Sunday, August 9, 2015

குடி குடியைக் கெடுக்கும்!


மணி  ஸ்ரீகாந்தன்

னிதனைப் பிடித்தாட்டுகிற ஒரு துஷ்ட தேவதைதான் போதை. இது மதுசாரத்தினாலும், மதசாரத்தினாலும் ஏற்படுகிறது. 'மது குடித்தால்தான் போதை வரும் மதம் சொன்னாலே போதை வரும்' என்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சொல்விட்டுச் சென்றிருக்கிறார். ஆனாலும் இன்றைய சமுதாய சீரழிவுக்கு மது பாவனையே மூலகாரணமாக விளங்குகிறது. போதையில் பயணம் பாதியில் மரணம், மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும் கேடு என்று என்னதான் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்தாலும் மது விற்பனை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கு இன்றைய இளைய தலைமுறையினரே காரணம் என்று மதுசாரத்திற்கு எதிரானவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

மனிதனுக்கு போதையை ஏற்றி பாதையை மாற்றிப் போடும் மதுசாரத்தை 'ஆல்கஹால்' என்று குறிப்பிடுகிறார்கள். இது நாம் பருகும் குளிர்பானங்களிலும் ஒரு அளவு சேர்க்கப்படுகிறதாம். அதனால்தான் சில குளிர்பானங்களைக் குடித்தால் கொஞ்சம் கிக்காக இருக்கும். அதேபோல இந்த 'ஆல்கஹால்'லின் அளவு பியரிலும், சாராயத்திலும் வெவ்வேறு அளவுகளில் அமைந்திருக்கிறது. இப்போ விசயம் என்னவென்றால் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் பியர் குடிப்பதை ஃபேஷன் கலாசாரமாக கையிலெடுத்திருப்பதுதான். குறிப்பாக தோட்ட மற்றும் கிராம இளைஞர்கள் இந்த பியர் கலாசார சாக்கடைக்குள் வீழ்ந்து எழ முடியாமல் கிடக்கிறார்கள். இந்த இளைஞர்களின் பார்வையில் 'பியர் ஒரு மதுபானமே கிடையாது. அது ஒரு உற்சாக பானம்' என்றுதான் கருதுகிறார்கள். இதில் பெரிய வெட்கக்கேடு என்னவென்றால், இந்த தற்குறிகளின் பேச்சை நம்பும் சில பெற்றோர்களும் பியர் கலாசாரத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்பதுதான். சில நாட்களுக்கு முன்பாக எனது நண்பரைப் பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். காலை பத்து மணியைக் கடந்த பின்பும் 'அவர் உறங்கிக் கொண்டிருந்தார். நல்லா கல்யாண வீட்டுல குடிச்சிட்டு வந்து தூங்கிறான்' என்று நான் சொன்னதும் என்மீது அவரின் அம்மா கோபப்பட்டார். "ச்சே நீங்க என்ன தம்பி என் புள்ளய அப்படி சொல்றீங்க! அவன் என்னைக்கு குடிச்சிருக்கான்?" என்று திருப்பிக் கேட்டபோது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு அந்த அம்மா இன்னொரு விடயத்தையும் சொன்னார்.
"மத்த பயலுங்க மாதிரி சாராயம், பீடியா குடிக்கிறான்? பியர் மட்டும்தான் அதுவும் ஏதாவது விஷேசத்துக்குப் போனாதான்" என்று அந்த தாய் நட்சாட்சிப் பத்திரம் கொடுத்தபோது அத்தாயின் முகத்தில் பளிச்சிட்ட பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே! பியரும், சாராயமும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை நான் எப்படி இந்த பாமர மக்களிடம் புரிய வைக்க முடியும் என்பதை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே நடந்தேன். எல்லாக் குடிமகன்களும் பியரில் ஆரம்பித்துதான் சாராயம், கள்ளச்சாராயம் என்று போகிறார்கள் என்பதை இவர்களுக்கு எப்படித்தான் புரியவைப்பது?

சிறிது தூரம் வந்தப் பிறகு ஒரு குடிமகன் வீதியின் ஓரத்தில் மல்லாக்கப் படுத்திக்கிடந்தார். அவர் பக்கத்தில் ஒரு மண்சட்டி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வெள்ளைக் கொடியும் நாட்டப்பட்டிருந்தது. அது அந்த ஏரியா காவாலிகளின் வேலை என்பதை புரிந்து கொண்டேன். அந்த மனிதரின் பக்கத்தில் சென்று அவரைத் தட்டி எழுப்பினேன் எழும்பவில்லை. நானும் விடவில்லை. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு அவர் எழும்பினார். நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். "நீ எப்படியப்பா குடிக்கப் பழகினாய்?" என்று கேட்டேன். அதற்கு அவர்,

"ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நண்பர்களோட சேர்ந்து பியர் பார்ட்டி போடுவோம், அதுவே பழகிப்போக ஒருநாள் பியர் கிடைக்காம சாராயத்தை வாங்கி குடிச்சோம். பிறகு அதுவே பழகிடுச்சசு. இப்போது கல்யாணமாகி குழந்தை குட்டின்னு ஆகிடுச்சி. இப்போது சாராயம் வாங்கி குடிக்கப் பணம் போதாது. அதுதான் கசிப்புக்கு வந்துட்டேன்" என்று அந்தக் குடிமகன் தனது வரலாற்றை ஒளிவுமறைவின்றிச் சொன்னார். கதையைக் கேட்டுவிட்டு நகர்ந்தேன். உண்மையும் அதுதான்.

'களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் குளிர்த்தானை துந்துரி இயற்று' என்ற குறளில் வள்ளுவர்,

'குடிபோதையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது என்பது நீருக்குள் மூழ்கியவனை விளக்குக் கொண்டு தேடுவதற்கு சமம்' என்று எடைபோட்டுச் சொல்கிறார். அதனால் அந்த குடிமகனுக்கு தெளிவுரை சொல்ல வேண்டிய தேவையும் எனக்கு இருக்கவில்லை.

மலையக இளைஞர்கள் பியரை ஒரு கௌரவத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள் என்பது ஒரு மோசமான நிலை. அந்தக் காலத்தில் சிகரெட் கௌரவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. அறுபது எழுபதுகளில் கையில் ஒரு ஆங்கில தினசரியும் மேல் பொக்கட்டில் சிகரெட் பெக்கட்டும் கையில் புகையும் சிகரெட்டுமாக அரசு அலுவலகத்துக்குள் நுழைந்தால் போன காரியத்தை எளிதாக முடித்துக்கொண்டு வந்து விடலாம் என்று டிரவுசர் போட்டவர்கள் சொல்வார்கள். இன்று இந்த பாச்சா பலிக்காது. ஆனால் சிகரெட் விட்ட இடத்தை டின் பியர் பிடித்துக்கொண்டிருப்பதாக கருத வேண்டியிருக்கிறது.

"நேற்று கல்யாண வீட்டுக்குப் போய் பத்து மணிக்கு பியர் குடிக்க ஆரம்பிச்சு பன்னிரெண்டு மணிக்குத்தான் முடிச்சோம். வீட்டுக்கு வந்து விடிய விடிய வாந்தி எடுத்திட்டேன்" என்று இளைஞர்கள் பெருமையாக பேசி நெஞ்சு நிமிர்ந்துவதைப் பார்த்து இருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் ஆண்மையின் சின்னமாக எப்படி காளை அடக்குதலும், மல்யுத்தமும் இருந்ததோ அந்தக் காலம் போய் இன்று யார் பியரை மூக்கு முட்டக் குடிக்கிறார்களோ அவர்களே ஆண் மகனாகப் பார்க்கப்படும் சீரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட' என்ற அங்கீகாரம் ஊரில கிடைக்க வேண்டும் என்றால் பியர் கட்டாயம் குடிக்க வேண்டுமாம். அப்போதுதான் தமக்கு ஊரிலுள்ள இளைஞர்கள் அணியில் கௌரவம் கிடைக்குமாம். நான் சொல்வது வெறும் ரீல் என்றால் இளைஞர்கள் சிலரைக் கேட்டுப் பாருங்கள். உண்மை தெரியும்!

ஒருநாள் வழியில் எனக்குத் தெரிந்த ஒரு நபரைக் கண்டேன். அவரிடம் 'முன்னேஸ்வரத்துக்கு போனீங்களே பயணம் எப்படி? என்று கேட்டேன்.

"ரொம்ப ஜாலியா இருந்துச்சு. ஆனா கீமன்ராஜூதான் பியர் குடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டான். அதனால் அவன் தலையில் பியரை ஊத்திட்டோம். பொடியன்மாருங்கன்னா பியர் குடிக்கனும்தானே! இவனையெல்லாம் யாரு மதிப்பாங்க, என்ன மனுஷன்!" என்று அவர் சொல்லிக்கொண்டே போனார். எனக்கு தலை சுத்தியது. என்னடா இது ஊரில மரியாதை கிடைக்க வேண்டுமானால் பியர் குடிக்கனுமாமே! பியர் டின்கள் பல விதமான வண்ணங்களில் கண்ணைக் கவரும் விதத்தில் சுப்பர் மார்க்கட் மது விற்பனை நிலையங்களிலும், சாதாரண மதுக்கடைகளிலும் கிடைக்கின்றன. விலை இருநூறு ரூபாவுக்குத்தான் வரும். கையடக்கமானது, கைப்பயிலும் ஏன் காற்சட்டை பையிலும் வைத்துக் கொள்ளலாம். கீழே விழுந்தாலும் உடையாது. எனவே வாங்குவதும் எடுத்துச் செல்வதும் இலகுவானது. பாடசாலை மாணவர்கள் சிலரும் இவ்வகையான பியர் டின்களை வாங்கி தமது புத்தகப் பைகளிலும் எடுத்துச் சென்று புதர் மறைவில் வைத்து குடித்த போது மாட்டிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆனாலும் மலையகத்தைச் சேர்ந்த தாய்க்குலங்கள் பியரை குளிர்பான வகையில் சேர்த்து விட்டதால் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அதனால் வளரும் தலைமுறை பியரை 'சீமைப் பாலாக' சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய வீட்டு வீசேஷங்களிலும் பியர் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நம்முடைய பொடியன்களுக்கு என்று பெட்டி பெட்டியாக பியர்களை ஆயிரங்களை கொட்டி வாங்கி வைத்துவிடுவது தோட்டங்களிலும் கிராமங்களிலும் வழக்கமாகி வருகிறது.

ஒரு பியர் டின் எட்டு சதவீத செறிவைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் முன்னர் அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனையில் உள்ள பியர் பானங்களை எட்டு சதவீத மதுசாரத்தைக் கொண்டதாக இருக்கவில்லை. சுமார் 10, 12 ஆண்டுகளாகத்தான் எட்டு சதவீத மதுசாரம் கொண்ட பியர் சந்தைக்கு வந்தது. ஒரு இளைஞனுக்கு போதுமான 'கிக்'கைக் கொடுக்கக் கூடியது இந்த பியர். இரண்டு டின்களை காலி செய்தால் நல்ல போதையைத் தரும். மதுவுக்கு பழகியவர்கள், ஒரு டின் பியரும் கால் போத்தல் சாராயமும் அருந்தினால், குறுகிய நேரத்தில் குறைந்த செலவில் நல்ல கிறக்கத்தை அடையலாம் என்று அடித்துச் சொல்கிறார்கள். இந்த ஆபத்தை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். டின் பியர் எளிதில் கிடைப்பதும், அட பியர்தானே குடிச்சிட்டுப் போறான் என்ற பெற்றோரின் சமூகத்தின் அலட்சியமும், மதுவுக்கு அடிமையாகும் வழியை இளைஞர்களுக்கு காட்டுவதாகவே அமைகிறது என்பதைப் பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இங்கே நாம் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறோம். இலங்கையில் எல்லாக் காலமும் மது விற்பனை இருந்து வருகின்ற போதிலும், இப்போது போல மது இலகுவில் கிடைக்கும் பொருளாக முன்னெப்பொழுதும் இருந்ததில்லை. மது என்பது சுலபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு பொருளாக இருக்கக் கூடாது. புகைப்பதற்கு எதிராக தீவிரமும் தடைகளும் மது விடயத்தில் கைக்கொள்ளப்படுவதில்லை. குறைந்த பட்சமாக பியரை டின்களில் விற்பனை செய்யும் இன்றைய வழக்கத்துக்கு அரசாங்கம் தடைபோட வேண்டும். பியரை கண்ணாடிப் போத்தலில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். குடிப்பழக்கத்துக்கு பியரே முகவரியாக இருப்பதால் பியரை டின்னில் அடைத்து விற்பதை அரசு தடை செய்வது அவசியம். நீங்கள் கிராம மற்றும் தோட்டப் பாதைகளில் நடந்து சென்றால் ஆங்காங்கே காலி பியர் டின்களைக் காண முடியும். இந்த அலுமினிய டின்களை சேகரித்து விற்பதற்கே பலர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பரபரப்பாக விற்பனையாகி வருகிறது டின்பியர். இந்த டின்பியர் கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டியது அரசின் கடமை.

No comments:

Post a Comment