Sunday, March 8, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு உலா

"நூல் வாங்கும் பழக்கம் அருகி வருகிறது"


மணி  ஸ்ரீகாந்தன்

ஆசியாவில் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியாக வருடாந்தம் நடைப்பெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி, இவ்வருடம் சென்னை நந்தனத்தில் உள்ள வை.எம்.சி. கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

38வது ஆண்டில் வெற்றி நடைப்போடும்.இக் கண்காட்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர், மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் "பபாசி" அமைப்பினர் வெகு சிறப்பாக நடாத்தியிருந்தார்கள்.

1977ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி மதராஸ்-இ-ஆதம் பள்ளியில் 10 புத்தக பதிப்பகங்கள், இருபது மேஜைகளில் தொடங்கியது. இன்று இந்தப் புத்தகப் பயணம் எழுநூறு அரங்குகளை கடந்திருக்கிறது.
ரவி தமிழ்வாணன்,சிரிப்பானந்தா,இந்தியன் போஸ்ட் அசோகன்,சஹாநாதன்
வருடாந்தம் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் இக் கண்காட்சியை காண்பதற்காக உலக முழுவதிலுமிருந்து வாசகர்கள் சென்னைக்கு படையெடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக நம் இலங்கையிலிருந்து செல்லும் புத்தக பிரியர்கள்,படைப்பாளர்கள் புத்தகங்களை கொள்முதல் செய்வதோடு புத்தக வெளியீடுகளையும் அங்கேயே செய்வதில் பெருமையும் அடைகிறார்கள்.

சுனாமி அலையாக ஆர்பரிக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுநாளில் புத்தகக் கடைகளை மொய்த்துக் கொண்டிருக்கும் வாசர் கூட்டத்திற்குள் நாமும் நுழைந்தோம்.

அந்த விசாலமான புத்தக சந்தையின் உள்ளே மொத்தமாக ஒன்பது தெருக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் தெருக்களுக்கு ராசேந்திர சோழன், வேலு நாச்சியார், இராசஇராச சோழன், ராணி மங்கம்மா, சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்றெல்லாம் தமிழர்களுக்கே உரிய வீர மரபைப் பின்பற்றி பெயர்களை சூட்டியிருந்தார்கள்.
"களமாடிய வீர மன்னர்களுக்கும் புத்தகத்துக்கும் என்னங்க சம்பந்தம்? கம்பன், பாரதி உள்ளிட்ட இலக்கியவாதிகளின் பெயர்களை சூட்டியிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டப்படியே ஒரு புத்தகக் கடைக்குள்ளியிருந்து வெளியே வந்தார்; 'சவுத் இந்தியன் போஸ்ட்' பத்திரிகையின் பத்திரிகையாளர் டி.அசோகன். அவரோடு பேசியப்படியே ராசேந்திரன் வீதியில் நடந்தோம்.ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தனித்துவமாக பளீச்சிடும் நம்ம சிரிப்பானந்தா நம் கண்ணில் பட பேச்சுக் கொடுத்தோம்.

"நான் இப்போ பதினைந்து வருடங்களுக்கு மேலாக புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். ஆரம்பத்துல முப்பதுக்குள்தான் கடைகள் இருக்கும். பார்வையாளர்களும் ரொம்பவே குறைவாகவே வருவார்கள் இப்படி கூட்டம் இருக்காது. அப்படியே நாளுக்கு நாள் கூடிட்டே வந்திருச்சு. புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தால் மனதுக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நிறைய படைப்பாளர்கள், நண்பர்கள், அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து பேசவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு புத்தகங்களைப் பற்றி உரையாடுவதற்கும், வெவ்வேறு வகையான புத்தகங்களின் தரம் பற்றியும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும்  ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. புதிய புத்தகம் ஒன்றை வாங்கி அதை ஆவலோடு திறக்கும் போதே ஒரு வாசனை வருமே அந்த சுகத்தை எந்த ஒரு இலக்ட்ரோனிக் மீடியாவும் நமக்கு தரமுடியாது.முக்கிமாக புத்தகம் வாசிப்பது கண்களுக்கு ஒரு பயிற்சியாகவும் அமைகிறது. 'எதற்கு புத்தகம் வாங்கி பணத்தை வீணாக்குவானேன் நமக்குதான் வீட்டுல கம்பியூட்டர் இருக்கே' னு, கம்பியூட்டரில் புத்தகம் படிப்பதை பெரிய கௌரவமாக கருதுபவர்களுக்கு அது கண்ணுக்கு கேடு என்பது புரியுமா?" என்று கம்பியூட்டரில் புத்தகம் படிப்பவர்களுக்கு சிரிப்பானந்தா ஒரு போடு போட்டார்.
'தலைவர் பிரபாகரனின் பன்முக ஆளுமை' என்கிற நூலை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் வெளியிட மதுரா டிராவல்ஸ் அதிபர் வீ. கே. டீ. பாலன் பெற்றுக் கொள்கிறார்,அருகில் ஓவியர் புகழேந்தி
533வது கூட்டத்தில் மணிமேகலை பிரசுரத்தின் அதிபர் ரவி தமிழ்வாணன் பளீர் சிரிப்புடன் நம்மை வரவேற்றார்.

"38வது புத்தக கண்காட்சியில் மணிமேகலையின் முப்பதெட்டு புதிய நூல்களை வெளியிட்டோம்.அதில் எனது தந்தை முப்பதெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய இயற்கை வைத்தியம் என்ற நூலை தமிழ் தெரியாதவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக 'நேச்சர் க்யூர்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டோம். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படைப்பாளனின் நூல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவது முக்கிய சிறப்பம்சம். அந்த நூலுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது" என்று கூறிய அவர், "இலக்ட்ரோனிக் மீடியாவின் பாதிப்பால் இளைய தலைமுறையினர் வாசிப்பில் இருந்து கொஞ்சம் விலகிப் போவது உண்மைதான், முன்பெல்லாம் வருடம் முழுவதும் புத்தகங்களை வாங்குவார்கள். இப்போது அப்படி அல்ல. வருடத்திற்கு ஒரு முறை புத்தக திருவிழாவில் வாங்குவதோடு முடித்துக் கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருடம்தோறும் பெரிய விழாவாக நடைபெறும். அப்போது சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் மண்பாண்ட உண்டியலில் திருவிழாவிற்காக வருடம் முழுவதும் காசு சேர்த்து திருவிழா நடைப்பெறும் காலத்தில் அதை உடைத்து செலவழிப்பார்கள். அது மாதிரிதான் சென்னை புத்தக கண்காட்சியிலும் பத்து சதவீதம் தள்ளுப்படி கிடைக்கிறதே என்பதற்காக. அழகருக்கு உண்டியலை உடைப்பது போல வருடத்தில் ஒரு முறை மட்டும் உடைத்து புத்தகங்கள் வாங்குகிறார்கள். அதற்குப் பிறகு அடுத்த ஆண்டுதான் புத்தகங்களை தேடி வருகிறார்கள்" என்று கூறியபடியே வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கும் ரவியிடமிருந்து
மணவை அசோகன்,சிரிப்பானந்தா,
வானொலி அண்ணா ஆகியோருடன் மணி

விடைப்பெற்று திரும்பிய போது மணிமேகலை கூட்டத்தின் ஓரத்தில் ஒரு சிறிய மேஜையில் சில புத்தகங்களோடு விற்பனைக்காக காத்திருந்த ஒரு இளைஞனை பார்த்தோம். விசாரித்ததில் அவர் பெயர் 'சஹாநாதன்' என்றார். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் படைப்பாளர்களில் அவரும் ஒருவர்.

"நான் இந்த புத்தக கண்காட்சிக்கு வருவது இதுதான் முதல் தடவை. நான் அமெரிக்காவில் சொப்ட்வெயார் மேனஜராக இருக்கிறேன். கடந்த ஆண்டுகளில் என்னை சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைத்தும்; லீவு கிடைக்காததால் வரமுடியவில்லை. எழுத்து என்பது என்னோட ஆத்ம திருப்திக்காக பண்ணுற ஒரு விசயம், அதோட மனிதர்கள் வாழ்வது சந்தோசத்திற்காகத்தான் என்பதை உணர்ந்ததினால் அதைப் பற்றி சொல்வதற்காக நான் எழுத ஆரம்பித்தேன். என்னோட ஆறு புத்தகங்களை இங்கே காட்சிக்காக வைத்திருக்கிறேன். புத்தக கண்காட்சியில் நான்  தொடர்ச்சியாக ஏழு நாட்கள் இருந்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மக்கள் மனதில் ஒரு புது மாற்றம், நம்ம உடம்ப பார்த்துக்கணும், நம்ம மனச பார்த்துக்கணும் என்ற அக்கறையில் அதை இங்கே வந்து தேடுவதை அவதானிக்க முடிகிறது. தெய்வாதீனமாக அவங்க தேடுகிற இரண்டு விசயமும் நாம எழுதுகிற விசயமாக இருந்தது. மனதையும் உடலையும் சரி பண்ணி எப்படி அமைதியான வாழ்க்கையை வாழ்வது என்பது நான் பெற்ற பயன், அனுபவம். அப்படி நான் இப்போது இருக்கிற நிலையை என்னோட படைப்புகள் மூலமாக வாசகர்களுக்கு சொல்லி கொடுக்கிறேன்" என்று சஹாநாதன் ரொம்பவும் மகிழ்ச்சியாக பேசுகிறார்.
புத்தக கடை வீதியில்; பளீர் சிரிப்போடு இருந்த 'நித்தியானந்தா கேலரியா'  நம் கண்ணில் பட அதை கொஞ்சம் நெருங்கி பார்த்தோம். விற்பனையாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருந்தார்கள். கையைப் பிடித்து இழுக்காத குறையாக உள்ளே வரச் சொல்லி அழைத்தார்கள். நித்தியானந்தாவின் ஏகப்பட்ட நூல்கள் அந்த கூடத்தை நிறைத்திருந்தது. 'கட்டணம் இல்லாமல் உடல் மன நலனுக்கு தியான சிகிச்சையும்,108 கிரியையும் கற்றுத்தரப்படும் என்ற பதாகையையும் தொங்க விட்டிருந்தார்கள். ஆனால், கூடத்தில் ரஞ்சிதா மட்டும் கண்ணில் படவேயில்லை. நித்தியானந்தாவின் லேட்டஸ் சீடி ஏதாவது இருந்தாலும் வாங்கியிருக்கலாம். வெருங்கையோடு திரும்பினோம். அணிவகுத்து நின்ற புத்தக கடைகளில் ஈழப்போர், பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல்கள் அதிகளவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தைக் கண்டோம். பத்தி நூல்களைப் போல இவையும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. தமிழக வாசிகள் இலங்கைப் பிரச்சினையை உணர்ச்சி பூர்வமாகவே பார்க்கிறார்கள். அதற்கு இவை தீனி போடுகின்றன. அன்றைய தினத்தில் ஓவியர் புகழேந்தி எழுதிய 'தலைவர் பிரபாகரனின் பன்முக ஆளுமை' என்கிற நூலை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் வெளியிட மதுரா டிராவல்ஸ் அதிபர் வீ. கே. டீ. பாலன் பெற்றுக் கொண்டார்.

புத்தகக் காட்சியை முடித்து விட்டு வெளியே வந்து நண்பர் சிரிப்பானந்தா அன்பாக வாங்கிக் கொடுத்த கோப்பியை ருசித்துக் கொண்டிருந்து போது காதுக்கு தோடு போட்டுக் கொண்டு வந்த சில மொடர்ன் பையன்களும் டீக்கடையை சுற்றி நின்று டீ குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.

"மச்சி பத்து ரூபா டிக்கட் எடுத்து உள்ளே வந்து ஒண்ணுக்கும் உருப்படியில்லாம போச்சுடா!"

"ஏன்டா நல்ல புக்கு கிடைக்கலையா?"

"அட நம்மளாம் எப்போடா புத்தகம் படிச்சோம்! யாராவது சினிமா நடிகர்கள் வந்தா அவங்களோட நின்னு ஒரு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்குல போடலாம்னு வந்தேன். இன்னைக்கு ஒருத்தரும் வரலை சரி, நாளைக்கு வந்து பார்ப்போம். இன்னைக்கு பத்து ரூபா வேஸ்ட்" என்று புலம்பியபடியே அந்த இடத்தை அந்த கும்பல் காலி செய்தது. சென்னை புத்தகக் காட்சியை வேடிக்கை பார்க்கவும் செல்ஃபி எடுக்கவும் பெருங்கூட்டம் குறிப்பாக இளசுகள் அதிகளவில் படையெடுக்கிறார்கள். ஏனெனில்    'அப்பொயின்ட்மென்ட்' இல்லாமலேயே புகழ்பெற்ற மனிதர்களை சந்திக்கக் கூடிய இடம்தான் இந்தப் புத்தகக் கண்காட்சி.

No comments:

Post a Comment