Monday, November 2, 2015

'பிரவேகய' புகழ் வில்லன் கஜன் கணேசனுடன் ஒரு திறந்த மனசு பேட்டி

'தமிழ் ஊடகம் தமிழ்க் கலைஞர்களை

கண்டுகொள்வதில்லை'

நேர்கண்டவர் : மணி ஸ்ரீகாந்தன்

சிங்கள திரையுலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கி, அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம் 'பிரவேகய'. தென்னிந்திய திரையுலக படைப்பாளிகளின் பங்களிப்போடு, சிங்கள திரைத்துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை இத்திரைப்படம் கொடுத்திருக்கிறது. நாடு முழுவதும் சக்கை போடு போட்ட 'பிரவேகய' படம், விரைவில் வி.சி.டியிலும் வெளியாக உள்ளது. படத்தில் பல கதாபாத்திரங்கள் சிறப்பாக பேசப்பட்டாலும், வில்லனாக வந்த, இலங்கை திரைத்துறையில் பிரபலமான நடிகராகத் திகழும் ஜெக்சன் அந்தனி தனது நடிப்பாற்றலை திறம்பட செய்திருந்தார். படத்தில் ஜெக்சன் அந்தனி மனைவியின் தம்பியாக களமிறக்கப்பட்ட புதுமுகம் கஜன் கணேசன், நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார். நடிப்பில் கஜன் காட்டிய வேகம், தென்னிந்திய நடிகர்களுக்கே சவால்விடும் விதமாக இருந்தது. சிங்கள சினிமா ரசிகர்களின் கலைப்பசிக்கு கஜன் கணேசனின் நடிப்பு சரியான தீனிதான்.

கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கஜன் கணேசனுக்கு, கலையார்வம் ரொம்பவும் அதிகம். இயக்குனர் சொல்லும் காட்சிகளை மிகச் சரியாக கேட்ச் பிடித்து நடித்துக் காட்டுவதில் கஜன் கில்லாடிதான்.'பிரவேகய' படத்தின் அந்தக் கடைசி சண்டைக்காட்சியில் ஃபைட் மாஸ்டர் செல்வாவின் அதிரடி அசைவுகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு ஓரிரண்டு டேக்குகளுக்குள்ளேயே அந்தக் காட்சியை சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்.
"நான் படத்தில் நடித்த வி.ஜே. என்கிற பாத்திரத்தை பார்த்த, பொல்லாதவன் பட வில்லன் டேனியல் பாலாஜி என்னுடன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு, 'பிரமாதம், அருமையா பண்ணியிருக்கீங்க' என்று பாராட்டிய போது, அது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று கஜன் சொல்லும் போதே அவரின் கண்களில் பூரிப்பு பளிச்சிடுகிறது. ஏ. ஆர். எம். ரசீன் தயாரித்து வெளியிட்ட 'ஒரே நாளில்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கஜனுக்கு, 'பிரவேகய' ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது.

"நாம் என்னதான் திறமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், நம்மை ஏற்றுக்கொள்வதும், புறக்கணிப்பதும் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. ஆனாலும், என் ரசிகர்கள் என்னை பெருமனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு நடிகன் அந்தஸ்தை கொடுத்தது அவர்கள்தான். அந்தவகையில், நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எப்போதும் அவர்களை மறக்கவும் மாட்டேன். இலங்கைவாழ் ரசிகர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்" என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் கஜன்.

ரசிகர்கள் உங்களை அடையாளம் கண்டு ஆர்ப்பரிக்கிறார்களா? என்று கேட்டோம்.

"பொது இடங்களில் என்னை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கள ரசிகர்கள் 'ஹாய் நீங்க தானே வி.ஜே?' என்று கேட்டு கைகொடுக்கிறார்கள். அதோடு செல்ஃபியும் எடுக்கிறார்கள். ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது ரசிகர்களிடம் கிடைக்கும் அன்பும் பாராட்டுதலும்தான்" என்று சொல்லும் கஜன் மேலும் தொடர்ந்தார்.

"தமிழ் ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரிவதில்லை. அதற்கு அவர்களை குறை சொல்லவும் முடியாது. ஏனென்றால் தமிழ் ஊடகங்கள் 'பிரவேகய' படத்தை தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை. 'சிங்கள படம் தானே' என்று அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் ஏனோ உள்ளுர் கலைஞர்களை கண்டுகொள்வதே இல்லை. தமிழக கலைஞர்களுக்கு கொடுக்கும் மரியாதையும், வரவேற்பும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களை தட்டிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் என்ன பண்ணுகிறோம் என்று கொஞ்சம் எட்டியாவது பாருங்களேன்!" ன்னு கொஞ்சம் சூடாகவே கஜன் படபடக்கிறார்.
'பிரவேகய' படத்தில் கஜனின் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன தெலுங்குப்பட உலகம், கஜனுக்கு ஒரு படத்தில் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. "பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறேன். சிங்களத்திலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும், நமக்குத் தகுந்த மாதிரியான கதைகள் அமைந்தால் நடிப்பேன். அதோடு, விரைவில் இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவுள்ளேன்" என்று நம்பிக்கையோடு பதிலளிக்கும் கஜனுக்கு கலைத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவரின் கண்களில் தீப்பொறியாக....
"என்னோட கலை வாழ்க்கையில் நிறைய பேர் எனக்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறார்கள். அவர்களின், படத்தயாரிப்பாளர் சதிஸ்குமார், திருமதி.சதிஸ்குமார் ஆகியோரை என்னால் மறக்கவே முடியாது. அதோடு, எனக்கு எப்போதும் ஆக்கமும், ஊக்கமும் வழங்கும் என் துணைவியாரையும் மறக்க முடியாது. எனது வெற்றிகளுக்கு பின்னால் அவர்தான் இருக்கிறார்" என்றவர்,

"இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தமிழ்த் திரைப்படத்துறைக்கான தனிப்பிரிவு அவசியம் வேண்டும். இதுவரை இல்லை. இனியாவது அமைந்தால் நம் தமிழ் கலைஞர்கள் இங்கே படைப்புகள் செய்வதற்கு உதவியாக இருக்கும்!" என்ற வேண்டுகோளுடன் கஜன் விடைபெற்றார்.

No comments:

Post a Comment