Thursday, July 30, 2015

இருள் உலகக் கதைகள்

தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-  மணி   ஸ்ரீகாந்தன்

அப்போது நேரம் மாலை ஆறரை இருக்கும். புளத்சிங்கள பிரதேசம் இருளில் தொலைந்து போகத் தயாராகிக் கொண்டிருந்தது. இறப்பர் மரங்களை பெருமளவாகக் கொண்ட அந்தப் பகுதியில் நிறையத் தோட்டங்கள் அமைந்திருந்தன. அவற்றில் 'குடாகங்க' தோட்டமும் ஒன்று. களுகங்கை இத்தோட்டத்தின் குறுக்கே கடந்து போவதால் இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாகக் காட்சியளித்தது. ஆனாலும் இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் அமைதியான அந்த இடத்தின் தோற்றமே மாறிப்போயிருந்தது. இருள் அந்தப் பிரதேசத்தின் அழகை மூழ்கடித்து ஒரு அமானுஷ்ய தோற்றத்தை உருவாக்கியிருந்தது.

அமானுஷ்யமான அந்த இரவுவேளையை சிதைப்பது போல மேட்டுலயத்து தெருமுனையில் படுத்துக்கிடந்த சொறி நாய் ஒன்று கிழக்குப் பக்கமாக வெறித்துப் பார்த்தபடி ஊளையிடத் தொடங்கியது.
"சரியாக சரசு சுருக்கிட்டுச் செத்துப்போன வாகை மரத்துப் பக்கமாகப் பார்த்து ஊளையிடுது... மனுஷன் கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகளோட உருவம் நாய் கண்ணுக்குத் தெரியும் என சொல்றாங்களே அது உண்மைதான்" என்று வீட்டின் விறாந்தையில் படுத்திருந்த முத்துக்கருப்பன் கங்காணி கதவைத் திறந்து வெளியே பார்த்து விட்டு வீட்டுக் கதவைப் படாரெனச் சாத்தினார்.
"நாய் ஊளையிடுற நேரத்தில யாராவது வெளியே போனா தொலைச்சுப்புடுவேன் தொலைச்சி" என்று அடித்தொண்டையில் கத்திவிட்டு பாயில் சுருண்டார். கங்காணி போட்ட சத்தத்தில் அந்த வீட்டில் இருந்த சிறுசுகள் கொலை நடுக்கத்தில் மூலையில் பதுங்கிக் கிடந்தார்கள்.

அந்த ஆற்றோரத்தில் நிற்கும் வாகை மரத்திற்கு ஐம்பது வயதிருக்கும். ரொம்பவும் முதிர்ச்சியான மரம். இருட்டில் பார்க்க அது தலைவிரி கோலத்துடன் ஒரு கொடிய அரக்கி நிற்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால் அதையும் தாண்டி இன்னொரு தோற்றமும் அம்மரத்துக்கு உண்டு. அந்தக் காலத்தில் அவ்வாகை மரக்கிளையில் சரசு என்ற பெண் தூக்குப் போட்டுக்கொண்டு இறந்து போனதாக ஒரு கதை அப்பகுதியில் பேசப்பட்டு வந்ததால் இப்போது அந்த வாகை மரத்திற்கு சரசு மரம் என்ற சிறப்புப் பெயரும் ஒட்டிக்கொண்டது.
தேவா பூசாரி
ஏற்கனவே தலைவிரிகோலமாக இருந்த மரத்துக்கு தூக்கு மரம் என்ற பெயரும் சேர்ந்து கொள்ளவே அந்த மரத்தின் மீதான அச்சம் பன்மடங்காக அதிகரித்துப் போனதில் வியப்பில்லை. எனினும் அந்த வாகை மரத்தின் கீழேயே குடாகங்க ஆறும் ஓடுவதால் அந்தப் பகுதி மக்கள் அங்கேதான் குளிக்கவும் செய்தார்கள். வாலிபர்கள் கரணம் அடித்து குதித்து நீச்சல் அடிக்கவும் அங்கே நின்றிருந்த வாகை மரத்தின் பெரிய மரக்கிளைகள் வளைந்து சரிந்து தாழ்ந்திருந்தன. ஆனாலும் அந்த இடத்தில் மாலை ஐந்து மணிக்குப் பிறகு குளிப்பதை எல்லோரும் தவிர்த்து வந்தார்கள். சரசு பயம்! அதற்குக் காரணம் இருந்தது. அந்த மரத்தில் மோகினிப் பேய் குடியேறியிருந்ததாக ஒரு கதை பரவியிருந்தது. மாலை ஐந்து மணிக்குப் பிறகு அந்த இடத்தில் இருளும் நிசப்தமும் நிரந்தரமாகக் குடியேறிவிடும். அந்த பூரண அமைதி மறுநாள் காலை வரை தொடரும். ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை.

மாலை ஐந்து மணியைக் கடந்து விட்டிருந்த அந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் வீரசாமி, தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஆற்றுக்குக் குளிக்க வந்தான். வீரசாமியின் மனைவி முத்தழகு கையில் இரண்டு வயது பெண் குழந்தை. வந்தவர்கள் நேரம் கடந்து விட்டதை உணர்ந்து குளிப்பதற்கு அவசரம் காட்டினார்கள். வாகை மரத்தடி நிழலில் ஒரு துணித் துண்டை விரித்து அதில் குழந்தையை அமர வைத்து விட்டு மார்பளவு கட்டிய பாவாடையுடன் தண்ணீரில் இறங்கினாள் முத்தழகு. இரண்டு முறை மூழ்கி எழுந்த வீரசாமி ஆற்றங்கரையில் நின்று சவர்க்காரத்தை உடம்பில் தேய்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது வீல் என்று குழந்தை அழும் சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பியவன் சடாரென முகத்தை திருப்பி குழந்தை அமர்ந்திருந்த திசையைப் பார்த்தான். அங்கே எந்தவித அசைவும் தெரியவில்லை. ஆனால் குழந்தை யாரோ கிள்ளிவிட்டது போல வீல் என்று கத்திக்கொண்டிருந்தது. ஆற்றில் மூழ்கி எழுந்த முத்தழகு பதறியடித்துக் கொண்டு குழந்தையிடம் ஓடிவந்து பார்த்தாள்.
"என்ன ஆச்சுன்னு தெரியல இப்படி அழுதே!" என்று சொல்லியபடியே அந்த ஒற்றை மரத்தை சுற்றி ஒரு தடவை நோட்டம் விட்டாள். "இதுதான் நேரம் கெட்ட நேரத்தில குளிக்க வரக்கூடாது என்று சொல்லுறாங்க" என்று வீரசாமியை பார்த்துக் கோபமாக சொல்லிவிட்டு குழந்தை அமைதியானப் பிறகு மீண்டும் ஆற்றில் இறங்கினாள். அப்போது யாரோ முணங்குவது போல சத்தம் வர திரும்பிப் பார்த்தாள். அந்த வினாடி குழந்தை மீண்டும் பலமாக அழ ஆரம்பித்தது. அப்போது முத்தழகு பார்த்த காட்சி அவளை நிலைகுலையச் செய்தது.

வாகை மரத்தின் அருகே இருந்த முட் புதரை நோக்கி ஒரு சிறிய கரிய உருவம் விருட்டென ஓடியதையும் முட் புதரை முறித்துக்கொண்டு உள்நுழைந்ததையும் அரை வினாடி நேரத்தில் முத்தழகு கண்டாள். அவலட்சணமான முகம் கொண்ட ஒரு குட்டையான மனித உருவம் போலவும் காட்டுப் பன்றியை ஒத்ததாகவும் தோன்றியது போல அவள் மனதுக்குப் பட்டது. திக்பிரமை பிடித்தவளாக ஒரு கணம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்ற முத்தழகு அடுத்த கணமே மூர்ச்சித்து ஆற்றங்கரையில் விழுந்தாள். இது எதையும் கவனிக்காது தலையை துவட்டிக்கொண்டிருந்த வீரசாமி மனைவி கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்து அவளைத் தூக்கினான். மூர்ச்சையாகிக் கிடந்தவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான். எழுந்தவள் குழந்தை இருக்கும் பக்கமாக ஓடிச்சென்று குழந்தையை தூக்கி அணைத்தவள், "இனி ஒரு நிமிசம் கூட இங்கே இருக்கக் கூடாது. வாங்க போவோம்" என்று கணவனை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வீடு நோக்கி விடுவிடுவென நடந்தாள்.

முத்தழகு நேரங் கெட்ட நேரத்தில் ஆற்றுக்குப் போய் எதையோ பார்த்துப் பயந்துட்டாளாம் என்ற கதை அடுத்தநாள் ஊர் முழுக்க பரவியது. இனி யாரும் ஆத்துப் பக்கம் போயிடாதீங்கப்பா! என்று டுவிட்டர், பேஸ்புக்கு வரை கொமண்ட் போட்டுட்டாங்களாம்.

ஆனால் வீட்டிலோ நிலமை மோசமாகி விட்டதை வீரசாமியும் முத்தழகும் உணர்ந்து பதறிப் போனார்கள். முதல் நாள் மாலை சிறுநீர் கழித்த குழந்தை மறு பிற்பகல் கடந்த பிறகும்கூட சிறுநீர் கழிக்காததுதான் காரணம். குழந்தையின் வயிறும் உப்பிக் காணப்பட்டது. பதறிப்போன அவர்கள் விசயம் தெரிந்தவர்களிடம் நிலைமையைச் சொல்லி பரிகாரம் கேட்டார்கள்.
'இது ஏதோ தீய சக்தியின் வேலைதான்' என்பதை உறுதிப்படுத்திய அவர்கள் தேவா பூசாரியை அழைத்து வந்து பரிகாரம் பார்க்கும்படி ஆலோசனை சொன்னார்கள்.
அன்று மாலையே தேவா தனது சகாக்களோடு வந்து இறங்கினார். குழந்தையை பார்த்ததும் அவருக்கு இது தீய சக்தியின் வேலைதான் என்பது புரிந்து விட்டது. ஆனாலும் குழந்தைக்கு இரண்டு வயது என்பதால் என்ன நடந்தது என்பதை குழந்தை வாயால் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதே! தேவா பூசாரிக்கு குழப்பமாக இருந்தது. உடனே பூசாரி அமர்வதற்கான மன்று அமைக்கப்பட்டு அதில் உடுக்கோடு அமர்ந்தார். தனது குலதெய்வத்தை நினைத்து மனம் உருக, அவர் உடல் சிலிர்த்தது. உடனே அவரின் ஞானக் கண்ணுக்கு வாகை மரத்தடியில் நடந்த சம்பவங்கள் காட்சியாக தெரிய, அவர் அதை உரக்க ராகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

"வாகை மரத்தில் பல வருசமா அண்டிக்கிடந்த ஒரு கொடூர மோகினி, ரெண்டுங்கெட்டான் நேரத்தில் 'மனுச பயலுங்க' வராததால் பித்தம் கலங்கி பல வருசமா பசியோடு திரிஞ்சிருக்கு. அப்போதான் இந்தக் குழந்தையை மரத்தடியில் உட்கார வச்சிட்டு குளிக்க போயிருக்கீங்க. உடனே சமயம் பார்த்து குழந்தையை கபளீகரம் செய்யக் காத்திருந்த மோகினி சரியான நேரத்தில குழந்தையை நெருங்கி இருக்கு. ஆனால் குழந்தையின் கழுத்தில் கிடந்த பஞ்சாயுதத்தால் குழந்தையை ஒண்ணும் பண்ண முடியல" என்று பூசாரி கூறியதைக் கேட்ட ஊர்வாசிகளை பயம் மேலும் கவ்விக் கொண்டது.

அடுத்த நிமிசம் பூசணிக்காயை வெட்டி பரிகார பூஜைகளை நிறைவு செய்தார் தேவா பூசாரி.

அந்த தீய சக்தியை பார்த்து குழந்தை பயந்திருக்கு இப்போது சரியாகிடும் என்று வீரசாமியிடம் உறுதியளித்துவிட்டு சகாக்களோடு பூசாரி ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ புறப்படுவதற்கு முன்னர் முன்வாசலுக்கு ஓடிவந்த முத்தழகு,
"சாமி குழந்தை இப்போதாங்க சிறுநீர் கழிச்சிச்சு" என்று மகிழ்ச்சியுடன் கூறியதைக் கேட்டவுடன் பூசாரி வானத்தை நோக்கி கும்பிட்டுவிட்டு புறப்பட்டார்.

இப்போது நாட்டில் பேய்கள் அதிகமாம்!


"இப்போ பேய்களின் கொட்டம் வரவர ரொம்ப அதிகமாகி போயிடுச்சு! நிறைய பேருக்கு பேய் பிடிக்குது. அந்தக் காலத்துல எல்லாம் ஒரு ஆளுக்கு ஒரு பேய்தான் பிடிக்கும், ஆனா இப்போ அப்படி அல்ல... ஒரு ஆளோட உடம்பில் குறைந்தது ஏழு ஆவிகள் வரை அண்டிக் கிடக்குது"   என்று கவலையுடன் தகவல் ஒன்றை அவிழ்த்தார் தேவா பூசாரி. அவரிடம் பேய்க் கதையை கேட்டு குறிப்புகள் எடுத்துக் கொண்ட பின்னர் சும்மா பேசிக் கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில் இப்படிச் சொன்னதும் எனக்குள் பொறி தட்டியது. இது ஏன் என்று கேட்டேன்.
"இதுக்கெல்லாம் காரணம் சில வேலை தெரியாத (போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத) பூசாரிகளோட நடவடிக்கைகள்தான். சிலர் இந்தத் தொழிலை அரைகுறையாக கற்றுக்கொண்டு வந்து பேயோட்டுறாங்க. இதில் முக்கியமான விஷயம் பேயை அல்லது துஷ்ட ஆவிகளை அழைப்பதுதான். சிலர் பேயைக் கஷ்டப்பட்டு அழைச்சிட்டு, அதை விரட்டிட்டதாக சொல்லி முடிச்சிடுறாங்க. ஆனால் அழைத்த பேயை சரியாகக் கவனித்து அனுப்பி வைக்காவிட்டால் அது சும்மா ஊர் சுத்தப் போய்விடும். மற்றவங்களைத் தொற்றிக்கொள்ளும். அழைத்த பேயை சரியா இனங்கண்டு அதோட கதையை முடிச்சிடனும். அப்போ இப்படியான பிரச்சினை வராது. ஆனால் சிலருக்கு அழைச்ச பேயை முடிக்கத் தெரியாமல் அப்படியே விட்டுறாங்க.

அதனால் தேவையில்லாத பிரச்சினைகள் வருது. நானும் இப்படி பேயை விரட்ட முடியாமல் தவிக்கும் சில பூசாரிகளுக்கு அவ்வப்போது உதவி செய்திருக்கேன்" என்று ஒரு புதிய தகவலுடன் முடித்தார் தேவா பூசாரி.

No comments:

Post a Comment