Thursday, July 30, 2015

இருள் உலகக் கதைகள்

தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-  மணி   ஸ்ரீகாந்தன்

அப்போது நேரம் மாலை ஆறரை இருக்கும். புளத்சிங்கள பிரதேசம் இருளில் தொலைந்து போகத் தயாராகிக் கொண்டிருந்தது. இறப்பர் மரங்களை பெருமளவாகக் கொண்ட அந்தப் பகுதியில் நிறையத் தோட்டங்கள் அமைந்திருந்தன. அவற்றில் 'குடாகங்க' தோட்டமும் ஒன்று. களுகங்கை இத்தோட்டத்தின் குறுக்கே கடந்து போவதால் இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாகக் காட்சியளித்தது. ஆனாலும் இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் அமைதியான அந்த இடத்தின் தோற்றமே மாறிப்போயிருந்தது. இருள் அந்தப் பிரதேசத்தின் அழகை மூழ்கடித்து ஒரு அமானுஷ்ய தோற்றத்தை உருவாக்கியிருந்தது.

அமானுஷ்யமான அந்த இரவுவேளையை சிதைப்பது போல மேட்டுலயத்து தெருமுனையில் படுத்துக்கிடந்த சொறி நாய் ஒன்று கிழக்குப் பக்கமாக வெறித்துப் பார்த்தபடி ஊளையிடத் தொடங்கியது.
"சரியாக சரசு சுருக்கிட்டுச் செத்துப்போன வாகை மரத்துப் பக்கமாகப் பார்த்து ஊளையிடுது... மனுஷன் கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகளோட உருவம் நாய் கண்ணுக்குத் தெரியும் என சொல்றாங்களே அது உண்மைதான்" என்று வீட்டின் விறாந்தையில் படுத்திருந்த முத்துக்கருப்பன் கங்காணி கதவைத் திறந்து வெளியே பார்த்து விட்டு வீட்டுக் கதவைப் படாரெனச் சாத்தினார்.
"நாய் ஊளையிடுற நேரத்தில யாராவது வெளியே போனா தொலைச்சுப்புடுவேன் தொலைச்சி" என்று அடித்தொண்டையில் கத்திவிட்டு பாயில் சுருண்டார். கங்காணி போட்ட சத்தத்தில் அந்த வீட்டில் இருந்த சிறுசுகள் கொலை நடுக்கத்தில் மூலையில் பதுங்கிக் கிடந்தார்கள்.

அந்த ஆற்றோரத்தில் நிற்கும் வாகை மரத்திற்கு ஐம்பது வயதிருக்கும். ரொம்பவும் முதிர்ச்சியான மரம். இருட்டில் பார்க்க அது தலைவிரி கோலத்துடன் ஒரு கொடிய அரக்கி நிற்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால் அதையும் தாண்டி இன்னொரு தோற்றமும் அம்மரத்துக்கு உண்டு. அந்தக் காலத்தில் அவ்வாகை மரக்கிளையில் சரசு என்ற பெண் தூக்குப் போட்டுக்கொண்டு இறந்து போனதாக ஒரு கதை அப்பகுதியில் பேசப்பட்டு வந்ததால் இப்போது அந்த வாகை மரத்திற்கு சரசு மரம் என்ற சிறப்புப் பெயரும் ஒட்டிக்கொண்டது.
தேவா பூசாரி
ஏற்கனவே தலைவிரிகோலமாக இருந்த மரத்துக்கு தூக்கு மரம் என்ற பெயரும் சேர்ந்து கொள்ளவே அந்த மரத்தின் மீதான அச்சம் பன்மடங்காக அதிகரித்துப் போனதில் வியப்பில்லை. எனினும் அந்த வாகை மரத்தின் கீழேயே குடாகங்க ஆறும் ஓடுவதால் அந்தப் பகுதி மக்கள் அங்கேதான் குளிக்கவும் செய்தார்கள். வாலிபர்கள் கரணம் அடித்து குதித்து நீச்சல் அடிக்கவும் அங்கே நின்றிருந்த வாகை மரத்தின் பெரிய மரக்கிளைகள் வளைந்து சரிந்து தாழ்ந்திருந்தன. ஆனாலும் அந்த இடத்தில் மாலை ஐந்து மணிக்குப் பிறகு குளிப்பதை எல்லோரும் தவிர்த்து வந்தார்கள். சரசு பயம்! அதற்குக் காரணம் இருந்தது. அந்த மரத்தில் மோகினிப் பேய் குடியேறியிருந்ததாக ஒரு கதை பரவியிருந்தது. மாலை ஐந்து மணிக்குப் பிறகு அந்த இடத்தில் இருளும் நிசப்தமும் நிரந்தரமாகக் குடியேறிவிடும். அந்த பூரண அமைதி மறுநாள் காலை வரை தொடரும். ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை.

மாலை ஐந்து மணியைக் கடந்து விட்டிருந்த அந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் வீரசாமி, தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஆற்றுக்குக் குளிக்க வந்தான். வீரசாமியின் மனைவி முத்தழகு கையில் இரண்டு வயது பெண் குழந்தை. வந்தவர்கள் நேரம் கடந்து விட்டதை உணர்ந்து குளிப்பதற்கு அவசரம் காட்டினார்கள். வாகை மரத்தடி நிழலில் ஒரு துணித் துண்டை விரித்து அதில் குழந்தையை அமர வைத்து விட்டு மார்பளவு கட்டிய பாவாடையுடன் தண்ணீரில் இறங்கினாள் முத்தழகு. இரண்டு முறை மூழ்கி எழுந்த வீரசாமி ஆற்றங்கரையில் நின்று சவர்க்காரத்தை உடம்பில் தேய்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது வீல் என்று குழந்தை அழும் சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பியவன் சடாரென முகத்தை திருப்பி குழந்தை அமர்ந்திருந்த திசையைப் பார்த்தான். அங்கே எந்தவித அசைவும் தெரியவில்லை. ஆனால் குழந்தை யாரோ கிள்ளிவிட்டது போல வீல் என்று கத்திக்கொண்டிருந்தது. ஆற்றில் மூழ்கி எழுந்த முத்தழகு பதறியடித்துக் கொண்டு குழந்தையிடம் ஓடிவந்து பார்த்தாள்.
"என்ன ஆச்சுன்னு தெரியல இப்படி அழுதே!" என்று சொல்லியபடியே அந்த ஒற்றை மரத்தை சுற்றி ஒரு தடவை நோட்டம் விட்டாள். "இதுதான் நேரம் கெட்ட நேரத்தில குளிக்க வரக்கூடாது என்று சொல்லுறாங்க" என்று வீரசாமியை பார்த்துக் கோபமாக சொல்லிவிட்டு குழந்தை அமைதியானப் பிறகு மீண்டும் ஆற்றில் இறங்கினாள். அப்போது யாரோ முணங்குவது போல சத்தம் வர திரும்பிப் பார்த்தாள். அந்த வினாடி குழந்தை மீண்டும் பலமாக அழ ஆரம்பித்தது. அப்போது முத்தழகு பார்த்த காட்சி அவளை நிலைகுலையச் செய்தது.

வாகை மரத்தின் அருகே இருந்த முட் புதரை நோக்கி ஒரு சிறிய கரிய உருவம் விருட்டென ஓடியதையும் முட் புதரை முறித்துக்கொண்டு உள்நுழைந்ததையும் அரை வினாடி நேரத்தில் முத்தழகு கண்டாள். அவலட்சணமான முகம் கொண்ட ஒரு குட்டையான மனித உருவம் போலவும் காட்டுப் பன்றியை ஒத்ததாகவும் தோன்றியது போல அவள் மனதுக்குப் பட்டது. திக்பிரமை பிடித்தவளாக ஒரு கணம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்ற முத்தழகு அடுத்த கணமே மூர்ச்சித்து ஆற்றங்கரையில் விழுந்தாள். இது எதையும் கவனிக்காது தலையை துவட்டிக்கொண்டிருந்த வீரசாமி மனைவி கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்து அவளைத் தூக்கினான். மூர்ச்சையாகிக் கிடந்தவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான். எழுந்தவள் குழந்தை இருக்கும் பக்கமாக ஓடிச்சென்று குழந்தையை தூக்கி அணைத்தவள், "இனி ஒரு நிமிசம் கூட இங்கே இருக்கக் கூடாது. வாங்க போவோம்" என்று கணவனை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வீடு நோக்கி விடுவிடுவென நடந்தாள்.

முத்தழகு நேரங் கெட்ட நேரத்தில் ஆற்றுக்குப் போய் எதையோ பார்த்துப் பயந்துட்டாளாம் என்ற கதை அடுத்தநாள் ஊர் முழுக்க பரவியது. இனி யாரும் ஆத்துப் பக்கம் போயிடாதீங்கப்பா! என்று டுவிட்டர், பேஸ்புக்கு வரை கொமண்ட் போட்டுட்டாங்களாம்.

ஆனால் வீட்டிலோ நிலமை மோசமாகி விட்டதை வீரசாமியும் முத்தழகும் உணர்ந்து பதறிப் போனார்கள். முதல் நாள் மாலை சிறுநீர் கழித்த குழந்தை மறு பிற்பகல் கடந்த பிறகும்கூட சிறுநீர் கழிக்காததுதான் காரணம். குழந்தையின் வயிறும் உப்பிக் காணப்பட்டது. பதறிப்போன அவர்கள் விசயம் தெரிந்தவர்களிடம் நிலைமையைச் சொல்லி பரிகாரம் கேட்டார்கள்.
'இது ஏதோ தீய சக்தியின் வேலைதான்' என்பதை உறுதிப்படுத்திய அவர்கள் தேவா பூசாரியை அழைத்து வந்து பரிகாரம் பார்க்கும்படி ஆலோசனை சொன்னார்கள்.
அன்று மாலையே தேவா தனது சகாக்களோடு வந்து இறங்கினார். குழந்தையை பார்த்ததும் அவருக்கு இது தீய சக்தியின் வேலைதான் என்பது புரிந்து விட்டது. ஆனாலும் குழந்தைக்கு இரண்டு வயது என்பதால் என்ன நடந்தது என்பதை குழந்தை வாயால் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதே! தேவா பூசாரிக்கு குழப்பமாக இருந்தது. உடனே பூசாரி அமர்வதற்கான மன்று அமைக்கப்பட்டு அதில் உடுக்கோடு அமர்ந்தார். தனது குலதெய்வத்தை நினைத்து மனம் உருக, அவர் உடல் சிலிர்த்தது. உடனே அவரின் ஞானக் கண்ணுக்கு வாகை மரத்தடியில் நடந்த சம்பவங்கள் காட்சியாக தெரிய, அவர் அதை உரக்க ராகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

"வாகை மரத்தில் பல வருசமா அண்டிக்கிடந்த ஒரு கொடூர மோகினி, ரெண்டுங்கெட்டான் நேரத்தில் 'மனுச பயலுங்க' வராததால் பித்தம் கலங்கி பல வருசமா பசியோடு திரிஞ்சிருக்கு. அப்போதான் இந்தக் குழந்தையை மரத்தடியில் உட்கார வச்சிட்டு குளிக்க போயிருக்கீங்க. உடனே சமயம் பார்த்து குழந்தையை கபளீகரம் செய்யக் காத்திருந்த மோகினி சரியான நேரத்தில குழந்தையை நெருங்கி இருக்கு. ஆனால் குழந்தையின் கழுத்தில் கிடந்த பஞ்சாயுதத்தால் குழந்தையை ஒண்ணும் பண்ண முடியல" என்று பூசாரி கூறியதைக் கேட்ட ஊர்வாசிகளை பயம் மேலும் கவ்விக் கொண்டது.

அடுத்த நிமிசம் பூசணிக்காயை வெட்டி பரிகார பூஜைகளை நிறைவு செய்தார் தேவா பூசாரி.

அந்த தீய சக்தியை பார்த்து குழந்தை பயந்திருக்கு இப்போது சரியாகிடும் என்று வீரசாமியிடம் உறுதியளித்துவிட்டு சகாக்களோடு பூசாரி ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ புறப்படுவதற்கு முன்னர் முன்வாசலுக்கு ஓடிவந்த முத்தழகு,
"சாமி குழந்தை இப்போதாங்க சிறுநீர் கழிச்சிச்சு" என்று மகிழ்ச்சியுடன் கூறியதைக் கேட்டவுடன் பூசாரி வானத்தை நோக்கி கும்பிட்டுவிட்டு புறப்பட்டார்.

இப்போது நாட்டில் பேய்கள் அதிகமாம்!


"இப்போ பேய்களின் கொட்டம் வரவர ரொம்ப அதிகமாகி போயிடுச்சு! நிறைய பேருக்கு பேய் பிடிக்குது. அந்தக் காலத்துல எல்லாம் ஒரு ஆளுக்கு ஒரு பேய்தான் பிடிக்கும், ஆனா இப்போ அப்படி அல்ல... ஒரு ஆளோட உடம்பில் குறைந்தது ஏழு ஆவிகள் வரை அண்டிக் கிடக்குது"   என்று கவலையுடன் தகவல் ஒன்றை அவிழ்த்தார் தேவா பூசாரி. அவரிடம் பேய்க் கதையை கேட்டு குறிப்புகள் எடுத்துக் கொண்ட பின்னர் சும்மா பேசிக் கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில் இப்படிச் சொன்னதும் எனக்குள் பொறி தட்டியது. இது ஏன் என்று கேட்டேன்.
"இதுக்கெல்லாம் காரணம் சில வேலை தெரியாத (போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத) பூசாரிகளோட நடவடிக்கைகள்தான். சிலர் இந்தத் தொழிலை அரைகுறையாக கற்றுக்கொண்டு வந்து பேயோட்டுறாங்க. இதில் முக்கியமான விஷயம் பேயை அல்லது துஷ்ட ஆவிகளை அழைப்பதுதான். சிலர் பேயைக் கஷ்டப்பட்டு அழைச்சிட்டு, அதை விரட்டிட்டதாக சொல்லி முடிச்சிடுறாங்க. ஆனால் அழைத்த பேயை சரியாகக் கவனித்து அனுப்பி வைக்காவிட்டால் அது சும்மா ஊர் சுத்தப் போய்விடும். மற்றவங்களைத் தொற்றிக்கொள்ளும். அழைத்த பேயை சரியா இனங்கண்டு அதோட கதையை முடிச்சிடனும். அப்போ இப்படியான பிரச்சினை வராது. ஆனால் சிலருக்கு அழைச்ச பேயை முடிக்கத் தெரியாமல் அப்படியே விட்டுறாங்க.

அதனால் தேவையில்லாத பிரச்சினைகள் வருது. நானும் இப்படி பேயை விரட்ட முடியாமல் தவிக்கும் சில பூசாரிகளுக்கு அவ்வப்போது உதவி செய்திருக்கேன்" என்று ஒரு புதிய தகவலுடன் முடித்தார் தேவா பூசாரி.

Monday, July 27, 2015

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

மணி   ஸ்ரீகாந்தன்

'சுடுகாட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் போது பிணமாகக் கிடந்தவர் எழுந்து உட்கார்ந்து புகைக்க பீடி கேட்டார்' என்பது போன்ற 'இறந்தவர் மீண்டார்'  செய்திளை இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படியான உண்மைச் சம்பவங்கள் நம்நாட்டில் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்தாலும் 'இறந்ததாக நம்பப்பட்டவர்' உயிருடன் வீட்டுக்கு வந்தார் என்பது போன்றதாகவே அமைந்திருக்கும். ஆனால் தமிழகத்தில் சவப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தவர் உயிருடன் எழுந்த சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. தமிழகத்தில் இறந்த உடலை எம்பார்ம் பண்ணும் முறை கிடையாது.
ஒருவர் இறந்தால் அவரை இருபத்தி நான்கு மணிநேரத்தில் அடக்கம் செய்து விட வேண்டும். அவர் இந்திராகாந்தி, சிவாஜி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் இருபத்தி நான்கு மணிநேரம்தான். அப்படி யாராவது இறந்த நபரின் உறவுக்காரர் வெளிநாட்டில் இருந்து வரவேண்டும் என்றால், பிரேதத்தை மருத்துவமனையில் வைத்திருந்து அடக்கம் செய்யும் நாளன்று கொடுப்பது வழக்கம். ஆனால் இது நம் நாட்டில் வேறு விதமாக இருக்கிறது. இங்கே ஒருவர் இறந்து விட்டார் என்று தெரிந்து விட்டால் உடனே அவரை வெட்டி, அறுத்து 'எம்பார்ம்' பண்ணிவிட்டுதான் கொடுக்கிறார்கள். அதனால் இறந்தவர் உயிர்த்தெழ வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. குறிப்பாக பாம்பு கடித்து இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட பலர் உயிர்த்தெழுந்த சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அதற்கு இங்கே வாய்ப்பே இல்லை. 'எம்பார்ம்' செய்த பிரேதத்தை தொடர்ச்சியாக ஒரு வாரம் வரை வீட்டில் வைத்திருந்து புதைக்கும் எரிக்கும் பழக்கமும் சாதாரணம். ஆனால் நம் இந்து தமிழ் கலாசாரத்தில் இறந்தவரை இருபத்தி நான்கு மணி நேரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் காலா காலமாக இருந்து வந்த பழக்கம்.  ஆனால் இந்நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இறந்தவரை குறைந்தபட்சம் மூன்று நாளாவது வைத்திருந்து அடக்கம் செய்வதே வழமையாக இருக்கிறது. செவ்வாய், வெள்ளி, சனி தினங்களில் இறுதிக் கிரியை செய்வதில்லை என்ற நம்பிக்கையும் இங்கே உள்ளது. மேலும் இரண்டு மூன்று தினங்கள் வைத்திருப்பதென்பது கௌரவ சின்னமாகவும் ஆகிவிட்டது. அதையும் தாண்டி தோட்டப்பகுதிகளில் ஒரு இழவு விழுந்து விட்டது என்றால் அது சில இளைஞர்களுக்கு பண்டிகை மாதிரியாகி விடுகிறது!

அண்மையில் நானும் எனது நண்பரும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது என்னுடன் வந்த ஒருவர் ஒரு விஷயம் சென்னார். "அய்யா, ஊரில ஒரு இழவு நடந்து போச்சு. காலையில் விசயம் கேள்விப்பட்டதும் அதை குல்பா சந்தோசமாக என்கிட்டே சொன்னதோடு நிற்காமல் கொழும்பில் உள்ள அவனோட நண்பர்களுக்கும் போன் போட்டு வரச் சொல்லிட்டான். இனி பிணத்தை ஒரு வாரத்திற்கு வைத்திருந்து சூதாட்டம் நடத்துவார்கள். அவர்களுக்கு இது பெருநாள்தான்!" என்று சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது.
சில தோட்டப் பகுதிகளுக்கு சென்று விசாரித்துப் பார்த்ததில் விஷயங்கள் அம்பலமாகத் தொடங்கின.

"எங்க அண்ணன் முப்பது வருசத்துக்கு மேல் எங்களுக்காக மாடா உழைச்சாரு. அவரை எப்படிங்க ஒரே நாளில் சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும்? அதுதான் ஒரு ரெண்டு நாளு வைத்திருக்க நினைச்சோம். ஆனா பொடியன்மாருங்க ஆசப்பட்டதால் மேலதிகமாக இன்னும் இரண்டு நாளு வச்சிருக்கோம். இரவைக்கு பிஸ்கட்டு, தேத்தண்ணி சேவையும் நாங்களே பார்த்துக்குறோம்னு பையன்கள் சொல்றாங்க" என்று சந்தோசமாக சொன்னார். இப்படி ஒருவர் இறந்து விட்டால் அவரை வைத்து கசிப்பு வியாபாரம் செய்வதற்கும், சூதாட்டம் நடத்துவதற்கும் ஒரு கும்பல் பேயாக அலைவதும் அதிர்ச்சி தரும் உண்மை.

இப்படி மலையகப் பகுதிகளில் மரண வீடுகள் களியாட்ட விடுதிகளாக மாறிவரும் போது தலைநகர் கொழும்பு மட்டும் விதிவிலக்கா என்ன! அங்கே விசயம் வேறுவிதமாக நடக்கிறதாம். வத்தளையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தந்த தகவல் இது. "இங்கே உள்ள பொடியன்கள் ரொம்ப நல்லவங்க. சாவு விழுந்ததும் செத்த வீட்டுக்கு சம்பந்தமே இல்லாதவங்களும் விசயம் கேள்விப்பட்டு அல்லது பத்திரிகைகளில் பார்த்துவிட்டு வீடு தேடி வருவாங்க. வந்து வீட்டுக்காரங்ககிட்டே அனுமதி வாங்கிவிட்டு சூதாட்டம் ஆடுவாங்க. அப்போ நாங்க கொடுக்கிற பிஸ்கட், தேநீர் எல்லாம் வாங்கி சாப்பிடுவாங்க. ஆனால் அந்த செலவை ஏத்துக்க மாட்டாங்க. சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர் தாம் பெற்ற தொகையில் ஒரு தொகையை இழவு வீட்டுக்காரங்களுக்கு சந்தோசமாக கொடுத்து விட்டுப் போவார்கள்" என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் இருந்து யாராவது வரவேண்டி இருந்தால் மட்டும் ஒரு வாரத்திற்கு பிரேதத்தை வைத்திருப்பார்கள். இல்லையென்றால் அவர்களின் வசதிக்கேற்றபடி வைத்திருந்துவிட்டு அடக்கம் செய்து விடுகிறார்கள். ஆனால் சூதாட்டம், கேரம் போட் என்று எதுவுமே கிடையாது. சாவு வீட்டில் இரவு முழுவதும் விழித்திருப்போருக்கு தேனீர், பிஸ்கட் வழங்கப்படும். தவறாமல் வெற்றிலை பாக்கு தட்டு இடம்பிடித்திருக்கும். யாழ்ப்பாண மரண வீடுகளில் இறந்த நபரின் உறவினர்கள் மட்டுமே விடிய விடிய விழித்திருப்பார்களாம். உறவு அல்லாதவர்கள் இரவில் மரண வீட்டில் விழித்திருப்பதில்லை. ஆனால் மலையக கலாசாரத்தில் மரண வீடு ஒரு புதிய கலாசாரமாக மாறி வருகிறது. ஒருவர் இறந்தால் அவரை ஒரு வாரம் வரை வைத்திருந்தால்தான் அவரை பெரிய மனிதராகவும், ஒரே நாளில் அடக்கம் செய்துவிட்டால் அந்த நபரின் குடும்பத்தாரை உலோபிகளாக மதிக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்காகவே சிலர் கடன் பட்டாவது இறந்தவரை குறைந்தபட்சம் மூன்று நாளாவது வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

Saturday, July 25, 2015

face பக்கம்

தேவதாசி வரலாறு -9

இலங்கையில்  தேவதாசிகள்


அருள் சத்தியநாதன்

கடந்த இதழ்களில் நாகரத்தினம் அம்மாளை மையப்படுத்தி இந்திய தேவதாசிகள் பற்றிப் பார்த்து வந்தோம். தேவதாசிகள் ஆரம்பத்தில் மன்னர்கள், பிரபுகள், மந்திரி பிரதானிகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். இத்தேவதாசிகள் அனைவருமே கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவர்கள். இரண்டாவதாக, சிருங்காரம் கல்வியுடன் தொடர்பு கொண்டது. தேவதாசிகள் பாடவும், நடனமாடவும் வேண்டும். இவற்றை அவர்கள் முறைப்படி கற்க வேண்டும். எனவே உயர் குடியினருக்கு அடுத்ததாகக் கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்தது. மேலும் தனவந்தர் தொடர்பு, ஆடல்பாடல்களில் தேர்ச்சி மற்றும் கல்வி கேள்வியில் தேர்ச்சி ஆகிய மூன்றும் இவர்களை சமூக கௌரவம் கொண்டவர்களாகவும் வசதியான வாழ்க்கை கொண்டவர்களாகவும் வைத்திருந்தது.
ஆங்கிலேயர் காலப்பகுதியில், ஆங்கில மொழியறிவு காரணமாக மக்கள் மத்தியில் பரந்துபட்ட அளவில் கல்வியறிவு வளர்ச்சி கண்டது. உலக அறிவு, கிறிஸ்தவ சமய செல்வாக்கு என்பன காலங்காலமாக சமூகத்தில் இருந்து வந்த நம்பிக்கைகளை கேள்விக் குறியாக்கியதோடு விவாத பொருளாகவும் ஆக்கின. இப்படித்தான் உடன்கட்டை ஏறும் பழக்கம் விவாதத்துக்கு ஆட்பட்டு ஒழித்துக் கட்டப்பட்டது. அடுத்ததாக தேவதாசி முறையும் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இது ஒரு புறமிருக்க, இதே ஆங்கிலேய ஆட்சியின் கீழ் தேவதாசியினரும் படிப்பறிவில் தேர்ச்சி பெறும் வாய்ப்பைப் பெற்றனர். நூல்களை எழுதி வெளியிட்டனர்.

1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரிடம் வீழ்ந்ததோடு முழு இலங்கையும் பிரிட்டிஷ் வசமானது. அடுத்ததாக பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டன. தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர் இத்தோட்டங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். கூடவே, நாவிதர், சலவையாளர், துப்புரவு செய்வோர், வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள், பண்டாரங்கள், இசைக்கலைஞர்கள், சமையல்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கை வந்தனர். இக்காலப்பகுதியில் ஆங்கிலேய மிஷனரி தயவால் வடபுலத்தோர் கல்வியில் தேர்ச்சி பெற்ற சமூகமாக மாறியிருந்தனர்.

எனவே, இலங்கை வாழ் தமிழ் சமூகத்துக்கு தேவையாகவிருந்த சிருங்கார ரசத்தைத் தருவதற்கு பலரும் இங்கு வரவேண்டியதாயிற்று.

இது தொடர்பாக பல தகவல்களை லண்டனில் வசிக்கும் மலையகத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான மு. நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் நூலில் தந்திருக்கிறார். அத்தகவல்களை இனிப் பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை நோக்கிப் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் தேவதாசிகளும் இசை, நடனக் கலைஞர்களும் இடம்பெற்றுள்ள கதை சுவாரஸ்யமானது. யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புரவலர்களினதும், கோயில் ஆதீனகர்த்தாக்களினதும் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக  தேவதாசிகள் இறைப்பணி புரிந்துவந்துள்ளனர்.

அந்தப் பாரம்பரியத்தில் 'கொழும்பு நகரிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிவகாமியம்பிகா சமேத பொன்னம்பலவாணேசுரர் திருவடிகளுக்கடிமை பூண்ட மாது ஸ்ரீ கா. கமலாம்பிகையார் புத்திரி க. அஞ்சுகம் இயற்றிய, 'உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு' என்ற நூல் மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது.

'வரலாற்று நாயகி தாசி அஞ்சுகம்' என்று இந்நூல் பற்றிய கட்டுரை ஒன்றை சோ. சிவபாதசுந்தரம் 'நாழிகை' இதழில் எழுதியிருக்கிறார்.

'யாழ்ப்பாணக் கலாசாரத்தின் சென்ற நூற்றாண்டு வடிவத்தின் ஓர் அம்சத்தை' இந்நூலில் காணலாம் என்று சிவபாதசுந்தரம் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஆகம, புராண இதிகாசங்களிலிருந்து தேவதாசிகள் எனப்படும் உருத்திர கணிகையர் வரலாற்றைத் தொகுத்துக்கூறும் இந்நூலில் அன்னை அஞ்சுகம் தனது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தி நிற்கிறார்.

'திருக்கைலாச மலையிலே உமாதேவியாருக்குச் சேடியராயிருந்த கமலினியின் அவதாரமாயுள்ளவரும், அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறிதற்கரிய பரம்பொருளாகிய தியாககேசப்பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டுத் தூதராகி எழுந்தருளும் பேறுபெற்றவருமாகிய பரவையாரும், சோமசுந்தரப் பெருமான் இரசவாதம் செய்யும்பொருட்டு எழுந்தருளும் பேறு பெற்ற பொன்னணையாரும் இவர் போன்ற பிறரும் திருவதாரஞ் செய்த 'உருத்திர கணிகையர்' கோத்திரச் சிறப்பை சிற்றறிவுடையளாகிய யானோ எடுத்துச் சொல்லவல்லேன்' என்று அஞ்சுகம் தனது முகவுரையில் கூறுகிறார். பரவையார், பொன்னணையார், மாணிக்கவல்லி, மானந்தை, மாணிக்கநாச்சியார், ஞானவல்லி, அருணகிரிப் பெருந்தொகையாரின் தாயார், சோமி, வெள்ளையம்மாள், கூத்தாள், மாதவி, சித்திராபதி, மணிமேகலை ஆகிய கணிகையரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் ஆழமாக எழுதிச் செல்கிறார்.
இந்த உருத்திர கணிகையரின் வரலாற்றை எழுதுவதற்கு இவர் எடுத்தாண்டிருக்கும் இலக்கிய நூல்களின் பட்டியல் பிரமிப்பூட்டுவதாகும். சிவஞான தீபம், சிவஞான சித்தியார், சித்தாந்த சிகமாணி, இறையனராகப் பொருள், ஆசௌசதீபிகை, திருவருட்பா ஆகிய வைதீக சித்தாந்த நூல்கள் அனைத்தையும் அஞ்சுகம் ஆளுமையோடு கையாண்டிருக்கிறார்.

அஞ்சுகம் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் தனது ஆழ்ந்த சைவசித்தாந்த ஞானத்தை வெளிப்படுத்திச் செல்கிறார். இந்நூலாக்கத்திற்கு அஞ்சுகம் எடுத்தாண்ட 44 இலக்கிய நூல்களின் விபரம் அவரது தமிழ்ப் புலமைக்கு அரும்பெரும் சான்றாகும்.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், புராணங்கள், இராமாயண, பாரத இதிகாசங்கள் அனைத்தையும் நுணுகி ஆராய்ந்து உருத்திர கணிகையர் கதாசாரத்தை அஞ்சுகம் திரட்டித் தந்திருக்கிறார். 'இலங்கையின் தலைநகரான கொழும்பிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மையார் சமேத கொழும்பு பொன்னம்பலவாணேசுரப் பெருமானுக்கு அடிமை பூண்ட கமலாம்பிகை என்னும் எனது தாயார் எனக்குப் புத்திரப்பேறின்மையால் தமது பெண்வழிச் சந்ததி என்னோடு நின்றுவிடுமென்பதை நன்குணர்ந்து, தம் கோத்திர வரலாற்றை ஒரு புத்தகரூபமாய்ப் பிரசுரித்து வெளிப்படுத்தும்படி எனக்குப் பன்முறையுங் கட்டளையிட்டு வந்தார்' என்று அஞ்சுகம் இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.

திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதியைச் சேர்ந்த அபிஷேகவல்லி என்னும் தேவதாசி மரபில் எதித்த ஆறு தலைமுறையினரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் விரிவாக எழுதுகிறார். அபிஷேகவல்லி தேன்மொழி, வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்றும், பரத சாஸ்திரத்தைப் பயின்றும், இசை பாடியும் நடனமாடியும் சிறப்புப் பெற்று 'மகாவித்துவவசி' என்ற பட்டமும் பெற்றவர். அவரது கோத்திரத்தில் உதித்த வெள்ளையம்மாள் என்பாரும் கல்வியிற் சிறந்தவராய்த் திகழ்ந்து பர்வதம் என்ற புத்திரியையும், காந்தப்பர் என்ற புத்திரனையும் பெற்றார். பர்வதத்திற்குப் பிறந்த காமாட்சி என்னும் தேவதாசியே அஞ்சுகத்தின் பாட்டியாவார். காமாட்சி தனது மகளான கமலாம்பிகைக்குப் பத்து வயதில் திருப்பொட்டுத்தாரணம் என்னும் பொட்டுக்கட்டும் சடங்கை நிகழ்த்தினார். காமாட்சியார் தனது மகள் கமலாம்பிகைக்குச் சிறப்பான தமிழ்க் கல்வியையும் கற்பித்து, திருவாரூர் பரத சாஸ்திர வித்துவானாகிய மருதப்ப நட்டுவனாரிடம் ஆடற்கலையையும் பயிற்றுவித்தார்.

1850 இல் யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த விக்கினேசுராலய தருமகர்த்தாவான காசிநாத முதலியாரின் மகன் வேலப்ப முதலியார், தமிழகத்திலுள்ள குளிக்கரைக்கு சிவஷேத்திர தரிசனம் செய்யச் சென்ற வேளையில், கமலாம்பிகையின் நடனச் சிறப்பைப் பார்த்து, தமது திருக்கோயில் உற்சத்துவத்துக்காகக் காமாட்சியையும் அவரது பதினொரு வயது மகள் கமலாம்பிகையையும் கைதடிக்குச் கொண்டுவருகிறார்.

கமலாம்பிகையும் ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கி, அவரது கீர்த்தி யாழ்ப்பாணம் முழுவதும் பரவியது. அப்போது கொழும்பில் பிரபலம் பெற்றுத் திகழ்ந்த பொன்னம்பல முதலியாரின் திருமண வைபவத்தில் நடனமாடக் கமலாம்பிகை அழைக்கப்பட்டு, அவர் அங்கு சென்று, நடனமாடிக் கீர்த்தி பெற்றார். பின்னர், கமலாம்பிகை பிரசவத்திற்காக, தமிழ்நாட்டில் குளிக்கரைக்குத் தன் தாயாருடன் சென்று, அங்கு சந்தானவல்லி என்ற பெண் குழந்தையைப் பெற்றார். கமலாம்பிகையின் தாயார் காமாட்சியாரும் சில காலத்தின் பின் மரணமுற்றார்.

இந்நிலையில், கைதடி ஆதீனகர்த்தாக்கள் குளிக்கரையிலிருந்து மீண்டும் கமலாம்பிகையையும் அவரது மகள் சந்தானவல்லியையும் கைதடிக்கு அழைத்து வந்து, கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். அங்கு வாழும் காலத்தில், கமலாம்பிகை அன்னம்மாள் என்ற இரண்டாவது மகவைப் பெற்றார்.

கமலாம்பிகையின் மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு ஆடல் பாடல்களைக் கற்பிப்பதற்கு, கமலாம்பிகையின் மைத்துனரும், பாட்டு, நட்டுவாங்கம், மிருதங்கம், தவில் முதலியவற்றிலே கீர்த்தி பெற்றவருமாகிய புன்னைவனம் நட்டுவனார் அவர்களைத் தமிழகத்தின் திருப்புகலூரினின்றும் அழைப்பித்திருந்தார். இவரது தவில் வாசிக்கும் திறமையை வியந்து, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின், தமையனாரும், சிறந்த வித்துவானும் சங்கீதத்தில் வல்லுநருமாகிய ஸ்ரீலஸ்ரீ பரமானந்தப் புலவர் அவர்கள் சிங்கமுகச் சீலையும் வெள்ளிக் கழியும் பரிசளித்தார்கள்.

இக்காலத்தில், கொழும்பில் சிவாலயப் பிரதிஷ்டா கும்பாபிஷேகத்திற்கு வருமாறு பொன்னம்பல முதலியார் வேண்டியதை அடுத்து, கமலாம்பிகை தமது இரு புதல்வியர்களோடும், பரத சாஸ்திர வித்துவான் புன்னைவனம் நட்டுவனாரோடும் கொழும்பு வந்தார். கொழும்பு சிவாலயத்திலே கணிகையராகத் திகழுமாறு பொன்னம்பல முதலியார் கேட்க, அதற்கிணங்க, கமலாம்பிகை தனது மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு பொட்டுகட்டி அவ்வாலயத்தின் கணிகையாக்கினார்.

(தொடரும்) 

இருள் உலகக் கதைகள்

வீரசிங்கம் பூசாரி  சொன்ன  பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-   மணி ஸ்ரீகாந்தன்

ரத்தினபுரி மடப்பத்தர தோட்டத்தில் என்றுமில்லாதவாறு அன்றைய மாலைப்பொழுது அமானுஷ்யம் நிறைந்ததாகவே இருந்தது. அப்போது நேரம் மாலை ஆறரை மணியிருக்கும். இருள் அந்த பிரதேசத்தை விழுங்கிவிட அவசரம் காட்டிக் கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாகவே இப்போதெல்லாம் மாலை மங்கிவரும் போதே ஊரும் அடங்கிப் போய் விடுகிறது. முட்டுச்சந்து, குறுக்குப் பாதைகளில் தெரு நாய்களைத் தவிர மனிதர்கள் எவரையும் பார்க்க முடிவதில்லை. ஆனால் தென்னங் கள் விற்கும் சிரிபால மட்டும் பக்கத்திலிருக்கும் சிங்கள கிராமத்திலிருந்து கள் இறக்கி, பெரிய மண் குடத்தில் ஊற்றி எடுத்து மடபத்தர தோட்டத்திற்குள் வியாபாரத்திற்காக வந்து போவது வழக்கம். அன்றைக்கும் கள் முட்டியுடன் சிரிபால தோட்டத்துக்குள் வந்தான். கொஞ்சம் ஏற்றிக் கொண்டிருந்ததால் பார்வையில் அவனுக்கு கள் கிறக்கம் இருந்தது. 'என்னடா இன்னைக்கும் ரோட்டில் ஒரு பயலையும் காணவில்லையே... அதற்குள் வீட்டுக்குப் பறந்துட்டான்கள' என்று மனதுக்குள் கேள்வி எழுப்பியவாறே ஒற்றையடிப் பாதையில் தள்ளாடி நடந்தான் சிரிபால. சில அடிகள்தான் கடந்திருப்பான். எதிரே பேச்சுக் குரல்கள் கேட்கவே தொலைவில் உற்றுப் பார்த்த போது குணா, ரவி, அரசன் ஆகிய மூவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். வாடிக்கையாளர்கள் சிக்கியதில் அவனுக்கு மகிழ்ச்சி. 'ஆஹா கள்ளுக்குடி மன்னர்கள் வந்தாச்சி! நமக்கு இனி கவலை இல்லப்பா' என்று கள்ளு முட்டியை தோளிலிருந்து இறக்கி பாதையில் வைத்து விட்டு அவர்களுக்காகக் காத்திருந்தான்.

வந்த மூவரும் ஆளுக்கொரு தேங்காய் சிரட்டையை எடுத்து சிரிபாலவிடம் நீட்டினார்கள். முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க கள்ளு முட்டியை தூக்கி சாய்த்தான் சிரிபால. சிரட்டை நிறைய நிறைய அந்த மூவரும் கள்ளை வாங்கி மூக்குமுட்ட குடித்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் கள்ளுப்பானை காலியாகி விட்டது. 'அட நீங்க மூணுபேராகவே கள்ளு முட்டியைக் காலி பண்ணிட்டீங்களேடா' என்றபடியே கள்ளு முட்டியைக் குனிந்து பார்த்துவிட்டு நிமிர்ந்து பார்த்த சிரிபால பேயடித்தவன் மாதிரி அதிர்ச்சிக்குள்ளானான். ஏனென்றால் அங்கே கள்ளுக் குடித்துக் கொண்டிருந்த அந்த மூவரும் திடீரென்று காணாமல் போய் இருந்தார்கள். அவர்கள் கள்ளுக் குடித்த சிரட்டைகள் மூன்றும் நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன. அந்தக் காட்சியைப் பார்த்த சிரிபாலவுக்கு உடம்பில் பூச்சி ஊர்வதைப்போல இருந்தது. எங்கோ ஏதோ பிழைப்பது மாதிரித் தெரிந்தது. திடீரென்று பிரமை பிடித்தவன் போல கையிலிருந்த கள்ளுப் பானையைத் தூக்கி எறிந்து விட்டு மடப்பத்தர மேட்டு லயத்தை நோக்கி 'அய்யய்யோ....!' என்று கத்திக் கொண்டே ஓட்டமெடுத்தான்.
வீரசிங்கம் பூசாரி
லயத்தை அண்மித்த சிரிபால மூர்ச்சையாகி விழுவதை பார்த்த அந்த குடியிருப்பு வாசிகள் ஓடிவந்து அவனை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தனர். என்ன நடந்தது என்று கேட்டபோது அவன் சொன்ன விசயம் கூடியிருந்த ஊர்வாசிகளை குலை நடுங்கச் செய்தது. ஆட்டோ விபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு பலியான அரசன், ரவி, குணா ஆகிய மூவருமே ஆவிகளாக வந்து சிரிபாலவிடம் கள்ளுக் குடித்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு யார்தான் பயப்படாமல் இருப்பார்கள்! இந்தக் கதையைக் கேட்ட பின்னர் குறிப்பிட்ட அந்த இடத்தைப் பார்வையிட வந்த சில இளைஞர்கள் அங்கே கள்ளுக் குடித்த தேங்காய் சிரட்டைகள் கிடப்பதைக் கண்டிருக்கிறார்கள். கள்ளுச் சிரட்டைகளைத் தாம் கண்டதை அவர்கள் லயத்துக்குச் சென்று சொல்லவும் மளமளவென விஷயம் தோட்டமெங்கும் பரவியது. ஏற்கனவே அரசல் புரசலாக இருந்த பேய்ப்பயம் இந்தச் சம்பவத்தால் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது. தோட்ட வாசிகள் ஒடுங்கிப் போனார்கள். மடப்பத்தர தோட்டத்தில் பேயப்பீதி பீடுநடை போடவே, மாலையாகும் முன்னே எல்லோரும் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். எல்லோர் வீடுகளுக்கு முன்னாலும் ஆலமர உயரத்துக்கு அடர்த்தியாக பேய்கள் பெருங் கர்ஜனையோடு நிற்பதாக கற்பனை செய்து கொண்டு 'ஒண்ணுக்கு' இருக்கக்கூட கதவைத் திறக்காமல் பயத்தில் உறைந்து போனார்கள்.

ஆட்டோ விபத்தில் 'அவலச்சாவு அடைந்தவர்களின்' ஆவி அவ்வளவு சீக்கிரத்தில் போகாது என்று ஊர் பெரிசுகளும் வாய்க்கு வந்தபடி கதைகளை அளந்துவிட விசயம் பூதாகரமாகி ஊரையே பேய் பிடித்து ஆட்டத் தொடங்கியது. சமைத்து வைத்த சோறு சில நிமிடங்களிலேயே கெட்டுப் போவதும், சோற்றில் மண் கிடப்பதும், வீட்டுக் கூரையில் மண் விழுவது என்று அந்த ஊர் மக்கள் தொடர்ந்து பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தனர். ஒற்றையடிப் பாதையில் நடக்கும் போது எதிரில் தெரிந்தவர் வந்தாலும் வரும் உருவம் அவர்தானா அல்லது அவர் உருவில் வரும் பேயா? என்று சந்தேகப்படும் அளவுக்கு ஊரில் கிலி முற்றிக் கிடந்தது. தீய சக்தியை விரட்டினால்தான் ஊருக்கு விமோசனம் என்பதை புரிந்து கொண்ட அந்த ஊர்வாசிகள் ஒன்றுக்கூடி முடிவெடுத்தனர்.

ஒருநாள் இருபது பேர் கொண்ட குழுவாக அவர்கள் ஒன்று சேர்ந்து              வேன் வண்டி பேசி வீரசிங்கம் பூசாரியைச் சந்திக்க அவர் வீட்டுக்கு முன்பாகச் சென்று இறங்கினார்கள். கல்யாண வீட்டுக்கு வந்து இறங்குவது போல சலசலவென இறங்கி வீரசிங்கம் வீட்டை நோக்கி வருவதைப் பார்த்த பூசாரிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டதாம். பிறகு வந்தவர்கள் முகத்தில் இனம்புரியாத ஒரு சோகம் இருப்பதை பார்த்த பூசாரி அவர்களை பாய்விரித்து அமரச் சொன்னார். ஒரு முக்காலியைப் போட்டு அதில் பூசாரி அமர்ந்து கொண்டு ஒரு அர்த்தபுஷ்டி புன்னகையை வீசினார். பின்னர் எழுந்து பூஜையறைக்குள் சென்று தமது இஷ்ட தெய்வத்தை அழைத்தார். பிறகு நடந்த சம்பவங்களை அவர் சாமியாடியபடியே தெய்வ வாக்காக கூறத் தொடங்கினார்.

"மூணு நாளைக்கு முன்னாடி ஒரு மாடு செத்துப் போனதே, தெரியுமாடா? உங்க ஊருல வர இருந்த மனுஷ பலியை நான்தான்டா தடுத்து நிறுத்தினேன்... அதுக்கு பரிகாரமாகத்தான் அந்த மாட்டை காவு வாங்கினேன" என்று வீரசிங்கம் உடம்பிலிருந்த மதுரைவீரன் சொன்னதைக் கேட்ட ஊர்வாசிகள் வெலவெலத்துப் போனார்கள். பிறகு தீய சக்தியை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்று வீரசிங்கத்திடம் கேட்டார்கள்.

வீரசிங்கம் ஒரு தேங்காயை மந்திரித்து அவர்களிடம் கொடுத்தார். "இதைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு போங்கள். இறந்த அந்த மூன்று பிரேதங்களும் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் முச்சந்தியில் வைத்திருப்பாங்க இல்லையா, அந்த இடத்துக்குப் போய் இந்தத் தேங்காயை அதிகாலையில் அங்கே வைத்துவிட்டு வாங்க. வைத்த அரை மணித்தியாலத்தில் இந்தத் தேங்காய் மூன்று துண்டுகளாக வெடிக்கும். தீய சக்தி இருந்தா வெடிக்கும். இல்லாட்டா வெடிக்காது. தீய சக்தி இருக்கா இல்லையா என்கிறதை இதன்மூலம் ருசுப்படுத்தலாம்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

பூசாரி சொல்லியபடியே தேங்காயை முச்சந்தியில் வைத்தார்கள். திரும்பி வந்து பார்த்தபோது அந்தத் தேங்காய் மூன்று துண்டுகளாக வெடித்திருப்பதைக் கண்டு அவர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். உடனடியாகத் தகவல் அனுப்பி பரிகாரம் செய்து தரும்படி வீரசிங்கத்தை உடனே மடபத்தரைக்கு வருமாறு அழைத்தார்கள்.

வீரசிங்கமும் தனது உதவியாளர்களை அழைத்துக்கொண்டு மடப்பத்தரை தோட்டத்திற்குப் புறப்பட்டார். ஊர் கூடும் ஒரு பொது இடத்தில் பந்தல் போட்டு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வீரசிங்கம் கேட்டுக்கொண்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட உதவியாளர்கள் அரை மணித்தியாலத்தில் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்கள்.

சக்கர வியூகத்தில் பூசாரி அமர்ந்த சில நிமிடங்களிலேயே மதுரைவீரன் அவர் உடம்பில் இறங்க பூசாரி ஆட்டம் போடத் தொடங்கினார்.

"பதினொரு வருசமா இந்த ஊரிலே உயிர்ப் பலி நடக்குதேடா அது தெரியுமா?"என்று சாமி உரக்க சத்தம் போட்டுக் கேட்டபோது ஊரே "ஆமா சாமி" என்று கோஷம் போட்டது. பிறகு அந்த ஊரில் வீட்டுக்குப் பக்கத்திலேயே கோயில் அமைந்திருப்பதால் சுத்தம் போதாது என்பதும் தீட்டு போன்ற காரணங்களால் சாமிக் குத்தம் நடப்பதும் தெரிய வந்தது. விரைவிலேயே மாற்று ஏற்பாடுகளை செய்வதாக ஊர்க்காரர்கள் சொன்னார்கள்.

இது இப்படியிருக்க, பூசாரி ஆவிகளை தன்வசப்படுத்துவதற்கான முடிச்சுகளை போடத் தொடங்கினார். வலையில் சிக்காது தீய சக்திகள் பூசாரிக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தன. மிகவும் கடுப்பான பூசாரி தன்வசமிருந்த சில ஏவல் சக்திகளை தீய சக்திகள் மீது மின்னலைகள் போல ஏவிவிட்டார். இந்தப் பாய்ச்சல் கண்டு அதிர்ந்துபோன தீய சக்திகள் வீரசிங்கத்தின் சக்கர வியூகத்திற்குள் வந்து தானாக சிக்கிக் கொண்டன.
வானத்தைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்த பூசாரி, பிறகு அந்த தீய சக்திகளில் இரண்டைப் பிடித்து தயாராக வைத்திருந்த மூன்று சேவல்களில் இரண்டின் மீது இறக்கினார். சேவல்கள் மீது கற்பூரத்தை கொளுத்தினார். கற்பூரம் அணைவதற்குச் சற்றுமுன்பாக பளீர் பளீரென சேவல்களின் தலைகளைத் துண்டித்தெறிந்தார். பின்னர் மூன்றாவது ஆவியையும் பிடித்து மூன்றாவதாக இருந்த சேவலின் மீது இறக்கிவிட்டு கற்பூரத்தைக் கொளுத்தி சேவலின் முதுகில் வைத்தார். அது மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அப்படியே அமர்ந்தபடி அமைதியாக இருந்தது. கற்பூரம் எரிந்து முடிந்த அந்தக் கருப்புச் சேவல் தரையில் அலங்கோலமாக படுத்தது. உடனே அங்கே கூடியிருந்தவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டு போனார்கள் ஏனென்றால் ஆட்டோ விபத்தில் பலியான அரசன் அப்படித்தான் உடல் சிதைந்து உருக்குலைந்து கிடந்தானாம். பூசாரி அந்த சேவலையும் காவு கொடுத்து வெற்றிகரமாக ஆவிகளை வெளியேற்றினார்.

பின்னர் அந்த ஊரில் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தீப்பந்தத்தோடு கிளம்பிய வீரசிங்கம் ஒவ்வொரு வீடாக புகுந்து தீய சக்திகள் வீடுகளை அண்டிவிடாமல் இருக்கும் வகையில் குங்கிலிய புகை அடிக்கத் தொடங்கினார். பூசாரியோடு அவரின் தம்பியும் அந்தப் பணியில் இறங்கினார். காலை எட்டு மணிக்கு அனைத்து வேலையும் முடித்துவிட்டு வெற்றிக்களிப்போடு வீரசிங்கம் வீடு திரும்பினார். இப்போது மடபத்தர தோட்டத்தில் ஆவி பயம் நீங்கி பூரண அமைதி நிலவுகிறதாக பூசாரி சொல்கிறார்.

Friday, July 24, 2015

சினிமானந்தா பதில்கள் -24

தமிழ் சினிமாவில் உயரமான நடிகை யார்?

ஜோசப் பெர்னாண்டோ, நீர்கொழும்பு


அனுஷ்காவைத்தான் உயரமான நடிகை என்கிறார்கள். கொஞ்சம் பொறுங்கள் தன்ஷியா, லஷ்மிராய் (ராய் லட்சுமி) இருவரும் நினைவுக்கு வருகிறார்கள். சந்தேகமே இல்லை. இவர்களில் ஒருவருக்குத்தான் அந்தப் பெருமை. ஆனால் யார்? அவரவர் உயரத்தை அவர்களாகவே சொன்னால்தான் உண்டு. நாம் எப்படி அளப்பது?
குள்ளமான நடிகை முன்னர் குஷ்பு, இப்போது ஸ்ரீதிவ்யாவை சொல்லலாம். SCHOOL யூனிபோர்மில் இவர் O\L மாணவியேதான்.

அகலமான நடிகை யார் என்று கேட்டிருந்தால் மிகவும் சரியாகச் சொல்லியிருப்பேன். அகலமான நடிகை ஆர்த்திதானே. எவரும் அவரை நெருங்கவே முடியாது.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி என்கிறார்களே? ரஜினி ரசிகன், கொழும்பு

வடக்கில் கான் நடிகர்கள் படத்தின் லாபத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கின்றனர். எனவே அவர்களது சம்பளம் படம் ஓடுவதைப் பொறுத்து படத்துக்கு படம் மாறுபடும். அமீர், சல்மான், சாருக் ஆகிய மூவரில் அதிக சம்பளம் பெறுபவர் யார் என்று சரியாக கூற முடியாது. ஆனால் நிலையான ஒரு தொகையை சம்பளமாக பெறுவது ரஜினிதான். தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ (ஒரு இணையத்தளத்தில் வெளிவந்தது)
ரஜினிகாந்த் 40 கோடி
கமலஹாசன் 25 கோடி
அஜித் 25 கோடி
விஜய் 20 கோடி
சூர்யா 20 கோடி
விக்ரம் 12 கோடி
தனுஷ் 10 கோடி
சிவகார்த்திகேயன் 7 கோடி
கார்த்தி 6 கோடி
சிம்பு 4 கோடி
ஆர்யா 3 கோடி
ஜெயம் ரவி 3 கோடி
ஜீவா 2.5 கோடி
சித்தார்த் 2.5 கோடி
விஜய் சேதுபதி 2 கோடி

கணக்குப் போட்டு பார்த்தால் விஜய் சேதுபதி (2 கோடி) நயன்தாரா (2 கோடி) இணைந்து நடிக்கும் 'நானும் ரவுடிதான்' வெற்றிப்படமாக வேண்டும். ஆகுமா?'மரியான்' படத்தில் நடித்த பார்வதி எங்கே? அவர் ஏதாவது படத்தில் நடிக்கிறாரா?
பெரோஷா, கிண்ணியா

சினிமாவில் நடிப்பவர்களை பல தரப்பாகப் பிரிக்கலாம். நடிக்கப் பிறந்தவர்கள்: வருடத்துக்கு ஒரு படம் இவர்களுக்குப் போதும். உங்கள் நினைவில் இருப்பார்கள்.
நடிக்கத் தெரிந்தவர்கள்: ஆனால் இயக்குநர்கள் இவர்களை நடிக்க விட்டால் தானே! அக்கா தங்கை, சிரிப்பு வேடம் என்று 'சைட் ரோல்'தான் கொடுப்பார்கள். நடிக்க முடிந்தவர்கள்: அழகு, திறமை எல்லாம் இருக்கும். ஆனால் பெரிய அளவில் வெற்றி பெற அதிர்ஷ்டம் கை கொடுக்காது நடிக்க மறந்தவர்கள்: இவர்கள் நடிப்பதைவிட நடனம் ஆடுவதையே இயக்குநர்களும் ரசிகர்களும் விரும்புவார்கள். நடிக்கத் துடிப்பவர்கள்: அழகு, துடிப்பு எல்லாம் இருக்கும் புதுமுகங்கள். நடிப்பதற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள்.

அடடே பார்வதி இன்னும் உங்கள் நினைவில் இருக்கிறாரே!

உங்களைப் பொறுத்தவரை சரியான ஜோடி யார், யார்?  
லக்ஷான், யாழ்ப்பாணம்
வெறுமனே மொட்டையாகக் கேட்டு விட்டீர்களே எங்கே, எதில் என்று கேட்டால்தானே விபரமாகச் சொல்லலாம்.

என்னைப் பொறுத்தவரை காலை 7.15 முதல் 7.30 வரை சன் டி.வி.யின் சூரிய வணக்கத்தில் வரும் 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியை வழங்கும் பாரதி - ராஜா கம்பினேஷன்தான் ரொம்பப் பிடிக்கும்.

இரண்டு பேர் மட்டும். பின்னணியில் எந்தக் காட்சியும் இல்லை. விஷயத்தை பேசிக்கொண்டே ரசிகர்களை ஈர்க்க வேண்டும். அதை அவர்கள் எத்தனை அழகாகச் செய்கிறார்கள்!

மறந்து போன விடயங்களை மீட்டித்தரும் அவர்களது பேச்சுத்தலைப்புகள், அதை அழகாக, மனதில் பதியும் வண்ணம் நையாண்டி கலந்து பேசும் பாணி, ராஜா எதையும் விட்டு விட்டால் நினைவுபடுத்தி கொக்கிப்போடும் பாரதியின் (இவர் ஒரு சட்டத்தரணியாம்) இடையூறு, வீட்டுக்குகந்த உடுப்புக் கலாசாரம் (home dress code) ரசிகர்களையே கேலி பண்ணும் வகையில் இடையிடையே இருவரும் போட்டுத் தாக்கும் சிரி (ஈர்)ப்பு.
இவர்கள் பேச வேண்டிய விடயத்தை இவர்களாக தயாரித்துக் கொள்கின்றனரா அல்லது வேறு அணி தயாரித்துக் கொடுக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அத்தனை பல விடயங்களை புதிதாகக் கூறுகின்றனர் அல்லது மீட்டித் தருகின்றனர். குறிப்பாக பூமியதிர்ச்சி பற்றி அண்மையில் இவர்கள் பேசிய விடயங்கள் பல விடயங்களை எங்களுக்குக் கூறின. இந்த 15 நிமிட பேரேடு (encylopedia) எனக்கு மிகவும் பிடித்தது. பாரதி - ராஜா ஆசிரியர்களுக்கு மாணவன் நான்.

சினிமாவை பொறுத்தவரை ஜோடிகள் நின்று நிலைப்பதில்லை. ரஜனியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கதாநாயகி. ஒரு படத்தில் இருப்பவர் அடுத்த படத்தில் இல்லை. ஆனால் ரஜனி - தேவயானியை திரையில் ஜோடியாகப் பார்க்க ஆசையாக உள்ளது.

Saturday, July 18, 2015

தேவதாசி வரலாறு -8

பரத நாட்டியத்தைத் தந்த 

தேவதாசியர்


அருள் சத்தியநாதன்

நாகரத்தினம் அம்மாள் ஒரு தேவதாசியானாலும் தன் இசை, நடன திறமையால் அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் மக்கள் மத்தியில் கௌரவமான இடத்தை அவரால் பெற முடிந்திருந்தது. அவருக்கு சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தனவந்தர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. மெட்ராஸ் மாநிலத்து உயர் குடியினர் அவரை கௌரவமாக நடத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் தேவதாசி முறை இந்து சமயத்தின் ஒரு அங்கம் என்றும் தேவ சேவைக்கு பெண்களை அர்ப்பணித்தல் என்பது சமயக் கடமை என்றும் கருதியதாகவே அறிய முடிகிறது. இந்த நம்பிக்கைக்கு அப்பால் பெண்களை இழிவுபடுத்தல், அடிமைப்படுத்தல், விபசாரத்துக்கு உட்படுத்தல், நவீன காலத்துக்கு ஒவ்வாத தன்மை இதில் இருப்பது போன்ற அம்சங்கள் பற்றி சிந்திக்கும் திறன் பலரிடம் இருக்கவில்லை. தேவதாசி முறை ஒழிப்பு என்பது இந்து கலாசாரத்தில் உள்ள ஒரு பண்பை அழித்தொழிப்பதாகும் என்றே தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் கருதினர்.
முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிட்டது 1926 ஆம் ஆண்டு. ஆனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் 1947 ஆம் ஆண்டிலேயே மெட்ராஸ் சட்டசபையில் இதை சட்டமாகக் கொண்டுவர முடிந்தது என்பதில் இருந்தே தேவதாசி முறையை ஒழிக்க சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் தயங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணக்கரு 1926 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே பிரசவித்துவிட்டது. இதை ஒழிக்கப்பாடுபட்ட முத்துலட்சுமி ரெட்டியும் கூட தேவதாசி மரபில் வந்த பெண்மணியே. 1900 முதல் எழுந்திருந்த எதிர்ப்பு அலைகளை உள்வாங்கிக் கொண்டதாலேயே, இம்முறையை ஒழித்தேயாக வேண்டும் என்ற உறுதியை இறுதிவரை அவரால் கொண்டிருக்க முடிந்தது. இந்த தொடர்ச்சியான எதிர்ப்பலைகள் காரணமாக கோவில்களில் தேவதாசியரை அமர்த்துவதில் கோவில் நிர்வாகங்கள் அசட்டையாக இருக்கத் தொடங்கின. தேவதாசியர் குலத்தில் வந்த பெண்கள் கோவில்களில் சேவையாற்ற வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டளவில் பெருமளவிலான தேவதாசியர் கோவில் பணியாற்றுவதில் இருந்து விலகியிருந்தனர். தேவதாசியர் தொடர்பான விவகாரம் சர்ச்சையாக மாறியிருந்ததே இதற்குப் பிரதான காரணம்.

தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்படாமல் இருப்பதற்காக நாகரத்தினம் அம்மாள் பல முயற்சிகள் மேற்கொண்டார். முடிந்தவரை போராடினார். சட்டம் வருவதை தாமதிக்கச் செய்தார். ஆனால், தேவதாசி முறைக்கும் தேவதாசி குலத்துக்கும் சாவுமணி அடிக்கப்படப் போவதை அவர் நன்குணர்ந்திருந்தார். அதனால்தான் அவர்தன் வழிமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டு, மேடைக் கச்சேரிகள், பக்தி மார்க்கம் என நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

தேவதாசியர் தமது காலத்தில் ஆடிய ஆட்டம் சதிர் என அழைக்கப்பட்டது. இந்த சதிராட்டமே பின்னர் பரத நாட்டியம் எனப் பெயர் பெற்றது. ஆனால் இவர்கள், தாம் ஆடிய சதிர் ஆட்டம் பிற்காலத்தில் பரத நாட்டிடியம் எனப் பெயர்பெறும் என்பதை அறிந்திருக்கவில்லை. தேவதாசியர்களே தமிழுக்கு பரத நாட்டியத்தை அளித்தவர்கள் என்பது பிற்காலத்தில் மூடி மறைக்கப்பட்டது. பரத முனிவர் அருளிய நடன வடிவமே பரத நாட்டியம் என்ற உருவாக்கம் பின்னர் எழுந்ததோடு, பரத நாட்டியம் பயில்வோருக்கு அப்படியே சொல்லப்பட்டது. தேவதாசியரின் பங்களிப்பு மூடி மறைக்கப்பட்டு, பரத நாட்டியத்துக்கு தெய்வீக முலாம் பூசப்பட்டது. தேவதாசியர் முறை ஒழிக்கப்பட்டபோது, அவர்கள் ஆடிய நடன வடிவத்தை உயர் குடியைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்டு அதை வளப்படுத்திக் கொண்டனர். சதிராட்டம் கேவலமான நடன வடிவம் என்றும் பரதநாட்டியம் தெய்வீகக்கலை என்றும் பிரித்து கற்பிக்கப்பட்டு அதுவே உண்மை போலக் காட்டப்பட்டது. ஏனெனில் தேவதாசியரின் சதிராட்டமே பரத நாட்டியம் என்பதை ஒப்புக் கொள்வது, இதை ஆடும் உயர்குல நடன மணிகளுக்கு இழுக்காக அமையும் என்பதே இதற்கான காரணமாகும். எனினும் பிற்காலத்தில் பரத நாட்டியத்தின் தொன்மை குறித்து ஆராய்ந்த நேர்மையான ஆய்வாளர்கள், உண்மையை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வெளிக்கொண்டுவந்தனர்.

எனவே, யாருக்கு பெருமை போய்ச்சேர வேண்டுமோ அவர்களுக்கு அதை வழங்குவதே சரியானது. ஏனெனில் தமிழர்களுக்கென ஒரு நாட்டியத்தை உருவாக்கி அதைக்காப்பாற்றி வந்தவர்கள் தேவதாசி குலத்தினரே. கர்நாடக சங்கீதத்தையும் பரத நாட்டியத்தையும் தந்தவர்கள் இவர்களே என்பதை மூடி மறைப்பது எவ்வகையிலும் நேர்மையாக அமையாது.
'எனவே இக்கலையின் தமிழ் வேர்களையும், அதைக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வது யாராக இருந்த போதிலும் அதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைய பரதநிகழ் வடிவத்தை (format) அமைத்துத் தந்தவர்கள் தஞ்சை நால்வர் எனும் இசை வேளாளர் மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபக் கூரையில் இந்த நால்வர் நட்டுவாங்கம் செய்ய ஒரு தேவதாசி மங்கை நடனமாடும் ஓவியம் உள்ளது' என்று குறிப்பிடுகிறார் அ. மார்க்ஸ் தனது 'தேவதாசி முறையும் பரதநாட்டியமும்' என்ற கட்டுரையில்.

தமிழகத்தில் தேவரடியார் மரபு என்ற நூலை கலாநிதி நர்மதா எழுதியுள்ளார். தற்போது அவர், பரத நாட்டியத்தில் தேவரடியார் மரபு பற்றி ஒரு நூலை எழுதி வெளியிடவுள்ளார். பி.எம். சுந்தரம் என்பவர் தேவரடியார் பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார். லஷ்மி விஸ்வநாதன் WOMEN OF PRIDE THE DEVADASI HERITAGE என்றொரு நூலை எழுதியுள்ளார். நடனமணி பாலசரஸ்வதி குறித்த ஒரு ஆவணப்படத்தை 'பாலா' என்ற பெயரில் சத்யஜித்ரே எடுத்துள்ளார்.

'சொர்ணமால்யா தனது பிச். எச்.டி. ஆய்வுக்காக 'ரகுநாத அபுதவமு' என்ற நாட்டியம் குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வில், பரத நாட்டியம் என இன்று அறியப்படும் நடனத்தில் பாரசீக நடனத்தின் பாதிப்புக் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சொர்ணமால்யாவின் ஆய்வு நேர்முகத் தேர்வின்போது உயர்சாதி அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். அதாவது அவர்களால் போற்றப்படும் நாட்டிய மரபில் பாரசீக அல்லது முஸ்லிம் பண்பாட்டுத்தாக்கம் உள்ளது என்ற உண்மையை அவர்கள் ஏற்கத் தயாரில்லை என்பதையே இது வெளிப்படுத்தியது. மேலும் பரத நாட்டியத்தில் தேவதாசியரின் பங்களிப்பு குறித்து சொர்ணமால்யா கொடுக்கும் அதிக அழுத்தமும் இந்த உயர்குடி அறிவு ஜீவிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை 'யாதும்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்த கோம்பை அன்வர் சுட்டிக்காட்டுகிறார். குடந்தை கோவில் சிற்பமொன்று எல்லோரும் கருதுவதுபோல கிருஷ்ணனல்ல என்றும் அது தமிழ் கடவுளான முருகனுடையது என்றும் சொர்ணமால்யா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை பரதநாட்டியத் தாரகையான பத்மா சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்திருந்தாராம்.

இத்தகவல்களை எல்லாம் அ.மார்க்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

(தொடரும்) 

தமிழர்களின் காதலர் தினம்

பிரசித்தி  பெற்ற றைகம் காமன் கூத்து


மணி   ஸ்ரீகாந்தன்

"ண்ட சரங்கள் எல்லாம் பிண்டமெல்லாம் துலங்க ஆவணி புவனமதில் மாரிவரும் மாசிதனில் அந்த சந்தர் உலகமெல்லாம் பாரிவரும் மாசிதனில் அம்மாவாசை பிறையும் நவமுள்ள மூன்றாம் நாள் அருள் நிறைந்த வேல் மதனே நிறைவாகக் கொண்டாட அழகு மதன் தகன லீலா வடிவு மகன் திருளாம் அங்குச செகனம் எல்லாம் எங்கும் எங்கும் அலங்கரித்து...." என்ற காமன் கூத்து ஒப்பாரி பாடல்கள் மாசி மாதம் தொடங்கிய உடனே பறையிசையோடு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. காமன் கூத்தானது மாசி மூன்றாம் பிறையில் அமாவாசை முடிய மூன்றாம் நாள் கம்பம் நாட்டப்படுகின்றது.
நம் நாட்டில் மலையகத்திலும் இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட சிறு தோட்ட பகுதிகளிலும் காமன் விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயரால் கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்களோடு, கிராமிய கலைகளும், புலம்பெயர்ந்து வந்து மலையகத்தில் குடியேறிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொன்னர் சங்கர், அர்சுனன் தபசு, நல்ல தங்காள் கதை, நொண்டி மேளம், காத்தவராயன் கதை, பொய்க்கால் ஆட்டம், குறவஞ்சி கூத்து, உள்ளிட்ட நாட்டார் கலை வடிவங்களின் வழித்தடத்தில் மிகவும் உன்னதமான கூத்து வடிவமாக இன்றுவரை 'காமன் கூத்து' மக்களின் அமோக ஆதரவுடன் ஆடப்பட்டு வருகிறது. கொழும்புக்கு மிகவும் அருகில் உள்ள றைகம் தோட்டத்திலும் இவ்விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் வெகு சிறப்பாக காமன் கூத்து நடைபெறும் இடங்களில் றைகமவும் ஒன்றாகும். மின் விளக்கு அலங்காரத்திற்காக மட்டும் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி பந்தலை அழகுபடுத்தும் ஏற்பாட்டாளர்கள் வரலாற்று வேடங்களில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. ஆனால் வழமைக்கு மாறாக இம்முறை காமன் கதையை திறம்பட செய்ததோடு தெய்வ வேடங்களையும் மிகவும் சிறப்பாக அமைத்திருந்தார்கள்.
எஸ்.ராமர்
இதற்கு புதிய நிர்வாகத்தை கையில் எடுத்திருக்கும் ரவீந்திரகுமார், மோகன்ராஜ், சசிக்குமார், ஸ்டீபன் உள்ளிட்ட இளைஞரனியினரின் கடும் உழைப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மலையகத்தில் மஸ்கெலியா 'லங்கா' தோட்டத்தைச் சேர்ந்த கூத்து வாத்தியார் சுப்ரமணியம் ராமரின் தலைமையிலேயே காமன் கூத்து இம்முறை அரங்கேறியது. நவரத்தின ஒப்பாரி, ஜனன காண்டம், உள்ளிட்ட நூல்களின்படி தாள அச்சரம் தப்பாது சங்கதிகளை பாடி அசத்துவதில் அவர் கைத்தேர்ந்தவர்தான்.

"எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து இன்றுவரை என்னோட பரம்பரையைச் சேர்ந்தவங்கதான் காமன் கூத்து பாடல்களை பாடி வருகிறார்கள். முறையான பயிற்சி பெற்றே இதை நான் செய்து வருகிறேன். எனக்குத் தெரிய எங்கப்பா கூத்துப் பாடல்களை பாடினார். அப்புறம் நான், அடுத்து என் மகன். இப்போ அவரு ஆண்டு மூன்றில் கல்வி கற்கிறார். அவருக்கும் பாடல்களை முறையாகச் சொல்லிக் கொடுக்கிறேன்" என்று சொல்லும்போதே ராமரின் முகத்தில் பெருமிதம். தமக்குப் பிறகு இந்தக் கலை அழித்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். காமன் கூத்து பாடல்களை பாட ஆசைப்படும் கத்துக்குட்டிகள் ராமரிடம் பயிற்சி பெற்றாளே போதும். மனிதர் காமன் கூத்து ஒப்பாரிகள் பலவற்றை விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
வாத்தியாரோடு வந்திருந்த ஒப்பனைக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏனைய கலைஞர்களும் திறம்பட உழைத்து றைகம் காமன் கூத்து வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறார்கள்.
கரும்பு தொட்டில்
காமன் கூத்து விழாக்களில் வேடங்கள் இடங்களுக்கு அமைய வேறுபடும். மலையகத்தில் பெரும்பாலும் 85 தொடக்கம் 108 வேடங்கள் வரை அணியப்பட்டு நடத்தப்படுகிறது. ஆனால் றைகம் உள்ளிட்ட சிறுதோட்டப் பகுதிகளில் ஐந்து தொடக்கம் 32 வேடங்களோடு ஆட்டத்தை முடித்துக்கொள்கிறார்கள். இதனால் அந்தக் கூத்துக் கதை முழுமை பெறாமலேயே அடுத்தது என்ன? என்பது போல கேள்விக் குறியோடு நின்று விடுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாட்டு வாத்தியார் ராமர், எமன், மோகினி போன்ற இரண்டு வேடங்களை மேலதிகமாக போட்டு கதையை முடித்தார். இதனால் கதையில் பிழை இருப்பதாக சொல்லி ஆதங்கப்பட்ட சில பழமைவாதிகள் 'சாமி குத்தம் கண்ணு போயிடும்' என்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததை தெரு முனையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

காமன் கூத்து விழா பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாகவே விளங்கி வருகிறது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களில் பெண்களே பெருவாரியாக திரண்டு, குழந்தை குட்டிகளோடு திடலில் இடம்பிடித்து விடிய விடிய அமர்ந்திருந்தார்கள்.

ரதி, மதன் திருமணத்தை குருக்கள் மந்திரம் ஓதி நடாத்தி வைத்தப் பிறகு அங்கே மொய் பணம் பிடிக்கப்படுகிறது. அறிவிப்பாளர்கள் மொய்ப்பணத்தை பற்றி அறிவித்ததும் அங்கே திடலில் வைக்கப்பட்டிருந்த தாம்பூலத்தட்டில் குறைந்த பட்சம் நூறு ரூபா நோட்டிலிருந்து ஐநூறு ரூபா வரை நோட்டுகள் சில நொடிகளிலேயே மலையாக குவிந்து விடுகிறது. முழுக்க முழுக்க அந்தப் பண நோட்டுக்களை பெண்களே சர்வ சாதாரணமாக தட்டில் போட்டு விட்டு மனசு நிறைந்த பூரிப்போடு செல்கிறார்கள்.
காளி வேடம்
விழாவில் நேர்த்திக்கடன் முக்கிய அம்சமாக இருக்கிறது. காமன் நாட்டப்பட்டு காமன் விழா தொடங்கும் நாளில், நேர்த்திக் கடன் வைப்பார்கள். இதில் இளம் பெண்கள், இளைஞர்கள், காதல் கைகூடவும், திருமணமாகாத மகன், மகளுக்காக பெற்றோர்களும் உறவினர்களும் காமனை வேண்டி நேர்த்தி வைக்கிறார்கள். அதோடு எதிரிகளை தண்டிக்கவும், நோய்வாய்ப்பட்டோர் குணமடையவும் இங்கே காமக் கடவுளிடம் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அப்படி செய்யப்படும் நேர்த்திகள் அடுத்த ஆண்டே காமன் கடவுளால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை ஆண்டாண்டுகாலமாக இருந்து வருகிறது. அன்றைய நிகழ்வில் குழந்தை பாக்கியம் வேண்டி காமனிடம் நேர்த்திக்கடன் வைத்தவர்கள் காமக் கடவுளின் ஆசிர்வாதத்தால் குழந்தை பெற்றதற்கு நன்றிக் கடனாக தமது குழந்தைகளை தூக்கி வந்திருந்தார்கள். பெரிய செங்கரும்பு இரண்டில் தொட்டில் கட்டி அதை ரதி, மதன் வேடம் தரித்தவர்களின் தோளில் வைத்து தமது குழந்தைகளை அத்தொட்டிலில் இட்டு தாலாட்டுப் பாடி மகிழ்ந்தனர். பார்ப்போரை இக்காட்சி ஆனந்தம் கொள்ளச் செய்தது.

விழாவில் குறவன் குறத்தியாக வலம் வந்த விக்னேஷ்,அஜித் சபையோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார்கள். பெண் வேடத்திற்கு ரவிக்கையும், சேலையும், கொஞ்சம் பவுடரும் இருந்தால் போதும் குறத்தி வேடம் போட்டு விடலாம் என்றிருந்த மாயையை விக்னேஸ் உடைத்தெறிந்து அச்சொட்டான குறத்தியாக வலம் வந்து சபையோரை கவர்ந்ததில் வியப்பில்லைதான். ஏனெனில் அதற்கான உடல்வாகு அவருக்கு இருந்தது.
குறவனும்,குறத்தியும்
காமன் கூத்தில் பார்வையாளர்களை மிரட்டும் வேடங்களில் காளி, வீரபத்திரன் முதன்மையானவர்கள். தீப்பந்த அலங்காரத்தோடு பக்தர்கள் நேர்த்தியாக கொடுக்கும் கோழிகளை வாயில் கடித்து குதறி ரத்தம் சொட்ட சொட்ட கூத்து நடக்கும் திடலுக்கு ஆடி வருவார்கள். சாமிகளுக்கு அருள் ரொம்ப ஓவராகிப் போனால் ஆட்டம் பிழைத்துப் போய்விடும். ஆனால் காளி வேடம் தரித்திருந்த திலக்ராஜா பூசாரி அருளை தமது கட்டுப்பாட்டில் வைத்து திறம்படி ஆடி வந்து பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தார். அப்போது என் பின்னே வந்த ஒருவர் "சாமின்னா இப்படி ஆடக்கூடாதுங்க... ஆடிவரும்போது கீழே விழுந்து மண்ணில் புரண்டு மண் திங்க வேண்டும். அப்போ நாங்க ஒரு இருபது பேர் சாமி மேல விழுந்து படுத்து பிடிச்சு வருவோம்"
என்று பக்திப் பழமாக என்னிடம் தான் கண்ட குறைபாட்டை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது இடையில் ஓடிவந்த ஒருவர் "சாமிக்கிட்டே ரெண்டு கோழிகளுக்கு ஆட்டையை போட்டுட்டேன்" என்று தாம் செய்த திருட்டு சாதனையை சொல்லி மெய் சிலர்த்தார். சாமிகள் குரல்வளையை கடித்துக் கொன்றுபோடும் சேவல்களை கூட வரும் ஒருவர் சாக்குப் பைக்குள் போட்டு பத்திரப்படுத்துவார். இப்படி சேகரிக்கப்படும் சேவல்களைத் திருடி சாப்பிடவும் ஒரு கூட்டம் சாமியோடு சாமியாடிக் கொண்டிருப்பதை அப்போதுதான் அவதானித்தோம்.
விழாவுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் குளிர்பானங்கள் வழங்குவது முடியாத காரியம்தான். ஆனாலும் சில அமைப்புகள் மக்கள் நலன் கருதி அதையும் செய்து கொண்டிருந்தன. 'பிரைட் ஸ்டார்' குழுவினர் கொட்டும் பனியில் காய்கறி சூப்பை சுடச் சுட பார்வையாளர்களுக்கு வழங்கி குளிரை இதமாக்கி தந்திருந்தார்கள். நாமும் சூடா ஒரு கப் சூப்பை வாங்கி குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

face பக்கம்

Friday, July 17, 2015

இருள் உலகக் கதைகள்

பூசாரியை துரத்தி வந்த பிணவாடை பிசாசு!

 

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி   ஸ்ரீகாந்தன்

வீட்டின் நடுமத்தியில் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தபடி, சுருட்டை பற்றவைத்து, புகை கக்கும் இயந்திரம் போல வாயிலும், மூக்கிலும் புகையை வழியவிட்டபடி அட்டகாசமாக காட்சியளித்தாள் மீனாட்சி.
"நீ யாருன்னு மட்டும் சொல்லிடு உன்னை உயிரோட விட்றேன்" என்று கையில் சவுக்கோடு மீனாட்சியை கடுந்தொனியில் மிரட்டிக் கொண்டிருந்தார் முத்து பூசாரி. கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக கஹவத்தை 'கிரிபத்கலை' தோட்டத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில்தான் தோட்டத் தொழிலாளியான மீனாட்சியை பேய் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. மீனாட்சி இயல்பில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். அவளை பேய் பிடித்ததிலிருந்து அவள் ஒரு முரட்டுப் பெண்ணாக மாறிப் போனாள். பூமி அதிர்வதுப் போல் நடப்பது, பேய்க் கூச்சல் போடுவது, சாராய போத்தலை வாயில் வைத்து மடக்மடக்கென குடிப்பது போன்ற காரியங்களை அவள் சர்வசாதாரணமாகச் செய்தாள். மீனாட்சியின் நடவடிக்கைகளை கண்டு பயந்துபோன அவளது கணவனும் உறவுக்காரர்களும் பூசாரியியை அழைத்து பரிகாரம் கேட்டு பேயோட்டும் வேலையில் இறங்கினார்கள். மீனாட்சியின் உடம்பில் இருக்கும் அந்த தீய சக்தி எதுவாக இருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கிய முத்து பூசாரி, மேலும் பல தீய சக்திகளை தன் உடம்பிற்குள் இறக்கிக் கொண்டார். காட்டு யானையை விரட்ட கும்கி யானையைக் கொண்டு வருவது மாதிரித்தான் இதுவும். மீனாட்சியை இப்படி மிரட்டவே, மிரண்டு பேன அந்த தீயசக்தி, முதல் தடவையாக வாயைத் திறந்தது.

"டேய் பூசாரி! நான் தாண்டா கிளி" என்றது அது. அங்கே கூடியிருந்த ஊர்வாசிகள் இப்பெயரைக் கேட்டதும் குலைநடுங்கி வாயடைத்துப் போய் நின்றார்கள்.

கிரிபத்கல பகுதியில் 'கிளி' என்றப் பெண்ணைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக கள்ளச்சாராய வியாபாரத்தில் கைதேர்ந்தவளாக திகழ்ந்தவள்தான் இந்தக் கிளி. வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தைகள் கரை புரளும். முரட்டு சுபாவம். பீடி, சுருட்டு சர்வ சாதாரணம். மொத்தத்தில் எல்லா கெட்டப் பழக்கங்களும் கொண்ட ரௌடிப் பெண்தான் இந்தக் கிளி. அவளை யாரும் எதிர்க்கவோ தட்டிக்கேட்கவோ முடியாது. தனக்கு அடங்கி நடப்பவர்களுக்கு மட்டுமே கிளி அன்பு காட்டுவாளாம்.

அதனால்தான் கிளியின் கணவனும் அடங்கித்தான் நடந்திருக்கிறான். கிளிக்கு அடக்க முடியாத கோபம் வந்தால் அதை தனிப்பதற்கு சாராயம் குடிப்பாளாம். இப்படியொரு பெண் கேரக்டரை சினிமாவில் மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவள் நிஜத்திலும் வாழ்ந்திருக்கிறாள்.

ஒரு நாள் கிளிக்கும் கணவனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கிறது. சண்டை சூடு பிடிக்க, முடிவில் ஆத்திரத்தை அடக்க முடியாமல் போக வீட்டு மூலையில் வைக்கப்பட்டிருக்கும் போத்தலில் இருந்ததை மடக்மடக்கென குடித்திருக்கிறாள் கிளி. சாராயத்தை உள்ளே தள்ளினால்தான் அவளுக்கு நிதானம் பிறக்கும். கணவனும் இதைப் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் இருக்கவே சிறிது நேரத்தில் அறைக்குள்ளிலிருந்து அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. அவன் ஓடிச்சென்று பார்க்க, எங்கே கிளி தரையில் தாறுமாறாகக் கிடந்தாள். பக்கத்தில் அரைப்போத்தல். கிளியை உற்றுப் பார்த்த போதுதான் அவள் வாயிலிருந்து நுரை தள்ளிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். சட்டெனக் குனிந்து கீழே கிடந்த அரைப் போத்தலை எடுத்துப் பார்த்தான். அது அவள் நினைத்த மாதிரி கசிப்பு போத்தல் அல்ல. அசிட் போத்தல். இறப்பர் பாலை உறையச் செய்யும் அசிட். குடித்தால் பிழைக்கவே முடியாது. கிளி மரணத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளை ஆட்டோவில் தூக்கிப்போட்டு வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியிலேயே அவள் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் நடந்து ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையில்தான் இப்போது கிளியின் துஷ்ட ஆவி மீனாட்சியின் உடம்பில் புகுந்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது. பல நாட்களாக கிரிபத்கல பகுதியில் நடந்த அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் கிளியின் ஆவிதான் என்பதை தெரிந்து கொண்ட ஊர்வாசிகளின் பயம் மேலும் அதிகமாகியது.
முத்து பூசாரி
"நீ விரும்பித்தானே விஷம் குடித்து தற்கொலை பண்ணிக்கிட்டே...., இப்போ எதுக்கு ஆவியா அலையிற?" என்று முத்துபூசாரி கிளியிடம் அதட்டலாகக் கேட்டார். "நான் எங்கேடா தற்கொலை பண்ணிக்கிட்டேன்? அது நான் சாகும் வயசாடா? அப்போ செத்திருக்காட்டி இன்னும் எவ்வளவோ காலத்துக்கு வாழ்ந்திருப்பேனே!" என மார்பில் அடித்துக் கொண்டது கிளியின் ஆவி. கிளி சொன்னதைக் கேட்டு கடுப்பானார் முத்து.

"அப்போ உன்னை விஷம் கொடுத்து கொலை செய்தாங்களா?" என்று பூசாரி கேட்கவும் கிளிக்கு கோபம் வந்து விட்டது.

"தூ! வாயை மூடுடா! நான் என்ன சாதாரண பொம்பளையா, எனக்கு விசம் கொடுக்கிற வரைக்கும் என் கை என்ன பூவா பறிச்சிட்டு இருந்திருக்கும்? இறப்பர் பாலை உறைய வைக்கிறதுக்காக வாங்கி வைத்திருந்த அசிட்டை சாராயம்னு நினைச்சு அவசரத்துல வாயில ஊத்திட்டேன்டா!" என்று தனக்கு நடந்த சம்பவத்தை கிளி தன் முரட்டுக் குரலில் விவரித்த போதுதான் பலருக்கும் அந்த தற்கொலை சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரிய வந்தது. பிறகு கிளியை மிரட்டி மீனாட்சியின் உடம்பிலிருந்து வெளியேற முத்து கட்டளைகள் பிறப்பித்தார். ஆனால் அவைகளை கிளி கண்டு கொள்ளவே இல்லை. பிறகு கிளியை ஏமாற்றி அவள் கேட்ட உணவுப் பண்டங்கள், சாராயம் என்று அனைத்தையும் கொடுத்து அவள் உண்ட மயக்கத்தில் இருந்த போது அவளை மந்திரக் கட்டுப்போட்டு பிடித்து அவள் தலை மயிரை அறுத்து போத்தலில் அடைத்தார். பிறகு சுடலைக்குச் சென்று பரிகார பூஜைகளை செய்து தீயை வளர்த்து அதில் போத்தலை போட்டு கிளியின் கதையை முடிக்க முத்து பூசாரி ஆயத்தமான போது குமுறியது கிளியின் ஆவி.

"டேய் பூசாரி! என்னை ஏமாற்றி பிடிச்சதா நினைக்காத.... உன்ன நான் சும்மா விட மாட்டேன்டா!" என்ற ஒரு கூச்சல் பூசாரியின் காதுக்குள் கேட்க 'என்னோட வாழ்க்கையில் உன்ன மாதிரி எத்தனையோ ஆவிகளை நான் பார்த்திருப்பேன்' என்றபடியே பூசாரி போத்தலை தீயில் போட்டார். கிளியின் கதை முடிந்ததில் அந்த ஊர்வாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

பூசாரி தமது உடுக்கு உள்ளிட்ட பொருட்களை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு தனது உதவியாளரோடு வீடு நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்தார். அப்போது நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. இறப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த அந்தப் பகுதியில் இருள் அமாவாசையை விடவும் அதிகமாகவே இருந்தது. சார்ஜ் வீக்கான பெட்டறியினால் பூசாரியின் கையிலிருந்து டோர்ச் விளக்கின் ஒளி மங்களாகவே தெரிந்தது. சில கிலோ மீட்டர் தூரத்தை பூசாரியும் அவரின் சகாவும் கடந்த போது பூசாரியின் கையிலிருந்த பையை யாரோ பின்னாலிருந்து இழுப்பதை அவர் உணர்ந்தார்.

"டேய் ராமு என் பையை இழுத்தியா?" என்று பூசாரி கேட்டார்.

"இல்லீங்க சாமி" என்று சகா பதிலளிக்க, "சரி வா ஒன்றுமில்லை" என்று கூறியபடியே தைரியமாக பூசாரி நடந்தார். ஆனாலும் அடிக்கடி அவரின் கைப்பை மின்னலடிப்பது போல பட்பட்டென யாரோ இழுப்பதை அவர் உணர்ந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. "எங்கே கிளி திரும்பவும் வந்து விட்டதா, நான் ஏதேனும் பிழை விட்டு விட்டேனா?" பூசாரி தன்னைத்தானே கேட்டுக்கொண்டு நடந்தார். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பேய் பிசாசு விஷயத்தில் அரிச்சுவடி பாடமே பயப்படக்கூடாது என்பதுதான்.

களைப்புடன் வீட்டை அடைந்த முத்து பூசாரி கையிலிருந்த பையை மூலையில் வைத்து விட்டு பாயில் சுருண்டு படுத்தார். அவர் படுத்து சில நிமிடங்களில் அவரின் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். சகிக்க முடியாத பிணவாடை வீட்டையே சூழ்ந்தது. பிறகு அது நின்றது. அடுத்த கனம் அந்த வீட்டின் ஜன்னல், சமையல் அறைக் கதவுகளும் பலமாகத் தட்டப்பட்டன. அதில் ஒரு அவசரம் தெரிந்தது. வீட்டின் தகரக் கூரையிலும் மண் விழுந்த சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பூசாரியின் மனைவி,   "ஏ மனுஷா, நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க? இப்போ பாரு ஏதேதோ வீடு வரைக்கும் வந்து பிணவாடை தாங்க முடியலை. அது ஏதோ கேட்டு அட்டகாசம் பண்ணுது" என்று அலுத்துக் கொண்டார். எங்கோ ஏதோ தவறு நடந்து விட்டதை உணர்ந்து கொண்ட பூசாரி நிதானமாக முதல் நாள் இரவு விஷயங்களை ஒவ்வொன்றாக நிரல்படுத்திப்பார்த்தார். சட்டென அவருக்கும் புரிந்தது. உஷாரான பூசாரி, எழும்பிச் சென்று மூலையில் கிடந்த பையை எடுத்து துழாவிப் பார்த்து. பேய் சேஷ்டைகளுக்கான காரணம் அங்கே பதுங்கிக் கிடந்தது!
சுடலையில் பரிகாரம் செய்யும் போது தீய சக்திகள் மச்ச ருசிக்காக ஆசையோடு அலைந்து திரியுமாம். அப்போது அவற்றைத் திருப்திப்படுத்த மூன்று திசைகளிலும் முட்டைகளை வீசி எறிவது வழக்கம். ஆனால் அன்று பூசாரிக்கும் போதை கொஞ்சம் அதிகமானதால் முட்டை விஷயத்தை மறந்து விட்டாராம். அதனால்தான் எச்சில் பேய்கள் பூசாரியை பின்தொடர்ந்து முட்டைக்காக வீடுவரை வந்திருக்கின்றன. தவறை உணர்ந்து கொண்ட அவர் மூன்று முட்டைகளையும் கையில் எடுத்தபடியே கதவைத் திறந்தார். வாசலுக்கு வெளியே தீய சக்தி ஒன்று நீண்ட தலைமுடியும் கொள்ளிக்கண்களுமாக நாக்கை தொங்க விட்டபடி நின்று கொண்டிருந்தது. சகிக்க முடியாத பிணவாடை வீசிக் கொண்டிருந்தது. பூசாரி அதைப்பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு (இப்படி எத்தனையோ பேய்களை பார்த்திருப்பதால் அவருக்கு இது பழகிப்போன விஷயம்) கையில் இருந்த முட்டைகளை தீய சக்தியை நோக்கி நீட்டினார். அந்த செக்கனில் முட்டைகள் காணாமல் போக வீட்டுக்கு முன்னால் இருந்த வாழைத்தோட்டத்தை முறித்துக்கொண்டு அது வெளியேறியது. நிம்மதி பெருமூச்சு விட்டபடியே பூசாரி பாயில் சுருண்டார்.

Friday, July 10, 2015

கோலி சோடா புகழ் சீதாவுடன் ஒரு நேர்காணல்

இயக்குநர் விஜய் மில்டனை சீ, போடா! என திட்டி விரட்டிய ஏ.டி.எம். சீதா!


நேர்கண்டவர்:  மணி ஸ்ரீகாந்தன்

ஏ.டி.எம். என்றால் ஓட்டோமெடிக் டெலர் மெஷின் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு 'அழுகிப்போன டொமேட்டோ' என்று இன்னொரு அர்த்தம் இருக்கிறது என்பதை கோலி சோடா படம் பார்த்தவர்கள் புரிந்திருப்பார்கள். படத்தில் A.T.M. என்ற பாத்திரத்தில் சீதா நடித்திருந்தார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டுப் பெற்ற அவர் தற்போது சென்னையில் 12வது படித்து வருகிறார்.
முருகதாஸின் கத்தியில் ஒரு சீனில் வந்தவர் தற்போது விஜய் மில்டனின் 'பத்து என்றதுக்குள்ள' படத்தில் நடிகை சமந்தாவின் தங்கையாக நடித்து வருகிறார். சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் அவரின் வீடு இருக்கிறது. கோலிசோடாவில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சீதாவை சந்திப்பதற்காக அவரின் வீடு வரை நடைப்போட்டோம்.

குன்றத்தூர் சென்னை புறநகர் பகுதியாக இருந்தாலும் இன்னும் அந்த கிராமத்தின் அழகு மாறவேயில்லை... அஞ்சுகம் அம்மையார் காலணியில் குடியிருக்கும் சீதாவின் செல்லுக்கு ஒரு அழைப்பை போட்டு விட்டு சிவகாமி அம்மாள் கல்யாண மண்டபத்தின் எதிரே இருந்த டீக்கடையில் சுடச்சுட ஒரு டீயை வாங்கி தொண்டையை நனைத்துக் கொண்டிருந்த போது,

"சார் கொழும்பிலிருந்து வர்றீங்களா?" என்று கேட்டபடியே சீதா எம் அருகே வந்து கை கொடுத்தார்.

'அட நம்ம ‘ATM’ மானு பதிலுக்கு நாமும் புன்னகைத்தப்படியே அவரோடு அந்த ஒற்றையடிப் பாதையில் பேசிக் கொண்டே நடந்தோம்.

"எம்.ஜி.ஆர் நகர் 'ஹை செகண்ட்டரி' ஸ்கூலில் 12வது படிச்சிட்டு இருக்கேங்க, எங்கப்பா பேரு கோவிந்த ராஜ். டிவுனில் பழ வியாபாரம் செய்கிறாரு. அம்மா பேரு சரஸ்வதி. எனக்கு ஒரு அக்கா அவ பேரு மீன" என்று சீதா தன் குடும்ப வரைபடத்தை சொல்லி முடிக்கும் போது அவரின் வீடும் வந்து விட்டது. ரொம்பவும் சுகாதாரமான இடத்தில் ஒற்றை வீடு. ரொம்ப சின்னதாக இருந்தாலும் வசதியாகத்தான் இருந்தது. சென்னையில் நல்ல காற்றை அந்த வீட்டில் சுவாசித்தப்போது மனசு நிறைந்தது போல இருந்தது.

"நாங்க ரொம்ப ஏழைங்க சார். கோலி சோடா படத்தில் என் பொண்ணு நடித்ததால் கிடைத்த சம்பளத்தை வாங்கித்தான் இந்த வீட்டை கட்டி முடிச்சோம். இப்போ நமக்கும் ஒரு சொந்த வீடு இருக்குங்க...! அதனால டைரக்டர் விஜய் மில்டன் சாரை எங்களால மறக்க முடியாது. உண்மையை சொல்லணும்னா நான் கடவுளுக்கு அடுத்த படியாக விஜய் மில்டனைத் தான் நினைக்கிறேன" என்று சீதாவின் அம்மா சரஸ்வதி சொன்னப்போது அவரின் முகத்தில் நன்றி பளீச்சிட்டது. "நமக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம்ங்க... நான் சினிமா பார்ப்பேன், பசங்க படத்தைக்கூட பார்த்திருக்கிறேன். ஆனா அப்போ கூட நான் நடிகை ஆவேன், 'பசங்க' நடிகர்களோட நடிப்பேன்னு கனவுல கூட நினைச்சுப் பார்க்கல. இந்த முகத்தை யாராவது சினிமாவில காட்டுவாங்கனு நினைக்கத்தான் முடியுமா" என்று படபடவென பேசத் தொடங்குகிறார் சீதா.
"ஒரு நாள் பள்ளிக்கூடம் போகும்போது ஒருத்தர் பைக்ல என் பக்கத்துல வந்து சடார்னு பிரேக் போட்டு "உன் பேரு என்னம்மா" என்று கேட்டார். நான் ரொம்ப பயந்துட்டேன் 'என் பேரை நான் ஏன் உன் கிட்டே சொல்லணும்' என்று கேட்டுவிட்டு நான் அந்த ஆளை கண்டுக்காமல் மேலே நடக்க ஆரம்பித்தேன். அந்த மனுஷன் தொடர்ந்து என் பின்னாடியே வந்தார். "உன் போன் நம்பரை கொடும்மா" என்றார் திரும்பவும். எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. 'ச் சீ போ!' னு சொல்லிட்டு மேலே நடந்தேன். அந்த ஆளும் விடுகிற மாதிரி இல்லை. 'உன் நம்பர தராட்டி பரவாயில்லை... உன் அப்பா நம்பரையாவது தாமான்னா' என்று விடாமல் கேட்டார்.

'இங்கப் பாரு, இதோட நிறுத்திக்க இனி என் பின்னாடி வந்தா அப்புறம் என்ன பண்ணுவேன்னு தெரியாது' என்று ஆத்திரத்தோடு கூறி விட்டு பள்ளிக்குள் நுழைந்தேன். பிறகு மாலை பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் அந்த சம்பவத்தை அம்மாவிடம் சொல்லிட்டு அழுதேன்.
'உன்ன யாருடீ ரோட்டுல தனியா போகச் சொன்னது? பசங்களோட சேர்ந்து போன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன்? தனியா போனா இப்படித்தான் கண்ட கண்ட கழுதை எல்லாம் பின்னாடி வரும்' என்று அம்மா அர்ச்சனையை ஆரம்பிச்சா."

சீதா இத்தோடு நிறுத்த சரஸ்வதி தொடர்ந்தார்,

"அதன் பிறகு இரண்டு நாள் கழிச்சு என் வீட்டுக்கு ஒருத்தர் வந்து என் பொண்ணுக்கிட்டே போன் நம்பர் கேட்ட விடயத்தையும் சொல்லி, நான்தான் 'பசங்க' டைரக்டர் விஜய் மில்டன்னு அறிமுகம் செய்தார். பிறகு சீதாவை சினிமாவில் நடிக்க வைக்கப் போவதாக சொல்ல எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பிறகு அவரு கதையையும் சொல்லி பணமும் தருவதாகவும், ஒரு பிரச்சினையும் இருக்காது என்று உத்தரவாதமும் கொடுத்தார். அப்புறம் நான் சம்மதித்தேன். பிறகு விடயத்தை என் பொண்ணுக்கிட்டே சொன்னப்போது அவ நடிக்க முடியாதுன்னு மறுத்திட்டா. ஆனா நான், என் கணவர், என் மூத்த பொண்ணு மீனா எல்லோரும் சீதாவை வற்புறுத்தினோம். ஒரு வழியாக சம்மதித்தாள்" என்று சரஸ்வதி சொல்லி முடித்தபோது,
கோலி சோடாவில்
"என்னோட படிக்கிற நண்பிகள், 'அய்யோ சினிமாவில நடிக்கப் போறீயா? அவ்வளவுதான் போ!' என்று என்னை பயம் காட்டினாங்க. என்னப் பண்ணுறதுன்னு வேண்டா வெறுப்பாதான் படப்பிடிப்புக்கு போனேன். ஆனா அங்கே பசங்க டீம் பசங்கள பார்த்த உடனே ஒரு சந்தோசம், உற்சாகம் வந்திருச்சி. நடிக்கலாம்னு ஒரு எண்ணம் மனசுக்குள்ள ஒளி வீசிய போது விஜய் மில்டன் அண்ணா பக்கத்துல வந்து 'என்ன? என்னை நீ திட்டுகிறாயா? என்று கேட்டார். எனக்கு  ரொம்பவும் கூச்சமாக போயிடுச்சு. பிறகு கொஞ்ச நாளில் படப்பிடிப்பு பழகி போயிடுச்சு. 'நீ ஒண்ணும் பெரிசா பண்ணத் தேவையில்லை. நான் சொல்லறத அப்படியே செய்' என்று விஜய் மில்டன் அண்ணா சொன்னதை பண்ணிக்காட்டினேன். கை தட்டலும் வாங்கினேன்" என்ற சீதாவின் வார்த்தைகளில் சாதித்து விட்டதற்கான அழுத்தம் ரொம்பவே ஸ்ட்ராங்காகவே தெரிந்தது.

"விடுமுறை நாட்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் என்னோட படிப்புக்கு எந்த சிக்கலும் வரலை, ஒரு நாள் நான் மொட்டை போடணும்னு சொன்னதும் நான் ரொம்பவே ஆடிப்போயிட்டேன். கதைக்கு கட்டாயம் மொட்டை அவசியம்னு டைரக்டர் சொன்னதால் சம்மதித்தேன். மொட்டை அடிச்சப் பிறகு எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்ன கொடுமைன்னா ஸ்கூல்லையும் என்னை மொட்டை என்று தோழிகள் என்னை கூப்பிட ஆரம்பிச்சதுதான். சோகத்தை வீட்டில் சொல்ல வீட்டுக்கு வந்தா என் அக்காவும் என்னை 'ஹாய் மொட்டை'னு சொல்றா எப்படி இருக்கும் எனக்கு? என்னப் பண்ணுறது, ஆனா படம் முடிஞ்சு திரையில் பார்த்த போதுதான் அந்த மொட்டையின் பெறுமதி புரிந்தது. என்று சொன்னப்போது கூடவே அவரின் அம்மாவும் 'பட்ட கஷ்டத்திற்கு என் பொண்ணு ஜெயிச்சுட்டாங்க. படம் திரைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இருந்து காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி முழுக்குடும்பமும் ஆண்டவரிடம் மண்டியிட்டு 'ஆண்டவரே இந்தப் படத்தை வெற்றிகரமாக ஓட வைத்து, கூடவே என் பொண்ணையும் வெற்றி பெற வையுங்க தேவனே' என்று ஜெபித்து கேட்டோம். அதற்கான பலனை கடவுள் கொடுத்து விட்டார"என்று மனமுருகி வெள்ளந்தியாக பேசுகிறார் சரஸ்வதி.

சீதா எப்படி சமத்து பொண்ணா இல்லா குறும்புப் பெண்ணா? என்று கேட்டப்போது சீதா சிரித்தபடியே
"நான் பண்ணுற குறும்பையெல்லாம் செய்திட்டு ஸ்கூல் டீச்சர் வரும்போது வகுப்பில் அமைதியாக இருப்பேன். அப்போ என்னைப் பார்க்கும் டீச்சர் 'சீதாவை பாருங்க ரொம்பவே சமத்தா இருக்கா' என்று சொல்லும் போது என் மனசுக்குள் ரொம்பவே சிரிப்பாக வரும்.... என்னப் பண்ணுறது நம்பளையும் நள்ளவனு நம்புறாங்கள" என்று சொன்னப் போது இடை மறித்த சரஸ்வதி

"ஆனா நான் இவளை நம்பவே மாட்டேன். பரீட்சையில் இரண்டு பாடத்தில் குறைவாக மார்க் வாங்கிட்டு வந்து என்கிட்டே காட்டினா நான் அடிப்பேன்னு பயந்துகிட்டு என்னோட கையெழுத்தை அப்படியே கொப்பி பண்ணி போட்டுட்டுப் போய் என்னையே ஏமாத்துனவதான் இவ... இப்பவும் இவ வீட்டுல குறும்பு பண்ணுனா என்கிட்டே செமத்தியா அடி வாங்கிட்டுதான் இருப்பா....! என்று சொல்லி சரஸ்வதி சிரித்தப்போது சீதாவும் கூடவே சேர்ந்து சிரித்தார். தாய், மகளின் சந்தோசப் புன்னகையோடு நாமும் A.T.M என்கிற அழகிய தமிழ் மகளிடமிருந்து விடைபெற்று நடந்தோம்.

Thursday, July 2, 2015

சினிமானந்தா பதில்கள் -23

 திருட்டு டி.வி.டியை ஒழிக்க புதிய திட்டமொன்று வந்திருக்கிறதாமே?
எம்.ரமேஸ், கொழும்பு

நடிகர்/ இயக்குநர் சேரனின் C2H (CINEMA TO HOME) திட்டத்தைத்தானே சொல்கிறீர்கள்?
திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் படங்களை அதிகாரபூர்வ டி. வி. டிக்களாக வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பதே இந்தத் திட்டம். கடந்த மாதம் (மார்ச்) 5 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சேரனின் 'ஜி.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' தான் இத்திட்டத்தில் வெளியான முதல் படம். முதல் நாளே 10 இலட்சம் டி.வி.டிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது. C2H திட்டம் 'அர்ஜூனனின் காதலி' 'அப்பாவின் மீசை' 'ஆவிகுமார்' ஆகிய படங்களே C2H மூலம் வெளிவர தயாராக உள்ளன.
ஏற்கனவே கமல் வகுத்த D2H திட்டத்தின் மறு உருவம்தான் சேரனின் C2H திட்டம். கமலின் திட்டத்தில் அனுமதி பெற்ற கேபள்காரர்களிடம் இருந்து படம் தொலைக்காட்சி பெட்டிக்குள் வந்தது. சேரனின் திட்டத்தில் அவரது நிறுவனம் வழங்கும் டி.வி.டி நேரே தொலைக்காட்சிக்கு வருகிறது. அதாவது கமலின் போர்வையில் சேரன் குளிர் காய்கிறார்.

சேரனின் C2H இன் இலங்கை வாய்ப்புகள் பற்றி ஆராய நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி மற்றும் நடிகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அண்மையில் இலங்கை வந்திருந்தனர். ஆனால் சேரனின் C2H இலங்கையில் சொதப்பிவிட்டது. தமிழ் நாட்டில் வெளியான அதேநாளில் இலங்கையின் சி.டி. கடைகளில் 'ஜே.கே' ஒரிஜனல் கிடைத்தது. சேரனுக்கு நட்டம், இலங்கை சி.டி. விற்பனை, பகிரங்கமாகவும் அதிகார பூர்வமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் கோவில்பட்டி நகரில் உள்ள சண்முகா திரையரங்கு திருட்டு டி.வி.டிக்கு எதிராக புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ஒருமுறை ஆயிரம் ரூபா கொடுத்து இந்த திரையரங்கில் டிக்கட் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் அந்த தியேட்டரில் ரிலீஸாகும் ஒவ்வொரு படத்தையும் ஒருமுறை பார்க்கலாம். பார்க்க விரும்பவில்லை என்றால் வேறொருவருக்கு கொடுத்து அந்த படத்தை பார்க்கச் சொல்லலாம்.

இந்த திட்டம் இந்த மாதம் (ஏப்ரல்) முதல் அமுலுக்கு வருகிறது. இதுவரை 5 ஆயிரம் டிக்கட்டுகள் விற்றுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் டிக்கட்டுகளை விற்கத் திட்டமாம்!

உள்ளுர் நகைக் கடையொன்றில்தான் இந்த டிக்கட் விற்கப்படுகிறது. அங்கு ஒரு சவரன் நகையையும் வாங்கினால் 1250 ரூபா தள்ளுபடியும் தருகிறார்கள். டிக்கட்டை வாங்கியவர்கள் திரையரங்குக்கு வரலாம். கிடைக்கும் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்கலாம். தியேட்டர்களுக்கு ரசிகர்களை இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, பார்த்தீர்களா?

படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் வேட்டியை நடு ரோட்டில் குறுக்காக ஸ்கிறீன் போலக் கட்டி படத்தை திரையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் ரைடக்டர் ஜகன்னாதன். அதுவும் திருட்டு டி.வி.டி ஒழிப்புத் திட்டம்தான். தமிழ் நாட்டின் சினிமா மோகத்தை பார்க்கும்போது அதுவும் கூட நடக்கலாம்!

தமிழ் சினிமாவில் அண்மையில் இடம்பெற்ற ருசிகரமான சம்பவமொன்றை கூறுங்கள்!
கவிதா, ஹேவாகம, பாதுக்க

ருசிகரமான சம்பவங்கள் மூடை மூடையாக தொன் கணக்கில் உள்ளன. எனவே சோகமான ஒரு சம்பவத்தை கூறுகிறேன் கேளுங்கள்.

'பரதேசி', 'ஆடுகளம்', 'எங்கேயும் எப்போதும்' என்ற தனித்துவமான படங்கள்மூலம் கலைப் பயணத்தை தொடங்கியவர் எடிட்டர் கிஷோர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் என்ற கிராமத்தில் இருந்து வந்தவர்.

'ஆடுகளம்' படத்துக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். பாலாவின் 'தாரை தப்பட்டை' வெற்றிமாறனின் 'விசாரணை' போன்ற பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி வந்தவர். அண்மையில் திடீரென மயங்கி சரிந்திருக்கிறார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் நினைவு திரும்பாமலேயே மரணத்தை முத்தமிட்டார்.
ஓயாமல் வேலை செய்ததுதான் கிஷோரின் மரணத்துக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இப்போது HDV தொழில்நுட்பம் வந்துவிட்டதால் நிறைய படங்கள் வெளிவருகின்றன. எடுக்கும் படத்தையும் நிறையவே ஒளிப்பதிவு செய்கிறார்கள். பல கோணங்கள், பல கெமராக்கள் என்ற ரீதியில் 8,10 படங்களுக்கான அளவு டேப் அல்லது CHIP இல் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. இதை வெட்டிச் சுருக்கி முதலில் 31/2 மணி நேர ROUGH CUT (முதற் கட்டிங் எடிட்டிங்) அதில் இருந்து FINE CUT (முறையான எடிட்டிங்) மூலம் அது 21/2 மணிநேரத்துக்கு குறைக்கப்படுகிறது ROUGH CUT சில நேரம் உதவியாளர்களால் செய்யப்படும். இப்போதைய நிலையில் ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம் எடிட்டிங் மேசைக்கு வந்து விடுகிறது. எனவே எடிட்டருக்கு ஓய்வில்லாத வேலை நிரந்தரமாகவே இருந்து வருகிறது.

கிஷோருக்கு இது போலத்தான் ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவாராம். எப்போதாவதுதான் வீட்டுக்குப் போவாராம்.

சன் டி.வியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அண்மையில் தோன்றியிருந்த கிஷோர் கூறிய ஒரு விடயம் இது.

எடிட்டிங் வேலைகளின் போது மேலே உள்ள அவரது அறைக்கு சாப்பாடு, டீ எல்லாமே வந்து விடுமாம். எனவே எந்தவித தொந்தரவும் இன்றி எடிட்டிங் வேலையை முடிந்த வரை செய்துவிட்டு அங்கேயே ஒரு குட்டித்தூக்கம் போடுவாராம். எப்போது எழும்புகிறாரோ அப்போது மீண்டும் எடிட்டிங் வேலை தொடங்கிவிடுமாம். ஒருநாள் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்த போது வெளியே நிறைய நாற்காலிகளைக் கண்டிருக்கிறார். என்னவென்று கீழே விசாரித்திருக்கிறார்.

அந்த வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனதாக சொன்னார்களாம். 'ஐயோ ரொம்ப நல்லவங்க எப்போ இறுதிக் கிரிகைகள், போகணுமே' என்று சொன்னபோது கிடைத்த பதில் அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறது. அந்த அம்மா இறந்து ஒருவாரமாம். அன்று 8 ஆம் நாள் திதிக்காகத்தான் நாற்காலிகள் போடப்பட்டிருந்தனவாம்.

அதாவது 8 நாட்கள் அந்த அறையை விட்டு கிஷோர் வெளியே செல்லவில்லை என்பதுதான் அதன் பொருள். அத்தனை பிசி. இப்படி இரவு பகலென சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்து ஓய்ந்திருக்கிறது அந்த ஆத்மா.

மௌனாஞ்சலி