Friday, October 23, 2015

பாரதியாருடன் நேரில் பழகியவர்கள் சொல்லும் கதைகள்

பாரதியாரைப் பற்றிய ஒரு விவர்ண சித்திரத்தை சிலர் தயாரித்தார்கள். அப்போது பாரதியாருடன் சிறுவர்களாகவும் இளைஞர்களாகவும் பழகியவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்தார்கள். இந்த விவர்ண சித்திரம் 1999 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஜெயகாந்தன் வீடியோ கெஸட்டை வெளியிட்டு வைத்தார். படத்துக்கான வர்ணனையை இந்திரா பார்த்தசாரதி எழுதியிருந்தார். உலகின் பல பாகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் இவ்விவர்ணப் படம் திரையிடப்பட்டது.

இங்கே இப்படத்துக்காக பேட்டியளித்த இரண்டு பெரியவர்கள் தமது பாரதியார் அனுபவங்களைச் சொன்னார்கள். அவற்றின் சில பகுதிகள் இங்கே பிரசுரமாகின்றன. இக்கட்டுரையை 'பாரதியின் இளம் நண்பர்கள்' என்ற பெயரில் அம்ஷன்குமார் எழுதியிருந்தார். 2008 காலச்சுவடு இதழில் வெளிவந்திருந்தது. காலச்சுவடு இதழுக்கு நன்றி கூறி இத்தகவல்களை தொகுக்கு வெளியிடுகிறோம்.
க.பி. கல்யாண சுந்தரத்துக்கு 2008ம் ஆண்டில் 92 வயது (பேட்டி எடுக்கப்பட்ட சமயம்) 1908 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 12 வயதாகும்போது பாரதியாருடன் பழக்கம். பாரதியாரை வேடிக்கையான ஒரு ஆளாக இவர் பார்த்து பழகியிருக்கிறார். கல்யாண சுந்தரத்தின் பாரதி பார்வை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போமா?

"எனக்கு பன்னிரெண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்பொழுதுதான் நான் பாரதியாரைச் சந்திச்சேன். சின்னப்பசங்களா எந்தவொரு வேடிக்கையா இருந்தாலும் நாங்க போய்ப் பார்ப்போம். அது மாதிரி பாரதி ஒரு வேடிக்கையான ஆள். அவர் யார்கூடவும் அதிகம் பேசிக்கிட மாட்டாரு. அவர் டிரஸ் பண்ற விதமே தனி. ஒரு க்ளோஸ் கோட் - அல்பகா கோட் போட்டிருப்பாரு. அதுக்குள்ளே ஷர்ட் போடமாட்டாரு. வேஷ்டியை உள்ளுக்கு வச்சு அதுக்கு மேலே கோட்டை மாட்டி ஒரு நீல நிற வேஷ்டியை டர்பன் கட்டித் தொங்கப் போட்டுவிட்டு ஸ்ட்ரெய்ட் ஆகக் கையை வைச்சுகிட்டு நடுத்தெருவிலே மார்ச் பண்றமாதிரி போவாரு. யாரையும் பாக்கமாட்டாரு.... முக்கு வந்தா அட் ரைட் ஆங்கிள் - ரைட் லெப்ட் திரும்பற மாதிரி திரும்புவாரு (கையில் சைகை செய்து காண்பிக்கிறார்) ஆக அவரு ஒரு தனிப்பட்ட பிறவி. அப்படிங்கற எண்ணத்திலெ அவரை நாங்க எல்லாம் வேடிக்கை பார்ப்போம்.
கல்யாண சுந்தரம்
அப்பறம் கொஞ்சநாள் ஆகவும் இவரோடு நட்பு நமக்குக் கிடைச்சா தேவலியே, புது மாதிரி ஆளா இருக்காரேன்னு எண்ணம் வந்தது. அப்ப எண்கூடச் சேர்ந்த பையனுங்க இரண்டு மூணுபேர், அவருக்கு தனியா ஒரு வீடு கொடுத்திருந்தாங்க தங்கியிருக்க. அவர் கடையத்தில் இருக்கும் பொழுது அந்த வீட்டில்தான் தங்கி இருந்தாரு. அவருடைய மனைவி வீடு பக்கத்திலுள்ள பெருமாள் கோவில் தெரு. அதைப் பழைய கிராமம்னு சொல்லுவாங்க. அங்க இருந்து சாப்பாடு இவர் இருக்கிற வீட்டிலே கொண்ணாந்து கொடுப்பாங்க. இவரு சாப்பிட்டுட்டு எழுத்து வேலையைப் பாத்துக்கிட்டு இருப்பார். கவிதை எழுதுவாரு. அவரு என்ன எழுதுவாருங்கிறதைப் பத்தி நாங்க கவலைப்படமாட்டோம். நிறை தபால் எழுதுவார். கார்டில் எழுதினதைத் தானே கைப்பட போஸ்ட் ஆபீசிலே கொண்டுபோய் போட்டுட்டு வருவாரு. அந்த மாதிரி நாங்க அவரோட பழகிக்கிட்டு இருந்தோம்.
ஒரு தடவை பெருமாள் கோவில்கிட்டே ஒரு பெரிய மைதானம். அங்க அப்பத்தான் போட்ட ஒரு கழுதைக்குட்டி. அக்ரஹாரப் பிராமணர்கள் ரொம்ப மரபு ரீதியான சிந்தனை கொண்டவர்கள். ஆத்தங்கரையில் குளிச்சிட்டு ரொம்ப மடியா வருவாங்க. இவரு அப்படியே ஓடிப்போய் அந்தக் கழுதைக்குட்டியை எடுத்து முத்தம் கொஞ்சினார். அந்தப் பெரிய கழுதை பேசாமல் நின்னுது. 'இவனைப் போய்... கர்மம் கர்ம்ம'னு தலையிலே அடிச்சுகிட்டுப் போய்ட்டாங்க. இவங்களுக்கு என்ன கெட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு இவர் வந்திட்டாரு. அவர் சம்சாரம் செல்லம்மா அப்ப சின்ன வயசுதானே, 'என்ன இப்படியெல்லாம் பண்றேள்! கிராமத்துல எல்லோரும் மதிப்பா நம்மளைப் பேச வேணாமா? எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு' என்பாங்க.

'நீ அவங்க பேசறதை ஏன் கவனிக்கறே? அதைப் பத்தி உனக்கென்ன? நான் எனக்கு இஷ்டப்பட்டதைச் செய்யறேன். அது வேற யாருக்கும் இடையூறா இருக்கா? அவங்க அதைப் பாக்க வேணாம். அவ்வளவுதான்' அப்படின்னு செல்லிடுவாரு. அதை ரொம்ப சிம்பிளா முடிச்சிடுவாரு." செல்லம்மா பாரதியுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா?
"எல்லோரையும் தெரியும். நான் இன்னார் வீட்டுப் பிள்ளைன்னு தெரியும். ஆகையினால எங்க அப்பாமீது கவுரவம் வச்சிருந்தாங்க. என்ன உங்க பையன் பாரதியோட திரியறான்னு அவங்களே சொல்லுவாங்க. எங்க அப்பாகிட்டே போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருக்காங்க. அதைப் பாரதியார் லட்சியப்படுத்த மாட்டார். 'சொன்னாங்களா, சொல்லிட்டுப் போகட்டும். நீ பயப்படறியா'ன்னு கேட்பாரு. நான் பயப்படமாட்டேன். அவர் 'வா போகலாம்'னு இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. மதுபானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிருவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார்.'ஏ சாமி வந்திருக்கார்'னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த வாசனை மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றப்படி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.

யானையை அவருக்குப் பிடிக்கும். கழுதைக் குட்டியை வைத்து முத்தம் கொஞ்சினார்னு சொன்னேனே! அதே மாதிரி எங்க ஊர்க் கோவிலில் இருந்து ஒரு யானை வரும். அதோடு யானைப்பாகன் வருவான். இலுப்பைத் தோப்பில் யானையைக் கட்டியிருப்பார்கள். அந்தப் பாகனிடம் போய் 'யானைகிட்டே நான் விளையாடப் போகணும்'னு சொல்லுவார். 'சரி கிட்டே போங்க. ஆனா, அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. அப்புறம் அது மிதிச்சுப் போட்டுச்சுன்னா என்மேலே பழிவரும்' என்பான்.

அதோட துதிக்கை அவ்வளவுதான் இருக்கும். அதன் துதிக்கையைக் கட்டி முத்தம் கொஞ்சினார். அதன் தந்தத்திற்குத் தான் அவர் உயரம். தந்தத்தைக் கரகரன்னு கடிச்ச சத்தம் எங்களுக்குக் கேட்டது. ஏது இவரு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டாரேன்னு பயந்தோம். அது ஒண்ணும் செய்யலை. பாகனும் கவனிச்சிக்கிட்டிருந்தான். அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சு யானையிடம் 'வரோம்'னு விடைபெற்றுக்கொண்டார். திருவல்லிக்கேணி யானைகிட்டே விளையாடக் கேட்டிருக்காரு. ஏதோ எசகுபிசகாப் போய் அவர் மாட்டிக்கிட்டார். தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. ஒரு சமட்டுச் சமட்டினால் அங்கேயே க்ளோஸ் ஆயிருப்பாரு. யானை ஒரு மனுசனைத் தூக்கி வீசினா சுவத்திலே பல்லி மாதிரி அப்பிக்குவான். அவர் பயந்துபோனாரு. அந்த ஷாக்கில் அவரை மெள்ள ஆட்கள் வீட்டுக்குக் கூட்டிப் போனாங்களாம். அதோட படுத்து வயிற்றுப் போக்கு மாதிரி சீக்கு வந்திடுச்சி. அதிலதான் இறந்திருக்கார்னு சொன்னாங்க.

பாரதியார் சென்னை தம்புச்செட்டித் தெருவில் வசித்தபோது ராமசாமி ஐயர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். தங்கியிருந்த அறை அருகருகே என்பதால் பாரதியார் அறிமுகம் கிடைத்திருக்கிறது. பாரதியார் இவரை ராமு என்றுதான் அழைப்பாராம்.

அப்ப அவர் சம்சாரம், கூடவே, பத்துப் பன்னிரெண்டு வயசு பொண்ணு ஒண்ணும் இருக்கும். நேரம் இருக்கும்போதெல்லாம் காலை வேளையிலே அவர் வீட்டுக்குப் போவோம். அவர் சம்சாரத்தைப் பார்ப்போம். அவர் 'சுதேசமித்திர'னில் சப் - எடிட்டர் ஆக இருந்தார். அவருக்கு அப்போ ஐம்பது ரூபாய் சம்பளம். காலம்பரை பத்துமணிக்கு ரிக்ஷாவில் போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடுவார். அதனாலே அவரோட அடிக்கடி பேசுவோம். அவர் வெட்டிப்பேச்சே பேசமாட்டார். நல்ல ஆழ்ந்த கருத்துள்ள பேச்சைத்தான் பேசுவார். ஒழிஞ்ச வேளையிலே ரூம்லே கதவைச் சாத்திக்கிட்டு எழுதிண்டிருப்பார். இல்லேன்னா ஏதாவது படிச்சிண்டிருப்பார். காலை வேளைலே சாப்பிட்டுச் சரியா டயத்துக்குப் போயிடுவர். ராத்திரி வேளைலே சாப்பிடறதுக்கு அவருக்குச் சாப்பாட்டு நினைவே இருக்காது. அம்மா (செல்லம்மா) எங்களிடம் வந்து சொல்வார். நாங்க பூட்டியிருக்கும் கதவடிக்கு சென்று "மாமா, மாமி குழந்தைகள் எல்லாம் சாப்பிடாமல் காத்திருக்கிறாங்க உங்களுக்காக. நீங்க இப்படி கதவை சாத்திண்டிருக்கேளே!" என்று சொல்வோம். "அடடே! நாழியாயிருச்சா" (நேரமாகி விட்டதா?) என்று சொல்லிக்கொண்டே வெளியே வருவார். அவருக்கு கோபம் வராது. குடும்ப ஞாபகமோ, பண ஞாபகமோ லட்சியம் பண்ண மாட்டார். அவர் ஒரு ஞானி. தங்கமும் ஒண்ணுதான் மண்ணாங்கட்டியும் ஒண்ணுதான். வாரத்துக்கு ரெண்டு மூணு நாள் இராத்திரியிலே தம்புசெட்டித் தெரு வீட்டு முகப்பில் உள்ள திண்ணையில் ஷேட் விளக்கு வச்சுகிட்டு பஜனை விளக்கம், பேச்சு எல்லாம் நடக்கும். தெருவிலே நல்ல சனக்கூட்டம் இருக்கும். இவர் புதுப்புதுப் பாட்டாப் பாடுவார். விளக்கம் சொல்வார். இரண்டு மணித்தியாலத்துக்கு இது நீடிக்கும்.
97 வயதான (1998) நா. ராமசாமி  ஐயர் 1901 இல் பிறந்தவர். 1920 இல் பாரதியாருடன் தன் 19வது வயதில் பழகியவர். புதுக்கோட்டை வாசியான இவர் சட்டத்தரணியாக பணியாற்றியவர். இனி, இவரது நினைவுகளைப் பார்ப்போம். அதற்கு முன்பாக, அவர் இறுதிக் காலத்தில் வறுமையுடன் போராடவில்லை என்பது முக்கிய தகவல். யானை தாக்கிய பின்னரும் பாரதியார் குணமாகி, இறுதிவரை சுதேச மித்திரனில் சப் - எடிட்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

'சுதேசமித்திர'னில் உதவி ஆசியராக வேலை பார்த்த அவருக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அது நல்ல தொகை. அந்தச் சம்பளம் அவருக்குத் தரப்பட்டது என்னும் பட்சத்தில் அவரது இறுதி நாட்களில் அவருக்கு வறுமைத் தொல்லை ஏற்படவில்லை என்று கருதலாம். தம்புச் செட்டி தெரு வீட்டில் குடியிருந்த நாட்களில் பாரதியும், செல்லம்மாவும் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் குடும்ப வாழ்க்கை நடத்தியிருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

இனி நா. ராமசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்,

எனக்குத் தெரிஞ்ச பாரதி இந்த போட்டோவிலே இருக்கிற மாதிரி இல்லே. அவர் இந்த மாதிரி ட்விஸ்ட் மீசை வைச்சுக்கலே. மாநிறம். ரொம்ப சாமான்யமா இருப்பார். எப்பவாவது குர்தா போட்டுக்குவார். இல்லேன்னா வெறும் பாடியோடதான் இருப்பார். வெளியிலே போகும்போது கோட் போட்டுக்கிட்டுத் தலைப்பா கட்டிக்குவார். அப்படித்தான் நான் பார்த்திருக்கேன்.

பண விஷயத்திலே பிறத்தியார் கஷ்டப்படுவதை அவர் சகிக்கமாட்டார். 'சுதேசமித்திரன்' எடிட்டர் சி. ஆர். சீனிவாசன், அவராலேதான் தம்புச்செட்டி தெரு வீடு கிடைச்சதுன்னு பாரதி சொன்னார். ஒரு முறை பாரதி சம்பளம் வாங்கிட்டு வரும்போது அவரைக் கொண்டுவந்த ரிக்ஷாக்காரன் தான் ரொம்ப கஷ்டப்படறேன்னு சொன்னதுக்காக கோட் பையிலிருந்த அந்த ஐம்பது ரூபாயையும் கொடுத்திட்டார். வீட்டுக்கு வந்து அவர் சம்சாரத்துக்கிட்டே இந்த மாதிரி ரிக்ஷாக்காரன் கஷ்டப்பட்டான். கொடுத்திட்டேன்னு சொல்லியிருக்கார். அந்த அம்மாவாலே ஒண்ணும் சொல்ல முடியல்லே. அப்பறமா அந்த அம்மா என்னைக் கூப்பிட்டு 'இந்த மாதிரி மாமா பண்ணிட்டார். ரிக்ஷாக்காரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டார். நம்ம குடும்பச் செலவை எப்படிப் பண்றதுன்னு நேக்குப் புரியலை'ன்னு அந்த அம்மா சொன்னா. அந்த ரிக்ஷாக்காரன் வழக்கமா வர்றவன். நானும் என் சிநேகிதனும் அவனைத் தேடிப் புடிச்சி என்னடா, அய்யாகிட்டே பூராப் பணத்தையும் வாங்கிட்டு வந்திட்டே. அவாளுக்கு வேண்டாமான்னு சொன்னப்புறம் அவன் அஞ்சு ரூபாய் செலவழிச்சது போகப் பெருந்தன்மையா நாற்பத்தி அஞ்சு ரூபாயையும் கொடுத்துட்டான். அப்புறம் அதை அந்த அம்மாக்கிட்டே கொடுத்ததிலே அந்த அம்மாவுக்கும் பெரிய திருப்தி.

Thursday, October 1, 2015

டொக்டர் தாஸீம் பேசுகிறார்...

காட்டாற்று வெள்ளத்தில் தோணியில் பயணம் செய்த அந்த திகில் நிமிடங்கள்


மணி  ஸ்ரீகாந்தன்
 
டொக்டர் ஏ.எல்.கே. தாஸீம் நாடறிந்த நல்லதொரு படைப்பாளர். கலை இலக்கிய பணிகளில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தொண்டாற்றி வரும் இவர் ஒரு பல்துறைக் கலைஞரும் ஆவார். நோய்தீர்க்கும் டாக்டராக கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கொம்பனி வீதியில் சேவையாற்றிய இவரின் பொதுப்பணிச் சேவை அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டிலும் தொடர்ந்திருக்கிறது. அதற்காகவே இவரின் சேவையைப் பாராட்டி மலேசிய இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். மருந்து மாத்திரை இலக்கியப் படைப்பு சமூக பொதுப்பணி என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் தாஸீமை அவரின் அலுவலகத்தில் ஒரு காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
"என் தந்தையார் ஓர் இலக்கிய ஆர்வலர். ஒரு சம்பவத்தை பார்த்தால் அடுத்த நொடியே அதைப்பற்றி கவிதைபாடுவதில் கில்லாடி. ஒருநாள் எங்கள் வீட்டு வேலியில் பீர்க்கம்கொடி படர்ந்திருந்தது. அந்த கொடி முழுவதும் பூக்கள் பூத்திருந்தன. பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அப்போ எனக்கு பத்து வயதிருக்கும். நானும் அப்பாவுடன் அந்த பீர்க்கம் பூக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியே என் தந்தைக்கு ஒரு கவிப்பாட்டு வந்து விட்டது. பீதாம்பரமே பீர்க்கே நீ பூத்திருக்காய் காதல்வண்டு வந்து காலையிலே காணுமென்று அந்திக்கு பூத்து அழகு மஞ்சள் தான் பரப்பிவந்திங்கு நீ வளர்ந்தாய் வண்டுகளை ஏமாற்ற....  
என்று தொடர்ந்தது அந்த கவிப்பாடல். அவர் பாடிய பிறகுதான் எனக்கு பீர்க்கம் பூ மாலையில் தான் பூக்கும் என்ற விடயமே தெரியவந்தது. என் தந்தையின் பாதிப்புதான் என்னை ஒரு இலக்கிய படைப்பாளனாக உருவாக்கியது என்று சொல்லும் தாஸீம் தனது பூர்வீகம் பற்றி இப்படி விபரிக்கிறார்.
கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்
அம்பாறை மாவட்டம் கல்முனைக்குடிதான் என் சொந்த ஊர். என் தந்தையின் பெயர் டொக்டர் அஹமட் தாய் உம்முசல்மா எனது குடும்பம் பரம்பரையாக வைத்திய தொழில் செய்து வந்தார்கள். எங்கள் பரம்பரையில் நான் ஐந்தாவது டொக்டர். குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர் நான் இரண்டாவது. என் குடும்பத்தில் என் தந்தையின் பாதிப்பு எனக்குத்தான் ரொம்பவும் அதிகம். அதனால்தான் நான் டாக்டராகவும் இலக்கிய படைப்பாளராகவும் இருக்கிறேன்" என்ற டொக்டர் தாஸீமிடம் பாடசாலை பிரவேசம் பற்றிக் கேட்டோம்"

கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையில்தான் என் ஆரம்பக் கல்வி ஆரம்பமானது. அப்போது அங்கே தலைமை ஆசிரியராக ஜின்னா சரிப்புதீனின் தந்தை புலவர் மணி சரிப்புத்தீன் மாஸ்டர் இருந்தார்.
என்னை முதல் நாள் பள்ளிக்கு மிதி சைக்கிளில் உள்ள பாரில் அமரவைத்து என் தந்தை அழைத்துச் சென்றது இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. புலவர் மணி சரிப்புத்தீன்தான் எனக்கு தமிழ் படித்து தந்தார். அவர் கற்றுத்தந்த தமிழரிவுதான் இன்றுவரை எனக்கு கைகொடுக்கிறது.
வகுப்பில் நான் மட்டும்தான் ரொம்பவும் குள்ளமானவன். ஆசிரியர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுவேன். அதனால் பாவாமாஸ்டருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவர் வழமையாக பாடசாலை வளாகத்திலிருக்கும் வாகை மரத்தடியில் மாணவர்களை அமரவைத்துதான் பாடம் சொல்லித்தருவார்.
இளமைக் காலத்தில்
அப்போது அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்கும் மாணவர்களுக்கு தண்டனையாக என் கையால் அவர்களின் தலையில் குட்டச்சொல்வார். நான் குள்ளம் என்பதால் எனக்கு அவர்களை குட்ட முடியாது. அதனால் என்னை பாவா மாஸ்டர் தூக்கி பிடித்துக்கொள்ள நான் மாணவர்களை குட்டுவேன் என்று பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்து சிரிக்கும் தாஸீமிடம் சின்ன வயது குறும்பு பற்றிக்கேட்டோம்.
"அப்போ எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எங்கள் வீட்டிற்கு என் பெரியப்பாவின் மகன் அவர் ஓர் ஆசிரியர் திருமணம் முடித்து புது மணத்தம்பதிகளாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். ஒருநாள் பக்கத்து வீட்டு பையன்களோடு நான் விளையாடச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது எங்கள் வீட்டு வாசலில் ஒரு மொரிஸ்மைனர் கார் நின்று கொண்டிருந்தது. என்ன ஏதென்று விசாரித்த போது புதுமணத்தம்பதிகளை அழைத்துக்கொண்டு மட்டக்களப்புக்கு சினிமா பார்க்கப்போவது தெரியவந்தது.
விடுவேனா நான் என்னையும் அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தினேன். அவர்கள் கேட்கவில்லை. என் அப்பா அம்மாவோடு புதுமணத்தம்பதிகளும் காரில் ஏறினார்கள். அப்போது நான் தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தேன். கார் புறப்பட்டுச் சென்று விட்டது. உடனே கோபத்தோடு எழுந்து வீட்டிற்குள் ஓடினேன். அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்த உண்டியலை தரையில் தூக்கிப்போட்டு உடைத்து அதிலிருந்து சில்லறைகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு ஆத்திரத்தோடு கல்முனை தாஜ்மஹால் தியேட்டருக்கு தனியாளாக படம் பார்க்கச் சென்றேன் என்று சொல்லும் தாஸீம் மற்றொரு ருசிகர சம்பவத்தையும் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
நண்பர் அஸ்ரப்புடன்..
மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்வும் அஷ்ரப்பும் நானும் நண்பர்கள் கல்முனைக்குடி அரபு மத்ரஸாவில் இருவரும் ஒன்றாகத்தான் படித்தோம். அஷ்ரப் வீட்டுக்கு பின்னால் உள்ள குளத்தில் நானும் அஷ்ரப்பும் கரணம் போட்டு குதித்து விளையாடுவோம்.

ஒருநாள் அஷ்ரப்போடு மத்ரஸாவுக்கு நான் சென்றபோது எங்களுக்கு எதிரே ஒரு பையன் அழகான புது சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்ட அஷ்ரப் "தாஸீம் அந்த சைக்கிளை நிறுத்துங்கள் அது அழகாயிருக்கு" என்றார்.

நான் உடனே பாய்ந்து சென்று சைக்கிளை பிடிக்க சைக்கிளிலிருந்த அந்தப் பையன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். அவன் விழுந்தபோது சைக்கிளில் பொருத்தியிருந்த டைனமோவும் உடைத்து விட்டது. கீழே விழுந்த பையன் எழுந்து எதுவுமே பேசாமல் சைக்கிளில் ஏறி மறைந்தான். அவன் எங்களுக்கு பயந்து கொண்டுதான் ஓடிவிட்டான் என்ற நினைப்போடு நானும் அஷ்ரப்பும் மத்ரஸாவை நோக்கி நடந்தோம். நாங்கள் நடந்து சில நொடிகள்தான் ஆகியிருக்கும். பின்னாலிருந்து மின்னல் வேகத்தில் வந்த ஒரு சைக்கிள் சடாரென்று எங்கள் இருவரையும் மறித்து நின்றது.

சைக்கிளிலிருந்த அந்த நபர் எங்கள் இருவரையும் பார்த்து உங்களில் வைத்தியரின் மகன் யார் என்று கேட்டார். நான்தான் என்று தலையசைத்தேன். உடனே என்னை மிரட்டலான குரலில் சைக்கிளில் ஏறச் சொன்னார். நானும் பயந்தபடியே சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்தேன். அஷ்ரப் என்னைப் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார். என்னை அந்த சைக்கிள்காரன் சில நிமிடங்களில் ஒரு வீட்டிற்கு முன்னால் இறங்கச் சொன்னான். இறங்கினேன் பிறகுதான் எனக்குப் புரிந்தது. அந்த வீடுதான் புதுச் சைக்கிளில் வந்து கீழே விழுந்த பையனின் வீடு என்பது.

பிறகு அந்த வீட்டு ஆட்கள் என்னைத் திட்டினார்கள். டைனமோ வாங்கித்தருவதாக உறுதிமொழி கொடுத்த பிறகே என்னை அந்தச் சைக்கிள் காரன் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான். பிறகு என் தந்தையும் அஷ்ரப்பின் தந்தையும் ஆளுக்கு பாதியாக பணத்தை போட்டு டைனமோவுக்கு தண்டப்பணம் கட்டினார்கள். இப்படி நான் குறும்புத்தனம் செய்திருந்தாலும் நான் படிப்பில் கெட்டிக்காரன். கல்முனைக்குடியில் மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் 950 புள்ளிகள் பெற்று டபுள் புரமோசனில் ஐந்தாம் வகுப்புக்கு மாறினேன் என்றால் பாருங்களேன். பிறகு கல்முனை சாஹிராவிலும் அதனைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்திலும் எனது கல்விப் பயணம் தொடர்ந்தது. என்றவரிடம் பாடசாலை மேடை நாடகங்களில் நடித்திருக்கியர்களா? என்று கேட்டோம். "கல்முனைக்குடி பாடசாலையில் நடந்த ஒரு நாடகத்திற்கு எனக்கு பெண் வேடம் தந்தார்கள். இப்ராஹீம் மாஸ்டர்தான் அந்த வாய்ப்பை தந்து நடிக்கச் சொன்னார். நாடக ஒத்திகையில் நான் பெண் வேடத்துடன் வந்ததைப் பார்த்த சக மாணவர்கள் கொல்லென்று சிரிக்க அவர்களைப் பார்த்து நானும் சிரிக்க என்னால் ஒத்திகையில் நடிக்கவே முடியாது போய் விட்டது. அதனால் எனக்கு நடிக்க முடியாது என்று இப்ராஹீம் மாஸ்டர் என்னை நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகு எனது எழுத்துலக பிரவேசம் தொடங்கியது. சாஹிராவில் வெளிவந்த இதழில் எழுதிய கட்டுரை பிறகு பத்திரிகைகளில் கதை கவிதை என்று இன்னும் எழுத்துப் பயணம் தொடர்கிறது.
அப்துல் காலாமை சந்தித்தப்போது..
ம் அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது. என்று கேட்டதும் ஒரு மறக்க முடியாத சம்பவத்தோடு அந்த காலத்தை நினைவு கூர்ந்தார் தாஸீம். "நண்பர் அஷ்ரப்பின் வீட்டிற்குப் பின்னால் ஒரு பெரிய குளம் இருந்தது. ஒருநாள் வெள்ளம் பெருக்கெடுத்து குளத்தையும் மூடி பல மைல்களுக்கு அப்பாலும் சென்றிருந்தது குளத்திற்கு குளிக்கச் சென்ற நானும் அஷ்ரப்பும் அந்தக் காட்சியைப் பார்த்தோம். அப்போது அந்தக் குளக்கரையில் அநாதரவாக ஒரு மரத்தோணி மிதப்பதையும் கவனித்தோம். எங்கள் இருவருக்கும் அந்த தோணியில் பயணம் செய்ய ஆசை வந்துவிட்டது. பிறகு இருவரும் அந்த தோணியில் ஏறி அமர்ந்து துடுப்பை போட்டுக் கொண்டே சென்றோம். ரொம்ப தூரம் சென்ற பிறகுதான் எங்கள் வீட்டார்களுக்கு செய்தி கிடைக்க அவர்கள் கரையில் நின்று எங்களைக் காணாது செய்வதறியாது திகைத்து நின்றார்கள். நானும் அஷ்ரப்பும் என்னதான் துடுப்பு போட்டும் மரத்தோணி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. காட்டாறு வெள்ளம் எங்களை தோணியோடு இழுத்துச் சென்று மாவடிப்பள்ளி என்ற இடத்தில் கரை சேர்த்தது. வெள்ளம் எங்களை அந்தப் பக்கம் தான் இழுத்துச் சென்றிருக்கும் என்று தெரிந்து கொண்ட எங்களின் பெற்றோர்கள் ஒரு நபரை அந்தப் பகுதிக்கு அனுப்பி இருந்தார்கள். பிறகு அவரின் உதவியுடன் வீட்டிற்கு வந்தோம். இன்று அந்தக் குளம் இருந்த இடமே இல்லை அங்கெல்லாம் பெரிய கட்ட டங்கள் வந்துவிட்டன.

இன்று அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் மனசுக்குள் அந்தக் குளத்தின் ஞாபகமும் நானும் அஷ்ரப்பும் ஓடித்திரிந்த அந்தத் தெருக்களின் ஞாபகமும் வந்து வந்து போகிறது என்று பெருமூச்சு விடுகிறார் தாஸீம்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி கேட்டதற்கு "என் வாழ்க்கை எனக்கு இறைவன் கொடுத்தது. எனவே அது இனிமையானதாகத்தானே இருக்கும். இன்பமும் துன்பமும் வாழ்க்கை என்றால் இருக்கத்தானே செய்யும். நான் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் என்னால் ஆன சமூகப் பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். அது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாகவும் கருதுகிறேன் என்று தமது இனிய நினைவுகளின் தொகுப்பை டாக்டர் தாஸீம் நிறைவு செய்தார்.