Thursday, October 1, 2015

டொக்டர் தாஸீம் பேசுகிறார்...

காட்டாற்று வெள்ளத்தில் தோணியில் பயணம் செய்த அந்த திகில் நிமிடங்கள்


மணி  ஸ்ரீகாந்தன்
 
டொக்டர் ஏ.எல்.கே. தாஸீம் நாடறிந்த நல்லதொரு படைப்பாளர். கலை இலக்கிய பணிகளில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தொண்டாற்றி வரும் இவர் ஒரு பல்துறைக் கலைஞரும் ஆவார். நோய்தீர்க்கும் டாக்டராக கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கொம்பனி வீதியில் சேவையாற்றிய இவரின் பொதுப்பணிச் சேவை அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டிலும் தொடர்ந்திருக்கிறது. அதற்காகவே இவரின் சேவையைப் பாராட்டி மலேசிய இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். மருந்து மாத்திரை இலக்கியப் படைப்பு சமூக பொதுப்பணி என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் தாஸீமை அவரின் அலுவலகத்தில் ஒரு காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
"என் தந்தையார் ஓர் இலக்கிய ஆர்வலர். ஒரு சம்பவத்தை பார்த்தால் அடுத்த நொடியே அதைப்பற்றி கவிதைபாடுவதில் கில்லாடி. ஒருநாள் எங்கள் வீட்டு வேலியில் பீர்க்கம்கொடி படர்ந்திருந்தது. அந்த கொடி முழுவதும் பூக்கள் பூத்திருந்தன. பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அப்போ எனக்கு பத்து வயதிருக்கும். நானும் அப்பாவுடன் அந்த பீர்க்கம் பூக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியே என் தந்தைக்கு ஒரு கவிப்பாட்டு வந்து விட்டது. பீதாம்பரமே பீர்க்கே நீ பூத்திருக்காய் காதல்வண்டு வந்து காலையிலே காணுமென்று அந்திக்கு பூத்து அழகு மஞ்சள் தான் பரப்பிவந்திங்கு நீ வளர்ந்தாய் வண்டுகளை ஏமாற்ற....  
என்று தொடர்ந்தது அந்த கவிப்பாடல். அவர் பாடிய பிறகுதான் எனக்கு பீர்க்கம் பூ மாலையில் தான் பூக்கும் என்ற விடயமே தெரியவந்தது. என் தந்தையின் பாதிப்புதான் என்னை ஒரு இலக்கிய படைப்பாளனாக உருவாக்கியது என்று சொல்லும் தாஸீம் தனது பூர்வீகம் பற்றி இப்படி விபரிக்கிறார்.
கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்
அம்பாறை மாவட்டம் கல்முனைக்குடிதான் என் சொந்த ஊர். என் தந்தையின் பெயர் டொக்டர் அஹமட் தாய் உம்முசல்மா எனது குடும்பம் பரம்பரையாக வைத்திய தொழில் செய்து வந்தார்கள். எங்கள் பரம்பரையில் நான் ஐந்தாவது டொக்டர். குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர் நான் இரண்டாவது. என் குடும்பத்தில் என் தந்தையின் பாதிப்பு எனக்குத்தான் ரொம்பவும் அதிகம். அதனால்தான் நான் டாக்டராகவும் இலக்கிய படைப்பாளராகவும் இருக்கிறேன்" என்ற டொக்டர் தாஸீமிடம் பாடசாலை பிரவேசம் பற்றிக் கேட்டோம்"

கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையில்தான் என் ஆரம்பக் கல்வி ஆரம்பமானது. அப்போது அங்கே தலைமை ஆசிரியராக ஜின்னா சரிப்புதீனின் தந்தை புலவர் மணி சரிப்புத்தீன் மாஸ்டர் இருந்தார்.
என்னை முதல் நாள் பள்ளிக்கு மிதி சைக்கிளில் உள்ள பாரில் அமரவைத்து என் தந்தை அழைத்துச் சென்றது இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. புலவர் மணி சரிப்புத்தீன்தான் எனக்கு தமிழ் படித்து தந்தார். அவர் கற்றுத்தந்த தமிழரிவுதான் இன்றுவரை எனக்கு கைகொடுக்கிறது.
வகுப்பில் நான் மட்டும்தான் ரொம்பவும் குள்ளமானவன். ஆசிரியர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுவேன். அதனால் பாவாமாஸ்டருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவர் வழமையாக பாடசாலை வளாகத்திலிருக்கும் வாகை மரத்தடியில் மாணவர்களை அமரவைத்துதான் பாடம் சொல்லித்தருவார்.
இளமைக் காலத்தில்
அப்போது அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்கும் மாணவர்களுக்கு தண்டனையாக என் கையால் அவர்களின் தலையில் குட்டச்சொல்வார். நான் குள்ளம் என்பதால் எனக்கு அவர்களை குட்ட முடியாது. அதனால் என்னை பாவா மாஸ்டர் தூக்கி பிடித்துக்கொள்ள நான் மாணவர்களை குட்டுவேன் என்று பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்து சிரிக்கும் தாஸீமிடம் சின்ன வயது குறும்பு பற்றிக்கேட்டோம்.
"அப்போ எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எங்கள் வீட்டிற்கு என் பெரியப்பாவின் மகன் அவர் ஓர் ஆசிரியர் திருமணம் முடித்து புது மணத்தம்பதிகளாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். ஒருநாள் பக்கத்து வீட்டு பையன்களோடு நான் விளையாடச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது எங்கள் வீட்டு வாசலில் ஒரு மொரிஸ்மைனர் கார் நின்று கொண்டிருந்தது. என்ன ஏதென்று விசாரித்த போது புதுமணத்தம்பதிகளை அழைத்துக்கொண்டு மட்டக்களப்புக்கு சினிமா பார்க்கப்போவது தெரியவந்தது.
விடுவேனா நான் என்னையும் அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தினேன். அவர்கள் கேட்கவில்லை. என் அப்பா அம்மாவோடு புதுமணத்தம்பதிகளும் காரில் ஏறினார்கள். அப்போது நான் தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தேன். கார் புறப்பட்டுச் சென்று விட்டது. உடனே கோபத்தோடு எழுந்து வீட்டிற்குள் ஓடினேன். அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்த உண்டியலை தரையில் தூக்கிப்போட்டு உடைத்து அதிலிருந்து சில்லறைகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு ஆத்திரத்தோடு கல்முனை தாஜ்மஹால் தியேட்டருக்கு தனியாளாக படம் பார்க்கச் சென்றேன் என்று சொல்லும் தாஸீம் மற்றொரு ருசிகர சம்பவத்தையும் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
நண்பர் அஸ்ரப்புடன்..
மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்வும் அஷ்ரப்பும் நானும் நண்பர்கள் கல்முனைக்குடி அரபு மத்ரஸாவில் இருவரும் ஒன்றாகத்தான் படித்தோம். அஷ்ரப் வீட்டுக்கு பின்னால் உள்ள குளத்தில் நானும் அஷ்ரப்பும் கரணம் போட்டு குதித்து விளையாடுவோம்.

ஒருநாள் அஷ்ரப்போடு மத்ரஸாவுக்கு நான் சென்றபோது எங்களுக்கு எதிரே ஒரு பையன் அழகான புது சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்ட அஷ்ரப் "தாஸீம் அந்த சைக்கிளை நிறுத்துங்கள் அது அழகாயிருக்கு" என்றார்.

நான் உடனே பாய்ந்து சென்று சைக்கிளை பிடிக்க சைக்கிளிலிருந்த அந்தப் பையன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். அவன் விழுந்தபோது சைக்கிளில் பொருத்தியிருந்த டைனமோவும் உடைத்து விட்டது. கீழே விழுந்த பையன் எழுந்து எதுவுமே பேசாமல் சைக்கிளில் ஏறி மறைந்தான். அவன் எங்களுக்கு பயந்து கொண்டுதான் ஓடிவிட்டான் என்ற நினைப்போடு நானும் அஷ்ரப்பும் மத்ரஸாவை நோக்கி நடந்தோம். நாங்கள் நடந்து சில நொடிகள்தான் ஆகியிருக்கும். பின்னாலிருந்து மின்னல் வேகத்தில் வந்த ஒரு சைக்கிள் சடாரென்று எங்கள் இருவரையும் மறித்து நின்றது.

சைக்கிளிலிருந்த அந்த நபர் எங்கள் இருவரையும் பார்த்து உங்களில் வைத்தியரின் மகன் யார் என்று கேட்டார். நான்தான் என்று தலையசைத்தேன். உடனே என்னை மிரட்டலான குரலில் சைக்கிளில் ஏறச் சொன்னார். நானும் பயந்தபடியே சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்தேன். அஷ்ரப் என்னைப் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார். என்னை அந்த சைக்கிள்காரன் சில நிமிடங்களில் ஒரு வீட்டிற்கு முன்னால் இறங்கச் சொன்னான். இறங்கினேன் பிறகுதான் எனக்குப் புரிந்தது. அந்த வீடுதான் புதுச் சைக்கிளில் வந்து கீழே விழுந்த பையனின் வீடு என்பது.

பிறகு அந்த வீட்டு ஆட்கள் என்னைத் திட்டினார்கள். டைனமோ வாங்கித்தருவதாக உறுதிமொழி கொடுத்த பிறகே என்னை அந்தச் சைக்கிள் காரன் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான். பிறகு என் தந்தையும் அஷ்ரப்பின் தந்தையும் ஆளுக்கு பாதியாக பணத்தை போட்டு டைனமோவுக்கு தண்டப்பணம் கட்டினார்கள். இப்படி நான் குறும்புத்தனம் செய்திருந்தாலும் நான் படிப்பில் கெட்டிக்காரன். கல்முனைக்குடியில் மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் 950 புள்ளிகள் பெற்று டபுள் புரமோசனில் ஐந்தாம் வகுப்புக்கு மாறினேன் என்றால் பாருங்களேன். பிறகு கல்முனை சாஹிராவிலும் அதனைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்திலும் எனது கல்விப் பயணம் தொடர்ந்தது. என்றவரிடம் பாடசாலை மேடை நாடகங்களில் நடித்திருக்கியர்களா? என்று கேட்டோம். "கல்முனைக்குடி பாடசாலையில் நடந்த ஒரு நாடகத்திற்கு எனக்கு பெண் வேடம் தந்தார்கள். இப்ராஹீம் மாஸ்டர்தான் அந்த வாய்ப்பை தந்து நடிக்கச் சொன்னார். நாடக ஒத்திகையில் நான் பெண் வேடத்துடன் வந்ததைப் பார்த்த சக மாணவர்கள் கொல்லென்று சிரிக்க அவர்களைப் பார்த்து நானும் சிரிக்க என்னால் ஒத்திகையில் நடிக்கவே முடியாது போய் விட்டது. அதனால் எனக்கு நடிக்க முடியாது என்று இப்ராஹீம் மாஸ்டர் என்னை நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகு எனது எழுத்துலக பிரவேசம் தொடங்கியது. சாஹிராவில் வெளிவந்த இதழில் எழுதிய கட்டுரை பிறகு பத்திரிகைகளில் கதை கவிதை என்று இன்னும் எழுத்துப் பயணம் தொடர்கிறது.
அப்துல் காலாமை சந்தித்தப்போது..
ம் அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது. என்று கேட்டதும் ஒரு மறக்க முடியாத சம்பவத்தோடு அந்த காலத்தை நினைவு கூர்ந்தார் தாஸீம். "நண்பர் அஷ்ரப்பின் வீட்டிற்குப் பின்னால் ஒரு பெரிய குளம் இருந்தது. ஒருநாள் வெள்ளம் பெருக்கெடுத்து குளத்தையும் மூடி பல மைல்களுக்கு அப்பாலும் சென்றிருந்தது குளத்திற்கு குளிக்கச் சென்ற நானும் அஷ்ரப்பும் அந்தக் காட்சியைப் பார்த்தோம். அப்போது அந்தக் குளக்கரையில் அநாதரவாக ஒரு மரத்தோணி மிதப்பதையும் கவனித்தோம். எங்கள் இருவருக்கும் அந்த தோணியில் பயணம் செய்ய ஆசை வந்துவிட்டது. பிறகு இருவரும் அந்த தோணியில் ஏறி அமர்ந்து துடுப்பை போட்டுக் கொண்டே சென்றோம். ரொம்ப தூரம் சென்ற பிறகுதான் எங்கள் வீட்டார்களுக்கு செய்தி கிடைக்க அவர்கள் கரையில் நின்று எங்களைக் காணாது செய்வதறியாது திகைத்து நின்றார்கள். நானும் அஷ்ரப்பும் என்னதான் துடுப்பு போட்டும் மரத்தோணி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. காட்டாறு வெள்ளம் எங்களை தோணியோடு இழுத்துச் சென்று மாவடிப்பள்ளி என்ற இடத்தில் கரை சேர்த்தது. வெள்ளம் எங்களை அந்தப் பக்கம் தான் இழுத்துச் சென்றிருக்கும் என்று தெரிந்து கொண்ட எங்களின் பெற்றோர்கள் ஒரு நபரை அந்தப் பகுதிக்கு அனுப்பி இருந்தார்கள். பிறகு அவரின் உதவியுடன் வீட்டிற்கு வந்தோம். இன்று அந்தக் குளம் இருந்த இடமே இல்லை அங்கெல்லாம் பெரிய கட்ட டங்கள் வந்துவிட்டன.

இன்று அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் மனசுக்குள் அந்தக் குளத்தின் ஞாபகமும் நானும் அஷ்ரப்பும் ஓடித்திரிந்த அந்தத் தெருக்களின் ஞாபகமும் வந்து வந்து போகிறது என்று பெருமூச்சு விடுகிறார் தாஸீம்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி கேட்டதற்கு "என் வாழ்க்கை எனக்கு இறைவன் கொடுத்தது. எனவே அது இனிமையானதாகத்தானே இருக்கும். இன்பமும் துன்பமும் வாழ்க்கை என்றால் இருக்கத்தானே செய்யும். நான் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் என்னால் ஆன சமூகப் பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். அது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாகவும் கருதுகிறேன் என்று தமது இனிய நினைவுகளின் தொகுப்பை டாக்டர் தாஸீம் நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment