Saturday, November 21, 2015

யாழ்ப்பாணத்தின் அடையாளம்மணி  ஸ்ரீகாந்தன்
டெக் தொழில்நுட்பம் வளர்ந்து, உலகம் அவசரமாக இயங்கத்
தொடங்கிவிட்ட இந்த நவீன காலத்தில், நாமும் அந்த வேகத்தில் ஈடுகொடுத்து பயணிக்க வேண்டியது காலத்தின் தேவை.

இந்த மாற்றமும் வேகமும் அவசியம் என்றாலும்கூட, இயற்கை வைத்திய முறைகள், பாரம்பரிய உணவுகள், பழக்கங்கள், இயற்கை சார் விவசாயம் போன்றவற்றை 'பொருந்தி வராத பழசுகள்' என எட்டி உதைத்துவிட்டு கண்மண் தெரியாமல் போய்க் கொண்டிருக்க வேண்டயதில்லை. இப்படிச் செய்வதால், நீங்கள் அறியாமலேயே பல உடல் பிரச்சினைகளை நீங்கள் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கிறீர்கள் என்பதே அர்த்தமாகும்.
இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் நம்மைத் திருப்பித் தாக்கும் என்பது உணர்ந்து கொள்ளப்பட்டிருப்பதால் இயற்கை முறைகளுடன் இணைந்து பயணிக்கும் முறைகள் இப்போது மீண்டும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற ஆரம்பித்துள்ளன. தமிழகத்தில் இயற்கை விவசாய முறைகள், இயற்கை வைத்திய முறைகள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

நம் நாட்டிலும் இவ்வாறான இயற்கைசார் உற்பத்திகள் இருக்கின்றனவா எனத் தேடிப்பார்த்த போது, யாழ். மாவட்டத்தில் சில இடங்களில் இயற்கை சார்ந்த தொழில் முறைகள் இப்போதும் கைகொள்ளப்பட்டு வருவதை அறிந்தோம். அதில் பாரம்பரிய நல்லெண்ணெய் உற்பத்தி முக்கியமானது.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை, சண்டிலிப்பாய், மாதகல், வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் நல்லெண்ணெய் உற்பத்தி பாரம்பரிய முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆனைக்கோட்டை நல்லெண்ணெய்க்கு ஒரு தனி மவுசு இருக்கிறது.
தம்பிப்பிள்ளை
கணேசலிங்கம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா செல்பவர்களில் விசயம் தெரிந்தவர்கள், ஆனைக்கோட்டைக்கு ஒரு நடை போய் நல்லெண்ணெய் வாங்கி வருவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆனைக்கோட்டையில் மட்டுமே இயந்திரங்களுக்கு பதிலாக செக்குகளில் நல்லெண்ணெய், பிழிந்தெடுக்கப்பட்டு வடிக்கப்படுகிறது.

பாரம்பரிய முறைப்படி புளியமரம், முதிரை, இழுப்பை மரங்களில் இருந்தே செக்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த செக்குகளிலேயே நல்லெண்ணெய் ஆட்டப்படுகிறது.

"புளியமரம் உரலாகவும், முதிரை உலக்கையாகவும் இழுப்பை துலாவாகவும் இங்கே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மாடுகளுக்கு பதிலாக சிறிய உழவு இயந்திரம் (லேன்ட் மாஸ்டர்) பயன்படுத்தப்படுகிறது" என்று எமக்கு விளக்கம் கொடுக்கிறார், தம்பிப்பிள்ளை கணேசலிங்கம்.

ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் உற்பத்தியில் நான்காவது தலைமுறையாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவரின் முப்பாட்டன் கதிரேசுவினால் 19ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த தொழில், பிறகு அவருடைய மகன் தில்லையம்பலம் கந்தையாவினால் தொடரப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக, பல தடைகளைத் தாண்டி, சுத்தமான நல்லெண்ணெய் உற்பத்தியாளர்கள் என்ற நற்பெயரை பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள் கதிரேசு குடும்பத்தவர்கள்.

ஆனைக்கோட்டைப் பகுதியில் முன்னரைவிட நல்லெண்ணெய் தொழில் செய்வோரின் எண்ணிக்கை இப்போது மிகவும் குறைந்து விட்டதாம்.

"புதிய தொழில்கள், வெளிநாட்டு மோகம் போன்றவற்றால் தொழில் செய்ய வருவோரும் குறைந்து விட்டார்கள். மாடுகளை வைத்து செக்கு இழுக்கவும் முடியாமல் போய்விட்டது. ஒரு செக்கை இழுக்க இரண்டு மாடுகள் வேண்டும். குறைந்த பட்சம் பத்து சோடி மாடுகளாவது தேவை. அதை பராமரிக்க பலர் தேவைப்படுவார்கள். அதோடு ஒரு சோடி மாடுகளால் தொடர்ச்சியாக இரண்டு மணிநேரம்தான் செக்கிழுக்க முடியும். அதன் பிறகு அவற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் உழவு இயந்திரம் அப்படி அல்ல. ஸ்டார்ட் செய்து விட்டால் நாம் நினைக்கிற வரை அது நிற்காமல் ஒரே அளவான வேகத்தில் ஓடும். ஆட்கள் தேவையும் குறைவு. இலகுவாக வேலை முடியும். நேரமும் மிச்சமாகும்" என்று சொல்லும் கணேசலிங்கம்,

"அனுராதபுரம், கெக்கிராவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எள்ளைக் கொள்வனவு செய்கிறோம். எப்படிக் கொள்வனவு செய்தாலும் 100 மூட்டை எள்ளில் 10 மூட்டை மண்ணும் கப்பியும்தான். நன்றாக விளைந்து முற்றிய எள்ளு ஒரு கிலோவில் அரைப் போத்தல் எடுக்கலாம். ஆனால் தரமில்லாத கிலோ எள்ளு என்றால், கால் போத்தல் மட்டுமே கிடைக்கும். நாம் எடுக்கும் நல்லெண்ணெய்யை உணவுக்காகவும், வைத்தியத்திற்காகவும் என இரண்டு வகையாக பிரித்து எடுத்து போத்தல்களில் அடைக்கிறோம். இந்த தொழில் நலிவடைந்து வருவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. செக்குக்கான மரங்கள் முக்கியமாக புளியமரம், கிடைப்பது அரிதாகி வருகிறது. உரலாகப் பயன்படும் புளியமரம் சீக்கிரத்தில் தேய்ந்து உடைந்து விடுகிறது. அதனால் புதிய உரல்களை அங்கே வைக்க வேண்டும். அதற்கு புளிய மரங்கள் கிடைக்க வேண்டுமே! இரண்டு மரங்களை தறித்தால் 4 மரம் வளர்க்க வேண்டும். ஆனால் இங்கே யார் அப்படி மரம் வளர்க்கிறார்கள்?" என்று நிறுத்தி பெருமூச்சு விட்டவர், மேலும் தொடர்ந்தார்,
"புளிய மரத்திற்குப் பதிலாக வேறு மரங்களை உரலாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது நல்லெண்ணையாக இருக்காது. இந்தத் தொழிலில் நாங்கள் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு கலப்படமில்லாத சுத்தமான நல்லெண்ணெய் உற்பத்திதான் காரணம். புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழர்கள் எங்களின் நல்லெண்ணெய்யை கொள்வனவு செய்கிறார்கள். யாழ்ப்பாணம் முழுவதும் விநியோகம் செய்யவே போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால் நாடு முழுவதும் விநியோகம் செய்ய முடியாமல் இருக்கிறது. நிறைய இடங்களிலிருந்து இங்கே வந்து எம்மிடம் வாங்கிச் செல்கிறார்கள். பாரம்பரியமாக செய்துவரும் இந்தத் தொழிலில் தற்போது பெரிய இலாபம் இல்லாவிட்டாலும், மக்களுக்கு சுத்தமான எண்ணெய்யை கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தொடர்ந்தும் இந்தத் தொழிலை செய்து வருகிறோம். என் பாட்டன், முப்பாட்டன் செய்த தொழிலை நானும் செய்வதில் ஒரு ஆத்ம திருப்தியும், மன மகிழ்ச்சியும் ஏற்படுகிறது" என்று கணேசலிங்கம் மனசு நிறைந்த பூரிப்போடு நிறைவு செய்தார்.

நல்லெண்ணெய் சிறப்புகள்

நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

பொலிவான சருமம்: எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளதால், உடலிலும் இரத்தக் குழாய்களிலும் கொழுப்புக் சேராது. தொப்பை விழாது. இளமைத் தோற்றத்துடன் ஆரோக்கியமும் தொடரும்.

நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். நல்லெண்ணெயில் சமைத்த உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் கெடாமலிருப்பதைக் குடும்பத்தலைவிகள் அறிந்திருப்பார்கள். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம், இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

பண்டைய இந்திய மருத்துவரான சரகர் மிகச்சிறந்த எண்ணெய் எள் எண்ணெய்தான் என்று கூறியுள்ளார். இரும்புச் சத்து, கால்சியம், பி-வைட்டமின்களும் இதில் உள்ளன. மூலத் தொந்தரவு, மாதவிலக்குத் தொந்தரவு, மூச்சுக்குழல் பிரச்னைகள், தோல் தொல்லை முதலிய பிரச்னை உள்ளவர்கள் எள்ளுருண்டையை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும்.

No comments:

Post a Comment