Tuesday, June 30, 2015

இருள் உலகக் கதைகள்

தம்பதியினரை பிடித்தாட்டிய எச்சில் பிசாசுகள்


திலக்கராஜா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்


"உழைக்கிறது நான்... ஆனா தின்றுவிட்டு தூங்குறது அவ!" என்று எந்தவித சலனமும் இன்றி தூங்கிக் கொண்டிருந்த அனோமாவை கோபத்துடன் பார்த்தபடியே சமரவீர சமையலறைக்குள் நுழைந்தான். சமரவீர ஒரு விவசாயி. ஐந்து மாதத்திற்கு முன்புதான் அவனுக்குத் திருமணம் நடந்தது. புத்தளத்திற்கு பக்கத்தில் சுமார் ஏழு ஏக்கரில் விவசாய நிலம் வாங்கி அங்கேயே குடியேறி வசித்து வருகிறான்.

சமரவீர முழுநேரமும் விவசாயத்திலேயே ஈடுபட்டு வந்தான். அனோமாவும் இடை இடையே அவனுக்கு உதவியாகத்தான் இருந்து வந்தாள். ஆனால் சமீபகாலமாக கணவன், மனைவி இருவருக்குமிடையே சிறு சிறு சண்டைகள் அவ்வப்போது எழ ஆழம்பித்தன.

சமையலறைக்குள் நுழைந்த சமரவீர சோற்றுப்பானையை திறந்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பானை கழுவிச் சுத்தமாக்கப்பட்டதுபோல காலியாக இருந்தது. பசியால் தவித்துக் கொண்டிருந்த அவனுக்குப் பானை காலியாக இருந்ததால்  கோபம் பொத்துக்கொண்டு வராதா என்ன?

அனோமாவை எட்டி உதைத்து எழுப்பி, "எங்கடி எனக்கு சாப்பாடு?" என்று கொதிக்கக் கொதிக்கக் கேட்டபோது அவள் மலங்க மலங்க விழித்தாள். ஏன், உங்கள் பங்கு சோறு இருக்கிறதே என்றாள் சாதாரணமாக.

"சாப்பிட்டு விட்டு உங்கள் பங்கு சோறை மிச்சம் வைத்தேன்" என்று சத்தியம் செய்தாள். ஆனால் அந்தப் பகுதியில் ஒற்றையாக இருக்கும் அந்தத் தனி வீட்டுக்குள் வெளியாள் வர வாய்ப்பில்லை என்பதை சமரவீர உணர்ந்ததால் மனைவியின் பேச்சை அவன் நம்பத் தயாராயில்லை.

இப்படித் தினமும் அந்த வீட்டில் மனைவிக்கு மிச்சம் வைக்காமல், கணவனும், கணவனுக்கு மிச்சம் வைக்காமல் மனைவியும் சாப்பாட்டை கபளீகரம் செய்வதில் கடும் போட்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால் இருவருமே அப்படிச் செய்யவில்லை என்று சத்தியம் செய்து மறுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் அனோமா பூனைபோல் பதுங்கி, பதுங்கி செல்வதை சில நாட்களுக்கு முன் அங்கே வந்து தன் மகன் சமரவீரவோடு தங்கியிருந்த அவனது தாயார் கவனித்திருக்கிறார். பிறகு அனோமாவை அவள் பின்தொடர்ந்ததில் அவள் சமையலறைக்குள் நுழைந்து, பானையில் உள்ள உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவதைக் கண்டாள். அவள் நாக்கை சுழற்றி உணவை கபளீகரம் செய்யும் அந்தக் காட்சியை பார்த்த அவளுக்கு அச்சம் ஏற்பட்டது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு சில நாட்கள் கழித்து ஒரு நள்ளிரவு வேளையில் சமரவீரவும் திருடன் போல பதுங்கிச் செல்வதை அவளின் தாய் கவனித்து அவனை பின் தொடர்ந்ததில், மூன்று நாளுக்கு முன்பு எப்படி அனோமா சாப்பாட்டை ஆவலோடு நாக்கைச் சுழற்றி சாப்பிட்டாளோ அதே மாதிரி சமரவீரவும் திருடன் போல அங்கும் இங்கும் பரபரப்பாக பார்த்தவாறே சாப்பாட்டை பேராசை பிடித்தவன் போல சாப்பிட்டு முடித்ததைப் பார்த்த அவளுக்கு உடல் நடுங்கியது. அப்போதுதான் அந்த வீட்டில் ஏதோ விபரீதம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை சமரவீரவின் தாயார் உணர்ந்தாள்.
திலக்கராஜா பூசாரி
அடுத்து வந்த சில நாட்களில் வேறு சில அமானுஷ்யங்களும் அந்த ஒற்றை வீட்டில் அரங்கேறத் தொடங்கியிருந்தன. நள்ளிரவு தாண்டிய பிறகும் சமரவீரவும், அனோமாவும் பலமாக சிரித்த வண்ணம் படுக்கையறையில் பேசிக் கொண்டிருப்பது சமரவீரவின் தாயார் காதில் விழுந்தது. அடுத்த நாள் காலையில் அனோமாவிடம் "நடுசாமம் வரைக்கும் அப்படி என்னத்த பேசிட்டு இருக்கிறீர்களோ? கொஞ்சம் மெதுவா பேசி சிரிக்க வேண்டியது தானே!" என்று கொஞ்சம் கோபமாகச் சொல்லி வைத்தாள் மாமியார்.

அனோமாவோ,"நான் நேத்து பத்து மணிக்கெல்லாம் தூங்கிட்டேனே நீங்க கனவு ஏதும் கண்டுட்டு உளறாதீங்க!" என்று பொட்டில் அடித்தமாதிரி பதிலளித்தாள். சமரவின் அம்மாவின் சந்தேகம் மேலும் வலுத்தது.

அடுத்து வந்த சில நாட்களில் ஒரு நாள் இரவில் வயலில் யாரோ வேலை செய்வது போல சத்தம் கேட்கவே சமரவீரவின் தாயார் வெளியே எட்டிப்பார்க்க அங்கே சமரவீர நடுவயலில் இறங்கி நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தான்.

"ஏய் இந்த நேரத்துல என்ன பண்ணுற?" என்று அவள் சத்தமாகக் கேட்டாள். சமரவீர பிரமை பிடித்தவன் போல சிலையாக நிற்பதைக் கண்டாள். பிறகு பக்கத்தில் இருந்த ஊர் வாசிகளை அழைத்து வந்து அவனை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகும் பொறுமை காப்பது ஆபத்து என்பதை உணர்ந்த சமரவீரவின் தாயார், ஊரில் இருந்த பூசாரியிடம் மை பார்த்தாள். அந்த வீட்டில் ஒரு தீய சக்தி குடியிருக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இதைக்கேட்ட அவள் ஆடிப்போனாலும் தன் சந்தேகம் சரியே என்பதை உணர்ந்து அமைதியானாள். பிறகு அந்த தீய சக்தியை விரட்ட பெரிய ஒரு பூசாரியைத்தான் களத்தில் இறக்க வேண்டும் என்பதை உணர்ந்து திலக்கராஜா பூசாரியிடம் வந்து பரிகாரம் பார்த்திருக்கிறார்கள்.

தீய சக்திகளை மட்டுமே படம் பிடித்துக் காட்டும் அவரின் மனக்கண்களுக்கு ஒரு பாழடைந்த வீடு மட்டும் மின்னல் வெட்டு மாதிரி திடீரென்று தோன்றி மறைந்தது. "நீங்கள் வசிப்பது ஒரு பழைய வீட்டிலா?" என்று வந்தவர்களிடம் அவர் கேட்டார். ஆனால் அப்படி ஒரு வீட்டில் தாம் வசிக்கவில்லை என்று வந்தவர்கள் சொல்லவும் திலக்கராஜாவுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பிழையான தகவலை மனக்கண் காட்டாதே!

பிறகு ஒரு நாளைக் குறித்துக் கொடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் பூசாரி.

பூஜைக்கான ஏற்பாடுகள் தயாரானதும் அந்தக் குறிப்பிட்ட அமாவாசை தினத்தில் தனது உதவியாளர்களோடு திலக்கராஜா புத்தளம் நோக்கிப் பயணமானார். அவர் அங்கே சென்றபோது நடுநிசி வேளை. நடுரோட்டில் ஒரு கரியநிற எருமை ஒன்று வழி மறித்து நின்றது. இது  ஒரு சகுனத் தடை என்பதை அவரின் சகாக்கள் சொல்ல "அதையும் பார்த்து விடலாம்" என்ற தைரியத்தில் திலக்கராஜா மேலே பயணமானார். பிறகு குறிப்பிட்ட அந்த வீட்டின் முன்பாக வேன் நின்றது. திலக்கராஜா இறங்கினார். அவரின் கால்கள் தரையில் பட்டபோதே அந்தப் பகுதியில் ஏதோ ஒரு தீய சக்தியின் வாடை இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். உடம்பும் சிலிர்த்து அடங்கியது. ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திலக்ராஜா தமது பேயோட்டும் படலத்தை தொடங்க அந்தப் பிரதேசமே அதிர்ந்தது.

அனோமாவின் உடம்பிற்குள்தான் பேய் பதுங்கி இருக்கிறது என்று ஊர்வாசிகள் நம்பினார்கள். திலக்கராஜா மந்திரங்களை உச்சாடனம் செய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வீட்டில் இருந்து ஆவேசமாக வெளியே ஓடி வந்த அனோமா, தலைவிரி கோலமாக ஆடத் தொடங்கினாள். அந்த சமயத்தில் அவள் பின்னால் யாரோ பயங்கரமாக சிரிக்கவே எல்லோரும் ஓசை வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே சமரவீர கைகளை சுழற்றியபடி ஆடிக் கொண்டிருந்தான். அவன் கையில் நெல் அறுக்கும் அரிவாலும் இருந்தது. அவன் வயலுக்கு நெல் அறுக்கச் செல்வதாகக் கூறி ஒரு பக்கம் போக, இன்னொரு பக்கமாக அனோமாவும் நடந்தாள். இது திலக்கராஜாவுக்கு புதுக் குழப்பமாக மாறிவிட்டது. ஒரே உடம்பிற்குள் எத்தனை ஆவிகள் இருந்தாலும் சமாளித்து விடுவார். ஆனால் இரண்டு உடல்களுக்குள் இருக்கும் இரண்டு பேய்களை எப்படி வளைத்துப் பிடிப்பது? திலக்கராஜா ரொம்பவே திணறித்தான் போனார்.

வெவ்வேறு திசைகளில் செல்லும் பேய்களுக்கு முரசு கொட்ட முடியாமல் முரசுக்காரர்கள் விழி பிதுங்கிப் போனார்கள். ஒரு இடத்தில் சமரவீரவின் உடம்பிற்குள் இருக்கும் ஆவி உயரமான பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுக்க திலக்கராஜாவின் முயற்சியால் அந்தத் திட்டம் கைகூடாமல் போனது. பிறகு இரண்டு பேரையும் பிடித்து ஒன்றாக அமரவைத்து மிரட்டி விசாரிக்கத் தொடங்கினார். அப்போதும் திலக்கராஜாவின் ஞானக் கண்களுக்கு ஒரு பாழடைந்த வீடு தெரிந்தது. பிறகு அதுபற்றி அவர் சத்தமாக சொல்ல அங்கே நின்றிருந்த ஊர்ப் பெரியவர் ஆளரவமற்ற ஒரு பாழடைந்த வீடு காட்டுக்குள் இருப்பதாகவும் அங்கே பல வருடத்துக்கு முன்னால் ஒரு தம்பதி வசித்து வந்ததாகவும் தகவல் சொன்னார். அவ்விருவரும் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்களாம்.

இது போதுமே திலக்கராஜாவுக்கு! புதிரை விடுவிப்பதற்கு தனக்கு ஒரு 'சாவி' கிடைத்த மகிழ்ச்சியில் தீப் பந்தத்தை கையில் எடுத்தபடி அந்த வீடு இருக்கும் காட்டுப் பகுதிக்குள் தன்பரிவாரத்துடன் நுழைந்தார் பூசாரி. அங்கே புதர் மண்டிய பகுதியில் ஒரு வீடு சிதிலமடைந்த நிலையில் பயங்கரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த வீட்டுக்குள் ஒரு விளக்கு வெளிச்சம் தெரிவதாக சகாக்கள் கூறினர். ஆனால் பூசாரிக்கோ எந்த வெளிச்சமும் தெரியவில்லை. அந்த வீட்டை யாரோ இரண்டு விதமாகக் காட்டுகிறார்கள் என்பதை திலக்கராஜா உணர்ந்து கொண்டார். பலம் வாய்ந்த ஒரு தீய சக்தி அங்கே உறைந்திருப்பதையும் தயார்படுத்திக் கொள்ளாமல் மோதினால் கபளீகரம் செய்து விடும் என்பதையும் உணர்ந்து கொண்டார் பூசாரி.

அவரின் கண்களுக்கு அந்த வீட்டில் எந்த வெளிச்சமும் தெரியாவிட்டாலும் அங்கே நின்றிருந்த ஒரு பட்டுப்போன மரத்தில் அவலட்சனமான உருவத்தோடு ஒரு பெண் தலைவிரி கோலமாக அமர்ந்து எதையோ பறிகொடுத்த மாதிரி பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருப்பது அவர் கண்களுக்கு மட்டும் தெரிந்து மறைந்தது. இந்த நிலையில் அந்த வீட்டிற்குள் நுழைவது புத்திசாலித்தனமல்ல என்பதை புரிந்து கொண்ட பூசாரி வந்த வழியே திரும்பினார். அந்த தீய சக்திகள் தற்போது குடி கொண்டிருக்கும் அனோமா, சமரவீரவின் உடம்பை விட்டு அவற்றை விரட்டுவதே புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்து கொண்ட அவர் அதிலேயே குறியாக இருந்தார். இருவரிலும் குடியிருந்த துஷ்ட ஆவிகள், "அய்யோ, எங்களை விட்டுடுங்க பூசாரி. நாங்க பட்டினியா கிடந்தே செத்துப் போனோம். ஆனால் இப்போது எங்களுக்கு மூன்று வேளையும் நல்ல உணவும் கிடைக்குது. நாங்க இங்கேயே இருந்து விடுகிறோம்" என்று இருவரும் ஒருமித்த குரலில் பூசாரியின் காலில் விழுந்து கெஞ்சத் தொடங்கினர். ஆவிகளை ஒருவழிக்குக் கொண்டுவந்து விட்ட திருப்தி திலக்கராஜாவின் முகத்தில் தெரிந்தது.
"அன்றைக்கு அனோமா விறகு பொறுக்க எங்க வீட்டுப் பக்கம் வந்தபோது நான் அந்த பட்ட மரத்துல உட்கார்ந்திருந்தேன். சரி அவள் உடம்பிற்குள் போய்த்தான் பார்ப்போம் என்று யோசித்து அவள் உடலுக்குள் புகுந்தேன். அவளோடு வீட்டுக்கு போய் சாப்பிட்டது எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. பிறகு சும்மா ஏன் அந்த வீட்டுல தனிய இருக்கணும் என்று நினைத்து என் புருஷனை அழைச்சிட்டு வந்தேன். ரெண்டு பேரும் இங்கேயே தங்கிட்டோம்" என்று கணவன், மனைவியின் உடம்பிற்குள் இருந்த ஆவிகள் சொல்லவும் ஊர்வாசிகள் வெலவெலத்துப் போனார்கள். அந்த இருவரும் கடன் தொல்லையின் காரணமாகவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விசயத்தைப் பின்னர் தெரிந்து கொண்டார் பூசாரி. பிறகு அவர்கள் விரும்பிக் கேட்ட உணவுகளையெல்லாம் கொடுத்து அந்தப் பேயை விரட்ட பேரம் பேசினார். ஆனாலும் அந்த ஆவிகள் மசிவதாகத் தெரியவில்லை. உடலை விட்டுச் சென்றாலும் பழைய வீட்டிலேயே தஞ்சமடைந்து விடுவோம் என்று பூசாரியிடம் விடாப்பிடியாக பேசின. பூசாரி அவைகளை சக்கர வியூகத்தின் மூலமாக துண்டாக்கி, மாவில் உருட்டி பொம்மையாக்கி அந்த இரண்டு பொம்மைகளையும் ஆற்றில் கரைத்தார். ஆவிகள் ஆற்றில் கரையும் போது அவை போட்ட கதறல் சத்தம் பூசாரியின் காதுகளுக்கு மட்டுமே கேட்டது. இப்போது அனோமாவும் சமரவீரவும் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

ஜெகஜால செல் பேய்கள்!

செல்ஃபோனில் உலாவரும் பேய்கள்!

செல்லில் ஒரு படம் எடுத்தேன், பார்த்தால் ஒரு பேய் நிற்கிறது
என்று யாராவது செல் படமொன்றை உங்களிடம் காட்டினாரா?


மணி ஸ்ரீகாந்தன்

'வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க உன்
வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற
வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
உந்தன் வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே...'
என்கிறது பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள்.

இது தமிழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரம் சூடுபிடித்திருந்த வேளையில் வெளியாகி பட்டித் தொட்டியெங்கும் சக்கைபோடு போட்ட பாடல் எம். ஜி. ஆர் வேறு நடித்திருந்தார்.

இங்கிலாந்து நாட்டு மனோதத்துவ மற்றும் நரம்பியல் வல்லுனரான பிரைட் லைட், காந்தவியல் மின்புலம் மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்து விட்டு அதை மக்கள் உணர்வதற்காக பேய் பிசாசு இருப்பதாகக் கூறப்படும் 800 வருடகால பழைய கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய், பிசாசு பிடித்தவர்கள் தங்களுக்கு அமானுஷ்யமான சில சத்தங்கள் கேட்டதாகவும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் கூறினார்கள். வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டு விட்டு மறைந்து விட்டதாகவும் கூறினார்கள்.
பேய் பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளியிட்டிருக்கலாம். பேய் பீதியால் பாதிக்கப்பட்டவர்கள் பேய், பிசாசு இருக்கக் கூடும் எனக் கருதப்படும் இடங்களுக்குச் செல்லும் போது அல்லது எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அத்தகைய இடங்களுக்கு செல்ல நேர்கையில் மூளையின் சில நரம்புகள் பய உணர்ச்சியால் பாதிக்கப்படலாம். இத்தகைய சூழலில் அவர்கள் அமானுஷ்ய நிகழ்வுகளைக் காணவும் கேட்கவும் கூடும் என்பது இது தொடர்பில் அந்த மனோ வல்லுநர் விளக்கம் அளித்தார். இந்த உணர்வுகளுக்கு அல்லது பிரமைகளுக்கு சிலர் ஆளாவதினால் மாத்திரம் ஆவி, பேய், பிசாசு இருப்பதற்கான ஆதாரங்களாக அவற்றைக் கொள்ள முடியாது என்பது அறிவியல் விளக்கம். எனவே பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு விஞ்ஞானக் கருவிகளின் உதவியோடு அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தாராம்.
ஸ்மார்ட் போன்களில் உள்ள 
பேய் சொஃப்ட்வெயார்களில் ஒன்று
'மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று ஒரு முதுமொழி இருக்கிறது. ஆனால் பேய் இருக்கிறதா இல்லையா என்பதற்கு ஆராய்ச்சியாளர் பிரைட்லைட் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர இதுவரை யாரும் சரியான ஆதாரங்களைக் காட்டவில்லை. சைத்தான், பிசாசு, ஆவி என்றெல்லாம் சகல மதங்களிலும் தீய சக்தி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேய்க்கதை நாவல்களும், சினிமா படங்களும் உலகம் முழுவதும் மக்கள் ஆதரவோடு பெரும் வரவேற்பை இன்றுவரை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதை நம்பாதவர்களும் அரண்மனையையும், முனியையும், டார்லிங்கையும் பார்த்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொழில்நுட்பங்களும் நாகரிகமும் எவ்வளவோ வளர்ந்து விட்டப் பிறகும் பேய், ஆவி சமாச்சாரம் மட்டும் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த பெரிய நாடுகளிலும் பேய் நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சில வியாபார ஊடகங்களும் துணை நிற்கின்றன. சி. சி. டி. வி. கெமராவில் பதிவாகியதாக கூறி ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகக் காட்டும் வீடியோக்களை இணையத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை உருவாக்கி பணம் சம்பாதிப்பதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். அந்த வீடியோக்களின் நம்பகத் தன்மையை அறிவியல் ரீதியாக பரிசோதித்து அதன் விளக்கத்தை மக்களுக்கு புரிய வைக்க எவரும் முன்வருவதும் இல்லை. "ஏன் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். மாதா மாதம் ஒரு பேய்க் கதையை வானவில்லில் அவிழ்த்து விடுகிறீர்களே?" என்று வாசகர்களாகிய நீங்கள் கேட்பதும் காதில் விழத்தான் செய்கிறது.
வண்ணவானவில்லில் வாசகர்களின் அபிமானம் பெற்றதாக இருள் உலகக் கதைகள் விளங்குகின்றன. அதற்காக வண்ணவானவில் பேய் இருப்பது உண்மை என்று சொல்லவில்லை. பூசாரிகள் சொல்வதைக் கேட்டு எழுதி அதை அப்படியே வாசகர்களுக்கு தருகின்றோம் அவ்வளவுதான். இப்போ விடயத்துக்கு வருவோம்.
இதுதான் அந்தப் போட்டோ,
தூரத்தில்
நிற்கும் பேயின் ஆடை 
முன்னாள் நிற்கும்
பெண்ணின் கைகளை 
மறைப்பது எப்படி சாத்தியம்?
"பேய் இருக்கிறது அதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்" என்று தடாலடியாக ஆதாரத்தோடு ஒரு புகைப்படத்தை காட்டி எம்மை சிலர் குலைநடுங்கச் செய்கிறார்கள். அண்மையில் எமது அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு சகோதரி தனது செல்போன் திரையில் ஒரு போட்டோவை எம்மிடம் காட்டினார். அதில் ஒரு பெண்மணி குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு நிற்கிறார். அவரின் பின்னால் ஒரு ஆவி நிற்கிறது.

"இது என் சித்தி. இந்தப் போட்டோவை செல்போனில் எனது சகோதரர் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தோடு நிறைய போட்டோக்களை க்ளிக் செய்திருக்கிறார்கள். பிறகு சில படங்களை மட்டும் பார்த்து விட்டு தமது கடமைகளில் ஈடுபட்டிருக்கிறார். சில நாட்கள் கழித்து எதேச்சையாக போனை எடுத்து தாம் எடுத்த படங்களை பார்த்தபோது சித்தியின் உருவத்திற்கு பின்னால் வெற்றிலை கொடிக்கு அருகில் ஒரு பேய் நிற்பதை கண்ட அவர் பதறிப்போய் தாம் எடுத்த படத்தை எல்லோரிடமும் காட்டியிருக்கிறார்" என்று மயிர்க்கூச்செரியும் உடலோடு சம்பவத்தை விவரித்தார்.

"இப்போது ஒரு பூசாரியை வைத்து சித்தி வீட்டில் ஒரு பரிகார பூஜை செய்யப் போறோம்" என்றும் கூறினார். ஆமாம், வீட்டுக்குள் பேய் இருந்தால் விரட்டத்தானே வேண்டும்?

படத்தைப் பார்த்து சம்பவத்தைக் கேட்ட எங்களுக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருந்தது! பிறகு 'சரி இது கம்யூட்டர் மாயா ஜாலமாகத்தான் இருக்கும்' என்ற எண்ணத்தோடு, இருபத்து நான்கு மணிநேரமும் போனே கதி என்று கிடக்கும் சில ஸ்மார்ட் போன் விற்பனர்களைக் கண்டு கேட்டோம்.

"வெள்ளைச் சேலை, காலில் கொலுசு சல், சல், சல்லென்ற சத்தத்தோடு நடுக்காட்டில் "நானும் வருவேன் இங்கும் அங்கும்" என்று பாட்டுப்பாடும் தமிழ் சினமா பேய்களாகட்டும், வானத்தில் வெளவால் மாதிரி பல்லை ஈ காட்டிய படியே பறந்து பறந்து சண்டை போடும் ஹொலிவூட் பேய்களாகட்டும்... இவை எல்லாம் சலித்துப் போய்விட்டது. இப்போதெல்லாம் போனில் பயம் காட்டினால்தான் பயப்படுவாங்க" என்ற முகவுரையோடு அவர் சொன்ன சில தகவல்கள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டின. இன்று சந்தையில் கிடைக்கும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பேய்ப்பட மாயாஜால வசதி வந்து விட்டதாம். ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோருக்கு சென்று கெமரா கோஸ்ட் என்று டைப் செய்து சேர்ச் செய்தால் ஏகப்பட்ட பேய் சொப்ட் வெயார்கள் விதவிதமாகக் கிடைக்குமாம்.
அதில் உங்கள் மனம் கவர்ந்த பேயை இனம் கண்டு அந்த சொப்ட் வெயார் ஃபைலை உங்கள் போனில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டால் அப்புறம் நீங்களும் ஜமாய்க்கலாம். உங்கள் நண்பர் அல்லது நண்பியை ஒரு போட்டோ எடுத்து அந்தப் படத்தின் பின்னணியில் ஒரு பேயை வைத்து அடுத்த நிமிடமே அவர்களிடம் அதை காட்டி அவர்களை அதிர்ச்சியடையச் செய்யலாம். நீங்கள் தெரிவு செய்த பேய் படத்தின் அளவை சிறிதாக்கி, பெரிதாக்கிக் கொள்வதோடு அந்தப் பேயை மட்டும் ரொம்பவும் க்ளியராகவோ அல்லது தெரிந்தும் தெரியாமல் இருப்பது போலவோ மங்கலாகவும் தங்களின் ரசனைக்கு அமையவும் மாற்றிக் கொள்ளலாம். சதாகாலமும் போனில் தானே கிடக்கிறீர்கள். பேய்ப் பித்தர்கள் இதைக் கொஞ்சம் தோண்டிக் கிளறிப் பார்த்தால் பேய் உங்கள் போனில் தங்கி விடும். இனி யாராவது போனில் பேய் படம் காட்டுகிறேன் என்றால் நம்பி விடாதீர்கள். பேயை நம்பாதே அது உன்னை ஏமாற்றும்!

Sunday, June 28, 2015

தேவதாசி வரலாறு -7

தேவதாசி என்ற பெயரை துறந்து

தியாகராஜரின் அடிபணிந்த நாகரத்தினம்மா

அருள் சத்தியநாதன்

தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவது என கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்ட மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியாலும் முதல் முயற்சியில் இப்பிரேரணையை மதராஸ் சட்ட சபையில் நிறைவேற்ற முடியாமல் போனது. பல ஆண்டுகளின் பின் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதியே சென்னை சட்ட சபையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரேயே 1927 முதல் தேவதாசி முறைக்கு எதிரான கிளர்ச்சி படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்து விட்டது. 'தேவதாசிகள் இந்து சமயம் என்ற போர்வைக்குள் இருந்து செயல்படும் விபசாரிகள் மட்டுமே' என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாக உருப்பெற ஆரம்பித்து விட்டது. இதனால் இந்து மக்கள் மத்தியில் தேவதாசியருக்கு இருந்த மரியாதை சுத்தமாக அடிபட்டுப் போனது. இதற்கு கிறிஸ்தவ சமூக மறுமலர்ச்சி இயக்கத்தினரின் தீவிர பிரசாரமும் ஒரு காரணம். இக்காலகட்டத்தில் சமூக கௌரவம் கொண்டவராகவும் பெரும் பணக்காரராகவும் விளங்கிய தேவதாசி நாகரத்தினத்தை வீழ்த்த வேண்டும் எனச் சிலர் குறிவைத்துத் தாக்கி வந்தனர். இவர்களும் தேவதாசி முறைக்கு எதிராகக் கடுமையாகக் போராடினர். ஆங்கிலக் கல்வி கற்று பெரிய பதவிகளில் அமர்ந்திருந்தவர்களும் இதை ஒரு சமூக இழுக்காகக் கருதி இதன் முடிவுக்காக தீவிரமாகச் செயல்பட்டனர். ஆங்கிலத்தில் துண்டுப் பிரசுரங்களும் நூல்களும் வெளியிடப்பட்டன. இப்பிரசுரங்களில் தேவதாசி என்ற பதத்துக்கு பதிலாகக் 'கடவுளின் விபசாரிகள்' என்ற பதமே பிரயோகிக்கப்பட்டது.

தேவதாசி முறை படிப்படியாக செத்து மடிந்து வருவதைக் கண்டு கொண்ட நாகரத்தினம், அதற்கு முன்பாகவே தன் வழிமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டார். நடன நிகழ்ச்சிகளை நடத்துவது, இசைக்கச்சேரிகளை அரங்கேற்றுவது, வானொலி பாட்டுக் கச்சேரிகளை நடத்துவது என வருமானத்துக்கு வேறு வழிகளை அவர் தேடிக் கொண்டிருந்தார்.

1929 இல் மதராஸ் மாநகராட்சி அக்காலத்தில் புதிதாக அறிமுகமாயிருந்த வானொலி சேவையை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தது. தமிழ் மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக வானொலி நிகழ்ச்சி மாறியிருந்தது. மெரினா கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 வரை இசைக்கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டன. இதைக் கேட்பதற்காக பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடினர். முசிறி சுப்பிரமணிய ஐயா, டைகர் வரதாச்சாரியார், ஹரிகதை சி. சரஸ்வதி பாய், எல். முத்தையா பாகவதர், 'வித்யா சுந்தரி, கானகலா விசாரத்' பெங்களுரு நாகரத்தினம்மா ஆகியோரின் வானொலி கச்சேரிகள் அக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்தன. நாகரத்தினம்மாவின் பெயர் வானொலி அறிவிப்பாளரினால் உச்சரிக்கப்படும்போது இப்பட்டங்களுடனேயே உச்சரிக்கப்பட்டது என்பது, அவருக்கிருந்த சமூக கௌரவத்தை புலப்படுத்துகிறது. அதாவது தேவதாசி என்ற 'இழிநிலை'யில் இருந்து மீண்டு இன்னொரு பரிமாணத்தை அவர் எட்டியிருந்தார். இதன் உச்ச நிலைதான் தியாகராஜ சுவாமிகளின் சமாதிநிலை அழிவில் இருந்து மீட்டு ஒரு இசைக் கோவிலாக அதை மாற்றி அமைத்த அவரது திருத்தொண்டாகும்.
வயதான தேவதாசி 
முத்துக்கண்ணம்மாள்
தியாகராஜ சுவாமிகளை எடுத்துக் கொண்டால் அவர் தேவதாசிகள் பேரில் என்றைக்குமே நல்லபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. தேவதாசிகளை வெறுத்து ஒதுக்கியவராகவே தியாகராஜ சுவாமிகள் அறியப்படுகிறார். ஆனால் திருவையாற்றில் கவனிப்பாரற்றுக் கிடந்த சுவாமிகளின் கல்லறையை புதுப்பித்து மண்டபம் கட்டி அக்கல்லறை அமைந்த காணியையும் வாங்கி பாதுகாத்தவர் ஒரு தேவதாசி என்பதை தியாகப்பிரம்மம் அறிவாரானால், இந்த முரண்பாடு பற்றிய அவரது உணர்வுகள் எப்படி இருந்திருக்குமோ? எழுத்தாளர் மாலன் ஒரு முறை எழுதிய வரிகள் இங்கே மிகவும் பொருத்தமுடையதாக இருக்கும்.

அரசர்கள் இவனைப் போற்றினார்கள்
வித்வான்கள் இவனை விற்றுப் பிழைத்தார்கள்.
ஆனால் ஒரு தாசி அல்லவோ
இவனுக்கு கோவில் கட்டினாள்!


நாகரத்தினம்மா மிகுந்த செல்வம் மற்றும் செல்வாக்கோடு வாழ்ந்தவர். ஆனால் தேவதாசி யுகம் முடிவுக்கு வந்த பின்னர் அவர் சென்னையிலும் வேறு இடங்களிலும் தமக்கிருந்த சொத்துகளை விற்று தியாகையரின் சமாதி அமைந்திருக்கும் பகுதிக்கே குடிபெயர்ந்தார். தன் இறுதிக் காலத்தை அங்கேயே, தியாகப் பிரம்மத்தின் வழிபாட்டில் கழித்தார். இந்த வகையில் தேவதாசி வரலாற்றில் பிரபலம் பெற்ற தேவதாசிமார்களின் வரிசையில் இவரும் இடம்பெறுகிறார். நாகரத்தினம்மா சென்னை ஜோர்ஜ் டவுனில் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதை மருத்துவர் கே. என். கேசரி இவ்வாறு விவரிக்கிறார். சென்னையில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவுக்கு நாகரத்தினம் வருகை தந்தபோது....
அன்றைய பரத நாட்டிய உடைகளோடு 
இரு தேவதாசிமார் தமது குழுவினரோடு
'பிரதான வாயிலில் யாரையோ பார்க்க மக்கள் ஒடுவதைப் பார்த்து நானும் அங்கு சென்றேன். பெங்களுரு நாகரத்தினம்மா வருவதாகச் சொன்னார்கள். அவர் தன் பரிவாரங்களுடன் வந்த காட்சி அப்படியே என் நினைவில் உள்ளது. அவருக்கு முன்னால் ஒரு பணிப்பெண் வெள்ளிக் கூஜாவில் கோப்பியுடன் சென்றாள். மற்றொருத்தி வெண்ணீருடனும் இன்னொருத்தி வெற்றிலைப் பெட்டியுடனும் சென்றார்கள். ஒரு பணிப்பெண் ஆலை விசிறியால் எஜமானிக்கு விசிறிக் கொண்டே சென்றாள். அவர்கள் அனைவருமே சர்வலங்கார பூஜிதைகளாக இருந்தனர். நாகரத்தினம்மா பட்டுப் புடவை அணிந்து, வைரங்கள் பளபளக்க ஒளிக்கதிர்போல நளினமாக நடந்து சென்றாள். அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் யார் என்று நான் விசாரித்தபோது, அவர் மிகவும் படித்தவர், ஒரு பண்டிதை என்று சொன்னார்கள். அன்றிலிருந்து நான் தவறாமல் அவரது கச்சேரிகளுக்கு சென்றுவர ஆரம்பித்தேன்.

தேவதாசி என்பதைவிட இசைஞானம் மிக்க சிறந்த பாடகி என்பதற்காகவே அவர் பலராலும் மதிக்கப்பட்டார்.

நடனமாடும் தேவதாசியர், ஆரம்பகால இந்திய சினமாவில் நடிக்கவும், நடனமாடவும் தேவதாசி குலப் பெண்களே முன்வந்தனர். கச்சேரிகளில் பாடல்கள் பாடி, இசைக்கருவிகளை இசைத்ததும் இக்குலத்தினரே பாடுவது மற்றும் பரதநாட்டியம் என்பன சமூக அந்தஸ்து பெற்றதுமே பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இத்துறைகளுக்கு வந்தனர்.

(தொடரும்) 

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 14

இலங்கையில்  இஸ்லாமிய இலக்கியமாநாடு  நடைபெறுமானால்…


அருள் சத்தியநாதன்

இந்த ஆய்வு மலர்களில் வெளிவரும் கட்டுரைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துப் பார்த்தால், பல கட்டுரைகள் பயனற்றவை என்பதைக் கண்டு கொள்ளலாம். 'ஒப்பேற்றுகின்ற' மாதிரியான கட்டுரைகளையே பலர் வரைகின்றனர். இக்கட்டுரைகளை சீர்தூக்கிப் பார்க்கும் குழுக்களுக்கும் இதற்கான தகுதியும், நேர்மையும் இருக்கிறதா என்பது இன்னொரு விஷயம்.

பொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் எழுதினால் அது எழுத்து, நாம் செய்தால் அது ஆய்வு. யாரிடமும் அபிப்பிராயம் கேட்பதுமில்லை, சொன்னாலும் கேட்பதில்லை. நான்கு புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதில் உள்ளவற்றை தொகுத்து எழுதினால் அது ஆய்வு. இவ்வாறான மனநிலையில்தான் ஆய்வுக் கட்டுரைகள் தயாராகின்றன. சில கட்டுரைகளை வாசிக்கும்போது, அவை மேலோட்டமாக இருப்பதைக் காணலாம். சில கட்டுரைகளின் பொருளும் விரிவும் எழுதியவருக்கே புரிந்திருக்குமா என்ற சந்தேகம் கிளம்பும். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தான் விளங்கிக் கொண்டதை எழுத்துக்களில் வெளிப்படுத்தும்போது ஒரு ஆழம் தெரியும். படிக்க ஆர்வமும் ஏற்படும். புதிதாகத் தெரிந்து கொண்ட உணர்வும் ஏற்படும். சிலவற்றை படிக்கும்போது கட்டுரை எழுதியவரின் மயக்க உணர்வு உங்களையும் தொற்றிக் கொள்ளும்.
அதாவது, ஆய்வுக் கட்டுரைகள் புதிய விஷயங்களை தக்க சான்றுகளுடன் தெட்டத் தெளிவாக நிறுவுவதாக இருக்க வேண்டும். அல்லது ஒரு புதிய விஷயத்தை அல்லது புதுக்கோட்பாட்டை அல்லது மரபுக்கு மீறிய ஒன்றாக இருக்கக் கூடிய ஒரு உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும். ஒரு பாதையை திறந்து விடுவதாகவும், இவ்வாறெல்லாம் இருப்பதால் இது இப்படியாக இருக்கலாம் என்ற புதிய கருத்தை முன்வைத்து மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் இருக்கலாம். எளிமையான நடையில், சுற்றி வளைக்காமல், மேலும் படிக்க ஆவலைத் தூண்டுவதாகவும் சிரமமானதும் மயக்கமானதுமான பதப்பிரயோகங்களை தவிர்த்து எழுதப்பட்டதாகவும் ஆய்வுக் கட்டுரைகள் அமைய வேண்டும். ஏனெனில் இது சாமானியர்களின் காலம்.

இலங்கையில் இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடைபெறுமானால், ஆய்வுக் கட்டுரைகள் விடயத்தில் கண்டிப்பான சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எந்தவொரு இடத்திலும் அரசியலுக்காக ஆய்வுகளை சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் இலக்கிய அறிஞர்களாக இருக்கக் கூடிய ஏற்பாட்டாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆய்வுகள் என்றதும் அக்கட்டுரை மலரை வாங்கி புரட்டிக்கூடப் பார்க்காமல் மூலையில் எறிந்து விடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த ஆய்வு மலர் மற்றும் மாநாட்டு மலரை இலவசமாக வாங்கிக் கொள்வதில் போடும் போட்டி இருக்கிறதே, அது தனிக்கதை! இந்தக் கனத்த மலர்களை போட்டி போட்டு வாங்கியவர்கள் பின்னர் ஊருக்கு மூட்டை கட்டும்போது 'ஓவர் வெயிட்டாக' இருக்கிறதே என்பதால் எடை குறைப்பு செய்யும் பொருட்டு முதலாவதாக வீசி எறிவது இந்த மலர்களைத்தான்! ஆமாம், ஒரு ஐந்து கிலோவரை குறைத்து விடலாம் அல்லவா?

இலங்கையை எடுத்துக் கொண்டால் இந்நாட்டுக்கென தனித்துவம் கொண்ட சிறப்பியல்புகள் உள்ளன. இஸ்லாமியரின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய பல ஆய்வுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோம்பை அன்வர் ஒரு ஆவணப்படத்தை சொந்த செலவில் எடுத்து, தென்னகத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வந்தார்கள் என்பதையும் தமிழ்களுடனான அவர்களின் உறவின் நெருக்கத்தையும் விஸ்தாரமாக எடுத்துரைத்துமிருக்கிறார்.
இங்கே இலங்கை முஸ்லிம் வரலாற்றைச் சொல்லும் தனியொரு நூல் இல்லை. சொல்லப்பட்டுள்ள வரலாறும் கற்பனையும், யுகமும் மதமும் கலக்காதவையா என்று தெரியவில்லை. இங்கே தமிழ் - முஸ்லிம் உறவில் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல என மேடைகளில் பீற்றிக் கொண்டாலும், பல பிரச்சினைகள் இருப்பது உண்மை. இரு பிரிவினருக்கும் தனித்தனி அரசியலும் கட்சி சார் அபிலாஷைகளும் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இலக்கியத்தின் ஊடாக, இவ்விரு சமூகத்தின் மத்தியிலும் உண்மையாகவே பிரச்சினைகள் கிடையாது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டுக்கு உண்டு. இவ்விரு சமூகத்தாருக்கும் இடையே நிலவிவரும். ஆனால் கண்டு கொள்ளப்படாத பல பிணைப்புகளை இம்மாநாட்டின் மூலம் எடுத்துச் சொல்லலாம்.

அரசியலை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது ஆட்சியதிகார அரசியல். இரண்டாவது ஒவ்வொரு துறைகளிலும் காணப்படும் அதிகார மற்றும் போட்டா போட்டி அரசியல். இந்த இரண்டாவது அரசியல் துறைகளில் கோலோச்சத் தொடங்கும்போது அத்துறைகள் தமது பொலிவையும் வீரியத்தையும் இழக்கத் தொடங்குகின்றன. தமிழ்ச் சினிமாவில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். - சிவாஜி போட்டா போட்டி அரசியல் தலைதூக்கியதன் விளைவாக வித்தியாசமான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதும் புதியவர்களின் வருகையும் மிகவும் பின் தங்கிப் போனது. வெளியே பார்க்க செழிப்பாகத் தெரிந்தாலும் தமிழ் சினிமா ஒரு கலை என்ற அளவில் வரட்சியையே சந்தித்தது. ஸ்ரீதர், பாலச்சந்தர், சோ, எஸ்.கே.கோபாலகிருஷ்ணன் போன்ற சிலரே தலைதூக்க முடிந்தது.
டாக்டர் தாஸிம் விருது பெறும் போது...
அவர்கள் ஏற்படுத்திய மாறுதல்கள் காரணமாக பாரதிராஜா, பாக்கியராஜா, மகேந்திரன் போன்றோர் புதுப்பாதை போட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
இலக்கிய உலகில் இந்த வெட்டுக்குத்து நிறைய உண்டு. இலக்கியவாதிகளின் அரசியல் உலகெங்கும் மோசம்தான். இலக்கியக்காரன் அல்லது படைப்பாளி எப்போதும் உணர்ச்சிக் கலவையாகவும், வித்துவச் செருக்கு கொண்டவனாக இருப்பது வழக்கம். அறுபது எழுபதுகளில் யாழ். இலக்கிய பரப்பில் இந்த மோதல் பரவலாக நிகழ்ந்தது. தலித் இலக்கியத்தை இழிசனர் இலக்கியம் என்று சொல்லப்போக, அது பெரும்வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியதையும் முற்போக்கு இலக்கியக்காரர்களுக்கு எதிராக எஸ்.பொ.நற்போக்கு இலக்கிய இயக்கியத்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கவை.

ஒரு வகையில் இவற்றை ஆரோக்கிய இலக்கிய நிகழ்வுகள் எனக் குறிப்பிடலாம். இம் மோதல்கள் ஆரோக்கிய இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவதாக இருந்தன. தமிழகத்திலும் இஸ்லாமிய இலக்கிய கழகங்கள் பல உள்ளன. இந்த அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வு மாநாடுகளை நடத்துவது தனி ஒரு இலக்கிய அமைப்பு அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட கழகங்கள் இம் மாநாட்டை வெளிநாட்டு ஆய்வாளர்களை அழைப்பதன் மூலம் 'சர்வதேச' தோற்றப்பாட்டுடன் தமது மாநாடுகளை நடத்துகின்றன. கும்பகோணம் மாநாடும் முதலில் மாநில அளவில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆய்வாளர்கள், பேராளர்களை அழைத்ததன் மூலம் உலக மாநாடக நடத்தி முடிக்கப்பட்டது.

கும்பகோண மாநாட்டை அதன் ஏற்பாட்டாளர்கள் முடிந்தவரை அரசியல் கலப்பின்றியே நடத்த முயன்றனர். அனேகமான அதன் ஏற்பாட்டாளர்கள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சார்பானவர்களாக இருந்திருக்கலாம். எனினும் நேரடியாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. பிரபலங்களை நேரடியாக மாநாட்டுக்கு அழைப்பதைத் தவிர்த்துக் கொண்டனர். அவ்வாறு அழைத்தால் அம்மா கட்சிக்காரர்களையும், அ.தி.மு.க ஆட்சி நடைபெறுவதால், அழைக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கும். அ.தி.மு.க பிரமுகர்களை அழைத்திருந்தால் அவர்கள் அம்மா புகழ்பாடி ஏற்பாட்டாளர்களை தர்ம சங்கடத்துக்குள் ஆழ்த்தியிருப்பார்கள்.

முன்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடு தி.மு.க. சார்பு மாநாடாகவே நடத்தப்பட்டதை இங்கே சுட்டிக் காட்டலாம். இறுதிநாள் நிகழ்வில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார். அம்மாநாடு சிறப்பாகவே நடைபெற்றது உண்மையானாலும் இந்த அரசியல் கலப்பு, ஏற்பாட்டாளர்களுக்கு பிரச்சினைகளைத் தோற்றிவித்திருக்க வேண்டும்.

கலைஞர் வெகு சிறப்பாக நடத்திய கோவை செம்மொழி மாநாடு இலக்கிய, ஆய்வுச் செழுமை கொண்டதாகவும் ஏற்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்த போதிலும் அதில் கலந்திருந்த தி.மு.க. நெடியும் கலைஞர் புகழ்பாடுவதும் வந்திருந்தோருக்கு வெளிப்படையாகவே தெரிந்தது. அதேபோல கடந்த பெப்ரவரி மாதம் சென்னையில் அம்மா பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்ட பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடு முழுக்க முழுக்க அம்மா புகழ் பாடுவதாகவே அமைந்திருந்தது. வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தந்திருந்தவர்களை இது முகம் சுளிக்கச் செய்தது. லண்டனில் 2013இல் நடைபெற்ற தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு தமிழாராய்ச்சி மாநாடு பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றபோதும் அதன் ஏற்பாட்டாளரின் ஒரு சார்பு நிலை காரணமாக புலம்பெயர் இலக்கியத் தமிழர்களில் ஒரு சாரார் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்டனர். இதை இலங்கையில் புலிகள் நடத்தும் மாநாடு என தவறாக அறிவித்ததன் பலனாக இலங்கையில் இருந்து சென்ற குழுவினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

1967ம் ஆண்டு சென்னையில் அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தி.மு.க. ஏற்பாட்டிலான மாநாடாக இருந்த போதிலும், அறிஞர் அண்ணாவின் பண்பாடு மற்றும் கனவான் அரசியல் காரணமாக ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகிரெட்டி, எஸ்.எஸ்.வாசன், பெரியார், ஜி.டி.நாயுடு, குன்றக்குடி அடிகளார், மு.வரதராசன், இலங்கையில் ஜி.ஜி. பொன்னம்பலம், திருச்செல்வம், மட்டக்களப்பு       இராஜதுரை என இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த பல பிரிவுகளையும் பலகட்சிகளையும் பல்வேறு சமயங்களையும் சார்ந்தோரை அம் மாநாட்டில் பங்கு பெறச் செய்ய முடிந்தது. அம் மாநாட்டில் தி.மு.க புகழும், அண்ணா புகழும் பாடப்படவில்லை. இன்றளவும் அம்மாநாட்டை நினைவு கூருவோர், தமிழ்மாநாடாக நடைபெற்றதாகச் சொல்வார்களே தவிர தி.மு.க. மாநாடு என நாமம் சாத்தியது கிடையாது.

இவ்வகையில் அரசியல் கலக்காத இலக்கிய மாநாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் கும்பகோணம் ஏற்பாட்டாளர்கள் வெற்றி பெற்றதாகவே சொல்ல வேண்டும். இனி தமிழகத்தில் நடைபெறவுள்ள இஸ்லாமிய இலக்கிய ஆய்வு மாநாடுகளும் நேரடி அரசியல் கலப்பற்ற மாநாடாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.
கிழக்கிலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை விரிவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. அம்மாநாடு முடிந்தவரை அரசியல் கலப்பில்லாததாகவும், இலக்கிய ஆய்வுகளுக்கும், அப்பிரதேசம் சார்ந்த ஆய்வுகளுக்கும் முதன்மை இடம் அளிப்பதாகவும் இஸ்லாமியர் அல்லாத இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் அமைய வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.

இங்கும் நீயா, நானா கோஷ்டிச் சண்டைகள் உண்டு. அது இல்லாவிட்டால் இலக்கியமாகாதே! எனினும் இம்மாநாட்டை ஏற்பாடு செய்பவர்களும் இதற்கு தலைமைத்துவம் தரக்கூடிய அரசியல் தலைமைகளும் அரசியல் விஷயத்தை நிர்வாகம் செய்தால் நல்லது. ஏனெனில் எதிர் கோஷ்டிகள் என்னென்ன தவறுகளைச் செய்கிறார்கள் என்பதிலேயே கண்ணாக இருக்கும். குற்றம் குறைகளை பெரிது பண்ணும். எனவே எதிர்க்கோஷ்டிகளையும் அரவணைத்து மாநாட்டை ஏற்பாடு செய்வோமானால் அது முழுமையான மாநாடாக இருக்கும்.

(தொடர் முடிவடைந்தது)

face பக்கம்