Saturday, July 18, 2015

தமிழர்களின் காதலர் தினம்

பிரசித்தி  பெற்ற றைகம் காமன் கூத்து


மணி   ஸ்ரீகாந்தன்

"ண்ட சரங்கள் எல்லாம் பிண்டமெல்லாம் துலங்க ஆவணி புவனமதில் மாரிவரும் மாசிதனில் அந்த சந்தர் உலகமெல்லாம் பாரிவரும் மாசிதனில் அம்மாவாசை பிறையும் நவமுள்ள மூன்றாம் நாள் அருள் நிறைந்த வேல் மதனே நிறைவாகக் கொண்டாட அழகு மதன் தகன லீலா வடிவு மகன் திருளாம் அங்குச செகனம் எல்லாம் எங்கும் எங்கும் அலங்கரித்து...." என்ற காமன் கூத்து ஒப்பாரி பாடல்கள் மாசி மாதம் தொடங்கிய உடனே பறையிசையோடு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. காமன் கூத்தானது மாசி மூன்றாம் பிறையில் அமாவாசை முடிய மூன்றாம் நாள் கம்பம் நாட்டப்படுகின்றது.
நம் நாட்டில் மலையகத்திலும் இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட சிறு தோட்ட பகுதிகளிலும் காமன் விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயரால் கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்களோடு, கிராமிய கலைகளும், புலம்பெயர்ந்து வந்து மலையகத்தில் குடியேறிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொன்னர் சங்கர், அர்சுனன் தபசு, நல்ல தங்காள் கதை, நொண்டி மேளம், காத்தவராயன் கதை, பொய்க்கால் ஆட்டம், குறவஞ்சி கூத்து, உள்ளிட்ட நாட்டார் கலை வடிவங்களின் வழித்தடத்தில் மிகவும் உன்னதமான கூத்து வடிவமாக இன்றுவரை 'காமன் கூத்து' மக்களின் அமோக ஆதரவுடன் ஆடப்பட்டு வருகிறது. கொழும்புக்கு மிகவும் அருகில் உள்ள றைகம் தோட்டத்திலும் இவ்விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் வெகு சிறப்பாக காமன் கூத்து நடைபெறும் இடங்களில் றைகமவும் ஒன்றாகும். மின் விளக்கு அலங்காரத்திற்காக மட்டும் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி பந்தலை அழகுபடுத்தும் ஏற்பாட்டாளர்கள் வரலாற்று வேடங்களில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. ஆனால் வழமைக்கு மாறாக இம்முறை காமன் கதையை திறம்பட செய்ததோடு தெய்வ வேடங்களையும் மிகவும் சிறப்பாக அமைத்திருந்தார்கள்.
எஸ்.ராமர்
இதற்கு புதிய நிர்வாகத்தை கையில் எடுத்திருக்கும் ரவீந்திரகுமார், மோகன்ராஜ், சசிக்குமார், ஸ்டீபன் உள்ளிட்ட இளைஞரனியினரின் கடும் உழைப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மலையகத்தில் மஸ்கெலியா 'லங்கா' தோட்டத்தைச் சேர்ந்த கூத்து வாத்தியார் சுப்ரமணியம் ராமரின் தலைமையிலேயே காமன் கூத்து இம்முறை அரங்கேறியது. நவரத்தின ஒப்பாரி, ஜனன காண்டம், உள்ளிட்ட நூல்களின்படி தாள அச்சரம் தப்பாது சங்கதிகளை பாடி அசத்துவதில் அவர் கைத்தேர்ந்தவர்தான்.

"எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து இன்றுவரை என்னோட பரம்பரையைச் சேர்ந்தவங்கதான் காமன் கூத்து பாடல்களை பாடி வருகிறார்கள். முறையான பயிற்சி பெற்றே இதை நான் செய்து வருகிறேன். எனக்குத் தெரிய எங்கப்பா கூத்துப் பாடல்களை பாடினார். அப்புறம் நான், அடுத்து என் மகன். இப்போ அவரு ஆண்டு மூன்றில் கல்வி கற்கிறார். அவருக்கும் பாடல்களை முறையாகச் சொல்லிக் கொடுக்கிறேன்" என்று சொல்லும்போதே ராமரின் முகத்தில் பெருமிதம். தமக்குப் பிறகு இந்தக் கலை அழித்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். காமன் கூத்து பாடல்களை பாட ஆசைப்படும் கத்துக்குட்டிகள் ராமரிடம் பயிற்சி பெற்றாளே போதும். மனிதர் காமன் கூத்து ஒப்பாரிகள் பலவற்றை விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
வாத்தியாரோடு வந்திருந்த ஒப்பனைக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏனைய கலைஞர்களும் திறம்பட உழைத்து றைகம் காமன் கூத்து வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறார்கள்.
கரும்பு தொட்டில்
காமன் கூத்து விழாக்களில் வேடங்கள் இடங்களுக்கு அமைய வேறுபடும். மலையகத்தில் பெரும்பாலும் 85 தொடக்கம் 108 வேடங்கள் வரை அணியப்பட்டு நடத்தப்படுகிறது. ஆனால் றைகம் உள்ளிட்ட சிறுதோட்டப் பகுதிகளில் ஐந்து தொடக்கம் 32 வேடங்களோடு ஆட்டத்தை முடித்துக்கொள்கிறார்கள். இதனால் அந்தக் கூத்துக் கதை முழுமை பெறாமலேயே அடுத்தது என்ன? என்பது போல கேள்விக் குறியோடு நின்று விடுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாட்டு வாத்தியார் ராமர், எமன், மோகினி போன்ற இரண்டு வேடங்களை மேலதிகமாக போட்டு கதையை முடித்தார். இதனால் கதையில் பிழை இருப்பதாக சொல்லி ஆதங்கப்பட்ட சில பழமைவாதிகள் 'சாமி குத்தம் கண்ணு போயிடும்' என்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததை தெரு முனையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

காமன் கூத்து விழா பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாகவே விளங்கி வருகிறது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களில் பெண்களே பெருவாரியாக திரண்டு, குழந்தை குட்டிகளோடு திடலில் இடம்பிடித்து விடிய விடிய அமர்ந்திருந்தார்கள்.

ரதி, மதன் திருமணத்தை குருக்கள் மந்திரம் ஓதி நடாத்தி வைத்தப் பிறகு அங்கே மொய் பணம் பிடிக்கப்படுகிறது. அறிவிப்பாளர்கள் மொய்ப்பணத்தை பற்றி அறிவித்ததும் அங்கே திடலில் வைக்கப்பட்டிருந்த தாம்பூலத்தட்டில் குறைந்த பட்சம் நூறு ரூபா நோட்டிலிருந்து ஐநூறு ரூபா வரை நோட்டுகள் சில நொடிகளிலேயே மலையாக குவிந்து விடுகிறது. முழுக்க முழுக்க அந்தப் பண நோட்டுக்களை பெண்களே சர்வ சாதாரணமாக தட்டில் போட்டு விட்டு மனசு நிறைந்த பூரிப்போடு செல்கிறார்கள்.
காளி வேடம்
விழாவில் நேர்த்திக்கடன் முக்கிய அம்சமாக இருக்கிறது. காமன் நாட்டப்பட்டு காமன் விழா தொடங்கும் நாளில், நேர்த்திக் கடன் வைப்பார்கள். இதில் இளம் பெண்கள், இளைஞர்கள், காதல் கைகூடவும், திருமணமாகாத மகன், மகளுக்காக பெற்றோர்களும் உறவினர்களும் காமனை வேண்டி நேர்த்தி வைக்கிறார்கள். அதோடு எதிரிகளை தண்டிக்கவும், நோய்வாய்ப்பட்டோர் குணமடையவும் இங்கே காமக் கடவுளிடம் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அப்படி செய்யப்படும் நேர்த்திகள் அடுத்த ஆண்டே காமன் கடவுளால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை ஆண்டாண்டுகாலமாக இருந்து வருகிறது. அன்றைய நிகழ்வில் குழந்தை பாக்கியம் வேண்டி காமனிடம் நேர்த்திக்கடன் வைத்தவர்கள் காமக் கடவுளின் ஆசிர்வாதத்தால் குழந்தை பெற்றதற்கு நன்றிக் கடனாக தமது குழந்தைகளை தூக்கி வந்திருந்தார்கள். பெரிய செங்கரும்பு இரண்டில் தொட்டில் கட்டி அதை ரதி, மதன் வேடம் தரித்தவர்களின் தோளில் வைத்து தமது குழந்தைகளை அத்தொட்டிலில் இட்டு தாலாட்டுப் பாடி மகிழ்ந்தனர். பார்ப்போரை இக்காட்சி ஆனந்தம் கொள்ளச் செய்தது.

விழாவில் குறவன் குறத்தியாக வலம் வந்த விக்னேஷ்,அஜித் சபையோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார்கள். பெண் வேடத்திற்கு ரவிக்கையும், சேலையும், கொஞ்சம் பவுடரும் இருந்தால் போதும் குறத்தி வேடம் போட்டு விடலாம் என்றிருந்த மாயையை விக்னேஸ் உடைத்தெறிந்து அச்சொட்டான குறத்தியாக வலம் வந்து சபையோரை கவர்ந்ததில் வியப்பில்லைதான். ஏனெனில் அதற்கான உடல்வாகு அவருக்கு இருந்தது.
குறவனும்,குறத்தியும்
காமன் கூத்தில் பார்வையாளர்களை மிரட்டும் வேடங்களில் காளி, வீரபத்திரன் முதன்மையானவர்கள். தீப்பந்த அலங்காரத்தோடு பக்தர்கள் நேர்த்தியாக கொடுக்கும் கோழிகளை வாயில் கடித்து குதறி ரத்தம் சொட்ட சொட்ட கூத்து நடக்கும் திடலுக்கு ஆடி வருவார்கள். சாமிகளுக்கு அருள் ரொம்ப ஓவராகிப் போனால் ஆட்டம் பிழைத்துப் போய்விடும். ஆனால் காளி வேடம் தரித்திருந்த திலக்ராஜா பூசாரி அருளை தமது கட்டுப்பாட்டில் வைத்து திறம்படி ஆடி வந்து பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தார். அப்போது என் பின்னே வந்த ஒருவர் "சாமின்னா இப்படி ஆடக்கூடாதுங்க... ஆடிவரும்போது கீழே விழுந்து மண்ணில் புரண்டு மண் திங்க வேண்டும். அப்போ நாங்க ஒரு இருபது பேர் சாமி மேல விழுந்து படுத்து பிடிச்சு வருவோம்"
என்று பக்திப் பழமாக என்னிடம் தான் கண்ட குறைபாட்டை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது இடையில் ஓடிவந்த ஒருவர் "சாமிக்கிட்டே ரெண்டு கோழிகளுக்கு ஆட்டையை போட்டுட்டேன்" என்று தாம் செய்த திருட்டு சாதனையை சொல்லி மெய் சிலர்த்தார். சாமிகள் குரல்வளையை கடித்துக் கொன்றுபோடும் சேவல்களை கூட வரும் ஒருவர் சாக்குப் பைக்குள் போட்டு பத்திரப்படுத்துவார். இப்படி சேகரிக்கப்படும் சேவல்களைத் திருடி சாப்பிடவும் ஒரு கூட்டம் சாமியோடு சாமியாடிக் கொண்டிருப்பதை அப்போதுதான் அவதானித்தோம்.
விழாவுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் குளிர்பானங்கள் வழங்குவது முடியாத காரியம்தான். ஆனாலும் சில அமைப்புகள் மக்கள் நலன் கருதி அதையும் செய்து கொண்டிருந்தன. 'பிரைட் ஸ்டார்' குழுவினர் கொட்டும் பனியில் காய்கறி சூப்பை சுடச் சுட பார்வையாளர்களுக்கு வழங்கி குளிரை இதமாக்கி தந்திருந்தார்கள். நாமும் சூடா ஒரு கப் சூப்பை வாங்கி குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

No comments:

Post a Comment