Tuesday, November 3, 2015

இருள் உலகக் கதைகள்


தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-  மணி ஸ்ரீகாந்தன்

வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய காவேரி, விடுமுறையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்பியிருந்தாள். அதனால் இறக்குவானை சின்ன தோட்டத்தில் இருக்கும் அவளின் வீடு, மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. காவேரிக்கு இரண்டு மகள்மார். மகள்மாருக்கு அம்மா என்றால் சும்மாவா என்ன! மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். "இனி சும்மா வெளிநாட்டுக்கு போகக் கூடாது.... எங்களோடேயே இருக்க வேணும்" என்று சின்ன மகள் அம்மாவுக்கு செல்லக் கட்டளை இட, காவேரி மகள்களை வாரி அணைத்துக் கொண்டாள்.

வெளிநாட்டில் காவேரி சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தில் அழகான வீட்டையும் அவளின் கணவன் கட்டி முடித்திருந்தான். அதனால் காவேரி நிம்மதி பெருமூச்சு விட்டபடி தன் சொந்த கனவு வீட்டில் அன்றைய இரவை நிம்மதியாக உறங்கிக் கழித்தாள். ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நடுநிசி தாண்டிய பின்னரேயே உறங்கச் சென்றாள்.

அடுத்த நாள்... அது ஒரு அமாவாசை இரவு. வழமை போலவே காவேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, நேரம் நள்ளிரவைத் தாண்டி ஒரு மணியை அண்மித்துக் கொண்டிருந்தது.

அப்போது, 'வீல்' என்று பேய் கூச்சல் போட்டபடியே படுக்கையிலிருந்து காவேரி எழுந்தாள். அந்த வீடே அக்கூச்சலில் அதிர்ந்து போனது. நிசப்தமான நேரம் என்பதால் கூச்சல் இடியோசை மாதிரி இருளைக் கிழித்துச் சென்றது. கணவனும், பிள்ளைகளும் பதற்றத்துடன் காவேரியிடம் 'என்ன நடந்தது' என்று கேட்டார்கள். ஏதோ கெட்ட கனவு கண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஒரு அகோரமான பெரிய முகம் தன் முகத்திற்கு அருகே வந்து போனதாகவும் அது ரொம்பவும் அவலட்சனமாக இருந்ததாகவும் காவேரி திக்கித் தடுமாறி சொன்னதைக் கேட்ட அந்தக் குடும்பம், பயத்தில் உறைந்து போனாலும் பிரமையாக இருக்கும் என்று கணவன் நினைத்துக் கொண்டான். பயண களைப்பு, புதிய இடம், இன்னும் வெளிநாட்டு வாழ்க்கையில் இருந்து விடுபடாத மனம் என்று பல காரணங்கள் இருக்கலாம் என அவன் நினைத்தபோது, வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
தேவா  பூசாரி
பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பெரியவர், எழும்பி வந்து என்ன சத்தம் என்று விசாரித்தார். நல்ல மனிதர். விஷயத்தை சொன்னதும் 'அதெல்லாம் அப்படித்தான்' என்று சொல்லியபடியே விபூதியை கொஞ்சம் சாமி தட்டில் இருந்து எடுத்த அவர், சாமியை நினைத்து காவேரிக்கு விபூதி பூசி விட்டார். பிறகு தான் காவேரியின் படபடப்பு அடங்கியது. ஆனாலும் காவேரியின் வாழ்க்கையில் அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவே இருந்தன.காவேரியின் வீட்டு சோற்றில் மண் கொட்டி கிடப்பதும், சமைத்து வைத்த சாதம் சில நிமிடங்களிலேயே கெட்டுப் போவதும், காவேரி திடீர் மயக்கமுற்று கீழே விழுவதுமாக காவேரியின் வீடு சில நாட்களிலேயே அலங்கோலமாக மாறிப்போய் விட்டது.

காவேரியின் உடம்பில் வெளிநாட்டுப் பேய் ஒண்ணு குடியிருக்கு என்ற செய்தி அந்த ஊர் முழுவதும் காட்டுத் தீயாக பரவ, இந்தப் பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர, அவளின் கணவன் பேய் விரட்டுவதில் கை தேர்ந்தவராக இருக்கும் தேவா பூசாரியை அணுகினார்.

தேவா ஆளைப் பார்த்ததுமே தீய சக்தி குடியிருப்பதை உறுதிசெய்து விட்டு, பரிகார பூஜைக்கு ஒரு நாளையும் குறித்து கொடுத்தார். அதுவரையிலும் காவேரியை தீய சேஷ்டைகளில் இருந்து பாதுகாப்பதற்காக காவேரிக்காக ஒரு எலுமிச்சை பழத்தை மந்திரித்து வெட்டினார்.

அடுத்த சில நாட்களில் காவேரியின் வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடக்க, தேவா தமது குழுவினர்களோடு சென்று காவேரியின் வீட்டு வாசலில் இறங்கினார். அப்போது நேரம் மாலை ஏழு மணியிருக்கும். அப்போது தூரத்தில் ஒரு சாக்குருவி எழுப்பிய மரண ஓலம் அந்தப் பகுதியையே கிலி கொள்ள வைத்தது.

அந்த மரண ஓலம் தேவா பூசாரி செய்யப் போகும் வேலைக்கு அபச குணமாக இருந்தாலும், அவருக்கு அது பெரிய விடயமாக தெரியவில்லை. அவர் பார்க்காத, கேட்காத மரண ஓலமா என்ன! தைரியத்தோடு காவேரியின் வீட்டுக்குள் நுழைந்த போது,"டேய் பூசாரி என்னை ஒழிச்சுக்கட்ட வந்திட்டயா? அது நடக்காதுடா!" என்று பூட்டிய அறைக்குள் இருந்த காவேரி உரக்கக் குரல் எழுப்பி கத்தினாள். இதை வைத்து காவேரியின் உடம்பிற்குள் ஒளிந்திருப்பது வெளிநாட்டு ஆவி அல்ல. லோக்கல் ஆவிதான் என்பதை தேவா புரிந்து கொண்டு புன்னகைத்தார். அன்று காவேரியின் சேட்டை அதிகமாக இருந்ததால், அவளை ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்த விடயத்தை பூசாரியிடம் காவேரியின் கணவன் கூறியதைக் கேட்ட  தேவா, நிலமை மோசமாகி வருவதை உணர்ந்து உடனடியாக பூஜைக்கான மன்று அமைக்கும்படி சொன்னார். அடுத்த சில மணி நேரத்துக்குள் மன்று பரிபூரணமாக காட்சியளிக்க பூசாரி அதில் உடுக்கோடு அமர்ந்து குல தெய்வத்தை நினைத்து பாட ஆரம்பித்தார். காவேரி அடைக்கப்பட்ட அறையின் கதவை திறக்கும்படி பூசாரி கண் ஜாடை காட்ட உதவியாளர்கள் ஓடோடிச் சென்று கதவை திறக்கவும், தலைவிரி கோலத்தோடு இருந்த காவேரி வெளியே மின்னலென பாய்ந்து ஓடி வருவதையும் பார்த்து கூடி இருந்த ஊர்வாசிகள் குலை நடுங்கிப் போனார்கள்!

"ம்... நீ யாரு எதுக்காக இந்த அப்பாவியை வதைக்கிறே?" என்று பூசாரி மிரட்டும் பார்வையோடு காவேரியை உற்றுப் பார்த்துக் கேட்டார்.

"டேய்! என் புருஷனையும் இரண்டு புள்ளையையும் கொடுத்திடு.... இப்போதே போயிடுறேன்" என்று காவேரிக்குள் குடியிருந்த அந்த தீய சக்தி பேசியபோது, அவளின் உடம்பில் இருப்பது பேராசைப் பிடித்த எச்சில் பேய்தான் என்பதை பூசாரி கணக்கு பண்ணிக் கொண்டார்.

பூசாரி விடாமல் அந்த தீய சக்தி யார் என்பதை தெரிந்து கொள்ள காவேரியிடம் பேச்சுக் கொடுக்க, அது பெண்ணாக உயிருடன் இருந்தபோது விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதையும் தன் கணவனையும் பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போகும்வரை ஓயப்போவதில்லை என்பதையும் பூசாரி அறிந்து கொண்டார்.

காவேரி அட்டன் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவள். வெளிநாட்டுக்கு செல்லும் முன் அட்டனுக்கு சென்று தமது பெற்றோர்களை பார்த்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் ஏதோ வழிப்போக்கா சென்ற ஒரு தீய சக்தி, காவேரியின் உடம்பில் அண்டியிருக்கிறது என்பது தேவாவிற்கு புரிந்தது.

"நான் இது உடம்பிற்குள்ள புகுந்ததே என்னோட ஆசையை நிவர்த்தி செய்யத்தான். ஆனா, இவ அடுத்த சில நாட்களையே வெளிநாட்டிற்கு போய்ட்டா. என்னால் இவளோட கடல் தாண்ட முடியாததால் நான் இங்கேயே விமான நிலையத்தை அண்டியதாக சுற்றிக் கொண்டிருந்தேன். இவ திரும்பவும் வந்தவுடன் விமான நிலையத்தில் திரும்பவும் இவள் மீது தாவிட்டேன்" என்று தீயசக்தி ஏகத்தாளமாக சொல்லிச் சிரித்தது. இதைக்கேட்டு தேவா பூசாரி கடுப்பானார். 'இந்த ஆவி யாரு ஏன் பிடிச்சது. அவ எப்படி செத்தா என்பது எமக்கு தேவையில்லாத விடயம், இது வழிதவறி காவேரியை பிடித்த ஆவி, அதனால், இது கேட்பதை கொடுத்து அனுப்புறதுதான் சரி' என்ற முடிவுக்கு வந்த தேவா, மூன்று கனிகளில் அந்த தீய சக்தி கேட்ட அவளது கணவன், பிள்ளைகளின் மாதிரிகளை உருவாக்கினார். பின்னர்,
"நீ விருப்பப்பட்டதையும் சாப்பிட்டுப் போ!" என்று கட்டளையிட உணவு பண்டங்களை சில நிமிடங்களிலேயே கபளீகரம் செய்த அந்த துஷ்ட ஆவி, தேவாவின் மந்திரப் பிடியில் தள்ளாடிய போது, பூசாரி காவேரியின் உச்சித் தலைமயிரை வெட்டி போத்தலில் அடைத்தார். பிறகு அனைத்து பரிகார பூஜையும் சுடுகாட்டுக்கு சென்று முடித்து விட்டு வெற்றியோடு வீடு திரும்பினார். இப்போது காவேரி சுகமாக இருப்பதோடு விடுமுறை முடித்து மறுபடியும் வெளிநாடு செல்லும் ஆயத்தப் பணிகளில் இறங்கி இருப்பதாக தேவா பூசாரி சொல்கிறார்.

No comments:

Post a Comment