட்டை தலையோடு பக்கிரிபாலு, ரவுடி ரங்கனாக உலா வந்தவர்கள். காலம் போய், இப்போ படித்த கோர்ட் சூட் போட்ட டிப்டொப் கிரெடிட் மோசடி பேர்வழிகள் உருவில் வந்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் பொக்கட்டில் கை வைக்காமல், பிளேட் போடாமல் நமது உடமைக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் நமக்கு தெரியாமலேயே நமது பணத்தை உருவி விடுவார்கள், இந்த எத்தர்கள்!

சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு நபர் எனது நண்பருக்கு கொஞ்சம் பழக்கமானவராம். அவர் எனது நண்பரிடம் "நான் உங்களுக்கு ஒரு போன் பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன். வாங்க ஒன்லைன்ல ஓடர் பண்ணலாம் என்று சொல்லி ஒரு கொம்யூனிகேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். போன் ஆசையில் நண்பரும் பின்னால் சென்றிருக்கிறார்.
அங்கே, கணனியைத் திறந்து நெட்டுக்குத் தாவிய அவர், ஒரு இணைய பக்தக்தைத் திறந்திருக்கிறார். அது ஒரு வெளிநாட்டு வங்கியின் இணையப் பக்கம். வங்கியின் வாடிக்கையாளர்களின் பெயர்களும், கிரெடிட் கார்ட் இலக்கமும், வைப்புத் தொகையும் அதனோடு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இரகசிய இலக்கமும் அதில் இருந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் எனது நண்பருக்கு வியர்த்துக் கொட்டியதாம்!'ஏதோ வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டோமோ' என்று உள்மனதும் சொல்லியதாம்.
பிறகு அந்த வாடிக்கையாளர் பட்டியலில் தினமும் கடன் அட்டைகளை பாவிக்கும், நிறைய செலவு செய்யும் ஒரு நபரை தெரிவு செய்திருக்கிறார். பெரிய தொகை வைப்பில் இருந்தாலும் கடன் அட்டையை அரிதாக பாவிக்கும் ஒரு நபரிடமிருந்து உருவுவது ஆபத்தை விலை கொடுத்து வாங்கிய மாதிரியாகி விடும். ஏனெனில் அவர் அதைக் கண்டுபிடித்து விடுவார். அடிக்கடி கடன் அட்டையை பாவிக்கும் ஒருவரிடம் சுட்டால் அதை அவர் தெரிந்துகொள்ள மாட்டார் என்பது இந்த இணைய திருட்டில் அடிப்படை விதி. அதனால் தான் தினமும் அட்டையை பாவிக்கும் ஒரு நபரை தெரிவு செய்திருக்கிறார் அந்த மனிதர். அதன் பிறகு கொழும்பில் ஒன்லைன்னில் ஓடர் செய்யும் வசதி உள்ள ஒரு வர்த்தக நிலையத்தை தெரிவு செய்து, இரண்டரை லட்சம் பெறுமதியான தங்க மாலை ஒன்றை ஆடர் செய்யத் தயாராகி இருக்கிறார். அப்போது உஷாரான நண்பர் அது பற்றி கேட்க,

"எனக்கு மாலையை ஓடர் பண்ணுறேன். அதோடு உங்களுக்கான போனையும் ஓடர் செய்வேன். இரண்டு பொருட்களும் உங்க வீட்டுக்குத்தான் வரும். நீங்கள் போனை எடுத்துக்கொண்டு மாலையை எனக்குத் தந்துவிடுங்கள்" என்றாராம். பயந்துபோன நண்பர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

அதன்பிறகு அவர் வேறு ஒரு நண்பர் பெயரில் பொருட்களை ஓடர் செய்து தங்க மாலையை பெற்றுக்கொண்டு அந்த நண்பர் விரும்பிய பொருளை பரிசாக அளித்திருக்கிறார். இப்படி செல்வந்தர்களான வெளிநாட்டுக்காரர்களின் பணத்தை பெறுமதியான பொருட்கள் வடிவில் இரகசியமாக திருடுவதில் பலர் நிபுணர்களாக விளங்குகிறாரக்ள்.

இப்படித் திருடும் நபர்கள் அடிக்கடி இலங்கை வருவார்கள். ஏனெனில் இது அதிகம் கவனிக்கப்படாத மூன்றாம் உலக நாடு. பல வெளிநாட்டுக்காரர்களுக்கு ஸ்ரீலங்கா என்ற ஒரு நாடு இருப்பதே தெரியாது. எனவே இங்கே வந்து பொருட்களை அதாவது தங்க ஆபரணங்களை ஓடர் செய்து பெற்றுக்கொண்டு அவற்றை விற்றுப் பணமாக்கிக் கொள்கிறார்கள். பின்னர் இங்கே ஆடம்பரமாக செலவு செய்தது போக மிகுதியை சுருட்டிக் கொண்டு தாம் வாழும் நாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.

ஆனால், இப்போது அந்த மோசடி வேலையை செய்ய முடியாது என்று தெரிய வருகிறது. இணையத்தில் ஒருவருடைய கடன் அட்டையின் மீது பொருட்களை கொள்வனவு செய்யும்போதே அதன் உரிமையாளருக்கு எஸ். எம். எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் முறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. உள்ளுர் கடன் அட்டை உரிமையாளர்களுக்கு இப்படித் தகவல் தெரிவிப்பது மாதிரியான ஏற்பாடு மேல் நாடுகளிலும் வந்து விட்டதால் இந்த எத்தர்களுக்கு சுருட்டுவது சிரமமாகிப் போயிருக்கிறது.

மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் போதே கடன் அட்டை கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அறிவித்துவிட்டு நாட்டை விட்டு புறப்படும்படி தமது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவித்துள்ளன. ஒருவருடைய கிரடிட் கார்டில் இன்னொருவர் திருட்டுத்தனமாக பொருட்களைக் கொள்வனவு செய்வாரானால் இந்த நாட்டில், இந்த நிறுவனத்தில் இவ்வளவு பெறுமதியான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற தகவல் உடனடியாக கார்ட் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அவரால் உனடியாக செயல்பட்டு ஒன்லைன் விற்பனையை தடை செய்ய முடியும். உள்ளுரை எடுத்துக் கொண்டால் நாம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்த பிறகு, கடன் அட்டையை கொடுத்து பணத்தை செலுத்தும் போது, விற்பனையாளர் கடன் அட்டையில் வாடிக்கையாளரின் பெயர், கையொப்பம் இருக்கிறதா என்பதை பார்த்த பிறகே மெஷினில் உரச வேண்டும். ஆனால் நடைமுறையில் சுப்பர் மார்க்கட்  அல்லது பெரிய வியாபார நிலையங்களில் பணிபுரியும் காசாளர்கள் வாடிக்கையாளர் கையெழுத்திட்டுத் தரும் ரசீதில் உள்ள கையெழுத்தையும் கிரடிட் கார்டில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.

இப்போது இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், சில மோசடி பேர்வழிகள் எழுத்துக்கள் எதுவும் பொறிக்கப்படாத கடன் அட்டையில் உள்ள சிப்பில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் கணக்கை (டவுன்லோட்) தரவிறக்கம் செய்து அதை வாடிக்கையாளர் கூட்டமாக இருக்கும் கடைகளில் நுழைந்து பரபரப்பான சூழலில் அந்த அட்டையைக் கொடுத்து பொருட்களை வாங்கி விடுவார்களாம். இதற்கு சில இடங்களில் காசாளரின் உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு இன்னொருவரின் கடன் அட்டையில் பத்து விஸ்கி போத்தல்களை வாங்குகிறார் என்றால் எட்டை எடுத்துக்கொண்டு, இரண்டை அந்தக் காசாளருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவார்களாம்.
ஏனெனில் இது தவறான கார்ட் என்பதை பார்த்த மாத்திரத்தில் காசாளரால் கண்டு பிடித்துவிட முடியும். முதலிலேயே காசாளரை சரிக்கட்டி பின்னர் திருட்டில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்து விடுவதன் மூலம் இத்திருட்டை சிலர் செய்வதாக சொல்லப்படுகிறது. கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கான பணம் சுப்பர் மார்க்கட்டுக்கு வந்துவிடும் என்பதால் காசாளர் கவலைப்படத் தேவையில்லை. இப்போது எல்லா வழிகளையும் கண்டு பிடித்து அடைத்து விட்டதால், மோசடி பேர்வழிகள் பாடு பெரிய திண்டாட்டமாகப் போய்விட்டிருக்கிறது. ஆனால் எத்தர்கள் ஒருபோதும் சளைப்பதில்லை. விரைவிலேயே இன்னொரு வழியைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

வங்கியில் ஏடி எம் மில் பணம் எடுக்கும் போது, நமக்கு தேவையான தொகையை தெரிவு செய்து ஓகே செய்தவுடன் பணம் வெளியே வந்துவிடும். வந்த பணத்தை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் எடுக்காவிட்டால் அது, பழையபடி உள்ளே சென்றுவிடும். ஆனால், இப்போது அந்தமுறையை பல வங்கிகள் நிறுத்தி விட்டன. பணம் வெளியே வந்தால் வந்ததுதான். மறுபடி அது உள்ளே செல்லாது. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அதை இங்கே சொல்வதற்கில்லை.

எத்தர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே சபாஷ், சரியான போட்டி!

No comments:

Post a Comment