Sunday, August 2, 2015

சில செல்போன் மாயா ஜாலங்கள்...

மணி   ஸ்ரீகாந்தன்

"லோ நீங்க யாரு பேசுறது?"

"நீங்கதானே கோல் எடுத்தீங்க, முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க"

"நீங்க யாருன்னு சொல்லுங்க, பிறகு நான் சொல்லுறேன்" என்று தொடங்கும் செல்போன் உரையாடல்கள் சில நிமிடங்களில் சண்டையில் முடிந்து கெட்ட வார்த்தை பேசும் அளவுக்கு சென்று விடுவதுண்டு.

இதற்குக் காரணம் போனில் பேசுவது எப்படி என்ற நாகரிகம் சிலருக்கு கைவராததுதான். நாம் ஒருவருக்கு அழைப்பு எடுக்கும் போது நாம்தான் நம்மை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பிக்க வேண்டும். இதுதான் நாகரிகம். ஆனால் சிலர் நமக்கு அழைப்பை எடுத்துவிட்டு நீங்க யாரு பேசுறது? என்று கேட்டு எரிச்சல் மூட்டுவார்கள். இப்படி போனில் இங்கிதம் தெரியாமல் உரையாடுபவர்களை சமாளிப்பதற்கு பொறுமை வேண்டும். இல்லையேல் ஊர்பேர் தெரியாதவர்களிடம் அனாவசியமாக சண்டை போட வேண்டியிருக்கும்!

மனித மூளை கண்டுபிடித்து பெற்றெடுத்த குழந்தையே செல்போன். இன்றைய நாகரீக உலகில் செல்போன் இல்லாத ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது!
"அடுத்த நூற்றாண்டில் வாழும் மனிதனின் சட்டைப் பாக்கட்டுகளில் கம்பியில்லா தொலைபேசி நிச்சயமாக இருக்கும்" என்று பகுத்தறிவாளர் தந்தை பெரியார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிச் சென்றதாக ஒரு செய்தியில் படித்திருக்கின்றேன். பெரியாரின் வாக்குப் பலித்திருக்கிறது. ஆனால் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைக் கொஞ்சம் பாருங்கள். 'சிரங்கு பிடித்தவன் கையும் செல்போன் பிடித்தவன் கையும் சும்மா இருக்காது' என்பதை பஸ்சில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள். வயசு பெண்களும், பையன்களும் தலை குனிந்தபடி செல்போனே கதி என்று மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சுற்றும் முற்றும் பார்க்கவிடாமல், வம்பு தும்புகளுக்குப் போகவிடாமல் நாமும் நமது போனும் என அடக்க ஒடுக்கமாக இவர்களை பொது இடங்களில் இந்தப் போன் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்ற வகையில் செல்போன்களுக்கு சலாம் போடலாம். வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக், டுவிட்டர் என்று அனைத்தும் போனில் உலா வர, எப்போதும் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறது இன்றைய தலைமுறை.

'இன்றைய காதல் வளர்வது செல்லில், வளர்வது லவ் பெக்கேஜ்ஜில் முடிவது சிம் சேன்ஜில்' என்று ஒரு கவிஞன் கவிதை எழுதியிருக்கிறான். இப்படி இன்றைய மனித வாழ்க்கையில் செல்போனையும் மனிதனையும் பிரித்துப் பார்க்க முடியாதுள்ளது. பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதே என்பதற்காக வெளிநாடுகளில் செல்போனின் ரிங்டோன் ஒலி அளவைக் குறைத்து தங்களுக்கு மட்டும் கேட்டால் போதும் என்ற அளவில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ரிங்டோன் அளவை காது கிழிய வைப்பதோடு, குத்துப்பாட்டு, காதல் பாட்டு, 'பஞ்ச்' வசனம் என்றெல்லாம் வைத்து சூழலை மாசுபடுத்தி வருகிறோம்.

அண்மையில் நான் ஒரு மரண வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே இறுதிக் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஐந்து நிமிடங்கள் மௌனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அந்த நிசப்தமான நேரத்தில் அங்கே நின்றிருந்த ஒருவரின் சட்டைப் பையில் கிடந்த செல்போன் 'எங்க தல டீ ஆரு சென்டி மெண்டுல தார்மாரு டண்ட னக்கா...' என்ற பாடல் ரிங்டோனாக அலறி, அந்த அமைதியை சீர்குலைத்தது. அப்போது மரணம் சம்பவித்த அந்த வீட்டாரின் மனோநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அந்த மனிதர் ஆறஅமர அந்த செல்லை எடுத்து இரண்டு வார்த்தை பேசி விட்டு அணைத்து வைப்பதற்குள் அந்த சூழ்நிலையே நாறிப்போயிருந்தது.
இப்படி பல பொது இடங்களின் அமைதியை செல்போன் ரிங்டோன் சீரழிப்பது ஒரு புறம் என்றால் டயல் டோன் படுத்தும் பாடும் பெரிய பிரச்சினைதான். சிலருக்கு நாம் அழைப்பு ஏற்படுத்தும் போது எதிர் முனையில் இருப்பவரின் செல்லிருந்து அவர் நம்முடன் பேசும்வரை நம் காதுகளில் ஒலிப்பதே டயல் டோன். சிலர் தமது மதப்பற்றை பகிரங்கப்படுத்தும் வகையில் தத்தமது மத சம்பந்தப்பட்ட பாடல்கள், போதனைகள், பிரார்த்தனைகள் என்பனவற்றை டயல்டோனாக வைத்திருப்பார்கள். ஒரு மதவிசுவாசி விசுவாசத்தைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டுமே தவிர இன்னொருவரிடம் வலிந்து திணிக்கக் கூடாது. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு நண்பருக்கு அழைப்பை ஏற்படுத்துகிறீர்கள். அவர் நீங்கள் கொஞ்சமும் விரும்பாத ஒரு அரசியல்வாதியின் பேச்சை டயல் டோனாக வைத்திருந்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அந்த டயல் டோனுக்குப் பயந்தே அவருக்கு போன் பண்ணுவதைத் தவிர்த்து விடுவீர்கள் அல்லவா? இந்த மாதிரியானதுதான் இந்த மதரீதியான டயல் டோன்களும், டயல் டோன் வழியாக எதையும் நாம் திணிக்க முனையக்கூடாது.

நீங்கள் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது நியாயமானது என்றாலும் அதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது இப்படி என்றால் சில பெரிய பதவிகளில் இருப்பவர்களின் போன்களிலும் காது கொடுத்துக் கேட்கவே முடியாத பாடல்களை டயல் டோனாக வைத்திருப்பார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பாடசாலை அதிபர். அவரின் மீது எப்போதும் எனக்கு ஒரு மரியாதை. ஒரு நாள் ஒரு சோகச் செய்தியைச் சொல்வதற்காக அவருக்கு அழைப்பை எடுத்தேன். அப்போது அவரின் டயல் டோனாக 'தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன செய்ய அவருக்கு செய்தியைச் சொல்ல வேண்டுமே என்று அந்தக் கொடுமையை சகித்துக் கொண்டு அவர் போனை தூக்கும் மட்டும் பாடலை கேட்டுத் தொலைத்தேன். அத்தோடு அந்த அதிபர் மேல் எனக்கிருந்த மரியாதையில் ஒரு கேள்விக்குறியும் சந்தேகமும் முளைத்தது. இப்படி ஒரு பாடலை டயல் டோனாக வைத்திருப்பவர் உண்மையாகவே நாம் கருதுவதைப்போல மரியாதைக்குரியவர்தானா என்று யோசிக்கத் தொடங்கினேன். வெறுமனே ஒரு டயல் டோனை வைத்து ஒரு மனிதரை எடை போட முடியாது என்பது உண்மையானாலும், தவறான அல்லது பொருத்தமற்ற டயல் டோன் ஒரு நபரின் கௌரவத்தை கேள்விக்குறியாக்கும் என்பதை எடுத்துக்காட்டவே இந்த நிஜ உதாரணம்.

இதையும் தாண்டி சிலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

'ஹலோ நீங்க அவரோடு இப்போது பேச முடியாது. அவர் ரொம் பிசி. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணினால் அவரோட பேசலாம்' என்ற பதிவு செய்யப்பட்ட குரல் சிலரின் செல்லில் திரும்பத் திரும்ப ஒலித்தது நம்மைக் கடுப்பேத்தும்.

இது இப்படி இருக்க, சிலர் தமது நண்பர்களை கலாய்ப்பதற்காக தமது செல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

"மச்சான் இப்போ பாரு அவனை எப்படி பைட் (BITE)டுக்கு எடுக்கப் போறேன் என்கிறதை" என்று கூறியபடியே தமது வேலையை ஆரம்பித்தார் ஒரு நண்பர். சில சமயம் இது ஆபத்தில் முடிகிறது. அண்மையில் எனது நண்பர் ஒருவர் நான்காயிரம் ரூபா பணத்தோடு தனது சாரதி அனுமதிப் பத்திரம், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தொலைத்துவிட்டு குடி முழுகிப் போனது போல தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டார். பிறகு பொலிசில் முறைப்பாடு செய்தார். அவர்கள், பத்து நாளைக்குள் எடுத்தவர்கள் சில சமயம் திருப்பித் தரவும் வாய்ப்பு உள்ளதால் கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். நண்பரும் காத்திருந்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து நண்பரின் செல்லுக்கு அழைத்த ஒருவர் தம்மிடம் தொலைத்த மணிபர்ஸ் இருப்பதாகவும் அதைத் திருப்பதித் தருவதாக இருந்தால் இவ்வளவு தேவைப்படும் என்றும் டீல் பேசியிருக்கிறார். அந்த மர்ம நபர் பேசிய உரையாடலைக் கேட்ட நண்பர் அவரின் போனில் இருந்த ஆட்டோமெடிக் கோல் ரெக்கார்டிங் வழியாக அந்தக் குரலை பதிவு செய்து பொலிசாரிடமும் போட்டுக் காட்டியிருக்கிறார். உஷாரடைந்த பொலிசார் அவருக்கு அறிவுரை சொல்லிவிட்டு, அந்த இலக்கம் யாருடையது என்பதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். தேடியெடுத்த பொலிசார், அந்த இலக்கம் யாருடையது என்பதை இவரிடமும் கூறி, உனக்கு இவரைத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அந்த நபரின் பெயரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் நண்பர்!

போன் இலக்கத்தில் கிடைத்த பெயர் அவருடைய நெருக்கமான நண்பர். பிறகு அவரிடம் விசயத்தைச் சொல்லிக் கேட்ட போது,

"அட என்ன மச்சான், இதைப்போய் பொலிசில் சொல்வார்களா? நான்தான் நண்பர்களின் பேச்சைக் கேட்டு உன்னை 'பைட்'டுக்கு எடுத்தேன்" என்றாராம் கூலாக!

பிறகு எனது நண்பரும் பொலிசில் நிலமையைச் சொல்லி பொலிசாரின் ஏச்சு, பேச்சையும் வாங்கிக் கட்டிக்கொண்டு முறைப்பாட்டை வாபஸ் வாங்கியிருக்கிறார். எனவே செல்போனில் கலாய்ப்பது ஆபத்திலும் முடிந்து விடலாம் என்பதை மறந்துவிட வேண்டாம். போன் உரையாடலை பதிவு செய்யும் வசதி எல்லாப் போனிலும் இப்போது வந்துவிட்டது.

இந்தக் கதை இப்படி இருக்க, இன்னொன்றைப் பார்ப்போம். எனது நண்பர் ஒருவர் எப்போதும் 'வாட்ஸ்அப்'பிலேயே திளைத்துக் கொண்டிருப்பவர். ஒருநாள் அவரின் நண்பர், செல்லை மறந்து விட்டு வந்துவிட்டேன். கொஞ்சம் உன் போனைத் தருகிறாயா? என்று அவசரத் தேவையாகக் கேட்டிருக்கிறார். இவரும் சிம்மை மட்டும் கழற்றிவிட்டு இரண்டு நாளைக்கு மட்டும் பாவிக்கப் போனைக் கொடுத்திருக்கிறார். பிறகு இரண்டு நாள் கழித்து போனை வாங்கி தனது சிம்மை அதில் போட்டு பழையபடி பாவிக்கத் தொடங்கியிருக்கிறார். போனை இரவலாக வாங்கிய நண்பர் பெண் விஷயத்தில் கொஞ்சம் சபலப் புத்திக்காரர். அவர் தன் காதலியுடன் வைபரில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதன் பின்னர் கொஞ்சக் காலமாக அவரது காதலி அவருடன் தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார். இவருக்கும் ஏன் என்று தெரியவில்லை. வேலைப் பளுவில் அதை மறந்து விட்டார்.

ஓரிரு மாதங்கள் கழிந்த பின்னரேயே மனிதருக்கு தன் காதலி பற்றி நினைவு வந்திருக்கிறது. ஏன் இப்போது என்னுடன் இவள் பேசுவதில்லை? என்று தேடிப்பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், யாரிடமிருந்து சில மாதங்களுக்கு முன் போனை இரண்டு நாட்களுக்கு இரவல் வாங்கினாரோ அந்த நண்பருடன் இவரது காதலி தொடர்பில் இருப்பதும் இருவரும் ஊர் சுற்றித் திரிவதும் அவருக்கு தகவல்களாக வந்து சேர எனது காதலி எப்படி இவருக்கு நண்பியானாள், எப்படி இந்தத் தொடர்பு ஏற்பட்டிருக்க முடியும் என்று குழம்பிப் போனார்.
ரொம்ப லேட்டாகத்தான் காரணம் இவருக்கு தெரிய வந்தது. அதாவது கிளி பறந்து போனபின்
இதற்கெல்லாம் காரணம் இவரின் வாட்ஸ்அப் தான். போனை இரவல் வாங்கும்போது சிம்மைக் கழற்றிக் கொடுத்துவிட்டு தனது சிம்மைப் பொருத்திக் கொண்டால் போதும் என நினைத்ததுதான் தவறு. தனது சிம்மைப் பயன்படுத்தினால் வாட்ஸ்அப் தொடர்புகள் அதனுடனேயே மட்டுப்பட்டுவிடும் என அவர் நினைத்திருக்கிறார்.

இனி இதைக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்.

போனில் வாட்ஸ்அப், வைபர், கணக்கை நாம் புதிதாக திறக்கும்போது அது யூசர் நேமாக போன் இலக்கத்தை கேட்கும். அப்போது நீங்கள் கொடுக்கும் உங்கள் தொலைபேசி இலக்கத்தை அது உள்வாங்கிக் கொள்ளும். பிறகு நீங்கள் உங்கள் போனில் சிம்மை மாற்றினாலும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மாறாது. அது பழைய எண்ணிலேயே இருக்கும். இது தெரியாமல் உங்கள் போனை யாராவது இரவல் வாங்கி அதில் தனது சிம்மைப் போட்டு வாட்ஸ்அப், வைபரைப் பயன்படுத்தினாலும் அது அந்தப் பழைய எண்ணில் இருந்தே செயல்படும். புதிதாக போட்ட சிம்முக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது பலருக்கும் புரிவதில்லை. பொது கொம்யூனிக் கேஷனில் பேஸ்புக் கணக்கை திறந்து வைத்துவிட்டு சைன் அவுட் பண்ணாமல் வந்தால் என்ன நடக்குமோ அந்தக் கதைதான். வாட்சாப், வைபருக்கும் நடக்கும். இதுதான் அந்த நண்பருக்கும் நடந்தது. நண்பர் இரண்டுநாள் போனைப் பயன்படுத்திவிட்டு தன் சிம்மைக் கழற்றிய பின்னர் உரிமையாளரிடம் கொடுத்து விட்டார். அவரது காதலி இரண்டு நாட்களின் பின்னர் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டபோது இரவல் போன் இலக்கத்துக்குத்தான் அந்த அழைப்பு போயிருக்கிறது. போன் உரிமையாளர் அந்தப் பெண்ணுடன் பேசியிருக்கிறார். சும்மா அறிமுகத்துடன் ஆரம்பமான தொடர்பு எப்படியோ அடிக்கடி நிகழும் அளவுக்கு வளர, நண்பன் தயவால் நமக்கு ஒரு கிளி வந்து மாட்டியதே என்று எண்ணி மகிழ்ந்துபோன அவர் அவளைக் கொத்திக் கொண்டோடிவிட பரிதவித்துப் போனார் ஒரிஜினல் காதலன்! இத்தனைக்கும் காரணம், நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் தன்மையை புரிந்துகொள்ளாதது தான்!

எனவே இனிமேல் யாருக்காவது உங்கள் போனை இரவல் கொடுப்பதாக இருந்தால், சிம்மை மட்டும் கழற்றுவதால் பயன் இல்லை. வாட்ஸ்அப் அல்லது வைபர் செட்டிங்குக்குச் சென்று அக்கவுண்டை டி எக்டிவேட் செய்த பின்னர்தான் போனை இரவல் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் பின்னர் 'வடை போச்சே' என்று கவலைப்பட வேண்டியிருக்கும்! போனைத் திரும்பப் பெற்றதும் மீண்டும் அதே இலக்கத்துக்கு அக்கவுண்டைத் தொடக்கி விடலாம். இப்படி செல்லில் பல தொல்லைகளைத் தினமும் பலர் அனுபவித்து வருகிறார்கள். இப்போ சொல்லுங்கள், 'செல் இன்றி அமையாது இவ்வுலகு' என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது!

No comments:

Post a Comment