Wednesday, November 18, 2015

சிறுகதைகள்

இதுவும்  அல்லாஹ்ட  கொதறத்துதான்

     

-எஸ். முத்து மீரான்-

நாளைக்கு பள்ளியில் மையதினாண்டவர்ர கந்தூரி. மக்களெல்லாம் குதுகலத்தில் இருக்கிறார்கள். இன்று கிண்ணியாவிலிருந்து என் மனைவியின் தம்பியும் குடும்பமும் வருகிறார்கள்.

எங்கள் வீட்டு வளவிற்குள் நிறையக் கொய்யா மரங்கள் நிற்கின்றன. இப்பொழுது கொய்யா மரங்கள் நிறையக் காய்த்துக் கிடக்கிறது. இரவில் இம்மரங்களில் உள்ள பழங்களை வெளவால்கள் சதா பறித்து சாப்பிடுவதால், காலையில் பழங்கள் கிடையாமல், பிள்ளைகள் வேதனையோடு போவதைப் பார்த்து எங்களுக்கும் கவலையாக இருக்கும். இதனால் எங்களோடு எங்கள் வீட்டில் உடன்பிறவாச் சகோதரன் போல் வாழும் ஹாய் எளயம்பி, வெளவாலிடமிருந்து இரவில் பழங்களைப் பாதுகாக்க மரங்களில் சகடை கட்டியுள்ளான். பெரிய தகரக் கேத்தலின் உள்ளே சின்னக் கற்கள் சிலதைப் போட்டு அதில் கயிற்றைக் கட்டி இழுக்கும் போது சத்தம் வரும். சத்தத்தின் பயத்தால் வெளவால்கள் பறந்து போய்விடும். இதைப் பகலில் ஆட்டினால் அணில்கள் ஓடிவிடும். இதை என் பிளளைகள் ஒரு விளையாட்டாக நினைத்து பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த உடனேயே, கயிற்றை பிடித்து ஆட்டிக்கொண்டே இருப்பார்கள்.

மரங்களில் சகடை கட்டிய பிறகு, இரவில் வெளவால்கள் பழங்களை சாப்பிட வருவது குறைவு. மரத்தில் பழங்கள் கூடுதலாக கிடைக்கின்றன. இதனால் பிள்ளைகள் காலையில் நேரத்தோடு எழும்பி கொய்யா மரங்களின் கீழ் நிற்பதைப் பார்த்து என் மனைவி "இஞ்ச.... கொய்யாப் பழம் பொறக்கின போதும் கெதியா வாங்க... பள்ளிக்குடத்துக்கு போறல்லியா? நேரத்தோட போகாட்டி வாத்தி அடிப்பான். ங்.. கெதியா வாங்க... ங் நல்லாப் பொழுதும் ஏறிப் போச்சு..." என்று பிள்ளைகளை அததட்டிக் கூப்பிட்டு விட்டு வீட்டிற்குள் வருகிறாள். தாயின் சொல்லுக்கு அடிபணிந்து, பொறக்கி எடுத்த கொய்யாப் பழங்களோடு பிள்ளைகள் வருகிறாள். இவர்களைக் கண்ட மனைவி 'ங்', செரி பழத்தைக் கொண்டு வெச்சிப் போட்டு, கிணத்தடிக்கு போய் பல்லத் தீட்டுங்க..." என்று கூறியபடி துவாயை எடுத்துக் கொண்டு அவளும் கிணத்தடிக்கு போகிறாள்.

பொழுது ஏறிக்கொண்டிருக்கிறது. வாசலில் நிற்கும் இளந்தென்னையிலிருந்து காகமொன்று மூச்சுப்பிடித்துக் கத்திக் கொண்டிருக்கிறது. "சூய்! என்ன இப்படிக் கத்துறாய்?... தம்பியும் புள்ள குட்டியோட வாறெண்டு சென்னான்... என்ன வாரானா?" என்று கேட்டபடி, கிணற்றடிக்கு போய் பிள்ளைகளைக் கழுவித்துடைக்கிறாள்.

அப்பொழுது வீட்டு வாசற்கேற்றடியில் என் மனையின் தம்பி, தன் குடும்பத்தோடு ஆட்டோவில் வந்து இறங்கி வருகிறான். அவனையும் அவன் குடும்பத்தையம் பார்த்து, வீடே சிரிக்கிறது. இவன் வெளியூரில் திருமணம் முடித்து அங்கேயே குடும்பத்தோடு வாழ்கிறான். இவன் ஆசிரிய பயிற்சியை முடித்து, கிண்ணியாவுக்கு கற்பிக்க சென்றவன். அங்கேயே ஒரு பிள்ளையைக் காதலித்து கலியாணம் முடித்து, இன்று இரண்டு பிள்ளைகளோடு வாழ்கின்றான். நாளைக்கு எங்கள் ஊரில் முகைதீன் ஆண்டவர்ர கந்தூரி நடைபெற உள்ளதால் குடுபத்தோடு வந்துவிட்டான்.

ஏங்க ஊரில் வருடாவருடம் கந்தூரி வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்தூரி காலத்தில் எங்களஊரே விழாக்கோலம் பூண்டு, ஊரெல்லாம் சிரிக்கும். முகைதீன் ஆண்டவர் பள்ளிக் கொடி மரத்தில் பல வர்ணக் கொடியேற்றி, பள்ளியெல்லாம் சோடித்திருப்பார்கள். கந்தூரி வைபவம், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெறும். இந்த ஏழு நாட்களும் பள்ளியைச்சுற்றி, மிட்டாய்க் கடைகளோடு, காப்புச் சீப்பு, அலுமினியப் பாத்திரக் கடைகளும் வைத்திருப்பார்கள். எங்கள் ஊரிலேயே இதுதான் பெரிய கொண்டாட்டம். பனிரெண்டு நாட்களுக்கு பள்ளியில் மௌலூத் ஓதி முடித்து இறுதியில் மாடுகள் அறுத்து சோறு சமைத்து ஊரில் உள்ள எல்லோருக்கும் கந்தூரி கொடுப்பார்கள். இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத்தான் இவனும் அவன்  குடும்பமும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

கந்தூரிக்கு எதிராக ஊரில் பல துண்டுப் பிரசுரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கந்தூரி கொடுப்பது கப்று வணங்கிகளின் சிர்க்கான வேலையாம். இதை சில மௌலவிகள் ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் பிரசங்கம் செய்கிறார்கள். எனவே கந்தூரி விடயம் மிக்க பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

    அப்பொழுது எங்கள் பக்கத்து வீட்டுக்காரி பாத்துமுத்து, பதைபதைத்து வருகிறாள். இவள் ஒரு பெரிய புழுகு மூட்டை, எந்த விசயத்தையும் பெரிதுபடுத்தி, ஊரைக் கலக்கி விடுவதில் அவளுக்கு நிகர் அவள்தான். இவள் பதறி வருவதைப் பார்த்த என் மைத்துனன்

"என்ன மாமி! இப்படிப் பதறி வாற? என்ன விசயம்?" என்று கேட்கிறான். இவனின் கேள்வியை எதிர் பார்த்தவள் போல் பாத்துமுத்து

"தம்பேய்! நம்முட பள்ளில கந்தூரி குடுக்க கொண்டந்த மாடுகளை எல்லாம், லாவு ஆரோ அவுத்து வெரசி உட்டுட்டானுகளாம். வாங்கிற்கு வந்த எல்லா மாடுகளும் ஓடிப்பெயித்தாம், எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டந்த மாடுகள்.... எந்த நாசமத்து போவானுகள், இந்தச் சதிமானத்தச் செஞ்சானுகளோ....? ஊரு நல்லாக் கெட்டுப் போய்ச்சு... அங்க கடிச்சி இஞ்ச கடிச்சி, இப்ப அல்லாட பள்ளியிலயிம் கடிக்கத் தொடங்கிற்ரானுகள்.... பரம்பரை பரம்பரையா ஊரில நடந்த கந்தூரியை, இப்படிக் குடுக்காமச் செய்யிறத்திற்கு இந்த வளப்புணி நாய்களெல்லாம் ஆரு? பள்ளில பெரிய குழப்பமாக கெடக்காம்.... மரைக்கார் மாரெல்லாம், தலயப் பிச்சிக்கிக் கெடக்காகளாம்...." என்று கூறிவிட்டு,

"புள்ளேய்! ஒழுப்புளம் பிளன்டித் தண்ணி தாகா. வாயெல்லாம் எலச்சிப் பெயித்து... இதாரு! எப்ப ஊரால வந்த? ஊரில எல்லாரும் சுகமா?"என்றபடி மைத்துனனின் மனைவியைப் பார்த்து கேட்டுக்கொண்டு அடுப்படிக்கு போகிறாள். பாத்துமுத்துவின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த என் மச்சினன் கோபத்தை அடக்க முடியாமல் கொதித்து போய், "இது எல்லாத்திற்கும்; காரணம், இப்ப புதிசா ஓதிப்படிச்சி வந்த உலமாக்களும், புள்ளயளும்தான்.... இஸ்லாத்தில் ஒரு காலத்தில் எழுபத்தி மூணு கூட்டம் வருமெண்டு சென்ன கத இப்ப உண்மையாய் பெயித்து... இந்த கூட்டத்தில ஒரு கூட்டம்தான் இப்ப இதெல்லாம் செய்யிது. இஸ்லாத்தில் சிர்க்குகள் ஒழியத்தான் வேணும். கப்று வணங்குகிற கூட்டமும் ஒழியத்தான் வேணும். அல்லாஹ் செல்லாத விசயங்கள இஸ்லாமென்டு செல்லிக்கு ஒழுங்கா பல்லுத்தீட்டாம ஒருவித கோலம்; எடுத்துக்கு மனிசர நல்லா ஏமாத்தி வயிறு வளக்கிற வாப்பாமாரெல்லாம் தொலயத்தான் வேணும். சிர்க்குகள் உலகைவிட்டு அழியத்தான் வேணும். அதுக்காக வாழையடி வாழையாக ஊரில் கொடுத்துக்கந்த கந்தூரிய குடுக்காமச் செய்யிற செரியா? காலம் நல்லாக் கெட்டுப் போய்ச்சி. வட்டக்களவெட்டில பிச்ச போடாத வளப்புணியெல்லாம் இப்ப பெரிய ஆக்களாக ஊரில இருக்காணுகள். அவனுகளைத் திருத்தி அல்லா சென்னபடி சக்காத்து சதக்காவக் குடுக்கச் செல்லாம ஏதோ ஒளுப்புளம் இஸ்லாத்தப் படிச்சிக்கு வந்து இப்ப பள்ளில பெரியாளாகிற்ரானுகள். அட்ரஸ் இல்லாதவனெல்லாம் பள்ளிக்கு றஸ்டியா வந்து ஊரில பெரிய பெரிய கொழப்பமெல்லாம் செய்யிறாணுகள். முந்தியெல்லாம் இப்படி இந்த ஊரில நடந்தையா? இல்லியே.... இப்பதான் இதெல்லாம் வருகிது." என்று என் மச்சினன் மனதில் பட்டதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு பெருமூச்சை விடுகிறான். என் மனைவி வேதனையோடு தம்பியையும் அவன் பிள்ளைகளையும் பார்க்கிறாள். எவ்வளவு ஆசையோடு, பிள்ளைகுட்டிகளோடு வந்தவனுக்கு இப்படியொரு இடி விழுமென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

குசினிக்குள் தேயிலையைக் குடித்துவிட்டு பாத்துமுத்து ராத்தா வருகிறாள். அவளிடம் வேதனையோடு, குந்திக்கொண்டிருந்த மச்சினன் "அப்ப நாளைக்கு கந்தூரி இல்லியாமா?" என்று தன் வேதனையை வெளிப்படுத்த, பாத்துமுத்து,

"ஆரு சென்ன? நாளைக்குத்தான் ஒரு நாளும் இந்த ஊரில குடுக்காத மாதிரி கந்தூரி குடுக்கப் போறங்க. ஓடின மாடுகளை எல்லாம் புடிச்சிக்காறதுக்கு, ஆக்கள் பெயித்தாங்க. போன மாடுகளெல்லாம் நம்முட பள்ளக்காட்டுக்க நிற்கிறதாக வெசகளமும் வந்திற்ரு.. இவனுகள்ள இந்த சலசலப்பு புலுடாக்களுக்கெல்லாம்  நம்முட ஊரான் அசைவானா? நாளைக்கு கந்தூரி மௌலத்தெல்லாம் ஒழுங்கா நடக்கும் எங்கிட பள்ளித்தாய் மரைக்கார், மீராமய்யதீன் கடும் உசாரா இருக்கிறாரு" என்று சொல்லிக் கொண்டு வெற்றிலைப் பொட்டிய எடுத்து வெற்றிலை போடுகிறாள்.

    அப்பொழுது, சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் தனிக்கட்டையாக வாழ்ந்து வரும் எளயம்பி வருகிறான். கலியாணம் முடித்து பிள்ளை குட்டிகளில்லாமல், மனைவி இறந்த பின்னர், ஒண்டியாக வந்து எங்களோடு தங்கியவன் இப்பொழுது எங்களோடு எங்களில் ஒருவனாக வாழ்ந்து வருகிறான். இவன் ஒரு குசிப்பேர்வழி. இதனால் ஒரு கிழமையாக, இவன் எங்கள் பள்ளியில் நடக்கவிருக்கும் கந்தூரியையும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் பற்றி, வருவோரிடமும் போவோரிடமும் சதா பேசிப் பேசி மகிழ்ந்துகொண்டிருப்பான். இவனுக்கு பாத்துமுத்து ராத்தாவோடு கடும் விருப்பம். இளயதம்பியைக் கண்ட பாத்துமுத்து ராத்தா

"என்ன எளயம்பி பள்ளியடிப்பக்கம் போனியா? அங்க என்ன நடக்குது?" என்று கேட்க பாத்துமுத்து ராத்தாவின் கேள்வியை எதிர்பார்த்தவன் போல்,

"என்ர வாப்பா, எல்லாம் தடபுடலா நடக்கிது. இந்த முற கனக்க முட்டாசிக் கடையெல்லாம் வந்திரிக்கு. நாளைக்கு  பாவாமார்ர ராத்திபெல்லாம் இரிக்காம், எல்லாரையும் நேரத்தோடு வரட்டாம்.... பள்ளிய வளைச்சி குருத்து மணலெல்லாம் ஏத்தி போட்டிருக்கு..." என்று கூறிவிட்டு அவன் என் மச்சினனின் மக்களை ஆசையோடு கட்டிப் பிடித்துக் கொஞ்சுகிறான். சோம்பிக் கிடந்த வீடு, இளையதம்பியின் வருகையின் பின்னர், மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. என் மனைவி தன் தம்பிக்கும் அவன் குடும்பத்திற்கும் பகலைக்கு சாப்பாடு சமைக்கும் வேலையில் துரிதமாகி "எளயம்பிக் காக்கா! பகலைக்கு கறி ஆக்க, நம்முட கழுத்தறுத்தான் சாவல புடிச்சி ரகுமானியாத் தைக்கா மோதினிக்கிட்ட கொண்டு போய், தக்பீர் பண்ணிக்கு வா.... பொழுதும் ஏறிக்கிரிக்கி, கெதியா கோழியப்புடிச்சிக்கு போ..." என்று கூறித் தன் வேலைகளில் மும்மூரமாகிக் கொண்டிருக்கிறாள்.
   
மச்சினன் துவாயை எடுத்துக் கொண்டு, குளிப்பதற்காக கிணற்றடிக்கு போகிறான். அவனைத் தொடர்ந்து அவனுடைய பிள்ளைகளும் குளிப்பதற்குப் போவதைப் பார்த்து என் பிள்ளைகளும் போகின்றனர். எப்பொழுதும் குளிப்பதற்கு அடம்பிடிக்கும் என் பிள்ளைகள்; குளிப்பதற்கு சந்தோசமாகப் போவதைப் பார்த்து என் மனைவி கொடுப்புக்குள் சிரிக்கிறாள். கிணற்றடி மகிழ்ச்சியில் வெடிக்கிறது.

அந்திப் பொழுது அடங்கிக் கொண்டிருக்கிறது. எளயம்பி, வீட்டில் பள்ளிக்கு கொடுப்பதற்கு சமைத்த நாரிசா சோற்றுப் பெட்டியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு போகிறான். அப்பொழுது ஜும்ஆப் பள்ளி அதிகாரி, "லாவு ஓடிப்போன மாடெல்லாம் புடிபடாம பெரிய காட்டுக்குள்ள வழிமாறி ஓடிப் பெயித்தாம். மாடுகளையெல்லாம் புடிச்சிக்கந்த பொறகுதானாம் கந்தூரி குடுக்கிறயாம்.  நாள பகலைக்கு பள்ளில கந்தூரி இல்லியாம்" என்று, கூவுண்டு போகிறான்.

நாளைக்கு பள்ளியில் கந்தூரி இல்லை என்று சொன்னவுடனேயே என்வீடு அமைதியாகி விட்டது. அப்பொழுது "என்ர செல்லல்லாவே! இது என்ன கொதறத்து வாப்பா! இந்த கந்தூரிக்கு ஒரு கோடிக்கு மேலே செலவழிச்சி போட்டானுகளே வாப்பா! இந்த காசெடுத்து ஏழைக் குமருகளுக்கு ஊடு கட்டி குடுத்திருந்தாலும் எங்கிட பள்ளிக்கும் ஊருக்கும் பறக்கத்து அடிச்சிரிக்குமே! இது இப்ப ஒருவருக்கமில்லாம பெயித்தே! அல்லா இந்த கறுமமெல்லாம் ஆரைச்சுத்துமோ!" என்று கூறியபடி பாத்துமுத்து தலையில் அடிக்கிறாள். பாத்துமுத்துவின் நிலையைப் பார்த்து வாழைப் பாத்திக்குள் படுத்துக் கிடந்த என் நாய் பொட்டு ஊளையிடுகிறது.

என் பிள்ளைகளும் மைத்துனனின் பிள்ளைகளும் சேர்ந்து சகடைக் கயிற்றைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றனர். சகடையின் சப்தத்தில் அணில்கள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன. "இதுவும் அல்லாட கொதறத்துதான்" என்று கூறி நான் கொடுப்புக்கால் சிரிப்பதைப் பார்த்து என் மனைவி என்னை சுட்டெரிக்கிறாள்.  

No comments:

Post a Comment