Friday, September 4, 2015

டிஸ் அண்டனா பொருத்தும் ஜெகஜாலர்கள்


மணி   ஸ்ரீகாந்தன்

'ஒரு டிஷ் அண்டனாவை பொருத்தி செனல்களை எடுத்துக் கொடுக்க ஏன் இவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்? என்று கேட்டால், சென்னையில் இருந்து கடல் தாண்டி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த செனல்களை எடுத்துக் கொடுக்கிறோம் தெரியுமா? என்று பதிலுக்குக் கேட்பார்கள்'

'இதைச் சரி செய்ய இரண்டாயிரம் செலவாகும் என்று கூறி பணத்தை வாங்கிக் கொண்ட ஒரு பொருத்துனர் கம்பி நீட்டி விட, அந்தப் பழுதை இன்னொருவர் 360 ரூபாவுக்கு திருத்தித் தந்திருக்கிறார்'

மிழ் வானொலித் துறைக்கு உலகளாவிய ரீதியில் இலங்கை வானொலிக்கு ஒரு தனி அந்தஸ்த்து இருக்கிறது. நம் நாட்டைக் கடந்து கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் தமிழகமே இலங்கை வானொலியை கேட்டுக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு நமது தமிழ் தொலைக்காட்சிக்கு பெரிய பெயர் எதுவும் இல்லை. ஒரு காலத்தில் ரூபாவாஹினியில் ஒலிபரப்பப்பட்ட சிங்கள நாடகங்களையே தமிழர்கள் தவம் கிடந்து பார்த்து வந்த வரலாறு இருக்கிறது. 'கோப்பிக் கடை' நாடகத்தை தமிழர்கள் மறப்பார்களா? அதோடு அத்திப்பூத்தாற் போல ஒரு தமிழ் படம் எப்போதாவது ஒளிபரப்பப்படும். அதற்குப் பிறகு பொன்மாலைப் பொழுது, முத்துச்சரம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் இடம் பெற்றாலும், தமிழ் நிகழ்ச்சிகளில் வயலினும், கடம் வாசிக்கும் நிகழ்ச்சிகளும் பெருவாரியாக இடம்பிடித்துக் கொண்டன. ஆனாலும் நம்மவர்கள் அதையும் பார்த்து ரசித்தார்கள்.

தெளிவில்லாமல் புள்ளிகளாக தெரிந்த அன்டனா அலைவரிசையை திருத்த படாத பாடு பட்டதெல்லாம் தனிக்கதை.

அதற்கென்று தனி பூஸ்டரும் விற்பனைக்கு வந்தது. ஆனாலும் புள்ளிகளை முழுமையாக நீக்க முடியவில்லை. பிறகு நீண்ட கால தேடலுக்குப் பிறகு நமது சந்தைக்கு வந்ததுதான் டிஷ் அண்டனா! அதுவும் ஆரம்பத்தில் பெரிய, பெரிய பணக்காரர்களின் வீட்டுக்கூரையில் மட்டுமே நமக்கு காட்சிப் பொருளாக இருந்தது. ஆனால் இப்போது ஓலைக் குடிசையிலும் டிஷ் அண்டனா வந்து விட்டது. இந்த இந்திய சேட்டலைட் தொலைக்காட்சி வந்தப் பிறகு நம்மவர்கள் குறிப்பாக தமிழர்கள் உள்ளுர் தொலைக்காட்சிகளை மறந்து விட்டார்கள். தங்கச்சி மடத்தில் நடந்த வீதி விபத்தை பற்றி பேசுபவர்களுக்கு கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றித் தெரியவில்லை. அதன் பின்னரேயே உள்ளுர்த் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் வெளிநாட்டு செனல்களையும் ஒளிபரப்பும் உள்ளுர் டிஷ் அண்டனா வசதி சந்தைக்கு வந்தது.
இப்போ விசயம் அதுவல்ல. டிஷ் அண்டனா பொருத்துனர்கள் எப்படியெல்லாம் பணம் பார்க்குறார்கள் என்பதுதான் விடயமே! சிறிய அளவிலான கே யூ பேண்ட் டிஷ் அண்டனாக்களில் 60 cm பெரிய அளவும், அதைவிட சிறியதும் விற்பனைக்கு இருக்கிறது. சிக்னல் ரொம்பவும் வீக்காக இருந்தால் பெரிய அளவிலான 60 cm அண்டனாவை பொருத்தலாம். செட்அப் பொக்ஸ், வயர், எல்.என்.பி.யோடு சேர்த்து அதிக பட்சமாக எட்டாயிரம் ரூபாவுக்கு முழுத் 'செட்டலைட்' தொகுதியும் விற்பனையாகிறது. செட்அப் பொக்ஸில், சன் டிரெக்ட், டாட்டா, ரிலையன்ஸ், பிக், வீடியோகோன், டிஷ் டீவி உள்ளிட்ட இந்திய பெக்கேஜ்ஜூகளோடு நம் நாட்டு டயலொக் பெக்கேஜூம் விற்பனைக்கு இருக்கின்றன. இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகள் நம் நாட்டில் சட்டபூர்வமானதாக இல்லாவிட்டாலும் தமிழர்கள் அதைதான் விரும்புகிறார்கள். சன் பெக்கேஜ்ஜூக்கு மாதாந்த வாடகை இந்திய ரூபாயில் நூற்றி ஐம்பத்தைந்து ஆகிறது. அதற்கு நம் நாட்டில் 600 ரூபா வரை அறவிடுகிறார்கள். இதில் இடைத்தரகர்களாக செயல்படும் அண்டனா பொருத்தும் 'டெக்னீஷியன்கள்' தான் கொள்ளை இலாபம் பார்க்கிறார்கள். கொழும்பு சுற்றுவட்டாரமானால் டிஷ் கொள்வனவு செய்யும் கடைக்காரர்களே தொழில் நுட்பவியலாளர்களையும் அனுப்பி அண்டனாவை பொருத்தித் தருகிறார்கள். பொருத்துபவருக்கு தனிக் கட்டணம் அறவிடப்படுகிறது. டயலொக் டிவியானால் நீங்கள் மாதக் கட்டணம் செலுத்துபவரானால் அந்நிறுவனமே அண்டனாவை பொருத்தித் தருவதோடு பராமரிப்பையும் ஏற்றுக்கொள்கிறது. அதை தவிர்த்து கிராமம், தோட்டப் புறங்களில் சில இளைஞர்கள் இந்த சேவையை செய்து கொடுக்கிறார்கள். அண்டனாவில் கை வைத்தாலே இவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபா கொடுக்க வேண்டும். "சென்னையில் இருந்து உங்க வீட்டுக்கு எடுத்துத் தர்றோம். எத்தனையோ டவர் தடங்களையெல்லாம் கடந்து சிக்னலை மையப் புள்ளியில் செட் பண்ணியிருக்கோம்!" என்றெல்லாம் கதைகளை அளந்து விட புள்ளியில்லாத இந்திய சேனல்களை பார்த்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

அது தவிர சாப்பாடு, கூல்டிரிங்க்ஸ் சில இடங்களில் பியர் டின் கூட சந்தோஷத்துடன் தருகிறார்கள் என்று ஒரு டெக்னீஷியன் என்னிடம் சொன்னார். முறையான பயிற்சி பெற்ற டெக்னீஷியன்களிடம் ஒரு டிரில் மெஷின், சிக்னல் லெவல் மீட்டர். (இதன் விலை ரொம்ப அதிகம்) அத்தோடு இலக்ரோனிக் சிக்னல் மீட்டர் ஆகியவையோடு, ஸ்க்டூ டிரைவர், திருகாணி கழட்டும் சாவி என்பவற்றை வைத்திருப்பார்கள். ஒரு சிலர் சிக்னல் லெவல் மீட்டர் இல்லாததால் பழைய ப்ரீடு எயார்  சி. பேண்ட் சேட்டி லைட்டுக்கு பயன்படுத்தும் ரிசீவர் பொக்ஸ் வைத்து அதில் குறிப்பிட்ட பேக்கேஜ்ஜின் ப்ரிகொண்ஷி இலக்கத்தை செட்டிங்குக்கு சென்று பதிவு செய்து சிக்னலை பெற்று அதன்பிறகு செட்அப் பொக்ஸை பொருத்தி இணைப்பைக் கொடுப்பார்கள். இதில் பெரிய வேலை என்று எதுவுமே கிடையாது. செட்அப் பொக்சில் மெனுவிற்கு சென்று ப்ரிகொண்ஷியில் சிக்னல் லெவலை பார்த்து தெரிந்து கொள்ளத் தெரிந்தால் போதுமானது. சிக்னல் லெவலைப் பார்க்க செட்அப் பொக்சிலிருந்து வீடியோ இணைப்பை டீவிக்கு வழங்கி அதன் திரையில்தான் மேற்கூறிய விடயங்களைப் பார்க்க வேண்டும். டிஷ் அண்டனாவை பொருத்தி விட்டு அதை நிதானமாக மெதுவாக அசைத்து சிக்னலைப் பெற வேண்டும். கொஞ்சம் சிரமம்தான் ஆனாலும் அனுபவம் உடையவர்கள் ரொம்பவும் இலகுவாக செய்து விடுவார்கள்.
அண்மையில் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் செட்அப் பொக்ஸில் சிக்னல் பிரச்சினை. குறிப்பிட்ட சில சேனல்கள்தான் வேலை செய்வதாகவும் ஒரு டெக்னீஷியனை ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டார். நானும் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் விடயத்தைச் சொல்ல அவரும் சென்று  சிக்னலையும் எடுத்துக் கொடுத்து விட்டு "நாங்க இந்த தொழில்ல ரொம்ப காலம் அனுபவம் பெற்றவங்க. எங்களை விட அனுபவசாலிகளை நீங்கள் பார்க்கவே முடியாது!" என்று அளந்து விட அவரும் ரொம்பவும் சந்தோசப்பட்டு அவர்கள் கேட்ட ஆயிரத்து ஐநூறு ரூபாவைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஆனால் அன்று மாலையே திரும்பவும் சிக்னல் பிரச்சினை. பிறகு என்ன செய்ய ஆயிரத்து ஐநூறு ரூபா போச்சேன்னு புலம்பியவர் மீண்டும் ஒரு டெக்னீஷியனை தேடிக் கண்டுபிடித்து பார்த்தபோது அண்டனாவிலிருந்து டீவிக்கும் வரும் கேபள் வயர் பழுதடைந்து இருப்பது தெரிய வந்தது. புதிய வயரை வாங்கி போட்டிருக்கிறார். இந்த சிறிய வேலைக்கு அந்த நபர், ஆயிரத்து ஐநூறு தான் ரேட் என தொகையை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினார். ஆனால் டீவி பிரச்சினையில்லாமல் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செய்மதி தொலைக்காட்சி தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. ஆனால் இது ஒரு மணலை கயிறாகத் திரிப்பது போன்ற காரியம் என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்த 'டெக்னீஷியன்'கள் அறியாதவர்கள். அப்பாவிகளிடம் பணம் கறந்து வருகிறார்கள்.

செய்மதி அண்டனா பொருத்தும் வேலைக்கு இவர்கள் அதிகபடியான கட்டணம் அறவிடுவதற்கு இவர்கள் சொல்லும் காரணம் 'அவ்வளவு தூரத்திலிருக்கும் இந்தியாவிலிருந்து சேனல்களை எடுத்துத் தருகிறோம்' என்பதுதான். இவர்கள் சொல்லும் கதையைப் பார்த்தால் சென்னையிலிருந்து இராமநாதபுரம் வழியாக கேபிளை இழுத்துக் கொண்டு வந்து உங்கள் வீட்டு டீவியில் இணைப்பது மாதிரித்தான் பெரிய தோரணை காட்டுகிறார்கள். ஆனால் நம் தலைக்கு மேலேதான் செய்மதி இருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியாதா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த பிழைப்பு ஓடும் என்று எனக்குத் தெரிந்த ஒரு அண்டனா பூட்டுபவரிடம் கேட்ட போது

"நமக்கு இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. டிஷ் அண்டனா இல்லாமலேயே டீவியிலேயே வெளிநாட்டு சேனல்கள் தெரிகிற மாதிரி புதிய தொழில்நுட்பம் வந்தால்தான் சிக்கல். அது இப்போதைக்கு இல்லை. நமக்கு இப்போ முன்பை விட அதிகமாகவே ஓடர் கிடைக்குது. குறிப்பா சொல்லணும்னா புதுசா டீச்சர் நியமனம் கிடைச்சவங்க வீட்டில் கட்டாயம் டிஷ் பொருத்தி விடுறாங்க. கடந்த அரசாங்கத்துல ஒரேயடியாக மூவாயிரம் பேருக்கு நியமனம் கொடுத்த போது எங்களுக்கும் ரொம்ப வேலை கிடைச்சது. இப்போவும் அவங்க வீட்டு டீவியில் சிக்னல் கிடைக்கலைன்னா, நாங்கதான் போய் திருத்திக் கொடுப்போம். அவங்க ரொம்ப நல்லவங்க, காசு தாராளமாக கொடுப்பாங்க" என்று அவர் தொடர்ந்த போது, டீச்சர்மாரை ஏன் குறிப்பிட்டுக் கூறுகிறார்? என்ற கேள்வி முளைத்தது. அந்த சந்தேகத்தைக் கேட்டேன்.

"டீச்சர் மாருங்களுக்கு கட்டாயம் சேட்டிலைட் செனல்கள் வேணும் தானே! ஏன்னா, அங்க எல்லா விடயங்களையும் படித்து முடித்து விட்டு வீட்டுல சும்மாதானே இருக்காங்க... பிள்ளைகள் அவங்க காலில் விழுந்து கும்பிடுதுகளே" என்று அந்த நண்பர் ஆசிரியைகளைப் பாரத்து பிரமித்து வாயாரப் புகழ்ந்து கொண்டிருந்தார்.

சில இடங்களில் ஆசிரியர் தொழில் செய்பவர்களும் பகுதி நேர வேலையாக டிஷ் பொருத்துவதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். கஹவத்தை பகுதியில் நான் கண்ட ஒரு ஆசிரியர் ஸ்கூலுக்கு வரும் போதே டூல்ஸ் பேக்கையும் கையோடு பைக்கில் வைத்து எடுத்து வருகிறார். ஓர்டர் வந்ததும் பாடசாலை முடிந்ததும் பகுதிநேர வேலைக்குப் பறந்து விடுகிறார். ஒரு வாரத்துக்கு குறைந்த பட்சம் மூன்று டிஷ்களையாவது பொருத்துகிறார். எப்படியும் வாரத்துக்கு நாலாயிரத்துக்கும் மேல் உழைக்கிறார்.

அண்மையில் கஹவத்தை பொறனுவை தோட்டத்தில் டிவியில் சிக்னல் இல்லையே என்று நமக்கு தெரிந்த ஒருவர் ஒரு டெக்னீஷியனை அழைத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார். அவர் பார்த்து விட்டு ரிசிவரில்தான் பழுது இருக்கிறது. எப்படியும் திருத்த இரண்டாயிரம் ரூபா ஆகும் என்று சொல்லி இரண்டாயிரத்தையும் ரிஸீவரையும் வாங்கிக் கொண்டு போனவரை மூன்று மாதமாகக் காணவில்லை. அந்த ரிசீவரில் ஆறு மாதத்திற்கான கட்டணமும் செலுத்தப்பட்டிருந்ததாம். பிறகு எப்படியோ ரிசீவரை மட்டும் மீட்டு எடுத்திருக்கிறார். பிறகு அதை வேறு ஒருவரிடம் கொடுக்க அவர் முன்நூறு ருபாயில் வேலையை முடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் இரண்டாயிரம் காசும் ரிசீவருக்கான ரிமோட்டும் இன்றுவரை அந்த ஏமாற்றுக்கார டெக்னீஸியனிடமிருந்து கிடைக்கவில்லை என்று புலம்புகிறார் நண்பர்.
உங்கள் டிஷ் செனல் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று ஒரு பொருத்துபவரிடம் சொன்னால் என்ன மாதிரியான பிரச்சினை என்பதைக் கேட்பார். சொன்னதும், பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதை ஊகித்து விடுவார். ஆயிரத்து 500 ரூபா கட்டணம் அறவிட முடியாத அற்ப விஷயம் என்பதைத் தெரிந்து கொண்டதும், பழுதை பெரிதாக்கி அதற்கு அப்படி செய்யணும், இப்படிச் செய்யணும், கஷ்டமான விஷயம் என்றெல்லாம் உஷார் காட்டுவார். அப்புறம், தான் ரொம்ப பிஸி என்றும் ஏராளமான வேலைகள் இருப்பதாகவும் தன்னைப் பற்றி பெருமையடிப்பார். என்ன பெக்கேஜ், சன்னா, டிஷ்ஷா, டயலொக்கா என்று கேட்டுவிட்டு, நான் சன் கெனெக்ஷன்களை வியாழன் மாத்திரம்தான் பார்ப்பேன். டயலொக் மெட்டர்களை சனிக்கிழமை வைத்துக் கொள்வேன் என்பார். நீங்கள் தலை கிறுகிறுத்துப் போய் வியாழன் லீவு போட்டு வீட்டில் இருக்கிறேன் என்பீர்கள். அவர் சமாதானமாகி, சரி உங்களுக்காகத்தான் மற்ற வேலைகளை தள்ளி வைத்து விட்டு ஞாயிறு இரண்டரை மணிக்கு வருகிறேன் என்பார். நீங்கள் மகிழ்ந்து போய் ஓகே சொல்ல, அவரும் மகிழ்ச்சியடைவார். ஏனெனில் உப்புப் பெறாத ஒரு 'பழுது' பார்ப்புக்காக நீங்கள் அவருக்குக் கொடுக்கப் போவது ரூபா 1500!

No comments:

Post a Comment