Monday, August 3, 2015

புகையிலை லெட்சுமணனோடு ஒரு உரையாடல்


உரையாடியவர்:  மணி  ஸ்ரீகாந்தன் 

கிராமப்புறங்களில் சில மனிதர்களை சிறப்புப் பெயரோடு அழைக்கும் வழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது. அந்தப் பெயர்கள் குறிப்பிட்ட சிலரை கௌரவிப்பதாக அல்லது கொச்சைப்படுத்துவதாக இருக்கும். புளத்சிங்கள பகுதியில் வசிக்கும் லெட்சுமணனின் சிறப்புப் பெயர் 'போயலைக்காரர்' (புகையிலைக்காரர்). கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக புளத்சிங்கள பகுதியில் புகையிலை வியாபாரம் செய்து வருகிறார் இவர். ஹொரண, இங்கிரிய, புளத்சிங்கள நகரங்களை அண்டியுள்ள தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த புகையிலை வியாபாரியை நன்றாகவே தெரியும். பாயில் சுருட்டிய புகையிலைக் கட்டை கக்கத்தில் வைத்துக்கொண்டு தோட்டப் பகுதிகளை வலம் வந்ததால் இன்றும் அந்த மக்களுக்கு அண்ணன்தான் மாஸ்!

"அப்போது செக்கட்டித் தெருவுக்கு போய் புகையிலை வாங்கி வருவோம். நல்ல தரமான ஐம்பது புகையிலை கொண்ட ஒரு கட்டு நாலு ரூபாய்க்கு வாங்கி ஒரு புகையிலையை பத்து சதத்திற்கு விற்பனை செய்திருக்கேன். இன்னைக்கு அந்த ஒரு புகையிலையின் விலை அறுபது ரூபா! பார்த்தீர்களா, பெறுமதி எப்படி வீங்கிப் போயிருக்கு!" என்று கண்களில் வியப்புக் காட்டும் லெட்சுமணனுக்கு இப்போது எழுபத்தெட்டு வயதாகிறது. இன்றும் புளத்சிங்கள, இங்கிரிய வாரச் சந்தைகளில் புகையிலை வியாபாரம் செய்து வருகிறார். உடல் தளர்ந்து போய் இருந்தாலும் கடைசிவரை உழைக்க வேண்டும் என்ற தெம்பு கொஞ்சம் அதிகமாகவே இவரிடம் இருக்கிறது    "வயசு உடம்புக்குத்தான், மனசுக்கு இல்லீங்க, மனச மட்டும் தளர விட்டுடக் கூடாதுங்க, அப்படியே இறுக்கிப் புடிச்சிட்டு உழைக்கிறதிலேயே கவனமா இருந்துட்டா வயதாகிட்டதே என்ற ஒரு எண்ணம் வராது, என்னோட மனசுக்கு இப்போவும் இருபது வயசுதான்!" என்று வெற்றிலை குதுப்பிய வாயைத் திறந்து சிரித்தார் லெட்சுமணன்.

அந்தக் காலத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி தாலுகாவிலிருந்து புளத்சிங்களவிற்கு புலம்பெயர்ந்தவர் தான் சின்னையா. மனைவியின் பெயர் வீராயி. அவர்களுக்கு எட்டு பெண்களும் நான்கு ஆண்களுமாக ஒரு டசன் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தானாம் இந்த போயலைக்காரர் லெட்சுமணன்.
"என்னோட இருபத்தைந்தாவது வயதிலேயே கணபதி தேவரோடு சேர்ந்து புகையிலை வியாபாரத்தை கத்துக்கிட்டேன். அந்தக் காலத்தில் புளத்சிங்கள நகரில் நிறைய தமிழ்க் கடைகள் இருந்தன. கணபதி தேவர் எண்ணெய் கடை வைத்திருந்தார். அவரோடு, சிங்கார கோனார் செலவு கடையும், பால்ராஜ் நாடார் கருவாட்டுக் கடையும், ராமசாமி செட்டியார் அடகுக்கடையும், சுப்பையா தேவர் சைவக் கடையும், ராக்கையா முதலாளி கடையும் புளத்சிங்கள டவுனில் இருந்தன. அந்தக் காலத்தை நினைத்தால் ரொம்ப இனிமையாக இருக்கு" என்று சொல்லும் லெட்சுமணனின் கண்களில் பூரிப்பு பளீச்சிடுகிறது. படித்து இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு  "படித்தவனெல்லாம் ஜெயிச்சிருக்கானா?" என்று எம்மைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்டு விட்டு தொடர்ந்தார். "மூணாவது வரை படிச்சிருக்கேன். பேப்பர் எல்லாம் வாசிப்பேன். ஆனால் இப்போ பார்வை கொஞ்சம் குறைந்து விட்டதால் படிக்க முடியலை. இந்த புகையிலை வியாபாரம் செய்கிற அளவுக்கு படிச்சிருக்கேன், அது போதாதா?" என்று நச்சென்று பதிலளிக்கும் இவர், இன்றும் சில தோட்டங்களுக்கு புகையிலைக் கட்டை சுமந்து சென்று வியாபாரம் செய்து வருகிறார். "எப்படிடா தள்ளாடுற வயசில் புகையிலைக் கட்டை சுமந்து போறேன்னு பார்க்குறீங்களா..? எல்லாம் அந்தக் காலத்து சாப்பாடுங்க! இயற்கை உரத்துல விளைந்த உணவுகளைச் சாப்பிட்டு வளர்ந்தோம். ஆனா இன்னிக்கு நீங்க நஞ்சு மருந்து தெளிச்ச உணவைத்தான் வாங்கிச் சாப்பிடுறீங்க, நாற்பது வயசுல நாலடி தூரம் கூட நடக்க முடியாம தள்ளாடுறதுக்கு அது தாங்க காரணம்." என்று புது விளக்கம் ஒன்றைக் கொடுத்து எம்மை மிரள வைத்தார்.

லெட்சுமணனின் மனைவியின் பெயர் ராமாயி. மூன்று பெண்கள். அனைவரும் திருமணம் முடித்துக் குடும்பமாகி விட்டார்களாம். புகையிலை வியாபாரத்தில் கிடைத்த வருமானத்தில்தான் தனது மூன்று பிள்ளைகளையும் கரை சேர்த்ததாக லெட்சுமணன் சொல்கிறார். "இப்போ தமிழ்ப் புகையிலை விற்பனை இங்கே அடியோடு நின்று விட்டது. மலையகப் பகுதிகளில் மட்டும்தான் தமிழ்ப் புகையிலை வியாபாரம் நடக்கிறது. ஜூலை கலவரத்திற்குப் பிறகு இங்குள்ளவர்கள் சிங்களப் புகையிலைக்கு பழகி விட்டார்கள். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தமிழ்ப் புகையிலை பெரிதாகவும் கருப்பாகவும் இருக்கும். அதன் சுவையை மேலும் அதிகரிக்க இளநீரில் கருப்பட்டியை கரைத்து அதில் தமிழ்ப் புகையிலையை முக்கி எடுத்து வைப்போம். அது நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும். ஆனால் இன்று நம்மவர்கள் அதை அடியோடு மறந்து விட்டார்கள்" என்று பழைய நினைவுகளில் மூழ்கிய லெட்சுமணன் இன்னொரு தகவலையும் சொன்னார்.
முன்பெல்லாம் தோட்டப் பகுதிகளில் பெண்கள் கட்டுக்கட்டாக புகையிலை வாங்கிப் போவார்கள். பத்தாம் திகதி சம்பளம் போட்டதும் தோட்ட வாசலில் ஒரு மினி சந்தையே விரிக்கப்பட்டு விடும். அரிசி, பருப்புக்கு அடுத்ததாக விலைப்படுவது புகையிலையும் வெற்றிலையும்தான். புகையிலை விற்பனை இப்போதும் அப்படித்தானா? என்று கேட்டோம்.

"அந்த மாதிரியெல்லாம் கிடையாதுங்க. இப்போ போயிலை வியாபாரம் குறைஞ்சிருச்சி. என்னைப் பொறுத்தவரை 25 சதவீதத்தில் குறைஞ்சு போச்சு என்றுதான் நினைக்கிறேன். பழைய ஆளுங்க இறந்து போனாங்க. புதிய தலைமுறை அந்த அளவுக்கு போயிலை பாவிக்கிறதில்ல... ஆனா வெத்திலை போடுறது அதிகமாயிருச்சி!" என்ற ஒரு ஆரோக்கியமான தகவலைத் தந்துவிட்டு புகையிலைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தார் லெட்சுமணன்.

No comments:

Post a Comment