Saturday, August 15, 2015

சிறுகதை - 02


பன்.பாலா

திருவிழா என்றாலே தோட்டங்கள் எல்லாமே களைகட்டிப் போகும். அதுவும் வெள்ளிமலைத் தோட்டத் திருவிழா என்றால் தனிச்சிறப்பு. அக்கம் பக்கத் தோட்ட மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். ஒவ்வொரு திருவிழாவுக்கும் புதிது புதிதாய் வித்தியாசமாக ஏற்பாடு செய்வது இந்தத் தோட்ட இளைஞர் குழுவின் வழக்கம்.

முன்பெல்லாம் கரகம் பாலித்தல், கரகந் தூக்கிக் கொண்டு தோட்ட வலம் வருதல், கரகம் தூக்குபவர்கள் அருள் வந்து ஆடுதல், கரகம் குடிவிடுதல் எல்லாமே மிக மிக முக்கியமான அம்சங்களாகவிருந்தன. முன்பெல்லாம் தேர் இழுப்பது இல்லை. அதற்கான பாதை வசதியும் இருக்கவில்லை. சப்பற பவனிதான் இடம்பெறும். சப்பறத்தைத் தோளில் சுமப்பதற்காகப் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள். இப்பொழுதுதான் எல்லாமே மாறிப் போய்விட்டது. தேர்ப் பவனிக்குத்தான் முதலிடம். கரகமெல்லாம் வெறும் காட்சிப் பொருள்களாகப் பார்க்கும் நிலை.

பெரிசுகளும் சிறிசுகளுமாய் கோயிலடி நிரம்பிப் போயிருந்தது. ஆளுக்கொரு வேலை. கசமுசாக்கள், கலகலப்புகள், சாடை மாடைகள் என்று அர்ப்பணிப்பான ஒரு பரபரப்பில் தோட்டமே கட்டுண்டு போயிருக்க, கோயில் பூசகர் இராமநாதன் மட்டும் தனியொரு தவிப்பில் இயங்கிக் கொண்டிருந்தார். மெல்லிய தோற்றமும் ஒடிசலான உடம்பும் உயரமும் சாதுவான முகபாவமும் ஒரு பரிதாப உணர்வை அவர் பால் பாய்ச்சிவிடும் என்பதில் ஐயமில்லை. இவரைச் சிலர் 'சாமீ' என்பார்கள். வேறு சிலர் 'குரு' என்பார்கள். பரம்பரை பரம்பரையாக பூசை செய்து வந்த குடும்பம். இராமநாதனின் அப்பா புற்றுநோய் வந்து சாகும்வரை இந்தத் தோட்டமக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் அடைக்கலமாகத் திகழ்ந்தார். அவர் செத்த போது தோட்டமே வாய்விட்டுக் கதறியது. இராமநாதன் ஒரே பிள்ளை. அப்பா செத்த போது அவர் சேர்த்த சொத்தாக ஒரு மாடும் இந்தப் பூசகர் தொழிலுமே எஞ்சியிருந்தது.

காலையில் மலைக்காட்டுக்குப் போய் சும்மா தலையைக் காட்டிவிட்டு வந்தாலே போதும். செக்ரோலில் பேர் விழுந்துவிடும். வெள்ளிக்கிழமை நாட்களில் தவறாமல் பூசைகள் நடக்கும். தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் என்று விசேட நாட்களில் சிறப்புப் பூசை நடைபெறும். அர்ச்சனைத் தட்டில் வைக்கப்படும் காணிக்கை அவருக்கே சொந்தம். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருவிளக்குப் பூசை நடக்கும். முன்பெல்லாம் இந்தக் கோயிலில் அக்கம் பக்கத் தோட்டத் திருமணங்கள், புண்ணிய தானங்கள் எல்லாம் இடம்பெற்றன. ஆனால் பக்கத்து டவுணில் கட்டப்பட்ட கலாசார மண்டபம் இவருக்கு வந்த வாய்ப்புகளை ஏய்ப்புக்குள்ளாக்கிவிட்டது. வருமானத்தில் துண்டு விழ, சரிக்கட்ட முடியாத சங்கடம். முன்பு இந்தக் கோயிலில் திருமணத்துக்குச் சமைக்க வருபவர்கள் எஞ்சிவிடும் அரிசி, மளிகைச் சாமான்களைக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள வற்புறுத்துவார்கள். இராமநாதன் பிடிவாதமாக மறுத்துவிடுவார். கோயிலுக்கென்று ஒப்படைக்கப்படும் காணிக்கையில் கை வைக்கமாட்டார். ஆளைப்பார்த்து அர்ச்சனையைக் கூட்டியோ குறைத்தோ பண்ணமாட்டார். மனசாட்சிக்குப் பயந்த மனிதர்.

பிறந்தவை நான்கும் பெண் பிள்ளைகளாகவிருந்தாலும் கரித்துக் கொட்டியதில்லை. கடிந்து பேசியதும் இல்லை. ஒருமாதிரியாக மூத்தவளுக்குத் திருமணம் முடித்து வைத்தார். அவள் கணவன் வீடு போய் விட்டாள். மூன்று பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுதெல்லாம் திருவிழா வந்தால் மட்டுமே கொஞ்சம் காசு மிஞ்சும் என்ற நிலை. இப்போது வேறு ஒரு இக்கட்டும் வந்து சேர்ந்திருந்தது. அவரின் நாணயத்துக்கு வந்த சோதனை என்று கூடச் சொல்லலாம். மகளை முடித்துக் கொடுத்தபோது மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு வாக்குக் கொடுத்திருந்தார். மாதாந்தத் தவணை அடிப்படையில் பணம் கட்டும் வகையில் மருமகனுக்கு முச்சக்கரவண்டியொன்று வாங்க உதவுவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி அவர்கள் வண்டியை வாங்கிவிட்டிருந்தார்கள். ஆரம்பத்தில் தவணைப் பணம் தவறாது கட்ட மரக்கறித் தோட்டம் கைகொடுத்தது. ஆனால் மழை ஏமாற்றியதால் கையைச் சுட்டது. இருந்த மாட்டை விற்று இரண்டு தவணைக் கடனை அடைத்தார். இப்பொழுது இரண்டு மாதத் தவணைப் பாக்கி நின்று அவரைத் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிட்டுத் தூர நின்று வேடிக்கை பார்க்கிறது.

மூத்தவள் மூன்று நாளைக்கு முந்தியே கடைசி ஊன்று கோளாக அப்பாவின் வாக்குத்தத்தத்தை நம்பி வெம்பிப் போன முகத்தோடு வந்து இறங்கிவிட்டாள். வந்ததும் வராததுமாக வார்த்தைகளால் வெடித்தாள்.

"யப்பா....! ரெண்டு மாச தவணைக் காசு இல்லாம நான் திரும்பிப் போறதா இல்ல.... ஏலாதுனு தெரிஞ்சிக்கிட்டே ஏம்பா வாக்கு குடுத்தீங்க.... இப்ப படுறது நான்தானே...!" கண்ணீர் பொல பொலக்க கூறினாள்.

"கவலப்படாத தாயீ! திருவிழா முடிஞ்ச கையோட நீ காசோட போவலாம்....! ஆத்தா கைவிட மாட்டா...."

"அவருன்னா பாவம்பா. நான்னா கொற சொல்ல மாட்டேன்.... ஆனா அவங்க அம்மா இருக்கே பெசாசு...." மகளை இடைமறித்தார் இராமநாதன்.

"பெரியவங்கள அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா... தம்பீ நல்லம்கிறதுனாலதானே இந்தச் சம்பந்தத்துக்கே சம்மதிச்சேன்..."

"நான் பொறப்படுற நேரம் கூடச் சொன்னாரு.... தாமர! பாவம் மாமா... ரொம்பவும் தான் கரச்ச குடுக்குறோம். எனக்கு காசு பொரட்ட முடிஞ்சா பண்ணிருப்பேன்னு..."

தன் புருஷனை விட்டுக்கொடுக்க விரும்பாத மகளை நினைத்து அவரால் பெருமிதம் அடையவே முடிந்தது. அதுதானே நல்ல மனைவியின் இலட்சணம்!

இராமநாதன் இந்தத் திருவிழாவையே முழுவதுமாக நம்பியிருந்தார். திருவிழா முடிந்தால் காசு கொஞ்சம் வரும். ஐயர் சம்பளம் என்று ஒரு சிறப்புக் கூலி கிடைக்கும். அர்ச்சனைத் தட்டுகள் ஏராளமாக வரும்போது தட்சனையும் அதிகரிக்கும். பற்றாக்குறைக்குச் சிவசண்முகத்திடம் கேட்டால் நிச்சயமாக உதவி செய்வார்.

எங்கோ ஒரு தோட்டத்தில் பிறந்த சிவசண்முகம் இன்று கொழும்பு பழைய சோனகர் தெருவில் பிரபல்யமான இரும்புக்கடை வர்த்தகராகவிருக்கிறார். நிதி சேகரிப்புக்காக போனபோது அறிமுகமாகி இந்தக் கோயிலோடு சங்கமமாகிப் போனவர். ஒவ்வொரு திருவிழாவையும் உபயமாக எடுத்துக்கொண்டு செலவழிப்பார். இராமநாதன் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்.

ஒவ்வொரு தடவையும் திருவிழாவுக்கு வந்துவிட்டுத் திரும்பும் போது சிவசண்முகம் இராமநாதனிடம் கேட்பார்.

"சாமீ! ஒங்களுக்கு ஏதாவது ஒதவி தேவையா..."

"அம்மனுக்காக நீங்க பண்றதே பெரிய ஒதவிதானுங்க ஐயா....!"

அப்படிப்பட்ட சிவசண்முகம் உதவி கேட்டால் பண்ணாமல் இருப்பாரா!

ஆனாலும் மனுஷத்தனமான ஓர் குழப்பம் மனசை அலைக்கழிக்கவே செய்தது.

ஆனால் மறுநாள் காலையிலயே கோயில் கமிட்டித் தலைவர் ராஜகோபால் சொன்ன செய்தி அவரைத் திக்குமுக்காட வைத்தது.

"இந்தத்தடவை சிவசண்முகம் திருவிழாவில் கலந்து கொள்ளமாட்டாராம். அவசரமாக இந்தியா போகிறாராம். தான் போகிற காரியம் நல்லபடியாக முடிய இராமநாதனிடம் சொல்லி அம்மனுக்கு நேர்த்தி வைக்கச் சொன்னாராம்."

திருவிழாவும் சிவசண்முகமும் இக்கட்டிலிருந்து தன்னை மீட்கலாம் என்ற நம்பிக்கையின் பிடி நழுவுவது போல இராமநாதனுக்குப் பட்டது.  

நடுக்காட்டில் விட்டது போல ஒரு தவிப்பு. மகளிடம் மூச் விடாமல் மனைவியிடம் மட்டும் கிசுகிசுத்தார்.

"பார்வதி! இப்ப நான் என்ன பண்ணப் போறேன்.... அந்தத் தாயீ ஏன் இப்படி எங்கள சோதிக்குறா....! பாவம் புள்ள..."

மனைவி ஓர் யோசனை சொன்னாள்.

"திருவிழா முடிஞ்சோடன்ன கோயில் கமிட்டி தலவரு கிட்டக் கொஞ்சம் கடன் கேட்டா.... சேர்ந்த காசுல மிச்சம் இருக்கும் தானே...!"

மனைவியை ஏறிட்டுப் பார்த்தார் இராமநாதன்.

"நீ சொல்றதும் சரிதான்... பார்ப்போம்!"

வியாழனின் விடிவு.

வாத்தியக் கலைஞர் குழு குழுவாக வந்து இறங்கினார்கள். ஹாலி எலயில் இருந்து நாதஸ்வரம் தவில். உடுவரையிலிருந்து கோடாங்கி. சின்னத் தோட்ட தப்பு. பலாங்கொடையிலிருந்து உருமி. இன்னும் கரகாட்டம், மயிலாட்டம் என்று கோயில் வட்டாரமே கலகலத்துப் போனது.

இந்த நேரத்தில்தான் தூரத்தில் இருந்தபடியே அவர் மனைவி சைகையால் அழைப்பது தெரிந்தது.

"என்னம்மா?" என்றார்.

"என்னாத்த சொல்லுவேன்...!" என்றவர் சொல்ல வந்ததைச் சொல்லவே செய்தார்.

அதைக் கேட்டதும் இராமநாதனின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. 'இது நிஜமா? இந்த நேரத்தில் இது தகுமா?' என்ற தவிப்போடு உடல் பதறினார்.

"என்ன பண்ணுவேன் பார்வதி....! நமக்கு மட்டும் ஏன் இப்டியெல்லாம் நடக்குது.." வார்த்தைகள் விரக்தியில் நனைந்து ஒலித்தது.

இராமநாதன் கோயில் பக்கம் திரும்பினார். கோபுரத்தை அண்ணாந்தார். தனக்குத்தானே பேசிக் கொண்டார். தலையை ஆட்டிக்கொண்டார்.

திடீரென அவர் குரலில் விறைப்பு

"பார்வதி! இத யாருகிட்டேயும் சொல்லிடாத... நான் இன்னங் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வர்றேன்....!"

மனைவியை அனுப்பிவிட்டு கோயிலுக்கு வந்தார். கர்ப்பக்கிரகத்தினுள் நுழைந்தார். மண்டியிட்டார்.

"தாயீ! எனக்கு வேற வழி தெரியல... இது குத்தம்னா திருவிழா முடிஞ்சி என் மூத்த மக பிரச்சின தீர்ந்தோடன்ன எனக்குத் தண்டன குடு...."

உள்ளமுருக வேண்டினார். எழும்பி வீட்டுக்கு வந்தார். மனைவியோடு இரகசியக் குரலில் பேசினார்.

"பார்வதி! என் உடுப்பு, படுக்க எல்லாத்தையும் வெளிக்காம்புராவுல வச்சிடு. சாப்பாடும்தான். திருவிழா முடியமட்டும் யாருமே என் கண்ல படாதீங்க... கதவ தெறக்கவே வேணாம். மாட்டுப் பட்டிய சுத்தம் பண்ணி...!"

"வெளங்குதுங்க....!" பார்வதி முந்திக் கொண்டு சொன்னாள்.

இராமநாதன் வெறித்த மனதோடு கோயிலுக்குத் திரும்பினார். மாலைவரை எல்லாமே சுமுகமாகவே நடந்தது. அந்தி சாயும் வேளையில் கோடாங்கிக்காரர் பேச்சுவாக்கில் கேட்டார்.

"சாமீ! குடும்பமெல்லாம் இருக்குத்தானேங்க.."

தலையை மட்டும் ஆட்டினார் இராமநாதன்

"இல்ல... வீடு பூட்ன வாக்குலயே இருக்கு. அதானுங்க கேட்டேன்...!"

"அது வந்து.... சின்னப் புள்ளைக்கி அம்மா போட்டுருக்கு... திருவிழாங்கறதால நெறைய பேரு வருவாங்க போவாங்க... நாங்கதான் கொஞ்சம் பத்தரமா இருக்கணும். அதான்..." ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த காரணம்தான். எல்லாப் பழியும் அம்மன் மீது என்றுதான் ஆகிவிட்டதே.

"யாருக்கு சாமீ அம்மா பாத்துருக்கு..." அங்கு வந்த கோயில் கமிட்டித் தலைவர் கேட்டார்.

"சின்னவளுக்குங்க...!"

"ச்சா! எங்க சம்பந்தி வந்திருக்காரு. மாரியம்மன் தாலாட்டு எல்லாம் பாடுவாரு... ஒரு ஏழு மணியப் போல வீட்டுக்கு வரச் சொல்றேன்..."

"வேணாங்க... அவர தொந்தரவு பண்ணக்கூடாது. நான்கூட மாரியம்மன் தாலாட்டுப் பாடுவேணுங்க..."

சட்டென்று சமாளித்துக் கொண்டார் இராமநாதன். ஆனால் குரலில்தான் ஒரு நடுக்கம்.

அவரைப் பொறுத்தவரை இதுவொரு கண்டம். திடுதிப்பென்று உண்மை மட்டும் வெளிப்பட்டுப் போனால் சந்தி சிரித்த கதையாகிப் போகும்.

இரவானதும் கோயில் கமிட்டியின் முக்கிய தலைகள் யாவும் கோயில் வெளிப்பிரகாரத்தில் குந்துகின்றன. கோடாங்கிக்காரர் "மாயி மகமாயி" என்று பாடிக்கொண்டே உடுக்கை விளாசுகிறார். உடுக்குச் சத்தத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் கூடுகிறார்கள். இனி அருள்வந்து கோடாங்கியார் குறிப்பு எடுக்க வேண்டும். கோயில் கமிட்டியினர், பூசகர் கலந்து பேசி ஒரு பொருளை ஏற்கனவே தெரிவு செய்து வைப்பார்கள். அதன் பெயர்தான் குறிப்பு. பேச்சு வழக்கில் இதனைக் குருப்பு என்பார்கள். கோடாங்கிக்காரர் குறிப்பு எடுக்கிறார். மஞ்சள் கட்டி. பின் விறைப்பாக எழுந்து நின்று சாட்டையை உருவி உதறி நாலு புறமும் எகிறி வீசி. அமர்களப்படுத்துகிறார். எலுமிச்சம் பழத்தை வகிந்து நாலு திசைகளையும் நோக்கி எறிந்து எல்லாரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொள்கிறார். இளசுகள் வாய்பொத்திச் சிரிக்கிறார்கள்.

பின் வாத்தியங்கள் முழங்க கூட்டம் கரகம் பாலிக்கக் கிளம்புகிறது. கோயிலுக்குத் திரும்பும் போது கோழி கூவும் நேரமாகிவிட்டது. இனி விடிந்திருப்பது வெள்ளி. பூசை புனஸ்காரங்களோடு கோயிலும் லயங்களும் ஆரவாரப்படுகின்றன.

சனிக்கிழமை அன்னதானம். இதற்கான முழுச் செலவையும் வர்த்தகர் சிவசண்முகமே ஏற்றிருந்தார். கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயில் நிலையில் சாய்ந்தபடி கவனிக்கிறார் இராமநாதன். அவர் கண்களில் மட்டும் குற்ற உணர்வு குடியிருக்கவே செய்தது. தனக்கு நேர்ந்தது சோதனையே என்ற வேதனையும் நெஞ்சுக்குள் கனத்துப் போயிருந்தது.

ஞாயிற்றின் விழிப்பு. இன்று தேர்வலம். பிற்பகல் நான்கு மணிவாக்கில் புறப்படும் தேர் சின்னக்கடைச் சந்திவரை போய்த் திரும்பி லயம் லயமாக வலம் வந்து கோயில் திரும்பும்போது திங்கள் வெளுத்துவிடும்.

திங்கட்கிழமை மஞ்சள் நீராட்டு. அதுவும் சிலுசிலுப்போடு நிறைவடைகிறது. செவ்வாய் இரவு கோயில் கமிட்டி கூடுகிறது. வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. வெளியிடங்களிலிருந்து வந்திருந்த வாத்திய, நடன கலைஞர்கள் யாவரும் தமக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு ஏற்கனவே போய்விட்டிருந்தார்கள். இனி உள்ளுர்க்காரர்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் எஞ்சியிருந்தன. இதில் இராமநாதனும் சேர்த்தி. அவருக்கு ரொக்கமாக பத்தாயிரம் கிடைக்கிறது. அவர் மனசெல்லாம் சந்தோஷப் பூக்களின் அபிஷேகம்.

கடைசியாகக் கோயில் கமிட்டித் தலைவர் பேசுகிறார்.

"இந்தத் தடவ நிதி தாராளமா கெடச்சிது. இன்னும் கூட இருபதாயிரம் மீதமிருக்கு..."

இராமநாதன் தன் கடன் கேள்வி நிறைவேறும் என்னும் நம்பிக்கையோடு தலைவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தலைவர் தொடர்ந்தார்.

"நான் இங்க வர முந்தி நம்ம சிவசண்முகம் அய்யா, இந்தியாவில இருந்து கோல் பண்ணினாரு...!"

"அவரு ஒரு விசயம் சொன்னாரு... இந்தியாவுக்குப் போனகாரியம் நல்லபடியா முடிஞ்சிடுச்சாம். நம்ம சாமீ இராமநாதன் அய்யாவோட வேண்டுதல் பூசைதான் இதுக்குக் காரணம்னு நெனைக்கிறாராம். அதனால தன் கணக்குல அஞ்சாயிரம் ரூபாவ சாமீக்கு தட்சணையா தரச்சொன்னாரு. கொழும்பு வந்தோடன்ன கணக்கு நேர் பண்ணிக்கிறாராம்..."

இதைக் கேட்டதும் இராமநாதனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. இதை அதிசயம் என்பதா! அற்புதம் என்பதா!

பணம் கைமாறுகிறது. கமிட்டி கலைகிறது. கோயிலின் வாசல் கதவை வெறுமனே சாத்திவிட்டு திருவிழா காணிக்கையைக் கணக்குப் பார்க்கிறார். ஏழாயிரத்து ஐம்பது. விழிகளில் நீர் பொடிப்பு. முழுப்பணத்தையும் அம்மன் காலடியில் கொட்டுகிறார்.

"தாயே! என்னைய சோதிப்பேன்னு நெனச்சேன். ஆனா நீ தாயிங்கிற ஸ்தானத்துல இருந்து என்னைய மன்னிச்சிட்ட.... ஆத்தா! தெரிஞ்சா என்னைய விட்டு எல்லாமே கை நழுவிப் போற ஒரு காரியத்த வெளியில மூடி மறைச்சிட்டேன். ரெண்டாவது மக வியாழக்கெழம பெரிய மனுஷியாகிட்டான்னு தெரிஞ்சா தண்ணி ஊத்தி அவள வீட்டுக்கு அழைச்சி சடங்கு சுத்துற வரைக்கும் என்னால கோயிலுக்குள்ள கால வைக்க ஏலாது. தீட்டு. அப்டி மட்டும் நடந்திருந்தா என் மூத்த மக வாழ்க்கையே பிரச்சினையாகிடும்... என்னோட வருமானம் இல்லாமப் போயிருந்தா என்னோட கெதி.... மூத்தவளோட நெலம.... இதெல்லாத்தையும் யோசிச்சித்தான் ஓம்மேல பாரத்தப் போட்டுட்டு மக ருதுவானத மூடி மறைச்சி அம்மா போட்டுருக்கிறதா சொன்னேன்.... தீட்டுக்காரன்னு என் கைப் பூசய ஏத்துக்காம என்னப்படுத்துவேன்னு பயம் இருந்துச்சி! நீ அப்டி பண்ணல. மனசு சுத்தம் மட்டுந்தான் முக்கியம்" என்று புலம்புகிறார். மனதால் உருகி மருகுகிறார்.

இனி என்னவாம்... ஒரு ஏழு நாளைக்கு அம்மா போட்டிருக்கும் நாடகத்தைத் தொடர வேண்டியது... ஏழாவது நாள் சின்ன மகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என்றப் போர்வையில் வயசுக்கு வந்தவ தலைக்கு தண்ணீரூற்றி வீட்டுக்கு அழைப்பது... பிறகு சாவகாசமாக மகள் பெரியவளாகிவிட்ட விசயத்தை பகிரங்கப்படுத்துவது....

இராமநாதன் தன் குழப்பங்களை கிடப்பில் போட்டுவிட்டு நிமிர் நடையில் வெளியில் வந்து கோபுரத்தை நோக்கிக் கைகூப்புகிறார்.

கோபுரம் உயர்ந்த இடத்தில் அப்படியே தான் இருக்கிறது. 'தீட்டு' என்பது சுத்தத்தை அடியொற்றிய ஓர் ஓரங்கட்டுதல். 'தீட்டு' என்ற எண்ணமே மனித மனங்களை அசுத்தமாக்குகிறது. சடங்குகள் இதற்குப் பரிகாரம் அல்ல... அவை சம்பிரதாயம் மட்டுமே என்று சொல்வது போல கோபுரம் நிமிர்ந்தே நிற்கிறது.

Friday, August 14, 2015

சினிமானந்தா பதில்கள் -26

'36 வயதினிலே', 'காக்கா முட்டை' இரண்டுமே அமோக வெற்றியாமே!
எஸ். ராஜேந்திரன், கொழும்பு

'36 வயதினிலே' எதிர்பார்த்த வெற்றி. 8 வருடங்களுக்கு பிறகு ஜோ மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதுமே பெண் ரசிகைகள் ஜோ (ராசாத்தி)க்கு ஆரத்தி எடுத்து வரவேற்பதற்கு தயாராகிவிட்டனர். படத்தின் வெற்றிக்கு அவர்கள்தான் காரணம்.
ஆனால் ஜோவின் நடிப்பு பசிக்கு இந்தப் படம் சரியாக தீனி போடவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. விதி படத்தில் சுஜாதா ஏற்றிருந்த வக்கீல் பாத்திரத்தைப் போன்று ஒரு வேடம் ஜோவுக்கு அமைந்தால் சவாலாக இருக்கும். சூர்யாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தாறு மாறாகக் கேள்வி கேட்டு வாதம் செய்யும் பாத்திரமாக இருந்திருந்தால் அப்பாடா. பசி ஓரளவு அடங்கியிருக்கும்.

ராசாத்திக்கு வீட்டிலேயே போட்டி (வேறு யார் மாப்பிள்ளையும் மச்சானும்தான்) அதில் இப்போது வெற்றி பெற்றாயிற்று. இனி அடிக்கடி திரையில் தோன்றும் போட்டி. (இது மாமனாருடன். அவர் மனவு வைத்தால்தான் இதில் ஜோ வெல்லலாம்)

'காக்கா முட்டை' எதிர்பாராத வெற்றி படம் இந்த அளவுக்கு பேசப்படும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
2014 செப்டம்பர் 5 ஆம் திகதி கனடாவின் டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'காக்கா முட்டை' முதலில் திரையிடப்பட்டது. அப்போதே படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

1976 இல் டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழா ஆரம்பிக்கப்பட்டது. முதல் தமிழ் டைரக்டர் ஒருவரின் அறிமுகப் படமாக திரையிடப்பட்ட முதல் படம் காக்கா முட்டைதான். அதனையடுத்து ரோம் திரைப்பட விழா, துபாய் சர்வதேச திரைப்பட விழா லொஸ் ஏஞ்சல்ஸின் இந்திய திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்ட பின் இந்திய தேசிய திரைப்பட விழாவில் சிறந்த சிறுவர்கள் படமாகவும், படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களான ரமேஷ் திலகநாதன் மற்றும் ஜே.விக்னேஷ் ஆகிய இருவருக்கும் சிறந்த சிறுவர் நடிகர்களாக தேசிய விருதும் கிடைத்தன. இதையடுத்து 2015 ஜூன் 5 ஆம் திகதி முதல் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டபோது பலராலும் பாராட்டப்பட்டு புதிய அத்தியாயமொன்றை காக்கா முட்டை தோற்றுவித்துள்ளது.

சிறுவர்களுக்கென தயாரிக்கப்படும் சில படங்கள் பெரியவர்களுக்கும் விருந்தாக அமைந்து விடுகின்றன. 'ஹடாரி' (HATARI) என்ற ஆங்கில படம் கொழும்பு லிபர்ட்டி படமாளிகையில் 1962 இல் திரையிடப்பட்டது. காட்டு மிருகங்களைப் பிடித்து மிருகக் காட்சிசாலைகளுக்கு விற்பனை செய்யும் சிலரைப் பற்றிய படம்.
சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஹடாரி கொழும்பில் சுமார் 6 மாத காலம் ஓடி சாதனை படைத்தது. அதில் வந்த BABY ELEPHANT WALK என்ற இசைச்சுரத்தை மறக்கவே முடியாது. அதுபோலத்தான் காக்கா முட்டையும் சிறியோர் பெரியோர் என்ற பாகுபாடு இன்றி பலரையும் கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நன்றாக ஓடும் எந்தப் படமும் அதே படத்தைப் போன்ற ஒரு பட வரிசையை உருவாக்குவது இப்போது பழக்கமாகியுள்ளது. காக்கா முட்டையும் அதற்கு விதிவிலக்கல்ல. அதேபோல் 'உனக்குள் நாள்' என்றொரு படம் உருவாகிறது. ஒரு நவீன தியேட்டரில் படம் பார்க்க விரும்பும் ஒரு சேரிப் பையனைப் பற்றிய கதை இது.

இந்தியாவிலேயே அதிக செலவில் உருவான படம் எது?
என். லக்ஷான், யாழ்ப்பாணம்

அதிக செலவில் உருவான படம் 'பாகுபலி'தான்.
அதிக அளவிலான பிரமாண்டமும் பாகுபலிதான்
அதிகம் பேசப்படும் படமும் பாகுபலிதான்.
இப்போது பேயோட்டம் ஓடுவதும் பாகுபலி தான்.
இதற்கும் மேலாக,
'பாகுபலி' படம் ஹாலிவுட்டுக்கு இந்திய சினிமா விடுத்துள்ள மிகப் பெரிய சவால் என்று சர்வதேச இணையத்தளமான CNN பாராட்டியுள்ளது.

இந்திய சினிமா ஒரு வண்ண மயமான பிரமிப்பூட்டும் சினிமாவை தந்துள்ளது. ஆனால் இது பாலிவுட்டில் இருந்து வரவில்லை. மும்பையிலிருந்து பல நூறு மைல் தொலைவில் தென்னிந்திய நகரமொன்றை சேர்ந்த ஒரு இயக்குநர் இந்திய பாரம்பரியத்தையும் ஹாலிவுட்டின் பிரமாண்டத்தையும் இணைத்து வெற்றிகரமான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் என்று ஆரம்பிக்கிறது CNN ன் ஊடக அறிக்கை.
'பாகுபலி' இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் (40 மில்லியன் டாலர்கள்) உருவாகியுள்ளது. ஹாலிவுட்டோடு ஒப்பிடுகையில் இது பெரிய தொகையல்ல. ஆனால் இந்தியாவில் இதுவரை ஒரு படத்துக்கான அதிகபட்ச பட்ஜெட் 25 மில்லியன் டாலர்களாகும். (எந்திரன்) என்கிறது CNN.

'பாகுபலி' வெளியான நாளிலிருந்து சாதகமான விமர்சனங்கள் ஏகப்பட்ட பாராட்டுகள் குவிகின்றன. பலர் அதனை ஹாலிவுட்டுடன் ஒப்பிட்டுப் பாராட்டுகின்றனர். இது அசாதாரண விஷயம்.

எந்திரன் 2 பட்ஜெட் 40 மில்லியன் டாலர்களை எகிறிவிடுமாம். ஆனால் எந்திரன் 2க்கான வில்லனை இன்னும் தேடி வருகின்றனர்.

ஹாலிவுட்டின் ஆர்னல்ட் மறுத்துவிட்டார். சாருக்கானுக்கு நேரமில்லையாம். அமீர்கான் ரொம்ப பிசியாம். அகப்பட்டுக் கொண்டவர் சீயான் (ராவணன் மாதிரி ஆகிவிடக்கூடாது) ஆனால் இருக்கிறார் ஒரு உகந்தவர் உலக நாயகன் (ரஜனிக்கு கொடுக்கும் அதே சம்பளம், அதே அந்தஸ்து, அதே மிடுக்கு, அத்துடன் வில்லன் தோற்காத சண்டையும் வேண்டும்) சங்கருக்கு வேண்டியவர் என்றால் பேசிப் பார்க்கலாமே. வெற்றிக்கு கரண்டி உண்டு.

Wednesday, August 12, 2015

இருள் உலகக் கதைகள்


முத்து பூசாரி சொன்ன  பேய்க் கதை

கேட்டு  எழுதுபவர்-  மணி  ஸ்ரீகாந்தன்

ருளாண்டிக்கு இருபத்தெட்டு வயது இருக்கும். பல மாதங்களாக எண்ணெய் வைக்காத பரட்டைத் தலைதான் அவனது அடையாளம். பெயருக்குத் தகுந்தாற் போல நிறமும் கருப்புதான். அழகர்சாமி படத்தில் நடித்த அப்புக்குட்டி மாதிரி குள்ளமான தோற்றம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

"இந்தக் காலத்துல எவ்வளவோ ஸ்டைலில் பெயர் இருக்கும்போது எனக்கு எப்படித்தான் எங்கப்பன் இருளாண்டின்னு பெயர் வச்சானோ...?" என்று வாயில் வைத்த பீடித் துண்டை எடுக்காமலேயே இருளாண்டி தனது அப்பாவை சக நண்பர்களிடம் சொல்லி திட்டிக் கொண்டிருந்தான்.

கஹவத்தை மாதம்பை தோட்ட முச்சந்தியில் இருக்கும் புளிய மரத்துக்கு பொறுக்கி புளிய மரம் என்று பெயர். இருளாண்டி மாதிரி வெட்டியாக ஊர் சுற்றும் வாலிபர்கள், இந்தப் புளிய மரத்தடியில்தான் காலையிலிருந்து மாலைவரை அண்டிக்கிடப்பார்களாம். அதனால்தான் பொறுக்கி புளியமரம் என்று ஊர்வாசிகள் அந்த மரத்தை அழைத்து வந்தார்கள்.

"டேய் பயலுங்களா, அந்தக் காலத்துல புளிய மரத்தடியில் குடிச்சிட்டு மல்லாக்கப் படுத்துக் கிடந்த பரமசிவன் பேய் அடிச்சு இறந்துபோனான். அதனால் நேரங்கெட்ட நேரத்துல புளிய மரத்துப் பக்கம் போகாதீங்கடா" என்று ஊர் பெரிசுகள் என்னதான் சொல்லி பீதியைக் கிளப்பினாலும் இருளாண்டி உள்ளிட்டி வயசுப் பசங்கள் அந்த மரமே கதியென்று கிடந்தார்கள்.

அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அந்த மரம் பிரதான சாலையிலிருந்து தோட்டத்துக்கு வரும் குறுக்குப் பாதையில் இருப்பதால் இளம் பெண்கள் அந்த வழியாகத்தான் வரவேண்டும். அவர்களைப் பார்த்து ஜொள்ளு விடவே புளியமரப் பேய்க்கும் அஞ்சாமல் அங்கே ஒரு கூட்டம் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தது.

இருளாண்டி தவிர மற்ற வாலிபர்கள் எல்லோருக்கும் கேர்ள் பிரண்ட் இருந்தார்கள். அதனால் வேலை முடிந்து வீடு வரும் பெண்களை வீடு வரை சென்று விட்டு திரும்பும் வேலையை அவர்கள் செய்து வந்ததோடு, அந்த 'சேவை' பற்றி பீற்றிக்கொள்ளவும் செய்வார்கள்.

"மச்சான், நேற்று நம்ம ஆளோட பேசிக்கிட்டே போகும்போது அவளோட அண்ணன் வந்துட்டான். அப்புறம் அவன் கண்ணுல படாம பெங்கிரி காட்டுக்குள்ள பாய்ந்து பதுங்கி கிடந்து வந்தேன்டா" என்று காதலர்கள் தமது காதல் சாகசங்களை சொல்லி மெய்சிலிர்த்துக் கொள்வதை ஏக்கத்துடன் இருளாண்டி கேட்டுக் கொண்டிருப்பான். அவனுக்குத்தான் இதுவரை எந்தப் பொண்ணும் சிக்கவில்லையே!

"மச்சான் நீ கவலைப்படாத... உன்ன மாதிரி ஆளுக்குத்தான் தமன்னா மாதிரி பொண்ணு கிடைக்கும். சினிமாவிலேயே காட்டுறானே, நீ பார்க்கலையா...?" என்று இருளாண்டியை நண்பன் ஒருவன் ஆறுதல் படுத்தினான்.

அடுத்த நாள் மாலை ஆறரை மணி இருக்கும். பொறுக்கி புளிய மரம் இருந்த பிரதேசத்தை இருள் விழுங்கிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து வந்த பெண்களோடு இருளாண்டியின் நண்பர்கள் காதல் பேசிக் கொண்டு நகர்ந்து விட்டனர். அவன் மட்டும் மரத்தில் சாய்ந்தபடி பீடியைப் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது சினிமாவில் வருகிற நாயகியைப் போன்ற ஒரு அழகிய பெண் அந்த வழியே வந்தாள். இருளாண்டி அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கடந்த போது அவள் இருளாண்டியை பார்த்து புன்னகை உதிர்த்தாள். முதல் தடவையாக அவனைப் பார்த்து தமன்னா மாதிரி ஒரு பெண் சிரித்ததும் அவனுக்குள் ஆயிரம் வோட்ஸ் மின்சாரம் இறங்கிய மாதிரி உடல் வெட வெடத்துப் போனான். உடல் மரத்துப் போனமாதிரி உணர்ந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை. சில நிமிடங்களில் இயல்புக்கு திரும்பியபோது அவள் அந்த இடத்தைக் கடந்து சென்றிருந்தாள்.
முத்து பூசாரி
நடந்ததை அடுத்த நாள் தன் புளியமர நண்பனிடம் சொன்ன போது,
"அப்படியா? அவதாண்டா உன் நாயகி! விடாதே, பின் தொடர்ந்து போ!" என்று சொல்லி இருளாண்டியை உசுப்பேற்றி விட்டார்கள்.

மறுநாள் இருளாண்டி அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். முதல் நாள் மாதிரியே தேவதையாக வந்தவள், இருளாண்டியை பார்த்து சிரித்து விட்டு நகர்ந்தாள். அந்த மந்திரப் புன்னகைக்கு கட்டுப்பட்டவன் மீண்டும் சுய நினைவுக்கு வந்த போது அவள் அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்தாள். இந்தச் சம்பவம் மூன்று நாட்களாகத் தொடர்ந்தது. எப்படியாவது அவளோடு பேசிவிட வேண்டும் என்று இருளாண்டி ஒரு முடிவெடுத்து விட்டான். பிறகு அவன் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் வந்த அவளை பின் தொடர்ந்தான். ஆனாலும் அவளது நடைக்கு இருளாண்டியால் ஈடுகொடுக்க முடியவில்லை. மூச்சு வாங்கியது. அப்போது அந்த அழகியை அழைத்துப் போக, அவளது அம்மாவாகத்தான் இருக்க வேண்டும், டோர்ச் லைட்டோட வர, இருளாண்டி புதரில் மறைந்தான். 'ச்சே இன்னைக்கும் முடியலையே' என்று ஏக்கப் பெருமூச்சு விட்ட இருளாண்டி அடுத்த நாள் அவளை ஓடிச் சென்றாவது மடக்கி விட வேண்டும் என்று எண்ணியவாறே வீடு நோக்கி நடந்தார்கள்.

அடுத்த நாள் அதே நேரத்தில் அவள் வந்தாள். இருளாண்டி அவளை பின் தொடர்ந்தான். இருளாண்டியின் நடையிலும் வழமையை விட வேகம் இருந்தது. இறப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த அந்தப் பகுதியில் இந்த இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வழமைக்கு மாறாக அன்றைய மாலை சூழலில் ஒரு அமானுஷ்ய தோற்றம் நிலைகுத்தி நின்றது. தூரத்தில் ஒலித்த சாக்குருவியின் கூச்சல் கூட இருளாண்டியின் காதில் விழ வாய்ப்பில்லை. அப்போது இருளாண்டி அவளை நெருங்கி விட்டிருந்தான். அவள் இப்போது தொட்டு விடும் தூரத்தில்... தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளது கரங்களை பின்னாலிருந்து தொட்டான். அப்போது அவன் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அந்த செக்கனில் இருளாண்டியை அவள் திரும்பிப் பார்த்த போது அவன் அலறினான். அழகியா அவள்! பதினைந்து நாள் மண்ணுக்குள்ளிருந்த பிரேதத்தின் முகம் எவ்வளவு கோரமாகத் காட்சியளிக்குமோ அப்படியிருந்தது அவளது முகம்! இதைப் பார்த்து பயமும் அதிர்ச்சியும் அடைந்த அவன் அப்படியே திரும்பி ஓடத் தொடங்கினான். காற்று வேகம், மனோ வேகம் என்பார்களே, அப்படி ஒரு ஓட்டம்! அவன் உடல் சில்லிட்டு மறத்துக் கொண்டு வந்தது. ஆனால் அடுத்த சில விநாடிகளில் அவன் ஒரு பாறையில் மோதி விழுந்து மூர்ச்சையாகிப் போனான். பாதையில் மயங்கி மண்டையில் இரத்தம் வழிந்தபடி கிடந்த அவனை ஊர்வாசிகள் தூக்கிச் சென்று வைத்தியசாலையில் சேர்த்தார்கள். பிறகு இரண்டு நாளில் வீடு வந்த அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அவனை ஏதோ ஒரு மாய சக்தி வழிநடத்துவது மாதிரித் தெரிந்தது. அவன் தன் கட்டுப்பாட்டில் இருப்பது போலத் தோன்றவில்லை.

வீட்டார் மைபோட்டுப் பார்த்தார்கள். அவனை ஒரு தீய சக்தி முழுமையாக ஆக்கிரமித்திருப்பது  தெரியவந்தது. அவனைப் பிடித்திருக்கும் அந்த தீய சக்தியை விரட்டுவதற்கு முத்துப் பூசாரி வரவழைக்கப்பட்டார். எத்தனையோ பேய்களைப் பிடித்து தம் முன்னால் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்க வைத்த முத்துவுக்கு இந்தப் பேய் விசயம் சாதாரணமாகவே தெரிந்தது.

தனது குல தெய்வமான சுடலை மாடனை நினைத்து உடுக்கை கையிலெடுத்தவர் பேயாட்டம் போடத் தொடங்கினார். சில நிமிடங்களில் இருளாண்டியும் ஆடத் தொடங்கினான். ஊர் மக்களும் பேயோட்டும் படலத்தைப் பார்க்கக் கூடிவிட்டதால் பூசாரியின் சத்தமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

"நான் தாண்டா பியசீலி. வாழும் வயசுல போய் சேர்ந்துவிட்டேன். அதுதான் என் ஆசையை நிறைவேற்றி வைக்க இருளாண்டியை அணுகினேன். ஆனால் அவன் என்னைத் தொட்ட போது என்னோட சுய உருவத்தைக் காட்ட வேண்டியதாகப் போய்விட்டது. அது மட்டும் அப்படி நடக்காமல் இருந்திருந்தால் நான் அவனோட வாழ்ந்திருப்பேன்" என்று இருளாண்டியின் உடம்பிலிருந்த ஆவி பேசத் தொடங்கிய போதுதான் எல்லோருக்கும் உண்மை புரிந்தது. இருளாண்டி ஒரு பேயைக் காதலித்த விசயத்தை தெரிந்து கொண்டபோது அவனின் நண்பர்கள் குலை நடுங்கிப் போனார்கள்! பியசீலி என்பவள் சில வருடங்களுக்கு முன்னால் பஸ்சில் அடிபட்டு செத்துப் போனவள். சில காலத்தின்பின் அவள் அம்மாவும் இறந்து விட்டாள்.

முத்துப் பூசாரி விஷயத்தின் ஆழ அகலங்களை எடை போட்டு தெரிந்து கொண்டதும் தன் மந்திர உச்சாடனங்களை வேகப்படுத்தி ஆவியைச் சுற்றி வலை விரிக்க ஆரம்பித்தார். ஒரு பூசாரி வியூகங்கள் வகுக்கும்போது அதில் இருந்து தப்ப நினைக்கும் தீய சக்தியும் பதிலுக்கு பூசாரிக்கு எதிராக வியூகம் வகுக்கும். ஓடுபவனை பிடிக்க துரத்துவனுக்கு சுலபம் என்பார்கள். அதுபோல ஓடி ஒளிய நினைக்கும் ஒரு தீய சக்தி எவ்வளவு சக்தி கொண்டதாக இருந்தாலும், எலும்பும் சதையும் கூடவே ஆன்மாவையும் கொண்ட மனிதனுக்கு பூமியில் நிற்கையில் பலம் அதிகம். ஆவிகளுக்கு இது தெரியும் என்பதால்தான் முதலில் சண்டித்தனம் செய்யும் துஷ்ட ஆவிகள் இறுதியில் மண்டியிட்டு விடுகின்றன. இதற்கமைய, முத்துப் பூசாரியும் தன் பலத்தை அறிந்திருந்ததால் அந்த ஆவி தன் அழிச்சாட்டியத்தை படிப்படியாகக் குறைத்து ஒரு உடன்படிக்கைக்கு வந்தது.
பூசாரியும் அந்த ஆவி கேட்ட அனைத்து உணவுகளையும் மற்றும் சாராயத்தையும் சாப்பிடக் கொடுத்தார். ஆவி ஒரு வழியாக அடங்கி வழிக்கு வந்தது. எனினும் முத்துவுக்கு ஒரு சந்தேகம்.

"ஒருவேளை நீ போவதாக சொல்லிவிட்டு பிறகு இங்கே வேறு யாரையாவது பிடித்து விட மாட்டாய் என்பதில் என்ன நிச்சயம்? நான் எப்படி நம்புவது?" என்று கேட்டார்.

"அப்படியெல்லாம் பொய் சொல்லி விட்டு இங்கேயே கிடக்கிற எச்சில் பிசாசு அல்ல, நான் கொடுத்த வாக்கைப் காப்பாத்துகிற பொம்பளைடா...! நான் இவனை விட்டு போகும் போது ஊர் தெரு முனையில் நிற்கும் கருப்பு சாமி சிலை 'ஊ...' என்று சத்தம் போடும். அப்போ நம்புடா" என்று கத்தியபோது அந்த நொடியில் ஆவேசமான பூசாரி, அந்த ஆவியைப் பிடித்துப் போத்தலில் அடைத்தார். பிறகு அனைத்து பரிகார பூஜைகளையும் முடித்து விட்டு ஊர் எல்லைக்குச் சென்று ஆவிக்கு சமாதிகட்ட முனைந்த போது அந்த கருப்பு சாமி சிலை 'ஊ' என்று சத்தம் வைத்தது. அதைக் கெட்டதும் ஆவியின் கதை முடிந்து விட்ட சந்தோசத்தோடு பூசாரி ஊர் திரும்பினார்.

Tuesday, August 11, 2015

தேவதாசி வரலாறு -11


அருள் சத்தியநாதன்

'தேவதாசி முறை நம்முடைய நாகரிகத்துக்கும் கலைப் பெருமைக்கும் பெருங்களங்கமாய் இருக்கிறது. பெண்கள் விலங்குகளிலும் இழிவாய் நடத்தப்படுகின்றனர். விபசாரத்துக்கென்றே ஒரு பெண் சமூகத்தை சிருஷ்டித்துக்கொண்டு வாழ்ந்த - வாழும் எமது ஆணுலக மனப்பான்மையை என்னவென்பது?'

ந்து சனாதன மரபு, பெண் ஒடுக்குமுறையைக் கருத்தியல் ரீதியிலும் யதார்த்த சமூகக் கட்டமைப்பிலும் தீவிரமாகச் செயற்படுத்தி வந்திருக்கிறது. இந்து சமூக அமைப்பில் பேணப்பட்டு வந்த தேவதாசி முறை இந்தப் பெண் ஒடுக்குமுறையின் கொடூர வடிவமாகும். தமிழ்நாட்டுக் கோயில்களில் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நடன மங்கையர்களை தேவதாசிகள் என்று வழங்குவர். பொது வழக்கில், இவர்கள் தாசிகள், விபச்சாரிகள் என்றே கூறப்பட்டார்கள். புகழ் வாய்ந்த ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய தேவமாதர்களின் படை ஒன்றிருந்தது.

"சமய சாஸ்திரங்களின் பேராலும், கடவுளின் பேராலும் பகிரங்கமாய் விபசாரம் செய்யும் பெண் சமூகம் 'புண்ணியபூமி' என்று போற்றப்படும் இந்நாட்டில்தான் உண்டு. இதைப்போல் உலகில் வேறெங்கும் காண முடியாது என்றே நம்புகிறேன். தேவதாசிமுறை நம்முடைய நாகரிகத்திற்கும் கலைப்பெருமைக்கும் பெருங்களமாய் இருக்கிறது. இந்நாட்டில் பெண்களின் பெருமைகளைப் பற்றி வானளாவப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறை வேறுவிதமாயிருக்கிறது. பெண்கள் விலங்குகளிலும் இழிவாக நடத்தப்படுகின்றனர். விபசாரத்திற்கென்றே ஒரு பெண் சமூகத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு வாழ்ந்த - வாழும் எமது ஆணுலகத்தின் மனப்பான்மையை என்னவென்பது?" என்று மூவலூர் ஆ.ராமாமிர்தத்தம்மாளின் 'தாஸிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற நாவலின் முன்னுரையில் கூறுகிறார் செ. வெள்ளைத்துரைச்சி நாச்சியார்.

"தேவதாசிகள் என்று ஒரு கூட்டமே, ஆரிய பார்ப்பனர்களிடமிருந்துதான் உற்பத்தியாகி இருக்க வேண்டுமென்று நூலாசிரியர் ஓரிடத்தில் சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் சிந்திக்க வேண்டிய உண்மையாகும். ஆரிய பார்ப்பனரது ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள 'நியோய விவாக' முறையைச் சிறிது ஆராய்ந்தால், இந்நாட்டில் தங்கள் கூட்டத்தைப் பெருக்குவதற்காக மறைமுகமான பல விபசாரமுறைகளை ஆரியர் இந்நாட்டில் ஏற்படுத்திவிட்டார்கள் என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும்" என்று இந்நாவலின் புகழுரையில் குறிப்பிடுகிறார் திருமதி. குருசாமி குஞ்சிதம் அவர்கள்.

"ஓர் இலக்கிய சிருஷ்டி என்ற வகையில் 'தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற இந்த நாவல் பெரும் கணிப்பிற்குரியதல்ல. எனினும், தாசியாகவே வாழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதால், ஒரு சமூக ஆவணம் என்ற வகையில் இது பெரும் அக்கறைக்குரிய ஒன்றாகும்" என்கிறார் அறிஞர் கமில் ஸ்வலபில். இழிவுபடுத்தப்பட்ட இந்தக் கணிகையர் குலத்திலிருந்து எழுந்த இலக்கிய வெளிப்பாடுகள் இன்று ஆழ்ந்த ஆராய்வுக்குள்ளாகியுள்ளன. இதன் அற்புத வெளிப்பாடாக, தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னனான பிரதாப சிம்மனின் அரசவையில் பெண் புலவராகவும் நடனக் கணிகையாகவும் இசைஞானமிக்கவராகவும் பிரபலம் பெற்றிருந்த முத்துப்பழனி (1730 - 1790) இயற்றிய 'ராதிகா சாந்தவனம்' என்ற சிருங்கார ரசம் ததும்பும் தெலுங்குக் காவியம் அற்புதமான காதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது.

'எதுவும் வழிந்து ஒழுகிவிடாமல், விளிம்பிலே ததும்பிக்கொண்டிருக்கும் வகையில் நவரசங்களின் அற்புதமான கலவையில் உருவான இலக்கியம்' என்று மதிப்பிடுகிறார், இக்காவியத்தை மறுமதிப்புச் செய்த கணிகை பெங்களுர் நாகரத்தினம்மாள்.

ஆண் புலவர்கள் தமது சிருஷ்டிகளை ஒரு பெண் கவிக்குச் சமர்ப்பணம் செய்வது வழக்கில்லையாயினும், அக்காலத்தில் பல்வேறு ஆண் கலைஞர்கள் தமது படைப்புகளை முத்துப்பழனிக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை அவரது மேதைமையைப் புலப்படுத்துவதாகவே உள்ளது. ஆனால், ஆந்திராவின் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், தெலுங்கின் முன்னோடி நாவலாசிரியருமான கந்துகூரி வீரேசலிங்கம் (1848 - 1919) மிகக் கடுமையான வார்த்தைகளில் முத்துப்பழனியின் 'ராதிகா சாந்தவனத்தை' நிராகரித்தார்.

'இந்த முத்துப்பழனி ஒரு பரத்தை' என்றும், 'இந்நூலின் பல பகுதிகள் ஒரு பெண்ணின் வாயிலிருந்து வந்தது ஒருபுறமிருக்க, அவற்றை ஒரு பெண் தனது செவிகளாலேயே கேட்கக் கூட உகந்தது அல்ல, சிருங்கார ரசம் என்ற போர்வையில், ஒரு வெட்கமும் இல்லாமல், பாலியல் பற்றிய பச்சையான வர்ணனைகளால் தனது கவிதைகளை நிறைத்திருக்கிறார்' என்றும் அவர் எழுதினார். 'ஒரு விபசார தாசிகுலத்தில் பிறந்த ஒருவரிடமிருந்து இம்மாதிரிக் கவிதைகள் வருவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை' என்றும் இந்த உன்னதக் கவிமேதையின் மீது தீர்ப்பெழுதினார் அவர்.

முத்துப்பழனியின் சிருங்காரப் பிரபந்தமான 'ராதிகா சாந்தவனத்தின்' கவித்துவ மேன்மையை நிலைநிறுத்த பெங்களுர் நாகரத்தினம்மாள் முன்வைத்த வாதங்கள் ஆணித்தரமானவை. ஆங்கிலேயர் ஆட்சியில் முத்துப்பழனியின் காவியத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீண்ட போராட்டத்தின் பின்னரே 1947 இல் நீக்கப்பட்டது.

முத்துப்பழனியின் ஒரு கவிதை இது:

இதழ்களில் ஈரமிடு
அவளின் இதழ்களை
உன் நாவின் முனையால்
ஈரமிடு
அழுந்தக் கடித்து
அவளை அச்சுறுத்தி விடாதே

அவளின் கன்னங்களில்
மோஹனமாய் முத்தமிடு
உனது கூர்மையான
நகங்களால் அவளைக்
கீறிவிடாதே

மெதுவாய் மிருதுவாய்
சம்போகம் செய்
பலவந்தப்படுத்தி
அவளைப் பயமுறுத்திவிடாதே
இதெல்லாவற்றையும் உனக்குச் சொல்ல
நான் ஒரு முட்டாள்
அவளைச் சந்தித்து
அவளோடு நீ காதல் போர்
நிகழ்த்தும் போது
நான் சொன்னவற்றையா
நினைத்துப்பார்க்கப்போகிறாய்
என் அன்பே!

இந்துப் பாரம்பரியத்தில் கல்வியை மேற்கொள்ளவும், நடனம், இசை போன்ற லலித கலைகளைப் பயிலவும், இலக்கியம் பயிலவும் சாதாரண பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், கணிகையர் குலத்துப் பெண்களுக்கே இந்த வாய்ப்புகள் இருந்தன. மேட்டுக்குடியினரின் சிருங்கார சுகானுபவங்களுக்கு விருந்தளிக்கப் பிறந்த இவர்கள் லலித கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக விளங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிறந்த பெண் எழுத்துக்கள் இந்தக் கணிகையர் குலத்திலிருந்தே உற்பவித்துள்ளன.

அஞ்சுகம் அம்மையாரின் கதாசாரத்திரட்டை எடுத்துக் கொண்டால், இந்து சனாதன மரபை எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு விட்ட அஞ்சுகம்,

கணவன் - நாயகன் இறந்ததும் அவரோடு அவரது பத்தினியும் உடன்கட்டை ஏறுவதே உத்தம பத்தினிக்கு அழகு என்றும், அதனைக் கணிகைக்குலமும் கைகொண்டொழுக வேண்டும் என்றும் பல இடங்களிலே வலியுறுத்துகிறார்.

'காதலரி றப்பிற் கனையெரிபொத்தி
யூதுலைக்குருகி னுயிர்த்தகத்தடங்கா
தின்னுயிரீவ ரீயாராயி
னன்னீர்ப் பொய்கையி னளியெரிபுகுவர்
னளியெரி புகா அராயினன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்'
என்பது மணிமேகலை.

மேற்கூறிய இலக்கணங்கொண்டு ஒழுகாத மகளிர் சுவாலித்தெரிகின்ற கொடு நரகடைந்து துன்புறுவதென்க. அல்லதூ உம் தீயொழுக்குடையராகிய மகளர் நாய், நரி, பேய், புலி, கூகை, பன்றி, மலப்புழு ஆகிய இழிந்த பிறப்புகளை எய்துவரென நீதிநூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

"அஃதன்றி, உத்தம இலக்கணமுடையராகிய கற்புடை மாதர் நாயகனிறந்தவப் யமதூதரினின்றும் நீங்கி, கணவனோடு சுவர்க்கலோகப் பிராப்தி பெறுவரென்றும், நாயகன் மகாபாதகனாயினும் அவனோடு உடன்கட்டை ஏறினவள் கற்புடையாளெனக் கண்டவிடத்து, யமன் அவனை விடுத்தோடுவன் எனவும் கூறுகின்றன" என்று அஞ்சுகம் மிகத் தீர்க்கமாகக் கூறுகிறார்.

கணவனுடன் அக்கினிப்பிரவேசம் செய்யாதுவிட்டால், ஏற்படக்கூடிய இழிபிறப்புகள் பயமுறுத்தக்கூடியதாயும், உடன்கட்டை ஏறிவிட்டால் சொர்க்கலோகம் போகலாம் என்று கூறுவது நியாயமற்ற வஞ்சக ஆசைவலை போன்றுமே தோன்றுகிறது.

இந்து சனாதனப் புராணப்புனைவுகளை மெய்யென்று நம்பிவிட்ட பாங்கு இந்நூலின் அனைத்துப் பக்கங்களிலும் பளிச்சிடுகிறது.

"இப்பிரபு (க.சின்னையாபிள்ளை) என்னை அபிமான ஸ்திரீயாய் மதியாது, சொந்தப் பாரியாகவே மதித்து வந்தமையால், யான் அவருக்கு முன் இவ்வுலக வாழ்க்கை விட்டு நீங்க வேண்டுமென்னும் பேரவாப் பூண்டிருந்தேன். சிவபெருமான் அப்பிரபுவையே முன்னர் தமது திருவடியிற் சேர்த்துக்கொண்டார்" என்று எழுதும் அஞ்சுகம், அப்பிரபு இறந்ததும், அதிர்ஷ்டவசமாக உடன் கட்டை ஏறிவிடாமல் நிதானித்து,

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந்தான் முந்துறும்'
என்ற திருக்குறள்வழி அமைதிகண்டமை நமது நற்பேறாகும்.

தேவதாசி மரபை இல்லாதொழிக்கும் புரட்சிக் குரல்கள் தமிழகத்தில் பின்னாளில் வேகம் பெற்று, அம்மரபு சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆனால், வலிமை வாய்ந்த இந்து சனாதன மரபிற்குப் பலியாகிப்போன அஞ்சுகத்தின் தமிழ்ப் புலமை வரலாற்றில் அவருக்குத் தனித்துவமான இடத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

இன்று புத்தெழுச்சி பெற்றுவரும் மலையக இலக்கியப் பாரம்பரியத்தின் மூத்த தலைமகளாக அன்னை அஞ்சுகம் நிலைபெறுகிறார். விளிம்புநிலை சமூகத்தின் ஆறு தலைமுறை வரலாற்றை எழுதிவைத்துவிட்டுச் சென்ற இம்மாதரசி, வாயிழந்துபோன மலையகச் சமுதாயத்தின் உயரிய அங்கீகாரத்திற்கரிய மகத்தான இலக்கிய ஆளுமை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Sunday, August 9, 2015

குடி குடியைக் கெடுக்கும்!


மணி  ஸ்ரீகாந்தன்

னிதனைப் பிடித்தாட்டுகிற ஒரு துஷ்ட தேவதைதான் போதை. இது மதுசாரத்தினாலும், மதசாரத்தினாலும் ஏற்படுகிறது. 'மது குடித்தால்தான் போதை வரும் மதம் சொன்னாலே போதை வரும்' என்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சொல்விட்டுச் சென்றிருக்கிறார். ஆனாலும் இன்றைய சமுதாய சீரழிவுக்கு மது பாவனையே மூலகாரணமாக விளங்குகிறது. போதையில் பயணம் பாதியில் மரணம், மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும் கேடு என்று என்னதான் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்தாலும் மது விற்பனை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கு இன்றைய இளைய தலைமுறையினரே காரணம் என்று மதுசாரத்திற்கு எதிரானவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

மனிதனுக்கு போதையை ஏற்றி பாதையை மாற்றிப் போடும் மதுசாரத்தை 'ஆல்கஹால்' என்று குறிப்பிடுகிறார்கள். இது நாம் பருகும் குளிர்பானங்களிலும் ஒரு அளவு சேர்க்கப்படுகிறதாம். அதனால்தான் சில குளிர்பானங்களைக் குடித்தால் கொஞ்சம் கிக்காக இருக்கும். அதேபோல இந்த 'ஆல்கஹால்'லின் அளவு பியரிலும், சாராயத்திலும் வெவ்வேறு அளவுகளில் அமைந்திருக்கிறது. இப்போ விசயம் என்னவென்றால் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் பியர் குடிப்பதை ஃபேஷன் கலாசாரமாக கையிலெடுத்திருப்பதுதான். குறிப்பாக தோட்ட மற்றும் கிராம இளைஞர்கள் இந்த பியர் கலாசார சாக்கடைக்குள் வீழ்ந்து எழ முடியாமல் கிடக்கிறார்கள். இந்த இளைஞர்களின் பார்வையில் 'பியர் ஒரு மதுபானமே கிடையாது. அது ஒரு உற்சாக பானம்' என்றுதான் கருதுகிறார்கள். இதில் பெரிய வெட்கக்கேடு என்னவென்றால், இந்த தற்குறிகளின் பேச்சை நம்பும் சில பெற்றோர்களும் பியர் கலாசாரத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்பதுதான். சில நாட்களுக்கு முன்பாக எனது நண்பரைப் பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். காலை பத்து மணியைக் கடந்த பின்பும் 'அவர் உறங்கிக் கொண்டிருந்தார். நல்லா கல்யாண வீட்டுல குடிச்சிட்டு வந்து தூங்கிறான்' என்று நான் சொன்னதும் என்மீது அவரின் அம்மா கோபப்பட்டார். "ச்சே நீங்க என்ன தம்பி என் புள்ளய அப்படி சொல்றீங்க! அவன் என்னைக்கு குடிச்சிருக்கான்?" என்று திருப்பிக் கேட்டபோது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு அந்த அம்மா இன்னொரு விடயத்தையும் சொன்னார்.
"மத்த பயலுங்க மாதிரி சாராயம், பீடியா குடிக்கிறான்? பியர் மட்டும்தான் அதுவும் ஏதாவது விஷேசத்துக்குப் போனாதான்" என்று அந்த தாய் நட்சாட்சிப் பத்திரம் கொடுத்தபோது அத்தாயின் முகத்தில் பளிச்சிட்ட பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே! பியரும், சாராயமும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை நான் எப்படி இந்த பாமர மக்களிடம் புரிய வைக்க முடியும் என்பதை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே நடந்தேன். எல்லாக் குடிமகன்களும் பியரில் ஆரம்பித்துதான் சாராயம், கள்ளச்சாராயம் என்று போகிறார்கள் என்பதை இவர்களுக்கு எப்படித்தான் புரியவைப்பது?

சிறிது தூரம் வந்தப் பிறகு ஒரு குடிமகன் வீதியின் ஓரத்தில் மல்லாக்கப் படுத்திக்கிடந்தார். அவர் பக்கத்தில் ஒரு மண்சட்டி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வெள்ளைக் கொடியும் நாட்டப்பட்டிருந்தது. அது அந்த ஏரியா காவாலிகளின் வேலை என்பதை புரிந்து கொண்டேன். அந்த மனிதரின் பக்கத்தில் சென்று அவரைத் தட்டி எழுப்பினேன் எழும்பவில்லை. நானும் விடவில்லை. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு அவர் எழும்பினார். நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். "நீ எப்படியப்பா குடிக்கப் பழகினாய்?" என்று கேட்டேன். அதற்கு அவர்,

"ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நண்பர்களோட சேர்ந்து பியர் பார்ட்டி போடுவோம், அதுவே பழகிப்போக ஒருநாள் பியர் கிடைக்காம சாராயத்தை வாங்கி குடிச்சோம். பிறகு அதுவே பழகிடுச்சசு. இப்போது கல்யாணமாகி குழந்தை குட்டின்னு ஆகிடுச்சி. இப்போது சாராயம் வாங்கி குடிக்கப் பணம் போதாது. அதுதான் கசிப்புக்கு வந்துட்டேன்" என்று அந்தக் குடிமகன் தனது வரலாற்றை ஒளிவுமறைவின்றிச் சொன்னார். கதையைக் கேட்டுவிட்டு நகர்ந்தேன். உண்மையும் அதுதான்.

'களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் குளிர்த்தானை துந்துரி இயற்று' என்ற குறளில் வள்ளுவர்,

'குடிபோதையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது என்பது நீருக்குள் மூழ்கியவனை விளக்குக் கொண்டு தேடுவதற்கு சமம்' என்று எடைபோட்டுச் சொல்கிறார். அதனால் அந்த குடிமகனுக்கு தெளிவுரை சொல்ல வேண்டிய தேவையும் எனக்கு இருக்கவில்லை.

மலையக இளைஞர்கள் பியரை ஒரு கௌரவத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள் என்பது ஒரு மோசமான நிலை. அந்தக் காலத்தில் சிகரெட் கௌரவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. அறுபது எழுபதுகளில் கையில் ஒரு ஆங்கில தினசரியும் மேல் பொக்கட்டில் சிகரெட் பெக்கட்டும் கையில் புகையும் சிகரெட்டுமாக அரசு அலுவலகத்துக்குள் நுழைந்தால் போன காரியத்தை எளிதாக முடித்துக்கொண்டு வந்து விடலாம் என்று டிரவுசர் போட்டவர்கள் சொல்வார்கள். இன்று இந்த பாச்சா பலிக்காது. ஆனால் சிகரெட் விட்ட இடத்தை டின் பியர் பிடித்துக்கொண்டிருப்பதாக கருத வேண்டியிருக்கிறது.

"நேற்று கல்யாண வீட்டுக்குப் போய் பத்து மணிக்கு பியர் குடிக்க ஆரம்பிச்சு பன்னிரெண்டு மணிக்குத்தான் முடிச்சோம். வீட்டுக்கு வந்து விடிய விடிய வாந்தி எடுத்திட்டேன்" என்று இளைஞர்கள் பெருமையாக பேசி நெஞ்சு நிமிர்ந்துவதைப் பார்த்து இருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் ஆண்மையின் சின்னமாக எப்படி காளை அடக்குதலும், மல்யுத்தமும் இருந்ததோ அந்தக் காலம் போய் இன்று யார் பியரை மூக்கு முட்டக் குடிக்கிறார்களோ அவர்களே ஆண் மகனாகப் பார்க்கப்படும் சீரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட' என்ற அங்கீகாரம் ஊரில கிடைக்க வேண்டும் என்றால் பியர் கட்டாயம் குடிக்க வேண்டுமாம். அப்போதுதான் தமக்கு ஊரிலுள்ள இளைஞர்கள் அணியில் கௌரவம் கிடைக்குமாம். நான் சொல்வது வெறும் ரீல் என்றால் இளைஞர்கள் சிலரைக் கேட்டுப் பாருங்கள். உண்மை தெரியும்!

ஒருநாள் வழியில் எனக்குத் தெரிந்த ஒரு நபரைக் கண்டேன். அவரிடம் 'முன்னேஸ்வரத்துக்கு போனீங்களே பயணம் எப்படி? என்று கேட்டேன்.

"ரொம்ப ஜாலியா இருந்துச்சு. ஆனா கீமன்ராஜூதான் பியர் குடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டான். அதனால் அவன் தலையில் பியரை ஊத்திட்டோம். பொடியன்மாருங்கன்னா பியர் குடிக்கனும்தானே! இவனையெல்லாம் யாரு மதிப்பாங்க, என்ன மனுஷன்!" என்று அவர் சொல்லிக்கொண்டே போனார். எனக்கு தலை சுத்தியது. என்னடா இது ஊரில மரியாதை கிடைக்க வேண்டுமானால் பியர் குடிக்கனுமாமே! பியர் டின்கள் பல விதமான வண்ணங்களில் கண்ணைக் கவரும் விதத்தில் சுப்பர் மார்க்கட் மது விற்பனை நிலையங்களிலும், சாதாரண மதுக்கடைகளிலும் கிடைக்கின்றன. விலை இருநூறு ரூபாவுக்குத்தான் வரும். கையடக்கமானது, கைப்பயிலும் ஏன் காற்சட்டை பையிலும் வைத்துக் கொள்ளலாம். கீழே விழுந்தாலும் உடையாது. எனவே வாங்குவதும் எடுத்துச் செல்வதும் இலகுவானது. பாடசாலை மாணவர்கள் சிலரும் இவ்வகையான பியர் டின்களை வாங்கி தமது புத்தகப் பைகளிலும் எடுத்துச் சென்று புதர் மறைவில் வைத்து குடித்த போது மாட்டிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆனாலும் மலையகத்தைச் சேர்ந்த தாய்க்குலங்கள் பியரை குளிர்பான வகையில் சேர்த்து விட்டதால் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அதனால் வளரும் தலைமுறை பியரை 'சீமைப் பாலாக' சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய வீட்டு வீசேஷங்களிலும் பியர் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நம்முடைய பொடியன்களுக்கு என்று பெட்டி பெட்டியாக பியர்களை ஆயிரங்களை கொட்டி வாங்கி வைத்துவிடுவது தோட்டங்களிலும் கிராமங்களிலும் வழக்கமாகி வருகிறது.

ஒரு பியர் டின் எட்டு சதவீத செறிவைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் முன்னர் அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனையில் உள்ள பியர் பானங்களை எட்டு சதவீத மதுசாரத்தைக் கொண்டதாக இருக்கவில்லை. சுமார் 10, 12 ஆண்டுகளாகத்தான் எட்டு சதவீத மதுசாரம் கொண்ட பியர் சந்தைக்கு வந்தது. ஒரு இளைஞனுக்கு போதுமான 'கிக்'கைக் கொடுக்கக் கூடியது இந்த பியர். இரண்டு டின்களை காலி செய்தால் நல்ல போதையைத் தரும். மதுவுக்கு பழகியவர்கள், ஒரு டின் பியரும் கால் போத்தல் சாராயமும் அருந்தினால், குறுகிய நேரத்தில் குறைந்த செலவில் நல்ல கிறக்கத்தை அடையலாம் என்று அடித்துச் சொல்கிறார்கள். இந்த ஆபத்தை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். டின் பியர் எளிதில் கிடைப்பதும், அட பியர்தானே குடிச்சிட்டுப் போறான் என்ற பெற்றோரின் சமூகத்தின் அலட்சியமும், மதுவுக்கு அடிமையாகும் வழியை இளைஞர்களுக்கு காட்டுவதாகவே அமைகிறது என்பதைப் பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இங்கே நாம் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறோம். இலங்கையில் எல்லாக் காலமும் மது விற்பனை இருந்து வருகின்ற போதிலும், இப்போது போல மது இலகுவில் கிடைக்கும் பொருளாக முன்னெப்பொழுதும் இருந்ததில்லை. மது என்பது சுலபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு பொருளாக இருக்கக் கூடாது. புகைப்பதற்கு எதிராக தீவிரமும் தடைகளும் மது விடயத்தில் கைக்கொள்ளப்படுவதில்லை. குறைந்த பட்சமாக பியரை டின்களில் விற்பனை செய்யும் இன்றைய வழக்கத்துக்கு அரசாங்கம் தடைபோட வேண்டும். பியரை கண்ணாடிப் போத்தலில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். குடிப்பழக்கத்துக்கு பியரே முகவரியாக இருப்பதால் பியரை டின்னில் அடைத்து விற்பதை அரசு தடை செய்வது அவசியம். நீங்கள் கிராம மற்றும் தோட்டப் பாதைகளில் நடந்து சென்றால் ஆங்காங்கே காலி பியர் டின்களைக் காண முடியும். இந்த அலுமினிய டின்களை சேகரித்து விற்பதற்கே பலர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பரபரப்பாக விற்பனையாகி வருகிறது டின்பியர். இந்த டின்பியர் கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டியது அரசின் கடமை.

Wednesday, August 5, 2015

சினிமானந்தா பதில்கள் -25


காஞ்சனா 2 போல் அரண்மனை 2ம் வருகிறதாமே?
லக்ஷான், யாழ்ப்பாணம்

தமிழ் சினிமாத்துறையில் ஒரு பழக்கம் உண்டு 'பின்பற்றுதல்' என்ற அந்த பழக்கம். இதில் உள்ளவர்களை இறுக்கிப்பிடித்துள்ளது. முன்னர் நகைச்சுவை படங்கள் ஊர்வலம் நடந்தது இப்போது பேய்ப்படங்கள் கொத்தாக வருகின்றன. இந்த பின்பற்றுதலில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது 'இரண்டாம் பாகம்' என்ற மோகம்.
'நான் அவன் இல்லை', 'அமைதிப்படை', 'பில்லா', 'சிங்கம்', 'காஞ்சனா|' ஆகியவை அவ்வப்போது வெளியான இரண்டாம் பாகங்கள்.

கமலின் 'விஸ்வரூபம்', தனுஷின் 'வேலை இல்லா பட்டதாரி', 'திமிர', 'கோ',  'ஜித்தன்', 'எந்திரன்', 'சண்டைக்கோழி', 'பையா', 'டார்லிங்', 'இந்தியன்', 'பருத்திவீரன்', 'மங்காத்தா', 'அமரன்', 'என் ராசாவின் மனசிலே', 'மணல் கயிறு' ஆகியவை இரண்டாம் பாக தயாரிப்பில் உள்ளன. போதாக்குறைக்கு சிங்கம், காஞ்சனா ஆகியவை மூன்றாம் பாகத்தை நோக்கி நகர்கின்றன.

அமெரிக்காவின் ‘FAST AND FURIOUS’ 7 ஆம் பாகத்திலும் ‘FINAL DESTINATION’ 5 ஆம் பாகத்திலும் சக்கை போடு போட்டுள்ளன. தமிழிலும் 5,6 என்று....?


சர்ச்சைக்குரிய படங்களை எடுத்தாரே டைரக்டர் சாமி. இப்போது அவர் என்ன செய்கிறார்?
கவிதா, பாதுக்க

சர்ச்சையில்லாத படங்களை எடுத்து வருகிறார் சாமி. ஆனால் சர்ச்சையை ஏற்படுத்தும் படங்களை மற்றவர்கள் எடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை படமாக எடுக்கிறார் ஒரு அமெரிக்க இந்தியர்.
இவரது பெயர் ராக் அமித்குமார். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர். அவரது முதல் படம் ‘UNTREEDOM’ லெஸ்பியன் உணர்வைப் பற்றிச் சொல்கிறது. அதனால் இந்தியாவில் படத்தைத் தடை செய்துள்ளனர். இந்தத் தடை வழக்கில் ஆஜராக அவர் அண்மையில் இந்தியா வந்தார்.

எனது படத்துக்கான தடயை நீக்கும்வரை நான் போராடுவேன். அடுத்த படமாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை எடுக்கப் போகிறேன் என்று எச்சரித்துள்ளார் ராம் அமித்குமார்.

அயோத்தி பிரச்சினை குறித்து இந்தியாவின் தலை சிறந்த ஆவணப் பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ராம் கே நாம் என்ற ஆவணப்படம் இந்தியாவில் தேசிய விருதையும் பல சர்வதேச விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய விடயங்களை சர்ச்சையே ஏற்படுத்தாமல் படமெடுக்க முடியும் என்பது தெரிகிறதா?

சினிமாவும் கிரிக்கெட்டும் இளைஞர்களை கெடுத்து வருகின்றன என்று சொல்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஞானப்பிரகாசம், கொழும்பு

உங்கள் வயது 50க்கு மேல் என்று சொல்லாமலே சொல்லிவிட்டீர்களே? சினிமா மோகம் எத்தகையது தெரியுமா? தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த சம்பவம் இது. 2,3 பொலிஸ்காரர்கள் ஒரு குற்றவாளியை கைது செய்தனர். குற்றவாளியை கைவிலங்குடன் அழைத்துச் சென்றபோது குறுக்கிட்டது சினிமா தியேட்டர். '36 வயதினிலே'படம் ஓடிக்கொண்டிருந்தது. பொலிஸ்காரர்களுக்கு படம் பார்க்கும் ஆசை வந்தது. குற்றவாளியையும் கூட்டிக்கொண்டே சென்று படம் பார்த்துவிட்டு அதற்குப் பின்னரே குற்றவாளியை ஸ்டேசனுக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். விஷயம் எப்படியோ வெளியே கசிந்து இப்போது பொலிஸ்காரர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். கிரிக்கெட்டுக்காக நாக்கை வெட்டும், சினிமாவுக்காக கொள்ளையடிக்கும் அளவுக்கும் இளைஞர்கள் போகின்றனர். இவர்களை யார் திருத்த முடியும்?
இந்த நிலையில் நடிகை ரோகினி சிந்திக்கக் கூடிய கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு. காலையில் இருந்து மாலை வரை உழைப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதற்குத்தான் சினிமா. சினிமா என்பது மாயை அதை வைக்க வேண்டிய இடத்தில் வைங்க.

சினிமாவில் சூர்யா 10 பேரை அடிப்பதை ஏற்றுக்கொள்ளும் இளைஞர்கள் அவர் நிஜவாழ்க்கையில் அகரம் பவுண்டேசன் வைத்து நடத்துவதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே! என்று கேள்வி எழுப்புகிறார் ரோகினி.

சினிமா ஆசையில் சென்னைக்கு ரயிலேறும் இளைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிள்ளையார் சுழிபோடுகிறது டிஜிட்டல் முறையிலான சினிமா தொழில்நுட்பம்.

Tuesday, August 4, 2015

தேவதாசி வரலாறு -10


அருள் சத்தியநாதன்

மலாம்பிகை தமது புதல்வியருடன் கொழும்பிலேயே வசிக்கலானார் பின்னர், கமலாம்பிகைக்குக் குழந்தைவேல் என்ற ஆண்மகவும், அஞ்சுகமும் என்ற பெண்மகவும் பிறந்தனர். கமலாம்பிகை தனது 73 ஆவது வயதில் மரணமடைந்த பின்னர், கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தின் ஆதீனகர்த்தாவாகத் திகழ்ந்த பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் அஞ்சுகத்தை ஆலயப் பணிகளில் ஈடுபடுத்தி, உதவிவந்தார்.

இந்த அஞ்சுகம்தான் தங்கள் கணிகையர் குல வரலாற்றையும், அபிஷேக வல்லியின் தலைமுறையிலிருந்து தங்களின் குலவரலாற்றையும் எழுத்தில் பதித்த அறிஞராவார்.

கமலாம்பிகையின் ஐந்தாவது புத்திரியான அஞ்சுகம், மாயூரம் பரத சாஸ்திர வித்துவான் கந்தசாமி நட்டுவனாரிடம் ஆடல் பாடல்களைக் கற்றுச் சிறந்த நர்த்தகியாகத் திகழ்ந்தார். அஞ்சுகம் 12 ஆவது வயதில் ஸ்ரீபொன்னம்பலவாணேசுரர் சந்நிதியில் திருப்பொட்டுத்தாரணஞ் செய்து வைக்கப்பட்டார்.

பின்னர், யாழ்ப்பாண சங்கீத வித்துவான் ஸ்ரீ நாகலிங்கம் அவர்களிடம் இந்துஸ்தானி இசையையும், மைசூர் சமஸ்தான வித்துவான் கிருஷ்ணசாமி முதலியார், திருசிரபுரம் அழகிரிசாமி செட்டியார் ஆகியோரிடம் வாய்ப்பாட்டையும், திருநெல்வேலி சீதாராம் பாகவதரிடம் வீணையையும் பயின்றார்.

சிலகாலம் சென்றபின், கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் க. சின்னையா பிள்ளை அவர்களின் அபிமான ஸ்திரீயாயினார். அதன்பின் அஞ்சுகம் தனது 16ஆவது வயதில் வேதாரணியம் சொ. சுந்தரேசக் குருக்களிடம் சிவதீட்சை பெற்று, பின் யாழ்ப்பாணம் குழந்தைவேற்பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கியமும் கற்றுத் திகழ்ந்தார்.

'சிறியேன் 25 வருடம் மேற்கூறிய கணவான் அவர்களின் (க. சின்னையா பிள்ளை) அபிமான ஸ்திரீயாயிருந்து வாழ்ந்த செல்வவாழ்க்கையின் அருமை பெருமையும் மனமகிழ்ச்சியும் இத்துணையதென எடுத்துச் சொல்லுந்தரத்தவன்று' என்று அஞ்சுகம் குறிக்கிறார்.

அஞ்சுகம் இயற்றிய 'உருத்திர சணிகையர் கதாசாரத்திரட்டு' என்ற நூல் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் கொடுமுடிகள் எனக் கருதத்தக்க அனைத்துப் புலமையாளர்களினதும் பாராட்டைப் பெற்றமை அஞ்சுகத்தின் பெருந்தமிழ்ப் புலமைக்கு சாட்சியமாகும்.

'கருவி நூலுணர்வும், உருக்கிடும் இசைத்தமிழ் உணர்வும், சிறந்த நாடக நூலுணர்ச்சியுங்கொண்டு, தேவநற் தொண்டினில் சிறந்தே திகழும் அஞ்சுகமாது பத்திமெய் யன்புக்கருளுவார் சிவபெருமானே'என்று சிறப்புப்பாயிரம் வழங்குகிறார் மகா வித்துவான் மாதகல் சு. ஏரம்பையர் அவர்கள்.

கல்வியின் மிக்குள கவிஞர் புகழு
நல்லிசைப் புலமை நன்கு வாய்ந்துள்ள
கிஞ்சுக மலர்பொரூஉங் கேழ்நிறச் செவ்வா
யஞ்சுக மெனும்பெய ரடைந்தமெல் லியலே!

என்று வாழ்த்துகிறார் பிரம்மஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்.

யாழ்ப்பாணம் நீர்வேலி சிவ. சங். சிவப்பிரகாச பண்டிதர், மயிலிட்டி பிரசித்த நொத்தாரிஸ் க. மயில்வாகனப்பிள்ளை, மகாவித்துவான் உ.ப.வே. திரு.ஸா. இராகவாசாரியார், நாகபட்டினம் வித்துவான் ஜி. சதாசிவம்பிள்ளை, யாழ் சி.மா. தியாகராச பண்டிதர் போன்ற தமிழ்ப் புலமை மரபினர் அஞ்சுகப் பண்டிதையின் இலக்கியப் பணியை மெச்சியுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வசனநடை வரலாற்றில் 'உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு' நூலின் வசனநடையின் மேன்மை விதந்து குறிப்பிடத்தக்கதொன்றாகும். புராண வரலாறுகளைச் செய்யுள் மூலத்தில் ஆய்ந்து, தெளிந்து சுவையான சிறப்புமிக்க உரைநடையில் வார்த்துத் தந்திருக்கும் அஞ்சுகத்தின் பணி மெச்சத்தக்கதாகும்.

தமிழகத்தின் குளிக்கரையைச் சேர்ந்த அஞ்சுகம், யாழ்ப்பாணம் கைதடியில் வளர்ந்து, கொழும்பு சிவனாலயத்தில் 'பொட்டுக்கட்டிய' தேவதாசியாகத் திகழ்ந்து, க. சின்னையாபிள்ளை என்ற வர்த்தகரின் அபிமான ஸ்திரீயாக வாழ்ந்து, 'உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு' என்னும் அரிய இலக்கிய நூலினை ஆக்கி, தனது குலகோத்திரத்தின் சரித்திரத்தைப் பதிவு செய்த வரலாற்று ஆசிரியையாகக் கௌரவம் பெறுகிறார்.

எனினும், உருத்திர கணிகையர் மரபினை முற்றுமுழுவதாக ஏற்றுக்கொண்ட அஞ்சுகம், தமது குலத்தினர் இம்மரபைத் தொடர்ந்து பேணிவர வேண்டுமென்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

"நம் குலக்கன்னிகை எப்பொழுது திருப்பொட்டணியப் பெற்றாளோ அப்பொழுதே 'தேவதாசி'யெனவும், 'தேவர் அடியாள்' எனவும் பெயர் பெறுகின்றாள். ஒரு நாயகனால் திருமாங்கல்யம் கட்டப்பட்ட ஒரு நாயகி, அவனிடத்தில் எவ்வகைத் தொடர்புடையவளாகின்றாளோ, அவ்வகைத் தொடர்பை, இவள் ஈசுவரனிடத்திற் கொண்டவளாகின்றாள். ஆகவே, இவள் சிவகைங்கர்யத்திற்குரியாளென்பதையே அத்திருப்பொட்டு விளக்கி நிற்கிறது. அல்லாது, பிறிதொரு விஷயத்தில் பெருநிதி சம்பாதிக்கலாம் என்பதைக் குறித்து நிற்கவில்லை.

"அங்ஙனந் திருப்பொட்டணிந்த பின், நாணமென்பதை விட்டவளாகிச் சந்நிதானங்களிலே பலசன சமூகத்தில் பாடவும் ஆடவும் தக்கவளாகின்றாள். அவ்வாறானபோது, தான் கற்ற ஆடல் பாடலாகிய வித்தையைக் கொண்டு செல்வப் பொருளைத் தேடுவதும், அப்பொருளைக் கொண்டு தானதருமங்கள் செய்வதும் ஈசுரத்தியானம் செய்வதுமாகிய விஷயங்களிற் பொழுது போக்குவதன்றோ கல்வியறிவுக்கு அழகாகும்?

'தந்தை - தாயார், ஆண் குழந்தைகளை இளமையிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாக்கிச் செல்வப் பொருள்கள் தேடும் வழியைக் கற்பிக்கின்றார்கள். அவ்வாறே, கணிகைக் கன்னியர்க்கும் இளமை தொட்டு நீதி நூல்களையும், ஆடல் பாடலையும் நன்கு கற்பித்து வைத்தால், அவை வாயிலாகப் பொருளையும் சம்பாதித்துக் கீர்த்தியையும் பெற்று நல்வாழ்வடைவரன்றோ! செந்தமிழ்க் கல்வியிலும் ஆடல் பாடலாகிய குலவித்தையிலும் சிறந்தவர்களாகிய அஞ்சனாட்சி, சோமி, சண்முகவடிவு முதலானோர் எவ்வளவு பெருமையையும் பெருவாழ்வையும் பெருங்கீர்த்தியையும் பெற்றிருக்கின்றார்கள். இவர்களின் நிலைமையை எய்தும்படி கற்பித்து வைக்கின்ற பெற்றோரல்லவோ நற்பெற்றோர். இவர்களல்லவோ பிள்ளைகளிடத்து உள்ளீடான மெய்யன்புள்ளவர்கள். இவர்களையன்றோ நாம் என்றும் முன்னிருத்திப் போற்றி வழிபட வேண்டும்' என்று இந்நூலின் முடிப்புரையில் அஞ்சுகம் அம்மையார் தெரிவித்திருக்கும் கருத்துகள் கணிகையர் குலமரபைப் பேணும் அவரது தீர்க்கமான வாதத்தை வெளிப்படுத்துவனவாகும்.

இந்து சனாதன மரபை எவ்விதக் கேள்வியுமின்றிப் பரிபூரணமாக விசுவசித்து, அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்ட தன்மையை அஞ்சுகம் அம்மையார் இக்கணிகையர் கதாசாரத்திரட்டிலே வெளிப்படுத்துகிறார்.

(தொடரும்)

Monday, August 3, 2015

புகையிலை லெட்சுமணனோடு ஒரு உரையாடல்


உரையாடியவர்:  மணி  ஸ்ரீகாந்தன் 

கிராமப்புறங்களில் சில மனிதர்களை சிறப்புப் பெயரோடு அழைக்கும் வழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது. அந்தப் பெயர்கள் குறிப்பிட்ட சிலரை கௌரவிப்பதாக அல்லது கொச்சைப்படுத்துவதாக இருக்கும். புளத்சிங்கள பகுதியில் வசிக்கும் லெட்சுமணனின் சிறப்புப் பெயர் 'போயலைக்காரர்' (புகையிலைக்காரர்). கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக புளத்சிங்கள பகுதியில் புகையிலை வியாபாரம் செய்து வருகிறார் இவர். ஹொரண, இங்கிரிய, புளத்சிங்கள நகரங்களை அண்டியுள்ள தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த புகையிலை வியாபாரியை நன்றாகவே தெரியும். பாயில் சுருட்டிய புகையிலைக் கட்டை கக்கத்தில் வைத்துக்கொண்டு தோட்டப் பகுதிகளை வலம் வந்ததால் இன்றும் அந்த மக்களுக்கு அண்ணன்தான் மாஸ்!

"அப்போது செக்கட்டித் தெருவுக்கு போய் புகையிலை வாங்கி வருவோம். நல்ல தரமான ஐம்பது புகையிலை கொண்ட ஒரு கட்டு நாலு ரூபாய்க்கு வாங்கி ஒரு புகையிலையை பத்து சதத்திற்கு விற்பனை செய்திருக்கேன். இன்னைக்கு அந்த ஒரு புகையிலையின் விலை அறுபது ரூபா! பார்த்தீர்களா, பெறுமதி எப்படி வீங்கிப் போயிருக்கு!" என்று கண்களில் வியப்புக் காட்டும் லெட்சுமணனுக்கு இப்போது எழுபத்தெட்டு வயதாகிறது. இன்றும் புளத்சிங்கள, இங்கிரிய வாரச் சந்தைகளில் புகையிலை வியாபாரம் செய்து வருகிறார். உடல் தளர்ந்து போய் இருந்தாலும் கடைசிவரை உழைக்க வேண்டும் என்ற தெம்பு கொஞ்சம் அதிகமாகவே இவரிடம் இருக்கிறது    "வயசு உடம்புக்குத்தான், மனசுக்கு இல்லீங்க, மனச மட்டும் தளர விட்டுடக் கூடாதுங்க, அப்படியே இறுக்கிப் புடிச்சிட்டு உழைக்கிறதிலேயே கவனமா இருந்துட்டா வயதாகிட்டதே என்ற ஒரு எண்ணம் வராது, என்னோட மனசுக்கு இப்போவும் இருபது வயசுதான்!" என்று வெற்றிலை குதுப்பிய வாயைத் திறந்து சிரித்தார் லெட்சுமணன்.

அந்தக் காலத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி தாலுகாவிலிருந்து புளத்சிங்களவிற்கு புலம்பெயர்ந்தவர் தான் சின்னையா. மனைவியின் பெயர் வீராயி. அவர்களுக்கு எட்டு பெண்களும் நான்கு ஆண்களுமாக ஒரு டசன் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தானாம் இந்த போயலைக்காரர் லெட்சுமணன்.
"என்னோட இருபத்தைந்தாவது வயதிலேயே கணபதி தேவரோடு சேர்ந்து புகையிலை வியாபாரத்தை கத்துக்கிட்டேன். அந்தக் காலத்தில் புளத்சிங்கள நகரில் நிறைய தமிழ்க் கடைகள் இருந்தன. கணபதி தேவர் எண்ணெய் கடை வைத்திருந்தார். அவரோடு, சிங்கார கோனார் செலவு கடையும், பால்ராஜ் நாடார் கருவாட்டுக் கடையும், ராமசாமி செட்டியார் அடகுக்கடையும், சுப்பையா தேவர் சைவக் கடையும், ராக்கையா முதலாளி கடையும் புளத்சிங்கள டவுனில் இருந்தன. அந்தக் காலத்தை நினைத்தால் ரொம்ப இனிமையாக இருக்கு" என்று சொல்லும் லெட்சுமணனின் கண்களில் பூரிப்பு பளீச்சிடுகிறது. படித்து இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு  "படித்தவனெல்லாம் ஜெயிச்சிருக்கானா?" என்று எம்மைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்டு விட்டு தொடர்ந்தார். "மூணாவது வரை படிச்சிருக்கேன். பேப்பர் எல்லாம் வாசிப்பேன். ஆனால் இப்போ பார்வை கொஞ்சம் குறைந்து விட்டதால் படிக்க முடியலை. இந்த புகையிலை வியாபாரம் செய்கிற அளவுக்கு படிச்சிருக்கேன், அது போதாதா?" என்று நச்சென்று பதிலளிக்கும் இவர், இன்றும் சில தோட்டங்களுக்கு புகையிலைக் கட்டை சுமந்து சென்று வியாபாரம் செய்து வருகிறார். "எப்படிடா தள்ளாடுற வயசில் புகையிலைக் கட்டை சுமந்து போறேன்னு பார்க்குறீங்களா..? எல்லாம் அந்தக் காலத்து சாப்பாடுங்க! இயற்கை உரத்துல விளைந்த உணவுகளைச் சாப்பிட்டு வளர்ந்தோம். ஆனா இன்னிக்கு நீங்க நஞ்சு மருந்து தெளிச்ச உணவைத்தான் வாங்கிச் சாப்பிடுறீங்க, நாற்பது வயசுல நாலடி தூரம் கூட நடக்க முடியாம தள்ளாடுறதுக்கு அது தாங்க காரணம்." என்று புது விளக்கம் ஒன்றைக் கொடுத்து எம்மை மிரள வைத்தார்.

லெட்சுமணனின் மனைவியின் பெயர் ராமாயி. மூன்று பெண்கள். அனைவரும் திருமணம் முடித்துக் குடும்பமாகி விட்டார்களாம். புகையிலை வியாபாரத்தில் கிடைத்த வருமானத்தில்தான் தனது மூன்று பிள்ளைகளையும் கரை சேர்த்ததாக லெட்சுமணன் சொல்கிறார். "இப்போ தமிழ்ப் புகையிலை விற்பனை இங்கே அடியோடு நின்று விட்டது. மலையகப் பகுதிகளில் மட்டும்தான் தமிழ்ப் புகையிலை வியாபாரம் நடக்கிறது. ஜூலை கலவரத்திற்குப் பிறகு இங்குள்ளவர்கள் சிங்களப் புகையிலைக்கு பழகி விட்டார்கள். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தமிழ்ப் புகையிலை பெரிதாகவும் கருப்பாகவும் இருக்கும். அதன் சுவையை மேலும் அதிகரிக்க இளநீரில் கருப்பட்டியை கரைத்து அதில் தமிழ்ப் புகையிலையை முக்கி எடுத்து வைப்போம். அது நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும். ஆனால் இன்று நம்மவர்கள் அதை அடியோடு மறந்து விட்டார்கள்" என்று பழைய நினைவுகளில் மூழ்கிய லெட்சுமணன் இன்னொரு தகவலையும் சொன்னார்.
முன்பெல்லாம் தோட்டப் பகுதிகளில் பெண்கள் கட்டுக்கட்டாக புகையிலை வாங்கிப் போவார்கள். பத்தாம் திகதி சம்பளம் போட்டதும் தோட்ட வாசலில் ஒரு மினி சந்தையே விரிக்கப்பட்டு விடும். அரிசி, பருப்புக்கு அடுத்ததாக விலைப்படுவது புகையிலையும் வெற்றிலையும்தான். புகையிலை விற்பனை இப்போதும் அப்படித்தானா? என்று கேட்டோம்.

"அந்த மாதிரியெல்லாம் கிடையாதுங்க. இப்போ போயிலை வியாபாரம் குறைஞ்சிருச்சி. என்னைப் பொறுத்தவரை 25 சதவீதத்தில் குறைஞ்சு போச்சு என்றுதான் நினைக்கிறேன். பழைய ஆளுங்க இறந்து போனாங்க. புதிய தலைமுறை அந்த அளவுக்கு போயிலை பாவிக்கிறதில்ல... ஆனா வெத்திலை போடுறது அதிகமாயிருச்சி!" என்ற ஒரு ஆரோக்கியமான தகவலைத் தந்துவிட்டு புகையிலைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தார் லெட்சுமணன்.

face பக்கம்

Sunday, August 2, 2015

சில செல்போன் மாயா ஜாலங்கள்...

மணி   ஸ்ரீகாந்தன்

"லோ நீங்க யாரு பேசுறது?"

"நீங்கதானே கோல் எடுத்தீங்க, முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க"

"நீங்க யாருன்னு சொல்லுங்க, பிறகு நான் சொல்லுறேன்" என்று தொடங்கும் செல்போன் உரையாடல்கள் சில நிமிடங்களில் சண்டையில் முடிந்து கெட்ட வார்த்தை பேசும் அளவுக்கு சென்று விடுவதுண்டு.

இதற்குக் காரணம் போனில் பேசுவது எப்படி என்ற நாகரிகம் சிலருக்கு கைவராததுதான். நாம் ஒருவருக்கு அழைப்பு எடுக்கும் போது நாம்தான் நம்மை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பிக்க வேண்டும். இதுதான் நாகரிகம். ஆனால் சிலர் நமக்கு அழைப்பை எடுத்துவிட்டு நீங்க யாரு பேசுறது? என்று கேட்டு எரிச்சல் மூட்டுவார்கள். இப்படி போனில் இங்கிதம் தெரியாமல் உரையாடுபவர்களை சமாளிப்பதற்கு பொறுமை வேண்டும். இல்லையேல் ஊர்பேர் தெரியாதவர்களிடம் அனாவசியமாக சண்டை போட வேண்டியிருக்கும்!

மனித மூளை கண்டுபிடித்து பெற்றெடுத்த குழந்தையே செல்போன். இன்றைய நாகரீக உலகில் செல்போன் இல்லாத ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது!
"அடுத்த நூற்றாண்டில் வாழும் மனிதனின் சட்டைப் பாக்கட்டுகளில் கம்பியில்லா தொலைபேசி நிச்சயமாக இருக்கும்" என்று பகுத்தறிவாளர் தந்தை பெரியார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிச் சென்றதாக ஒரு செய்தியில் படித்திருக்கின்றேன். பெரியாரின் வாக்குப் பலித்திருக்கிறது. ஆனால் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைக் கொஞ்சம் பாருங்கள். 'சிரங்கு பிடித்தவன் கையும் செல்போன் பிடித்தவன் கையும் சும்மா இருக்காது' என்பதை பஸ்சில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள். வயசு பெண்களும், பையன்களும் தலை குனிந்தபடி செல்போனே கதி என்று மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சுற்றும் முற்றும் பார்க்கவிடாமல், வம்பு தும்புகளுக்குப் போகவிடாமல் நாமும் நமது போனும் என அடக்க ஒடுக்கமாக இவர்களை பொது இடங்களில் இந்தப் போன் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்ற வகையில் செல்போன்களுக்கு சலாம் போடலாம். வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக், டுவிட்டர் என்று அனைத்தும் போனில் உலா வர, எப்போதும் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறது இன்றைய தலைமுறை.

'இன்றைய காதல் வளர்வது செல்லில், வளர்வது லவ் பெக்கேஜ்ஜில் முடிவது சிம் சேன்ஜில்' என்று ஒரு கவிஞன் கவிதை எழுதியிருக்கிறான். இப்படி இன்றைய மனித வாழ்க்கையில் செல்போனையும் மனிதனையும் பிரித்துப் பார்க்க முடியாதுள்ளது. பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதே என்பதற்காக வெளிநாடுகளில் செல்போனின் ரிங்டோன் ஒலி அளவைக் குறைத்து தங்களுக்கு மட்டும் கேட்டால் போதும் என்ற அளவில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ரிங்டோன் அளவை காது கிழிய வைப்பதோடு, குத்துப்பாட்டு, காதல் பாட்டு, 'பஞ்ச்' வசனம் என்றெல்லாம் வைத்து சூழலை மாசுபடுத்தி வருகிறோம்.

அண்மையில் நான் ஒரு மரண வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே இறுதிக் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஐந்து நிமிடங்கள் மௌனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அந்த நிசப்தமான நேரத்தில் அங்கே நின்றிருந்த ஒருவரின் சட்டைப் பையில் கிடந்த செல்போன் 'எங்க தல டீ ஆரு சென்டி மெண்டுல தார்மாரு டண்ட னக்கா...' என்ற பாடல் ரிங்டோனாக அலறி, அந்த அமைதியை சீர்குலைத்தது. அப்போது மரணம் சம்பவித்த அந்த வீட்டாரின் மனோநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அந்த மனிதர் ஆறஅமர அந்த செல்லை எடுத்து இரண்டு வார்த்தை பேசி விட்டு அணைத்து வைப்பதற்குள் அந்த சூழ்நிலையே நாறிப்போயிருந்தது.
இப்படி பல பொது இடங்களின் அமைதியை செல்போன் ரிங்டோன் சீரழிப்பது ஒரு புறம் என்றால் டயல் டோன் படுத்தும் பாடும் பெரிய பிரச்சினைதான். சிலருக்கு நாம் அழைப்பு ஏற்படுத்தும் போது எதிர் முனையில் இருப்பவரின் செல்லிருந்து அவர் நம்முடன் பேசும்வரை நம் காதுகளில் ஒலிப்பதே டயல் டோன். சிலர் தமது மதப்பற்றை பகிரங்கப்படுத்தும் வகையில் தத்தமது மத சம்பந்தப்பட்ட பாடல்கள், போதனைகள், பிரார்த்தனைகள் என்பனவற்றை டயல்டோனாக வைத்திருப்பார்கள். ஒரு மதவிசுவாசி விசுவாசத்தைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டுமே தவிர இன்னொருவரிடம் வலிந்து திணிக்கக் கூடாது. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு நண்பருக்கு அழைப்பை ஏற்படுத்துகிறீர்கள். அவர் நீங்கள் கொஞ்சமும் விரும்பாத ஒரு அரசியல்வாதியின் பேச்சை டயல் டோனாக வைத்திருந்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அந்த டயல் டோனுக்குப் பயந்தே அவருக்கு போன் பண்ணுவதைத் தவிர்த்து விடுவீர்கள் அல்லவா? இந்த மாதிரியானதுதான் இந்த மதரீதியான டயல் டோன்களும், டயல் டோன் வழியாக எதையும் நாம் திணிக்க முனையக்கூடாது.

நீங்கள் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது நியாயமானது என்றாலும் அதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது இப்படி என்றால் சில பெரிய பதவிகளில் இருப்பவர்களின் போன்களிலும் காது கொடுத்துக் கேட்கவே முடியாத பாடல்களை டயல் டோனாக வைத்திருப்பார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பாடசாலை அதிபர். அவரின் மீது எப்போதும் எனக்கு ஒரு மரியாதை. ஒரு நாள் ஒரு சோகச் செய்தியைச் சொல்வதற்காக அவருக்கு அழைப்பை எடுத்தேன். அப்போது அவரின் டயல் டோனாக 'தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன செய்ய அவருக்கு செய்தியைச் சொல்ல வேண்டுமே என்று அந்தக் கொடுமையை சகித்துக் கொண்டு அவர் போனை தூக்கும் மட்டும் பாடலை கேட்டுத் தொலைத்தேன். அத்தோடு அந்த அதிபர் மேல் எனக்கிருந்த மரியாதையில் ஒரு கேள்விக்குறியும் சந்தேகமும் முளைத்தது. இப்படி ஒரு பாடலை டயல் டோனாக வைத்திருப்பவர் உண்மையாகவே நாம் கருதுவதைப்போல மரியாதைக்குரியவர்தானா என்று யோசிக்கத் தொடங்கினேன். வெறுமனே ஒரு டயல் டோனை வைத்து ஒரு மனிதரை எடை போட முடியாது என்பது உண்மையானாலும், தவறான அல்லது பொருத்தமற்ற டயல் டோன் ஒரு நபரின் கௌரவத்தை கேள்விக்குறியாக்கும் என்பதை எடுத்துக்காட்டவே இந்த நிஜ உதாரணம்.

இதையும் தாண்டி சிலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

'ஹலோ நீங்க அவரோடு இப்போது பேச முடியாது. அவர் ரொம் பிசி. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணினால் அவரோட பேசலாம்' என்ற பதிவு செய்யப்பட்ட குரல் சிலரின் செல்லில் திரும்பத் திரும்ப ஒலித்தது நம்மைக் கடுப்பேத்தும்.

இது இப்படி இருக்க, சிலர் தமது நண்பர்களை கலாய்ப்பதற்காக தமது செல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

"மச்சான் இப்போ பாரு அவனை எப்படி பைட் (BITE)டுக்கு எடுக்கப் போறேன் என்கிறதை" என்று கூறியபடியே தமது வேலையை ஆரம்பித்தார் ஒரு நண்பர். சில சமயம் இது ஆபத்தில் முடிகிறது. அண்மையில் எனது நண்பர் ஒருவர் நான்காயிரம் ரூபா பணத்தோடு தனது சாரதி அனுமதிப் பத்திரம், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தொலைத்துவிட்டு குடி முழுகிப் போனது போல தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டார். பிறகு பொலிசில் முறைப்பாடு செய்தார். அவர்கள், பத்து நாளைக்குள் எடுத்தவர்கள் சில சமயம் திருப்பித் தரவும் வாய்ப்பு உள்ளதால் கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். நண்பரும் காத்திருந்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து நண்பரின் செல்லுக்கு அழைத்த ஒருவர் தம்மிடம் தொலைத்த மணிபர்ஸ் இருப்பதாகவும் அதைத் திருப்பதித் தருவதாக இருந்தால் இவ்வளவு தேவைப்படும் என்றும் டீல் பேசியிருக்கிறார். அந்த மர்ம நபர் பேசிய உரையாடலைக் கேட்ட நண்பர் அவரின் போனில் இருந்த ஆட்டோமெடிக் கோல் ரெக்கார்டிங் வழியாக அந்தக் குரலை பதிவு செய்து பொலிசாரிடமும் போட்டுக் காட்டியிருக்கிறார். உஷாரடைந்த பொலிசார் அவருக்கு அறிவுரை சொல்லிவிட்டு, அந்த இலக்கம் யாருடையது என்பதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். தேடியெடுத்த பொலிசார், அந்த இலக்கம் யாருடையது என்பதை இவரிடமும் கூறி, உனக்கு இவரைத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அந்த நபரின் பெயரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் நண்பர்!

போன் இலக்கத்தில் கிடைத்த பெயர் அவருடைய நெருக்கமான நண்பர். பிறகு அவரிடம் விசயத்தைச் சொல்லிக் கேட்ட போது,

"அட என்ன மச்சான், இதைப்போய் பொலிசில் சொல்வார்களா? நான்தான் நண்பர்களின் பேச்சைக் கேட்டு உன்னை 'பைட்'டுக்கு எடுத்தேன்" என்றாராம் கூலாக!

பிறகு எனது நண்பரும் பொலிசில் நிலமையைச் சொல்லி பொலிசாரின் ஏச்சு, பேச்சையும் வாங்கிக் கட்டிக்கொண்டு முறைப்பாட்டை வாபஸ் வாங்கியிருக்கிறார். எனவே செல்போனில் கலாய்ப்பது ஆபத்திலும் முடிந்து விடலாம் என்பதை மறந்துவிட வேண்டாம். போன் உரையாடலை பதிவு செய்யும் வசதி எல்லாப் போனிலும் இப்போது வந்துவிட்டது.

இந்தக் கதை இப்படி இருக்க, இன்னொன்றைப் பார்ப்போம். எனது நண்பர் ஒருவர் எப்போதும் 'வாட்ஸ்அப்'பிலேயே திளைத்துக் கொண்டிருப்பவர். ஒருநாள் அவரின் நண்பர், செல்லை மறந்து விட்டு வந்துவிட்டேன். கொஞ்சம் உன் போனைத் தருகிறாயா? என்று அவசரத் தேவையாகக் கேட்டிருக்கிறார். இவரும் சிம்மை மட்டும் கழற்றிவிட்டு இரண்டு நாளைக்கு மட்டும் பாவிக்கப் போனைக் கொடுத்திருக்கிறார். பிறகு இரண்டு நாள் கழித்து போனை வாங்கி தனது சிம்மை அதில் போட்டு பழையபடி பாவிக்கத் தொடங்கியிருக்கிறார். போனை இரவலாக வாங்கிய நண்பர் பெண் விஷயத்தில் கொஞ்சம் சபலப் புத்திக்காரர். அவர் தன் காதலியுடன் வைபரில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதன் பின்னர் கொஞ்சக் காலமாக அவரது காதலி அவருடன் தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார். இவருக்கும் ஏன் என்று தெரியவில்லை. வேலைப் பளுவில் அதை மறந்து விட்டார்.

ஓரிரு மாதங்கள் கழிந்த பின்னரேயே மனிதருக்கு தன் காதலி பற்றி நினைவு வந்திருக்கிறது. ஏன் இப்போது என்னுடன் இவள் பேசுவதில்லை? என்று தேடிப்பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், யாரிடமிருந்து சில மாதங்களுக்கு முன் போனை இரண்டு நாட்களுக்கு இரவல் வாங்கினாரோ அந்த நண்பருடன் இவரது காதலி தொடர்பில் இருப்பதும் இருவரும் ஊர் சுற்றித் திரிவதும் அவருக்கு தகவல்களாக வந்து சேர எனது காதலி எப்படி இவருக்கு நண்பியானாள், எப்படி இந்தத் தொடர்பு ஏற்பட்டிருக்க முடியும் என்று குழம்பிப் போனார்.
ரொம்ப லேட்டாகத்தான் காரணம் இவருக்கு தெரிய வந்தது. அதாவது கிளி பறந்து போனபின்
இதற்கெல்லாம் காரணம் இவரின் வாட்ஸ்அப் தான். போனை இரவல் வாங்கும்போது சிம்மைக் கழற்றிக் கொடுத்துவிட்டு தனது சிம்மைப் பொருத்திக் கொண்டால் போதும் என நினைத்ததுதான் தவறு. தனது சிம்மைப் பயன்படுத்தினால் வாட்ஸ்அப் தொடர்புகள் அதனுடனேயே மட்டுப்பட்டுவிடும் என அவர் நினைத்திருக்கிறார்.

இனி இதைக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்.

போனில் வாட்ஸ்அப், வைபர், கணக்கை நாம் புதிதாக திறக்கும்போது அது யூசர் நேமாக போன் இலக்கத்தை கேட்கும். அப்போது நீங்கள் கொடுக்கும் உங்கள் தொலைபேசி இலக்கத்தை அது உள்வாங்கிக் கொள்ளும். பிறகு நீங்கள் உங்கள் போனில் சிம்மை மாற்றினாலும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மாறாது. அது பழைய எண்ணிலேயே இருக்கும். இது தெரியாமல் உங்கள் போனை யாராவது இரவல் வாங்கி அதில் தனது சிம்மைப் போட்டு வாட்ஸ்அப், வைபரைப் பயன்படுத்தினாலும் அது அந்தப் பழைய எண்ணில் இருந்தே செயல்படும். புதிதாக போட்ட சிம்முக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது பலருக்கும் புரிவதில்லை. பொது கொம்யூனிக் கேஷனில் பேஸ்புக் கணக்கை திறந்து வைத்துவிட்டு சைன் அவுட் பண்ணாமல் வந்தால் என்ன நடக்குமோ அந்தக் கதைதான். வாட்சாப், வைபருக்கும் நடக்கும். இதுதான் அந்த நண்பருக்கும் நடந்தது. நண்பர் இரண்டுநாள் போனைப் பயன்படுத்திவிட்டு தன் சிம்மைக் கழற்றிய பின்னர் உரிமையாளரிடம் கொடுத்து விட்டார். அவரது காதலி இரண்டு நாட்களின் பின்னர் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டபோது இரவல் போன் இலக்கத்துக்குத்தான் அந்த அழைப்பு போயிருக்கிறது. போன் உரிமையாளர் அந்தப் பெண்ணுடன் பேசியிருக்கிறார். சும்மா அறிமுகத்துடன் ஆரம்பமான தொடர்பு எப்படியோ அடிக்கடி நிகழும் அளவுக்கு வளர, நண்பன் தயவால் நமக்கு ஒரு கிளி வந்து மாட்டியதே என்று எண்ணி மகிழ்ந்துபோன அவர் அவளைக் கொத்திக் கொண்டோடிவிட பரிதவித்துப் போனார் ஒரிஜினல் காதலன்! இத்தனைக்கும் காரணம், நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் தன்மையை புரிந்துகொள்ளாதது தான்!

எனவே இனிமேல் யாருக்காவது உங்கள் போனை இரவல் கொடுப்பதாக இருந்தால், சிம்மை மட்டும் கழற்றுவதால் பயன் இல்லை. வாட்ஸ்அப் அல்லது வைபர் செட்டிங்குக்குச் சென்று அக்கவுண்டை டி எக்டிவேட் செய்த பின்னர்தான் போனை இரவல் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் பின்னர் 'வடை போச்சே' என்று கவலைப்பட வேண்டியிருக்கும்! போனைத் திரும்பப் பெற்றதும் மீண்டும் அதே இலக்கத்துக்கு அக்கவுண்டைத் தொடக்கி விடலாம். இப்படி செல்லில் பல தொல்லைகளைத் தினமும் பலர் அனுபவித்து வருகிறார்கள். இப்போ சொல்லுங்கள், 'செல் இன்றி அமையாது இவ்வுலகு' என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது!