Saturday, July 25, 2015

தேவதாசி வரலாறு -9

இலங்கையில்  தேவதாசிகள்


அருள் சத்தியநாதன்

கடந்த இதழ்களில் நாகரத்தினம் அம்மாளை மையப்படுத்தி இந்திய தேவதாசிகள் பற்றிப் பார்த்து வந்தோம். தேவதாசிகள் ஆரம்பத்தில் மன்னர்கள், பிரபுகள், மந்திரி பிரதானிகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். இத்தேவதாசிகள் அனைவருமே கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவர்கள். இரண்டாவதாக, சிருங்காரம் கல்வியுடன் தொடர்பு கொண்டது. தேவதாசிகள் பாடவும், நடனமாடவும் வேண்டும். இவற்றை அவர்கள் முறைப்படி கற்க வேண்டும். எனவே உயர் குடியினருக்கு அடுத்ததாகக் கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்தது. மேலும் தனவந்தர் தொடர்பு, ஆடல்பாடல்களில் தேர்ச்சி மற்றும் கல்வி கேள்வியில் தேர்ச்சி ஆகிய மூன்றும் இவர்களை சமூக கௌரவம் கொண்டவர்களாகவும் வசதியான வாழ்க்கை கொண்டவர்களாகவும் வைத்திருந்தது.
ஆங்கிலேயர் காலப்பகுதியில், ஆங்கில மொழியறிவு காரணமாக மக்கள் மத்தியில் பரந்துபட்ட அளவில் கல்வியறிவு வளர்ச்சி கண்டது. உலக அறிவு, கிறிஸ்தவ சமய செல்வாக்கு என்பன காலங்காலமாக சமூகத்தில் இருந்து வந்த நம்பிக்கைகளை கேள்விக் குறியாக்கியதோடு விவாத பொருளாகவும் ஆக்கின. இப்படித்தான் உடன்கட்டை ஏறும் பழக்கம் விவாதத்துக்கு ஆட்பட்டு ஒழித்துக் கட்டப்பட்டது. அடுத்ததாக தேவதாசி முறையும் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இது ஒரு புறமிருக்க, இதே ஆங்கிலேய ஆட்சியின் கீழ் தேவதாசியினரும் படிப்பறிவில் தேர்ச்சி பெறும் வாய்ப்பைப் பெற்றனர். நூல்களை எழுதி வெளியிட்டனர்.

1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரிடம் வீழ்ந்ததோடு முழு இலங்கையும் பிரிட்டிஷ் வசமானது. அடுத்ததாக பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டன. தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர் இத்தோட்டங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். கூடவே, நாவிதர், சலவையாளர், துப்புரவு செய்வோர், வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள், பண்டாரங்கள், இசைக்கலைஞர்கள், சமையல்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கை வந்தனர். இக்காலப்பகுதியில் ஆங்கிலேய மிஷனரி தயவால் வடபுலத்தோர் கல்வியில் தேர்ச்சி பெற்ற சமூகமாக மாறியிருந்தனர்.

எனவே, இலங்கை வாழ் தமிழ் சமூகத்துக்கு தேவையாகவிருந்த சிருங்கார ரசத்தைத் தருவதற்கு பலரும் இங்கு வரவேண்டியதாயிற்று.

இது தொடர்பாக பல தகவல்களை லண்டனில் வசிக்கும் மலையகத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான மு. நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் நூலில் தந்திருக்கிறார். அத்தகவல்களை இனிப் பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை நோக்கிப் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் தேவதாசிகளும் இசை, நடனக் கலைஞர்களும் இடம்பெற்றுள்ள கதை சுவாரஸ்யமானது. யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புரவலர்களினதும், கோயில் ஆதீனகர்த்தாக்களினதும் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக  தேவதாசிகள் இறைப்பணி புரிந்துவந்துள்ளனர்.

அந்தப் பாரம்பரியத்தில் 'கொழும்பு நகரிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிவகாமியம்பிகா சமேத பொன்னம்பலவாணேசுரர் திருவடிகளுக்கடிமை பூண்ட மாது ஸ்ரீ கா. கமலாம்பிகையார் புத்திரி க. அஞ்சுகம் இயற்றிய, 'உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு' என்ற நூல் மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது.

'வரலாற்று நாயகி தாசி அஞ்சுகம்' என்று இந்நூல் பற்றிய கட்டுரை ஒன்றை சோ. சிவபாதசுந்தரம் 'நாழிகை' இதழில் எழுதியிருக்கிறார்.

'யாழ்ப்பாணக் கலாசாரத்தின் சென்ற நூற்றாண்டு வடிவத்தின் ஓர் அம்சத்தை' இந்நூலில் காணலாம் என்று சிவபாதசுந்தரம் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஆகம, புராண இதிகாசங்களிலிருந்து தேவதாசிகள் எனப்படும் உருத்திர கணிகையர் வரலாற்றைத் தொகுத்துக்கூறும் இந்நூலில் அன்னை அஞ்சுகம் தனது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தி நிற்கிறார்.

'திருக்கைலாச மலையிலே உமாதேவியாருக்குச் சேடியராயிருந்த கமலினியின் அவதாரமாயுள்ளவரும், அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறிதற்கரிய பரம்பொருளாகிய தியாககேசப்பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டுத் தூதராகி எழுந்தருளும் பேறுபெற்றவருமாகிய பரவையாரும், சோமசுந்தரப் பெருமான் இரசவாதம் செய்யும்பொருட்டு எழுந்தருளும் பேறு பெற்ற பொன்னணையாரும் இவர் போன்ற பிறரும் திருவதாரஞ் செய்த 'உருத்திர கணிகையர்' கோத்திரச் சிறப்பை சிற்றறிவுடையளாகிய யானோ எடுத்துச் சொல்லவல்லேன்' என்று அஞ்சுகம் தனது முகவுரையில் கூறுகிறார். பரவையார், பொன்னணையார், மாணிக்கவல்லி, மானந்தை, மாணிக்கநாச்சியார், ஞானவல்லி, அருணகிரிப் பெருந்தொகையாரின் தாயார், சோமி, வெள்ளையம்மாள், கூத்தாள், மாதவி, சித்திராபதி, மணிமேகலை ஆகிய கணிகையரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் ஆழமாக எழுதிச் செல்கிறார்.
இந்த உருத்திர கணிகையரின் வரலாற்றை எழுதுவதற்கு இவர் எடுத்தாண்டிருக்கும் இலக்கிய நூல்களின் பட்டியல் பிரமிப்பூட்டுவதாகும். சிவஞான தீபம், சிவஞான சித்தியார், சித்தாந்த சிகமாணி, இறையனராகப் பொருள், ஆசௌசதீபிகை, திருவருட்பா ஆகிய வைதீக சித்தாந்த நூல்கள் அனைத்தையும் அஞ்சுகம் ஆளுமையோடு கையாண்டிருக்கிறார்.

அஞ்சுகம் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் தனது ஆழ்ந்த சைவசித்தாந்த ஞானத்தை வெளிப்படுத்திச் செல்கிறார். இந்நூலாக்கத்திற்கு அஞ்சுகம் எடுத்தாண்ட 44 இலக்கிய நூல்களின் விபரம் அவரது தமிழ்ப் புலமைக்கு அரும்பெரும் சான்றாகும்.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், புராணங்கள், இராமாயண, பாரத இதிகாசங்கள் அனைத்தையும் நுணுகி ஆராய்ந்து உருத்திர கணிகையர் கதாசாரத்தை அஞ்சுகம் திரட்டித் தந்திருக்கிறார். 'இலங்கையின் தலைநகரான கொழும்பிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மையார் சமேத கொழும்பு பொன்னம்பலவாணேசுரப் பெருமானுக்கு அடிமை பூண்ட கமலாம்பிகை என்னும் எனது தாயார் எனக்குப் புத்திரப்பேறின்மையால் தமது பெண்வழிச் சந்ததி என்னோடு நின்றுவிடுமென்பதை நன்குணர்ந்து, தம் கோத்திர வரலாற்றை ஒரு புத்தகரூபமாய்ப் பிரசுரித்து வெளிப்படுத்தும்படி எனக்குப் பன்முறையுங் கட்டளையிட்டு வந்தார்' என்று அஞ்சுகம் இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.

திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதியைச் சேர்ந்த அபிஷேகவல்லி என்னும் தேவதாசி மரபில் எதித்த ஆறு தலைமுறையினரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் விரிவாக எழுதுகிறார். அபிஷேகவல்லி தேன்மொழி, வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்றும், பரத சாஸ்திரத்தைப் பயின்றும், இசை பாடியும் நடனமாடியும் சிறப்புப் பெற்று 'மகாவித்துவவசி' என்ற பட்டமும் பெற்றவர். அவரது கோத்திரத்தில் உதித்த வெள்ளையம்மாள் என்பாரும் கல்வியிற் சிறந்தவராய்த் திகழ்ந்து பர்வதம் என்ற புத்திரியையும், காந்தப்பர் என்ற புத்திரனையும் பெற்றார். பர்வதத்திற்குப் பிறந்த காமாட்சி என்னும் தேவதாசியே அஞ்சுகத்தின் பாட்டியாவார். காமாட்சி தனது மகளான கமலாம்பிகைக்குப் பத்து வயதில் திருப்பொட்டுத்தாரணம் என்னும் பொட்டுக்கட்டும் சடங்கை நிகழ்த்தினார். காமாட்சியார் தனது மகள் கமலாம்பிகைக்குச் சிறப்பான தமிழ்க் கல்வியையும் கற்பித்து, திருவாரூர் பரத சாஸ்திர வித்துவானாகிய மருதப்ப நட்டுவனாரிடம் ஆடற்கலையையும் பயிற்றுவித்தார்.

1850 இல் யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த விக்கினேசுராலய தருமகர்த்தாவான காசிநாத முதலியாரின் மகன் வேலப்ப முதலியார், தமிழகத்திலுள்ள குளிக்கரைக்கு சிவஷேத்திர தரிசனம் செய்யச் சென்ற வேளையில், கமலாம்பிகையின் நடனச் சிறப்பைப் பார்த்து, தமது திருக்கோயில் உற்சத்துவத்துக்காகக் காமாட்சியையும் அவரது பதினொரு வயது மகள் கமலாம்பிகையையும் கைதடிக்குச் கொண்டுவருகிறார்.

கமலாம்பிகையும் ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கி, அவரது கீர்த்தி யாழ்ப்பாணம் முழுவதும் பரவியது. அப்போது கொழும்பில் பிரபலம் பெற்றுத் திகழ்ந்த பொன்னம்பல முதலியாரின் திருமண வைபவத்தில் நடனமாடக் கமலாம்பிகை அழைக்கப்பட்டு, அவர் அங்கு சென்று, நடனமாடிக் கீர்த்தி பெற்றார். பின்னர், கமலாம்பிகை பிரசவத்திற்காக, தமிழ்நாட்டில் குளிக்கரைக்குத் தன் தாயாருடன் சென்று, அங்கு சந்தானவல்லி என்ற பெண் குழந்தையைப் பெற்றார். கமலாம்பிகையின் தாயார் காமாட்சியாரும் சில காலத்தின் பின் மரணமுற்றார்.

இந்நிலையில், கைதடி ஆதீனகர்த்தாக்கள் குளிக்கரையிலிருந்து மீண்டும் கமலாம்பிகையையும் அவரது மகள் சந்தானவல்லியையும் கைதடிக்கு அழைத்து வந்து, கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். அங்கு வாழும் காலத்தில், கமலாம்பிகை அன்னம்மாள் என்ற இரண்டாவது மகவைப் பெற்றார்.

கமலாம்பிகையின் மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு ஆடல் பாடல்களைக் கற்பிப்பதற்கு, கமலாம்பிகையின் மைத்துனரும், பாட்டு, நட்டுவாங்கம், மிருதங்கம், தவில் முதலியவற்றிலே கீர்த்தி பெற்றவருமாகிய புன்னைவனம் நட்டுவனார் அவர்களைத் தமிழகத்தின் திருப்புகலூரினின்றும் அழைப்பித்திருந்தார். இவரது தவில் வாசிக்கும் திறமையை வியந்து, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின், தமையனாரும், சிறந்த வித்துவானும் சங்கீதத்தில் வல்லுநருமாகிய ஸ்ரீலஸ்ரீ பரமானந்தப் புலவர் அவர்கள் சிங்கமுகச் சீலையும் வெள்ளிக் கழியும் பரிசளித்தார்கள்.

இக்காலத்தில், கொழும்பில் சிவாலயப் பிரதிஷ்டா கும்பாபிஷேகத்திற்கு வருமாறு பொன்னம்பல முதலியார் வேண்டியதை அடுத்து, கமலாம்பிகை தமது இரு புதல்வியர்களோடும், பரத சாஸ்திர வித்துவான் புன்னைவனம் நட்டுவனாரோடும் கொழும்பு வந்தார். கொழும்பு சிவாலயத்திலே கணிகையராகத் திகழுமாறு பொன்னம்பல முதலியார் கேட்க, அதற்கிணங்க, கமலாம்பிகை தனது மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு பொட்டுகட்டி அவ்வாலயத்தின் கணிகையாக்கினார்.

(தொடரும்) 

No comments:

Post a Comment