Wednesday, September 16, 2015

இருள் உலகக் கதைகள்


முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை 

கேட்டு எழுதுபவர்- மணி  ஸ்ரீகாந்தன்

லாங்கொடை பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் அமைந்திருக்கும் அந்த ஆடைத் தொழிற்சாலை தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்டிருந்தது. ஆனாலும் சமீபத்தில் தொடங்கப்பட்டது போலவே என்றும் புதுப்பொலிவுடன் அந்தக் கட்டிடம் காட்சியளித்து வந்தது.

சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கடமையாற்றி வரும் தொழிலகம் அது. தொழிற்சாலையை சுற்றி இறப்பர் மரங்கள் சூழ்ந்திருந்ததால் எப்போதும் அந்தக் கட்டடம் இருள் படிந்த ஒரு ரம்மியமான அழகுடன் காட்சி தந்தது என்பது பொருத்தமான வர்ணணையாக இருக்கும்.

அந்தத் தொழிற்சாலையின் உடைகளை அழுத்தும் (அயர்ன்) பிரிவுக்கு பொறுப்பாக இருப்பவன் பெயர் சஞ்ஜீவ். அன்று அவனுக்கு இரவு வேலை. இரவு உடம்பை சூடேற்றிக் கொள்வதற்காக கெண்டீன் பக்கமாக நடந்தான். ஏனெனில் ஒரு டீ குடித்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. அவன் பணியாற்றும் பகுதியில் இருந்து ஒரு நீண்ட நடைவழிப் பாதை வழியாக நடந்தால் கெண்டீன் வரும். பகலில் பரபரப்பாக இருக்கும் கெண்டீன் இரவில் தூங்கி வழியும். சாப்பிடுவதற்கு பெரிதாக ஒன்றும் வைத்திருக்க மாட்டார்கள். கெண்டீனுக்கு இரவு பொறுப்பாளனாக இருப்பவன் ஒரு சோம்பேறி. முசுட்டுச் சோம்பேறி என அவனை அழைப்பார்கள். இரவிலும் பளபளப்பாக விளக்கொளியில் மின்னும் அந்த ஆடைத்தொழிற்சாலையில், கெண்டீனுக்கு செல்லும் அந்த வழி மட்டும் போதிய ஒளி வசதியின்றிக் காணப்படும். அது ஏன் என்று யாருமே கவலைப்படவில்லை போலும்.
நண்பர் வட்டம் என்ற குழாமை வைத்துக் கொள்ளாத சஞ்சீவ அடிப்படையில் ஒரு தனிமை விரும்பி. ஆள் அரவமற்ற நேரத்தில் கண்டீன் மூலையில் அமர்ந்து, சீனியில் குளித்த கொம்பு பணிஸ் ஒன்றை வாங்கி பிளேன்டீயில் நனைத்து மெதுமெதுவாக உண்பது அவனுக்கு பிடித்த விஷயம்.

கொஞ்சம் இருள் படிந்த அந்த நீண்ட நடை வழிப்பாதையில் சஞ்சீவ சென்று கொண்டிருந்த போது, அவனுக்கு எதிரே ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி குட்டை பாவாடையோடு, கறுப்பு கோட் அணிந்தபடி முன்னாள் சென்று கொண்டிருந்தாள். தலையில் ஒரு தொப்பி, கையில் ஒரு அரிக்கன் விளக்கு என தளர் நடை போட்டுக் கொண்டிருந்தாள் அவள். இரு கைகளிலும் முதிர்ச்சியின் தளர்ச்சி தெரிந்தது. அந்த மங்கள் ஒளியிலும் சில வினாடிகளில் பின்னாள் நடந்தபடி அவன் இத்தனை விஷயங்களையும் அவன் அவதானித்திருந்தான். இதற்கு முன் இப்படியொரு மூதாட்டியை அவன் அந்தத் தொழிற்சாலையில் பார்த்ததேயில்லை. எனினும் தொழிற்சாலை அதிபருக்குத் தெரிந்த அல்லது பிசினஸ் விஷயமாக வந்த வெளிநாட்டுக்காரர்கள் அவ்வப்போது அங்கு வருகை தருவதும் சுற்றிப் பார்ப்பதும் வழக்கம். இதனால் அவள் மீது சஞ்சீவவுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. பெரிய இடத்துப் பெண்ணாக இருக்க வேண்டும் என அவன் முடிவு செய்த போது அவளை அண்மித்து விட்டான் சஞ்சீவ.

அவனுக்கு சற்று முன்பாக நடந்து சென்று கொண்டிருந்த அப்பெண் சட்டென நின்று சுவரோடு சாய்ந்து அவனுக்கு வழிவிட்டாள். பெரிய இடத்துப்
பெண்ணான அவள் முகத்தை உற்றுப் பார்ப்பதும், உரசுவதும் தனக்கு பிரச்சினையாக முடியலாம் என தோள்களைக் குறுக்கி அவளைக் கடந்து சில அடிகள் முன் சென்றவனுக்கு 'அரிக்கன் விளக்கை ஏற்றியபடி ஏன் இந்தப் பெண்....? என்ற சந்தேகம் திரும்பவும் எழவே, நடந்தபடியே அந்தப் பெண்ணை கழுத்தை திருப்பி பார்த்தான்.

ஆனால் அவளை அங்கே காணவில்லை! சுமார் இரண்டு மீட்டர் தொலைவில் இருந்திருக்க வேண்டிய ஒரு மூதாட்டி எப்படி மாயமாக மறைந்திருக்க முடியும்? இவ்வளவு நேரம் நான் கண்டது கனவா? அதெப்படி போலியாக ஒரு காட்சியை இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? சடசடவென அவனது பகுத்தறிவு சிந்தனையில் கேள்விகள் முளைக்க உடல் குளிர்ந்து குப்பென வியர்த்தது.

எனினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவன் கண்டீனுக்குள் சென்றான். "ஒரு பிளேன்டீ!" என்று சத்தமாகச் சொல்லிவிட்டு அங்கே வைக்கப்பட்டிருந்த கொம்பு பனிசை கையில் எடுத்துக் கொண்டு ஒரு கதிரையில் அமர்ந்தான். இப்போது படபடப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது. மீண்டும் தான் கண்ட காட்சியை மனதில் ஓடவிட்டுப் பார்த்தான். தரையில் கால் பதித்து அவள் தள்ளாடி நடந்ததை பார்த்தது அவனுக்கு நன்றாகவே ஞாபகத்தில் பதிந்திருந்தது. நிச்சயமாக அது கனவுக் காட்சியல்ல! ஆனால் ஒரு கிழவி எப்படி ஒரு குறுகலான வேறு வாசல்கள் இல்லாத நடை பாதையில் இருந்து காணாமல் போக முடியும்? சஞ்சீவ் கெண்டீனில் அமர்ந்து சூடான ஒரு டீயை வாங்கிக் குடித்த போது உடல் முழுக்க வியர்த்துக் கொட்டியிருந்தது.

பிறகு தான் வேலை பார்க்கும் பிரிவுக்குத் திரும்பிய சஞ்சீவ தான் கண்ட காட்சியை அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த சக ஊழியர்களிடம் சொன்னான். அவர்கள் விசயம் உண்மைதான். அந்த மூதாட்டியின் நடமாட்டம் கண்டீன் பக்கமாக ஆள். அரவமற்ற நேரத்தில் இருப்பதாக இதற்கு முன்னரும் கேள்விப்பட்டிருக்கிறோம் என்றார்கள். "அதனால் அந்த வழியாக கண்டீனுக்கு போறவர்கள் கும்பலாகவே பகல் நேரங்களிலும் போய் வருவாங்க. யாரும் இல்லாத நேரத்தில் போனா அது அங்கேயும் இங்கேயும் லாந்தரை தூக்கிட்டு அலையுதாம்" என்று ஒருவர் சொன்ன போது சஞ்சீவவுக்கு உடல் உதறல் எடுத்தது.

"ஆனால் அதுக்கு கால் இருந்ததை நான் என் ரெண்டு கண்ணாலையும் பார்த்தேன்" என்றான் சஞ்சீவ. அப்போ அங்கே வந்த பத்மா என்ற சக ஊழியர், "ஆமா அதுக்கு கால் இருப்பது உண்மைதான். என் தோழி பார்த்ததா சொன்னா. அது ஒரு வெள்ளைக்கார ஆவியாம். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதாம்" என்று ஆவிகளுக்கு நற்சான்றிதழ் கொடுத்த போது சஞ்சீவ மயக்கமாகி கீழே சரிந்தான். பிறகு அவனுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். ஆனாலும் சஞ்சீவ பித்தம் கலங்கியவன் போல காணப்பட்டான்.

மறுநாள் காலை வீடு சென்ற அவனை குளிர்காய்ச்சல் பீடித்திருந்தது. அதோடு அவன் வாய் புலம்புவதை அவதானித்த பெற்றோர் அவன் வேலை செய்யும் இடத்தில் விசாரித்தார்கள். அப்போது அங்கே நடந்த விஷயம் அவர்களுக்குத் தெரிய வந்தது. மகனின் இந்த நிலைக்குக் காரணம், தீய சக்தியின் வேலையாகவே இருக்க வேண்டும் எனத் தீர்மானித்த பெற்றோர், கஹாவத்தை பகுதியில் பிரபலமாக விளங்கும் முத்துப் பூசாரியை அழைத்தார்கள்.

தமது ஆட்களோடு பலாங்கொடைக்கு சென்ற அவர், சஞ்சீவயின் இல்லத்திற்குள் நுழைந்தார். அப்போது அவரின் கண்களுக்கு முன்னால் ஒரு புகை மண்டலம் தோன்றி அசைந்தது. இதைக் கண்டு கொஞ்சம் ஆடிப்போன அவர், இரண்டு மந்திரங்களை மனதிற்குள் உச்சாடணம் செய்தார். இதையடுத்து அந்த புகை அப்படியே அடங்கிப் போக தடை விலகிய சந்தோசத்தோடு உள்ளே சென்று அமர்ந்தார்.

அடுத்த சில நொடிகளிலேயே பூஜைக்கான வேலைகள் ஆரம்பமாயின. அங்கே அமைக்கப்பட்டிருந்த மன்றில் பூசாரி உடுக்கோடு அமர்ந்திருந்தார். ராகத்தோடு இரண்டு சுடலையின் பாடல்களை பாட சஞ்சீவ ஆடத் தொடங்கினான். பிறகு பூசாரியின் கேள்விகளுக்கு சஞ்சீவ அரைகுறைத் தமிழிலேயே ஆங்கிலம் கலந்து பேச ஆரம்பித்தான்.

அவன் உடம்பில் ஒரு வெள்ளைக்கார ஆவிதான் குடியிருக்கிறது என்பதை பூசாரியின் கண்கள் கண்டுபிடித்தது. ஏற்கனவே பூசாரிக்கு அந்தப் பகுதியில் ஒரு இந்தோனேசிய பேயை விரட்டிய அனுபவம் இருந்ததால் இந்த வெள்ளைக்கார ஆவி அவருக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆடைத் தொழிற்சாலை அமைந்திருக்கும் அந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பாழடைந்த பங்களா இருந்ததாகவும், அதில் வெள்ளைக்கார துரையும் அவரின் மனைவியும் வசித்ததாகவும் ஞான திரஷ்டியில பூசாரி கண்டறிந்தார். சுதந்திரம் அடைந்த பிறகு துரை மட்டும் வெளிநாட்டுக்குச் சென்று விட அவரின் மனைவி இங்கேயே தங்கிவிட்டார். ஏனென்றால் இங்கே அவருக்கு நிறைய ஆண்கள் சகவாசம் இருந்ததாம். பிறகு அவள் அந்த பங்களாவிலேயே மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும் அதன் பிறகு பங்களா அப்படியே பாழடைந்து கிடந்ததாகவும் அந்த கட்டடத்தை இடித்து விட்டுதான் அங்கே ஆடைத்தொழிலகம் அமைக்கப்பட்டதாகவும் பூசாரி தமது ஞான திருஷ்டியில் கண்டறிந்தார். ஆனால் சஞ்சீவயின் உடம்பில் அந்த தீய சக்தியான வெள்ளை மாதின் ஆவி குடியேறவில்லை. வந்தது கண் இமைக்கும் நேரத்திலேயே கடந்து சென்று விட்டது. அதனால்தான் சஞ்சீவ செல்வதற்கு வழிவிட்டு நின்றிருக்கிறது.
முத்து பூசாரி
"இந்த வெள்ளைக்காரி சாதாரண ஆட்களின் உடம்பில் தங்காது. அது ரொம்ப பெரிய வசதியான ஆளுங்களோட உடம்பில் தங்கவே விரும்பும். அதனால்தான் தனக்கு ஏற்ற மாதிரி யாராவது கிடைப்பாங்களான்னு காத்திருக்கு. ஆனால் அதுக்கு நான்விட மாட்டேன். இப்போது இவன் பயந்துதான் உளறுறான். ஒரு நூள் கட்டினால் சரியாகிடும்" என்று சொன்ன பூசாரி, மந்திரித்த நூலை அவன் கையில் கட்டினார். ஆனாலும் அந்த பேராசைக்கார துரைசாணியின் ஆவி அந்த கண்டீன் பக்கமாகவே திரிந்து கொண்டுதான் இருக்கிறது என்று பின்னர் பூசாரிக்குத் தகவல் போயிருக்கிறது. அது தேவ கனத்தில் பிறந்தவர்களின் கண்களுக்கு மட்டுமேதான் தெரியுமாம். இதையடுத்து சஞ்சீவவின் நண்பர்களை அழைத்து தான் ஒரு மந்திரங்களினால் உயிரூட்டப்பட்ட சக்தி தகடொன்றை பூஜித்துத் தருவதாகவும் அதை தான் சொல்லும் நேரத்தில் அந்த கண்டீன் அமைந்திருக்கும் இடத்தில் புதைத்துவிட்டால் அந்த ஆவியின் சேஷ்டை முடிவுக்கு வருமென்றும் கூறிய பூசாரி அப்படியே அந்த ஜீவ தகடை அவர்களிடம் கொடுத்தார். அவர்கள் தான் கூறியபடியே செய்திருந்தால் அந்த கிழட்டு ஆவி தொலைந்திருக்கும் என்று கூறி முடித்தார் முத்து பூசாரி.

No comments:

Post a Comment