Sunday, June 28, 2015

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 14

இலங்கையில்  இஸ்லாமிய இலக்கியமாநாடு  நடைபெறுமானால்…


அருள் சத்தியநாதன்

இந்த ஆய்வு மலர்களில் வெளிவரும் கட்டுரைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துப் பார்த்தால், பல கட்டுரைகள் பயனற்றவை என்பதைக் கண்டு கொள்ளலாம். 'ஒப்பேற்றுகின்ற' மாதிரியான கட்டுரைகளையே பலர் வரைகின்றனர். இக்கட்டுரைகளை சீர்தூக்கிப் பார்க்கும் குழுக்களுக்கும் இதற்கான தகுதியும், நேர்மையும் இருக்கிறதா என்பது இன்னொரு விஷயம்.

பொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் எழுதினால் அது எழுத்து, நாம் செய்தால் அது ஆய்வு. யாரிடமும் அபிப்பிராயம் கேட்பதுமில்லை, சொன்னாலும் கேட்பதில்லை. நான்கு புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதில் உள்ளவற்றை தொகுத்து எழுதினால் அது ஆய்வு. இவ்வாறான மனநிலையில்தான் ஆய்வுக் கட்டுரைகள் தயாராகின்றன. சில கட்டுரைகளை வாசிக்கும்போது, அவை மேலோட்டமாக இருப்பதைக் காணலாம். சில கட்டுரைகளின் பொருளும் விரிவும் எழுதியவருக்கே புரிந்திருக்குமா என்ற சந்தேகம் கிளம்பும். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தான் விளங்கிக் கொண்டதை எழுத்துக்களில் வெளிப்படுத்தும்போது ஒரு ஆழம் தெரியும். படிக்க ஆர்வமும் ஏற்படும். புதிதாகத் தெரிந்து கொண்ட உணர்வும் ஏற்படும். சிலவற்றை படிக்கும்போது கட்டுரை எழுதியவரின் மயக்க உணர்வு உங்களையும் தொற்றிக் கொள்ளும்.
அதாவது, ஆய்வுக் கட்டுரைகள் புதிய விஷயங்களை தக்க சான்றுகளுடன் தெட்டத் தெளிவாக நிறுவுவதாக இருக்க வேண்டும். அல்லது ஒரு புதிய விஷயத்தை அல்லது புதுக்கோட்பாட்டை அல்லது மரபுக்கு மீறிய ஒன்றாக இருக்கக் கூடிய ஒரு உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும். ஒரு பாதையை திறந்து விடுவதாகவும், இவ்வாறெல்லாம் இருப்பதால் இது இப்படியாக இருக்கலாம் என்ற புதிய கருத்தை முன்வைத்து மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் இருக்கலாம். எளிமையான நடையில், சுற்றி வளைக்காமல், மேலும் படிக்க ஆவலைத் தூண்டுவதாகவும் சிரமமானதும் மயக்கமானதுமான பதப்பிரயோகங்களை தவிர்த்து எழுதப்பட்டதாகவும் ஆய்வுக் கட்டுரைகள் அமைய வேண்டும். ஏனெனில் இது சாமானியர்களின் காலம்.

இலங்கையில் இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடைபெறுமானால், ஆய்வுக் கட்டுரைகள் விடயத்தில் கண்டிப்பான சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எந்தவொரு இடத்திலும் அரசியலுக்காக ஆய்வுகளை சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் இலக்கிய அறிஞர்களாக இருக்கக் கூடிய ஏற்பாட்டாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆய்வுகள் என்றதும் அக்கட்டுரை மலரை வாங்கி புரட்டிக்கூடப் பார்க்காமல் மூலையில் எறிந்து விடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த ஆய்வு மலர் மற்றும் மாநாட்டு மலரை இலவசமாக வாங்கிக் கொள்வதில் போடும் போட்டி இருக்கிறதே, அது தனிக்கதை! இந்தக் கனத்த மலர்களை போட்டி போட்டு வாங்கியவர்கள் பின்னர் ஊருக்கு மூட்டை கட்டும்போது 'ஓவர் வெயிட்டாக' இருக்கிறதே என்பதால் எடை குறைப்பு செய்யும் பொருட்டு முதலாவதாக வீசி எறிவது இந்த மலர்களைத்தான்! ஆமாம், ஒரு ஐந்து கிலோவரை குறைத்து விடலாம் அல்லவா?

இலங்கையை எடுத்துக் கொண்டால் இந்நாட்டுக்கென தனித்துவம் கொண்ட சிறப்பியல்புகள் உள்ளன. இஸ்லாமியரின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய பல ஆய்வுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோம்பை அன்வர் ஒரு ஆவணப்படத்தை சொந்த செலவில் எடுத்து, தென்னகத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வந்தார்கள் என்பதையும் தமிழ்களுடனான அவர்களின் உறவின் நெருக்கத்தையும் விஸ்தாரமாக எடுத்துரைத்துமிருக்கிறார்.
இங்கே இலங்கை முஸ்லிம் வரலாற்றைச் சொல்லும் தனியொரு நூல் இல்லை. சொல்லப்பட்டுள்ள வரலாறும் கற்பனையும், யுகமும் மதமும் கலக்காதவையா என்று தெரியவில்லை. இங்கே தமிழ் - முஸ்லிம் உறவில் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல என மேடைகளில் பீற்றிக் கொண்டாலும், பல பிரச்சினைகள் இருப்பது உண்மை. இரு பிரிவினருக்கும் தனித்தனி அரசியலும் கட்சி சார் அபிலாஷைகளும் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இலக்கியத்தின் ஊடாக, இவ்விரு சமூகத்தின் மத்தியிலும் உண்மையாகவே பிரச்சினைகள் கிடையாது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டுக்கு உண்டு. இவ்விரு சமூகத்தாருக்கும் இடையே நிலவிவரும். ஆனால் கண்டு கொள்ளப்படாத பல பிணைப்புகளை இம்மாநாட்டின் மூலம் எடுத்துச் சொல்லலாம்.

அரசியலை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது ஆட்சியதிகார அரசியல். இரண்டாவது ஒவ்வொரு துறைகளிலும் காணப்படும் அதிகார மற்றும் போட்டா போட்டி அரசியல். இந்த இரண்டாவது அரசியல் துறைகளில் கோலோச்சத் தொடங்கும்போது அத்துறைகள் தமது பொலிவையும் வீரியத்தையும் இழக்கத் தொடங்குகின்றன. தமிழ்ச் சினிமாவில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். - சிவாஜி போட்டா போட்டி அரசியல் தலைதூக்கியதன் விளைவாக வித்தியாசமான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதும் புதியவர்களின் வருகையும் மிகவும் பின் தங்கிப் போனது. வெளியே பார்க்க செழிப்பாகத் தெரிந்தாலும் தமிழ் சினிமா ஒரு கலை என்ற அளவில் வரட்சியையே சந்தித்தது. ஸ்ரீதர், பாலச்சந்தர், சோ, எஸ்.கே.கோபாலகிருஷ்ணன் போன்ற சிலரே தலைதூக்க முடிந்தது.
டாக்டர் தாஸிம் விருது பெறும் போது...
அவர்கள் ஏற்படுத்திய மாறுதல்கள் காரணமாக பாரதிராஜா, பாக்கியராஜா, மகேந்திரன் போன்றோர் புதுப்பாதை போட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
இலக்கிய உலகில் இந்த வெட்டுக்குத்து நிறைய உண்டு. இலக்கியவாதிகளின் அரசியல் உலகெங்கும் மோசம்தான். இலக்கியக்காரன் அல்லது படைப்பாளி எப்போதும் உணர்ச்சிக் கலவையாகவும், வித்துவச் செருக்கு கொண்டவனாக இருப்பது வழக்கம். அறுபது எழுபதுகளில் யாழ். இலக்கிய பரப்பில் இந்த மோதல் பரவலாக நிகழ்ந்தது. தலித் இலக்கியத்தை இழிசனர் இலக்கியம் என்று சொல்லப்போக, அது பெரும்வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியதையும் முற்போக்கு இலக்கியக்காரர்களுக்கு எதிராக எஸ்.பொ.நற்போக்கு இலக்கிய இயக்கியத்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கவை.

ஒரு வகையில் இவற்றை ஆரோக்கிய இலக்கிய நிகழ்வுகள் எனக் குறிப்பிடலாம். இம் மோதல்கள் ஆரோக்கிய இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவதாக இருந்தன. தமிழகத்திலும் இஸ்லாமிய இலக்கிய கழகங்கள் பல உள்ளன. இந்த அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வு மாநாடுகளை நடத்துவது தனி ஒரு இலக்கிய அமைப்பு அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட கழகங்கள் இம் மாநாட்டை வெளிநாட்டு ஆய்வாளர்களை அழைப்பதன் மூலம் 'சர்வதேச' தோற்றப்பாட்டுடன் தமது மாநாடுகளை நடத்துகின்றன. கும்பகோணம் மாநாடும் முதலில் மாநில அளவில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆய்வாளர்கள், பேராளர்களை அழைத்ததன் மூலம் உலக மாநாடக நடத்தி முடிக்கப்பட்டது.

கும்பகோண மாநாட்டை அதன் ஏற்பாட்டாளர்கள் முடிந்தவரை அரசியல் கலப்பின்றியே நடத்த முயன்றனர். அனேகமான அதன் ஏற்பாட்டாளர்கள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சார்பானவர்களாக இருந்திருக்கலாம். எனினும் நேரடியாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. பிரபலங்களை நேரடியாக மாநாட்டுக்கு அழைப்பதைத் தவிர்த்துக் கொண்டனர். அவ்வாறு அழைத்தால் அம்மா கட்சிக்காரர்களையும், அ.தி.மு.க ஆட்சி நடைபெறுவதால், அழைக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கும். அ.தி.மு.க பிரமுகர்களை அழைத்திருந்தால் அவர்கள் அம்மா புகழ்பாடி ஏற்பாட்டாளர்களை தர்ம சங்கடத்துக்குள் ஆழ்த்தியிருப்பார்கள்.

முன்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடு தி.மு.க. சார்பு மாநாடாகவே நடத்தப்பட்டதை இங்கே சுட்டிக் காட்டலாம். இறுதிநாள் நிகழ்வில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார். அம்மாநாடு சிறப்பாகவே நடைபெற்றது உண்மையானாலும் இந்த அரசியல் கலப்பு, ஏற்பாட்டாளர்களுக்கு பிரச்சினைகளைத் தோற்றிவித்திருக்க வேண்டும்.

கலைஞர் வெகு சிறப்பாக நடத்திய கோவை செம்மொழி மாநாடு இலக்கிய, ஆய்வுச் செழுமை கொண்டதாகவும் ஏற்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்த போதிலும் அதில் கலந்திருந்த தி.மு.க. நெடியும் கலைஞர் புகழ்பாடுவதும் வந்திருந்தோருக்கு வெளிப்படையாகவே தெரிந்தது. அதேபோல கடந்த பெப்ரவரி மாதம் சென்னையில் அம்மா பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்ட பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடு முழுக்க முழுக்க அம்மா புகழ் பாடுவதாகவே அமைந்திருந்தது. வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தந்திருந்தவர்களை இது முகம் சுளிக்கச் செய்தது. லண்டனில் 2013இல் நடைபெற்ற தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு தமிழாராய்ச்சி மாநாடு பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றபோதும் அதன் ஏற்பாட்டாளரின் ஒரு சார்பு நிலை காரணமாக புலம்பெயர் இலக்கியத் தமிழர்களில் ஒரு சாரார் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்டனர். இதை இலங்கையில் புலிகள் நடத்தும் மாநாடு என தவறாக அறிவித்ததன் பலனாக இலங்கையில் இருந்து சென்ற குழுவினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

1967ம் ஆண்டு சென்னையில் அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தி.மு.க. ஏற்பாட்டிலான மாநாடாக இருந்த போதிலும், அறிஞர் அண்ணாவின் பண்பாடு மற்றும் கனவான் அரசியல் காரணமாக ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகிரெட்டி, எஸ்.எஸ்.வாசன், பெரியார், ஜி.டி.நாயுடு, குன்றக்குடி அடிகளார், மு.வரதராசன், இலங்கையில் ஜி.ஜி. பொன்னம்பலம், திருச்செல்வம், மட்டக்களப்பு       இராஜதுரை என இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த பல பிரிவுகளையும் பலகட்சிகளையும் பல்வேறு சமயங்களையும் சார்ந்தோரை அம் மாநாட்டில் பங்கு பெறச் செய்ய முடிந்தது. அம் மாநாட்டில் தி.மு.க புகழும், அண்ணா புகழும் பாடப்படவில்லை. இன்றளவும் அம்மாநாட்டை நினைவு கூருவோர், தமிழ்மாநாடாக நடைபெற்றதாகச் சொல்வார்களே தவிர தி.மு.க. மாநாடு என நாமம் சாத்தியது கிடையாது.

இவ்வகையில் அரசியல் கலக்காத இலக்கிய மாநாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் கும்பகோணம் ஏற்பாட்டாளர்கள் வெற்றி பெற்றதாகவே சொல்ல வேண்டும். இனி தமிழகத்தில் நடைபெறவுள்ள இஸ்லாமிய இலக்கிய ஆய்வு மாநாடுகளும் நேரடி அரசியல் கலப்பற்ற மாநாடாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.
கிழக்கிலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை விரிவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. அம்மாநாடு முடிந்தவரை அரசியல் கலப்பில்லாததாகவும், இலக்கிய ஆய்வுகளுக்கும், அப்பிரதேசம் சார்ந்த ஆய்வுகளுக்கும் முதன்மை இடம் அளிப்பதாகவும் இஸ்லாமியர் அல்லாத இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் அமைய வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.

இங்கும் நீயா, நானா கோஷ்டிச் சண்டைகள் உண்டு. அது இல்லாவிட்டால் இலக்கியமாகாதே! எனினும் இம்மாநாட்டை ஏற்பாடு செய்பவர்களும் இதற்கு தலைமைத்துவம் தரக்கூடிய அரசியல் தலைமைகளும் அரசியல் விஷயத்தை நிர்வாகம் செய்தால் நல்லது. ஏனெனில் எதிர் கோஷ்டிகள் என்னென்ன தவறுகளைச் செய்கிறார்கள் என்பதிலேயே கண்ணாக இருக்கும். குற்றம் குறைகளை பெரிது பண்ணும். எனவே எதிர்க்கோஷ்டிகளையும் அரவணைத்து மாநாட்டை ஏற்பாடு செய்வோமானால் அது முழுமையான மாநாடாக இருக்கும்.

(தொடர் முடிவடைந்தது)

No comments:

Post a Comment