Saturday, July 18, 2015

தேவதாசி வரலாறு -8

பரத நாட்டியத்தைத் தந்த 

தேவதாசியர்


அருள் சத்தியநாதன்

நாகரத்தினம் அம்மாள் ஒரு தேவதாசியானாலும் தன் இசை, நடன திறமையால் அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் மக்கள் மத்தியில் கௌரவமான இடத்தை அவரால் பெற முடிந்திருந்தது. அவருக்கு சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தனவந்தர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. மெட்ராஸ் மாநிலத்து உயர் குடியினர் அவரை கௌரவமாக நடத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் தேவதாசி முறை இந்து சமயத்தின் ஒரு அங்கம் என்றும் தேவ சேவைக்கு பெண்களை அர்ப்பணித்தல் என்பது சமயக் கடமை என்றும் கருதியதாகவே அறிய முடிகிறது. இந்த நம்பிக்கைக்கு அப்பால் பெண்களை இழிவுபடுத்தல், அடிமைப்படுத்தல், விபசாரத்துக்கு உட்படுத்தல், நவீன காலத்துக்கு ஒவ்வாத தன்மை இதில் இருப்பது போன்ற அம்சங்கள் பற்றி சிந்திக்கும் திறன் பலரிடம் இருக்கவில்லை. தேவதாசி முறை ஒழிப்பு என்பது இந்து கலாசாரத்தில் உள்ள ஒரு பண்பை அழித்தொழிப்பதாகும் என்றே தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் கருதினர்.
முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிட்டது 1926 ஆம் ஆண்டு. ஆனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் 1947 ஆம் ஆண்டிலேயே மெட்ராஸ் சட்டசபையில் இதை சட்டமாகக் கொண்டுவர முடிந்தது என்பதில் இருந்தே தேவதாசி முறையை ஒழிக்க சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் தயங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணக்கரு 1926 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே பிரசவித்துவிட்டது. இதை ஒழிக்கப்பாடுபட்ட முத்துலட்சுமி ரெட்டியும் கூட தேவதாசி மரபில் வந்த பெண்மணியே. 1900 முதல் எழுந்திருந்த எதிர்ப்பு அலைகளை உள்வாங்கிக் கொண்டதாலேயே, இம்முறையை ஒழித்தேயாக வேண்டும் என்ற உறுதியை இறுதிவரை அவரால் கொண்டிருக்க முடிந்தது. இந்த தொடர்ச்சியான எதிர்ப்பலைகள் காரணமாக கோவில்களில் தேவதாசியரை அமர்த்துவதில் கோவில் நிர்வாகங்கள் அசட்டையாக இருக்கத் தொடங்கின. தேவதாசியர் குலத்தில் வந்த பெண்கள் கோவில்களில் சேவையாற்ற வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டளவில் பெருமளவிலான தேவதாசியர் கோவில் பணியாற்றுவதில் இருந்து விலகியிருந்தனர். தேவதாசியர் தொடர்பான விவகாரம் சர்ச்சையாக மாறியிருந்ததே இதற்குப் பிரதான காரணம்.

தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்படாமல் இருப்பதற்காக நாகரத்தினம் அம்மாள் பல முயற்சிகள் மேற்கொண்டார். முடிந்தவரை போராடினார். சட்டம் வருவதை தாமதிக்கச் செய்தார். ஆனால், தேவதாசி முறைக்கும் தேவதாசி குலத்துக்கும் சாவுமணி அடிக்கப்படப் போவதை அவர் நன்குணர்ந்திருந்தார். அதனால்தான் அவர்தன் வழிமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டு, மேடைக் கச்சேரிகள், பக்தி மார்க்கம் என நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

தேவதாசியர் தமது காலத்தில் ஆடிய ஆட்டம் சதிர் என அழைக்கப்பட்டது. இந்த சதிராட்டமே பின்னர் பரத நாட்டியம் எனப் பெயர் பெற்றது. ஆனால் இவர்கள், தாம் ஆடிய சதிர் ஆட்டம் பிற்காலத்தில் பரத நாட்டிடியம் எனப் பெயர்பெறும் என்பதை அறிந்திருக்கவில்லை. தேவதாசியர்களே தமிழுக்கு பரத நாட்டியத்தை அளித்தவர்கள் என்பது பிற்காலத்தில் மூடி மறைக்கப்பட்டது. பரத முனிவர் அருளிய நடன வடிவமே பரத நாட்டியம் என்ற உருவாக்கம் பின்னர் எழுந்ததோடு, பரத நாட்டியம் பயில்வோருக்கு அப்படியே சொல்லப்பட்டது. தேவதாசியரின் பங்களிப்பு மூடி மறைக்கப்பட்டு, பரத நாட்டியத்துக்கு தெய்வீக முலாம் பூசப்பட்டது. தேவதாசியர் முறை ஒழிக்கப்பட்டபோது, அவர்கள் ஆடிய நடன வடிவத்தை உயர் குடியைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்டு அதை வளப்படுத்திக் கொண்டனர். சதிராட்டம் கேவலமான நடன வடிவம் என்றும் பரதநாட்டியம் தெய்வீகக்கலை என்றும் பிரித்து கற்பிக்கப்பட்டு அதுவே உண்மை போலக் காட்டப்பட்டது. ஏனெனில் தேவதாசியரின் சதிராட்டமே பரத நாட்டியம் என்பதை ஒப்புக் கொள்வது, இதை ஆடும் உயர்குல நடன மணிகளுக்கு இழுக்காக அமையும் என்பதே இதற்கான காரணமாகும். எனினும் பிற்காலத்தில் பரத நாட்டியத்தின் தொன்மை குறித்து ஆராய்ந்த நேர்மையான ஆய்வாளர்கள், உண்மையை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வெளிக்கொண்டுவந்தனர்.

எனவே, யாருக்கு பெருமை போய்ச்சேர வேண்டுமோ அவர்களுக்கு அதை வழங்குவதே சரியானது. ஏனெனில் தமிழர்களுக்கென ஒரு நாட்டியத்தை உருவாக்கி அதைக்காப்பாற்றி வந்தவர்கள் தேவதாசி குலத்தினரே. கர்நாடக சங்கீதத்தையும் பரத நாட்டியத்தையும் தந்தவர்கள் இவர்களே என்பதை மூடி மறைப்பது எவ்வகையிலும் நேர்மையாக அமையாது.
'எனவே இக்கலையின் தமிழ் வேர்களையும், அதைக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வது யாராக இருந்த போதிலும் அதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைய பரதநிகழ் வடிவத்தை (format) அமைத்துத் தந்தவர்கள் தஞ்சை நால்வர் எனும் இசை வேளாளர் மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபக் கூரையில் இந்த நால்வர் நட்டுவாங்கம் செய்ய ஒரு தேவதாசி மங்கை நடனமாடும் ஓவியம் உள்ளது' என்று குறிப்பிடுகிறார் அ. மார்க்ஸ் தனது 'தேவதாசி முறையும் பரதநாட்டியமும்' என்ற கட்டுரையில்.

தமிழகத்தில் தேவரடியார் மரபு என்ற நூலை கலாநிதி நர்மதா எழுதியுள்ளார். தற்போது அவர், பரத நாட்டியத்தில் தேவரடியார் மரபு பற்றி ஒரு நூலை எழுதி வெளியிடவுள்ளார். பி.எம். சுந்தரம் என்பவர் தேவரடியார் பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார். லஷ்மி விஸ்வநாதன் WOMEN OF PRIDE THE DEVADASI HERITAGE என்றொரு நூலை எழுதியுள்ளார். நடனமணி பாலசரஸ்வதி குறித்த ஒரு ஆவணப்படத்தை 'பாலா' என்ற பெயரில் சத்யஜித்ரே எடுத்துள்ளார்.

'சொர்ணமால்யா தனது பிச். எச்.டி. ஆய்வுக்காக 'ரகுநாத அபுதவமு' என்ற நாட்டியம் குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வில், பரத நாட்டியம் என இன்று அறியப்படும் நடனத்தில் பாரசீக நடனத்தின் பாதிப்புக் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சொர்ணமால்யாவின் ஆய்வு நேர்முகத் தேர்வின்போது உயர்சாதி அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். அதாவது அவர்களால் போற்றப்படும் நாட்டிய மரபில் பாரசீக அல்லது முஸ்லிம் பண்பாட்டுத்தாக்கம் உள்ளது என்ற உண்மையை அவர்கள் ஏற்கத் தயாரில்லை என்பதையே இது வெளிப்படுத்தியது. மேலும் பரத நாட்டியத்தில் தேவதாசியரின் பங்களிப்பு குறித்து சொர்ணமால்யா கொடுக்கும் அதிக அழுத்தமும் இந்த உயர்குடி அறிவு ஜீவிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை 'யாதும்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்த கோம்பை அன்வர் சுட்டிக்காட்டுகிறார். குடந்தை கோவில் சிற்பமொன்று எல்லோரும் கருதுவதுபோல கிருஷ்ணனல்ல என்றும் அது தமிழ் கடவுளான முருகனுடையது என்றும் சொர்ணமால்யா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை பரதநாட்டியத் தாரகையான பத்மா சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்திருந்தாராம்.

இத்தகவல்களை எல்லாம் அ.மார்க்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

(தொடரும்) 

No comments:

Post a Comment