Saturday, August 15, 2015

சிறுகதை - 02


பன்.பாலா

திருவிழா என்றாலே தோட்டங்கள் எல்லாமே களைகட்டிப் போகும். அதுவும் வெள்ளிமலைத் தோட்டத் திருவிழா என்றால் தனிச்சிறப்பு. அக்கம் பக்கத் தோட்ட மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். ஒவ்வொரு திருவிழாவுக்கும் புதிது புதிதாய் வித்தியாசமாக ஏற்பாடு செய்வது இந்தத் தோட்ட இளைஞர் குழுவின் வழக்கம்.

முன்பெல்லாம் கரகம் பாலித்தல், கரகந் தூக்கிக் கொண்டு தோட்ட வலம் வருதல், கரகம் தூக்குபவர்கள் அருள் வந்து ஆடுதல், கரகம் குடிவிடுதல் எல்லாமே மிக மிக முக்கியமான அம்சங்களாகவிருந்தன. முன்பெல்லாம் தேர் இழுப்பது இல்லை. அதற்கான பாதை வசதியும் இருக்கவில்லை. சப்பற பவனிதான் இடம்பெறும். சப்பறத்தைத் தோளில் சுமப்பதற்காகப் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள். இப்பொழுதுதான் எல்லாமே மாறிப் போய்விட்டது. தேர்ப் பவனிக்குத்தான் முதலிடம். கரகமெல்லாம் வெறும் காட்சிப் பொருள்களாகப் பார்க்கும் நிலை.

பெரிசுகளும் சிறிசுகளுமாய் கோயிலடி நிரம்பிப் போயிருந்தது. ஆளுக்கொரு வேலை. கசமுசாக்கள், கலகலப்புகள், சாடை மாடைகள் என்று அர்ப்பணிப்பான ஒரு பரபரப்பில் தோட்டமே கட்டுண்டு போயிருக்க, கோயில் பூசகர் இராமநாதன் மட்டும் தனியொரு தவிப்பில் இயங்கிக் கொண்டிருந்தார். மெல்லிய தோற்றமும் ஒடிசலான உடம்பும் உயரமும் சாதுவான முகபாவமும் ஒரு பரிதாப உணர்வை அவர் பால் பாய்ச்சிவிடும் என்பதில் ஐயமில்லை. இவரைச் சிலர் 'சாமீ' என்பார்கள். வேறு சிலர் 'குரு' என்பார்கள். பரம்பரை பரம்பரையாக பூசை செய்து வந்த குடும்பம். இராமநாதனின் அப்பா புற்றுநோய் வந்து சாகும்வரை இந்தத் தோட்டமக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் அடைக்கலமாகத் திகழ்ந்தார். அவர் செத்த போது தோட்டமே வாய்விட்டுக் கதறியது. இராமநாதன் ஒரே பிள்ளை. அப்பா செத்த போது அவர் சேர்த்த சொத்தாக ஒரு மாடும் இந்தப் பூசகர் தொழிலுமே எஞ்சியிருந்தது.

காலையில் மலைக்காட்டுக்குப் போய் சும்மா தலையைக் காட்டிவிட்டு வந்தாலே போதும். செக்ரோலில் பேர் விழுந்துவிடும். வெள்ளிக்கிழமை நாட்களில் தவறாமல் பூசைகள் நடக்கும். தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் என்று விசேட நாட்களில் சிறப்புப் பூசை நடைபெறும். அர்ச்சனைத் தட்டில் வைக்கப்படும் காணிக்கை அவருக்கே சொந்தம். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருவிளக்குப் பூசை நடக்கும். முன்பெல்லாம் இந்தக் கோயிலில் அக்கம் பக்கத் தோட்டத் திருமணங்கள், புண்ணிய தானங்கள் எல்லாம் இடம்பெற்றன. ஆனால் பக்கத்து டவுணில் கட்டப்பட்ட கலாசார மண்டபம் இவருக்கு வந்த வாய்ப்புகளை ஏய்ப்புக்குள்ளாக்கிவிட்டது. வருமானத்தில் துண்டு விழ, சரிக்கட்ட முடியாத சங்கடம். முன்பு இந்தக் கோயிலில் திருமணத்துக்குச் சமைக்க வருபவர்கள் எஞ்சிவிடும் அரிசி, மளிகைச் சாமான்களைக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள வற்புறுத்துவார்கள். இராமநாதன் பிடிவாதமாக மறுத்துவிடுவார். கோயிலுக்கென்று ஒப்படைக்கப்படும் காணிக்கையில் கை வைக்கமாட்டார். ஆளைப்பார்த்து அர்ச்சனையைக் கூட்டியோ குறைத்தோ பண்ணமாட்டார். மனசாட்சிக்குப் பயந்த மனிதர்.

பிறந்தவை நான்கும் பெண் பிள்ளைகளாகவிருந்தாலும் கரித்துக் கொட்டியதில்லை. கடிந்து பேசியதும் இல்லை. ஒருமாதிரியாக மூத்தவளுக்குத் திருமணம் முடித்து வைத்தார். அவள் கணவன் வீடு போய் விட்டாள். மூன்று பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுதெல்லாம் திருவிழா வந்தால் மட்டுமே கொஞ்சம் காசு மிஞ்சும் என்ற நிலை. இப்போது வேறு ஒரு இக்கட்டும் வந்து சேர்ந்திருந்தது. அவரின் நாணயத்துக்கு வந்த சோதனை என்று கூடச் சொல்லலாம். மகளை முடித்துக் கொடுத்தபோது மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு வாக்குக் கொடுத்திருந்தார். மாதாந்தத் தவணை அடிப்படையில் பணம் கட்டும் வகையில் மருமகனுக்கு முச்சக்கரவண்டியொன்று வாங்க உதவுவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி அவர்கள் வண்டியை வாங்கிவிட்டிருந்தார்கள். ஆரம்பத்தில் தவணைப் பணம் தவறாது கட்ட மரக்கறித் தோட்டம் கைகொடுத்தது. ஆனால் மழை ஏமாற்றியதால் கையைச் சுட்டது. இருந்த மாட்டை விற்று இரண்டு தவணைக் கடனை அடைத்தார். இப்பொழுது இரண்டு மாதத் தவணைப் பாக்கி நின்று அவரைத் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிட்டுத் தூர நின்று வேடிக்கை பார்க்கிறது.

மூத்தவள் மூன்று நாளைக்கு முந்தியே கடைசி ஊன்று கோளாக அப்பாவின் வாக்குத்தத்தத்தை நம்பி வெம்பிப் போன முகத்தோடு வந்து இறங்கிவிட்டாள். வந்ததும் வராததுமாக வார்த்தைகளால் வெடித்தாள்.

"யப்பா....! ரெண்டு மாச தவணைக் காசு இல்லாம நான் திரும்பிப் போறதா இல்ல.... ஏலாதுனு தெரிஞ்சிக்கிட்டே ஏம்பா வாக்கு குடுத்தீங்க.... இப்ப படுறது நான்தானே...!" கண்ணீர் பொல பொலக்க கூறினாள்.

"கவலப்படாத தாயீ! திருவிழா முடிஞ்ச கையோட நீ காசோட போவலாம்....! ஆத்தா கைவிட மாட்டா...."

"அவருன்னா பாவம்பா. நான்னா கொற சொல்ல மாட்டேன்.... ஆனா அவங்க அம்மா இருக்கே பெசாசு...." மகளை இடைமறித்தார் இராமநாதன்.

"பெரியவங்கள அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா... தம்பீ நல்லம்கிறதுனாலதானே இந்தச் சம்பந்தத்துக்கே சம்மதிச்சேன்..."

"நான் பொறப்படுற நேரம் கூடச் சொன்னாரு.... தாமர! பாவம் மாமா... ரொம்பவும் தான் கரச்ச குடுக்குறோம். எனக்கு காசு பொரட்ட முடிஞ்சா பண்ணிருப்பேன்னு..."

தன் புருஷனை விட்டுக்கொடுக்க விரும்பாத மகளை நினைத்து அவரால் பெருமிதம் அடையவே முடிந்தது. அதுதானே நல்ல மனைவியின் இலட்சணம்!

இராமநாதன் இந்தத் திருவிழாவையே முழுவதுமாக நம்பியிருந்தார். திருவிழா முடிந்தால் காசு கொஞ்சம் வரும். ஐயர் சம்பளம் என்று ஒரு சிறப்புக் கூலி கிடைக்கும். அர்ச்சனைத் தட்டுகள் ஏராளமாக வரும்போது தட்சனையும் அதிகரிக்கும். பற்றாக்குறைக்குச் சிவசண்முகத்திடம் கேட்டால் நிச்சயமாக உதவி செய்வார்.

எங்கோ ஒரு தோட்டத்தில் பிறந்த சிவசண்முகம் இன்று கொழும்பு பழைய சோனகர் தெருவில் பிரபல்யமான இரும்புக்கடை வர்த்தகராகவிருக்கிறார். நிதி சேகரிப்புக்காக போனபோது அறிமுகமாகி இந்தக் கோயிலோடு சங்கமமாகிப் போனவர். ஒவ்வொரு திருவிழாவையும் உபயமாக எடுத்துக்கொண்டு செலவழிப்பார். இராமநாதன் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்.

ஒவ்வொரு தடவையும் திருவிழாவுக்கு வந்துவிட்டுத் திரும்பும் போது சிவசண்முகம் இராமநாதனிடம் கேட்பார்.

"சாமீ! ஒங்களுக்கு ஏதாவது ஒதவி தேவையா..."

"அம்மனுக்காக நீங்க பண்றதே பெரிய ஒதவிதானுங்க ஐயா....!"

அப்படிப்பட்ட சிவசண்முகம் உதவி கேட்டால் பண்ணாமல் இருப்பாரா!

ஆனாலும் மனுஷத்தனமான ஓர் குழப்பம் மனசை அலைக்கழிக்கவே செய்தது.

ஆனால் மறுநாள் காலையிலயே கோயில் கமிட்டித் தலைவர் ராஜகோபால் சொன்ன செய்தி அவரைத் திக்குமுக்காட வைத்தது.

"இந்தத்தடவை சிவசண்முகம் திருவிழாவில் கலந்து கொள்ளமாட்டாராம். அவசரமாக இந்தியா போகிறாராம். தான் போகிற காரியம் நல்லபடியாக முடிய இராமநாதனிடம் சொல்லி அம்மனுக்கு நேர்த்தி வைக்கச் சொன்னாராம்."

திருவிழாவும் சிவசண்முகமும் இக்கட்டிலிருந்து தன்னை மீட்கலாம் என்ற நம்பிக்கையின் பிடி நழுவுவது போல இராமநாதனுக்குப் பட்டது.  

நடுக்காட்டில் விட்டது போல ஒரு தவிப்பு. மகளிடம் மூச் விடாமல் மனைவியிடம் மட்டும் கிசுகிசுத்தார்.

"பார்வதி! இப்ப நான் என்ன பண்ணப் போறேன்.... அந்தத் தாயீ ஏன் இப்படி எங்கள சோதிக்குறா....! பாவம் புள்ள..."

மனைவி ஓர் யோசனை சொன்னாள்.

"திருவிழா முடிஞ்சோடன்ன கோயில் கமிட்டி தலவரு கிட்டக் கொஞ்சம் கடன் கேட்டா.... சேர்ந்த காசுல மிச்சம் இருக்கும் தானே...!"

மனைவியை ஏறிட்டுப் பார்த்தார் இராமநாதன்.

"நீ சொல்றதும் சரிதான்... பார்ப்போம்!"

வியாழனின் விடிவு.

வாத்தியக் கலைஞர் குழு குழுவாக வந்து இறங்கினார்கள். ஹாலி எலயில் இருந்து நாதஸ்வரம் தவில். உடுவரையிலிருந்து கோடாங்கி. சின்னத் தோட்ட தப்பு. பலாங்கொடையிலிருந்து உருமி. இன்னும் கரகாட்டம், மயிலாட்டம் என்று கோயில் வட்டாரமே கலகலத்துப் போனது.

இந்த நேரத்தில்தான் தூரத்தில் இருந்தபடியே அவர் மனைவி சைகையால் அழைப்பது தெரிந்தது.

"என்னம்மா?" என்றார்.

"என்னாத்த சொல்லுவேன்...!" என்றவர் சொல்ல வந்ததைச் சொல்லவே செய்தார்.

அதைக் கேட்டதும் இராமநாதனின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. 'இது நிஜமா? இந்த நேரத்தில் இது தகுமா?' என்ற தவிப்போடு உடல் பதறினார்.

"என்ன பண்ணுவேன் பார்வதி....! நமக்கு மட்டும் ஏன் இப்டியெல்லாம் நடக்குது.." வார்த்தைகள் விரக்தியில் நனைந்து ஒலித்தது.

இராமநாதன் கோயில் பக்கம் திரும்பினார். கோபுரத்தை அண்ணாந்தார். தனக்குத்தானே பேசிக் கொண்டார். தலையை ஆட்டிக்கொண்டார்.

திடீரென அவர் குரலில் விறைப்பு

"பார்வதி! இத யாருகிட்டேயும் சொல்லிடாத... நான் இன்னங் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வர்றேன்....!"

மனைவியை அனுப்பிவிட்டு கோயிலுக்கு வந்தார். கர்ப்பக்கிரகத்தினுள் நுழைந்தார். மண்டியிட்டார்.

"தாயீ! எனக்கு வேற வழி தெரியல... இது குத்தம்னா திருவிழா முடிஞ்சி என் மூத்த மக பிரச்சின தீர்ந்தோடன்ன எனக்குத் தண்டன குடு...."

உள்ளமுருக வேண்டினார். எழும்பி வீட்டுக்கு வந்தார். மனைவியோடு இரகசியக் குரலில் பேசினார்.

"பார்வதி! என் உடுப்பு, படுக்க எல்லாத்தையும் வெளிக்காம்புராவுல வச்சிடு. சாப்பாடும்தான். திருவிழா முடியமட்டும் யாருமே என் கண்ல படாதீங்க... கதவ தெறக்கவே வேணாம். மாட்டுப் பட்டிய சுத்தம் பண்ணி...!"

"வெளங்குதுங்க....!" பார்வதி முந்திக் கொண்டு சொன்னாள்.

இராமநாதன் வெறித்த மனதோடு கோயிலுக்குத் திரும்பினார். மாலைவரை எல்லாமே சுமுகமாகவே நடந்தது. அந்தி சாயும் வேளையில் கோடாங்கிக்காரர் பேச்சுவாக்கில் கேட்டார்.

"சாமீ! குடும்பமெல்லாம் இருக்குத்தானேங்க.."

தலையை மட்டும் ஆட்டினார் இராமநாதன்

"இல்ல... வீடு பூட்ன வாக்குலயே இருக்கு. அதானுங்க கேட்டேன்...!"

"அது வந்து.... சின்னப் புள்ளைக்கி அம்மா போட்டுருக்கு... திருவிழாங்கறதால நெறைய பேரு வருவாங்க போவாங்க... நாங்கதான் கொஞ்சம் பத்தரமா இருக்கணும். அதான்..." ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த காரணம்தான். எல்லாப் பழியும் அம்மன் மீது என்றுதான் ஆகிவிட்டதே.

"யாருக்கு சாமீ அம்மா பாத்துருக்கு..." அங்கு வந்த கோயில் கமிட்டித் தலைவர் கேட்டார்.

"சின்னவளுக்குங்க...!"

"ச்சா! எங்க சம்பந்தி வந்திருக்காரு. மாரியம்மன் தாலாட்டு எல்லாம் பாடுவாரு... ஒரு ஏழு மணியப் போல வீட்டுக்கு வரச் சொல்றேன்..."

"வேணாங்க... அவர தொந்தரவு பண்ணக்கூடாது. நான்கூட மாரியம்மன் தாலாட்டுப் பாடுவேணுங்க..."

சட்டென்று சமாளித்துக் கொண்டார் இராமநாதன். ஆனால் குரலில்தான் ஒரு நடுக்கம்.

அவரைப் பொறுத்தவரை இதுவொரு கண்டம். திடுதிப்பென்று உண்மை மட்டும் வெளிப்பட்டுப் போனால் சந்தி சிரித்த கதையாகிப் போகும்.

இரவானதும் கோயில் கமிட்டியின் முக்கிய தலைகள் யாவும் கோயில் வெளிப்பிரகாரத்தில் குந்துகின்றன. கோடாங்கிக்காரர் "மாயி மகமாயி" என்று பாடிக்கொண்டே உடுக்கை விளாசுகிறார். உடுக்குச் சத்தத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் கூடுகிறார்கள். இனி அருள்வந்து கோடாங்கியார் குறிப்பு எடுக்க வேண்டும். கோயில் கமிட்டியினர், பூசகர் கலந்து பேசி ஒரு பொருளை ஏற்கனவே தெரிவு செய்து வைப்பார்கள். அதன் பெயர்தான் குறிப்பு. பேச்சு வழக்கில் இதனைக் குருப்பு என்பார்கள். கோடாங்கிக்காரர் குறிப்பு எடுக்கிறார். மஞ்சள் கட்டி. பின் விறைப்பாக எழுந்து நின்று சாட்டையை உருவி உதறி நாலு புறமும் எகிறி வீசி. அமர்களப்படுத்துகிறார். எலுமிச்சம் பழத்தை வகிந்து நாலு திசைகளையும் நோக்கி எறிந்து எல்லாரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொள்கிறார். இளசுகள் வாய்பொத்திச் சிரிக்கிறார்கள்.

பின் வாத்தியங்கள் முழங்க கூட்டம் கரகம் பாலிக்கக் கிளம்புகிறது. கோயிலுக்குத் திரும்பும் போது கோழி கூவும் நேரமாகிவிட்டது. இனி விடிந்திருப்பது வெள்ளி. பூசை புனஸ்காரங்களோடு கோயிலும் லயங்களும் ஆரவாரப்படுகின்றன.

சனிக்கிழமை அன்னதானம். இதற்கான முழுச் செலவையும் வர்த்தகர் சிவசண்முகமே ஏற்றிருந்தார். கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயில் நிலையில் சாய்ந்தபடி கவனிக்கிறார் இராமநாதன். அவர் கண்களில் மட்டும் குற்ற உணர்வு குடியிருக்கவே செய்தது. தனக்கு நேர்ந்தது சோதனையே என்ற வேதனையும் நெஞ்சுக்குள் கனத்துப் போயிருந்தது.

ஞாயிற்றின் விழிப்பு. இன்று தேர்வலம். பிற்பகல் நான்கு மணிவாக்கில் புறப்படும் தேர் சின்னக்கடைச் சந்திவரை போய்த் திரும்பி லயம் லயமாக வலம் வந்து கோயில் திரும்பும்போது திங்கள் வெளுத்துவிடும்.

திங்கட்கிழமை மஞ்சள் நீராட்டு. அதுவும் சிலுசிலுப்போடு நிறைவடைகிறது. செவ்வாய் இரவு கோயில் கமிட்டி கூடுகிறது. வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. வெளியிடங்களிலிருந்து வந்திருந்த வாத்திய, நடன கலைஞர்கள் யாவரும் தமக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு ஏற்கனவே போய்விட்டிருந்தார்கள். இனி உள்ளுர்க்காரர்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் எஞ்சியிருந்தன. இதில் இராமநாதனும் சேர்த்தி. அவருக்கு ரொக்கமாக பத்தாயிரம் கிடைக்கிறது. அவர் மனசெல்லாம் சந்தோஷப் பூக்களின் அபிஷேகம்.

கடைசியாகக் கோயில் கமிட்டித் தலைவர் பேசுகிறார்.

"இந்தத் தடவ நிதி தாராளமா கெடச்சிது. இன்னும் கூட இருபதாயிரம் மீதமிருக்கு..."

இராமநாதன் தன் கடன் கேள்வி நிறைவேறும் என்னும் நம்பிக்கையோடு தலைவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தலைவர் தொடர்ந்தார்.

"நான் இங்க வர முந்தி நம்ம சிவசண்முகம் அய்யா, இந்தியாவில இருந்து கோல் பண்ணினாரு...!"

"அவரு ஒரு விசயம் சொன்னாரு... இந்தியாவுக்குப் போனகாரியம் நல்லபடியா முடிஞ்சிடுச்சாம். நம்ம சாமீ இராமநாதன் அய்யாவோட வேண்டுதல் பூசைதான் இதுக்குக் காரணம்னு நெனைக்கிறாராம். அதனால தன் கணக்குல அஞ்சாயிரம் ரூபாவ சாமீக்கு தட்சணையா தரச்சொன்னாரு. கொழும்பு வந்தோடன்ன கணக்கு நேர் பண்ணிக்கிறாராம்..."

இதைக் கேட்டதும் இராமநாதனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. இதை அதிசயம் என்பதா! அற்புதம் என்பதா!

பணம் கைமாறுகிறது. கமிட்டி கலைகிறது. கோயிலின் வாசல் கதவை வெறுமனே சாத்திவிட்டு திருவிழா காணிக்கையைக் கணக்குப் பார்க்கிறார். ஏழாயிரத்து ஐம்பது. விழிகளில் நீர் பொடிப்பு. முழுப்பணத்தையும் அம்மன் காலடியில் கொட்டுகிறார்.

"தாயே! என்னைய சோதிப்பேன்னு நெனச்சேன். ஆனா நீ தாயிங்கிற ஸ்தானத்துல இருந்து என்னைய மன்னிச்சிட்ட.... ஆத்தா! தெரிஞ்சா என்னைய விட்டு எல்லாமே கை நழுவிப் போற ஒரு காரியத்த வெளியில மூடி மறைச்சிட்டேன். ரெண்டாவது மக வியாழக்கெழம பெரிய மனுஷியாகிட்டான்னு தெரிஞ்சா தண்ணி ஊத்தி அவள வீட்டுக்கு அழைச்சி சடங்கு சுத்துற வரைக்கும் என்னால கோயிலுக்குள்ள கால வைக்க ஏலாது. தீட்டு. அப்டி மட்டும் நடந்திருந்தா என் மூத்த மக வாழ்க்கையே பிரச்சினையாகிடும்... என்னோட வருமானம் இல்லாமப் போயிருந்தா என்னோட கெதி.... மூத்தவளோட நெலம.... இதெல்லாத்தையும் யோசிச்சித்தான் ஓம்மேல பாரத்தப் போட்டுட்டு மக ருதுவானத மூடி மறைச்சி அம்மா போட்டுருக்கிறதா சொன்னேன்.... தீட்டுக்காரன்னு என் கைப் பூசய ஏத்துக்காம என்னப்படுத்துவேன்னு பயம் இருந்துச்சி! நீ அப்டி பண்ணல. மனசு சுத்தம் மட்டுந்தான் முக்கியம்" என்று புலம்புகிறார். மனதால் உருகி மருகுகிறார்.

இனி என்னவாம்... ஒரு ஏழு நாளைக்கு அம்மா போட்டிருக்கும் நாடகத்தைத் தொடர வேண்டியது... ஏழாவது நாள் சின்ன மகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என்றப் போர்வையில் வயசுக்கு வந்தவ தலைக்கு தண்ணீரூற்றி வீட்டுக்கு அழைப்பது... பிறகு சாவகாசமாக மகள் பெரியவளாகிவிட்ட விசயத்தை பகிரங்கப்படுத்துவது....

இராமநாதன் தன் குழப்பங்களை கிடப்பில் போட்டுவிட்டு நிமிர் நடையில் வெளியில் வந்து கோபுரத்தை நோக்கிக் கைகூப்புகிறார்.

கோபுரம் உயர்ந்த இடத்தில் அப்படியே தான் இருக்கிறது. 'தீட்டு' என்பது சுத்தத்தை அடியொற்றிய ஓர் ஓரங்கட்டுதல். 'தீட்டு' என்ற எண்ணமே மனித மனங்களை அசுத்தமாக்குகிறது. சடங்குகள் இதற்குப் பரிகாரம் அல்ல... அவை சம்பிரதாயம் மட்டுமே என்று சொல்வது போல கோபுரம் நிமிர்ந்தே நிற்கிறது.

No comments:

Post a Comment