Saturday, July 25, 2015

இருள் உலகக் கதைகள்

வீரசிங்கம் பூசாரி  சொன்ன  பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-   மணி ஸ்ரீகாந்தன்

ரத்தினபுரி மடப்பத்தர தோட்டத்தில் என்றுமில்லாதவாறு அன்றைய மாலைப்பொழுது அமானுஷ்யம் நிறைந்ததாகவே இருந்தது. அப்போது நேரம் மாலை ஆறரை மணியிருக்கும். இருள் அந்த பிரதேசத்தை விழுங்கிவிட அவசரம் காட்டிக் கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாகவே இப்போதெல்லாம் மாலை மங்கிவரும் போதே ஊரும் அடங்கிப் போய் விடுகிறது. முட்டுச்சந்து, குறுக்குப் பாதைகளில் தெரு நாய்களைத் தவிர மனிதர்கள் எவரையும் பார்க்க முடிவதில்லை. ஆனால் தென்னங் கள் விற்கும் சிரிபால மட்டும் பக்கத்திலிருக்கும் சிங்கள கிராமத்திலிருந்து கள் இறக்கி, பெரிய மண் குடத்தில் ஊற்றி எடுத்து மடபத்தர தோட்டத்திற்குள் வியாபாரத்திற்காக வந்து போவது வழக்கம். அன்றைக்கும் கள் முட்டியுடன் சிரிபால தோட்டத்துக்குள் வந்தான். கொஞ்சம் ஏற்றிக் கொண்டிருந்ததால் பார்வையில் அவனுக்கு கள் கிறக்கம் இருந்தது. 'என்னடா இன்னைக்கும் ரோட்டில் ஒரு பயலையும் காணவில்லையே... அதற்குள் வீட்டுக்குப் பறந்துட்டான்கள' என்று மனதுக்குள் கேள்வி எழுப்பியவாறே ஒற்றையடிப் பாதையில் தள்ளாடி நடந்தான் சிரிபால. சில அடிகள்தான் கடந்திருப்பான். எதிரே பேச்சுக் குரல்கள் கேட்கவே தொலைவில் உற்றுப் பார்த்த போது குணா, ரவி, அரசன் ஆகிய மூவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். வாடிக்கையாளர்கள் சிக்கியதில் அவனுக்கு மகிழ்ச்சி. 'ஆஹா கள்ளுக்குடி மன்னர்கள் வந்தாச்சி! நமக்கு இனி கவலை இல்லப்பா' என்று கள்ளு முட்டியை தோளிலிருந்து இறக்கி பாதையில் வைத்து விட்டு அவர்களுக்காகக் காத்திருந்தான்.

வந்த மூவரும் ஆளுக்கொரு தேங்காய் சிரட்டையை எடுத்து சிரிபாலவிடம் நீட்டினார்கள். முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க கள்ளு முட்டியை தூக்கி சாய்த்தான் சிரிபால. சிரட்டை நிறைய நிறைய அந்த மூவரும் கள்ளை வாங்கி மூக்குமுட்ட குடித்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் கள்ளுப்பானை காலியாகி விட்டது. 'அட நீங்க மூணுபேராகவே கள்ளு முட்டியைக் காலி பண்ணிட்டீங்களேடா' என்றபடியே கள்ளு முட்டியைக் குனிந்து பார்த்துவிட்டு நிமிர்ந்து பார்த்த சிரிபால பேயடித்தவன் மாதிரி அதிர்ச்சிக்குள்ளானான். ஏனென்றால் அங்கே கள்ளுக் குடித்துக் கொண்டிருந்த அந்த மூவரும் திடீரென்று காணாமல் போய் இருந்தார்கள். அவர்கள் கள்ளுக் குடித்த சிரட்டைகள் மூன்றும் நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன. அந்தக் காட்சியைப் பார்த்த சிரிபாலவுக்கு உடம்பில் பூச்சி ஊர்வதைப்போல இருந்தது. எங்கோ ஏதோ பிழைப்பது மாதிரித் தெரிந்தது. திடீரென்று பிரமை பிடித்தவன் போல கையிலிருந்த கள்ளுப் பானையைத் தூக்கி எறிந்து விட்டு மடப்பத்தர மேட்டு லயத்தை நோக்கி 'அய்யய்யோ....!' என்று கத்திக் கொண்டே ஓட்டமெடுத்தான்.
வீரசிங்கம் பூசாரி
லயத்தை அண்மித்த சிரிபால மூர்ச்சையாகி விழுவதை பார்த்த அந்த குடியிருப்பு வாசிகள் ஓடிவந்து அவனை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தனர். என்ன நடந்தது என்று கேட்டபோது அவன் சொன்ன விசயம் கூடியிருந்த ஊர்வாசிகளை குலை நடுங்கச் செய்தது. ஆட்டோ விபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு பலியான அரசன், ரவி, குணா ஆகிய மூவருமே ஆவிகளாக வந்து சிரிபாலவிடம் கள்ளுக் குடித்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு யார்தான் பயப்படாமல் இருப்பார்கள்! இந்தக் கதையைக் கேட்ட பின்னர் குறிப்பிட்ட அந்த இடத்தைப் பார்வையிட வந்த சில இளைஞர்கள் அங்கே கள்ளுக் குடித்த தேங்காய் சிரட்டைகள் கிடப்பதைக் கண்டிருக்கிறார்கள். கள்ளுச் சிரட்டைகளைத் தாம் கண்டதை அவர்கள் லயத்துக்குச் சென்று சொல்லவும் மளமளவென விஷயம் தோட்டமெங்கும் பரவியது. ஏற்கனவே அரசல் புரசலாக இருந்த பேய்ப்பயம் இந்தச் சம்பவத்தால் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது. தோட்ட வாசிகள் ஒடுங்கிப் போனார்கள். மடப்பத்தர தோட்டத்தில் பேயப்பீதி பீடுநடை போடவே, மாலையாகும் முன்னே எல்லோரும் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். எல்லோர் வீடுகளுக்கு முன்னாலும் ஆலமர உயரத்துக்கு அடர்த்தியாக பேய்கள் பெருங் கர்ஜனையோடு நிற்பதாக கற்பனை செய்து கொண்டு 'ஒண்ணுக்கு' இருக்கக்கூட கதவைத் திறக்காமல் பயத்தில் உறைந்து போனார்கள்.

ஆட்டோ விபத்தில் 'அவலச்சாவு அடைந்தவர்களின்' ஆவி அவ்வளவு சீக்கிரத்தில் போகாது என்று ஊர் பெரிசுகளும் வாய்க்கு வந்தபடி கதைகளை அளந்துவிட விசயம் பூதாகரமாகி ஊரையே பேய் பிடித்து ஆட்டத் தொடங்கியது. சமைத்து வைத்த சோறு சில நிமிடங்களிலேயே கெட்டுப் போவதும், சோற்றில் மண் கிடப்பதும், வீட்டுக் கூரையில் மண் விழுவது என்று அந்த ஊர் மக்கள் தொடர்ந்து பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தனர். ஒற்றையடிப் பாதையில் நடக்கும் போது எதிரில் தெரிந்தவர் வந்தாலும் வரும் உருவம் அவர்தானா அல்லது அவர் உருவில் வரும் பேயா? என்று சந்தேகப்படும் அளவுக்கு ஊரில் கிலி முற்றிக் கிடந்தது. தீய சக்தியை விரட்டினால்தான் ஊருக்கு விமோசனம் என்பதை புரிந்து கொண்ட அந்த ஊர்வாசிகள் ஒன்றுக்கூடி முடிவெடுத்தனர்.

ஒருநாள் இருபது பேர் கொண்ட குழுவாக அவர்கள் ஒன்று சேர்ந்து              வேன் வண்டி பேசி வீரசிங்கம் பூசாரியைச் சந்திக்க அவர் வீட்டுக்கு முன்பாகச் சென்று இறங்கினார்கள். கல்யாண வீட்டுக்கு வந்து இறங்குவது போல சலசலவென இறங்கி வீரசிங்கம் வீட்டை நோக்கி வருவதைப் பார்த்த பூசாரிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டதாம். பிறகு வந்தவர்கள் முகத்தில் இனம்புரியாத ஒரு சோகம் இருப்பதை பார்த்த பூசாரி அவர்களை பாய்விரித்து அமரச் சொன்னார். ஒரு முக்காலியைப் போட்டு அதில் பூசாரி அமர்ந்து கொண்டு ஒரு அர்த்தபுஷ்டி புன்னகையை வீசினார். பின்னர் எழுந்து பூஜையறைக்குள் சென்று தமது இஷ்ட தெய்வத்தை அழைத்தார். பிறகு நடந்த சம்பவங்களை அவர் சாமியாடியபடியே தெய்வ வாக்காக கூறத் தொடங்கினார்.

"மூணு நாளைக்கு முன்னாடி ஒரு மாடு செத்துப் போனதே, தெரியுமாடா? உங்க ஊருல வர இருந்த மனுஷ பலியை நான்தான்டா தடுத்து நிறுத்தினேன்... அதுக்கு பரிகாரமாகத்தான் அந்த மாட்டை காவு வாங்கினேன" என்று வீரசிங்கம் உடம்பிலிருந்த மதுரைவீரன் சொன்னதைக் கேட்ட ஊர்வாசிகள் வெலவெலத்துப் போனார்கள். பிறகு தீய சக்தியை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்று வீரசிங்கத்திடம் கேட்டார்கள்.

வீரசிங்கம் ஒரு தேங்காயை மந்திரித்து அவர்களிடம் கொடுத்தார். "இதைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு போங்கள். இறந்த அந்த மூன்று பிரேதங்களும் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் முச்சந்தியில் வைத்திருப்பாங்க இல்லையா, அந்த இடத்துக்குப் போய் இந்தத் தேங்காயை அதிகாலையில் அங்கே வைத்துவிட்டு வாங்க. வைத்த அரை மணித்தியாலத்தில் இந்தத் தேங்காய் மூன்று துண்டுகளாக வெடிக்கும். தீய சக்தி இருந்தா வெடிக்கும். இல்லாட்டா வெடிக்காது. தீய சக்தி இருக்கா இல்லையா என்கிறதை இதன்மூலம் ருசுப்படுத்தலாம்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

பூசாரி சொல்லியபடியே தேங்காயை முச்சந்தியில் வைத்தார்கள். திரும்பி வந்து பார்த்தபோது அந்தத் தேங்காய் மூன்று துண்டுகளாக வெடித்திருப்பதைக் கண்டு அவர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். உடனடியாகத் தகவல் அனுப்பி பரிகாரம் செய்து தரும்படி வீரசிங்கத்தை உடனே மடபத்தரைக்கு வருமாறு அழைத்தார்கள்.

வீரசிங்கமும் தனது உதவியாளர்களை அழைத்துக்கொண்டு மடப்பத்தரை தோட்டத்திற்குப் புறப்பட்டார். ஊர் கூடும் ஒரு பொது இடத்தில் பந்தல் போட்டு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வீரசிங்கம் கேட்டுக்கொண்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட உதவியாளர்கள் அரை மணித்தியாலத்தில் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்கள்.

சக்கர வியூகத்தில் பூசாரி அமர்ந்த சில நிமிடங்களிலேயே மதுரைவீரன் அவர் உடம்பில் இறங்க பூசாரி ஆட்டம் போடத் தொடங்கினார்.

"பதினொரு வருசமா இந்த ஊரிலே உயிர்ப் பலி நடக்குதேடா அது தெரியுமா?"என்று சாமி உரக்க சத்தம் போட்டுக் கேட்டபோது ஊரே "ஆமா சாமி" என்று கோஷம் போட்டது. பிறகு அந்த ஊரில் வீட்டுக்குப் பக்கத்திலேயே கோயில் அமைந்திருப்பதால் சுத்தம் போதாது என்பதும் தீட்டு போன்ற காரணங்களால் சாமிக் குத்தம் நடப்பதும் தெரிய வந்தது. விரைவிலேயே மாற்று ஏற்பாடுகளை செய்வதாக ஊர்க்காரர்கள் சொன்னார்கள்.

இது இப்படியிருக்க, பூசாரி ஆவிகளை தன்வசப்படுத்துவதற்கான முடிச்சுகளை போடத் தொடங்கினார். வலையில் சிக்காது தீய சக்திகள் பூசாரிக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தன. மிகவும் கடுப்பான பூசாரி தன்வசமிருந்த சில ஏவல் சக்திகளை தீய சக்திகள் மீது மின்னலைகள் போல ஏவிவிட்டார். இந்தப் பாய்ச்சல் கண்டு அதிர்ந்துபோன தீய சக்திகள் வீரசிங்கத்தின் சக்கர வியூகத்திற்குள் வந்து தானாக சிக்கிக் கொண்டன.
வானத்தைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்த பூசாரி, பிறகு அந்த தீய சக்திகளில் இரண்டைப் பிடித்து தயாராக வைத்திருந்த மூன்று சேவல்களில் இரண்டின் மீது இறக்கினார். சேவல்கள் மீது கற்பூரத்தை கொளுத்தினார். கற்பூரம் அணைவதற்குச் சற்றுமுன்பாக பளீர் பளீரென சேவல்களின் தலைகளைத் துண்டித்தெறிந்தார். பின்னர் மூன்றாவது ஆவியையும் பிடித்து மூன்றாவதாக இருந்த சேவலின் மீது இறக்கிவிட்டு கற்பூரத்தைக் கொளுத்தி சேவலின் முதுகில் வைத்தார். அது மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அப்படியே அமர்ந்தபடி அமைதியாக இருந்தது. கற்பூரம் எரிந்து முடிந்த அந்தக் கருப்புச் சேவல் தரையில் அலங்கோலமாக படுத்தது. உடனே அங்கே கூடியிருந்தவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டு போனார்கள் ஏனென்றால் ஆட்டோ விபத்தில் பலியான அரசன் அப்படித்தான் உடல் சிதைந்து உருக்குலைந்து கிடந்தானாம். பூசாரி அந்த சேவலையும் காவு கொடுத்து வெற்றிகரமாக ஆவிகளை வெளியேற்றினார்.

பின்னர் அந்த ஊரில் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தீப்பந்தத்தோடு கிளம்பிய வீரசிங்கம் ஒவ்வொரு வீடாக புகுந்து தீய சக்திகள் வீடுகளை அண்டிவிடாமல் இருக்கும் வகையில் குங்கிலிய புகை அடிக்கத் தொடங்கினார். பூசாரியோடு அவரின் தம்பியும் அந்தப் பணியில் இறங்கினார். காலை எட்டு மணிக்கு அனைத்து வேலையும் முடித்துவிட்டு வெற்றிக்களிப்போடு வீரசிங்கம் வீடு திரும்பினார். இப்போது மடபத்தர தோட்டத்தில் ஆவி பயம் நீங்கி பூரண அமைதி நிலவுகிறதாக பூசாரி சொல்கிறார்.

No comments:

Post a Comment