Saturday, March 7, 2015

தேவதாசி வரலாறு -5

பெருங்கோவில்களை அரசர்கள் ஏன் அமைத்தார்கள்?


அருள் சத்தியநாதன்

கோவில்களை இன்று நாம் இறைவனை வணங்கும் இடம் என்று மட்டுமே அறிகின்றோம். பண்டைய கோவில்கள் என்றால், வணங்குவதற்கு மட்டுமின்றி அதன் கலையம்சங்களுக்காகவும் பலர் அங்கே சென்று வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற பண்டைய கோவில்கள் வசீகரிப்பதற்கு, அவை கலைக்கோவில்களாக விளங்குவதே காரணம்.
பண்டைய காலத்தில் கோவில்களை அரசர்கள் தாம் வணங்குவதற்காக மட்டும் அமைக்கவில்லை. ஒரு கோவிலை அமைப்பது என்பது செலவுமிக்கக் காரியம். பல வருடங்கள் பிடிக்கும். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வேலை செய்வதன்மூலமே ஒரு பெருங்கோவிலை அமைக்க முடியும். இவ்வளவு காலத்தையும், பொருளையும் விழுங்கும் ஒரு கோவிலை அமைப்பதற்கு அரசனின் கடவுள் பக்தி மட்டுமே காரணமாக இருக்க முடியாது. தான் அமைக்கும் கோவில் தன் சிறப்புகளைச் சொல்வதாக, தன் ஆட்சியின் மேன்மையை பேசுவதாக இருக்க வேண்டும் என அரசன் விரும்பினான். இதனால்தான் சிற்பங்களையும் வேலைப்பாடுகளையும் கொண்டதாக இக்கோவில்கள் அமைந்தன.

ஆயிரம் வருடங்களுக்கு முன் தஞ்சையில் ஒரு பிரமாண்டமான கோவிலை இராஜராஜ சோழனால் அமைக்க முடிந்தது என்றால், அதற்கு அவன் பேரரசனாக விளங்கியதே காரணம். பல நாடுகளையும் வென்று அதன்மூலம் பொன்னும், மணியும், அடிமைகளையும், தொழில்திறன் கொண்டவர்களையும் அவனால் தஞ்சைக்குக் கொண்டுவர முடிந்தது. எனவே, அவன் தன் நாட்டின் வளத்தையும், தன் கீர்த்தியையும் ஒரு பிரமாண்டமான கோவில் அமைப்பதன் மூலம் வெளிப்படுத்தினான். அழகிய, நேர்த்தியான, கலை நுணுக்கங்கள் கொண்ட ஒரு கோவிலை ஒரு அரசனால் அமைக்க முடிகிறது என்பதன் பொருள், அந்த அரசன் செல்வச் செழிப்பான வீரம் நிறைந்த நாடுடையவன் என்பதை வெளிப்படுத்துவதேயாகும்.

இது அன்றைய மன்னர் கலாசாரம். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பொதுவானது.

மேலும் அன்றைய கோவில்கள், வங்கிகள் போன்று செயற்பட்டுள்ளன. அரண்மனை கஜானாவில் தன் செல்வத்தை வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் அரசர்கள் செல்வத்தின் ஒரு பகுதியை கோவில்களில் வைத்திருந்தனர். மூலவர் அலங்காரமாகவும் அரச செல்வம் வைக்கப்பட்டிருந்தது. மூல மூர்த்தி பொன்னாலும், உயர் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதோடு பொன் மற்றும் இரத்தினங்களினால் கோவில் சுவர்களும், உத்திரங்களும் அதன் மேற்புறமும் அலங்கரிக்கப்பட்டன. மன்னனின் கீர்த்தியை இவை வெளிப்படுத்தின.

கோவில் கிடங்குகளில் உணவுப் பண்டங்கள், குறிப்பாகத் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. அரச வருவாயின் ஒரு பகுதி இன்று ஏழை மக்களின் வறுமையைப் போக்கும் உதவித் திட்டங்களாக செயற்படுத்தப்படுவதைப் போலவே அன்று, கோவில்கள் ஊடாக ஏழைகளுக்கு தானியங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. கோவில் மண்டபங்கள் வழிப்போக்கர் தங்கும் இடமாகவும் விளங்கியது. மொத்தத்தில் கோவில் என்பது பல் நோக்கங்களைக் கொண்டதாகவும் குறிப்பாக அரசின், அரசனின் கீர்த்தியை எடுத்துக் காட்டுவதாகவும் விளங்கின.

இக்கோவில்களில் ஆடல் மகளிர்கள் நியமிக்கப்பட்டதும் இவ்வகையில்தான். ஒரு நாட்டுக்கு அல்லது மாநிலத்துக்கு ஒரு முக்கிய பிரமுகர் விஜயம் செய்கிறார் என்றால் அவரை விமான நிலையத்திலோ அல்லது வைபவமொன்றிலோ வரவேற்கும்போது ஆடல் பாடல்களுடன் வரவேற்கும் பண்பு இன்றும் வழக்கில் உள்ளது. அந்தந்த மண்ணுக்குரிய பண்புகள் இப்பாடல்களிலும் நடன அசைவுகளிலும் வெளிப்படுவது வழக்கம். பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்றாலும் இதே பண்பைக் காண முடியும். அரசவைகளிலும் அரசனையும், மந்திரி பிரதானிகளையும், விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்த நடன மணியினர் இருந்தனர். ஒரு பிரமுகரை வரவேற்று அவரை சிறப்பு அதிதியாகப் போற்றும்போது அங்கே ஆடலும் பாடலும் அவசியமாகிறது. நிச்சயமாக இது அப்பிரமுகரை மகிழ்ச்சிப்படுத்தும், கௌரவப்படுத்தும்.

கோவில்களில் ஆடல் மகளிர் நியமிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, தன்னை மகிழ்ச்சியாகவும் பிரச்சினைகளை தற்காலிகமாக மறந்திருக்கவும் எப்படி அரசவை ஆடல் பாடல்கள் மன்னனுக்கு உதவுகின்றனவோ அவ்வாறே தான் அமைத்த கோவில்களிலும் கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவும், அவன் திருவருளைப் பெறவும், வழிபாட்டு முறைகள் அலங்கார ரூபத்துடன் நடத்தப்படுவதற்கும் உதவும் வகையில் ஆடல் மகளிர்மாரை அரசர்கள் கோவில்களில் பணிபுரிய அமர்த்தினர் என்பதே பொருத்தமான பதிலாகும்.

ஆரம்ப காலத்தில் இப்பணியைச் செய்வதற்கு அரசவை நடன மணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் கோவில்களில் மட்டுமே ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கோவில் மகளிர் தேவதாசியர் என வழங்கப்பட்ட அதே சமயம், அரசவை ஆடல் மகளிர், இராஜதாசியர் என அழைக்கப்பட்டனர். இராஜதாசியர் கோவில்களில் நடனமாடுவதில்லை. எனினும் அரசன் கோவிலுக்கு வரும்போது அவனுடன் வரும் வழக்கம் இருந்தது.

இது தவிர, மன்னன் போர்களில் வெற்றிபெற்று நாடு திரும்பும்போது வெற்றி கொண்ட நாட்டின் செல்வங்களை தனது நாட்டுக்கு கொண்டு வந்தான். இது, போர் பொருளாதாரம். இச்செல்வங்களில் அடிமைகளாக்கப்பட்ட பெண்களும் அடக்கம். கொல்லப்பட்ட எதிரி நாட்டு வீரர்களின், மந்திரி பிரதானிகளின் மனைவியர், மகள்மாரும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டு அந்தபுரங்களில் தங்க வைக்கப்பட்டனர். அரசன் தான் எடுத்துக்கொண்ட பெண்கள் போக ஏனைய பெண்களில் சிலரை கோவில் பெண்களாகக் கோவில்களுக்கு அளித்தான். ஏனைய பெண்கள் படைத்தளபதிகள் மத்தியில் பகிரப்படுவது வழக்கம். அன்றைக்கு பெண்களுக்கு இருந்த மதிப்பு இவ்வளவுதான்! இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெண்கள் நீண்ட இருள் சூழ்ந்த பாதையைக் கடந்து வந்திருப்பது தெரியும்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார் தன் மகள் நீலாதேவியை திருவரங்கக் கடவுளுக்கு தேவதாசியாக அர்ப்பணித்ததை (வரலாற்றில் தேவதாசியர் நூல் பக். 105 - ஆதாரம்: திருவாங்கூர் தொல்லியல் வரிசை ப. பக். 102 - 114) உறையூர் மன்னன் தந்த சோழன் மகள் சோழவல்லி தன்னைத்தானே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டதையும், இங்கே தனிப்பட்ட ரீதியாகவும் இத்தொண்டுக்கு பெண்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதை ஆதாரமாகக் காட்ட முடியும். சிலர் தமக்கு மகள் பிறப்பாள் என எதிர்பார்த்திருந்து மகள் பேறு கிடைக்காத நிலையில் ஏழைப்பெண்களை வாங்கி கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கமும் சோழர் காலத்தில் இருந்திருக்கிறது.

இராஜராஜசோழன் காலத்தில் ஒருவர் 700 காசுகளுக்கு நான்கு பெண்களை வாங்கி திருவாலங்காட்டு கோவிலுக்கு தேவரடியாராக அர்ப்பணித்ததாக ஒரு கல்வெட்டு செய்தி உள்ளது.   

வறுமை காரணமாக ஆண்கள் தம்மை அடிமைகளாக விற்றுக்கொள்வதும் பெண்கள் வறுமை காரணமாக செல்வந்தர், கோவில்கள் மற்றும் மடங்களுக்கு தம்மை விற்றுக்கொண்டு தொண்டு செய்வதும் பண்டைய தமிழகத்தில் இடம்பெற்று வந்த ஒன்றுதான். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின்போது வறுமை தாங்க முடியாத சில குடும்பங்கள் தம்மை குடும்பத்தோடு கோவிலுக்கு விற்றுக்கொண்டதாகவும் இவர்களில் தேவரடியார் பணிக்கு பெண்களும் ஏனைய கோவில் பணிகளுக்கு ஏனையோரும் நியமிக்கப்பட்டதாகவும் பண்டைய செய்திகள் உள்ளன. எனவே, இக்கல்வெட்டு செய்திகளின் ஊடாக சோழர் ஆட்சிக் காலத்தில் தேவதாசியர் அடிமைமுறை மற்றும் விற்பனை முறை நடைமுறையில் இருந்ததை அறிய முடிகிறது.

இத்தேவதாசியினருக்கு இலச்சினை இடும் வழக்கமும் சோழர் காலத்தில் இருந்திருக்கிறது. சைவ, வைணவ தேவதாசியரை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சைவாலய தேவதாசியினருக்கு சூல சின்னமும் வைணவ தேவதாசியினருக்கு சக்கரச்சின்னமும் பொறிக்கப்பட்டது.

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் பணி செய்ய முன்வந்ததால், இவர்கள் அனைவரும் தேவரடியார் குலத்திலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இக்காலத்தை தேவரடியார் மரபு உருவாகிக்கொண்டிருந்த பருவம் என்றும் கொள்ளலாம். தேவதாசி மரபுக்கு வெளியில் இருந்து பெண்கள் கோவில்களுக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடாது என்பதாலும், தேவதாசி குலத்தினரிடையே பொட்டு கட்டி விடும் வழக்கமும் தமது குழந்தைகளை தாய் வழியாக அறியும் வழக்கமும் தோற்றம் பெற்றிருக்கலாம். தேவதாசியர் தாம் பெற்றெடுக்கும் பெண் குழந்தைகளை பாட்டு, நடனம் என்பனவற்றில் பயிற்றுவித்து அவர்கள் வயதுக்கு வந்ததும் பொட்டு கட்டும் சடங்கை நடத்தி கோவிலுக்கு அர்ப்பணித்து விடுவார்கள். இதன்மூலம் தமது சந்ததியினர் தொடர்ந்தும் கோவில் பணி செய்வதன் மூலம் அந்த இடத்தை வெளியார் பிடித்து விடக்கூடிய ஆபத்தைத் தவிர்த்துக் கொண்டார்கள். கோவில் காணியிலேயே கோவில் அளித்த வீடுகளில் அவர்களால் தொடர்ந்து தங்கியிருக்க முடிந்ததோடு கோவில்களில் இருந்து கிடைக்கக் கூடிய பணம், உடைகள், உணவு என்பனவற்றைத் தொடர்ந்து அனுபவித்து வரவும் முடிந்தது.

(தொடரும்) 

No comments:

Post a Comment