Sunday, September 20, 2015

தேவதாசி வரலாறு -12


அருள் சத்தியநாதன்

தமிழகத்திலும் இந்திய மாநிலங்களிலும் தேவதாசி முறையும், சிறுமியர் பொட்டுக்கட்டி விடப்படுவதும் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் அம்மனுக்கு நேர்ந்து சிறுமியருக்கு பொட்டு கட்டி விடும் வழக்கம் இருந்து வருவதாகத் தெரிகிறது.

2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விழுப்புரம் மாவட்டம் சு.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற சிறுமிக்கு பொட்டுகட்டப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து ரவிக்குமார் என்பவர் இது தொடர்பாக கள ஆய்வு செய்து 2008 ஜனவரி காலச்சுவடு இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதன் சில பகுதிகள் இங்கே பிரசுரமாகின்றன.

சிறுமியருக்கு ஏன் இன்றைக்கும் பொட்டு கட்டி விடப்படுகிறது என்பதையும் பின்னணிக் காரணங்களையும் இக்கட்டுரை விளக்குவதாக உள்ளது.

சு. கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு ஏழு பிள்ளைகள். மூன்று ஆண்கள், நான்கு பெண்கள். பெரிய பெண் திருமணமாகி மூன்று வருடம் ஆவதற்குள் விதவையாகிவிட்டார். குடும்பத்திலும் கஷ்டம். ராமகிருஷ்ணன் அரங்கண்டநல்லூரில் உள்ள சிவில் சப்ளை களஞ்சிய சாலையில் மூட்டை தூக்கிச் சம்பாதிக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்குப் போதவில்லை. குடும்பக் கஷ்டத்துக்குக் காரணம் என்ன என்று அருள்வாக்குச் சொல்லும் தனது தம்பி மகனிடம் குறிகேட்டபோது, கடந்த இரண்டு தலைமுறைக்கு முன் உனது குடும்பத்தில் இருந்த பொட்டுக்கட்டும் வழக்கத்தை நீ மறந்துவிட்டாய், அதனால்தான் இவ்வளவு சங்கடங்கள். கஷ்டங்கள் தீர வேண்டுமானால் உனது மகள் ஒருத்தரைச் சாமிக்கு நேர்ந்துவிட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். தனது குடும்பத்தில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் கடைசி மகள் கிருஷ்ணவேணிதான் பூப்பெய்தாத பெண் என்பதால் அவருக்குப் பொட்டுக்கட்டிவிட ராமகிருஷ்ணனின் குடும்பத்தினர் தீர்மானித்திருக்கிறார்கள். ஊரைக்கூட்டித் தடபுடலாக அந்தச் சடங்கைச் செய்திருக்கிறார்கள். அதைப் பார்த்த சிலர் போலீசுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். போலீஸ் வருவதற்குள் பொட்டுக்கட்டி முடித்துவிட்டார்கள்.
கிருஸ்ணவேணி
தமிழ்நாட்டில் கோயிலுக்குப் பெண்களை விற்கும் வழக்கம் இருந்த தகவல்களைச் சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர்கள் தளிச்சேரிப் பெண்கள், பதியிலார், தேவரடியார், நாடகக் கணிகையர் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டுப் பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டுள்ளனர். அத்தகைய பெண்கள் பலரைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தஞ்சை ராஜராஜேசுவரத்தைச் சூழ்ந்துள்ள தெருக்களில் முதலாம் ராஜராஜ சோழன் குடியேற்றினான். அவ்வாறு தேவரடியார்களாக ஆக்கப்பட்டவர்கள் உடம்பில் திரிசூல முத்திரை பொறிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

1947க்குப் பிறகு பல மாநில அரசுகளும் தேவதாசி முறையை ஒழித்துச் சட்டம் இயற்றியுள்ளன. ஆனால், ''இப்போதுங்கூடச் சில மாநிலங்களில் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி மகாராஷ்டிரா, கர்நாடக எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பெண்கள் தேவதாசிகளாகக் கோயில்களுக்கு நேர்ந்துவிடப்பட்டிருக்கின்றனர்" என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் பத்து மாவட்டங்களிலும் ஆந்திராவின் பதினான்கு மாவட்டங்களிலும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதாக அதன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சோழர்காலத் தமிழகத்தில் வழக்கிலிருந்த தேவதாசி முறையும் இப்போது கர்நாடகா, ஆந்திரா முதலிய மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் எல்லம்மா வழிபாடும் அடிப்படையில் வேறுபாடு கொண்டவை. தேவதாசிமுறை துல்லியமாக வரையறுக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், எல்லம்மா வழிபாடு பெரும்பாலும் பக்தியை அடிப்படையாகக் கொண்ட வெகுசன நம்பிக்கை என்னும் நிலையிலேயே செயல்படுகிறது. இதை நேரடியாகப் பாலியல் தொழிலோடு தொடர்புபடுத்தி வெளிவந்துள்ள ஆய்வுகள் முன்முடிவும் மனச்சாய்வும் கொண்டவையாக இருக்கின்றன என்பதே உண்மை.

தேவதாசி வழக்கமும் பொட்டுக்கட்டுவதும் ஒரேவிதமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன எனினும் இது வேறுவிதமான நம்பிக்கையிலிருந்து வருகிறது.

'செடல்' நாவலில் இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கும் ஐதீகம் ஒன்றை நாவலாசிரியர் இமையம் விவரித்திருக்கிறார். தேவர்கள் ஒருபுறமும் வாலி, சுக்ரீவன் மறுபுறமுமாக நின்று அமுதத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது, அமிர்தப் பானையிலிருந்து சிந்திய துளிகளிலிருந்து மூதேவி, லட்சுமி, பார்வதி, செல்லியம்மன் மற்றும் தாரை ஆகியோர் பிறந்ததாகவும் அதில் செல்லியம்மனை வாலி, சுக்ரீவன் இருவரையும் மணக்குமாறு ஈஸ்வரன் பணித்தபோது, இரண்டு ஆண்களை மணக்கச் சம்மதிக்காமல் கோபங்கொண்டு தேவலோகத்தை விட்டு வெளியேறிப் பூலோகத்துக்கு அவர் வந்துவிட்டதாகவும் அவரைச் சமாதானப்படுத்துவதற்காகச் சில சிறப்பு ஏற்பாடுகளை ஈஸ்வரன் செய்ததாகவும் அவற்றில் ஒன்றுதான் செல்லியம்மனுக்கென்று ஒரு கன்னிப் பெண்ணைச் சிப்பந்தி ஆளாக நியமிக்கும் வழக்கம எனவும் அந்த ஐதீகம் கூறுகிறது.
பொட்டு கட்டப்பட்ட கொல்லூர் 
முத்துமாரியம்மன் கோவில்
சு.கொல்லூர் கிராமத்துக்குச் சென்று விசாரித்த போது, அங்கேயுள்ள மக்களுக்கு இந்த ஐதீகமெல்லாம் தெரிந்திருக்கவில்லை. பொட்டுக்கட்டப்படும் பெண் கூத்தாடிக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ மற்றவர்களின் வற்புறுத்தலால் பொட்டுக்கட்டிக் கொண்டவராகவோ இல்லை. அங்கிருக்கும் கோயிலுங்கூடச் செல்லியம்மன் கோயில் அல்ல. பொட்டுக்கட்டி விடப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். அம்மனைத் திருமணம் செய்துகொண்ட பெண் என்பதால் அப்படி ஒரு வழக்கம். கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ இருப்பது போலக் கோயில் பூசாரி இங்கே தாலி கட்டுவதில்லை. பொட்டுக்கட்டப்படும் சிறுமியின் உறவுக்காரக் குடும்பத்திலிருந்து ஒரு சிறுமியைத் தேர்ந்தெடுத்து அவரைக் கொண்டு தாலி கட்டப்படுகிறது. பொட்டுக்கட்டப்பட்ட பெண்கள் பெரும்பாலும் தனது முறைமாமனோடு குடும்பமாகத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான பாலியல் சுரண்டலுக்கும் ஆளாவதாகவும் தெரியவில்லை. பொட்டுக்கட்டிவிடப்படும் பெண்ணுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு அவரது தாய்வீட்டுச் சொத்தில் சமபங்கு கொடுக்க வேண்டுமாம். எனவே அவரை வைத்துக் காப்பாற்ற அவரது 'கணவர்' தயங்குவதில்லை.

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாவிட்டாலோ வறுமை அதிகமாக இருந்தாலோ இப்படிக் கோவிலுக்கு ஒரு சிறுமியை நேர்ந்துவிட்டுவிடுவார்களாம். ஆனால், தேவதாசிகளைப் போல அவர்கள் பொது மகளிராக இருப்பதில்லை. பக்தி சார்ந்த ஒரு நம்பிக்கையாக மட்டுமே அந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. சு. கொல்லூரில் மட்டுமன்றி விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் இந்த வழக்கம் உள்ளது எனத் தெரிந்தது.

பின்னர் விழுப்புரம் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இந்த விஷயம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கேட்டேன். விழுப்புரத்தில் அபயம் என்னும் காப்பகத்தில் சிறுமி கிருஷ்ணவேணியைத் தங்கவைத்திருப்பதாக ஆட்சியர் சொன்னார். அந்தப் பெண்ணுக்குக் கட்டப்பட்ட தாலியைக் கழற்றி விடுமாறு சொல்லிவிட்டதாகவும் அந்தச் சிறுமியை வேறு பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கப் போவதாகவும் கூறினார். விதவையாகிவிட்ட ராமகிருஷ்ணனின் பெண்ணுக்குச் சத்துணவுச் சமையலர் வேலையை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறு அவரிடம் நான் கோரியபோது பரிசீலிப்பதாகச் சொன்னார்.

அபயம் இல்லத்தில் இருந்த கிருஷ்ணவேணியையும் அவரது அம்மா அஞ்சலையையும் பார்த்துப் பேசினேன். சாமி குத்தம் ஆகிவிடாமல் தனது மகளுக்குக் கட்டப்பட்ட தாலியை மீண்டும் அணிவித்துவிட வேண்டும் என்பதில் அஞ்சலை குறியாக இருந்தார். எங்களை ஊருக்கு அனுப்பச் சொல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். தற்போது சிறுமி கிருஷ்ணவேணியை விடுதி வசதியோடு கூடிய நல்லதொரு பள்ளியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சேர்த்து விட்டிருக்கிறார். எதிர்காலத்தில் 'டீச்சர்' ஆக வேண்டும் என்ற அந்தச் சிறுமியின் ஆசை நிறைவேறும் என்னும் நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment