Tuesday, August 4, 2015

தேவதாசி வரலாறு -10


அருள் சத்தியநாதன்

மலாம்பிகை தமது புதல்வியருடன் கொழும்பிலேயே வசிக்கலானார் பின்னர், கமலாம்பிகைக்குக் குழந்தைவேல் என்ற ஆண்மகவும், அஞ்சுகமும் என்ற பெண்மகவும் பிறந்தனர். கமலாம்பிகை தனது 73 ஆவது வயதில் மரணமடைந்த பின்னர், கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தின் ஆதீனகர்த்தாவாகத் திகழ்ந்த பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் அஞ்சுகத்தை ஆலயப் பணிகளில் ஈடுபடுத்தி, உதவிவந்தார்.

இந்த அஞ்சுகம்தான் தங்கள் கணிகையர் குல வரலாற்றையும், அபிஷேக வல்லியின் தலைமுறையிலிருந்து தங்களின் குலவரலாற்றையும் எழுத்தில் பதித்த அறிஞராவார்.

கமலாம்பிகையின் ஐந்தாவது புத்திரியான அஞ்சுகம், மாயூரம் பரத சாஸ்திர வித்துவான் கந்தசாமி நட்டுவனாரிடம் ஆடல் பாடல்களைக் கற்றுச் சிறந்த நர்த்தகியாகத் திகழ்ந்தார். அஞ்சுகம் 12 ஆவது வயதில் ஸ்ரீபொன்னம்பலவாணேசுரர் சந்நிதியில் திருப்பொட்டுத்தாரணஞ் செய்து வைக்கப்பட்டார்.

பின்னர், யாழ்ப்பாண சங்கீத வித்துவான் ஸ்ரீ நாகலிங்கம் அவர்களிடம் இந்துஸ்தானி இசையையும், மைசூர் சமஸ்தான வித்துவான் கிருஷ்ணசாமி முதலியார், திருசிரபுரம் அழகிரிசாமி செட்டியார் ஆகியோரிடம் வாய்ப்பாட்டையும், திருநெல்வேலி சீதாராம் பாகவதரிடம் வீணையையும் பயின்றார்.

சிலகாலம் சென்றபின், கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் க. சின்னையா பிள்ளை அவர்களின் அபிமான ஸ்திரீயாயினார். அதன்பின் அஞ்சுகம் தனது 16ஆவது வயதில் வேதாரணியம் சொ. சுந்தரேசக் குருக்களிடம் சிவதீட்சை பெற்று, பின் யாழ்ப்பாணம் குழந்தைவேற்பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கியமும் கற்றுத் திகழ்ந்தார்.

'சிறியேன் 25 வருடம் மேற்கூறிய கணவான் அவர்களின் (க. சின்னையா பிள்ளை) அபிமான ஸ்திரீயாயிருந்து வாழ்ந்த செல்வவாழ்க்கையின் அருமை பெருமையும் மனமகிழ்ச்சியும் இத்துணையதென எடுத்துச் சொல்லுந்தரத்தவன்று' என்று அஞ்சுகம் குறிக்கிறார்.

அஞ்சுகம் இயற்றிய 'உருத்திர சணிகையர் கதாசாரத்திரட்டு' என்ற நூல் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் கொடுமுடிகள் எனக் கருதத்தக்க அனைத்துப் புலமையாளர்களினதும் பாராட்டைப் பெற்றமை அஞ்சுகத்தின் பெருந்தமிழ்ப் புலமைக்கு சாட்சியமாகும்.

'கருவி நூலுணர்வும், உருக்கிடும் இசைத்தமிழ் உணர்வும், சிறந்த நாடக நூலுணர்ச்சியுங்கொண்டு, தேவநற் தொண்டினில் சிறந்தே திகழும் அஞ்சுகமாது பத்திமெய் யன்புக்கருளுவார் சிவபெருமானே'என்று சிறப்புப்பாயிரம் வழங்குகிறார் மகா வித்துவான் மாதகல் சு. ஏரம்பையர் அவர்கள்.

கல்வியின் மிக்குள கவிஞர் புகழு
நல்லிசைப் புலமை நன்கு வாய்ந்துள்ள
கிஞ்சுக மலர்பொரூஉங் கேழ்நிறச் செவ்வா
யஞ்சுக மெனும்பெய ரடைந்தமெல் லியலே!

என்று வாழ்த்துகிறார் பிரம்மஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்.

யாழ்ப்பாணம் நீர்வேலி சிவ. சங். சிவப்பிரகாச பண்டிதர், மயிலிட்டி பிரசித்த நொத்தாரிஸ் க. மயில்வாகனப்பிள்ளை, மகாவித்துவான் உ.ப.வே. திரு.ஸா. இராகவாசாரியார், நாகபட்டினம் வித்துவான் ஜி. சதாசிவம்பிள்ளை, யாழ் சி.மா. தியாகராச பண்டிதர் போன்ற தமிழ்ப் புலமை மரபினர் அஞ்சுகப் பண்டிதையின் இலக்கியப் பணியை மெச்சியுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வசனநடை வரலாற்றில் 'உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு' நூலின் வசனநடையின் மேன்மை விதந்து குறிப்பிடத்தக்கதொன்றாகும். புராண வரலாறுகளைச் செய்யுள் மூலத்தில் ஆய்ந்து, தெளிந்து சுவையான சிறப்புமிக்க உரைநடையில் வார்த்துத் தந்திருக்கும் அஞ்சுகத்தின் பணி மெச்சத்தக்கதாகும்.

தமிழகத்தின் குளிக்கரையைச் சேர்ந்த அஞ்சுகம், யாழ்ப்பாணம் கைதடியில் வளர்ந்து, கொழும்பு சிவனாலயத்தில் 'பொட்டுக்கட்டிய' தேவதாசியாகத் திகழ்ந்து, க. சின்னையாபிள்ளை என்ற வர்த்தகரின் அபிமான ஸ்திரீயாக வாழ்ந்து, 'உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு' என்னும் அரிய இலக்கிய நூலினை ஆக்கி, தனது குலகோத்திரத்தின் சரித்திரத்தைப் பதிவு செய்த வரலாற்று ஆசிரியையாகக் கௌரவம் பெறுகிறார்.

எனினும், உருத்திர கணிகையர் மரபினை முற்றுமுழுவதாக ஏற்றுக்கொண்ட அஞ்சுகம், தமது குலத்தினர் இம்மரபைத் தொடர்ந்து பேணிவர வேண்டுமென்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

"நம் குலக்கன்னிகை எப்பொழுது திருப்பொட்டணியப் பெற்றாளோ அப்பொழுதே 'தேவதாசி'யெனவும், 'தேவர் அடியாள்' எனவும் பெயர் பெறுகின்றாள். ஒரு நாயகனால் திருமாங்கல்யம் கட்டப்பட்ட ஒரு நாயகி, அவனிடத்தில் எவ்வகைத் தொடர்புடையவளாகின்றாளோ, அவ்வகைத் தொடர்பை, இவள் ஈசுவரனிடத்திற் கொண்டவளாகின்றாள். ஆகவே, இவள் சிவகைங்கர்யத்திற்குரியாளென்பதையே அத்திருப்பொட்டு விளக்கி நிற்கிறது. அல்லாது, பிறிதொரு விஷயத்தில் பெருநிதி சம்பாதிக்கலாம் என்பதைக் குறித்து நிற்கவில்லை.

"அங்ஙனந் திருப்பொட்டணிந்த பின், நாணமென்பதை விட்டவளாகிச் சந்நிதானங்களிலே பலசன சமூகத்தில் பாடவும் ஆடவும் தக்கவளாகின்றாள். அவ்வாறானபோது, தான் கற்ற ஆடல் பாடலாகிய வித்தையைக் கொண்டு செல்வப் பொருளைத் தேடுவதும், அப்பொருளைக் கொண்டு தானதருமங்கள் செய்வதும் ஈசுரத்தியானம் செய்வதுமாகிய விஷயங்களிற் பொழுது போக்குவதன்றோ கல்வியறிவுக்கு அழகாகும்?

'தந்தை - தாயார், ஆண் குழந்தைகளை இளமையிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாக்கிச் செல்வப் பொருள்கள் தேடும் வழியைக் கற்பிக்கின்றார்கள். அவ்வாறே, கணிகைக் கன்னியர்க்கும் இளமை தொட்டு நீதி நூல்களையும், ஆடல் பாடலையும் நன்கு கற்பித்து வைத்தால், அவை வாயிலாகப் பொருளையும் சம்பாதித்துக் கீர்த்தியையும் பெற்று நல்வாழ்வடைவரன்றோ! செந்தமிழ்க் கல்வியிலும் ஆடல் பாடலாகிய குலவித்தையிலும் சிறந்தவர்களாகிய அஞ்சனாட்சி, சோமி, சண்முகவடிவு முதலானோர் எவ்வளவு பெருமையையும் பெருவாழ்வையும் பெருங்கீர்த்தியையும் பெற்றிருக்கின்றார்கள். இவர்களின் நிலைமையை எய்தும்படி கற்பித்து வைக்கின்ற பெற்றோரல்லவோ நற்பெற்றோர். இவர்களல்லவோ பிள்ளைகளிடத்து உள்ளீடான மெய்யன்புள்ளவர்கள். இவர்களையன்றோ நாம் என்றும் முன்னிருத்திப் போற்றி வழிபட வேண்டும்' என்று இந்நூலின் முடிப்புரையில் அஞ்சுகம் அம்மையார் தெரிவித்திருக்கும் கருத்துகள் கணிகையர் குலமரபைப் பேணும் அவரது தீர்க்கமான வாதத்தை வெளிப்படுத்துவனவாகும்.

இந்து சனாதன மரபை எவ்விதக் கேள்வியுமின்றிப் பரிபூரணமாக விசுவசித்து, அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்ட தன்மையை அஞ்சுகம் அம்மையார் இக்கணிகையர் கதாசாரத்திரட்டிலே வெளிப்படுத்துகிறார்.

(தொடரும்)

No comments:

Post a Comment