Monday, July 27, 2015

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

மணி   ஸ்ரீகாந்தன்

'சுடுகாட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் போது பிணமாகக் கிடந்தவர் எழுந்து உட்கார்ந்து புகைக்க பீடி கேட்டார்' என்பது போன்ற 'இறந்தவர் மீண்டார்'  செய்திளை இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படியான உண்மைச் சம்பவங்கள் நம்நாட்டில் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்தாலும் 'இறந்ததாக நம்பப்பட்டவர்' உயிருடன் வீட்டுக்கு வந்தார் என்பது போன்றதாகவே அமைந்திருக்கும். ஆனால் தமிழகத்தில் சவப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தவர் உயிருடன் எழுந்த சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. தமிழகத்தில் இறந்த உடலை எம்பார்ம் பண்ணும் முறை கிடையாது.
ஒருவர் இறந்தால் அவரை இருபத்தி நான்கு மணிநேரத்தில் அடக்கம் செய்து விட வேண்டும். அவர் இந்திராகாந்தி, சிவாஜி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் இருபத்தி நான்கு மணிநேரம்தான். அப்படி யாராவது இறந்த நபரின் உறவுக்காரர் வெளிநாட்டில் இருந்து வரவேண்டும் என்றால், பிரேதத்தை மருத்துவமனையில் வைத்திருந்து அடக்கம் செய்யும் நாளன்று கொடுப்பது வழக்கம். ஆனால் இது நம் நாட்டில் வேறு விதமாக இருக்கிறது. இங்கே ஒருவர் இறந்து விட்டார் என்று தெரிந்து விட்டால் உடனே அவரை வெட்டி, அறுத்து 'எம்பார்ம்' பண்ணிவிட்டுதான் கொடுக்கிறார்கள். அதனால் இறந்தவர் உயிர்த்தெழ வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. குறிப்பாக பாம்பு கடித்து இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட பலர் உயிர்த்தெழுந்த சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அதற்கு இங்கே வாய்ப்பே இல்லை. 'எம்பார்ம்' செய்த பிரேதத்தை தொடர்ச்சியாக ஒரு வாரம் வரை வீட்டில் வைத்திருந்து புதைக்கும் எரிக்கும் பழக்கமும் சாதாரணம். ஆனால் நம் இந்து தமிழ் கலாசாரத்தில் இறந்தவரை இருபத்தி நான்கு மணி நேரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் காலா காலமாக இருந்து வந்த பழக்கம்.  ஆனால் இந்நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இறந்தவரை குறைந்தபட்சம் மூன்று நாளாவது வைத்திருந்து அடக்கம் செய்வதே வழமையாக இருக்கிறது. செவ்வாய், வெள்ளி, சனி தினங்களில் இறுதிக் கிரியை செய்வதில்லை என்ற நம்பிக்கையும் இங்கே உள்ளது. மேலும் இரண்டு மூன்று தினங்கள் வைத்திருப்பதென்பது கௌரவ சின்னமாகவும் ஆகிவிட்டது. அதையும் தாண்டி தோட்டப்பகுதிகளில் ஒரு இழவு விழுந்து விட்டது என்றால் அது சில இளைஞர்களுக்கு பண்டிகை மாதிரியாகி விடுகிறது!

அண்மையில் நானும் எனது நண்பரும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது என்னுடன் வந்த ஒருவர் ஒரு விஷயம் சென்னார். "அய்யா, ஊரில ஒரு இழவு நடந்து போச்சு. காலையில் விசயம் கேள்விப்பட்டதும் அதை குல்பா சந்தோசமாக என்கிட்டே சொன்னதோடு நிற்காமல் கொழும்பில் உள்ள அவனோட நண்பர்களுக்கும் போன் போட்டு வரச் சொல்லிட்டான். இனி பிணத்தை ஒரு வாரத்திற்கு வைத்திருந்து சூதாட்டம் நடத்துவார்கள். அவர்களுக்கு இது பெருநாள்தான்!" என்று சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது.
சில தோட்டப் பகுதிகளுக்கு சென்று விசாரித்துப் பார்த்ததில் விஷயங்கள் அம்பலமாகத் தொடங்கின.

"எங்க அண்ணன் முப்பது வருசத்துக்கு மேல் எங்களுக்காக மாடா உழைச்சாரு. அவரை எப்படிங்க ஒரே நாளில் சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும்? அதுதான் ஒரு ரெண்டு நாளு வைத்திருக்க நினைச்சோம். ஆனா பொடியன்மாருங்க ஆசப்பட்டதால் மேலதிகமாக இன்னும் இரண்டு நாளு வச்சிருக்கோம். இரவைக்கு பிஸ்கட்டு, தேத்தண்ணி சேவையும் நாங்களே பார்த்துக்குறோம்னு பையன்கள் சொல்றாங்க" என்று சந்தோசமாக சொன்னார். இப்படி ஒருவர் இறந்து விட்டால் அவரை வைத்து கசிப்பு வியாபாரம் செய்வதற்கும், சூதாட்டம் நடத்துவதற்கும் ஒரு கும்பல் பேயாக அலைவதும் அதிர்ச்சி தரும் உண்மை.

இப்படி மலையகப் பகுதிகளில் மரண வீடுகள் களியாட்ட விடுதிகளாக மாறிவரும் போது தலைநகர் கொழும்பு மட்டும் விதிவிலக்கா என்ன! அங்கே விசயம் வேறுவிதமாக நடக்கிறதாம். வத்தளையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தந்த தகவல் இது. "இங்கே உள்ள பொடியன்கள் ரொம்ப நல்லவங்க. சாவு விழுந்ததும் செத்த வீட்டுக்கு சம்பந்தமே இல்லாதவங்களும் விசயம் கேள்விப்பட்டு அல்லது பத்திரிகைகளில் பார்த்துவிட்டு வீடு தேடி வருவாங்க. வந்து வீட்டுக்காரங்ககிட்டே அனுமதி வாங்கிவிட்டு சூதாட்டம் ஆடுவாங்க. அப்போ நாங்க கொடுக்கிற பிஸ்கட், தேநீர் எல்லாம் வாங்கி சாப்பிடுவாங்க. ஆனால் அந்த செலவை ஏத்துக்க மாட்டாங்க. சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர் தாம் பெற்ற தொகையில் ஒரு தொகையை இழவு வீட்டுக்காரங்களுக்கு சந்தோசமாக கொடுத்து விட்டுப் போவார்கள்" என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் இருந்து யாராவது வரவேண்டி இருந்தால் மட்டும் ஒரு வாரத்திற்கு பிரேதத்தை வைத்திருப்பார்கள். இல்லையென்றால் அவர்களின் வசதிக்கேற்றபடி வைத்திருந்துவிட்டு அடக்கம் செய்து விடுகிறார்கள். ஆனால் சூதாட்டம், கேரம் போட் என்று எதுவுமே கிடையாது. சாவு வீட்டில் இரவு முழுவதும் விழித்திருப்போருக்கு தேனீர், பிஸ்கட் வழங்கப்படும். தவறாமல் வெற்றிலை பாக்கு தட்டு இடம்பிடித்திருக்கும். யாழ்ப்பாண மரண வீடுகளில் இறந்த நபரின் உறவினர்கள் மட்டுமே விடிய விடிய விழித்திருப்பார்களாம். உறவு அல்லாதவர்கள் இரவில் மரண வீட்டில் விழித்திருப்பதில்லை. ஆனால் மலையக கலாசாரத்தில் மரண வீடு ஒரு புதிய கலாசாரமாக மாறி வருகிறது. ஒருவர் இறந்தால் அவரை ஒரு வாரம் வரை வைத்திருந்தால்தான் அவரை பெரிய மனிதராகவும், ஒரே நாளில் அடக்கம் செய்துவிட்டால் அந்த நபரின் குடும்பத்தாரை உலோபிகளாக மதிக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்காகவே சிலர் கடன் பட்டாவது இறந்தவரை குறைந்தபட்சம் மூன்று நாளாவது வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

1 comment: