Tuesday, September 15, 2015

மதுரகானம் பாடும் மதுரங்க

ராம்ஜி.

சாதாரண தரத்துடனான பாடசாலை கல்வியின் போது மனதுக்கு பிடித்த இசைத்துறையில் கீபோர்ட் இயக்குவதைப் பற்றி படித்துத் தெரிந்து கொண்டு தானே இசையமைத்து பாடிய பாடலை (தொடுவானம் தேடி) யு டியூப்பில் பதிவேற்றி 2 ஆயிரம் பேருக்கு மேல் கேட்க வைத்திருக்கிறார் இளம் பாடகர் மதுரங்க.

கடந்த மாதம் ஒரு நாள் எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

"எனக்கு 17 வயது" என்று அவரே ஆரம்பித்தார்.

பதின்ம வயது குழைவு முகத்தில் 'பளிச்'

'படிப்பு' என்று அடுத்து சொல்ல வேண்டியதற்கு கொக்கி போட்டோம்.
"டி. எஸ். சேனநாயக்க கல்லூரியில் உயர்தர வகுப்பில் வர்த்தகப் பிரிவின் முதல் வருட வகுப்பில் படிக்கிறேன். 2017 இல் பரீட்சை"

இந்த படிப்புக்கு இடையில் எப்படி வந்தது இசை?

"சின்ன வயதில் இருந்தே இசையில் ஒரு ஈடுபாடு இருந்தது. இப்பொழுது அது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் சக்தி இசைக் குழுவின் லீடர் அன்டன் சுரேந்திரனின் சகோதரர் ராஜேந்திரனிடம் 6 மாதம் கீபோர்ட் பயிற்சி பெற்றேன். பயிற்சி முடிந்த கையுடன் அப்பா ஒரு கீ போர்ட் வாங்கித் தந்தார்."

அப்பாவுக்கும் இசையில் ஆர்வமா?

"ம். அப்பாவுக்கும் சின்ன வயதில் இசை ஆர்வம் இருந்திருக்கு.."

அவருக்கு முடியாமற் போனதை உங்கள் மூலம் ஈடு செய்து கொள்ள நினைக்கிறாரோ?

இதற்கு பதில் இல்லை. புன்முறுவலுடன் ஒரு தலையாட்டு
"அப்புறம் இசையமைப்பாளர் கிருஷன் மகேஷனின் ஒலியமைப்பு நெறிக்கல்வியை 8 மாதம் பயின்றேன். அப்போது ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தனியாக கீ போர்ட்டில் இசையமைத்துப் பார்ப்பேன். அப்போது நான் போட்ட ஒரு மெட்டு எனக்குப் பிடித்திருந்தது. மற்றவர்களுக்கு காட்டியபோது நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். அந்த இசைக்கேற்ப PRAVEEN MTZ பாடல் எழுதிக் கொடுத்தார். அந்த பாடல்தான் 'தொடுவானம் தேடி'. பாடலைப் பலரும் பாராட்டினார்கள்.

அப்பாவிடம் பாடிக் காட்டியபோது பாடலை குறுந்தட்டில் பதிவு செய்யும் வகையில் தயாரிக்க சம்மதித்தார்.

paramount 360 ஸ்டூடியோவின் உதவியுடன் 'தொடுவானம் தேடி' உருவானது. நுவன் சமீர, ஷான் தீக்ஷன் இருவரும்தான் தயாரிப்பாளர்கள். அவர்களது வீடியோ கிராஃப் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக பாடல் குறுந்தட்டில் பதிவாகியது. என்னுடன் பாடலில் தோன்றியவர் நடாஷா ரொஷெல். அவர் ஒரு மொடல்.

பாடல் யுடியூப்பில் பதிவாகி இதுவரை கிட்டத்தட்ட மூவாயிரம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இப்போது அது சிங்கள மொழியிலும் மாற்றப்பட்டுள்ளது. சிங்களப் பாடலையும் நானே பாடுகிறேன். சிரச டிவியில் இப்பாடல் ஒளிபரப்பாகி வருகிறது" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் மதுரங்க அரவிந்தன்.

எதிர்கால இலட்சியங்கள்

"இசையை முன்னெடுத்துச் செல்லும் அதேநேரம் உயர்தர படிப்பும் முக்கியம்" என்று முடித்தார் மதுரங்க அரவிந்தன்.

பதின்ம வயதில் காதல் வயப்படும் ஒரு வாலிபனின் உணர்வுதான் 'தொடுவானம் தேடி' முதல் காதலில் வரும் ஆசை, எதிர்பார்ப்பு, வேதனை ஆகியவை வரிகளாகியுள்ளன. உணர்வுகள் சுரங்களாகியுள்ளன. மதுரங்க, ரொஷேல் உருவங்களாகியுள்ளனர். காதல் உல்லாசமானது என்பதைப் போல் இசை உல்லாசம் (உற்சாகம்) ஆகியுள்ளது. ஒளிப்பதிவு குறிப்பாக முதலில் வரும் கடற்கரை காட்சியில் காமிராவின் சுழற்சி பாடலுக்கு நல்ல ஆரம்பத்தைக் கொடுத்துள்ளது. காதலியாக ரொஷேல் இயல்பாக நடிக்கிறார். மாடல் அனுபவம் உதவியிருக்கிறது. மதுரங்கவும் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார்.

ஒரு சினிமாப் படத்தில் வரும் பாடல் காட்சியைப் போல இருக்கிறது 'தொடுவானம் தேடி'.

நல்ல முயற்சி, இளம் பாடகர்களுக்கு ஒரு முன்னுதாரணம்

No comments:

Post a Comment