Wednesday, April 1, 2015

மனம் திறக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்

உரையாடியவர்: மணி ஸ்ரீகாந்தன்

"படித்த சமூகம் வெளியே வந்தால் தீண்டாமை மறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கல்வி வளர்ச்சியே புதிய புதிய தீண்டாமையை உருவாக்கக் காரணமாகிவிடுகிறது. தீண்டாமையை கையில் எடுப்பவர்கள் படித்தவர்களாக இருக்கின்றனர்"

சாதிய ரீதியாகவும், மதரீதியாகவும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க காலா காலமாக தமிழகத்தில் பெருந்தலைவர்கள் உருவாகிக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். அவர்களில் அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கார், ரெட்டை மலை சீனிவாசன், சிங்காரவேலன் உள்ளிட்ட சிலரை குறிப்பிடலாம். அவர்கள் காட்டிய அதே வேகம், விவேகத்துடன், தற்போதும் நம் தமிழகத்தில் சில தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
தலித்துகளுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தவறாமல் ஆஜராகி களத்தில் நிற்கிறார். தமிழகத்தின் பட்டித்தொட்டியெங்கும் குட்டிச் சுவரிலும் தட்டிகளிலும் முறுக்கிய மீசையோடு "வீழ்வேன் என்று நினைத்தாயா?" என்ற சுலோகத்தோடு அண்ணன்தான் மாஸ் ஹீரோவாக சுவர் விளம்பரங்களில் முதல் இடத்தில் இருக்கிறார். அன்றைய காலைப் பொழுதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் படைப்பாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவரை சமயம் பார்த்து பிடித்து அவரின் காரிலேயே அசோக் நகரில் உள்ள திருமாவின் அலுவலகத்தில் பேட்டிக்காக வந்து இறங்கினோம்.

"கொஞ்சம் பொறுங்கள் சாப்பிட்டுவிட்டு வந்து விடுகிறேன், நீங்களும் சாப்பிடுங்கள்!" என்றார். பிறகு சில நிமிடங்களில் எனக்கு புளிச்சாதம் தரப்பட்டது.

"எங்கே அம்மா உணவகத்தில் வாங்கியதா?" என்று கேட்க நினைத்துவிட்டு எதற்கு வம்பென்று கம்மென்று இருந்து விட்டோம்.

"புளிச்சாதம் பிடித்திருந்ததா?" என்று கேட்டபடியே வந்த திருமாவிடம் ரொம்ப நல்லா இருந்தது என்று கூறியபடியே பேட்டிக்கு தயாரானோம்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது, யார் ஆட்சி செய்கிறார்கள்?

"அதிகாரபூர்வமாக நாற்காலியில் அமராவிட்டாலும் ஜெயலலிதாதான் ஆட்சி நடத்துகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை. ஆதிக்க போக்கு, மதரீதியான பிரச்சினைகள், தர்மபுரி சூறையாடல், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் கட்சிகளின் கொடி மரங்கள் வெட்டி சாய்ப்பு, தலித் இளைஞர்கள் மீது குண்டர் சட்டம், சேரிகளுக்கு தீ வைப்பு போன்ற போக்குகள் ஜெயலலிதாவின் நாற்காலியில் இருந்த போதும் நடந்தது அதுதான் இப்போதும் நடக்கிறது. மற்றப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை" என்று தற்போதைய ஆட்சியை ஒருபிடி பிடித்தவரிடம், தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்களே, இந்த சாதி, சமய கொடுமையை அவ்வளவு சீக்கிரத்தில் ஒழித்துவிட முடியுமா? என்று கேட்டோம்.

மீசையை முறுக்கியபடியே பதில் சொன்னார்.
"அப்படிச் சொல்லிவிட முடியாது. ஐம்பது வருடத்திற்கு முன்னால் இருந்த நிலை இப்போது இங்கே இல்லை. நான் பிறக்கிற போது என்னுடைய தாத்தா, என் அப்பா உள்ளிட்டோர் சாதி கட்டுப்பாடுகளுக்கு அடங்கி ஒடுங்கி நடந்தார்கள். ஆனால் ஐம்பது வருடங்களுக்கு பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டு சமூக கட்டமைப்புக்குள் ஒரு நெறி உருவாகி இருக்கிறது. இன்று எல்லோரும் நன்றாக கல்வி கற்கிறார்கள். தொழில்களுக்கு போறாங்க. வருமானத்தை பெருக்கி பொருளாதார ரீதியில் மற்றவனுக்கு சரிசமமாக வாழப்பழகி விட்டார்கள். அதனால் முன்னர் இருந்த நெருக்கடி இப்போது இல்லை. இன்றைக்கு இருக்கிற நிலை இனி வரப்போகிற காலத்திற்கும் இருக்குமா என்று சொல்லிவிட முடியாது. நம் கண் முன்னாலேயே சாதியை ஒழித்து விடலாம் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. படித்த சமூகம் வெளியே வந்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று ஒரு கருத்து இருந்தது. ஆனால் இன்றைய கல்வி வளர்ச்சியும் புதிய புதிய தீண்டாமைகளை உருவாக்கி வருகிறது. படித்தவர்கள்தான் சாதி பிரச்சினைகளை கையிலெடுக்கிறார்கள். படித்தவர்கள்தான் இன்று அரசியலுக்கும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அரசியல் ஆதாயம் தேடும் ஒரு வளமாக சாதியை பயன்படுத்துகிறார்கள். அதனால் சாதிக்கொடுமை முன்பை விட புதிய பரிணாமம் பெற்று மிகவும் கொடுரமாக உருவெடுத்து நிற்கிறது. அதனால் படித்தால் மட்டும் இது ஒழிந்துவிடும் என்று சொல்லி விட முடியாது. அதனால் தலித்துகளும் படிக்க வேண்டும். தலித் அல்லாத சாதிக் கொடுமைக்காக துடிப்பவர்களும் படிக்க வேண்டும். குறிப்பாக சாதிக் கொடுமை மீது நம்பிக்கை வைத்திருக்கிற சாதி வெறியை திணிப்பவர்கள் அதிகம் படித்தால்தான் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்" என்று பெருமூச்சு விட்ட போது திருமாவின் முகத்தில் சோக ரேகைகள்...

'பீக்கதைகள், 'கெட்ட வார்த்தைகள் பேசுவோம்' போன்ற துணிச்சலான எழுத்துக்களை தந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது அவர் எழுதிய 'மாதொருபாகன்' நாவலில் பெண்களையும் கலாசாரத்தையும் இழிவுபடுத்துவதாகக் கூறி சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்து அவரை மிரட்டி ஒடுக்கியது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டோம். பெருமாள் முருகனை ஆதரித்து கூட்டமொன்றில் பேசி விட்டு வந்தவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்த போது சூடானார் திருமா.

"மாதொரு பாகன் ஆசிரியர் பெருமாள் முருகன் மீது தொடுக்கப்பட்டிருக்கிற இந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. மனித நாகரிகமற்றது. 21 ஆம் நூற்றாண்டில் இத்தகைய அநாகரீகம் அரங்கேறி இருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு வெட்கக் கேடான விடயம்.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்துகிற உள்நோக்கத்தில் அவர் அந்த நாவலைப் படைக்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் நிலவிய அல்லது நிலவியதாக சொல்லப்படுகிற ஒரு விடயத்தை அடிப்படையாக வைத்து அவர் அந்த நாவலை புனைத்திருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட அந்த நாவல் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனால் இதற்கு அவர்கள் திடீரென்று எதிர்ப்பு தெரிவிப்பது புதிய அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் ஏற்பட்டிருக்கிற ஒரு சூழலாகத்தான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் பெருமாள் முருகன் மட்டுமல்ல, இப்படிப் பலர் குறிவைத்துத் தாக்கப்படுகிற நிலை நாடு தழுவிய அளவில் அதிகரித்து இருக்கிறது. சங்கப் பெருவாழ் அமைப்புகள் சங்கிலியன் ஆட்சி நிறுவப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள். பெருமாள் முருகன் தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். காவல் துறையின் ஒத்துழைப்போடு அவரை ஊரைவிட்டு துரத்தும் அளவுக்கு ஒரு உளவியல் தாக்கத்தை அவர் மீது நடத்தியிருக்கிறார்கள். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்தும் கூட, பெருமாள் வாக்கு மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இனி படைப்புத் தொழிலையே விட்டு விட்டேன். இனி பெருமாள் முருகன் எழுத மாட்டான். செத்து விட்டான் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு அவருக்கு மன உளைச்சலைத் தந்திருக்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. துணிச்சலாக அவர் அதை எதிர் கொண்டிருக்க வேண்டும்.

 நாடு தழுவிய ரீதியில் அவரின் பாதுகாப்புக்காக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எண்ணற்ற அமைப்புகள் களத்தில் குதித்தன. ஆனாலும் பெருமாள் முருகன் அதிலிருந்து பின்வாங்கியது அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்து விட்டது. பெருமாள் முருகன் மட்டுமல்ல இதற்கு முன்பு கண்ணன் என்பவரும் கூட மிரட்டப்பட்டிருக்கிறார். அவரோடு இன்னொருவரும் மிரட்டப்பட்டார். படைப்பாளிகள் சுதந்திரமாக சிந்திக்கவோ, எழுதவோ முடியாத சூழலை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கக் கூடிய விடயம். அதற்காக சுதந்திரம் என்ற பெயரில் படைப்பாளர்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நான் சொல்லவரவில்லை. தனிப்பட்ட ரீதியில் ஒரு சமூகத்தையோ, மதத்தையோ அல்லது தனி நபரையோ திட்டமிட்ட உள்நோக்கத்தோடு காயப்படுத்தும் நோக்கில் படைப்பதை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஆனால் சமூக யதார்த்தங்களை பதிவு செய்வதும், அதிலிருந்து புதிய தலைமுறைக்கு பண்பாட்டு புரிதல்களை உணர்த்துவதும் படைப்பாளர்களின் சுதந்திரம். அதை தட்டிப் பறிக்கிற விடயம்தான் பெருமாள் முருகனுக்கு எதிராக நிகழ்ந்திருக்கிற அடக்குமுறைகள். இது தமிழகத்தில் அடிக்கடி தலைகாட்டுவது வேதனைக்குரியது" என்று திருமாவிடமிருந்து படபடவென உணர்ச்சிக் கலவையாக வார்த்தைகள் வந்து விழுந்தன.

ஊழலுக்கு எதிராக டெல்லியில் மக்கள் கெஜ்ரிவாலுக்கு அமோக ஆதரவு அளித்த அதேசயம் ஸ்ரீரங்கத்தில் தமிழ் வாக்காளர்கள் எதிர்மறையாக பதிலளித்து இருக்கிறார்கள்! என்பது அடுத்த கேள்வி.

"புது டில்லியில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளித்து மக்கள் மாபெரும் ஒரு வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். 'ஊழலை ஒழிப்போம், வாக்களியுங்கள்' என்ற கெஜ்ரிவாலுக்கு எதிர்பாராத பெரு வெற்றியை தந்திருப்பது இந்தியாவிற்கு தலை நிமிர்வைத் தந்திருக்கிறது. அதேவேளையில் தமிழகத்தில் நீதிமன்ற தண்டனைக்கு உள்ளாகி பிணையில் வெளிவந்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு பெரிய வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது முகம் சுளிக்க வைக்கிறது. இவர்களும் வாக்காளர்தான். ஆனால் தண்டனை பெற்றிருக்கும். ஒருவருக்கு எந்த அடிப்படையில் இந்த ஆதரவை வழங்கினார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று எதிர்கட்சிகள் அந்த தேர்தல் வெற்றியைப் பற்றி விமர்சிக்கும் போது அது மக்கள் வழங்கிய தீர்ப்பு அல்ல, விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு என்று சொல்கிறார்கள். வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியும் என்பது நமக்கு தலை குனிவையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு சினிமா மோகம் மட்டும்தான் காரணம் என்று சொல்லி விட முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. அதனால்தான் விடுதலைச் சிறுத்தைகள் இந்த தேர்தலை புறக்கணித்ததோடு ஒரு கோரிக்கையையும் முன்வைத்தது. அதாவது பொதுத்தேர்தல்கள் தாண்டி இடைத்தேர்தல்களின் போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஒரு புதிய வரைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் மக்களை சந்திக்கிறபோது அதிகார கேந்திரம் அவர்களுக்கு துணை நிற்கிறது. அதாவது காவல் துறையினரும், வருவாய் துறையினரும் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கிறார்கள். எனவே அதிகார துஷ்பிரயோகம் பரவலாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுகின்றன.

இந்த நிலை டெல்லியிலும் இருந்தது. அங்கேயும் அதிகாரம் தலைவிரித்தாடியது. ஆனால் ஸ்ரீரங்கத்தில் நூறு சதவீதம் மக்களுக்கு வெளிப்படையாகவே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இது ஊரறிந்த உண்மை. ஆகவே ஸ்ரீரங்கத்தில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று சொல்லும் போதே திருமாவின் வார்த்தைகளில் சூடுபறக்கிறது.

தீண்டாமையும், மத தீவிரவாதமும் வருங்கால இந்தியாவில் மேலும் தீவிரமாக வளர்ச்சியடைந்துவிடும் அபாயம் இருக்கிறதே அதுபற்றி தங்களின் கருத்து என்ன?

"இந்திய மண்ணில் சாதிக் கொடுமைகளும் மதவெறி ஆட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு அரசியல் போட்டா போட்டிகளும் ஒரு காரணம். சாதியும், மதமும் நம் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாத மிக முக்கியமான கேந்திரங்களாக உள்ளன. பண்பாட்டுத் தளத்திலும் அரசியல் தளத்திலும் அது பெரும் பங்கு வகிக்கிறது. தேர்தல் அரசியலுக்கு சாதி மிகப் பெரிய ஒரு கருவியாக பயன்படுகிறது. 
மதமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பயன்படும் ஒரு கருவியாக ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தீண்டாமையும், மதத் தீவிரவாதமும் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியடைந்து விடுமோ என்ற அச்சத்தை நமக்கு தற்போது உருவாக்கியிருக்கிறது. தீண்டாமையை ஒழிப்பதற்கு மத தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் ஏதுவான சூழல் அமையவில்லை. மக்களுக்குள் இயல்பாகவே இருக்கக்கூடிய சாதி, மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிற அரசியல்வாதிகளால் சாதி வெறுப்பு, மத வெறுப்பு ஒரு உக்தியாக கையாளப்படுகிறது. அதாவது தலித் வெறுப்பு, முஸ்லீம் வெறுப்பு, இந்திய அரசியலில் பரவலாக பயன்படுத்தப்படுகிற உத்தி.
சமூக நீதி என்கிற இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து ரத யாத்திரை என்கிற பெயரால் ஒரு ரத்த யாத்திரை நடாத்தப்பட்டு அதனுடைய முடிவாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் வட இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடியது. அரசியல் களத்தில் தீண்டாமையும் மதமும் பெரிய ஆயுதங்களாக பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயம்.

எனவே ஜனநாயக நம்பிக்கையாளர்களும் சமூக நல்லிணக்கத்தை விரும்புகிறவர்களும் இப்படிப்பட்ட அநாகரீகமான வெறுப்பு அரசியலை எதிர்க்க வேண்டும். இந்திய மண்ணில் உருவாகிவரும் இந்தக் கொடுமைகளை வேரறுக்க புதிய தலைமுறையினர் உறுதியெடுக்க வேண்டும்" என்ற போது அவரின் பேச்சில் கனல் தெறித்தது.

தொல். திருமாவளவன் சினிமாவிலும் கால் பதித்தவர் என்றவகையில் தற்போது சின்னத் தயாரிப்பாளர்கள் புதியவர்களை வைத்து எடுக்கும் தமிழ்ப்படங்கள் நிறைய வெளிவருவதும் வெற்றி அடைவதும் பற்றி வினவினோம். இப் புதிய பாதையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

"இப்புதிய பாதை தமிழ் சினிமாவில் இப்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி மெகா பட்ஜட் படங்கள் எடுக்கும் வழக்கத்தைத் தாண்டி மிகச்சிறிய தொகையில் படம் எடுத்து அதை சிறந்த முறையில் இயக்கி வெளியிட்டு மக்களிடையே வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிரூபித்தும் இருக்கிறார்கள். அதற்கு அண்மையில் வெளியான மெட்ராஸ் படத்தைக்கூட உதாரணத்துக்கு சொல்லலாம். அந்தப் படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் மிகவும் ஒரு சாதாரண பின்னணியைக் கொண்டவர். படத் தயாரிப்பாளரும் மிகச் சிறிய தொகையையே செலவழித்து இருக்கிறார். ஆனால் அவர் எடுத்துக் கொண்ட கதைக்கரு, காட்சி அமைப்பு, பின்னணி இசை, பாடல்கள் என்று அனைத்திலும் திறமை பளிச்சிட்டது. அதை வெற்றிகரமாக மக்களிடையே கொண்டு சென்று மாபெரும் வெற்றியாக்கியிருக்கிறார்கள்.

 ஒரு காலத்தில் சினிமா பார்ப்பதிலும் நம் மக்களிடையே ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறி, மாஸ் ஹீரோ என்கிற மாயையை உடைத்தெறிந்து விட்டு நல்ல கதை, இயக்குனர்கள், நடிகர்கள் என்று நல்லதைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு அவர்களின் ரசனை மாறி இருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் இசைத்துறையில் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா என்றிருந்த நிலைமாறி சாதாரண பின்னணியைக் கொண்ட இளம் இசையமைப்பாளர்கள், பாடலாசியர்கள் கூட தமது பங்களிப்பை சினிமாவிற்காக செய்கிறார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகம் புதிய பரிணாமத்தை அடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் தானே!" என்று சூடு தனிந்த திருமா மகிழ்ச்சி புன்னகைக்க, நாமும் விடைபெற்றோம்.