Monday, November 30, 2015

தேவதாசி வரலாறு -14

பொட்டுக் கட்டும் சடங்கை வீட்டிலேயே நடத்த விரும்பும் குடும்பத்தினர் முதலில் ஒரு நல்ல நாளைத் தெரிவு செய்வார்கள். அன்றைய தினம் வீட்டைக் கழுவி அலங்கரிப்பார்கள். ஒரு திரிசூலத்தை எடுத்து அதற்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து அலங்கரித்து தாலியையும் திரிசூலத்திலேயே தொங்க விட்டுவிடுவார்கள். இந்தத் திரிசூலம்தான் மணமகன். அதாவது தெய்வத்தின் சார்பாக தாலி கட்டும் மணமகன். சடங்கு ஆரம்பமானதும் சாமி கும்பிடுதல், பெரியோரை வணங்குதல் போன்ற சம்பிரதாய சடங்குகள் முடிவடைந்ததும் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் தாலியை எடுத்து அக்குடும்பத்தின் முக்கியமான ஒரு பெண்மணியிடம் அளிப்பார். அப்பெண் தெய்வத்தின் சார்ப்பாக அச்சிறுமியின் கழுத்தில் அணிவிப்பார்.

இத்துடன் பொட்டுக்கட்டும் சடங்கு நிறைவு பெறும். அக்குடும்பம் தனது பிள்ளைகளில் ஒருவரை இறை பணிக்காக கோவிலுக்கு அர்ப்பணித்து விட்டதாக ஊராருக்கு இதன்மூலம் அறிவிக்கிறது என்று இச்சடங்கை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஊருக்கு தமது பெண் பிள்ளை பற்றி அறிவிக்கும் இன்னொரு சடங்காக, சிறுமியர் வயதுக்கு வந்ததும் எடுக்கப்படும் பூப்புனித நீராட்டு விழாவையும் குறிப்பிடலாம்.

'எங்கள் வீட்டில் பிள்ளைத்தாச்சியாக ஆகக்கூடிய ஒரு பெண் இருக்கிறாள்' என்பதை ஊருக்கு சொல்வதே இச்சடங்கின் அடிப்படை அம்சமாகும். அன்றைய கால கட்டத்தில் சந்ததி விருத்தி ஒரு முக்கிய விடயமாக இருந்தது. பெண்ணுக்கான முதல் கடமை பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் யுத்தம் நடக்கலாம் என்ற காலம் அது. தமிழ்நாட்டில் அரசர்கள் எப்போதும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும் எப்போதும் சண்டை செய்து வந்தார்கள். உலக வங்கியோ, சர்வதேச நாணய சபையோ அல்லது வங்கிகளோ இல்லாத காலம் அது. அன்று நிலவிய பொருளாதாரம் வேறு வகையானது. அதை யுத்த பொருளாதாரம் என்றே அழைக்க வேண்டும். ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டு மன்னன் மீது போர்ப் பிரகடனம் விடுத்து போருக்குச் செல்வான். போரில் வெற்றி கொண்ட மன்னன் அந்நாட்டின் கஜானாவை சூறையாடுவான். கால் நடைகளையும், குதிரைகளையும் அங்கே சேர்த்து வைக்கப்பட்டிருந்த தானியங்களையும் கைப்பற்றித் தனது நாட்டுக்குக் கொண்டு வருவான். திடகாத்திரமான ஆண்கள் அடிமைகளாக்கப்படுவார்கள். பெண்கள் சுற்றி வளைக்கப்பட்டு அழகிய, எடுப்பான பெண்கள் அரசரின் அந்தப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஏனைய பெண்களில் பலர் சேனாதிபதிகளின் இச்சைக் கிழத்திகைளாக்கப்படுவார்கள். ஏனையோர் அடிமைப் பெண்களாக வென்ற தேசத்துக்கு இட்டுச் செல்லப்படுவார்கள்.
இதுதான் அன்றைய யுத்தப் பொருளாதாரம். அண்டை நாடுகளைச் சூறையாடுவதன் மூலம் தமது நாட்டை வளம் கொழிக்கச் செய்வதே யுத்தப் பொருளாதாரம். இதனால் தமிழகமெங்கும், இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் ஓயாத யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. யுத்தம் மகிமைப்படுத்தப்பட்டது. யுத்தத்தில் வெல்வதே வீரம் எனப் பேசப்பட்டது. யுத்தத்தில் போராடுவதற்கென சமூகங்கள் உருவாக்கப்பட்டன. 'வீர மறவர்கள்' என்று தமிழில் அழைப்பார்கள். சங்கப் பாடல்களை எடுத்தோமானால் இந்த யுத்தம் எப்படி எல்லாம் மகிமைப் படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம். களத்தில் வீழ்ந்தவன் நெஞ்சில் காயப்பட்டவனாக இருந்தால் அவன் வீரனாம். முதுகில் காயம் பட்டவனாக வீழ்ந்திருந்தால் அதைப் பார்க்க நேர்ந்தால், இந்தக் கோழையையா நான் பெற்றெடுத்தேன்? என்று கலங்கும் தாய், தனக்கேற்பட்ட களங்கம் போக்குவதற்காக தன் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவாளாம்!

நம் நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது சிங்கள மக்களையும் சிங்களத் தாய்மார்களையும் யுத்தத்தின்பால் ஈடுபாடு கொள்ளவும் படைக்கு ஆள் திரட்டவும் அன்றைய அரசுகள் பல விளம்பர உத்திகளைக் கையாண்டன. சங்கப் பாடல்களில் காணப்படும் போர் மகிமைப்படுத்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த உத்திகள் வெறும் தூசு என்றுதான் சொல்ல வேண்டும். இதே சமயம் இந்த சங்ககால கதைகளை எல்லாம் விளம்பரப்படுத்தி தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகளால் சுலபமாக உசுப்பேற்ற முடிந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பெரும் படுகொலைகளும், சமூக, பொருளாதார அழிப்புகளும் யுத்த தர்மம் என்ற பெயரிலும், அது ஒரு பொருளாதாரமாகவும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இவ்விதமே அறியப்பட்டது. இதனால்தான் உலகெங்கும் கிரேக்க, ரோம, அராபிய பேரரசுகள் எழ முடிந்தது.

இந்த யுத்தம் காதலுடன் தொடர்புபடுகிறது. இதனால்தான் சங்க இலக்கியங்கள் போருடன் காதலையும் மகிமைப்படுத்தின. போரையும் காதலையும் மகிமைப்படுத்தாத பௌத்தமும் சமணமும் உலகப் பெரு சமயங்களாக வளர முடியவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். கள்ளக் காதலும் களவொழுக்கமாக அங்கீகாரம் பெற்றது. ஏனெனில், பெண்கள் வயதுக்கு வந்ததும் ஆணுடன் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. பிறக்கும் பிள்ளைகளில் ஆண் விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு அனுப்பப்பட்டான். போருக்கான மற்றும் விவசாயத்துக்கான தளவாடங்களை செய்தல் இன்னொரு முக்கிய பணி. போர் வரும்போது படையில் சேர்ந்து ஆண்கள் போரிடச் சென்றார்கள். போர் ஒரு அறமாக சொல்லி வளர்க்கப்பட்டதால் ஆண்கள் போர்களில் உற்சாகமாகவே கலந்து கொண்டிருக்க வேண்டும். இப்போதும் கூட சண்டையிடுவது ஒரு அறமாகவே போதிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தத் தற்கொலைப் போராளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாயைகளை உருவாக்கி அவற்றுக்காகத் தாராளமாக உயிர்விடலாம் என்று கோட்பாடுகள் இந்த அரசியல் இயக்கங்களாலும் மதங்களாலும் உலவவிடப்படுவதும் அவற்றின் பேரில் ஈசல்களாக இளைஞர்கள் உயிர்விடுவதும் இந்த இணய யுகத்திலும் நடக்கின்றபோது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு சாத்தியமானதாக இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

பூப்புனித நீராட்டு விழாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் இப்பின்னணியில் இருந்தே பார்க்கப்பட வேண்டும். அக்காலத்தில் வயதுக்கு வந்த பெண்கள் இருபது, இருபத்துரெண்டு வயதுவரையெல்லாம் கல்யாணத்துக்காகக் காத்திருக்கவில்லை. பெண்கள் சிறுமி பருவத்திலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. குடும்ப மற்றும் கிராம பொருளாதாரத்தைக் காப்பாற்றும் வகையிலும் சாதி அமைப்பை பேணும் வகையிலும் சொந்த மாமன்,  மகனுக்கே பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுவது இந்தியாவில் பரவலாக பின்பற்றப்படும் ஒரு பண்பு. இது இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. எனவே, பெண் வயதுக்கு வந்ததை அறிவிக்க வேண்டிய அவசியம் எழுந்தது, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக் காலத்தில்.

சிறுமி பருவத்தில் பெண்கள் குழந்தை பெற ஆரம்பித்து விடுவார்கள். பத்து, 12 குழந்தைகள் பெற்றுக் கொள்வது சர்வ சாதாரணம். நிலத்தில் வேலை செய்ய மனித சக்தி தேவையாக இருந்தது. பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் உயிர் பிழைத்து வாழும் என்று சொல்வதற்கில்லை. நோய்களால் மரணம் ஏற்படுவது சகஜம். கொள்ளை, அம்மை நோய்கள் கிளம்பி வந்தால் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக மடிந்து விடும். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலும் இலங்கையிலும் காலூன்றிய பின்னரேயே நவீன மருத்துவ முறைகளின் காரணமாக சராசரி மனிதரின் ஆயுட்காலம் வளர்ச்சி கண்டது. குடும்பங்கள் சுருங்கின.

பிள்ளை பெற்றுக் கொள்ளும் பெண்கள் சுமார் 25, 28 வயதாகும் போது குழந்தை வளர்ப்பில் இருந்து விடுதலைப் பெற்றவர்களாகி விடுவார்கள். அவர்களாலும் நிலத்தில் தமது பங்களிப்பைச் செய்ய முடிந்தது.

ஒரு பெண் ருதுவாகி, குழந்தை பெற்றுக் கொள்வதற்குத் தயாராகிவிட்டாள் என்பதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இருந்ததைப் போலவே,

எங்கள் வீட்டுப் பெண் பிள்ளையை நாங்கள் கோவிலுக்கு காணிக்கையாக்கி விட்டோம் என்று ஊருக்குச் சொல்ல வேண்டிய தேவை அன்றைய இந்திய சமூகத்தில் இருந்தது. ஏனெனில் பொட்டுக்கட்டப்பட்ட பெண்ணை எவரும் திருமணம் செய்யத் துணியமாட்டார்கள். பொட்டுக் கட்டி விடப்பட்ட பெண் தினமும் கோவிலுக்குச் சென்று அவளுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்.

கல்வியறிவு உயர்குடி மக்கள் மத்தியில் மட்டுமே நிலவி வந்ததால், கல்வியுடன் சம்பந்தப்பட்ட கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களை உருவாக்கவும் அக்கலைகளை வளர்க்கவும் வேண்டிய தேவை இருந்தது. உயர்குடி பெண்கள் கலைகளை பயிலவும், நிகழ்த்தவும் மாட்டார்கள். ரசித்து ஆதரவு தருவதே அவர்கள் செய்யக்கூடிய தொண்டு. எனவே கல்வியறிவு பெற்ற உயர்குடி மக்களுக்கு அடுத்த நிலையில் கலைத் தேர்ச்சி பெற்ற தேவதாசியர் திகழ்ந்ததில் வியப்பில்லை. கலைகளில் சிறந்த, ஆடவும், பாடவும், அபிநயிக்கவும் தெரிந்த - தம்மை நன்கு அலங்கரிக்கவும், அன்புடன் உரையாடவும் கற்றிருந்த இந்த தேவதாசிப் பெண்களிடம் உயர்குடி மக்களான வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், சேனாதிபதிகள் என்போர் மயங்கியதில் வியப்பு இருக்க முடியாது. அன்றைக்கு அதுதான் தர்மம்.
ராஜராஜசோழன் காலத்திலேயே தேவதாசிகள் தமிழகத்தில் அறிமுகமானார்கள் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தஞ்சை பெரிய கோவிலில் நடனமாடுவதற்கு 400 பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தஞ்சையில் இவ்வளவு பெண்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு நடனம் பயிற்றுவிக்கப்பட்டது.
இப்பெண்களுக்கு தேவையான சகல வசதிகளையும் மன்னர் செய்து கொடுத்தார். இதற்கென தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே மூன்று வீதிகளை ஏற்படுத்தி வீடுகளை அமைத்தார். வடக்கில் இருந்த தெரு வடக்கு தளிச்சேரி என்றும், தெற்கில் இருந்த தெரு தெற்குத் தளிச்சேரி என்றும் அழைக்கப்பட்டன. வடக்கு தளிச்சேரியில் 96 வீடுகளும், தெற்கில் 96 வீடுகளும், மூன்றாவது வீதியில் 18 வீடுகளும் இருந்தனவாம். இவர்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டன.

தமிழக வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையில் தேவரடியார்கள் நியமிக்கப்பட்ட ஒரே கோவில் தஞ்சை பெரிய கோவில் மட்டுமே.

சேரமங்கை, எடுத்த பாதம், குந்தவை, நகரத்தாள், இளங்கோயில், ஆடவல்லாள், சீருடையாள், அறிவாட்டி, பொன்னாலமந்தாள், பூங்காலி, தில்லைக்கரசு - இவை எல்லாம் இப்பெருங்கோவிலில் நடனமாடிய பெண்களின் பெயர்கள்!  

No comments:

Post a Comment