Tuesday, August 11, 2015

தேவதாசி வரலாறு -11


அருள் சத்தியநாதன்

'தேவதாசி முறை நம்முடைய நாகரிகத்துக்கும் கலைப் பெருமைக்கும் பெருங்களங்கமாய் இருக்கிறது. பெண்கள் விலங்குகளிலும் இழிவாய் நடத்தப்படுகின்றனர். விபசாரத்துக்கென்றே ஒரு பெண் சமூகத்தை சிருஷ்டித்துக்கொண்டு வாழ்ந்த - வாழும் எமது ஆணுலக மனப்பான்மையை என்னவென்பது?'

ந்து சனாதன மரபு, பெண் ஒடுக்குமுறையைக் கருத்தியல் ரீதியிலும் யதார்த்த சமூகக் கட்டமைப்பிலும் தீவிரமாகச் செயற்படுத்தி வந்திருக்கிறது. இந்து சமூக அமைப்பில் பேணப்பட்டு வந்த தேவதாசி முறை இந்தப் பெண் ஒடுக்குமுறையின் கொடூர வடிவமாகும். தமிழ்நாட்டுக் கோயில்களில் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நடன மங்கையர்களை தேவதாசிகள் என்று வழங்குவர். பொது வழக்கில், இவர்கள் தாசிகள், விபச்சாரிகள் என்றே கூறப்பட்டார்கள். புகழ் வாய்ந்த ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய தேவமாதர்களின் படை ஒன்றிருந்தது.

"சமய சாஸ்திரங்களின் பேராலும், கடவுளின் பேராலும் பகிரங்கமாய் விபசாரம் செய்யும் பெண் சமூகம் 'புண்ணியபூமி' என்று போற்றப்படும் இந்நாட்டில்தான் உண்டு. இதைப்போல் உலகில் வேறெங்கும் காண முடியாது என்றே நம்புகிறேன். தேவதாசிமுறை நம்முடைய நாகரிகத்திற்கும் கலைப்பெருமைக்கும் பெருங்களமாய் இருக்கிறது. இந்நாட்டில் பெண்களின் பெருமைகளைப் பற்றி வானளாவப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறை வேறுவிதமாயிருக்கிறது. பெண்கள் விலங்குகளிலும் இழிவாக நடத்தப்படுகின்றனர். விபசாரத்திற்கென்றே ஒரு பெண் சமூகத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு வாழ்ந்த - வாழும் எமது ஆணுலகத்தின் மனப்பான்மையை என்னவென்பது?" என்று மூவலூர் ஆ.ராமாமிர்தத்தம்மாளின் 'தாஸிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற நாவலின் முன்னுரையில் கூறுகிறார் செ. வெள்ளைத்துரைச்சி நாச்சியார்.

"தேவதாசிகள் என்று ஒரு கூட்டமே, ஆரிய பார்ப்பனர்களிடமிருந்துதான் உற்பத்தியாகி இருக்க வேண்டுமென்று நூலாசிரியர் ஓரிடத்தில் சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் சிந்திக்க வேண்டிய உண்மையாகும். ஆரிய பார்ப்பனரது ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள 'நியோய விவாக' முறையைச் சிறிது ஆராய்ந்தால், இந்நாட்டில் தங்கள் கூட்டத்தைப் பெருக்குவதற்காக மறைமுகமான பல விபசாரமுறைகளை ஆரியர் இந்நாட்டில் ஏற்படுத்திவிட்டார்கள் என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும்" என்று இந்நாவலின் புகழுரையில் குறிப்பிடுகிறார் திருமதி. குருசாமி குஞ்சிதம் அவர்கள்.

"ஓர் இலக்கிய சிருஷ்டி என்ற வகையில் 'தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற இந்த நாவல் பெரும் கணிப்பிற்குரியதல்ல. எனினும், தாசியாகவே வாழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதால், ஒரு சமூக ஆவணம் என்ற வகையில் இது பெரும் அக்கறைக்குரிய ஒன்றாகும்" என்கிறார் அறிஞர் கமில் ஸ்வலபில். இழிவுபடுத்தப்பட்ட இந்தக் கணிகையர் குலத்திலிருந்து எழுந்த இலக்கிய வெளிப்பாடுகள் இன்று ஆழ்ந்த ஆராய்வுக்குள்ளாகியுள்ளன. இதன் அற்புத வெளிப்பாடாக, தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னனான பிரதாப சிம்மனின் அரசவையில் பெண் புலவராகவும் நடனக் கணிகையாகவும் இசைஞானமிக்கவராகவும் பிரபலம் பெற்றிருந்த முத்துப்பழனி (1730 - 1790) இயற்றிய 'ராதிகா சாந்தவனம்' என்ற சிருங்கார ரசம் ததும்பும் தெலுங்குக் காவியம் அற்புதமான காதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது.

'எதுவும் வழிந்து ஒழுகிவிடாமல், விளிம்பிலே ததும்பிக்கொண்டிருக்கும் வகையில் நவரசங்களின் அற்புதமான கலவையில் உருவான இலக்கியம்' என்று மதிப்பிடுகிறார், இக்காவியத்தை மறுமதிப்புச் செய்த கணிகை பெங்களுர் நாகரத்தினம்மாள்.

ஆண் புலவர்கள் தமது சிருஷ்டிகளை ஒரு பெண் கவிக்குச் சமர்ப்பணம் செய்வது வழக்கில்லையாயினும், அக்காலத்தில் பல்வேறு ஆண் கலைஞர்கள் தமது படைப்புகளை முத்துப்பழனிக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை அவரது மேதைமையைப் புலப்படுத்துவதாகவே உள்ளது. ஆனால், ஆந்திராவின் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், தெலுங்கின் முன்னோடி நாவலாசிரியருமான கந்துகூரி வீரேசலிங்கம் (1848 - 1919) மிகக் கடுமையான வார்த்தைகளில் முத்துப்பழனியின் 'ராதிகா சாந்தவனத்தை' நிராகரித்தார்.

'இந்த முத்துப்பழனி ஒரு பரத்தை' என்றும், 'இந்நூலின் பல பகுதிகள் ஒரு பெண்ணின் வாயிலிருந்து வந்தது ஒருபுறமிருக்க, அவற்றை ஒரு பெண் தனது செவிகளாலேயே கேட்கக் கூட உகந்தது அல்ல, சிருங்கார ரசம் என்ற போர்வையில், ஒரு வெட்கமும் இல்லாமல், பாலியல் பற்றிய பச்சையான வர்ணனைகளால் தனது கவிதைகளை நிறைத்திருக்கிறார்' என்றும் அவர் எழுதினார். 'ஒரு விபசார தாசிகுலத்தில் பிறந்த ஒருவரிடமிருந்து இம்மாதிரிக் கவிதைகள் வருவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை' என்றும் இந்த உன்னதக் கவிமேதையின் மீது தீர்ப்பெழுதினார் அவர்.

முத்துப்பழனியின் சிருங்காரப் பிரபந்தமான 'ராதிகா சாந்தவனத்தின்' கவித்துவ மேன்மையை நிலைநிறுத்த பெங்களுர் நாகரத்தினம்மாள் முன்வைத்த வாதங்கள் ஆணித்தரமானவை. ஆங்கிலேயர் ஆட்சியில் முத்துப்பழனியின் காவியத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீண்ட போராட்டத்தின் பின்னரே 1947 இல் நீக்கப்பட்டது.

முத்துப்பழனியின் ஒரு கவிதை இது:

இதழ்களில் ஈரமிடு
அவளின் இதழ்களை
உன் நாவின் முனையால்
ஈரமிடு
அழுந்தக் கடித்து
அவளை அச்சுறுத்தி விடாதே

அவளின் கன்னங்களில்
மோஹனமாய் முத்தமிடு
உனது கூர்மையான
நகங்களால் அவளைக்
கீறிவிடாதே

மெதுவாய் மிருதுவாய்
சம்போகம் செய்
பலவந்தப்படுத்தி
அவளைப் பயமுறுத்திவிடாதே
இதெல்லாவற்றையும் உனக்குச் சொல்ல
நான் ஒரு முட்டாள்
அவளைச் சந்தித்து
அவளோடு நீ காதல் போர்
நிகழ்த்தும் போது
நான் சொன்னவற்றையா
நினைத்துப்பார்க்கப்போகிறாய்
என் அன்பே!

இந்துப் பாரம்பரியத்தில் கல்வியை மேற்கொள்ளவும், நடனம், இசை போன்ற லலித கலைகளைப் பயிலவும், இலக்கியம் பயிலவும் சாதாரண பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், கணிகையர் குலத்துப் பெண்களுக்கே இந்த வாய்ப்புகள் இருந்தன. மேட்டுக்குடியினரின் சிருங்கார சுகானுபவங்களுக்கு விருந்தளிக்கப் பிறந்த இவர்கள் லலித கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக விளங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிறந்த பெண் எழுத்துக்கள் இந்தக் கணிகையர் குலத்திலிருந்தே உற்பவித்துள்ளன.

அஞ்சுகம் அம்மையாரின் கதாசாரத்திரட்டை எடுத்துக் கொண்டால், இந்து சனாதன மரபை எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு விட்ட அஞ்சுகம்,

கணவன் - நாயகன் இறந்ததும் அவரோடு அவரது பத்தினியும் உடன்கட்டை ஏறுவதே உத்தம பத்தினிக்கு அழகு என்றும், அதனைக் கணிகைக்குலமும் கைகொண்டொழுக வேண்டும் என்றும் பல இடங்களிலே வலியுறுத்துகிறார்.

'காதலரி றப்பிற் கனையெரிபொத்தி
யூதுலைக்குருகி னுயிர்த்தகத்தடங்கா
தின்னுயிரீவ ரீயாராயி
னன்னீர்ப் பொய்கையி னளியெரிபுகுவர்
னளியெரி புகா அராயினன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்'
என்பது மணிமேகலை.

மேற்கூறிய இலக்கணங்கொண்டு ஒழுகாத மகளிர் சுவாலித்தெரிகின்ற கொடு நரகடைந்து துன்புறுவதென்க. அல்லதூ உம் தீயொழுக்குடையராகிய மகளர் நாய், நரி, பேய், புலி, கூகை, பன்றி, மலப்புழு ஆகிய இழிந்த பிறப்புகளை எய்துவரென நீதிநூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

"அஃதன்றி, உத்தம இலக்கணமுடையராகிய கற்புடை மாதர் நாயகனிறந்தவப் யமதூதரினின்றும் நீங்கி, கணவனோடு சுவர்க்கலோகப் பிராப்தி பெறுவரென்றும், நாயகன் மகாபாதகனாயினும் அவனோடு உடன்கட்டை ஏறினவள் கற்புடையாளெனக் கண்டவிடத்து, யமன் அவனை விடுத்தோடுவன் எனவும் கூறுகின்றன" என்று அஞ்சுகம் மிகத் தீர்க்கமாகக் கூறுகிறார்.

கணவனுடன் அக்கினிப்பிரவேசம் செய்யாதுவிட்டால், ஏற்படக்கூடிய இழிபிறப்புகள் பயமுறுத்தக்கூடியதாயும், உடன்கட்டை ஏறிவிட்டால் சொர்க்கலோகம் போகலாம் என்று கூறுவது நியாயமற்ற வஞ்சக ஆசைவலை போன்றுமே தோன்றுகிறது.

இந்து சனாதனப் புராணப்புனைவுகளை மெய்யென்று நம்பிவிட்ட பாங்கு இந்நூலின் அனைத்துப் பக்கங்களிலும் பளிச்சிடுகிறது.

"இப்பிரபு (க.சின்னையாபிள்ளை) என்னை அபிமான ஸ்திரீயாய் மதியாது, சொந்தப் பாரியாகவே மதித்து வந்தமையால், யான் அவருக்கு முன் இவ்வுலக வாழ்க்கை விட்டு நீங்க வேண்டுமென்னும் பேரவாப் பூண்டிருந்தேன். சிவபெருமான் அப்பிரபுவையே முன்னர் தமது திருவடியிற் சேர்த்துக்கொண்டார்" என்று எழுதும் அஞ்சுகம், அப்பிரபு இறந்ததும், அதிர்ஷ்டவசமாக உடன் கட்டை ஏறிவிடாமல் நிதானித்து,

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந்தான் முந்துறும்'
என்ற திருக்குறள்வழி அமைதிகண்டமை நமது நற்பேறாகும்.

தேவதாசி மரபை இல்லாதொழிக்கும் புரட்சிக் குரல்கள் தமிழகத்தில் பின்னாளில் வேகம் பெற்று, அம்மரபு சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆனால், வலிமை வாய்ந்த இந்து சனாதன மரபிற்குப் பலியாகிப்போன அஞ்சுகத்தின் தமிழ்ப் புலமை வரலாற்றில் அவருக்குத் தனித்துவமான இடத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

இன்று புத்தெழுச்சி பெற்றுவரும் மலையக இலக்கியப் பாரம்பரியத்தின் மூத்த தலைமகளாக அன்னை அஞ்சுகம் நிலைபெறுகிறார். விளிம்புநிலை சமூகத்தின் ஆறு தலைமுறை வரலாற்றை எழுதிவைத்துவிட்டுச் சென்ற இம்மாதரசி, வாயிழந்துபோன மலையகச் சமுதாயத்தின் உயரிய அங்கீகாரத்திற்கரிய மகத்தான இலக்கிய ஆளுமை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

No comments:

Post a Comment